திருவையாறு: மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களது கட்டுரை எனக்கும் பழைய நினைவுகளை கண் முன் கொண்டு வந்தது. நான் திருவையாறுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறேன். ஆனாலும் அரிதாகவே தியாகையர் இசைவிழாவுக்கு சென்று வந்திருக்கிறேன். காரணம் எனக்கு கர்நாடக இசையை பற்றி ஒன்றும் தெரியாது. அப்பொழுதெல்லாம் நான் கண்ட சிறு நிகழ்ச்சிகளை உங்களது எழுத்துகளின் மூலம் மறுபடியும் வாசிக்கின்ற போது அங்கு சென்று வந்த உணர்வையே காட்டுகிறது. சிறு வயதில் எனது தாத்தாவுடன் நடந்தே இசைவிழாவுக்கு சென்றுவிட்டு, வரும்போது, ஆண்டவர் அசோகாவில் அசோகா சாப்பிட்டுவிட்டு, மார்க்கெட்டில் கறும்பு வாங்கி வந்தது நினைவுக்கு வருகிறது.

பிற்காலத்தில் படிப்புக்காக சென்னையில் தங்கி இருந்த போது மயிலாப்பூர் கட்செரிகளுக்கு ஒவ்வொரு வருடமும் செல்ல ஆசை பட்டதுண்டு. ஆனால் ஒரு முறை கூட செல்ல முடிந்ததில்லை. படிப்பின் காரணமாக திருவையாறும் செல்ல முடிந்ததில்லை. தற்போது வெளிநாட்டில் உத்தியோகத்தில் இருப்பதால் அது தொடர்கிறது. உங்களது பயணக்கட்டுரைகளை வாசிக்கின்ற போது அங்கு சென்று வந்த உணர்வை ஏற்படுத்துகின்றது. உங்கள் பணி தொடர்க. நன்றி.

ஒருமுறை திருவையாறு இசை விழாவில் நான் கண்டது. ஒரு சமயம் பிரபல பாடகர் ஒரு மேடையில் வாசித்து கொண்டு இருந்தார். மறற பிரமுகர்களும் சுற்றி இருந்தனர். நல்ல மக்கள் கூட்டமும் இருந்தது. அடுத்த மேடையில் ஒரு சிறு பாடகர் தன்னை தயார் படுத்தி கொண்டு இருந்தார். பிரபல பாடகர் பாடி முடிந்தவுடன் கூட்டம் குறைந்து விட்டது. பிரமுகர்களும் சென்று விட்டனர். சிறு பாடகர் பாடும் பொது சாதரண மக்களே இருந்தனர். கூட்டம் அவர் கண் முன்னே கலைந்து சென்று கொண்டு இருந்தது.  Atleast சிறு பாடகர் பாடும் போது ஓரிரு பிரமுகர்களாவது இருந்திருக்கலாம்.  அந்த சிறு பாடகர் சிறப்பாக பாடி இருந்திருப்பாரா? எனக்கு தான் இசை தெரியாதே!

மலரும் நினைவுகளுடன்,
முஹம்மது நவாப்ஜான், துபாயிலிருந்து.

அன்புள்ள நவாப்ஜான்

உங்கள்  கடிதம் கண்டு ஒரு வருத்தம். ஆண்டவர் ஓட்டல் அத்தனை சிறப்பா என்ன? அதன் வழியாகவே சென்றோம். உள்ளே போகவில்லை. அசோகாவும் சாப்பிடவில்லை. இத்தனைக்கும் கல்பற்றா நாராயணன் கேட்டுக்கொண்டே இருந்தார். அடுத்தமுறை பார்க்கலாம்.

என்னுஐய அனுபவத்தில் இளம் வயதிலேயே உயர்கலைகளை சார்ந்த அறிமுகம் செய்து வைப்பது நல்லது. அப்போது ஒன்றும் புரியாதுதான். ஆனால் அது ஒரு கனவை மனதில் உருவாக்கும். உங்களிடம் இருக்கும் கடதகால ஏக்கமே இசைக்குள் செல்வதற்கான சிறந்த வழி.

நான் மலையாள மாபெரும் சிந்தனையாளர் எம்.கோவிந்தனை பார்க்கச்சென்றிருந்தேன். அவரது கேரள வீட்டில் தனிமையில் இருந்தார். நோய். முதுமை. வேறு மூத்த சிந்தனையாளரைப்பற்றிச் சொன்னேன். அவர் முழுகக் முழுக்க இசையில் மூழ்கிவிட்டார் என்றேன். காரணம் முதுமையின் ஒரு கட்டத்தில் மூளை சிந்தனைக்குச் சிரமம் கொள்கிறது. கண்கலும் உடலும் களைக்கின்றன. முதுமையில் சிறந்த தோழமை இசையே என்றார் என்று சொன்னேன்.

‘என்னால் இசை கேட்க முடியாது. நான் அரசியல் சித்தாந்தங்களின் பின்னால்சென்றேன். ஆகவே இசைக்கு மனம் பழகவில்லை. பாட்டு கேட்க முடிந்திருந்தால் இப்போதுள்ள கசப்பும் தனிமையும் எனக்கு இருந்திருக்காது’ என்றார் அவர்

அது எனக்கு ஒரு பெரிய பாடமாக அப்போது பட்டது
ஜெ

PS: இளம் பாடகரின் நிலையைப்பற்றி சொன்னீர்கள். அது எங்கும் அப்படித்தான். கூட்டம் கருணையற்றது. ஆனால் மேதைகள் இளமையை மீறி கூடத்தை உட்கார வைக்கிரார்கள். நான் புல்லாங்குழல் சஸாங் அப்படி ஒளிவிடுவதைக் கண்டிருக்கிறேன்

 

**

அன்புள்ள ஜெ

நீங்கள் எழுதும் ஆழமான கட்டுரைகளுக்கும் கதைகளுக்கும் வாசகர்கள் இருப்பதைப்போலவே உங்கள் பயணக்கட்டுரைகளை விரும்பி வாசிக்கும் வாசகர்கள் நிறையபேர்கள் இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். என்னைப்போன்றவர்கள் தொழிலிலே சிக்கிக் கொண்டவர்கள். எங்களுக்கு பயணம் என்றாலே வேலைவிஷயமாக ஓடுவது மட்டும்தான். கவலை இல்லாமல் மனிதர்களையும் நிலங்களையும் எல்லாம் பார்த்துக்கோண்டே போவது என்பதெல்லாம் ஒரு கனவு. எங்கள் பிரதிநிதி போல நீங்கள் செல்கிறீர்கள். உங்களுடன் நானும் வந்தபடியே இருக்கிறேன்.

அன்புடன்

செ.சுகுமாரன்

 

முந்தைய கட்டுரைதொலைகாட்சி விலக்கம்
அடுத்த கட்டுரைஜெயகாந்தன்,ஐராவதம் மகாதேவன்