‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–72

பகுதி ஏழு : நீர்புகுதல் – 1

மந்தரம் எனும் சிற்றூரில் புறங்காட்டில் அமைந்த கரிய சிறு பாறையில் இளைய யாதவர் இரு கைகளையும் தலைக்கு பின் கொடுத்து வான் நோக்கி படுத்திருந்தார். விண்மீன்கள் நிறைந்த கரிய வானம் அவர்மீது வளைந்திருந்தது. விண்மீன்கள் சில துலங்கியும் பல வான் என மயங்கியும் அவர் மேல் படர்ந்திருந்தன. சற்று அப்பால் சாலமரத்தின் வேர்ப்புடைப்பொன்றில் அமர்ந்திருந்த ஸ்ரீகரர் தாழ்ந்த குரலில் உணர்ச்சிகள் ஏதுமில்லாத அமைதியுடன் சொன்னார்.

யாதவரே, தங்களைத் தேடி இத்தொலைவு வரை என்னால் வர இயலுமென்று நான் எண்ணியிருக்கவில்லை. இந்த அகவையில் நான் நெடுந்தூரம் பயணம் செய்ய இயலும் என்பதையும், துணை இன்றி பாதையும் அறியாமல் இங்கு வந்து சேர்வேன் என்பதையும் எண்ணுகையில் இது ஊழ் என்றே உணர்கிறேன். இச்சொற்களை இங்கு நான் வந்து சொல்ல வேண்டுமென்று வகுக்கப்பட்டிருக்கிறது.

தாங்கள் அறிவீர்கள், முன்பு கோகுலத்தில் இதுபோல் ஓர் இரவில் நாம் இருவரும் புறங்காட்டில் தனித்திருந்தோம். இவ்வண்ணமே தாங்கள் ஒரு பாறையில் படுத்து விண்மீன்களை பார்த்துக்கொண்டிருந்தீர்கள். நான் அருகிருந்தேன். விண்மீன்களை என்னால் நிமிர்ந்து பார்க்க இயலவில்லை. உங்களிடம் நான் கேட்டேன் “யாதவனே, விண்மீன்களை உன்னால் எத்தனை பொழுது விழிவிரித்து பார்க்கமுடியும்?” என்று. விழிவிலக்காமல் “விடியும்வரை, முடிவிலிவரை” என்று நீங்கள் சொன்னீர்கள்.

நான் தவிப்புடன் “என்னால் சற்று நேரம் கூட பார்க்க முடியவில்லை. என் உள்ளம் பதைக்கிறது. விண்ணில் இருப்பவை முடிவிலா விழிகள் என்று தோன்றுகின்றன. அவை அலகிலாது பெருகிய கதிரவன்கள் என்று நூலோர் கூறுகிறார்கள். ஆதித்யப் பெருவெள்ளம் என்று என் ஆசிரியர் ஒருமுறை கூறியபோது என் அகம் நடுங்கியது. அதற்குப் பின் ஒருமுறைகூட என்னால் விண்ணை நேர்நோக்க இயலவில்லை. சிறுத்து இன்மை என்றாகி பொருளிழந்து செல்கிறேன்” என்றேன்.

ஒருமுறை வானை நோக்கிவிட்டு விழிதாழ்த்தி நான் தொடர்ந்தேன் “இருப்பே நம்மை கோக்கிறது. எண்ணங்கள் ஆகிறது. இன்மைபோல் அச்சுறுத்துவது பிறிதொன்றும் இல்லை. விண் நோக்கி அதை நோக்குகிறேன் எனும் இருப்புணர்வை அறுதியாக தக்க வைத்துக்கொண்டு அமைந்திருக்கலாம். நான் நோக்கிக் கொண்டிருக்கிறேன் என்ற உணர்வு ஏதேனும் ஒரு கணத்தில் அறுபடும் எனில் விண்மட்டுமே எஞ்சும். அது சாவு. அதிலிருந்து ஓரிரு கணத்தில் விடுபட்டு வெளிவந்துவிட முடியும். அது மறு பிறப்பு. சாவு கணநேரமெனினும் சாவுக்குரிய அனைத்து அச்சங்களும் பதற்றங்களும் வெறுமையும் கொண்டதே” என்றேன்.

உங்கள் விழிகளில் வானின் ஒளியை கண்டேன். “யாதவனே, எவ்வண்ணம் விண்ணை நோக்கிக்கொண்டிருகிறாய்?” என்றேன். நீங்கள் புன்னகைத்து “நான் விண்வடிவாகி குனிந்து மண்ணை நோக்கிக்கொண்டிருப்பேன்” என்றீர்கள். திகைப்புடன் “அதெப்படி? விண்வடிவாக எப்படி மானுடன் தன்னை உணர முடியும்?” என்று கேட்டேன். “நான் மானுடன் அல்ல” என்று சொன்னீர்கள். அக்கணம் என் நெஞ்சு நடுங்கியதை நான் உணர்ந்தேன். இன்றும் அதை மீண்டும் உணர்கிறேன். என் கைகள் குளிர்ந்து உறைந்துவிட்டன.

பின்னர் மூச்சை மீட்டுக்கொண்டு சிரித்து “ஆம், நீ மானுடன் அல்ல. தொல்லசுரர் குடியில் வந்தவன், லவணக்குருதியினன் என்று இங்கு சொல்கிறார்கள்” என்று நகையாட்டாக மாற்றிக்கொண்டேன். நீங்களும் நகைத்து “நான் அசுரன், நான் அரக்கன். நான் இங்குள்ள அனைத்துயிரும் ஆனவன். விண்சூழ் தேவர்களும் மண்வாழ் உயிர்களும் ஆழத்து இருளிருப்புகளும் நானே. நானே பிரம்மம்” என்றீர்கள். “வேதமுடிபுபோல அனைத்துக்கும் மறுமொழியாகும் ஒற்றைச் சொல் வேறேது?” என்று நான் சொன்னேன். நாம் சிரித்தோம்.

ஆனால் உங்களுடன் இருந்த நீண்டகாலத்தில் பலநூறு முறை அவ்விண்மீன்களுக்குக் கீழே பள்ளிகொண்டிருந்த உங்களை நினைவுகூர்கிறேன். அவ்விண்மீன்களை உடலெங்கும் அணிந்து விண்பேருருவெனப் படுத்து நீங்கள் கீழே நோக்கிக் கொண்டிருக்கும் கனவு எனக்கு ஒருமுறை வந்திருக்கிறது. இத்தருணத்திலும் அதையே உணர்கிறேன். இது அத்தருணத்தை மீண்டும் நடிப்பது. இதன் பொருட்டே அன்று அது நிகழ்ந்தது. இன்று இவ்வண்ணம் இத்தனை தொலைவு நான் வரநேர்ந்தது.

அரசே, சூதர் சொல்லினூடாகவும் பயணியர் பேச்சினூடாகவும் நீங்கள் அறிந்திருக்கலாம். எனினும் மீண்டும் உங்கள் அணுக்கன், துவாரகையின் அமைச்சன் என நின்று நான் அதை சொல்லவேண்டியுள்ளது. உங்கள் குருதியில் ஒரு துளி கூட இன்று இப்புவியில் எஞ்சவில்லை. உங்கள் மைந்தர் எண்பதின்மரும் இறந்தனர். உங்கள் பெயர்மைந்தர் எண்ணூற்றுவரில் ஒருவர் கூட எஞ்சவில்லை. உங்கள் பெயர்சொல்லி கைநீர் அள்ளி விட்டு அன்னம் அளிக்க இப்புவியில் உங்கள் வழித்தோன்றல்கள் என எவருமில்லை.

நீங்கள் சமைத்த பெருநகர் துவாரகை மண்ணிலிருந்து நழுவி இறங்கி ஆழ்கடலுக்குள் சென்றுவிட்டது. இப்போது கடல் பெருகி எழுந்து தோரணவாயில்வரை வந்துள்ளது. இன்று பெரும்பாலை நிலத்தின் விளிம்பில் அலைகள் வந்து அறைந்துகொண்டிருக்கின்றன. பாதியளவு மூழ்கி கடலுக்குள் அத்தோரணவாயில் மட்டும் நின்றிருக்கிறது. அங்கு ஒரு மாநகர் இருந்தது என்றும் இரு குன்றுகள் மேல் ஒன்றில் பெருவாயில் திறந்து வானை அழைத்ததென்றும் பிறிதொன்றின்மேல் இப்புவி கண்டதில் பெருநகரொன்று அமைந்திருந்ததென்றும் எவரேனும் சொன்னால் அறிவுடையோர் நம்ப இயலாது.

அந்நகர் உப்பால் கட்டப்பட்டது என்றும் கடலில் முற்றாகக் கரைந்து மீண்டும் உப்பென்று மாறிவிட்டதென்றும் கதைகள் உருவாகியிருக்கின்றன. விதர்ப்பத்திற்கு வந்தபோது ஒரு முதியவன் துவாரகை கடல்நுரையால் உருவாக்கப்பட்டது என்றான். இன்னும் கடந்து சென்றால் ஒருவேளை அது சொல்லால் கட்டப்பட்டது என்று சிலர் சொல்லக்கூடும். மேலும் தெற்கே சென்றால் அது வெறும் கனவால் கட்டப்பட்டதென்று கூறுபவரும் இருப்பார்கள்.

அங்கே பிரஃபாச க்ஷேத்ரமும் சிந்துவின் புறநீர் எழுந்து மூழ்கி மறைந்துவிட்டது. அச்சதுப்பை நீர்ப்பரப்பிலிருந்து காத்த நாணல்சுவர் அழிந்ததும் நீர் எல்லைகடந்துவிட்டது. அந்நிலமும் முற்றாகவே நீரில் மூழ்கி இருந்ததோ என்றாகிவிட்டது. அங்கே யாதவக் குடியினர் வந்து தங்கி ஒரு நகரைப் படைத்து கொண்டாடி போரிட்டு அழிந்தார்கள் என்பதற்கு விழிச்சான்றுகள் என எவருமில்லை.

இருக்கலாம், அங்கிருந்து உங்கள் மைந்தர் சாம்பனின் அரசி கிருஷ்ணை பெண்டிரும் குழந்தைகளுமாக கிளம்பிச் சென்றார்கள். அவர்களின் படகுகள் எங்கு சென்றன என்று எவருக்கும் தெரியாது. அவர்கள் நாமறிந்த எந்நிலத்திலும் சென்றுசேரவில்லை. அவர்கள் கடலூடாக தென்னிலம் சென்றனர் என்று சிலர் சொல்கிறார்கள். மேற்கே சோனக நிலம் தேடிச் சென்றனர் என்றும் கூறுகின்றனர். எங்கோ அவர்கள் நினைவுகொண்டிருக்கலாம். அல்லது மறந்துவிட்டிருக்கலாம்.

பிறிதொரு விழிச்சான்றும் உண்டு. கணிகர் என்னும் அந்தணர். அவர் பிரஃபாச க்ஷேத்ரத்திற்கு வந்தநாள் முதலே நோயுற்றிருந்தார். அக்களியாட்டு நாளின் காலையில் அவரால் எழவே முடியவில்லை. அவர் தன்னை பிரஃபச க்ஷேத்ரத்தில் இருந்து கொண்டுசென்று அப்பால் கிழக்கெல்லையாக அமைந்திருந்த குன்றுகளில் ஒன்றின்மேல் பாறையின் மேல் வைக்கும்படி கோரினார். அவ்வண்ணமே கொண்டுசென்று வைத்தார்கள். விழவு தொடங்கும் வரை அவர் அங்கிருந்ததைக் கண்ட ஒற்றர்கள் உண்டு.

விழவு பூசலில் முடிந்து நகர் அழிந்து எரியுண்டு மறைந்த பின் அவரும் மறைந்துவிட்டார். அவர் எங்கேனும் இருக்கலாம். அனைத்தையும் அவர் பார்த்துக்கொண்டிருந்தார் என நினைக்கிறேன். அவர் விழிகளை நினைவுகூர்கிறேன். அந்த உச்சிப்பாறையில் தவளைபோல் அமர்ந்து அவர் நகரத்தின் அழிவை நோக்கி புன்னகை கொண்டிருப்பார். அவருடைய நோய் அனைத்தும் நீங்கியிருக்கும். முகம் பொலிவுகொண்டிருக்கும். உடலின் ஒடிவுகளும் வளைவுகளும்கூட சீராகியிருக்கும். அந்தப் பாறையில் இருந்து அவர் நடந்து அகன்றிருந்தால், புரவியூர்ந்திருந்தால் வியப்படைய மாட்டேன்.

 

ஸ்ரீகரர் சொன்னார். யாதவரே, பிரஃபாச க்ஷேத்ரத்தில் உங்கள் மைந்தர்கள் போரிட்டு மடிந்தபோது நான் அங்கில்லை. என்னை உங்கள் மைந்தர் பிரத்யும்னன் தன் மாதுலர் ருக்மியுடன் பேசி அவருக்கு சொல்லளிக்கப்பட்ட நிலத்தை பெற்றுத் தரும்படி கோரி அனுப்பியிருந்தார். நான் பிரஃபாச க்ஷேத்ரத்தில் இருந்து கிளம்பி பாலைநிலத்தைக் கடந்து அவந்திக்கு வந்து அங்கிருந்து விதர்ப்பத்திற்கு சென்று கொண்டிருக்கும்போதுதான் பிரஃபாச க்ஷேத்ரம் பெருங்களியாட்டில் மூழ்கி உட்பூசல்களால் போருக்குச் சென்று முற்றழிந்தது என்று கேள்விப்பட்டேன்.

அது எனக்கு வியப்பளிக்கவில்லை. அவ்வண்ணம் நிகழும் என நான் எங்கோ எதிர்பார்த்திருந்தேன். அதை நீங்கள் துவாரகை விட்டுச் சென்றபோதே எதிர்பார்த்தேன். துவாரகையின் அழிவால் உறுதி செய்துகொண்டேன். ஆனாலும் ஏதேனும் ஒரு நல்லது நடக்கும் என நம்பி முயன்றேன். பிரத்யும்னனும் அநிருத்தனும் பிரஃபாச க்ஷேத்ரத்தில் இருந்து விலகிச்சென்றால் அந்நகர் பிழைக்கும் என நம்பினேன். அவர்களும் ஒவ்வொருநாளும் அதற்காக துடித்துக்கொண்டிருந்தனர். ஓலைகளும் தூதுகளும் ருக்மிக்கு சென்றுகொண்டிருந்தன. அவர் அனைத்தையும் வெவ்வேறு சொற்களால் தட்டிக்கழித்துக்கொண்டிருந்தார்.

திரும்பி பிரஃபாச க்ஷேத்ரத்திற்குச் செல்வதா அன்றி விதர்ப்பத்துக்கே சென்று என் தூதை தொடர்வதா என்ற குழப்பத்தை அடைந்தேன். பிரஃபாச க்ஷேத்ரத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அவந்தியிலிருந்த துவாரகையின் ஒற்றர்கள் சிலரை சந்தித்தேன். யாதவ மைந்தரில் ஒருவர்கூட அங்கு எஞ்சவில்லை என்பதை அறிந்தேன். ஒருவர் கூடவா என்று மீள மீள கேட்டுக்கொண்டேன். ஆம் ஒருவர் கூட என்று ஒற்றர்கள் சொன்னார்கள். நிலமில்லை, அரசகுடியினர் ஒருவர்கூட இல்லை. எனில் தூதுக்குப் பொருள் என்ன? ஆனால் எனக்குப் பணிக்கப்பட்ட செயல் அது. அதை உதற எனக்கு உரிமை உண்டா?

ஆவதென்ன என்று எனக்கு தெரியவில்லை. நான் நாணயம் ஒன்றை தூக்கி வீசி மலரா முத்திரையா என்று பார்த்தேன். சங்கு முத்திரை வந்தபோது அதை வைத்து முடிவெடுத்தேன். விதர்ப்பத்துக்கு கிளம்பிச் சென்றேன். குருக்ஷேத்ரப் போரில் கௌண்டின்யபுரியை ஆண்ட பீஷ்மகரும் மைந்தர்களும் கொல்லப்பட்டனர். ருக்மி போஜகடகத்தை விட்டு கௌண்டின்யபுரிக்கே தலைநகரை மாற்றிக்கொண்டார். போஜகடகம் இரண்டாம் தலைநகராக நீடித்தது. போஜகடகத்தையும் ஒட்டியுள்ள நிலத்தையும் பிரத்யும்னனுக்கு அளிப்பதாகவே முதலில் பேசப்பட்டது. அது குறைந்து குறைந்து வந்து வரதாவின் கரையோர சதுப்புநிலமும் பதினெட்டு ஊர்களும் மட்டும் என்று ஆகியது. பின்னர் அதிலும் தடைகளை சொல்லத் தொடங்கினார் ருக்மி.

நான் வரதாவின் படித்துறையை வந்தடைந்து அங்கிருந்து நதிக்கரைப் பாதை வழியாக கௌண்டின்யபுரிக்கு சென்றுகொண்டிருந்தேன். யாதவ இளவரசர்களின் உயிர்நீப்பால் விதர்ப்பம் துயர்கொண்டிருக்கும் என்றும் அங்கு குடிகள் தங்கள் குடிமைந்தர் அழிவின்பொருட்டு புலைகாப்பார்கள் என்றும் நான் எண்ணினேன். ஆனால் செல்லும் வழியெங்கும் இளவேனில் கொண்டாட்டங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. தெருக்களில் மலராடையும் தளிராடையும் அணிந்த மக்கள் அலைமோதினர். எங்கும் மதுக்களியாட்டமும் காமக்கொண்டாட்டமும் நிகழ்ந்தது. அச்செய்தி வந்து சேரவேயில்லையோ என நான் ஐயம் கொண்டேன்.

விதர்ப்பத்தில் இளவேனில் பருவத்தில் காமனை உயிர்த்தெழ வைத்து கொண்டாடும் வழக்கம் இருந்தது. தளிர்களால் ஆன பல்லக்கில் கரும்பாலான வில்லையும் ஐந்து மலர்களால் ஆன அம்புகளையும் வைத்து காமனை நிறுவி இளமகளிர் தூக்கிக்கொண்டு சென்று புதுப்பெருக்கெடுத்த ஆற்றின் கரைகளில் வைத்து மலர் வழிபாடு செய்த பின்னர் நீரில் ஒழுக்குவார்கள். அவ்வாறு பல்லக்கு தூக்கிச்செல்லும் பெண்டிர் ஆடையணியாது வெற்றுடலுடன் செல்லும் வழக்கம் இருந்தது. தொன்மையான அக்கொண்டாட்டம் அப்போதும் நிகழ்ந்துகொண்டிருந்தது வியப்பூட்டியது.

அது பெண்களின் விடுதலைநாள். எங்கும் ஆண்களையே காணவில்லை என்பதை நான் உணரவில்லை. ஆற்றங்கரை தோறும் ஆடையற்ற பெண்கள் சிரித்துக் கூத்தாடினார்கள். ஆடைகளிலிருந்து விடுதலை பெறுவதை பெண்கள் எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதை முன்பு நான் அறிந்திருந்தேன் எனினும் அது வியப்பாகவே இருந்தது. ஆடைகளால் தாங்கள் சிறையிடப்பட்டிருப்பதாக பெண்ணுடல் எண்ணுகிறது. ஆடை களைந்ததுமே பெண்ணுடல்களின் அசைவுகளும் அவர்களின் கண்களும் மாறிவிடுகின்றன. அவர்களுள் அறியாத் தெய்வம் ஒன்று வந்து குடியேறுகிறது.

வரதா நதிக்கரையில் நான் சென்றுகொண்டிருந்தபோது ஆடையில்லாத பெண்கள் எழுவர் கூச்சலிட்டபடி ஓடிவந்து என்னை இழுத்துக்கொண்டு சென்று நீரில் தூக்கி வீசினர். சேற்றில் என்னை புரட்டி எடுத்தனர். நான் அவர்களிடமிருந்து தப்பும்பொருட்டு புரண்டெழுந்து நீர்துழாவி பிறிதொரு கரையில் ஏறி நாணல் காட்டுக்குள் புகுந்து சேற்று ஓடைகளினூடாக கௌண்டின்யபுரிக்குள் நுழைந்தேன். அங்கே என்னைக் கண்ட காவலர்களிடம் என் அடையாளத்தை சொன்னேன். அவர்கள் பலர் சிரிப்பை அடக்கிக்கொண்டு என்னை அழைத்துச் சென்றனர்.

விதர்ப்பத்தின் அமைச்சர்கள் என்னை வரவேற்றபோது எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. ஒரு நாட்டின் அமைச்சனென எனக்கு அளிக்கவேண்டிய எந்த முறைமையும் செய்யப்படவில்லை. எளிய யாதவ முதியோனுக்குரிய சொற்களும் முறைமைகளுமே இயற்றப்பட்டன. என்னை அவர்கள் கொண்டுசென்று சிறுகுடிலொன்றில் தங்க வைத்தனர். அங்கே மேலும் செய்திகளை உறுதிப்படுத்திக்கொண்டேன். விதர்ப்பத்தின் சிற்றமைச்சர்கள் அனைவருக்குமே எல்லாச் செய்திகளும் தெரிந்திருந்தன. எண்பதின்மரில் ஒருவர்கூட எஞ்சவில்லை என்று அனைவரும் மீள மீள சொன்னார்கள்.

ஆனால் எவரிடமும் சற்றும் துயர் இருக்கவில்லை. உண்மையில் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடிக்கொண்டிருந்தனர். உலகியலாளர்களுக்கு பிறிதொருவரின் வீழ்ச்சி எத்தனை உவகையை அளிக்கும் என்பதை அமைச்சன் என நான் நன்றாக அறிந்திருந்தேன் என்றபோதிலும்கூட அது எனக்கு வியப்பையும் கசப்பையுமே அளித்தது. மானுடர் பிறர் என்பதை எவ்வண்ணமோ தங்களுக்கான போட்டியாளர்களாகவே என்ணுகிறார்கள். ஆயினும் இறந்தவர்களில் பதின்மர் விதர்ப்பத்தின் மருகர், நூற்றுவர் விதர்ப்பத்தின் கொடிவழியினர். அவர்கள் விதர்ப்பத்திற்கு பெரும் காவலென அமையும் வாய்ப்பு கொண்ட மாவீரர். அதைக்கூட அவர்கள் எண்ணவில்லை.

நான் சென்று மூன்றாவது நாள்தான் ருக்மி என்னை அவைக்கு அழைத்தார். அவர் என்னை தன் தனியறைக்கு அழைப்பார் என்றுதான் நான் எண்ணினேன். ஆனால் அந்தணரும் அமைச்சரும் படைத்தலைவரும் குடித்தலைவரும் வணிகரும் என ஐம்பேராயம் அமர்ந்த அவைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். எனக்குரிய ஆடைகள் அளிக்கப்படவில்லை. சேற்றில் விழுந்து பழுதுபட்ட என் ஆடைகளை நானே துவைத்து காயவைத்து அணிந்துகொண்டிருந்தேன். இருமுறை அமைச்சருக்குரிய ஆடைகள் எனக்கு அளிக்கப்படவேண்டும் என்று நான் கோரியும்கூட ஏவலர் எனக்கு அவற்றை கொண்டுவந்து தரவில்லை. வெறுந்தலையோடு அவைபுகக்கூடாது என்பதற்காக என் அறையிலிருந்த எளிய மரவுரி ஒன்றை எடுத்து என் தலைப்பாகையாக கட்டிக்கொண்டேன். என் உடலில் அணியேதுமில்லை. அவைநுழைந்தபோது பரிசல் வாங்க வந்த இரவலன்போல என்னை உணர்ந்தேன்.

விதர்ப்பத்தின் பேரவைக்குள் என்னை அறிவித்தபோது விருஷ்ணிகுலத்து யாதவராகிய ஸ்ரீகரர் என்று மட்டுமே குறிப்பிட்டனர். ஆகவே நான் அவைநுழைந்தபோது எவரும் முகமன் உரைக்கவில்லை. வரவேற்கும் பொருட்டு எந்த அசைவும் எழவில்லை. அரசன் முன் சென்று நின்று நானே கைதூக்கி அவரை வாழ்த்தினேன். “விருஷ்ணிகுலத்தவனாகிய என் பெயர் ஸ்ரீகரன். பாரதவர்ஷத்தின் பெரும்புகழ் கொண்ட நகரமாகிய துவாரகையின் அமைச்சன். இன்று துவாரகை சற்று அப்பால் பிரஃபாச க்ஷேத்ரம் என்னுமிடத்தில் நிலைகொண்டுள்ளது. அங்கிருக்கும் அரசர் ஃபானுவுக்கும் அவருடைய உடன்பிறந்தார் எண்பதின்மருக்கும் அமைச்சர் என்று திகழ்கிறேன். இளையவர் பிரத்யும்னனின் செய்தியுடன் இந்த அவைக்கு வந்துள்ளேன்” என்றேன்.

ருக்மி தன் நீண்ட செந்நிறத் தாடிக்குள் கைவிரல்களை நுழைத்து நீவியபடி வஞ்சநகைப்பு ஒளிவிட்ட விழிகளால் என்னை கூர்ந்து பார்த்தார். நான் சொல்லி முடித்ததும் அவருடைய புன்னகை பெரிதாகியது. அவையை ஒரு முறை பார்த்துவிட்டு “தாங்கள் அமைச்சர் ஆயினும் போதிய செய்திகளை அறியாமல் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே உரைக்கிறேன். ஒன்று, துவாரகை என்னும் நகரம் இன்றில்லை, அது இருந்தது என்பதற்கான நூல் சான்றுகளன்றி பிறிது ஏதும் இல்லை. இரண்டு, பிரஃபாச க்ஷேத்ரம் என்னும் ஊர் இன்றில்லை. அது இருந்தது என்பதற்கான நூல் சான்றும் இல்லை. மூன்று, யாதவ மைந்தர் எண்பதின்மர் இன்றில்லை. அவர்கள் இருந்தார்கள் என்பதற்கு சான்றென மைந்தர்களோ பெயர் மைந்தர்களோகூட இல்லை” என்றார்.

நகைப்பு விரிய “ஆகவே நீங்கள் அமைச்சர் என்பதற்கான சான்றுகளை இந்த அவைக்கு நீங்கள் அறிவிக்கலாம்” என்றார். அவையிலிருந்தும் சிரிப்பொலி எழுந்து முழக்கமாகச் சூழ்ந்தது. நான் சினத்தை அடக்கி “நான் இங்கு சொல் விளையாட வரவில்லை. இங்கிருக்கும் அனைவருக்கும் உண்மையென ஒன்று தெரியும், நான் பிரத்யும்னனின் தூதனாக இங்கு வந்துள்ளேன். அவர் படைதிரட்டும் பொருட்டு முன்பு விதர்ப்பத்திற்கு அளித்த கருவூலச் செல்வத்திற்கு விதர்ப்பம் இன்னும் ஈடு சொல்லவில்லை. அதற்கிணையாக விதர்ப்பத்தின் நிலம் அவருக்கு அளிக்கப்படும் என்று அரசர் தன் வாயால் அளித்த சொல்லுறுதி உள்ளது. அதை அவருக்கு மீண்டும் நினைவுறுத்துவதே என் பொறுப்பு” என்றேன்.

“நான் அளித்தேனா இல்லையா என்பது பிறிதொன்று. ஆனால் அளித்தேன் என்று கொண்டால்கூட அதை கொள்வதற்கு இன்று யார் இருக்கிறார்கள்? பிரத்யும்னனா, அநிருத்தனா, அவன் மைந்தரா? அக்குருதியினர் எவரேனும் இன்று உளரா?” என்று ருக்மி கேட்டார். “என் உடன்பிறந்தாள் ருக்மணியின் மைந்தர் பதின்மரும் இன்றில்லை. அவர்களின் மைந்தர் நூற்றுவரும் இல்லை. அவர்களின் பெயர்மைந்தர்களும் இல்லை. எவருக்காக நீங்கள் நிலம் நாடி வந்திருக்கிறீர்கள்?”

“அரசே, அதை கொள்வது எவர் என்பது நாங்கள் முடிவு செய்யவேண்டியது. அந்நிலம் யாதவர்களுக்குரியது. எஞ்சிய யாதவர்கள் வந்து தங்குவதற்கான நிலமாக அது அமையலாம். மதுராபுரியின் பலராமர் அதை கேட்கக்கூடும். நான் வந்த தூது அந்நிலம் யாதவர்களுக்குரியது என்பதை உறுதி செய்வதற்காகவே” என்றேன். ருக்மி உரக்க நகைத்து “நான் யாதவர்களுக்கும் எந்தச் சொல்லுறுதியும் அளிக்கவில்லை. பேச்சு நடந்தது எனக்கும் பிரத்யும்னனுக்கும் நடுவேதான். பிரத்யும்னனின் கொடிவழியில் வந்த எவரேனும் கேட்கும் பொருட்டு நான் காத்திருக்கிறேன். பிறிதெவரும் இதைப்பற்றி என்னிடம் பேச வேண்டியதில்லை” என்றார்.

அவருடைய குரல் மாறியது. “விதர்ப்பத்திற்கு நிதியளிக்கப்பட்டதென்றால் அது ஊழ். போரில் சிதறுண்டு கிடக்கும் பாரதவர்ஷத்தில் விதர்ப்பம் தனக்கென படைதிரட்டவும் பெருநகரென கௌண்டின்யபுரி மாறவும் உதவும் நிதி அது. மையநிலத்தில் பேரரசு ஒன்றை அமைக்க நமக்கு ஊழ் ஆணையிடுகிறது. யாதவர்கள் என்று இன்று எவரும் இல்லை. இளைய யாதவர் வரட்டும், அல்லது அவரது மூத்தவர் வரட்டும். அவர்களிடமும் இதையே சொல்வேன். அவர்களிடம் நான் எந்தச் சொல்லையும் அளிக்கவில்லை. பிரத்யும்னனிடம் மட்டுமே நான் பேசியிருக்கிறேன். பிரத்யும்னனின் குருதியினரிடம் மட்டுமே எனக்கு பேச்சு” என்றார்.

“இதுதான் உங்கள் அறுதியான மறுமொழியா?” என்று நான் கேட்டேன். “நான் பிறிதொன்று சொல்வதில்லை” என்று அவர் சொன்னார். நான் ஏளனத்துடன் சிரித்து “உங்கள் சொல்லுக்கு என்ன மதிப்பு? காற்றின் நிலைபேறுகூட இல்லாத உள்ளம் கொண்டவர் நீங்கள் என்பதை நன்கறிவேன்” என்றேன். சீற்றத்துடன் அவர் எழுந்து “எவரிடம் பேசுகிறீர் என்று தெரிகிறதா?” என்று கூவினார்.

“ஆம், விதர்ப்பத்தின் அரசனிடம் பேசுகிறேன். அரசனின் சொல் பாறைபோல் நின்றிருக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறேன். நீங்கள் நீரலைப் பாவை. அதை குருக்ஷேத்ரப் போரின்போதே வெளிப்படுத்தினீர்கள். உடன்பிறந்தாரையும் தந்தையையும் குருக்ஷேத்ரத்தில் பலியிட்டு மண்பெற்றவர். எனினும் உங்களை நம்பி அப்பெரும்செல்வத்தை உங்களிடம் கொண்டுவந்த பிரத்யும்னன்தான் பழி கூறத்தக்கவர்” என்று நான் சொன்னேன். “நன்று, இதன் விளைவை நீங்கள் அடைந்தாகவேண்டும். ஊழ் உன்னுவது ஒருங்குக!” என்று சொல்லிவிட்டு நான் அவைவிட்டு வெளியே சென்றேன்.

முந்தைய கட்டுரைமலைகள் அங்கேயே…
அடுத்த கட்டுரைகூடு, பிறசண்டு – கடிதங்கள்