ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விளக்கு விருது விழா

திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் கட்டடத்தில் விளக்கு விருது பேராசிரியர் ஹெப்சிபா ஜேசுதசனுக்கு வழங்கும் விழா 29.12.2002 அன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற்றது. வெளி ரங்கராஜன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். சுந்தர ராமசாமி முக்கிய விருந்தினராக வந்து கலந்து கொண்டு விருதை வழங்கினார். புதுமைப் பித்தனின் படத்தை தமிழ்ச் சங்க கட்டிடத்திலும் அவர் திறந்து வைத்தார்.

ரங்கராஜன் விளக்கு அமைப்பு சார்பில் வழங்கப் படும் இவ்விருது எளிமையான ஒன்று என்றாலும் முக்கியமான இலக்கிய படைப்பாளிகளுக்காக மட்டுமே இது வரை வழங்கப்ப ட்டுள்ளது என்றார். சி.சு.செல்லப்பா, பிரமிள், நகுலன், பூமணி ஆகியோருக்கு இது ஏற்கனவே வழங்கப் பட்டுள்ளது. ஹெப்சிபா அவர்களுக்கு வழங்கப் பட்டது இப்பரிசுக்கு பெருமை சேர்க்கிறது என்றார்.

சுந்தர ராமசாமி தன் உரையில் பேராசிரியை ஹெப்சிபா அவர்களை, பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்றார். பேராசிரியர் ஜேசுதாசன் தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையும், ரசனையும் உடையவராக இருந்தும் கூட தன் மனைவியை முன்னிறுத்தி அவரது திறமைகளை வெளிக் கொணர்வதை மட்டுமே தன்னுடைய முதல் நோக்கமாக கொண்டிருந்தார். ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் முக்கியமான பெரும் நூலான Count down from Solomonனின் ஆக்கத்தில் பேராசிரியர் ஜேசுதாசனுக்கும் முக்கியமான பங்கு உண்டு. எழுதாத நூல்களிலேயே கூட தன் பெயரை போட்டுக் கொள்ளும் இந்நாட்களில் தன்னுடைய பங்கு உள்ள நூலிலேயே தன் பெயரை போட்டுக் கொள்ளாத பேராசிரியர் மிக அபூர்வமான ஒரு ஆளுமை என்றார்.

புத்தம் வீடு மிக முக்கியமான ஒரு நூல், அந்நூல் வெளி வந்த போது பரவலான கவனத்தை அது பெற வில்லை. விமரிசகர்கள் அதைப் பேசி முன்னிறுத்தவுமில்லை. ஆயினும் அந்நூல் தன் அழகியல் குணத்தாலேயே இலக்கிய முக்கியத்துவத்தை பெற்று ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்கும் மேலாக தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. Count down from Solomon அடிப்படையில் ஒரு இலக்கிய வரலாறு என்றாலும் நுட்பமான முறையில் அது தமிழிலக்கியம் மீது விமரிசனங்களை முன் வைக்கிறது.

ரங்கராஜன் குறிப்பிட்டது போல இப்பரிசு எளிய ஒன்று அல்ல. இன்று தமிழில் வழங்கப் படுவதிலேயே மிக முக்கியமான இலக்கிய பரிசு இது தான். இதனுடன் ஒப்பிடுகையில் சாகித்ய அகாதமி விருது மதிப்பிற்குரியதல்ல. காரணம் தரமான படைப்பாளிகளுக்கு மட்டுமே இப்பரிசு இது வரை வழங்கப் பட்டுள்ளது. சாகித்ய அகாதமியால் புறக்கணிக்கப் பட்ட படைப்பாளிகளுக்கு மட்டுமே இது வழங்கப் பட்டுள்ளது. இதை பெற்றுக் கொண்ட ஒருவர் சாகித்ய அகாதமி விருதை புறக்கணிக்க வேண்டும். சாகித்ய அகாதமி விருது தமிழ் எழுத்தாளர்களை சிறுமைப் படுத்தி வருகிறது. சிலர் அதைப் பெற போட்டியும், சிபாரிசும் செய்கிறார்கள் என்றார் சுந்தர ராமசாமி.

நீல.பத்மநாபன், ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் புத்தம் வீடு தமிழில் ஒரு முக்கியமான திறப்பை உருவாக்கியது என்றார். வட்டார வழக்கு என்றும் கொச்சைமொழி என்றும் முத்திரை குத்தி மண்ணின் மணம் கொண்ட படைப்புகளை நிராகரித்து வந்த காலகட்டத்தில் வெளி வந்த புத்தம்வீடு ஒரு முக்கியமான முன்னுதாரணமாக அமைந்து இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டது. பொதுவாக தமிழில் ஒதுங்கி இருப்பவர்களைப் புறக்கணிக்கும் போக்கு தான் உள்ளது. அதற்கு மாறாக ஹெப்சிபா ஜேசுதாசன் போன்ற ஒரு அமைதியான சாதனையாளருக்கு விருது தர விளக்கு அமைப்பு முன் வந்தது பாராட்டுக்கு உரியது என்றார்.

ஆ.மாதவன், தமிழில் ஆர்.ஷண்முக சுந்தரத்தின் நாகம்மாள், சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை, ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம்வீடு ஆகியவை முக்கியமான முன்னோடி இலக்கிய முயற்சிகள் என்றார். அது வரை தமிழிலக்கியத்தில் மொழி பற்றி உருவாக்கியிருந்த பிரமைகளை உடைத்து அசலான வாழ்க்கையை எழுத்தில் வைத்த முக்கியமான இலக்கிய படைப்புகள் இவை. ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு பிறகு புத்தம்வீடு மறு பதிப்பு வந்திருப்பதும் மற்ற நூல்கள் மறு பதிப்பு வராததும் தமிழின் உதாசீன மனநிலையை காட்டுபவை. விளக்கு விருது முக்கியமான சேவையை செய்துள்ளது என்றார்.

ஜெயமோகன் தமிழ் இலக்கியத்தில் அறுபதுகள் வரை யதார்த்தத்துக்கு இடமில்லாத நிலை இருந்தது என்றார். ஒன்று கற்பனா வாதப் பண்பு கொண்ட மிகையான கதைகள். மறு பக்கம் சீர் திருத்த நோக்கம் கொண்ட விமரிசன யதார்த்ததை முன் வைக்கும் படைப்புகள். இரண்டுமே அப்பட்டமான உண்மையை பேசும் தன்மை இல்லாதவை. கற்பனா வாதப் பண்பு கொண்ட இலக்கியங்கள் ஒரு சமூகத்துக்கு அவசியம் தேவை. அவை இல்லையேல் சமூகம் தன் கனவு காணும் திறனை இழந்து விடும். ஆனால் அவை யதார்த்த வாத இலக்கியத்தால் சம நிலைப் படுத்தப் பட்டிருக்க வேண்டும். மேலான இலக்கியம் யதார்த்தத்திலிருந்தே துவங்கும். ஆனால் அதில் நின்று விடாது. அதன் உச்சம் கற்பனையின் உச்சமே.

தமிழில் தூய யதார்த்த வாதப் பண்புள்ள எழுத்தை முன் வைத்த மூன்று நாவல்கள் ஆர்.ஷண்முக சுந்தரம் எழுதிய நாகம்மாள், நீல. பத்மனாபன் எழுதிய தலைமுறைகள் மற்றும் ஹெப்சிபா ஜேசுதாசன் எழுதிய புத்தம் வீடு. புத்தம் வீடு துவங்குவதே அழகான குறியீட்டுத் தன்மையுடன் தான். மண்ணை விவரித்து மனிதர்களுக்கு வருகிறது. நாகம்மாள் கூட அப்படித்தான். மண்ணிலிருந்து சொல்ல ஆரம்பிக்கும் ஒரு கதை கூறும் முறைஅதில் உள்ளது. மிகையே இல்லாமல் மிக, மிக மென்மையாக அது வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது. ஆகவே அது முக்கியமான இலக்கிய ஆக்கம். உணர்ச்சிகளை ஆரவாரமே இல்லாமல் சொல்லும் அதன் போக்கு நமக்கு முக்கியமான ஒரு முன்னோடி முயற்சியாக அமைந்தது.

Count down from Solomon இலக்கிய விமரிசன நூல் என்ற முறையில் தமிழில் மிக, மிக முக்கியமானது. இன்னும் இது தமிழில் பேசப் படவில்லை. இது வரை தமிழிலக்கிய வரலாறு ஒருவகை அதிகார நோக்கில்தான் எழுதப் பட்டுள்ளது. ரசனை மற்றும் அற மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆக்கப் பட்ட வரலாறு இது. இந்நூலை முன்னிறுத்தி சில கூட்டங்களை நடத்தும் நோக்கம் சொல் புதிதுக்கு உண்டு. ஹெப்சிபா அவர்களின் ஆத்மார்த்தமான இலக்கிய பணிக்கு கிடைத்துள்ள இந்த இலக்கிய விருது முக்கியமானது என்றார்.

ஏற்புரை வழங்கிய ஹெப்சிபா ஜேசுதாசன் தன் வாழ்க்கையின் சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். பேராசிரியரை திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சியை பற்றி அழகான முறையில் சொன்னார். மாப்பிள்ளை தேடும் போது பெண்ணின் கருத்தை கேட்கும் வழக்கம் அன்றில்லை. ஆனால் ஹெப்சிபாவின் மனதில் ஒரு குரல் நீ பேசவேண்டும் என்று சொன்னது. அவர் தன் தந்தையிடம் தனக்கு எது முக்கியம் என்று சொன்னார். விரும்பியவரையே மணம் செய்தும் கொண்டார். அதைப் போல எழுதும் தூண்டுதலும் தனக்கு கனவில் ஒரு பேனா கிடைத்தது போலவே வந்தது என்றார். எல்லா தருணத்திலும் தன் அந்தரங்கமான குரலைத் தொடர்ந்தே தான் சென்றதாக அவர் சொன்னார். அக்குரல் எப்போதுமே அச்சமில்லாததாக, முற்போக்கானதாக, மனிதாபிமானம் கொண்டதாக இருந்தது என்பது முக்கியமான ஒன்றாக இருந்தது. தன் கணவர் தனக்கு ஆசிரியராகவும், நண்பராகவும் இருந்தார் என்றார் ஹெப்சிபா. தமிழிலக்கியம் குறித்து ஆங்கிலத்தில் எழுத வேண்டுமென்ற கனவு பேராசிரியர் ஜேசுதாசனுக்கு திருமணத்துக்கு முன்பே இருந்தது. அதை எழுபது வயதுக்கு பிறகே நிறைவேற்றி வைக்க முடிந்தது. நூலின் இறுதிப் பகுதியை எழுதிவிட்டேன்; இனி மரணம் ஒரு பொருட்டே அல்ல என்றார் ஹெப்சிபா ஜேசுதாசன். முடிந்தால் ஆங்கிலத்தில் ஒரு சுயசரிதையை எழுதும் நோக்கம் தனக்கு உண்டு என்றார். கிராம வழக்கில் இயல்பாக அமைந்த அவரது தன்னுரை அழகான அனுபவமாக அமைந்தது.

சிறந்த முறையில் கூட்டத்தை அமைத்திருந்த தமிழ் சங்க தலைவர் வினாயக பெருமாள் பாராட்டுக்குரியவர்.

முந்தைய கட்டுரைஆற்றூர் ரவிவர்மா கவிதைகள்
அடுத்த கட்டுரைஇளமுருகு எழுதிய ‘பாத்ரூம்’ பற்றிய கட்டுரை பற்றி