கன்னி- கடிதங்கள்

கன்னி- [சிறுகதை] ம.நவீன்

அன்புள்ள ஜெ

ம.நவீனின் சிறுகதை எனக்கு ஒரு சுவாரசியமான எண்ணத்தை உருவாக்கியது. ஒவ்வொரு பண்பாட்டிலும் ஒரு ரகசியக்கிடங்கு உள்ளது. அதை பாவங்களின் கிடங்கு என்று சொல்லலாம். ஒருவகையான கழிப்பறை அது. மனிதர்கள் அவர்கள் செய்யும் பாவங்களை எல்லாம் தொன்மமாக உருமாற்றி அங்கே கொண்டுசென்று சேகரித்துக்கொள்கிறார்கள். அதிலிருந்து தேவையானபோது திரும்ப எடுத்து புழங்குகிறார்கள்.

இது ஒரு பிசின் போல. இதைக்கொண்டு பண்டைய பாவங்களையும் நிகழ்காலப் பாவங்களையும் இணைத்து ஒரே படலமாக ஆக்கிக்கொள்கிறார்கள். ம.நவீனின் கதையில் எதிர்காலப்பாவங்களையும் அதிலே சேர்த்துக்கொள்ள முயல்கிறார்கள் என்று தோன்றியது. இனி நிகழப்போகும் பாவத்தின் தொடர்ச்சியையும் சேர்க்கும்போது அது நிரந்தரமாக வளரும் என்பது உறுதியாகிறது

மகாதேவன்

***

அன்புள்ள ஜெ

,ம.நவீனின் கன்னி சுவாரசியமான ஒரு கதை. இதை நான் ஒரு கதைப்போர் என்றுதான் வாசிக்கிறேன். கதைசொல்லி ஒரு கதைசொல்லியை சந்திக்கிறான். அந்த கதைசொல்லி ஒரு பேய்க்கதையைச் சொல்கிறான். இவன் அதன் ஓட்டைகள் வழியாக கிரைமை கண்டுபிடிக்க முயல்கிறான். இருவரும் கதைகளால் மோதிக்கொள்கிறார்கள்.

ஆனால் மாரி இன்னும் திறமையான கதைசொல்லி. அவன் கதையை எதிர்காலத்திற்கு நீட்டித்து பத்திரிகையாளனின் எதிர்காலத்திற்கும் கொண்டுசெல்கிறான். அங்கே ஒரு probability ஆக அதே கதை தொடரும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறான். அவ்வாறு கதையின் லாஜிக்கை உடைக்கநினைக்கும் பத்திரிகையாளனின் முயற்சிக்கும் செக்மேட் வைத்துவிடுகிறான்.

ஆர்.ராஜசேகர்

***

அன்புள்ள ஜெ

இந்த கொரோனோ காலகட்டத்தில் பேய்க்கதைகள் பெருகியிருக்கின்றன. நவீனத்தமிழிலக்கியத்தில் பேய்க்கதைகள் இந்த அளவுக்கு வந்த காலகட்டம் இருக்குமா என்பது சந்தேகம்தான். பல ஆண்டுகளுக்கு முன் நீங்கள் நிழல்வெளிக்கதைகள் எழுதியபோது பேய்க்கதைகளுக்கும் இலக்கியத்தில் இடமுண்டு என்று புதுமைப்பித்தனின் காஞ்சனையை முன்வைத்து விரிவாக எழுதியது ஞாபகம் இருக்கிறது. இன்றைக்கு இப்படி பேய்க்கதை பெருகியிருப்பதற்கு இந்த நோய்ச்சூழலில் ஏதாவது காரணம் இருக்கலாம் என்று தோன்றுகிறது

எம்.முத்துக்குமார்

***

அன்புள்ள ஜெ

கன்னி கதை ஒரு புதிரை போடுகிறது. ஏழுகன்னிகளில் குறையும் கன்னிகள் அந்த சமூகத்தால் கொலைவழியாக ஈடுகட்டப்படுகிறார்கள். கன்னி என்ற அந்த டெம்ப்ளேட் ரொம்ப பழமையானது. அதை கொலைசெய்பவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்களா அல்லது அது கொலைசெய்யவைக்கிறதா என்பது புதிர். அது கதைசொல்லிகளில் ஒருவரை கொலைசெய்ய வைத்திருக்கிறது- அல்லது வைத்திருக்கலாம். இன்னொருவரை கொலைசெய்ய வைக்குமா? ஒன்றை தெரிந்துகொண்டால் அதை செய்யாமலிருக்கமுடியாது என்ற வரி க்ளூவாக அமைகிறது

சுவாரசியமான கதை ம.நவீன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்

செந்தில்குமார்

***

முந்தைய கட்டுரைஇணைவு,தேனீ- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்