‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–74

பகுதி ஏழு : நீர்புகுதல் – 3

மதுராவிலிருந்து மீண்டும் விதர்ப்பத்திற்கே நான் கிளம்பினேன். இம்முறை என்னுடன் மதுராவின் இரண்டு அமைச்சர்களும் உடன்வந்தனர். யமுனையினூடாக படகில் கங்கையை அடைந்து, அங்கிருந்து எதிரோட்டத்தை தாங்கும் சிறிய பாய்கொண்ட மென்மரப் படகில் வரதாவினூடாக கௌண்டின்யபுரியை சென்றடைந்தோம். முன்னரே எங்கள் வருகையை ருக்மிக்கு அறிவித்திருந்தோம். ஆகவே எங்களை வரவேற்க படகுத்துறையில் விதர்ப்பத்தின் சிற்றமைச்சர் ஒருங்கியிருந்தார்.

நாங்கள் சென்றிறங்கியபோது எங்களுக்கு முறையான வரவேற்பு அளிக்கப்பட்டது. எங்களை அழைத்துச்சென்ற அமைச்சர் ஒரு மாளிகையை அளித்து ஓய்வெடுத்து ஆடைமாற்றும்படி பணித்தார். ஆனால் அது எங்கள் தகுதிக்கான இடமல்ல என்று அப்போதும் உணர்ந்தேன். முறைமை செய்யவேண்டும், ஆனால் தன் பொருட்டின்மையை தெளிவுற அறிவுறுத்த வேண்டும் என்றும் ருக்மி விரும்புவதை உணர்ந்துகொண்டேன். அதை பொருட்டெனக் கருதியதாக காட்டிக்கொள்ளவேண்டாம் என்று என் உடன் வந்த மதுராவின் அமைச்சர்களிடம் கூறினேன்.

நாங்கள் ஓய்வெடுத்த பின்னர் அந்தியில் எங்களை அவைக்கு அழைத்துச்செல்ல ருக்மியின் சிற்றமைச்சர்கள் வந்தார்கள். அவர்கள் கவலைகொண்ட முகத்துடன் இருப்பதை, தங்களுக்குள் எரிச்சலுடன் பேசிக்கொள்வதை நான் உணர்ந்தேன். கௌண்டின்யபுரியில் ஏதோ நிறைவின்மை கருக்கொண்டிருக்கிறது என்று தெரிந்தது. அவைமுகப்பிலேயே எங்களைக் காத்து ருக்மியின் மைந்தர்களான ருக்மகனும் ருக்மதேஜஸும் ருக்மாங்கதனும் ருக்மவீரனும் ருக்மராஜனும் நின்றிருந்தனர். அவர்களின் முகங்கள் எங்களிடம் ஏதோ சொல்ல விழைவதுபோல தோன்றின.

அவர்களில் ருக்மாங்கதனும் ருக்மராஜனும் ருக்மியின் உடன்பிறந்தவரான ருக்மகேதுவின் மைந்தர்கள். ருக்மவீரன் ருக்மியின் இளையோன் ருக்மரதனின் மைந்தன். குருக்ஷேத்ரப் போரில் ருக்மியின் தந்தையும் கௌண்டின்யபுரியின் அரசருமான பீஷ்மகர் தன் மைந்தர்களான ருக்மரதன், ருக்மகேது, ருக்மபாகு, ருக்மநேத்ரன் ஆகியோருடன் உயிர்துறந்தார். அவர்களில் ருக்மபாகு, ருக்மநேத்ரன் இருவரும் விதர்ப்பத்தின் முதன்மையான நிஷாத குடியான விடூபர்களை சேர்ந்தவர்கள். விடூபர்கள் ருக்மியிடமிருந்து உளமாறுபாடு கொண்டு விலகியிருப்பதாக நான் அறிந்திருந்தேன்.

நான் எண்ணியதற்கு மாறாக விதர்ப்பத்தின் அந்தணரும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் பெருவணிகர்களும் குடித்தலைவர்களும்  அடங்கிய ஐம்பேரவை அது. முன்னரே எங்கள் வருகை அவர்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஆகவே நாங்கள் அவைக்குள் நுழைந்தபோது மெல்லிய ஒரு சலசலப்பாக அவர்களின் உணர்வுகள் வெளிப்பட்டன. நான் முகப்பில் சென்றுநின்று ருக்மியை முறைப்படி முகமனுரைத்து வணங்கினேன். அவர் எனக்கு வெறும் தலையசைப்பையே மறுமுகமனாக உரைத்தார். நாங்கள் பீடம்கொண்டதும் நிமித்திகன் அவை நிகழ்வுகளை அறிவித்தான்.

எங்கள் வருகைக்கு தொடர்பற்ற நிகழ்ச்சிகள் தொடங்கின. நான் பொறுமையிழந்து காத்திருந்தேன். ருக்மி எங்கள் வருகை அவர்களுக்கு பொருட்டல்ல என்று காட்டவிரும்புகிறார் என்று தெரிந்தது. என்னுடன் வந்த அமைச்சர்கள் சிவந்து மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டிருந்தனர். பொறுமை என நான் அவர்களுக்கு விழிகாட்டினேன். முதன்மை நிகழ்வுகள் முடிந்து எளிய நிகழ்வுகள் சென்றுகொண்டிருந்தபோது நடுவே எங்கள் வருகை அறிவிக்கப்பட்டது. ருக்மி அப்போதுதான் எங்களை பார்ப்பவர்போல திரும்பி “கூறுக!” என்றார்.

நான் எழுந்து குரலில் அலைவின்மையை தக்கவைத்துக்கொண்டு “விதர்ப்பத்தின் அரசே, இன்று யாதவர்களின் குடித்தலைவராகவும், மதுராவின் அரசராகவும், பாரதவர்ஷத்தின் வெல்லப்படாத பெருவீரராகவும் இருக்கும் மூத்த யாதவர் பலராமரின் ஆணைப்படி இங்கு வந்துள்ளேன். தாங்கள் பலராமரின் மாணவர் என்பதை இங்கு அறிவுறுத்த விரும்புகிறேன். விதர்ப்பம் இன்று அஸ்தினபுரிக்கு கப்பம் கட்டிக்கொண்டிருக்கும் மகதத்திற்கு கப்பம் கட்டிக்கொண்டிருந்த நாடு. அஸ்தினபுரி மதுராவின் நட்பு நாடு. ஆகவே விதர்ப்பத்தை மதுராபுரி தனக்கு கப்பம்கட்டும் நாடென்று மட்டுமே கருத முடியும். அவ்வாறல்ல என்று விதர்ப்பம் கருதுமாயின் அதை அஸ்தினபுரியிடம் பேசியே முடிவுசெய்ய வேண்டும்” என்றேன்.

அவை ஓசையின்றி அமைந்திருந்தது. ருக்மியின் விரல்கள் பதறத் தொடங்குவதை கண்டேன். “அரசே, தாங்கள் மதுராபுரியின் இணையரசான துவாரகையை ஆண்ட இளைய யாதவர் கிருஷ்ணனின் மைந்தர் பிரத்யும்னனிடமிருந்து கருவூலத்தில் ஒரு பகுதியை முறைப்படி சொல்லளித்து பெற்றுக்கொண்டீர்கள் என்பதை மறுக்கமாட்டீர்கள். அந்தக் கருவூலச்செல்வத்தையும், அதை நாங்கள் பலமுறை கோரியும் மறுத்தமைக்குரிய பிழையீட்டுச் செல்வத்தையும் இன்னும் ஏழு நாட்களில் படகுகளில் மதுராவுக்கு அனுப்பவேண்டும். அந்தச் செல்வத்தை ஏற்றுக்கொண்டதாக அரசரின் ஒப்புதலை பெற்றாகவேண்டும்.”

ருக்மியின் இறுகிய முகத்தை நோக்கி நான் சொன்னேன் “இல்லையெனில் யாதவர்களின் படை வந்து விதர்ப்பத்தை சூழ்ந்துகொள்ளும். ஐயம் வேண்டியதில்லை. விதர்ப்பம் முற்றழியும். கௌண்டின்யபுரியின் ஒவ்வொரு மாளிகையும் இடிக்கப்படும். ஒவ்வொரு இளைஞனும் கொல்லப்படுவான். வயல்கள் உப்பிடப்படும். நீர்நிலைகள் இடித்தழிக்கப்படும். இங்கே எரிபுகையும் இடிபாடுகளும் மட்டுமே எஞ்சும்” என்றேன். “அவ்வழிவிலிருந்து விதர்ப்பம் மீண்டெழ ஏழு தலைமுறைகளாகும். ஆகவே ஆற்றவேண்டியதை உடனே ஆற்றுக! உரிய முடிவை எடுத்து என்னிடம் தெரிவித்து அனுப்புக!” என்றேன்.

அவை உறைந்து சொல்லிழந்து அமர்ந்திருந்தது. ருக்மி ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டார் என்பது தெரிந்தது. ஆயினும் என் குரலிலிருந்த விசை அவரை சொல்லெழாது செய்தது. திகைப்புடன் அவையை மாறிமாறிப் பார்த்தார். கைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து கோத்துகொண்டபோது மரக்கட்டை உரசுவதுபோல ஓசை எழுந்தது. சொற்கள் எதுவும் அவர் நாவில் எழவில்லை என்பது தெரிந்தது. பின்னர் தன்னைத் தானே விசைகூட்டிக் கொண்டு எழுந்து கைகளை விரித்து உடைந்த குரலில் “எங்கு எதை பேசுகிறீர்கள்? எவரை வந்து மிரட்டுகிறீர்கள்?” என்று கூவினார். அக்குரலை அவரே கேட்டு  உணர்வெழுச்சி கொண்டார்.

“விழுந்துபட்ட துவாரகையா, அழிந்துபட்ட பிரஃபாச க்ஷேத்ரமா, எங்கிருந்து கிளம்பி வந்திருக்கிறீர்கள்? நாய்க்குடை நகரங்கள் அவை. வேரூன்றி கிளைவிரித்து பாரதவர்ஷத்தின் பெரு மணிமுடிகளில் ஒன்றாக நின்றிருக்கும் விதர்ப்பத்தை நோக்கி இதை சொல்ல எப்படி துணிகிறீர்கள்? விதர்ப்பம் இனி எவருக்கும் எந்நிலையிலும் கப்பம் கட்ட எண்ணவில்லை” என்றார். கைகளை ஓங்கி அறைந்து “இங்கு பேசப்பட்ட ஒவ்வொரு சொல்லையும் அறைகூவலாகவே கொள்கிறேன். இதன்பொருட்டு மதுராபுரியை அழிப்பேன்!” என்றார்.

நான் அவரை மறித்து “நீங்கள் கட்டிய கப்பத்தால் வீங்கிய மகதத்தின் அரசரை சிற்றுயிரை நசுக்குவதுபோல் வென்றவர்கள் யாதவர்கள்” என்றேன். ருக்மி பற்கள் தெரிய கூச்சலிட்டபடி என்னை நோக்கி கைநீட்டினார். “யார் நீ? இங்கு எனக்கு நிகராக நின்று அவை விவாதம் செய்வதற்கு தகுதியானவனா? போ, உன் நிலத்தில் கன்றோட்டு. சாணி அள்ளு. பால் கறந்து நெய் எடு…” என்றார். அவர் உடல் பதறிக்கொண்டிருந்தது. “சென்று சொல் உன் அரசரிடம், நான் படைக்கு ஒருக்கம் என்று” என்றார். “ஆனால் ஒன்று, நான் வென்றால் மதுராபுரி என்ற ஒரு நகர் அதன்பின் இருக்காது. மூன்றாவது பேரழிவு யாதவர்களுக்கு காத்திருக்கிறது. யாதவக் குடியில் ஒற்றை ஆண்மகன்கூட இல்லாது அழிக்கப்படுவான். இனி ஒருபோதும் யாதவர் எங்கும் தலையெடுக்க முடியாது செய்வேன். இது என் குலதெய்வங்கள்மேல், என் மூதாதையர்மேல் ஆணை!”

அது போர்வஞ்சினம். ஆனால் அவர் முன் அமர்ந்திருந்த அவையிலிருந்து அத்தருணத்தில் வெளிப்படவேண்டிய ஓசைகளோ உணர்வுகளோ வெளிப்படவில்லை. அரசன் வஞ்சினம் உரைத்தால் எழுந்து நின்று படைக்கலங்களை தூக்கி வீசி போர்க்குரல் எழுப்பி அவ்வஞ்சினத்தை தாங்களும் ஏற்பதும் மேலும் மேலும் கூச்சலிட்டு அவ்வஞ்சினத்தை பன்மடங்காக பெருக்குவதும் அவையினரின் இயல்பு மட்டுமல்ல கடமையும் கூட. அவையினர் திகைத்த விழிகளுடன் அசைவிலாது ஓசையில்லாது அமர்ந்திருந்தனர். ஆனால் தன் மிகையுணர்ச்சிகளால் ததும்பிக்கொண்டிருந்த ருக்மி அதையும் உணரவில்லை.

அவை அமைதியாக இருப்பதை நான் வேண்டுமென்றே தலைசுழற்றி திரும்பிப் பார்த்தேன். புன்னகையுடன் “அரசே, இந்த அவை உங்கள் சொல்லை ஏற்கிறதா?” என்றேன். “ஏற்கும்! எனது அவை எனது சொல்லை ஏற்றே ஆகவேண்டும்!” என்றார் ருக்மி. அப்போதும் அவரால் உணரமுடியவில்லை. “அது உங்கள் ஆணைதான். ஆனால் உங்கள் உணர்வுகளை இந்த அவை ஏற்கிறதா?” என்று மீண்டும் கேட்டேன். “அதை பார்க்கவேண்டியவன் நான், நீ அல்ல” என்று ருக்மி கூவினார். “இது எனது சொல். சென்று சொல்க, பலராமரிடம்! அவர் முதியவர், படை நடத்தும் திறனற்றவர், நானோ இன்னும் உடலாற்றலுடன், உளவிசையுடன் இருப்பவன்.”

வெறியுடன் இளித்தபடி அவர் சொன்னார். “நான் எவரென்று இன்னமும் நீங்கள் உணரவில்லை. விதர்ப்பத்தின் முழுப் படையையும் அப்படியே பாதுகாத்து வைத்திருக்கிறேன். நாங்கள் குருக்ஷேத்ரப் போரில் ஒரு வீரனையும் இழக்கவில்லை. இன்று முழுப் படையுடன் இருக்கும் பாரதவர்ஷத்தின் நாடுகளில் ஒன்று நாங்கள். இந்த பாரதவர்ஷத்தின் அனைத்து அரசுகளையும் வென்று விதர்ப்பம் முடிசூடக்கூடிய வாய்ப்பு எங்களுக்கு ஒருங்கி வந்திருக்கிறது. ஆம், பிரத்யும்னனின் செல்வம் என்னிடம் இருக்கிறது. அது ஊழின் ஆணையால் எனக்கு வந்துசேர்ந்தது. ஊழ் ஒருங்கியிருக்கிறது விதர்ப்பம் முதன்மைகொள்வதற்காக!”

“சென்று சொல்க, விதர்ப்பம் ஒரு வெள்ளி நாணயத்தைக் கூட எவருக்கும் அளிக்கப்போவதில்லை! அதற்கு மாறாக அச்செல்வத்தைக் கொண்டு மேலும் பலமடங்கு படை திரட்டப் போகிறேன். மதுரா என் மேல் படைகொண்டுவருமா? நன்று, அவர்களிடம் எவ்வளவு படை இருக்கிறதென்று எனக்குத் தெரியும். அவர்கள் இங்கு வரும்போது மழைக்கால நீர்போல எட்டு திசையிலிருந்தும் விதர்ப்பத்திற்கு படைப்பெருக்கு வந்துகொண்டிருப்பதை காண்பார்கள்.” அவ்வெண்ணத்தால் ருக்மி அவரே மகிழ்ந்தார். உரக்க நகைத்து கைவீசினார். “விதர்ப்பம் பாரதவர்ஷத்தின் மாபெரும் படைவல்லமை கொண்டிருக்கும். யாதவர்களின் செல்வத்தால் படைபெருக்கி யாதவர்களை வெல்லும்.”

“எங்கள் படை பெருகிக்கொண்டே இருக்கும்” என்று ருக்மி கைதூக்கி கூவினார். “இன்று எங்களைச் சூழ்ந்திருக்கும் அனைத்து அரசுகளும் ஆற்றலிழந்திருக்கின்றன. பெரும்பாலான நாடுகளில் படைவீரர்கள் காவல்பணியும் இன்றி, ஊதியமின்றி இருக்கிறார்கள். இங்கு படைவீரர்களுக்கு பொன்னால் ஊதியம் அளிக்கப்படுகிறது என்று ஒரு முரசறைவு நிகழ்ந்தால் போதும், ஏழு நாட்களில் விதர்ப்பம் படைகளால் நிறையும்.” உளவிசையால் அவர் அரசமேடையில் இருந்தே இறங்கி என்னை நோக்கி வந்துவிட்டார்.

“ஒருவேளை ஊழ் எண்ணுவதும் இதுவே போலும். பாரதவர்ஷத்தின் பெருவீரர் என்று அறியப்பட்ட பலராமரை வென்று, தலைகொய்தேன் என்று இங்குள்ள ஷத்ரியர்கள் என்னைப் பற்றி அறியட்டும். அதன்பின் போரில்லாமலே காங்கேயத்தை வெல்வேன். சைந்தவத்தை அடைவேன். வேசரத்தை கைப்பற்றுவேன். அதன்பின் படைகொண்டு சென்று திருவிடத்தையும் கொள்வேன். மும்முடிசூடி கடல்சூழ் நாவலந்தீவில் அரியணை அமர்ந்திருப்பேன். தெய்வங்கள் அருள்கின்றன போலும்! மூதாதையரின் ஆணை போலும் இது! போர் எழுக! போரில் வென்று விதர்ப்பம் பொலிவு கொள்க!” என்று ருக்மி சொன்னார்.

“இதுவே உங்கள் மறுமொழி எனில் இச்சொல்லுடன் நான் திரும்பிச்செல்கிறேன்” என்று நான் சொன்னேன். அப்போது “பொறுங்கள், யாதவரே” என்று அருகிலிருந்த பட்டுத்திரைக்கு அப்பால் அரசி ருக்மிணியின் குரல் கேட்டது. அவர்கள் போஜகடகத்தில் இருந்து எப்போது வந்தார்கள், அங்கு எப்போது வந்து அமர்ந்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஓசையிலாது வந்து அமர்வது அவர்களின் வழக்கமும் அல்ல. ஆனால் வெண்ணிற ஆடை அணிந்ததுமே அவர்கள் உடல்மொழியில் மாற்றம் வந்திருந்ததை முன்னரே உணர்ந்திருந்தேன். வெண்ணிறம் முகிலுக்குரியது. வெண்ணிற ஆடை அணிந்தவர்களுக்கு அப்பண்புகள் வந்தமைகின்றன போலும்.

அரசியின் குரல் அங்கிருந்த அனைவருக்கும் கேட்டது. அவையே பட்டுத்திரைச்சீலையில் தெரிந்த நிழலுருவம் நோக்கி திரும்பியது. “கூறுங்கள் அரசி, தங்கள் ஆணை என்ன?” என்றேன். “இங்கு உரைக்கப்பட்ட அனைத்தையும் கேட்டேன். அரசர் எடுக்கும் முடிவுக்கு அப்பால் சென்று ஒரு முடிவை கோரும் நிலையில் நானில்லை. என் மைந்தன் பிரத்யும்னன் விதர்ப்பத்துக்கு அளித்த செல்வத்தை அடையும் உரிமைகொண்டவள் நான். ஆனால் அதை நான் கோரவில்லை. ஆகவே அதை கோர மதுராவுக்கு உரிமையில்லை” என்றார் ருக்மிணி.

அவையில் சிலர் “ஆம்! உண்மை! மெய்!” என்றனர். நான் “சற்று பொறுங்கள் அரசி, தாங்கள் சொல்வது முதலில் கேட்கும்போது முறையெனத் தோன்றுமெனினும் அது பொருளற்றது. தங்களின் மைந்தனின் செல்வத்தை கேட்டுப்பெறுவதில் தங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் அவ்வுரிமை ஒன்றின்பொருட்டே. தங்கள் மைந்தருக்கு நீர்க்கடன் செய்யும்பொருட்டு தாங்கள் ஒரு சிறுவனை பெறுமைந்தனாக எடுத்துக்கொண்டால் மட்டுமே அவன் பொருட்டு அச்செல்வத்தை கோரமுடியும். அவ்வாறு அல்லவெனில் அவ்வாறு பெறுமைந்தனை எடுத்து நீர்க்கடன் முடிக்கும் குடிமூத்தாருக்கே அச்செல்வம் சென்று சேரும்” என்றேன்.

“நீங்கள் உங்கள் மைந்தனுக்கும் பெயர்மைந்தனுக்கும் வழிமைந்தனுக்கும் நீர்க்கடன் செய்ய விரும்பவில்லை என்று கூறினீர்கள். அதன்படி அச்செல்வத்தை நீங்கள் முற்றிலும் இழந்துவிட்டீர்கள். அதை எவருக்கும் அளிக்க உங்களுக்கு உரிமை கிடையாது” என்று நான் கூறினேன். “இப்போது அச்செல்வம் யாதவக் குடிக்கே திரும்பச்சென்றுவிட்டது. அதை கோரவே நான் வந்திருக்கிறேன்.” அவையை நோக்கி திரும்பி “பிரத்யும்னன் இளைய யாதவரின் மைந்தர் என்பதை இந்த அவை மறக்கவேண்டியதில்லை. அச்செல்வம் இளைய யாதவரால் ஈட்டப்பட்டது என்பதையும் எவரும் மறுக்கப் போவதில்லை. இளைய யாதவரின் குடிக்கே அச்செல்வம் சென்று சேரவேண்டும். இளைய யாதவரின் குடியில் எஞ்சியிருக்கும் அவரது மூத்தவர் பலராமர். அவரும் அவர் மைந்தரும்தான் தன் குடிமைந்தருக்கு நீர்க்கடன் செய்யும் குருதி முறைமையை கொண்டிருக்கிறார்கள்” என்றேன்.

“நன்று, அதை மூத்தவர் கூறியதுபோல போர்க்களத்தில் தீர்த்துக்கொள்ளுங்கள்” என்று ருக்மிணி சொன்னார். “ஆனால் அதன் பொருட்டு இரு நாடுகளும் போர்புரியுமெனில் மீண்டும் ஒரு பேரழிவே உருவாகும். அப்படி ஒரு அழிவை பாரதவர்ஷத்தின்மேல் மீண்டும் சுமத்த எண்ணுகிறாரா மூத்தவர்? குருக்ஷேத்ரத்தின் அழிவைக் கண்ட பின்னரும் பிறிதொரு போரா?” என்று ருக்மிணி கேட்டார். எவரும் எதிர்வினையாற்றவில்லை என்றாலும் அங்கிருந்த அத்தனை பேரும் அச்சொற்களுடன் அகவொருமை கொள்வதை உணரமுடிந்தது.

“விதர்ப்பம் தூய ஷத்ரியக்குருதி கொண்டதல்ல என்று எண்ணுபவர்கள் இருக்கிறார்கள். யாதவர்களோ ஷத்ரியர்களாக இன்னும் ஏற்கப்படாதவர்கள். யாதவர்களும் விதர்ப்பமும் போரிட்டு அழியுமெனில் அத்தொன்மையான ஷத்ரியக்குடிகளே மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களுக்கு அந்த மகிழ்ச்சியை அளிப்பதற்காகத்தான் இதை செய்யப்போகிறோமா?” என்றார் ருக்மிணி. “ஆம், அதையே நானும் கேட்க எண்ணினேன். இந்தப் போரால் எவருக்கு அறுதியாக நன்மை?” என்றார் முதிய குடித்தலைவர் ஒருவர்.

“பொறுத்தருளுங்கள் அரசி, போருக்கு அறைகூவியவர் உங்கள் மூத்தவர். இதை அவரிடம் சொல்லுங்கள்” என்றேன். “இருவருக்காகவும்தான் இதை கூறுகிறேன். இங்கு அவையிலிருக்கும் விதர்ப்பர்கள் கூறட்டும், பிறிதொரு பேரழிவுப்போரை அவர்கள் விரும்புகிறார்களா?” என்றார் அரசி. “அவ்வளவு எளிதாக என் மூத்தவரை மூத்த யாதவர் வெல்ல இயலாது. ஏனெனில் அவர் மூத்த யாதவரின் மாணவர். ஆனால் ஒன்று உறுதியாக சொல்லமுடியும், போர் நிகழ்ந்தால் மதுராவும் அழியும் விதர்ப்பமும் அழியும்” என்று அரசி சொன்னார்.

ஆங்காங்கே பலர் அவையில் எழுந்தனர். “ஆம், விதர்ப்பத்தினரும் போரை முழுமையாக கண்டுவிட்டோம். நம் அரசரும் இளவரசரும் மறைந்த துயரே இன்னும் மறையவில்லை. ஒருபோதும் விதர்ப்ப மக்கள் போருக்கு ஒருக்கமில்லை” என்றார் முதிய குடித்தலைவர். “எனது ஆணை! எனது ஆணையை மீறுகிறதா விதர்ப்பம்?” என்றபடி ருக்மி எழுந்தார். “அரசே, இதை வாழவைக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. இதை அழிக்கும் முடிவை நீங்கள் எடுத்தால் அதற்கு நாங்கள் உடன்பட முடியாது” என்றார் ஒருவர். “அழிப்பதும் வளர்ப்பதும் எனது முடிவு” என்று ருக்மி கூவினார். “அது உங்களைப் பற்றிய முடிவு எனில் நீங்கள் எடுக்கலாம். விதர்ப்பம் நூற்றெட்டு குடிகளால் ஆனது. எங்கள் குடியின் நலனை நாங்கள் பேணவேண்டும்” என்று இன்னொருவர் சொன்னார்.

சினம்கொண்டு நிலையழிந்து உடைவாளில் கைவைத்து “என்னை மறுக்கிறீர்களா?” என்றார் ருக்மி. “ஆம் மறுக்கிறோம், விதர்ப்பத்தின் விடூப குடி போருக்கு வரப்போவதில்லை” என்றார் முதியவர். “அம்பர் குடியும் போருக்கு எழாது” என்றார் இன்னொருவர். ருக்மி ருக்மிணியை நோக்கி சீற்றத்துடன் திரும்பி “இதைத்தான் நீ விரும்பினாயா? இவர்களை எனக்கெதிராக தூண்டிவிடுவதற்காகத்தான் இங்கு வந்தாயா?” என்றார். “அல்ல. அவர்கள் எந்த நிலையிலிருக்கிறார்கள் என்று எனக்கு முன்னரே தெரியும் என்பதனால்தான் அவைக்கு வந்தேன். உங்கள் சொல் இங்கே சிறுமைப்படலாகாது என்பதற்காக” என்று ருக்மிணி சொன்னார்.

“எவருடைய ஆதரவும் எனக்கு தேவையில்லை. என்னிடம் இருக்கும் கருவூலச் செல்வத்தால் நான் படைதிரட்டிக் கொள்கிறேன். ஆனால் அப்படை இங்கே கோன்மைகொண்டால் இங்குள்ள ஒவ்வொரு குடியையும் அடக்குவேன். குடித்தலைவர்களை கழுவிலேற்றுவேன்” என்று ருக்மி கூச்சலிட்டார். “மூத்தவரே, அதற்கு முன் உங்கள் மைந்தரிடம் உசாவுக!” என்றார் ருக்மிணி. “என் மைந்தரா?” என்று ருக்மி திரும்பினார். மூத்தவரான ருக்மகன் “தந்தையே, விதர்ப்பம் போருக்கு எழவேண்டியதில்லை என்பதே என் எண்ணம். என் இளையோரின் எண்ணமும் மற்றல்ல” என்றார். ருக்மதேஜஸ் “யாதவர்களுடன் போரிடுவது என்பது நம் இயற்கையான துணைவரை பகைத்துக்கொள்வது, அது தற்கொலை முயற்சி” என்றார்.

ருக்மாங்கதன் “யாதவர்களுக்கான செல்வத்தை அளித்துவிடுவதே உகந்தது. அவர்களுடன் நீண்டநாள் படையொத்துழைப்புக்கான புரிதல்சாத்து ஒன்றையும் உருவாக்கிக் கொள்ளவேண்டும்” என்றார். ருக்மவீரன் “ஆம், அதுவே எங்கள் இருவரின் எண்ணமும்” என்றார். ருக்மி தளர்ந்து அரசமேடையில் நின்றார். பின்னர் மெல்ல நடந்துசென்று அரியணையில் அமர்ந்தார். அவர் உடல் சோர்ந்து கைகள் உயிரற்றவை என அமைந்தன.

ருக்மிணி “மூத்தவரே, தாங்கள் மதுராவை போருக்கு அழைத்துவிட்டீர்கள். இன்று உங்கள் குடியினர் உங்களுடன் இல்லையென்ற செய்தி வெளியே செல்லும் என்றால் அந்த வஞ்சினச் சொல் வீணாகும். அதனால் உங்களுக்கு இழிவே சூழும். அவ்வாறு நிகழக்கூடாது என்பதற்காகத்தான் இங்கு வந்தேன்” என்றார். ருக்மி “என்ன நிகழப்போகிறது? படைகொண்டு வருக என்று நான் மதுராவுக்கு அறைகூவிவிட்டேன். என் சொல்லை நான் மாற்றபோவதில்லை. மதுரா படைகொண்டு வரும்போது இங்கிருக்கும் இக்கோழைகள் சென்று வணங்கி அடிபணிவார்கள் என்றால் அவ்வண்ணமே ஆகுக! என் மைந்தர் என்னை சிறைபிடித்து அவர்களிடம் கையளிப்பார்கள் என்றால் அது நடக்கட்டும்” என்றார்.

“ஆனால் அவைச்சிறுமை நிகழ்ந்த பின் நான் ஏன் உயிர்வாழவேண்டும்…” என்று கூவியபடி எழுந்தார். அவருடைய உடலில் ஒரு துடிப்பு எழுந்தது. “அவ்வண்ணம் சிறுமைகொள்வதைவிட இந்த அவையிலேயே வாளெடுத்து என் சங்கை அறுத்துக்கொள்கிறேன்” என்றார். “பொறுங்கள்” என்று ருக்மிணி சொன்னார். “போருக்கு பல வழிகள் உள்ளன, நிகரிபோர் அதில் ஒன்று. முன்னரும் நிகழ்ந்ததுதான் இது. வஞ்சினம் உரைத்தவர் நீங்கள், அறைகூவியவர் அவர். அதை இருவரும் ஒரு நாற்களத்தில் ஆடி தீர்த்துக்கொள்ளலாம்” என்றார். அவையை நோக்கியபின் “மூத்தவரே, இந்தக் கருவூலச்செல்வம் குறித்த பூசலை நாற்களத்தில் போர்புரிந்து முடித்துக்கொள்ளலாம் என்று நீங்கள் எண்ணுவதாக மூத்த யாதவரிடம் கூறுங்கள்”
என்றார்.

“நாற்களத்திலா?” என்று ருக்மி குழப்பமாக கேட்டார். “ஆம், அதுவும் போரே. நிகர்ப்போருக்கு நூலொப்புதல் உண்டு. அரசர் சூழ அது முறைப்படி நடக்கட்டும். குருக்ஷேத்ரப் போருக்குப் பின் மீண்டும் ஒரு குருதிப்போருக்கு எவருமே ஒருக்கமல்ல. அங்கு அவர் தரப்பின் யாதவக் குடிகளும் அப்படித்தான் உணர்வார்கள். ஆகவே அவரை ஒரு நிகர்ப்போருக்கு அழையுங்கள். நாற்களத்தில் அமர்ந்து போரிடுங்கள். வெல்பவரும் தோற்பவரும் இறுதி முடிவுக்கு வாருங்கள்” என்றார் ருக்மிணி. “ஆம், அதுவே முறை. நாற்களப் போர் போதும். நிகரிப்போர் போதும்” என்று மாறி மாறி அவையினர் குரல் எழுப்பினர்.

ருக்மி தளர்ந்து அரியணையில் அமர்ந்து தலையை அசைத்தார். பெருமூச்சுடன் “ஆம், வேறு வழியில்லை” என்றார். ருக்மிணி என்னிடம் “ஸ்ரீகரரே, சென்று மூத்த யாதவரிடம் கூறுங்கள் நிகரிப்போர் ஒன்றுக்கு விதர்ப்பம் அறைகூவுவதாக” என்றார். “ருக்மி அவையமர்ந்து போரிடலாம் என்று எண்ணுகிறார் என்றும் அதற்கு யாதவ மூத்தவர் ஒருக்கமா என்று கேட்கிறார் என்றும் சென்று சொல்லுங்கள்.” எனக்கும் அந்த எண்ணம் ஆழ்ந்த ஆறுதலை அளித்தது. “ஆம், அவ்வண்ணமே” என்று நான் தலைவணங்கினேன்.

முந்தைய கட்டுரைவெறியாட்டெழுந்த சொல்
அடுத்த கட்டுரைநிழல்காகம், இணைவு – கடிதங்கள்