தங்கப்புத்தகம் [குறுநாவல்]- 1 தொடர்ச்சி
முக்தா சொன்னார். மறுநாள் முதல் நானும் பாட்டும் அந்த நூலை நகல்செய்ய தொடங்கினோம். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து மடாலயத்தை தூய்மைசெய்வது, விறகு வெட்டுவது, நீர்கொண்டுவருவது, மாவு அரைப்பது, சமைப்பது ஆகியவற்றில் பிட்சுக்களுக்கு உதவினோம்.
அதன்பின் நியிமா எங்களை அந்த குகைவழிப்பாதை வழியாக மலையின் கருவுக்குள் இருக்கும் அறைக்குக் கொண்டுசென்று பூட்டை விடுவித்து அந்நூலை எடுத்து அளித்தார். மாலையில் நாங்களே அந்நூலை அந்த தட்டுப்பேழைக்குள் மீண்டும் வைத்து பெரிய பெட்டிக்குள் போட்டு மூடிவிட்டு நாங்கள் அந்த வாசல்களில் ஒன்றினூடாக மேலேறுவோம்.ஒவ்வொரு அறையிலும் அப்போது தோன்றியபடி ஒரு பாதைக்குள் நுழைவோம். அந்த முதல் அறையில் திறக்கும் ஒரு வாசலினூடாக வெளிவருவோம்.அங்கிருந்து மடாலயத்திற்குள் சென்றுவிடுவோம்.
அந்த அறையில் நாங்கள் உள்ளே செல்லும் சுரங்கப்பாதையின் இரும்புவாசல் மூடப்பட்டிருக்கும். அதைத்திறப்பதற்கு எட்டு பித்தளைக் குமிழிகள் இருந்தன. அவற்றை வெவ்வேறு வகையில் அசைத்து பூட்டை விடுவிக்கவேண்டும் என்று தெரிந்தது.
நியிமா உதவியில்லாமல் அங்கே நுழைவது எளிதல்ல என்பதை கண்டுகொண்டோம், மேலிருந்து கீழே வரும் வழி திறக்கும் அறையின் சாவி அவரிடம்தான் இருந்தது. அவர் அதை எங்களிடம் தரவில்லை. அவர் உள்ளே வந்து சுரங்கப்பாதையை திறந்தபின்புதான் எங்களை உள்ளே அழைத்தார்.
அதைவிட சிக்கலான ஒன்று இருந்தது. கீழிறங்கும் வழி சென்று சேர்ந்து மேலும் இறங்கும் ஒவ்வொரு அறைக்கும் நான்கு வாசல்கள். ஒவ்வொரு முறையும் அவர் ஒவ்வொரு வாசல் வழியாக நுழைந்தார். அந்த வாசலை எப்படித் தெரிவுசெய்கிறார் என்பதை ஊகிக்கவே முடியவில்லை. ஒவ்வொரு முறையும் மேலே வாசல்கள் மூடிக்கொண்டன. ஆனால் மேலே செல்லும்போது அந்தவாசல்கள் எல்லாமே திறந்தும் கிடந்தன.
ஒருவேளை மேலே சுரங்கப்பாதையின் வாசலை திறந்து கீழே வந்தால்கூட தவறான வழியை தெரிவு செய்து மேற்கொண்டு செல்லமுடியாமலாகி, தலைக்கு மேலே வாசலும் மூடிவிட்டால் அது பொறிதான்.
அந்த அறை மலைகளுக்குள் எங்கே இருக்கிறது? மடாலயத்தையும் அது அமைந்திருக்கும் மலைச்சரிவையும் வைத்து ஒரு வரைபடத்தை நான் ரகசியமாக உருவாக்கிப் பார்த்தேன். ஆனால் அதை என்னால் நிறைவூட்டும்படி கணிக்க முடியவில்லை. அந்த பிலத்திற்கு வேறுசில திறப்புகள் உண்டு, அங்கிருந்தே காற்று உள்ளே வருகிறது. பாறைகள் வழியாக அங்கே எரிமலைக்குழம்பின் சூடும் வந்து சேர்கிறது.
நான் அந்த நூலை நகல் எடுப்பதில் ஒருநாளில் நான்கு மணிநேரத்தைச் செலவு செய்தேன். நான்கு மணிநேரம் பாட்டுக்கு. காலை எட்டு மணிக்கு நாங்கள் உள்ளே சென்றால் மாலை நான்கு மணிக்கு வெளியே வந்தோம்.
பின்னர் அந்த நான்குமணி நேரத்தை இரண்டு இரண்டு மணிநேரங்களாக பகுத்துக்கொண்டோம். இரண்டுமணி நேரம் எழுத்து இரண்டு மணிநேரம் கண்களுக்கு ஓய்வு என்பது மேலும் வசதியாக இருந்தது. விரைந்து நூலை முடிக்கும்நிலை வந்தது.
ஆனால் நாங்கள் பணியை முடிக்க முடிக்க ஏமாற்றத்தையே அடைந்தோம். அது அரிய செய்திகள் எதையும் சொல்லவில்லை. வழக்கமான வஜ்ராயன பௌத்த நூல்தான் அது. பதினான்கு அத்தியாயங்கள் கொண்டது. முதல் அத்தியாயம் வஜ்ராயனத்தின் ஏழு அடிப்படை மந்திரங்களையும் அவற்றின் சொல்லமைப்பையும் அவற்றை பொருள்கொள்ளும் முறையையும் அவற்றின் உச்சரிப்பையும் கூறுவது.
இரண்டாவது அத்தியாயத்தில் வஜ்ராயனத்தின் காலசக்கரத்தைப் பற்றிய விவரிப்பு. அடுத்த அத்தியாயத்தில் வஜ்ராயனத்தின் காவல்தேவதைகளின் வல்லமை குறித்தது. தொடர்ந்த இரு அத்தியாயங்கள் திபெத்தில் பரவலாக உள்ள போதிசத்வர்களைப்பற்றிய விவரிப்புகளும் அவர்களுக்குரிய மந்திரங்களும் உபாசனை முறைகளும்.
ஆகாசகர்ப்பர், அவலோகிதேஸ்வரர், க்ஷிதிகர்ப்பர், மகாஸ்தாமப்பிராப்தர், மஞ்சுஸ்ரீ, சமந்தபத்ரர் ஆகியவர்களுக்கு தனித்தனி அத்தியாயங்கள். பத்மபாணி, வஜ்ரபாணி ஆகியோருக்கு ஓர் அத்தியாயம். அவர்களின் தோற்றம், அவர்களின் இயல்பு, அவர்களை வழிபடும்முறை ஆகியவை செய்யுள் வடிவில் அளிக்கப்பட்டிருந்தன.
மைத்ரேய புத்தருக்கு இறுதி அத்தியாயம். மைத்ரேயரின் இருப்பிடம், அவருடைய நுண்ணுருவத் தோற்றம், அவர் எழுவதற்கான முற்குறிப்புகள், அவருடைய ஆகாயவடிவத் தோற்றம், அவர் வந்தபின் உருவாகும் தர்மலோகத்தின் விவரணை ஆகியவை அதில் கூறப்பட்டிருந்தன.
கூடுதலான ஓர் அத்தியாயம் பொருளடக்கம், அத்தியாய வைப்புமுறை, அடிப்படையான நூலமைப்பு ஆகியவையும் எவரெவர் அந்நூலை பயிலவேண்டும், எவ்வண்ணம் பயிலவேண்டும், என்னென்ன ஆசாரங்களைக் கடைப்பிடிக்கவேண்டும், என்னென்ன நோன்புகள் பேணப்படவேண்டும் ஆகிய செய்திகள்.
அந்நூலை நகலெடுத்து நிறைவுசெய்து கொண்டிருந்தோம். இறுதி அத்தியாயத்தின் எட்டு ஈரடிகள் மட்டுமே எனக்கு எஞ்சியிருந்தன. முடித்துவிட்டால் அக்கணமே அங்கிருந்து மேலே சென்று எங்கள் பொதிகளை எடுத்துக்கொண்டு அப்படியே கிளம்பி திரும்பிப்பாராமல் மடாலயத்தில் இருந்து சென்றுவிடவேண்டும். ஒருபோதும் திரும்பி வரக்கூடாது.
பாட் அந்நூலில் முழுமையாகவே ஆழ்ந்துவிட்டிருந்தான். அவனுக்கு வேறு நினைப்பே இல்லை என்று தோன்றியது. எங்களிடையே உதிரிச் சொற்கள் தவிர பேச்சே கிடையாது. அவன் கண்கள் கிறுக்கனின் கண்கள் போல நிலையழிந்து அலைமோதின. கைகளால் காற்றில் சுழித்தான். உதடுகளால் எதையோ ஓசையில்லாது சொல்லிக்கொண்டான். எதையோ நினைவுகூர்ந்தவன் போல திகைத்து நின்றான். தனக்குத்தானே ஆமோதிப்பவன் போலவும் மறுப்பவன் போலவும் தலையை அசைத்துக்கொண்டான். அவ்வப்போது தன் தலையில் கையால் வெறியுடன் தட்டிக்கொண்டான்
நானும் அப்படித்தான் இருந்தேனா? என் நடத்தைச் சிக்கல்கள் எனக்கே தெரிய வாய்ப்பில்லை. அங்கிருந்த பிக்ஷுக்கள் அவர்களின் உலகில் இருந்தனர். எங்களுடன் அவர்கள் தேவையில்லாது ஒரு சொல்கூட பேசவில்லை. நியிமா பெரும்பாலான நாட்களில் வெறும் விழிகளாலும் முகபாவனைகளாலுமே எங்களை அழைத்துச் சென்றார்.
அன்று எங்கள் அறையில் நான் நகலெடுத்த காகிதங்களைச் சீராக அடுக்கி என் தோல்பைக்குள் வைத்தேன். அந்த நூலை அப்படியே நகலெடுத்தேன் என்பது ஒரு பெரும்பணிதான் என்று தோன்றியது. ஆனால் அந்த நிறைவுடன் படுத்து மெல்லிய தூக்கம் ஒன்றுக்குப்பின் விழித்துக்கொண்டபோது அதைச் சரியாகச் செய்தேனா என்ற பதற்றம் எனக்குள் எழுந்தது. ஒரு எழுத்துகூட மாறாமல் அதை நகல்செய்துகொண்டேனா?
அந்த தொல்மொழிக்கு ஒரு சிறப்பு உண்டு, அதன் எழுத்துரு பிராமியிலிருந்து உருவானது. அதன் உச்சரிப்பு சீன, மங்கோலிய மொழிகளைச் சார்ந்தது. இந்த விசித்திரமான இணைவு அதற்கு நம்பமுடியாத வாய்ப்புகளை அளித்தது. கலைடாஸ்கோப் போல மாறிக்கொண்டே இருக்கும் மொழி அது. உச்சரிப்பும் எழுத்துருவும் இணைந்து தொட்டும் விலகியும் நடனமிட்டுக்கொண்டே இருந்தன,.அவற்றின் நிழல்பெருக்கம்போல அர்த்தங்கள் முடிவிலாது உருவாகிக்கொண்டே சென்றன.
அந்த எழுத்துக்களை உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றலாம். எழுத்தை மாற்றி உச்சரிப்பை மாற்றலாம். ஓர் எழுத்தை சற்றே மாற்றி எழுதி அச்சொல்லின் அர்த்தத்தை மாற்றிவிடலாம்.ஓர் எழுத்து தன்னளவிலேயே சுதந்திரமானது. அது சிறுபூச்சிபோல. எங்குவேண்டுமென்றாலும் சென்றமரும். முட்டையிட்டு தன்னைப் பெருக்கிக்கொள்ளும்
பாட் என்ன இருந்தாலும் மங்கோலியன். திபெத்திய மொழி அவர்களின் மொழிக்கு நெருக்கமானது. அவனுடைய நகலை என் நகலுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலென்ன? அச்செயல் விலக்கப்பட்டது, அதன் விளைவுகள் என்ன என்றுகூடத் தெரியவில்லை. ஆனால் என் முதல் தயக்கம் எண்ண எண்ண நீங்கியது. வேறுவழியே இல்லை, பிழையான ஒரு நகலுடன் செல்வது அந்தப் பயணத்தையே வீணடிப்பது. வருவது வரட்டும், செய்வது நல்ல நோக்கத்துடன்தானே?
நான் பாட் தூங்குகிறானா என்று பார்த்தேன். அவன் சீரான மூச்சை விட்டுக்கொண்டிருந்தான். எங்கள் அறைக்குள் இரவில் சிறிய கொழுப்பு மெழுகுவத்தி எரிந்துகொண்டிருக்கும். அந்த வெளிச்சம் மென்மையான செந்நிறச் சவ்வுபோல அறையை மூடியிருக்கும். இரவில் விழித்தெழுந்தால் ஒரு ரெம்ப்ராண்ட் ஓவியத்தில் நாம் இருப்பதாக பிரமை ஏற்படும்.
நான் மெல்ல எழுந்து அவனுடைய தோல்பையை எடுத்தேன். அதற்கு பூட்டு எதுவும் இல்லை. அவனுடைய இன்னொரு அலுமினியப் பெட்டிக்குத்தான் பூட்டு போட்டிருந்தான். இரவில் அவன் அந்த காகிதங்களை படித்துக்கொண்டிருந்ததை நான் தூங்கும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவன் அந்தக் காகிதங்களை துளையிட்டு பட்டுநூலால் கோத்து புத்தகம் போல வைத்திருந்தான். நான் அதைப் பிரித்து முதல் பக்கத்தை படித்தேன். நான் எழுதியதைப்போலவே இருந்தது. ஒவ்வொரு வரியாக படித்துக்கொண்டே சென்றேன்.
சட்டென்று ஓர் ஊசி என் மேல் குத்தியதுபோல உணர்ந்தேன். ஒரு சொல் புதிதாக இருந்தது. அதை நான் எழுதினேனா? என்னுடைய தாள்களை எடுத்துப் பார்த்தேன். முதல்வரியிலேயே நான் நடுங்கிவிட்டேன். அவன் எழுதி வைத்திருந்ததற்கும் நான் எழுதி வைத்திருந்ததற்கும் சம்பந்தமே இல்லை.
தலையில் கையை வைத்துக்கொண்டு சோர்ந்து அமர்ந்துவிட்டேன். மீண்டும் பார்த்தேன். என்ன வேறுபாடு? நான் அதை பார்த்து அப்படியேதானே எழுதினேன்? அதை ஓர் ஓவியம்போல நகல்செய்துகொண்டேன். என்ன நடந்தது? ஓவியங்களே கூட அறையின் வெளிச்சத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பார்கள்.
என்மேல் பார்வையை உணர்ந்தேன். திரும்பி பார்த்தேன். பாட் என்னை பார்த்துக் கொண்டிருந்தான். நான் பார்வையை தாழ்த்தி “முற்றிலும் வேறு பிரதி” என்றேன்.
அவன் ஒன்றும் சொல்லவில்லை.
நான் கண்ணீருடன் “எனக்கு இந்த நூலை பிரதியெடுக்கும் தகுதி இல்லை. இந்த மொழிக்கு அன்னியமானவன் நான். இது என்னை ஏமாற்றுகிறது” என்றேன்.
அவன் இம்முறை மெல்ல தொண்டையோசையை எழுப்பினான். பின்னர் “அப்படி அல்ல” என்றான்.
அவன் என்ன சொல்லப் போகிறான் என்று நான் பார்த்தேன்.
“அந்த நூலில் ஏதோ மாயம் இருக்கிறது” என்று பாட் சொன்னான். “நான் சிலநாட்களுக்கு முன்பு அந்நூலை முந்தையநாளின் தொடர்ச்சியை நகல் செய்வதற்கு முன்பு முன்பு நகல்செய்த பகுதியை ஒருமுறை படித்துப் பார்த்தேன். அதிலிருந்த ஒருவரியை சரியாக நகல்செய்து கொண்டேனா என்ற சிறு சந்தேகம் வந்தது. ஒருசில சொற்கள் மாறியிருக்கின்றனவா? அப்படி நிகழ வாய்ப்பில்லையே. ஒரு சொல்லை மட்டும் நினைவில் பதித்துக்கொண்டேன். திரும்ப அறைக்கு வந்து என் கையில் இருந்த நகலைப் பார்த்தேன். அந்தச் சொல் அதில் இல்லை. முற்றாகவே மாறியிருந்தது”
பாட் சொன்னான் . “எப்படி அது நடந்தது என்றே தெரியவில்லை. என் தலையில் நான் அறைந்து கொண்டேன். மறுநாள் கீழே சென்று அந்தப் பகுதியை அச்சு அசலாக அப்படியே நகல்செய்தேன். அதைச்செய்து முடித்தபோது நிறைவு வந்தது. இனிமேல் கவனமாக இருக்கவேண்டும் என்று முடிவுசெய்தேன். அந்த நிறைவுடன் இரண்டுநாட்கள் நகல் வேலையை தொடர்ந்தேன். ஆனால் மீண்டும் ஒருநாள் முந்தைய பக்கத்தைப் பார்த்தபோது அந்தச் சந்தேகம் வந்தது. மேலே வந்து என் நகலை பார்த்தேன். அந்தப்பக்கத்தை நான் நகல்செய்த பிரதியில் மாற்றி எழுதியிருந்தேன்”
நான் அச்சத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தச் சிறிய அறைக்குள் வேறெவரோ எங்களுடன் வந்து அமர்ந்துகொண்டது போலிருந்தது.
பாட் சொன்னான். “அதன்பிறகு நான் நகல்செய்த இரண்டு பக்கங்களை உடையில் மறைத்து கீழே கொண்டு சென்றேன். அவற்றை அங்கிருந்த பக்கங்களுடன் ஒப்பிட்டேன். முதல்பார்வைக்கு ஒன்றுதான். ஆனால் முற்றிலும் வேறுபிரதி. அதை விட ஒன்றை கவனித்தேன். நான் இரண்டு முறை பிரதியெடுத்த பக்கங்கள் இரண்டு வெவ்வேறு பிரதிகள், அங்கிருந்தது இன்னொன்று.”
பாட் தொடர்ந்தான். “நான் நிலைகுலைந்து போனேன். முதலில் நம்பவே முடியவில்லை. அதற்கு ஏதாவது தர்க்கபூர்வமான காரணம் இருக்கவேண்டும் என்றே என் மனம் ஓடியது. அறையின் வெளிச்ச வேறுபாடுகளால் அவ்வாறு நிகழ்கிறதா? அந்தப் புத்தகத்தை குறிப்பிட்டவகையில் சாய்த்தோ சரித்தோ வைத்தால் எழுத்துக்களில் மாறுபாடு வருகிறதா?”
“அல்லது நம் மனம் நகலெடுக்கும்போது ஊடாக புகுந்துவிடுகிறதா? அது சாத்தியம்தான். நாம் முதற்சில சொற்களைப் படிக்கிறோம். அவற்றைக் கொண்டு ஓர் அர்த்ததை உருவாக்கிக் கொள்கிறோம். அந்த அர்த்ததின் நீட்சியை நம் மனம் கணக்கிட்டு அடுத்தடுத்த எழுத்துக்களை வாசிக்கிறது. அர்த்தத்தை உருவாக்கிக் கொண்டே போகிறது. அதன்பின் அந்த அர்த்தம்தான் தெரியும். மொழி என்பது தூய அர்த்தமாக மாறிவிடும். எழுத்துக்களும் சொற்களும் மறைந்துவிடும். மொழி செயல்படுவதே அப்படித்தான். சுவரில் ஒரு கறையை பன்றி என்று நினைத்துவிட்டால் அங்கே பன்றி தெரிவதுபோல”
“ஒவ்வொரு எழுத்தும் அர்த்தத்தின் துளி. ஒவ்வொரு சொல்லும் ஒர் அர்த்த அலகு. அர்த்தங்களை அடுக்கி அடுக்கி ஒரு கட்டுமானத்தை உருவாக்குகிறது நம் மனம் ஒவ்வொரு சொல்லும் அதன்பின் அந்த கட்டுமானத்தின் ஒரு பகுதிதான். ஒவ்வொரு எழுத்தும் அதன் துளிதான். அவற்றுக்கென தனியான அர்த்தம் கிடையாது. அந்த மொத்தக் கட்டுமானம் தன் மாபெரும் எடையால் ஒவ்வொன்றையும் பிடித்து நிறுத்திவிடுகிறது”.
“ஆகவே அடுத்தநாள் ஒன்று செய்தேன். நான் இரண்டுமுறை பிழையாக எழுதிய அந்தப் பக்கத்தை பின்னாலிருந்து சொல் சொல்லாக எழுதினேன். அர்த்தமே என் மனதில் உருவாகாதபடி. அன்று வென்றுவிட்டேன் என்று தோன்றியது. அறைக்கு வந்தபோது வென்றேனா என்ற சந்தேகம் எழுந்தது. மறுநாள் அந்த பக்கத்தை கொண்டு சென்று அங்கிருந்த பக்கத்துடன் ஒப்பிட்டேன். அங்கிருந்தது மற்றொன்று”
“அன்று மேலும் வெறிகொண்டேன். பின்னாலிருந்து எழுத்து எழுத்தாக எழுதினேன். ஒவ்வொரு எழுத்தும் வெறும் படம். கோடுகோடாக புள்ளி புள்ளியாக. அன்று அந்த ஒரே ஒரு பக்கத்தைத்தான் என்னால் எழுதி எடுக்க முடிந்தது. மூட், நான் மறுநாள் சென்று அந்தப் பக்கத்தை ஒப்பிட்டுப் பார்த்தேன்.ஆமாம், அங்கிருந்தது வேறொன்று”.
“என் மண்டைக்குள் அமிலம் ஊறியதுபோல எரிச்சல். மண்டையே இரும்பாலானது போல எடைகொண்டது. உள்ளிருந்து அழுத்தம் எழுந்தது. முட்டைபோல என் தலையோடு வெடித்துவிடும் என்று ஒரு திமிர்ப்பு. சுவரில் தலையை ஓங்கி அறைந்து கொள்ளவேண்டும். இந்த மடாலயத்தின் சன்னல் வழியாக தலைகீழாக அந்த பாறைமேல் விழுந்துவிட வேண்டும்“
“பின்னர் இதை விடமாட்டேன் என்று உறுதிசெய்து கொண்டேன். “ஆமாம் விடமாட்டேன், விடமாட்டேன்” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். மந்திரம்போல. அதைச் சொல்லும் போதெல்லாம் பற்களைக் கடித்து கைகளை முறுக்கிக் கொள்வேன், ஒரு மற்போருக்குப் போவதற்கு முந்தைய கணம்போல என் உடலில் தசைகள் இறுகியிருக்கும்.நரம்புகள் துடிக்கும்”. பாட் கொந்தளிப்புடன் சொன்னான்.
நான் அவன் உணர்வுகளை வெறுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.
பாட் எழுந்து தன் தோல்பையில் இருந்து ஒரு கத்தை காகிதங்களை எடுத்து என் முன் வைத்தான். “பார்” என்றான்.
நான் அவற்றை எடுத்துப் புரட்டியபோது கைகள் நடுங்கின. நான் எண்ணியது சரிதான். அவை அனைத்திலும் இருந்தது அந்நூலின் ஒரே பக்கம். எண்பத்திஏழு நகல்கள். ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டவை.
எடைதாளாதவன்போல அவற்றை மேஜைமேல் வைத்துவிட்டேன். என்ன சொல்வதென்று தெரியாமல் அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்
பாட் பல்லைக் கடித்து தலையை அசைத்தான். தாளமுடியாத வலிகொண்டவன் போல அவன் கழுத்தில் நீலநரம்புகள் புடைத்திருந்தன
உறுமலோசையில் அவன் சொன்னான். “அந்த நூலின் மாயம் இதுதான். அதை நம்மால் நகல் எடுக்க முடியாது. இன்னொரு பிரதிதான் உருவாக்கமுடியும். திபெத் முழுக்க அத்தனை மடாலயங்களிலும் இந்நூலின் நகல்கள் இருக்கக்கூடும். பலநூறு நகல்கள். ஆயிரத்தி இருநூறாண்டுகளாக எத்தனையோ லாமாக்கள் இங்கே வந்து நகல்செய்து கொண்டு சென்றவை”
“ஆனால் அவை எவையும் இந்நூல் அல்ல, இந்நூலில் இருந்து அந்த லாமாக்கள் அடைந்தவைதான். அவை அந்த லாமாக்களைத்தான் காட்டுகின்றன. அவற்றின் வழியாக இந்நூலை எவரும் வந்தடைய முடியாது. சொல்லப்போனால் எவரும் இந்நூலை வந்தடைய முடியாது. அவர்கள் இதிலிருந்து தனக்குரிய நூலையே பெறுவார்கள்”.
“இந்நூலை வாசிக்கக் கூட முடியாது. வாசிக்கையிலேயே நாம் நமது நூலை உருவாக்கிக் கொள்கிறோம். அது அந்நூலை நமக்கு அளித்து அதைக்கொண்டு தன்னை முற்றாக மூடிக்கொள்கிறது. மூட், ஆயிரத்திநாநூறு ஆண்டுகளாக இந்நூல் வாசிக்கப்படவே இல்லை. பாட் கைகளை தூக்கி உரக்கச் சொன்னான். “ஒருவராலும் வாசிக்கப்படாத நூல் இது!” என்றான் பாட்.
நான் உள்ளூர பதறிவிட்டேன். என் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. எழுந்துசென்று தண்ணீர் குடிக்கவேண்டும் போலிருந்தது. ஆனால் என் உடலில் மனம் செயல்படவில்லை.
பாட் தலையை அசைத்தபடி தனக்குத்தானே என சொல்லிக்கொண்டான். “எவ்வளவு பெரிய அறைகூவல். மனிதனை சிறுபுழுவாக அணுவாக மாற்றிவிட்டு நின்றிருக்கும் ஆணவம் இது. எவரும் எதுவும் செய்யமுடியாது. நூல்கள் அறிவை உருவாக்குபவை. இந்த சபிக்கப்பட்ட நூல் அறியாமையை உருவாக்குகிறது. அறிவுக்கு எல்லை உண்டு, அறியாமைக்கு எல்லையே இல்லை”.
அவன் சட்டென்று சிரித்தபடி எழுந்து கைவிரித்து கூவினான். “முழுமுட்டாளாக ஆக்கப்பட்டுவிட்டேன். நான் வாசிக்கவே முடியாத ஒரு நூலின் முன் நின்றிருக்கிறேன். உண்மையில் அந்த நூல் அங்கே இருக்கிறதா? இல்லை அதுவும் ஒரு மாயத்தோற்றம்தானா?”
எதிர்பாராதபடி அவன் விம்மி அழுதான். அப்படியே தளர்ந்து அந்தக் கட்டிலில் அமர்ந்தான். கண்ணீர் வழிய, உதடுகள் துடிக்க முனகலோசையில் சொன்னான். “நான் எதற்காக இங்கே வந்தேன்? எந்த சபிக்கப்பட்ட பொழுதில் இந்த நூலைப்பற்றிய செய்தியை நான் அறிந்தேன்? இதிலிருந்து எனக்கு விடுதலையே இல்லை.ஆமாம், நான் இதில் சிக்கிக்கொண்டிருக்கிறேன். எனக்கு மீட்பே இல்லை!”
நான் மெல்லிய குரலில் “பாட்” என அழைத்தேன். “நீ சொல்வது உண்மை என்றால் நாம் நம்மால் முடிந்த ஒரு நகலுடன் இங்கிருந்து சென்றுவிடுவதே நல்லது.”
அவன் கண்ணீர் வழிந்த கண்களுடன் என்னை பார்த்தான்.
நான் சொன்னேன். “வேறுவழியே இல்லை. நான் நாளை நகல்செய்து முடித்துவிடுவேன். நாளையே கிளம்பிவிடுவேன்”
அவன் பெருமூச்சுவிட்டு அப்படியே படுத்தான்.கருக்குழந்தைபோல உடலைச் சுருட்டிக்கொண்டான்.
“பாட், நீ முடிக்க இன்னும் எத்தனை நாளாகும்?”
“நான் ஒரே ஒரு வரியை மட்டுமே மிச்சம் வைத்திருக்கிறேன்” என்று அவன் சொன்னான்.
“அப்படியென்றால் நாம் நாளையே கிளம்பிவிடுவோம். இந்த மாயச்சுழலில் நாம் சிக்கிக்கொள்ள வேண்டாம்” என்றேன். “ஏனென்றால் இந்த மாயம் நம்மிடம் இல்லை. ஆகவே இதை நாம் வெல்லமுடியாது. இது இந்தப் பிரபஞ்சத்தின் கட்டமைப்பிலேயே உள்ள ஏதோ மாயம்… மனிதர்கள் அதை அறியமுடியாத அளவுக்குச் சிறியவர்களாக இருக்கலாம்.”
அவன் முனகினான்.
“என்ன சொல்கிறாய்? நாளையே கிளம்பிவிடுவோமா?”
“சரி” என்று அவன் சொன்னான். போர்வைக்குள் புதைந்தவனாக “வேறுவழியில்லை… வேறுவழியில்லை” என்றான்.
முக்தா சொன்னார். நான் மறுநாள் காலை எழுந்தபோது முதல் எண்ணமாக அங்கிருந்து கிளம்பவேண்டும் என்றுதான் தோன்றியது. ஆனால் முந்தைய நாள் இருந்த பதற்றம் இல்லாமலாகியிருந்தது. மெல்லிய சந்தேகம் தோன்றிவிட்டிருந்தது. பாட் சொல்வது உண்மையா, அல்லது அவனுடைய மனப்பிரமையா? நானே அதை சோதித்துப் பார்த்தால் என்ன?
பாட் இரவெல்லாம் தூங்கவில்லை என்று தெரிந்தது. அவன் கண்கள் வீங்கி சிறிய கீறல்கள் போல தெரிந்தன. முகமெங்கும் சிவந்த தடிப்புகளும் இருந்தன. அவன் தலையை அசைத்துக்கொண்டும் முனகிக்கொண்டும் இருந்தான்.
நான் அன்று கீழே சென்றதுமே அந்நூலின் ஒரு பக்கத்தை நுணுகிநுணுகி நகல் எடுத்தேன். பின்னர் உடனே அந்தப் பக்கத்தையே மீண்டும் நகல் எடுத்தேன். மீண்டும் ஒருமுறை நகல் எடுத்தேன். மூன்றையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். மூன்று வெவ்வேறு பிரதிகள்.
மிகநுட்பமான மாறுதல்கள்தான். ஆனால் வாசித்துச் செல்கையில் ஒரு வார்த்தையின் அர்த்தம் மாறுவது விசையுடன் மலையிலிருந்து கீழிறங்கும் ஓடை ஒரு பாறையில் முட்டுவதுபோல. திசையும் விசையும் முழுமையாகவே மாறிவிடும்.
இன்னொரு சமயம் என்றால் எனக்கு பொறுமை சிதறியிருக்கும். ஆனால் அப்போது முன்னரே அப்படி என்று தெரிந்திருந்தமையால் அது ஒரு உற்சாகமான விளையாட்டாக மாறியது. ஒரே பக்கத்தை மீண்டும் மீண்டும் எழுதி அவற்றை ஒப்பிட்டு அவை நுட்பமாக மாறியிருக்கும் விந்தையிலேயே திளைத்துக்கொண்டிருந்தேன்.
அன்று மேலே செல்லும்போது என் மனம் மலர்ந்திருந்தது. முகம் புன்னகையில் பொலிந்திருக்க வேண்டும். ஆனால் பாட் எதையுமே கவனிக்கவில்லை. அவன் மேலே சென்றதும் என்னிடம் “இந்த பாதைகளில்தான் ஏதோ உள்ளது” என்றான்.
“என்ன சொல்கிறாய்?” என்றேன்.
“இவர்கள் அந்த புத்தகத்தை நாள்தோறும் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.”
“என்ன உளறுகிறாய்? இதோபார், இவை ஒரேநாளில் தொடர்ச்சியாக நான் எழுதியெடுத்த அறுபது பிரதிகள்…அறுபதும் வேறுவேறு”’
ஆனால் அவனிடம் எந்த தர்க்கமும் இருப்பதுபோல தெரியவில்லை. “நாம் கீழே செல்லும்பாதையை ஏன் அவர்கள் அத்தனை விசித்திரமாக வைத்திருக்கிறார்கள்?” என்று இன்னொரு கோணத்தில் பேசிச் சென்றான்.
“அந்த புத்தகத்தை பாதுகாப்பதற்காக” என்றேன்.
“அந்த புத்தகத்தை அங்கிருந்து வெளியே கொண்டுவந்து பார்க்கவேண்டும். அந்த அறையில்தான் ஏதோ இருக்கிறது. இங்கே பகல்வெளிச்சத்தில் பார்த்தால் அது ஒரு சாதாரணமாகக் கூட தெரியலாம். அந்த இடமும் அங்கே செல்லும் பாதையும் நம்மை சுழற்றியடிக்கின்றன”
“இந்த மாயங்கள் வெறும் தொழில்நுட்பங்கள்” என்று நான் சொன்னேன். “மேலே குமிழிகளை திருகும்போதே இங்கே ஒரு வழி அமைந்துவிடுகிறது. அதன் வழியாக மட்டுமே கீழே வரமுடியும். ஆனால் மேலே செல்லும்போது எல்லா வழிகளும் திறந்திருக்கின்றன. அவ்வளவுதான்.”
“அத்தனை எளிதானது அல்ல” என்றான்.
“சரி, இன்னும் கொஞ்சம் சிக்கலாக ஏதாவது இருக்கலாம். அதை அறிந்து நாம் என்ன செய்யப்போகிறோம்?”
“நான் அதை மேலே கொண்டுவரப்போகிறேன்.”
“அந்த புத்தகத்தை உள்ளே வைத்து பெட்டியை மூடினால்தான் மேலே வரும் வாசல்கள் திறக்கும் என நினைக்கிறேன்” என்று நான் சொன்னேன்.
“நான் முயன்று பார்க்கப் போகிறேன்”
“இதோபார், நமக்கு பல வாய்ப்புகள் இல்லை. நீ அந்த புத்தகத்தை உள்ளே வைக்காமல் வெளியே வர முயன்றால் பாதை மூடிவிடும். நாம் சிக்கிக்கொள்வோம்.”
“ஆம், ஆனால் ஏதாவது வழி கண்டுபிடித்தாகவேண்டும்” என்றான்.
“உளறாதே” என்றேன். நான் வேறொரு மனநிலையில் இருந்தேன். அவனுடைய அந்த கொந்தளிப்பு எனக்கு எரிச்சலூட்டியது.
“அந்த நூலில் உண்மையாகவே இருப்பது என்ன? யோசித்துப் பார்த்தாயா? அந்த நூல் இங்கே திபெத்தில் ஒரு மிகப்பெரிய அறிவியக்கத்தை உருவாக்கியிருக்கிறது. நேற்றெல்லாம் அதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். திபெத்திய நூலகங்களில் இந்நூலின் நகல்கள் எத்தனை இருக்கின்றன என்று என் நினைவிலிருந்தே தொகுத்துப் பார்த்தேன். எழுபதுக்கும் மேல். அப்படியென்றால் ஆயிரம் புத்தகங்களாவது இருக்கும். மேலும் பல ஆயிரங்கள் இருக்கலாம்…”
“அவை ஆயிரம் தனி நூல்கள். ஆயிரம் கருத்துநிலைகள், ஆயிரம் தரிசனஙகள். அவை ஒவ்வொன்றுக்கும் உரைகளும் விளக்கங்களும் எழுதப்பட்டன. அவற்றுக்கு வழிநூல்கள் எழுதப்பட்டன. அவை ஒன்றோடொன்று மோதின, ஒன்றுடன் ஒன்று இணைந்தன. அவ்வாறு மேலும் பல்லாயிர கருத்துக்களையும் தரிசனங்களையும் உருவாக்கின. இந்த ஆயிரத்துநாநூறு ஆண்டுகளில் அவை எத்தனை ஆயிரம் நூல்களாக மாறியிருக்கும்!”
“மிகமிகப் பிரம்மாண்டமான அறிவியக்கம் அது. அது திபெத்திலிருந்து எழுந்து இன்று உலகமெங்கும் சென்றுகொண்டிருக்கிறது. இன்று இலங்கையிலும் பர்மாவிலும் தாய்லாந்திலும் உள்ள தேரவாதத்திலும், ஜப்பானின் ஜென்பௌத்ததிலும் எல்லாம்கூட திபெத்திய வஜ்ராயனத்தின் செல்வாக்கு உள்ளது. அதாவது இந்த ஒருநூலில் இருந்து உலகம் எங்கும் சென்றுகொண்டிருக்கிறது நம்மால் அறியமுடியாத ஏதோ ஒன்று!”
“இத்தனை பிரதிகளை உருவாக்கும் அது உண்மையில் என்ன? அதை அறிந்தே ஆகவேண்டும். உலகையே வடிவமைத்துக் கொண்டிருக்கும் ஒன்றை உலகில் எவருமே அறியமுடியாது என்றால் மனிதமூளைக்கு என்ன அர்த்தம்? மனிதன் என்பதற்குத்தான் என்ன அர்த்தம்?” பாட் மூச்சுவாங்க பேசினான்.
“இதை விடவே முடியாது என்னால். நான் அந்நூலை அங்கிருந்து வெளியே கொண்டுவருவேன். அதை பகல்வெளிச்சத்தில் வைத்துப் பார்ப்பேன். சரியான நகல் ஒன்றை எடுப்பேன். அதை கொண்டுசென்று லாஸாவின் பெரிய மடாலயத்தின் மையக்கோயிலில் வைப்பேன். இவ்வளவுதான் என்பேன். இந்த உண்மையில் இருந்து எது முளைக்கிறதோ அதுபோதும் மனிதனுக்கு. முடிவில்லாத மாயையில் இருந்து உருவாகும் எதுவும் தேவையில்லை”
“ஒருவேளை இந்த நூலின் உண்மைவடிவம் வெளிவந்தால் அந்த அறிவியக்கம் அப்படியே நிலைத்துவிடக்கூடும்.ஆயிரக்கணக்கான நூல்கள் அப்படியே பொருளிழந்து காலத்தில் மறைந்துவிடும். ஒரு யுகமே முடிவுக்கு வந்துவிடும். ஆம், அப்படித்தான் நடக்கும்.ஆனால் அதுதான் இயல்பானது. ஏனென்றால் வரவிருப்பது அறிவியலின் யுகம்” பாட் சொன்னான்.
“நான் இந்த நூலின் உண்மைவடிவை எழுதிஎடுத்தால் அதை கொண்டுசென்று மாஸ்கோவின் அருங்காட்சியகத்தில் வைப்பேன். அங்கேதான் இருக்கவேண்டும் இது. இதனருகே இதைப்பார்த்து எழுதப்பட்ட பல்லாயிரம் நகல்களும் நகல்களின் நகல்களும் அவற்றின் விளக்கங்களும் வழிநூல்களும் மறுப்புநூல்களும் தொகுப்பு நூல்களும் வந்து குவியும். அனைத்தையும் அப்படியே அருங்காட்சியகத்தில் அடுக்கி வைத்துவிடவேண்டும்”.
“அவற்றில் இருந்து எழவிருக்கும் நவீன மனிதன் பெறவிருப்பது ஒன்றை மட்டும்தான். சென்றயுகம் எப்படி விந்தையான மாயைகளால் கட்டப்பட்டது என்னும் செய்தி. மனிதனின் அறிதல்குறைபாடுகளாலேயே அந்த மாயைகள் உருவாயின. அந்த மாயைகளை கற்பனையால் பெருக்கிப்பெருக்கி நுரையாலான மலைகளை உருவாக்கிக் கொண்டார்கள். அவற்றின்மேல் தங்கள் நகரங்களையே அமைத்தார்கள். வரும் தலைமுறை அதைக் கண்டு புன்னகையுடன் கடந்துசெல்லும். அப்படித்தான் நிகழும், அது மாற்றமுடியாத விதி. அதை நான் செய்தாகவேண்டும்”.
அவன் இரவில் பேசிக்கொண்டே இருந்தான். காய்ச்சல் கண்டவன் போல. சித்தம் பிறழ்ந்தவன்போல. ஆனால் நான் என் நெஞ்சுக்குள் ஊறிய இனிய கற்பனைகளில் திளைத்துக் கொண்டிருந்தேன். முடிவில்லாமல் ஆடும் ஒரு விளையாட்டை நான் கண்டுகொண்டேனா என்ன?
மறுநாள் நான் அந்த பக்கத்தை மீண்டும் மீண்டும் நகல் செய்தேன். அவற்றை ஒப்பிட்டேன். அவற்றிலிருந்த வேறுபாடுகளையும் ஒற்றுமைகளையும் குறித்தேன். அதில் ஏதாவது ஒத்திசைவோ வடிவ ஒருமையோ தெரிகிறதா என்று பார்த்தேன். மீண்டும் மீண்டும் அதைச் செய்தேன். எதுவோ தென்பட்டது, மறைந்துகொண்டது.
அன்று திரும்பும்போது நான் ததும்பிக் கொண்டிருந்தேன். என் விரல்நுனிகளில் குருதி வந்து முட்டி நின்றது. நான் வேறொரு வழியில் அந்நூலை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். அந்நூலின் அசல்வடிவம் என்ற கேள்வியே பொருளற்றது. அது உருவாக்கும் மாயத்தின் விதிகளும் ஒழுங்கும் என்ன என்று அறிந்தால்போதும், அந்நூலை அறிந்துவிடலாம்.
இந்நகல்கள் அனைத்திலும் ஓர் ஒழுங்கு உள்ளது. அதை என்னால் உணரமுடிகிறது, ஆனால் அதை தொகுத்து வகுத்துக் கொள்ளமுடியவில்லை. ஆனால் முடியும், அதற்கான வாய்ப்பு தெரிகிறது. எனக்குத்தேவை மேலும் மேலும் நகல்கள். ஆயிரக்கணக்கானவை. மாதிரிவடிவங்கள் பெருகப் பெருகத்தான் பொதுத்தன்மைகளும் விதிகளும் துலங்கி வரும். இது ஒரு புள்ளிவிவர விளையாட்டு மட்டுமே.
அறைக்குச் சென்றபின் நான் என் காகிதங்களை ஒப்பிட்டு ஒரு பட்டியலிடத் தொடங்கினேன். பட்டியலை அட்டவணையாக ஆக்கவேண்டும். அட்டவணையிலிருந்து தேற்றங்கள்.
பாட் புலம்பிக்கொண்டே இருந்தான். “அந்த பாதையின் புதிரை உடைக்கமுடியாது. அது எப்படி செல்லும்போது சிக்கலாக மீள்வதற்கு அத்தனை எளிதாக இருக்கிறது? நான் அந்தப்பேழையை வெறுமே மூடிவிட்டு வெளியேற முடியுமா என்று பார்த்தேன். இல்லை. அந்த புத்தகத்தை உள்ளே வைத்தால் மட்டும்தான் அந்தப்பேழையை மூடமுடியும். அல்லது அந்தப் புத்தகத்தின் அதே அளவுள்ள ஒரு பொருளை செய்யவேண்டும்”
“அல்லது அந்த அறையிலிருந்து வெளியேறும் வழி உண்டா? அது பிலம். பிலங்கள் எப்போதுமே மண்ணுக்குள் மலைக்குள் அமைந்திருக்கும் மிகப்பெரிய விரிசல்கள். அவற்றில் முன்பு உப்புக்கள் இருந்திருக்கும். பனியுருகிய நீரால் அவை கரைந்து அகன்றிருக்கும். அந்த உப்பு சென்ற பாதை அங்கே இருக்கும். அங்கிருந்து வெளியே செல்ல வழி இல்லாமலிருக்காது”
திடீரென்று ஒன்று தோன்றியது, அவன் வெளியேறுவதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறான். நான் உள்ளே செல்வதைப்பற்றிப் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
முக்தா சொன்னார். மறுநாள் இருவரும் இருவேறு நிலைகளில் அந்த நூல் இருந்த அறைக்குச் சென்றோம். அது ஒரு சிலந்திபோல அந்த பாதாள அறையில் இருந்து வலைபின்னி எங்களைச் சிக்க வைத்திருந்தது. ஆனால் நான் மகிழ்ச்சியுடன் அதை நோக்கிச் சென்றேன், தேன்நாடிச்செல்லும் தேனீ போல. அந்த நூலை ஆவலுடன் எடுத்து அந்த பக்கத்தை பிரித்து நகல் எடுத்தேன்.
அதை மீண்டும் மீண்டும் வெறியுடன் பிரதிசெய்துகொண்டே இருந்தேன். வெவ்வேறு வகையில். கீழிருந்து மேலாக, மேலிருந்து கீழாக. ஒற்றை எழுத்தை விட்டு விட்டு சொற்களை எழுதி முடித்தபின் அவ்வெழுத்துக்களை தனியாக எழுதிச் சேர்ந்தேன். ஒவ்வொன்றும் வேறுவேறு பிரதிகள். பின்னர் அவன் வந்து அமர்ந்து நகல்செய்யும்போது நான் அங்கேயே அமர்ந்து என் பிரதிகளை ஒப்பிட்டு பட்டியலிட்டு அட்டவணையிட்டேன். அட்டவணையை வரைபடமாக ஆக்கினேன்.
நாள் செல்லச் செல்ல என் வெறி ஏறியது. என் அறைக்குள் அடுக்கடுக்காக தாள்கள். அவற்றை இரவெல்லாம் ஒப்பிட்டு பட்டியலிட்டு அட்டவணையாக்கி வரைபடமாக ஆக்கினேன். அவனை நான் மறந்தே போனேன் .அவனும் என்னிடம் பேசவில்லை.
நான் மிகவேகமாகச் சென்றுகொண்டிருக்கிறேன் என்று தோன்றியது. ஒவ்வொருநாள் இரவும் மிக மிக அணுக்கமாக சென்றுவிட்டேன் என்று உணர்ந்தேன். ஆனால் காலையில் அந்த தொலைவு கூடிவிட்டிருக்கும். புதிய சிக்கல்களும் பிறழ்வுகளும் பிறவழிகளும் கண்ணுக்குப் படும். அது என்னை மேலும் வெறிகொண்டவனாக ஆக்கும்.
அந்த நகல்கள் உருவாகும் சூத்திரத்தை உருவாக்கிவிட்டால் அந்நூலே தேவையில்லை. அந்தச் சூத்திரத்தின்படி எந்த நூலையும் அவ்வண்ணம் முடிவிலாது வாசிக்கமுடியும். உலகிலுள்ள எல்லா நூல்களும் மூலநூல்கள் ஆகுமென்றால் நூல் என்பதற்கு என்ன பொருள்? நானே அந்த வேடிக்கை எண்ணத்தால் சிரித்துவிட்டேன்.
என் சிரிப்பொலி என்னை விழிப்புறச் செய்தது. நான் அந்த சுரங்க அறைக்குள் அமர்ந்து அட்டவணையிட்டுக் கொண்டிருந்தேன். பாட் அந்த நூலின்முன் அமர்ந்திருந்தான்.
அவன் என்ன செய்கிறான் என்று பார்த்தபோது திடுக்கிட்டேன். அவன் கண்களை மூடி அமர்ந்திருந்தான்.
“என்ன செய்கிறாய்?” என்று மெல்ல கேட்டேன்.
அவன் விசும்பி அழுதபடி தலைகுனிந்தான்.
“நகல் எடுக்கவில்லையா?”
“என்ன பயன்? இதை நகலெடுக்கவே முடியாதென்றால் நகலெடுத்து என்ன செய்ய? என்னுள் இருப்பதையே நான் எழுதிக்கொள்வேன் என்றால் இது எதற்காக?”
என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.
“இந்த சபிக்கப்பட்ட நூல் எனை கேலிசெய்கிறது. என்னை பைத்தியமாக ஆக்குகிறது.”
நான் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவனுடைய அந்த உணர்வுகள் முற்றிலும் உண்மையானவை. ஆனால் அந்த உணர்வுகளுடன் என்னால் இசைய முடியவில்லை. ஏன் அவன் அதை அத்தனை தீவிரமாக எடுத்துக்கொள்கிறான்.
“பாட் ஏன் நீ இதை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது?”என்றேன். “என்னைப்பார், நான் இதை ஒரு ஆடலாக மாற்றிக்கொண்டுவிட்டேன்”.
“விளையாட்டா? விளையாட்டா?” என்றபடி அவன் எழுந்து என்னை நோக்கி வந்தான். “விளையாட்டு என்றா சொல்கிறாய்? எது விளையாட்டு? உலகமெங்கும் பரந்திருக்கும் ஒரு மாபெரும் அறிவியக்கம் அடிப்படையில் ஒன்றுமில்லை என்றா? அறியமுடியாமையையே அறிவென்று ஆக்கி நிறைத்து வைத்திருக்கிறார்கள். அது விளையாட்டா என்ன? எத்தனை ஆயிரம்பேர் இதன்பொருட்டு வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். எத்தனை ஆயிரம்பேர் இதற்காக வாழ்க்கையையே தவமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்”
அவன் என்னை தாக்கிவிடுவான் என்று தோன்றியது.
“இது ஒரு தீயதெய்வம். மனிதனுடன் விளையாடுவதற்காக மண்ணின் ஆழத்தில் இருந்து எழுந்து வந்தது. இந்த ரகசியக்குகைக்குள் இருந்துகொண்டு உலகை ஆட்டுவிக்கிறது … இது” அவன் சட்டென்று எட்டி அந்த புத்தகத்தை உதைத்தான். அது அப்பால் சென்றுவிழுந்தது.
என் உள்ளத்தில் அந்த உதை விழுந்ததுபோல உணர்ந்தேன்.
“இது ஒரு நஞ்சு. உலகம் முழுக்க இது பரவிக்கொண்டிருக்கிறது. இது உலகையே பைத்தியக்காரவிடுதியாக ஆக்கிவிடும்… இது எந்த கேள்விக்கும் பதில் சொல்வதில்லை. எந்த வழியையும் காட்டுவதில்லை. நமது பதிலே சரி என நம்மிடம் சொல்கிறது. ஒவ்வொருவரும் நம்பும் வழியே சரியென கேட்கும் ஒவ்வொருவருக்கும் சொல்கிறது..வெறும் ஆணவங்களை மோதவிட்டு பொய்யை பிரம்மாண்டமாக கட்டி எழுப்பியிருக்கிறது”
“பாட், ஒருவேளை எல்லா மதங்களும் இப்படித்தானோ?” என்றேன்.
அவன் திகைத்தான்.
“எல்லா மூலநூல்களும் இப்படித்தானா?” என்றேன்.
அவன் தளர்ந்து அப்படியே அமர்ந்துகொண்டான்.
“கார்ல் மார்க்ஸின் மூலநூலும்கூட?” என்றேன்.
அவன் தலையை அசைத்துக்கொண்டான். பின் தன் மொட்டைத்தலையில் கையால் தட்டினான்.
“இது ஒன்றுதான் மனிதனுக்கு இருக்கும் ஒரே வழி போல தோன்றுகிறது. ஒவ்வொருவரும் அவரவருக்குரியதை சொல்ல அவற்றுக்கிடையே ஓர் ஒத்திசைவாக, சமரசப்புள்ளியாக, மையமாக ஏதோ ஒன்று திரண்டு வந்தால் அதுதான் மெய்மை போல” என்றேன்.
“போதும்” என்று அவன் சொன்னான். அவன் உடல் தூக்கி தூக்கி போடுவதை கண்டேன்.
பிறகு அவன் நிமிர்ந்தபோது கண்களில் நீர் படிந்திருந்தது. “அப்படியென்றால் எதற்காக இத்தனை தேடல்? இத்தனை உழைப்பு? இவ்வளவு கூரிய ஆராய்ச்சி?” என்றான்.
“நம்மால் வெறும்வெளியில் ஒரு நூலை உருவாக்கிக் கொள்ளமுடியாது என்று நினைக்கிறேன். முன்பே ஒரு நூல் இருக்கவேண்டும். அதை நாம் கனவுகாணவேண்டும். அதைத்தேடி வரவேண்டும். அரியபொக்கிஷம் போல அடையவேண்டும். அதை அணுவணுவாக நகல்செய்தோம் என்று நாம் நம்பவேண்டும். அதை வழிபடவேண்டும். அதைத்தான் நாம் உலகுக்குச் சொல்லமுடியும்…” என்று நான் சொன்னேன்.
“எண்ணிப்பார், நாம் இதை ஒப்புநோக்காமல் அப்படியே கொண்டு சென்றிருந்தால் உலகுக்கு இதை எப்படி அளித்திருப்போம்? மாற்றமே இல்லாத சொல் என்றுதானே? அழிவில்லாத மூதாதை ஞானம் என்றுதானே?” என்றேன் “அப்படி ஐயமே இல்லாமல் ஒன்றைச் சொல்பவர்கள்தான் பிறர்மேல் செல்வாக்கு செலுத்துகிறார்கள். அவர்கள்தான் சிந்தனை மரபை உருவாக்குகிறார்கள். தான் சொல்வது வழிவழியாக வந்தது என்றும் என்றுமுள்ள மெய்மை என்றும் அவர்கள் உண்மையிலேயே நம்பாமல் அப்படிச் சொல்லமுடியாது.”
“நாம் ஒப்புநோக்கியது தவறா?” என்றான் பாட்.
“அப்படித்தான் தோன்றுகிறது.”
“அறிவு என்பது பிழையாகவும் அறியாமை ஞானமாகவும் எப்படி ஆகிறது?” பாட் கேட்டான்.
நான் அதற்கு பதில் சொல்லவில்லை.
“நான் கொந்தளிப்பது இந்த மாயத்தைப் பார்த்துத்தான்…” சட்டென்று அவன் அந்த நூலை எடுத்தான். “இதை நான் அழிக்க முடியும்… இப்படி ஒன்று இல்லாமலேயே போகட்டும்… இதை…” அவன் அங்குமிங்கும் பார்த்து அதை தூக்கியபடி மெழுகுவத்தியை நோக்கிச் சென்றான்.
“இது இல்லாமலானால் இதை நோக்கி எழுதப்பட்ட எல்லா நகல்களும் உண்மையாக ஆகிவிடும்” என்றேன்.
அவன் கை தளர்ந்தது.
“இதை நம்மால் அழிக்கவே முடியாது. நாம் இங்கே எதையேனும் அறிந்தோம் என்றால் அதற்கு இந்த நூல்தானே சான்று” என்றேன்.
அவன் அதை அப்படியே வைத்துவிட்டு அமர்ந்து கொண்டு “உண்மைதான்”என்று பெருமூச்சுவிட்டான்.
நாங்கள் அந்த அறையிலேயே அமர்ந்திருந்தோம். பின்னர் அந்நூலை பேழைக்குள் வைத்துவிட்டு மேலே சென்றோம்.
வெளியேறி இடைநாழியில் நடக்கும்போது பாட் சட்டென்று சிரித்தான். “திபெத்திய மெய்ஞானம் அழியவே அழியாது” என்றான்.
“ஏன்?”என்றேன்.
“ஏனென்றால் அதற்கு மையமே இல்லை. அதன் எல்லா புள்ளிகளும் மையங்கள்தான்.”
நான் புன்னகைத்தேன்.
“மூலமே பொய் என்றால் எல்லா நகல்களும் உண்மைகள்தானே? பிழைகள் என்றும் திரிபுகள் என்றும் எதுவுமே இல்லைதானே?”
“ஆமாம்” என்றேன்.
அவன் மீண்டும் சிரித்தான். ஏனோ அவனுக்குச் சிரிப்பு பொங்கிப்பொங்கி வந்துகொண்டிருந்தது. அறைக்குச் செல்லும்போது அவனிடமிருந்து சீறலோசைகள் போல சிரிப்பு எழுந்துகொண்டிருந்தது.
அன்று அவன் மெத்தையில் அமர்ந்தபடி “நான் நாளை கிளம்பிச் செல்கிறேன்” என்றான்.
“ஏன்?” என்று திரும்பி பார்த்தேன்.
“அவ்வளவுதான்… இதற்கு அர்த்தமே இல்லை”
“நீ முடித்துவிட்டாயா?”
“சொன்னேனே ஒரே ஒரு வரி… அதை எழுதிவிட்டு மேலே வந்துவிடுவேன்… அதுவும் எனக்காக இல்லை, என்னை அனுப்பியவர்களுக்காக. முட்டாள்கள், அவ்ர்கள் எனக்குச் செலவுசெய்தது வீண். ஆனால் அவர்களுக்கு அது தெரியக்கூடாது.”
“பாட் நீ ஏன் எனக்கு உதவக்கூடாது? இதோபார், நான் மிகமிக முக்கியமான சிலவற்றை கண்டடைந்திருக்கிறேன். இந்த நூலின் ரகசியமே எனக்கு தெரியும். இன்னும் சில முடிவுகள் தெரிந்தால் போதும், இதை ஒரு சூத்திரமாகவே ஆக்கிக்கொள்ள முடியும்.”
அவன் என்னை பார்த்துக் கொண்டு புன்னகையுடன் அமர்ந்திருந்தான்
“இந்த நூல் உருவாக்கும் பிரதிகளுக்கு இடையே உள்ள பொதுத்தன்மை என்ன என்று பார்த்தேன். அந்த பொதுத்தன்மைகளை குறுக்கிக் குறுக்கி கொண்டுவந்து ஒரு பொதுவிதியாக ஆக்கமுடியுமா என்று பார்க்கிறேன். இதோ எட்டு விதிகள் இருக்கின்றன. எட்டும் நிரூபிக்கப்பட்டவை. ஆனால் எட்டுவிதிகள் இருக்கமுடியாது. எட்டையும் இணைக்கும் பொதுவான விதி என ஒன்று வேண்டும். அதை உருவாக்கிவிட்டோம் என்றால் இந்த நூலை நாம் வென்றுவிடுவோம்” என்றேன்.
அவனருகே அந்தக் காகிதங்களை பரப்பி உத்வேகத்துடன் நான் சொன்னேன் “இதுவரை இந்த நூல் அனைவரையும் தோற்கடித்திருக்கிறது. நாம் இதை வெல்லமுடியும். நீ எனக்கு உதவினால்போதும். இன்னும் சில நாட்கள்…உண்மையில் மிகமிக நெருங்கிவிட்டேன். கடைசிப்படி…”
அவன் என்னைக் கூர்ந்து பார்த்தபடி “இதை நீ எத்தனை நாட்களாகச் செய்கிறாய்?” என்றான்.
“பத்து நாட்களாக, உண்மையில் பதினாறு…”
“ஒரே பக்கத்தை?”
“ஆமாம், அதை உதாரணமாக எடுத்துக்கொண்டு…”
“உன்னை அந்தப் பக்கத்தில் அது சிறையிட்டிருக்கிறது.”
நான் எரிச்சலுடன் “என்ன சொல்கிறாய்?” என்றேன்.
“நீ அந்த ஒரு பக்கத்தில் சிக்கிக் கொண்டாய். அதிலிருந்து நீ விடுபடவே முடியாது.”
“உளறாதே.”
“நீ நகலெடுத்தவை அந்த புத்தகத்தின் சாத்தியங்களை காட்டுகின்றனவா உன் வாசிப்பின் சாத்தியங்களையா? மூட், அது உன்னுடைய சாத்தியங்கள் மட்டும்தானே?”
“வாயை மூடு!” என்று கூவியபடி நான் எழுந்தேன். “வாயை மூடு…. உன் மண்டையை அறைந்து உடைப்பேன்”
அவன் என்னை பரிதாபத்துடன் பார்த்தான். “நான் உன்னை பலநாட்களாக பார்த்துவருகிறேன். நீ கிறுக்கன்போல ஆகிவிட்டாய். தனக்குத்தானே பேசிக்கொள்கிறாய். சிரிக்கிறாய், கொந்தளிக்கிறாய்… உன்னைப் பார்க்கவே பயமாக இருக்கிறது.”
“நீதான் கிறுக்கன். நீதான் சிக்கிக்கொண்டிருக்கிறாய். அறிவுகெட்டவனே, நீ திரும்பிப்போக மாட்டாய்” என்று நான் கூவினேன்.
பின்னர் மூச்சிரைக்க அமர்ந்துகொண்டேன். தலையை கையால் தாங்கியபடி மேஜைமேல் கவிழ்ந்தேன். என்னையறியாமலேயே கண்ணீர் உதிரத்தொடங்கியது. என் உடலே பனிக்கட்டி போல உருகி சொட்டிக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.
நெடுநேரம் கழித்து அப்படியே படுத்துக்கொண்டேன். அவன் அதுவரை என்னை பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர் மெல்ல “மூட்” என்றான்
“ம்” என்றேன்.
“இது நமக்கு வேண்டாம். இங்கிருந்து சென்றுவிடுவோம்” என்று பாட் சொன்னான். “உண்மையில் நாம் சிக்கிக்கொண்டிருப்பது இந்த நூலில் அல்ல. நாம் நம் அகத்தில்தான் சிக்கிக்கொள்கிறோம். இந்த நூல் ஒரு குறியீடு. நம் நமது நம்பிக்கைகளிலும் ஆணவங்களிலும் அலைக்கழிகிறோம்”
நான் “ஆமாம்” என்றேன்.
“ஆனால் இந்த இடம் ஆபத்தானது. மனிதனின் அகத்தை பயன்படுத்திக்கொள்ளும் எந்தப்பொருளும் கொலைக்கருவியாகக் கூடும். உதாரணமாக, தன் நினைவின் மீதான நம்பிக்கை மனிதனுக்கு தீங்கு விளைவிப்பது. ஆனால் ஒரு சுழல்வழிப்பாதை அந்நம்பிக்கையை கொண்டே அவனைக் கொன்றுவிடும்… இந்த இடமும் இந்த புத்தகமும் அப்படிப்பட்டவை… நாம் கிளம்பிவிடுவோம்.”
“ஆமாம்” என்றேன்.
“நல்லிரவு” என்றான்
நான் பெருமூச்சுடன் “நல்லிரவு” என்று சொன்னேன்.
அவனும் பெருமூச்சுவிட்டான். திரும்பிப் படுத்துக்கொண்டு ஒரு சிறிய படிகமணிமாலையை உருட்டியபடி மணிபத்மநாமத்தை சொன்னான். பின்னர் அவனுடைய தூக்கத்தின் ஓசை கேட்டது.
நான் தூங்கிவிட்டேன். உடற்களைப்பு தீர தூங்கியபின் கனவு வந்தது. அந்த பொன்னிறப் புத்தகம். அதை புரட்டிப்புரட்டி அதன் பொன்னெழுத்துக்களை வாசித்துக்கொண்டே சென்றேன். என் அகம் பரபரத்தது. நான் அந்த விதியை கண்டுகொண்டேன்.
உடனே விழித்துக்கொண்டேன். அந்த விதியை கண்டுகொண்டேன் என்பதுதான் நினைவில் இருந்தது, அந்த விதி என்ன? எழுந்து சென்று என் காகிதங்களை எடுத்து அட்டவணைகளையும் வரைபடங்களையும் ஆராயலானேன். அந்த விதியை மிகமிக அணுக்கமாகக் கண்டேன். கனவில் வந்து என்னைத் தொட்டுச் சென்றது. அது என் அருகேதான் நின்றிருக்கிறது.
ஒருவேளை ஒரே ஒரு அடிதான் தேவைபோலும். ஒரு சிறிய திறப்பு. பெரும்பாலான கண்டுபிடிப்புகளை இந்த நேரத்தில்தான் கைவிடுகிறார்கள். உளம் சோர்ந்துவிடுகிறார்கள். சலிப்புற்றுவிடுகிறார்கள். நம்பிக்கை இழக்கிறார்கள். அந்நம்பிக்கையின்மையை உருவாக்குபவர்கள் அப்போது தேடிவருவார்கள். அதற்குரிய செய்திகளே காதில் விழும். பிரபஞ்சநியதி தன் கடைசி சோதனையை முன்வைக்கிறது. அதையும் தாண்டுபவர்களுக்குரியதே உண்மை. உண்மையின் இறுதித்திரை ரத்தத்தால் ஆனது என்று ஒரு பௌத்த மூதுரை உண்டு.
இவன் என்னை பின்னிழுக்க வந்தவன். இவன் என்னுடன் வந்ததே இதற்காகத்தான். இவனுடைய சோர்வும் சலிப்பும் என்னை சிகரத்திலிருந்து கீழே உருட்டிவிடும்பொருட்டு. இவனைப் பொருட்படுத்த மாட்டேன். இவன் கிளம்பிச் செல்லட்டும், நான் கிளம்பமாட்டேன்.
முக்தா சொனனார். அந்த இரவில் நான் நீண்ட ஆழமான தூக்கத்தை அடைந்தேன். காலையில் கையில் அந்த தங்கப்புத்தகத்துடன் லாமா டென்ஸின் க்யாட்ஸோ வந்து என்னை தட்டி எழுப்பினார். “இதோ நீ தேடுவது” என ஒருவரியைச் சுட்டிக்காட்டினார். அந்த பக்கத்தில் அந்த விதி ஈரடிகளாக எழுதப்பட்டிருந்தது. ஆ என்றபடி எழுந்துகொண்டேன்.
நியிமா என் முன் நின்றிருந்தார். “பாட் எங்கே?” என்றார்.
நான் எழுந்து அமர்ந்தேன். “பாட்? அவன் இங்கேதான் இருந்தான்…” என்றேன்.
“நீ நெடுநேரம் விழித்தெழவில்லை என்பதனால் அழைக்கவந்தேன். நீ மட்டும்தான் அறையில் இருக்கிறாய்… அவனைக் காணவில்லை.”
நான் “அவன் இங்குதான் இருப்பான்… எங்காவது” என்றேன்.
“இது மிகச்சிறிய மடாலயம்… இங்கே ஒருவர் மறைந்துவிடமுடியாது”
நான் தேடுகிறேன் என்று சொல்லி மேலங்கியை போட்டுக்கொண்டேன். பாட்டை தேடிக்கொண்டு அறைகள் தோறும் சென்றேன்
ஒருவேளை கிளம்பிச் சென்றிருப்பானா? நான் முற்றத்தை சென்றுபார்த்தேன். எங்கள் கழுதைகள் கொட்டிலில்தான் இருந்தன.
ஷெரிங் என் பின்னால் வந்து நின்று “நடந்துகூட சென்றிருக்க முடியாது. மென்பொருக்குப் பனியில் காலடிகளே இல்லை” என்றார்.
நான் உள்ளே சென்றேன். பதற்றம் கொள்ளத் தொடங்கியிருந்தேன். நியிமா விரைந்த சிற்றடிகளுடன் எதிரே வந்தார். “தலைமை லாமா, அவன் அந்த புத்தகத்தை தேடிச் சென்றிருக்கலாம் என்கிறார்” என்றார்.
“அவன் இன்று கிளம்புவதாக இருந்தான். ஒரு வரி மட்டுமே மிச்சம் வைத்திருந்தான்.”
அவர் விரைந்து செல்ல நான் அவருடன் சென்றபடி “நானும் வரலாமா?” என்றேன்.
“வா” என்றார்.
அந்த அறையை திறந்தார். அதன் நிலவறை வாசலின் குமிழிகளை இழுத்ததுமே நின்று என்னை பார்த்து “கீழே சென்றிருக்கிறான்” என்றார். “இந்தப்பூட்டு இரவில் ஒருமுறை திறக்கப்பட்டிருக்கிறது.”
“எப்படித்தெரியும்?”
“இதன் குமிழிகளை இழுக்கும் கணக்கு ஒவ்வொருமுறை திறக்கும்போதும் மாறிக்கொண்டே இருக்கும். நான் நேற்று திறந்தபிறகு இன்று திறப்பதற்குள் ஒன்று கூடியிருக்கிறது” அவர் தலைகுனிந்து எண்ணிக் கணக்கிட்டு குமிழிகளை தள்ளினார். அறுபத்துநான்குமுறை தள்ளியபோது அது உள்ளே திறந்துகொண்டது.
குகைவழிப்பாதையில் இறங்கியபோது அவர் “மேலே திறப்பதற்கு ஏற்ப உள்ளே வழிகள் திறக்கும்… அதை தெரிந்துகொள்வது எளிதல்ல. அவன் நீண்ட நாட்களாகவே இந்தக் கணக்கை போட்டிருக்கவேண்டும்”
நான் அச்சத்துடன் “அவன் அந்த புத்தகத்துடன் தப்பிச் சென்றிருக்கக்கூடும்” என்றேன்.
“வாய்ப்பே இல்லை, அவன் இந்த மடாலயத்திலிருந்து வெளியே செல்லவில்லை.”
“அவனுக்கு சில துணைவர்கள் இருக்கலாம்” என்றேன். “அவன் ருஷ்ய ஒற்றனாக இருக்கலாம்”
அவர் ஒன்றும் சொல்லவில்லை.
அவர் வழிகளை தெரிவு செய்து கீழே சென்றார். ஒவ்வொரு அறையிலும் இருந்த காவல்தேவதைகளும் போதிசத்வர்களும் பேருருவம் கொண்டு உறுத்துப் பார்ப்பதாகத் தோன்றியது. அவர்கள் முன் நான் சிறுபூச்சியாக ஊர்ந்துகொண்டிருந்தேன். ஒரு காலடியில் அவர்கள் என்னை மண்ணோடு தேய்த்துவிடமுடியும்.
கீழே மைய அறைக்குள் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. “இங்கே வந்திருக்கிறார்” என்று நியிமா சொன்னார்.
நான் அந்த பேழையைப் பார்த்தேன். அது திறந்திருந்தது. அந்த தங்கப்புத்தகம் உள்ளே இல்லை.
நியிமா “அவர் வெளியே போயிருக்க முடியாது” என்றார். அந்த அறையின் தரையை கூர்ந்து பார்த்தபடி சுற்றிவந்தார். பிறகு மறுபக்கம் தெரிந்த இருண்ட சிறிய பாறைவிரிசலைச் சுட்டிக்காட்டி “இந்தவழியாகச் சென்றிருக்கிறார்” என்றார்
அதன்வழியாகத்தான் உள்ளே காற்று வந்துகொண்டிருந்தது. அதற்குள் நுழையவேண்டும் என்றால் மண்டியிட்டு தவழ்ந்து போகவேண்டும்.
நியிமா குனிந்து நிலத்தோடு படுத்து “பாட்!” என்று கூப்பிட்டார். உள்ளே எங்கோ எதிரொலி முழங்கியது. நானும் அருகே படுத்து “பாட்!பாட்!”என்று கூவினேன். உள்ளே ஏராளமான குகைவழிப்பதைகள் இருக்கக்கூடும். அந்த குரல் ஏராளமான குரல்களாக மாறிச் சென்று மீண்டும் வந்து செல்வதை கேட்டேன். குகை ஓங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.
“பாட்! பாட்!” என்று அழைத்துக்கொண்டே இருந்தோம். எந்த ஒலியும் கேட்கவில்லை.
நியிமா “இதற்குள் சென்றால் மீளவே முடியாது. ஆயிரம் விரிசல்கள் என்றுதான் இந்த குகைவழிக்கே பெயர்” என்றார்.
“இதற்குள் முன்பு எவராவது போயிருக்கிறார்களா?”
அவர் ஒன்றும் சொல்லவில்லை. அந்த பேழையை அணுகி அதற்குள் இருந்த சிலகுமிழ்களை திருகி இழுத்து குறிப்பிட்டவகையில் வைத்தபின் போகலாம் என்று கைகாட்டினார்.
நான் சோர்ந்து ஒவ்வொரு காலடியாக எடுத்து வைத்து வெளியே வந்தேன். மேலே வந்து நின்றபோது கால்தளர்ந்து விழப்போய் சுவரை பிடித்துக்கொண்டேன்.
செத்த உடல்போல ஆகிவிட்டிருந்தேன். என்னை உந்தி நீக்கி அறைக்குள் சென்றேன். அங்கே பாட்டின் பெட்டியும் தோல்பையும் ஆடைகளும் இருந்தன. படுக்கையில் படுத்துக்கொண்டு கண்களை மூடினேன். பாட் அந்த அறைக்குள் இருப்பதாக கற்பனை செய்துகொண்டேன்.
அவன் ஏன் அங்கே சென்றான்? எதற்காக அந்நூலை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றான்? நேற்றிரவு என்னிடம் அவன் பேசியது வேறு. அதன் பின் என்ன நடந்தது? அவன் கனவு கண்டிருக்கவேண்டும். ஆம், அக்கனவில் அந்த நூல் வந்திருக்கும். அது அவனை அழைத்திருக்கும்
நான் அழத்தொடங்கினேன். ஒரு சொல் இல்லாமல் ஏங்கி ஏங்கி அழுதுகொண்டே இருந்தேன். அழுந்தோறும் என் அகத்திலிருந்த வெறுமை கூடிக்கூடி வந்தது. நெடுநேரம் அழுதபின் அப்படியே தூங்கிவிட்டேன்.
அத்தனை பெரிய வெறுமையை உள்ளம் தாளமுடியாது, நான் தூங்கியது அதனால்தான். எடையுள்ளவற்றை இலைகள் நழுவவிடுவதுபோல உள்ளம் சுமைகளை விட்டுவிடுகிறது. வெறுமையே உள்ளம் கொள்ளும் சுமைகளில் பெரியது.
நான் விழித்துக் கொண்டபோது என் அறைக்குள் காலை வெளிச்சம் நிறைந்திருந்தது. இரவில் கண்கூசும் விளக்குகள் எரிவதாகவே எனக்கு தோன்றியது. எழுந்து அமர்ந்தபோதுதான் அது காலை என தெரிந்தது. நான் முக்கால்பகலும் முழு இரவும் தூங்கியிருக்கிறேன் என்று தெரிந்தபோது திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன்
மிகநீண்டநேரத் தூக்கத்தால் என் உடல் வலித்துக் கொண்டிருந்தது. வாய் உலர்ந்து உதடுகள் ரப்பர் போலிருந்தன. கண்களும் முகமும் வீங்கியிருப்பது போல் தோன்ற கைகளால் தேய்த்துக் கசக்கிக் கொண்டேன். எழுந்து நின்றபோது தலைசுழன்றது. கால்கள் வீங்கியிருக்கின்றனவா?
என் கண்ணில் எதுவோ பட்டது. உள்ளம் அதிர்ந்து வயிற்றில் ஒரு சில்லிடல். அதன்பின்னரே அது என்ன என்று கண்டேன். பாட்டின் பெட்டி. அவனுடைய தோல்பை. துயரம் கடுங்குளிர்போல எல்லா திசைகளிலும் இருந்து வந்து சூழ்ந்துகொண்டது. மீண்டும் மெத்தையில் அமர்ந்து தலையை கைகளால் தாங்கிக் கொண்டேன்
நெடுநேரம் ஆகியிருக்கலாம். மெல்ல தூரத்திலிருந்து வரும் காற்றின் ஓசைபோல ஒர் எண்ணம். ஒருவேளை பாட் மீண்டு வந்திருக்கலாம். அல்லது அவன் தப்பிச்சென்ற செய்தியாவது வந்திருக்கலாம். ஏன் நம்பிக்கையை விடவேண்டும். வாய்ப்பிருக்கிறது, ஆம், வாய்ப்பிருக்கிறது…
நான் எழுந்து வராந்தா வழியாக ஓடினேன். சமையலறையில் நியிமா இருந்தார். அவருடன் ஷெரிங் சமையலுக்கு உதவிக்கொண்டிருந்தார். நான் பௌத்த வணக்கத்தைச் சொன்னேன். அவர் கண்கள் சுருங்க வழக்கம்போல சிரித்து என்னை வாழ்த்தினார்.
“பாட்… பாட் என்ன ஆனான்?” என்றேன்.
“அவன் அந்த வழியாகத்தான் சென்றிருப்பான்… அவன் மீளமுடியாது. அது மிக ஆழமான சிக்கலான பாதை.”
“அதன் வழியாக போய்விடலாம் என்று எப்படி தோன்றியது அவனுக்கு?”
“அப்படி தோன்றலாம்… அங்கே குனிந்து பார்த்தால் சிலசமயம் வெளிச்சம்தெரியும்… அது மறுமுனை வாசலின் வெளிச்சம்போல தோன்றும். உண்மையல்ல அது. பனிப்பரப்பில் பட்டு தெரியும் வெளிச்சம்” என்றார் நியிமா.
நான் தளர்ந்தேன். அவர் எனக்கு சூப்பை கோப்பையில் அள்ளி கரண்டி போட்டு அளித்தார் நான் அதை இரண்டுகைகளாலும் வாங்கிக்கொண்டு குடித்தேன்.
சூப் என்னை தெளிவடையச் செய்தது. “நியிமா நான் கிளம்புகிறேன்” என்றேன்.
அவர் புன்னகைத்து “நல்லது” என்றார்.
“நான் லாமா யோண்டென் க்யாட்ஸோ அவர்களிடம் விடைபெறவேண்டும்” என்றேன்.
“நீங்கள் சென்று அவரைச் சந்திக்கலாம்… நாங்கள் இங்கே புகையிடுகிறோம். கீழே இடையர் கிராமத்தில் இருந்து வழிகாட்டி வருவார்.”
நான் என் அறைக்குள் சென்று என் பைகளை கட்டினேன். நகலெடுத்த அந்த நூலின் பக்கங்கள் கட்டுக்கட்டாக இருந்தன. அருகே இன்னொரு தோல்பையில் பாட் எடுத்த நகல்கள்.
சற்றுநேரம் அவற்றை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். எந்த எண்ணமும் இல்லாமல் மனம் ஒழிந்துகிடந்தது. ஒருகணத்தில் ஏன் அப்படி பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்து துணுக்குற்றேன். அவற்றை அப்படியே ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டு சென்று பின்பக்கம் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் பெரிய அடுப்பிற்குள் போட்டேன்.
அவை சட்டென்று பற்றிக்கொண்டு எரிந்தெழுந்து மறைவதைக் கண்டபோது என் உள்ளே நூற்றுக்கணக்கான சரடுகள் அறுந்தன. அப்போது நான் அடைந்த விடுதலையை முன்பு எப்போதுமே அறிந்ததில்லை. மேலும் சில கட்டைகளை எடுத்து வைத்துவிட்டு மீண்டும் அறைக்கு வந்தேன்.
என் பொதிகளை கொண்டுசென்று முற்றத்தில் வைத்தேன். யோண்டென் க்யாட்ஸோ அவர்களின் அறைக்கு சென்று வெளியே காத்திருந்தேன். அவரை நாம் அழைக்கக்கூடாது என்பது நெறி. பேசாமல் நிற்கவேண்டும், எவ்வளவுநேரமானாலும். அவரே நம்மை அழைப்பதுவரை.
சற்றுநேரத்தில் கதவு திறந்து அவர் உள்ளே வரும்படி அழைத்தார். நான் உள்ளே சென்று அவரை பணிந்து வணங்கினேன். அமரும்படிச் சொன்னார். மெத்தையிருக்கை மேல் அமர்ந்தேன். அவருடைய சிறிய மேஜைமேல் அந்த தங்கப்புத்தகம் இருந்தது.
“இது…” என்றேன்.
“கீழே ஓடையில் கிடைத்தது… இங்கிருந்து எது மறைந்தாலும் அங்கே வந்துவிடும்” என்றார் லாமா யோண்டென் க்யாட்ஸோ.
நான் நெஞ்சு படபடக்க அவரை வெறுமே பார்த்திருந்தேன். என் எண்ணத்தை உணர்ந்தவராக “ஆனால் சிறியபொருட்கள் மட்டும்தான் கிடைக்கும்….உடல்கள் அல்ல” என்றார்.
நான் விழிகளை தாழ்த்திக்கொண்டேன். பாட்டை மலையின் குடல்கள் செரித்துக்கொள்ள தொடங்கியிருக்கும் என்று தோன்றியது.
“நீ கிளம்புகிறாய் என்று சொன்னார்கள்”
“ஆம்” என்றேன்.
அவர் தலையசைத்தார். அதே உணர்ச்சியில்லாத தலையாட்டல். எழுந்து வணங்கி விடைபெற்றுக்கொண்டேன்.
முற்றத்தில் மென்மையான வெயில் நிறைந்து நின்றது. நேர்முன்னால் மலைமுடிகளின் சரிவுகள் கண்கூசும்படி ஒளிவிட்டன. பனிமுடிகள் மலைகளின் கூரியமுனை போலிருந்தன. சிலசமயம் வெயிலொளி காலத்தையே மிளிர்வு கொள்ளச்செய்கிறது என்று தோன்றுமே, அத்தகைய தருணம்.
நியிமா “வழிகாட்டி வந்துகொண்டிருக்கிறான்” என்று சுட்டிக்காட்டினார்
மிகக்கீழே ஒரு கழுதையில் ஒருவன் வந்துகொண்டிருந்தான். எறும்புபோல. அவனைப் பார்த்தபடி மடாலயத்தின் படிகளில் அமர்ந்திருந்தேன். துயரமில்லை, மகிழ்ச்சியில்லை, நிறைவுமில்லை, குறைவுமில்லை.
முக்தா சொன்னார். நான் மீண்டும் ட்ரா யேர்பா மடாலயத்தை வந்தடைந்தேன். அங்கே நான் திரும்பி வந்தது சிறிய வியப்பை ஏற்படுத்தியதை பிக்ஷுக்களின் முகங்களிலிருந்து உணர்ந்தேன். ஆனால் அவர்கள் என்னிடம் எதையும் கேட்கவில்லை. சூடான சூப் அருந்தி ஓய்வெடுத்தேன். அன்று முழுக்க மலைகளை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்
அன்றிரவு ஆழ்ந்து உறங்கினேன். காலை எழுந்ததும் முந்தையநாளின் தொடர்ச்சி என்பதுபோல வேலைசெய்யத் தொடங்கினேன். பாத்திரங்களைக் கழுவினேன். மடாலயத்தை தூய்மைசெய்தேன். விறகு வெட்டினேன். தண்ணீர் சுமந்தேன். அங்கிருந்தவர்கள் நான் சென்றுமீண்டதையே அறியாதவர்கள் போலிருந்தனர். இரண்டு நாட்களில் அதை மறந்தும்விட்டனர்.
மூன்றுமாதங்களுக்குப் பின் ஒருநாள் பிக்ஷு வந்து என்னிடம் லாமா டென்ஸின் க்யாட்ஸோ என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார். நான் அப்போது கூடத்தின் மென்மயிர்ப்பரப்பை பிரஷ்ஷால் சீவி தூசியை அகற்றிக்கொண்டிருந்தேன். கைகளை தட்டிவிட்டு அவருடன் சென்றேன்.
லாமா டென்ஸின் க்யாட்ஸோ அவர்களைச் சந்திப்பதற்காக யேஷேவின் கோயிலுக்கு வெளியே காத்திருந்தபோது என்னுள் எண்ணம் என ஏதுமில்லை. அங்கே அவரைச் சந்திப்பதற்காக முன்பு காத்திருந்த நினைவுகூட. நான் முந்தைய வாழ்விலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தேன்.
உள்ளே வரலாம் என மணியோசை எழுந்தது. நான் உள்ளே சென்றேன். லாமா டென்ஸின் க்யாட்ஸோ அவருடைய உயரமான பீடத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு அப்பால் யேஷூதேவி கீழிருந்த மெழுகுவிளக்குகளின் ஒளியில் பொன்னொளி கொண்டிருந்தாள் அவள் நீண்ட கனவுமயங்கிய கண்கள் தழைந்து என்னை நோக்கின.
“மீண்டும் குகையறைக்குச் செல்கிறாயா?” என்று லாமா டென்ஸின் க்யாட்ஸோ கேட்டார்.
“ஆம்” என்று நான் சொன்னேன்
“ தியானநூல் உடனிருக்கிறது அல்லவா?”
“இருக்கிறது” என்றேன்.
“அது நிலையானதா, உலகனைத்துக்கும் உரியதா?”
“ஆமாம்” என்றேன்.
முக்தா சொன்னார். நான் அந்தக் குகைச்சிற்றறைக்குள் பன்னிரண்டு மாதங்கள் இருந்தேன். அங்கிருந்து கூட்டுப்புழு சிறகடித்து வெளிவருவதுபோல வெளிவந்தேன். அதன்பின் நான் என்னவானேன்? இப்படி வகுத்துக்கொள்கிறேன், எதையுமே அடையமுடியாதவனாக மாறினேன். ஆகவே எதையும் இழக்க இல்லாதவனாகவும் ஆனேன்.
குருவின் உரையை பிரதி எடுக்கும் வேலைகள் முடிந்து காகிதங்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். முக்தா எழுந்து பெரிய சால்வையை உடலைச் சுற்றிப் போட்டுக்கொண்டு சமையலறை நோக்கிச் செல்வதை பார்த்துக்கொண்டு நான் அமர்ந்திருந்தேன்
[நிறைவு]
***