குருவிகள் – கடிதங்கள்

மூன்று வருகைகள்.

மூன்று டைனோசர்கள்

மூன்று பறவைகள்

ஞ்சும் கூடு

அன்புள்ள ஜெ

அந்தக்குருவியின் வருகைக்கும் உங்கள் எழுத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருந்திருக்கிறது. இந்த எழுத்துக்கொண்டாட்டத்திற்கும் அதற்கும் ஒரு இணைப்பை உங்கள் மனசில் உருவாக்கிக்கொண்டிருந்திருக்கிறீர்கள். அல்லது அதை ஒரு நிமித்தமாக உங்கள் மனம் எடுத்துக்கொண்டிருக்கிறது

இந்தக் கதைகளின் விதவிதமான உலகங்கள் ,நூற்றுக்கணக்கான செய்திகள், உணர்ச்சித்தருணங்கள், ஒவ்வொரு முறையும் மிகச்சரியாக இது ஒரு அபூர்வமான கவித்துவத்தைச் சென்றடைவது, அதன்பின் திரும்பிப்பார்த்தால் எல்லா கதைகளுமே அந்த முடிவுக்குரிய ஒத்திசைவைக் கொண்டிருப்பது எல்லாம் ஆச்சரியம்.

அதை எவருமே நினைத்து எண்ணி செய்துவிடமுடியாது. அதை கனவால்தான் செய்யமுடியும். கனவிலிருந்து நேரடியாக வந்தால் மட்டும்தான் அந்த நிறைவு உருவாக முடியும். இத்தகைய ஒரு வேகமான முழுமை அங்கேதான். ஒவ்வொரு கனவுக்குப் பிறகும் அந்தக்கனவில் இருக்கும் செய்திகளும் அச்செய்திகள் அற்புதமாக ஒருங்கிணைந்திருப்பதும் திகைக்க வைக்கும். இவை நீங்கள் மொழியில் நிகழ்த்திக்கொண்ட கனவுகள் என நினைக்கிறேன்

இவை கதைகள் என்ற வகையில் கொண்டாட்டமானவை. பெரியபெரிய வாசல்திறப்புகளை அளித்தவை. கூடவே இவை எப்படி நிகழ்கின்றன என்ற வாய்ப்பையும் இவை அளித்தன.

ஏறத்தாழ எழுபது கதைகள். இவற்றில் ஒவ்வொருவரும் ஒரு பட்டியலைப் போடலாம். சிறந்த கதைகளின் பட்டியலை. ஆனால் இருபதாண்டுகளாகத் தமிழிலக்கியத்தையும் உலக இலக்கியத்தையும் [கொஞ்சம்போல இந்தி இலக்கியத்தையும்] வாசிப்பவன் என்ற முறையில் நான் ஒன்றைச் சொல்வேன். இவற்றில் உள்ள குறைந்தபட்சக் கதைகூட ஒர் இலக்கியச்சூழலில் சாதனைக்கதையாகவே நினைக்கப்படும். அதைமட்டும் ஓர் எழுத்தாளர் எழுதியிருந்தால்கூட அவரை இலக்கியவாதி என்றே நினைப்போம்

ஆர்.ராஜசேகர்

***

ஜெ,

கண்ணுக்கு தெரியாமல் ஒரு உலகம் என தரை உள் பரவி எப்போதவது கதவிடுக்கில் ஒரு சுவர் ஒட்டையில் என வெளியே வருகை தரும் எறும்பு படைகள், இவ்வகை பிரசவம் பார்க்க மட்டும் குருவிகள், செம்பருத்தி மரங்களில் பெரும்பாலும் பால் நுரை என முட்டை போல தெரிந்து பின் பெருக்கும் கட்டெரும்பின் இனக்குழு, சுவர்களில் இருக்கும்அந்த செங்கோல் அரசர்கள், விடாமல் பெருகி கொண்டு இருக்கும் கரப்பான்கள், அவ்வப்போது சிறு பூரான்கள்>…ஒரு வீட்டினுள் தான் இத்தனை இல்லங்களும் , உயிர்களும்.

எங்களது சமையலறையின் மேல் இருக்கும் சிறு வெண்டிலேட்டர் வகை இடத்தில், வெளிப்புற வழியாக வரும்படியாக ஒரு குடியிருப்பு சில வருடங்களாக இருப்பதை நினைத்து கொண்டேன். சில சமயம் எட்டி பார்த்து 8,10 அடி அதால பாதளத்தில் விழுந்து செத்து கிடக்கும் குருவி குஞ்சும் உண்டு. அதை பார்த்து விட்டு அந்த சிறு வீட்டின் காப்பானின் சப்தம் கஷ்டபடுத்தும். ஆனால் எப்போது பிறந்து பின் செல்கின்றன என்பது தெரியாமல் ஒரு வேக வாழ்வு. முதல் சில வரவுகளை தாண்டி அதுவும் வந்து இருந்து பெற்றெடுக்கும் ஈற்றறை ஆனதால் கண்டு கொள்வதில்லை. ஒரு தடவை மருதானி மரத்தில் கண் படா இடத்தில் ஒரு கூடு . கையால் எடுத்து பார்த்ததை எங்கு இருந்து பார்த்தது என தெரியவில்லை. மாயம். வெறும் கூடு காத்து கிடந்தது. நாம் பார்ப்பது ஒரு புள்ளியின் பிறப்பு… குடை சீத்தா மரம், புதர் என இடங்களில் காலை வரும் பேச்சு இரைச்சல் தான் விடியலின் தொடக்கம், அதுவும் சில மாலை வேளைகளில் பொரு மணலில் அவை புரண்டு உடலை உதறி குளித்து கொண்டிருக்கும். நாம் பார்வை படும் முன் அம்பு கூட்டம் என கிளம்பி விடும். பெருங் கூட்டமாக அசுர வேகத்தில் சில மேலும் கீழுமென ஒரு ஊர்வல நடனத்தை சில நொடிகளில் முடித்து சல்லென்று அமர்ந்து கொண்டு அரசியல் பேச்சுகள்.

எல்லார்க்கும் வேண்டும் வானம். வானத்திற்கு வேண்டும் குருவிகள்

அன்புகளுடன்,

லிங்கராஜ்

***

என் அன்பு ஜெ,

எஞ்சும் கூடு என்ற வார்த்தையின் கனத்தினாலே இன்று காலை கனத்துவிட்டது எனக்கு. நீங்கள் நித்தமும் கவனிப்பது போலவே உங்கள் எழுத்துக்களுன் வழி நித்தமும் குஞ்சுகளைப் பற்றிய சித்திர நாடகத்தை நடித்துக் கொண்டதுண்டு.

”வானின் முடிவில்லாத உயிர்வலைப்பின்னலில் சாவும் வாழ்வும் ஊடும் பாவும்போல இந்த வரிகளில் உள்ள நிலையாமை என்னை ஏனோ கொல்லுகிறது. இத்தகைய நிலையாமையில் பொறுப்புகூறுவது, பொறுப்பேற்பது என்பது எத்துனை அபத்தம். “வாழ்வோ சாவோ அது வானுக்குரியது” என்ற வார்த்தைகள் எத்துனை பொறுத்தமானவை. நம் வாழ்வும் அப்படித்தானே. யாரையும், ஏன் நம்மையுங்கூட சில இடங்களில் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாதளவு சில விடயங்கள் நடந்துவிடுகின்றனவே.

இப்படி, இந்த குருவியைப் போலவே நாம் பொறுப்பேற்க முடியாத எத்தனை நபர்கள், நிகழ்வுகள், உயிர்கள் நம் வாழ்வில் கடந்திருக்கின்றன், இன்னும் கடக்கப்போகின்றன. நம்மால் ஏதும் செய்ய முடியாத, அவரவர் ஊழ்கத்தினின்று பூமியை நோக்கியதான இந்த வாழ்வென்னும் பயணத்தில் நல்லதும், தீயதும், மகிழ்ச்சியும், துன்பமும் பொறுப்புகூற அவர்களாலேயே முடியாதபோது நாம் கண்டிப்பாக பொறுப்புகூற முடியாது. இப்படி எத்துனை நாய்கள், பூனைகள், உயிர்கள், மனிதர்களின் வாழ்விற்காக நான் கவலைப்பட்டிருக்கிறேன். கண்ணீர் சிந்தியிருக்கிறேன். இன்று அவற்றையெல்லாம் இந்த ’எஞ்சிய கூட்டில்’ கரைக்கிறேன் ஜெ.

ஜெயகாந்தனின் நிக்கி என்ற சிறுகதைக்குப் பின்னர் நான் எப்பொழுதும் எந்த நாயைப் பார்த்தலும் நிக்கி என்று நினைத்துக் கொள்வதுண்டு. எந்த நாயும் அப்படியானதொரு பயணத்தைக் கடக்காமல் தன் வாழ்வை எதிர் கொண்டிருக்க முடியாது. அது போலவே இனி எந்தக் குருவிகளிலும் “மூன்று வருகைகள் முதல் எஞ்சிய கூடு” வரை நினைத்துக் கொள்வேன். பெயர்கள் உங்களுக்குப் பிடிக்காது என்பீர்கள். நான் கூட இப்பொழுதெல்லாம் அப்படி ஆகிவிட்டேன். அது உங்களின் எழுத்தின் தாக்கமாயிருக்கலாம். இனி பெயர்களற்ற இந்த மூன்று குஞ்சுகளை என் நினைவடுக்கின் ஆழத்தில் பத்திரமாக புதைத்து வைக்கிறேன். நினைவுகளை மீட்டும் போது அவைகளைப் பார்த்து இரசித்திருப்பேன். இது போன்ற உயிருள்ள அனுபவத்தின் வழி வரும் படிப்பினைகள் ஆழமாக வாழ்வுக்குள் கலந்துவிடுகின்றன.

”கூடு”என்ற சிறுகதையை மீண்டும் நினைத்துக் கொண்டேன் இன்றும். மூன்று திறப்புகளைப் பற்றி சொல்லியிருந்தீர்களே!! இன்று வேறோர் எண்ணம் அது சார்ந்து வந்தது எனக்கு. நாம் அன்னையின் கருவில் பத்துமாதம் கூட்டு வாழ்வைத்திறந்து தானே இந்தப் புவியில், வானின் கீழ் வாழ்கிறோம். பின்பு இந்த வாழ்வென்னும் கூட்டினின்று விடுதலை பெற்று இறப்பென்னும் திறப்பை அடைகிறோம். இறப்பென்னும் கூட்டினின்று மீண்டும் வாழ்வெண்ணும் கூட்டை நாம் அடைகிறோம். நான் மறு சென்மத்தைப் பற்றி இங்கு பேசவில்லை. அது இருக்குமா என்பதைப் பற்றியும் என்னால் ஆராய இயலாத அளவு மிகச்சிறு துளி நான். ஆனால் இந்த உடல் மொத்தமே 43% தான் செல்கலாலானது. மிச்சமுள்ளவை பிற நுண்ணுயிரிகளால் ஆனது. இந்த உடல் அழிகையில் கண்டிப்பாக புழு பூச்சிகளாக மாறும், உரமாக உயிராக இந்தப் பூமியை நிறைத்திருக்கும். அவையும் நம் உயிரிலிருந்து மாற்றமடைவது தானே. இறப்பு அடுத்த உயிரின் ஓர் விழிப்பு தானே. “உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்ற வள்ளுவரின் அற்புதமான வரிகள் நினைவுக்கு வருகிறது. இப்படி வாழ்க்கை காலத்திற்குள் வட்டமாக சுழலுவதாகப் பார்க்கிறேன். காலமென்னும் பரிமாணம் இப்படி வட்டமாக சுழன்று கொண்டே இருப்பதகாப் பார்க்கிறேன். இன்னும் மனம் இதைப் பற்றியே இப்படியே சிந்தித்து, சிந்தித்து மாள்கிறது.

எஞ்சுவது கூடு மட்டுமே என்று தெரியாமல்…

அன்புடன்

இரம்யா.

***

அன்புள்ள ஜெ

எஞ்சும் கூட்டில் இருக்கும் சர்கியூட் பின்னல்களை நம்புகிறோம் !

‘அந்தச் சிறுபறவை என் சன்னல் விளிம்பில் அமர்ந்து வானை நோக்கி ஊழ்கத்தில் இருந்ததை நினைவுகூர்கிறேன். அது என்னை பயப்படவில்லை.’

‘ஆகாயம்’ கதையில் இந்தத் தொடர் முடிவது என்ன ஒரு அழகு !  2013ல் சொல்புதிது குழுமத்தில் இதை பதிவிட்டிருந்தேன். அதில் அப்படியே போய் இந்தச் சிறுபறவையும் அமர்கிறது.

***
‘சங்கச் சித்திரங்கள் ‘சிறகுப் புயல்’ அத்தியாயத்தில் வரும் ‘இரவில் கூவியலையும் பறவை’ என்னை மிகவும் பாதித்த ஒரு படிமம். ஜெ.வின் வாழ்க்கையின் இந்தப் பருவத்தையே அப்படி விவரித்துவிடலாம் என்று தோன்றும்.

“இலைகளுதிர்க்கும் காற்று
மரம் பதற வீசும்
வான் கரைந்து வழிந்து
கீழ்த் திசை மலைகள் மறையும்
குரோதம் போல் இருள் பரவும்

சருகும் தளிரும் குவிந்த
முற்றத்தை  எட்டிப் பார்த்து
அப்பா கேட்டார்
’சின்னவன் எங்கே?’
’இருக்கான்’ எனறாள் அம்மா

ஆறுதலாகத் தூளி நாற்காலி முனகும்
சுவர்கள் குளிர்கசியும் இரவில்
போர்வை ஒரு கருப்பையாகும்
நேசமிகு வெப்பக் கரம் விபூதியிட்டு
தலை வருடும்
தூங்கு என்று முனகும்
இருளில் எங்கோ
கூடு சிதைந்த பறவையொன்று
மரம் மரமாகக் கூவியலையும்”

(–1987)

அந்தப் பறவையின் மீட்சியைக் கூறுவது போல தேவதேவனின் கனிவான வரிகள்…

“அதன் பின்”

துன்பகரமான
நினைவுகளினதும் வலிகளினதும்
காரணங்களைத் துருவியபடி
இருள்வெளியில்
காலம் காலமாய்ப்
பறந்து கொண்டிருந்த
ஒரு பறவை,அவனருகே
தோளுரசும் ஒரு மரக்கிளையில்!

அதிசயத்திற்குப் பின்தானோ
அது எழுந்து பறந்துகொண்டிருந்தது
காலமற்ற பெருவெளியில்?

மதுசூதன் சம்பத்

***

முந்தைய கட்டுரைஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைநிறைவு -கடிதங்கள்