எஞ்சும் கூடு

மூன்று வருகைகள்.

மூன்று டைனோசர்கள்

மூன்று பறவைகள்

நேற்று மாலையுடன் குருவிக்குஞ்சுகள் மூன்றும் பறந்து மறைந்தன. நேற்று அந்திவரை அவை திரும்பி வரும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஓரிருநாட்கள் வெளியே சென்று பறத்தல் பழகி இந்தக்கூட்டுக்குள் வந்து தங்கும் என்று நினைத்தேன். ஆனால் அந்தியில் அவை திரும்பவில்லை.

வெளியே மழையும் இருளும் நிறைந்த இரவு. அவை சந்திக்கும் முதல் வானிருள். தாய்ப்பறவை ஒரே ஒருநாள்தான் பறக்க அழைத்துச் செல்லும். அதன்பின் அப்படியே வானுக்கு விட்டுவிடும். அவை தங்கள் உணவை தாங்களே தேடிக்கொள்ளவேண்டும். சேர்த்து வைத்து அன்னை அளிக்கும் அறிவென ஏதும் இல்லை. மரபணுவில் நுண்வடிவாக எஞ்சும் அறிவு மட்டுமே

அவை வாழக்கூடும். அவற்றைப் பற்றிக் கவலைகொள்வதில் பொருளே இல்லை. வானின் முடிவில்லாத உயிர்வலைப்பின்னலில் சாவும் வாழ்வும் ஊடும் பாவும்போல.  நாம் அதை புரிந்துகொள்ளவே முடியாது. பொறுப்பேற்றுக்கொள்வதை எண்ணுவதே மடமை.ஆனாலும் சிந்தையால் முட்டிக்கொள்கிறோம். நாம் என்ன செய்யக்கூடும் என எண்ணிக்கொள்கிறோம்.

அந்தச் சிறுபறவை என் சன்னல் விளிம்பில் அமர்ந்து வானை நோக்கி ஊழ்கத்தில் இருந்ததை நினைவுகூர்கிறேன். அது என்னை பயப்படவில்லை. ஆகவே மிக அருகே சென்று அதை படம்பிடித்தேன். அந்த படத்தை அடிக்கடிப் பார்த்துக்கொள்கிறேன். வாழ்வோ சாவோ அது வானுக்குரியது

ஆனால் வெறும்கூட்டை நிமிர்ந்து பார்க்கும்போது மனம் எடைகொள்கிறது. இந்த பதினெட்டு நாட்களும் ஒவ்வொருநாளும் காலையில் அதைத்தான் பார்ப்பேன். ஒருநாளில் பலமுறை சென்று பார்த்துக்கொண்டிருந்தேன். நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேகத்திற்கும் அதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோல கற்பனை செய்துகொண்டேன். அதைப்போலவே இதுவும் வெறும் உயிர்விசையால் நிகழ்த்தப்படுவது

காலை நடைசென்றபோதுகூட ஓர் ஏக்கம். திரும்பிவரும்போது அது அங்கே இருக்கும் என்று. ஆனால் இல்லை. அதை புரிந்துகொள்ளவும் முடிகிறது.நமக்கு சரியாக சமைக்கப்பட்ட துன்பங்கள் தேவையாகின்றன.இந்த துயரம்தான் உலகியல் என்பது. ஒவ்வொன்றுடனும் நாமே நம்மை இணைத்துக்கொள்கிறோம். அவற்றிலிருந்து துன்பங்களை வேண்டி பெற்றுச் சேர்த்துக்கொள்கிறோம். அரிய மணிபோல துன்பங்களை எடுத்து எடுத்துப் பார்த்துக்கொள்கிறோம். அவற்றின் இனிமையில் திளைக்கிறோம்.

***

முந்தைய கட்டுரைநிறைவு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–71