நிழல்காகம்,ஆகாயம்- கடிதங்கள்

நிழல்காகம்[சிறுகதை]

அன்புள்ள ஜெ

நிழற்காகம் கதையை வாசித்தேன். அந்தக்கதையை நான் மிகமிக தனிப்பட்ட முறையிலேதான் வாசித்தேன். என் வாசிப்பு சரியாக இருக்கும என்று தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஓர் அலுவலகத்தில் வேலைபார்த்தேன். குடும்பச்சூழ்நிலை மிகமோசம். உடம்புசரியில்லாத அம்மா, தம்பிகள். என் வேலைதான் ஆதாரம்.

அதை தெரிந்துகொண்டு ஒருவன் என்னை வற்புறுத்தினான். பலசிக்கல்களில் மாட்டவிட்டான். கடைசியில் நான் வளைந்துகொடுக்கவேண்டியிருந்தது. இல்லாவிட்டால் பட்டினி கிடந்திருப்பேன். ஆனால் அதைவிட உலகம் தெரியவில்லை. தைரியம் இல்லை. நான் அவனுடைய சூழ்ச்சியால் மாட்டிக்கொண்ட சிக்கலால் ஜெயிலுக்கு போயிருக்கவெண்டியிருந்திருக்கும். [அப்படி நினைத்துக்கொண்டேன். இன்றைக்கு என்றால் அந்த ஃபினான்சியல் அனாமலிக்கு அதெல்லாம் நடந்திருக்காது என்று நினைக்கிறேன்]

ஆனால் எல்லாம் நடந்துவிட்டது. அதன்பின் அதிலிருந்து தப்பி விலகினேன். இன்னொருவாழ்க்கை. ஆனால் இந்தகாகம் போல நினைப்பு கொத்திக்கொண்டே இருந்தது. தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக. காக்காயிடமிருந்து தப்பவெ முடியாமல் வீட்டுக்குள் ஒளிந்துகொள்வதுபோல நானும் ஒடுங்கிக்கொண்டேன். இருட்டுஅறைக்குள் இருப்பதுமாதிரித்தான் வாழ்க்கை.

இந்தக்கதை எனக்கு இன்னொரு விஷனை அளித்தது. அந்த காகத்தை நான் பழக்கிக்கொள்ளவேண்டும்.

எஸ்

***

நிழற்காகம்

அன்புள்ள ஜெ,

கதை சொல்லியின் குழப்பத்தைப் போக்குவதற்காகவே நித்யா இந்த அனுபவத்தைக் கூறியிருக்கிறார்.  இறப்பும், பிறப்பும் மற்றெதையும் போல மிகச் சாதாரண நிகழ்வு என உணர்ந்த நித்யாவின் அனுபவம் நமக்கெல்லாம் கூட ஒரு படிப்பினையே.  சலனங்கள் அற்ற ஒரு மனிதன் மிக இயல்பாக நீரில் விழுந்த ஒருவரை மீட்கிறான், அதே இயல்புடன் ஒருவரை நீரில் சரித்து விடுவிக்கிறான்.  பிணத்தின் எரி நெருப்பில் சுட்ட ரொட்டியை எந்த உணர்வும் காட்டாமல் உண்கின்றனர்.  மிகப் பெரும் சாதனையினால் மட்டுமே இந்நிலையை அடைய முடியும்.

இரண்டு நாட்களாகவே தொடர்ந்து இரு இறப்புச் செய்திகள். உடன் பணியாற்றியவர்கள். மனதில் அந்த எண்ணங்களும், அவர்கள் முகங்களும் நிழலாடியபடியே உள்ளன.  சிவம் கதை படித்தவுடன் சிறிது தெளிவு ஏற்பட்டது.  இறப்பு நம் அருகே காத்தபடியே உள்ளது.  இறப்புச் செய்திகளைக் கேட்டவுடன் நாம்செய்யக் கூடுவது என்ன ஜெ?

நன்றி,
நாரா.சிதம்பரம்.

***

ஆகாயம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஆகாயம் கதையை ஒரு இனிய மனநிலையுடன் படித்து முடித்தேன். சினிமாத்துறையில் எல்லாரையும்போல நானும் மிகச்சோர்வாகவே இருந்தேன்.இந்த தருணத்தில் இந்தக் கதைபோல உற்சாகம் அளிக்கும் கதை வேறு இல்லை. வானத்தில் இருந்து என்னுடைய கிரியேட்டிவிட்டி இறங்கி வரும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. வானம் முடிவே இல்லாதது. ஆகவே முடிவில்லாத சாத்தியக்கூறுகள் உடையது

கிரியேட்டிவிட்டிக்கு தடையாக இருப்பது எது? ஒரு விஷயம் புதிதாக இருந்தால் அதுக்கு மதிப்பு. ஆனால் புதிதாக இருந்தால் அதை புரிந்துகொள்ள மாட்டார்கள். புதியவற்றை பயப்படுவார்கள். அதை விசாரணை செய்வார்கள். அதை எப்படி வழிக்கு கொண்டுவருவது என்றுதான் பார்ப்பார்கள். அதை மறுபடியும் டெம்ப்ளேட்டுக்குள் கொண்டு வருவார்கள். அதைமீறி என்ன மிச்சமோ அதுதான் கலை என்று தோன்றிவிட்டது

தன்னுடைய கலையை விளக்கமுடியாத ஊமைதான் கலைஞன். அவனுக்காக பேச ஒருவர் வரவேண்டியிருக்கிறது

ஜெயக்குமார்.எஸ்

***

இனிய ஜெயம்

உண்மையில் நீலன்பிள்ளை வழக்கு நிலையத்துக்குள் நுழைந்ததும் சாத்தப்பன் ஆசாரி அளவே நானும் ஆசுவாசம் அடைந்தேன். பொண்ணுக்கு முத்துக்கு அதற்கும் மேலான ராஜ குமாரனை, பிறந்த குழந்தையை காணிக்கை அளித்து மூத்தாசாரியை கொண்டு வந்த நிலை மாறி, அந்த மூத்த ஆசாரி நிலையில் வாழும் குமரனை கட்டை விரலை வெட்ட சிந்திக்கும் நிலை. எந்தக் காலத்திலும் ஞானத்தை ஆசாரத்தால் புரிந்து கொள்ள முடியாது போலும்.

மெய்மை எனும் பேருணர்வை, அளவை அற்ற ஆகாசத்தை, ஆசாரம் எனும் கிண்ணிக்குள் வைத்து அடைக்கவே மெய்மை அறியா, ஆசாரம் மட்டுமே அறிந்த சீலர்கள் ஒவ்வொரு முறையும் முயல்கிறார்கள். ஆசாரத்தை கடைபிடிக்க முடியும் என்பதால் எவரும் ஆசாரவாதி ஆக முடியும். ஆனால் ஞானம்? புலன்கள் மூடிய குமரனின் அந்த வானம் வந்து அமர்வதை எந்த ஆசாரவாதியால்தான் ஏற்றுக் கொள்ள இயலும்?

சமீபத்தில் ஒரு பேட்டி வாசித்தேன். பழைய நேர்காணல். தார்கோவ்ஸ்கி உடையது. அவர் சூழலால் அவரால் பெரிதும் பெருவெட்டாக பேச முடியா விட்டாலும் அவர் சூழல் அந்த நேர்காணலில் புரிந்து கொள்ள முடிந்தது. அவரது படங்களில் ‘சோசியலிச யதார்த்தம்’ இல்லாதது அவரது தந்தை பூமியை ஆண்ட அரசுக்கு புரியவில்லை. எங்கே அய்யா வர்க்க பேதம்? பாட்டாளிகளுக்கு உன் படத்தால் பயன் என்ன? கேள்வி மேல் கேள்வி. ஆண்ட்ரே ரூபலாவ் வெளியாக தடை விதித்தது ருஷ்ய அரசு. இவன்ஸ் சைல்டுஹூட் துவங்கி தொடர்ந்தது இந்த ஆசாரவாதிகளின் கலை மீதான விசாரணை. விளைவு, தார்கோவ்ஸ்கி ருசியாவிலிருந்தே வெளியேறினார். அவருக்கும் ஒரு நீலன்பிள்ளை கிடைத்திருந்தால், இருவருமே தேசம் நீங்கவேண்டியதாக இருந்திருக்கும்.

இது கேரளம்.  சரியான தர்க்க விளையாட்டு, மிகச் சரியான மிரட்டல் விளையாட்டு, நீலன் பிள்ளை குமாரனை காப்பாற்றி விடுகிறார். நீலன் பிள்ளை ஆகாயத்தை அறிந்தவர்.

கடலூர் சீனு

***

முந்தைய கட்டுரைபுதியகதைகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகவி- கடிதங்கள்