சிவம் ,அனலுக்குமேல் -கடிதங்கள்

 சிவம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

புனைவுக்களியாட்டில் எனக்கு பெரிய அழுத்தத்தை அளித்த கதை சிவம். எனக்கு சடங்குகளில் எந்த நம்பிக்கையும் இருந்ததில்லை. நான் சைவன் என்றாலும்கூட. என் அப்பா இறந்தபோது அம்மா காசியில் சடங்கு செய்யவேண்டும் என்று சொன்னார். நான் செய்யவில்லை. எனக்கு இஷ்டமில்லை என்று சொன்னேன். அம்மாவும் மறைந்துவிட்டார்கள்

ஆனால் எட்டு வருடம் கழித்து வேறொரு விஷயமாக காசி செல்லவேண்டியிருந்தது. காசியில் கங்கை கரையில் நின்றிருந்தேன். என்னுடன் வந்தவர்கள் கீழே சடங்குகளைச் செய்துகொண்டிருந்தார்கள். நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு சாமியார் என்னிடம் இந்தி உச்சரிப்பு கொண்ட தமிழில் “சடங்கு இருந்தால் பாக்கி வைக்காதே… புளிச்சிரும்” என்றார். என்ன சொல்கிறார் என்று தெரியவில்லை. நான் கடந்து சென்றுவிட்டேன்.

ஆனால் அந்த வரி என்னை தொந்தரவு செய்தது. திரும்பி வந்தபிறகு ஆறு மாதம் கழித்து தனியாகப்போய் எல்லா சடங்கையும் செய்தேன். ஆனால் அப்போது அதை என் மனைவியுடம்கூடச் சொல்லவில்லை. அது இன்றைக்கு ரகசியம் கிடையாது. இந்த கதையில் மனிதர்கள் மனிதர்களை விண்ணிலிருந்து கறந்து எடுக்கிறார்கள், திரிந்ததும் திருப்பி அனுப்புகிறார்கள் என்ற வரி திகைப்பை அளித்தது

கணேஷ்.ஜி

***

அன்புள்ள  ஜெ,

சிவம் கதையை வாசித்த பிறகு உங்களுக்கு எழுதும் கடிதத்தை அன்புள்ள எனும் வார்த்தையை உபயோகித்து துவங்க வேண்டுமா என்று யோசித்தேன் :) ஆனால் நித்யா அன்பை நிராகரிக்கும் முறை நம் திக அன்பர்கள் நாத்திகத்தை பேசும் முறையாக இருக்காது,  அன்பை உணர்ந்து கடந்த ஒன்றாக அது இருக்கும்!

இந்த கதையை புரிந்து கொள்ள வேண்டி இன்னொரு முறை வாசித்தேன், இரு வரிகள் முக்கியமான ஒன்றை இந்த கதையின் ஆழத்தை சொல்வதாக உணர்ந்தேன், அந்த வரிகள்

ஒழுகும்படகில் எழுந்து எழுந்து அமரும் பறவை.

நில்லாக்காலம் நிகழும் உடல்

அதாவது இந்த கதை மறுபிறப்பின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் கதையோ என்று கூட எண்ணினேன்.  அதற்கான சாத்தியமும் இந்த கதையில் உள்ளது, மேல நான் கதையில் இருந்து எடுத்து இங்கு பதிந்த இரு வரிகளும் அதையே குறிப்புணரத்துகின்றன என்று எண்ணினேன். நிறைய இடங்கள் அசரடித்தன

அ.பேசாத சொற்கள் சிதையில் நின்று எரிவதாக வரும் இடம்

ஆ. மேலே இருக்கும் மனிதர்கள் இங்கு இருக்கும் மனிதர்கள் கறந்து பெற்று  திரிந்து மறைந்து மேல் செல்லும் சுழல், அதில் கறந்து /திரிந்து (பால் ) எல்லாம் அழகான உவமானங்கள்.

முதல் முறை வாசிக்கும் பொழுது பைத்தியத்தை காப்பாற்றிவன் நடந்து செல்லும் பொழுது அவன் உடல் வில் சென்ற நான் போல அதிர்ந்தது எனும் இடத்தில் இந்த தருணம் கதையின் ஏதோ ஒரு அம்சத்தை சொல்ல போகிறது என்று யூகித்தேன்,  கதையின் முடிவில் அவன் முது சாமியாரை நீரில் கவிழ்க்கும் காட்சியை வாசித்த போது உயிரின் முக்கியத்துவத்தை உணர்ந்தவன், அதுதான் பைத்தியத்தை காப்பாற்ற வைத்து ஒரு உயிர் அல்லவா என்று சொல்ல வைக்கிறது.

சாமியார்கள் (உண்மையான !) இறப்பை மிக சாதாரண ஒன்றாகவே பார்க்கிறார்கள், ஏனெனில் உடல் பற்று இல்லை,  ஏனெனில் உடல் இழந்தாலும் மீண்டும் அடைந்து விட கூடிய ஒன்று என்று நினைக்கின்றனர்,  அப்படியாக இக்கதை வழியாக எண்ணிக்கொண்டேன், இது தவறான வாசிப்பாக கூட இருக்கலாம். பார்த்திபன் அண்ணா fb யில் முன்பு ஒரு ஸ்டேட்டஸ் தன் பக்கத்தில் இப்படி போட்டிருந்ததாக ஞாபகம்,  ‘ ஒருவர் உயிருக்கு ஆபத்தான சூழலில் இருந்தால் ஓடி வந்து செயல்படுவேன், ஆனால் இறந்து விட்டவர் எனில் அது பாதிக்காது, இயல்பாக கடந்து விடுவேன்’. இந்த அர்த்தம் வருவதை போன்ற வரிகளில் எழுதினார். சிவா அண்ணன் கூட இதே மனநிலை கொண்டவர்தான் இருவரும் பொது அரசியலில் இருப்பதால் நிறைய இக்கட்டான சூழலை பார்த்திருப்பார்கள், அது உருவாக்கி கொடுத்த முதிர்ச்சி இது.  இவர்களே இந்த அளவு முதிர் எண்ணங்களை கொண்டிருப்பார்கள் எனில் அலைந்து திரியும் சாமியார்கள் எந்த அளவு கண்டுணர்ந்திருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டேன்

இந்த கதையிலேயே கூட அவர் வங்காளி கிழவி அனுபவம்,  அந்த அனுபவத்தில் மீண்டு வந்த ஒருவர் காணும் உலகம், அது வேற என்று தோன்றுகிறது. அந்த நம் அன்றாட உலகின் அன்பு மனநிலை எல்லாம் செல்லுபடி ஆகாது. ஒரு விஷயத்தை அந்த விஷயமாக மட்டும் பார்க்கும் மனநிலை என்று கூட இதை பார்க்க முடியும் என்று தோன்றுகிறது.  அதாவது இறந்த உடல் என்றால் அது வெறும் உயிரற்ற சதை பிண்டம், அவ்வளவுதான் என்பதை போல

அப்படியாக எண்ணிக்கொள்ளும் போதுதான் சிதை தீயில் சுட்ட சப்பாத்தியை உண்ண முடிகிறது போல. இன்னொன்றும் கூட தோன்றுகிறது,  அந்த முது சாமியார் செல்லும் படகில் காவி கொடி இருக்கிறது. காவிக் கொடி தீ போல, அந்த படகு அகல்விளக்கு போல என்ற உவமை வருகிறது. இது கூட ஏதோ ஒன்றை குறிப்புணர்த்தும் ஒன்றுதான் என்று தோன்றுகிறது.

ராதாகிருஷ்ணன்

அனலுக்குமேல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இந்த அறுபத்தொன்பது கதைகளில் சிலகதைகள் அதிகம் பேசப்பட்டுள்ளன. சிலகதைகள் பேசப்படவே இல்லை. அது ஏன் என்று பார்த்தேன். அதிகம் பேசப்பட்ட கதைகள் எல்லாமே இந்தியாவின் மரபைச் சார்ந்த ஆழம் கொண்டவை. உதாரணம், சிவம். அதிகம் பேசப்படாத கதைகள் நவீன வாழ்க்கையின் தொலைவிலிருக்கும் சிக்கல்களைப் பேசுபவை. உதாரணமான கதை அனலுக்குமேல்.

இன்றைய வாழ்க்கை ஓர் அனலுக்குமேல் நிகழ்வது என்று அந்தக்கதை தொடங்குகிறது. சற்றே குளிர்ந்த லாவாமேல் அந்த வாழ்க்கை நிகழ்கிறது. ஆழத்திலுள்ள அனலை உணரவேண்டும் என்ற வேட்கை சிலருக்கு இருக்கிறது. ஜாக்ரதையாக மேலே உள்ள பொருக்குப்படலத்தை அகற்றி அந்த அனலை பார்க்கிறார்கள். மிகமிகக் கொஞ்சமாக. பாவனையாக. அதுதான் அந்தக் கதை. ஆனால் அடியிலிருப்பது அனல்தான் என்று தெரிந்துவிடுகிறது

அந்தக்கதை பரவலாக வாசிக்கப்படவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அது இன்று எல்லாருக்கும் உரிய பிரச்சினை அல்ல. சிந்திக்கும் மனிதர்களுக்கு மட்டுமே உரிய பிரச்சினை. சிந்தனை ஒர் இடத்தில் முட்டிநின்றபின் வரும் எரிச்சல் வெறுமை ஆகியவற்றைப் பற்றிய பிரச்சினை அது

வெற்றிவேல்

***

அன்புள்ள ஜெ

நான் கரு வாசிக்கும்போதுதான் அனலுக்கு மேல் கதையை இன்னும்கூர்மையாக புரிந்துகொண்டேன். கரு ஆழமான கதை. ஆனால் அது கனவுநிறைந்த ஒரு பழையகாலத்தைச் சேர்ந்தது. ஷம்பாலா போன்ற கல்டுகள் இன்றைக்கு இல்லை. இருந்தால் மேக் மை டிரிப் ஆட்கள் அதற்கு பேக்கேஜ் அறிவித்திருப்பார்கள். இந்த திறந்துகிடக்கும் உலகில் கொஞ்சத்தை மூடிவைக்கலாமே என்ற முயற்சியைத்தான் அனலுக்குமேல் கதையிலே செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்

அருண்குமார்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–78
அடுத்த கட்டுரைஉதிரம்- கடிதங்கள்