தேனீ [சிறுகதை]
அன்புள்ள ஜெ
தேனீ கதை வந்தபோதே யோசித்தேன் பலபேருடைய தந்தை நினைவு வந்திருக்கும் என்று. என் அப்பாவும் அவரை ஒருமுறை ஆந்திராவில் கனகதுர்க்கா கோயிலுக்கு கொண்டுபோகும்படிச் சொன்னார்
அந்தக்கதையிலுள்ள அழகான அம்சம் தேனில் அளைந்துகொண்டே இருக்கும் தேனீ என்ற கற்பனைதான். தேனிலேயே வாழ்ந்தவர் ஆசாரி. அந்த இனிமையின் ஒரு துளியை தேடுகிறார் அவர் மகன்
செல்வக்குமார் மகேந்திரன்
***
ஜெ
ஒவ்வொரு நாளையும் பார்த்துவிட்டு கதை எழுதுவீர்கள் போலிருக்கிறது. 20th தேதி தேனீக்கள் தினம். இரண்டு கைகளில் அதிலும் விரல்களில் சிலருக்கு தெய்வங்கள் குடியிருப்பாக மாறி விடுகின்றன. மர -நகை ஆசாரிகள், மாணிக்கம் போன்ற வரைதல் தொழில் செய்பவர்கள் போல, பிரதமன் வைப்பவர்கள் போல,…
இந்த ‘குடும்பத்தை காப்பாற்றுதல் – மேலெலுற்றுதல்” எல்லாம் மிக பெரும்பாலும் நமது தந்தையின் தந்தை கால சிகர மனிதர்கள். கடமை எனும் சுழலில் சிக்கி தனியாக வாழ்ந்து விட்டு சென்றவர்களும் உண்டு. எந்த வகை தியாகம் என புரிவது இன்று சிரமம். இந்த ஆசாரி வாழ்வு ஒரு சிறுகதையில் அடங்கி விடுகிறது. ஆனால் இறந்தபின் நீண்டு சென்றபடி.. தன்னலம் மறந்து தன்னை உருக்கி வாழ் நாளின் பெரும்பகுதியை கொடுத்த அந்த உழைப்பை இன்று புரிந்து கொள்ளல் கடினம்.வாழ்நாளை கொடுத்து செய்ததது உணவு, உடை, கல்யாணம் போன்ற வாழ்வின் கடைமைகள் மட்டுமே – சொத்து சேர்த்தல் அல்ல . அவர்கள் ஏன் இப்போது இல்லை ?
செஞ்சு செஞ்சு தீராது. செஞ்சாலும் நிறையாது. அது ஒரு தபஸு. எங்கோ அள்ளி அள்ளி எடுத்திருக்காரு. இப்பிறவியிலே கொடுத்து கொடுத்து கழிச்சாரு
அந்த நகை ஆசாரியின் இடம் அந்த இருக்கை மட்டுமே. பெரும்பாலும் வேலைகள் ஒரு அறைக்குள் முடிந்துவிடக்கூடியதாகவே இருக்கும். எட்டி ஆறு போகா வாழ்வின் ஒட்டம். தொடர்ந்து வரும் கர்மாக்கள். ஆசைகளை வெறுமனே அடக்கி எரித்து விட்டு செல்ல வேண்டிய பிறப்புகள். ஆனால் அந்த சங்கீதம் தான் அவரின் இதம் – ப்ரேமம் – ஆசுவாசம் – வாழ்வின் உயிர். அப்படி ஒன்று இருந்ததால் தான் அவரால் அந்த 3 மணி உறக்கத்தை தாண்டி செல்ல முடிந்து இந்த சிறுகதை .வரை.. உண்மையில் அந்த சந்நிதியில் காற்றில் இருக்கும் அந்த ராகங்கள் இவருக்கு கேட்கும் படியாக இறைவன் அளித்து மோட்ச சாவு கொடுத்து இருப்பான்.
தித்திப்பை நாக்கால் தொட்டு விட்டு, பேசியபடியே சொல்லி விட்டு நகரும் ஒரு பொருள் பொதிந்த வாழ்வின் பதிவு – ஏனேனில் கிட்டியதை ஏற்று , செவ்வனே செய்து விட்டு செல்லும் ஆத்மா
தங்கம் வாங்கி நகை செய்பவர்களுக்கு இருக்கும் கலை நேர்த்தி டிசைன் செய்யும் தகைவு, வேகம் , மற்றும் சொல், செயல், கொடுக்கல் வாங்கல், செய்யும் பொருளின் சுத்தம் , வாக்கு நேர்மை தான் அதன் ஆணி வேர். தங்கம் என்பது தெய்வத்திற்கு அணுக்கம் என்பது போல இந்த ஆசாரிகளின் வீடுகள், திருமண நிச்சயம் முடிந்தவுடன் செல்லும் முதல் இடமாக இருந்தது. இன்று நகை கடைகள் சில சமயம் பாத்திர, கார் கடை என ஆகி விளம்பரம் செய்து, நடிக மக்கள் சிரித்து சொன்னது பத்தாமல் அந்த கடை அதிபர்கள் இந்த நேர்மையை / சுத்ததை கூவி விற்க வேண்டிய போட்டி வணிகம் ஆனது – கால ஒட்டத்திற்கு தங்கமும் குறைவல்ல என நினைத்து கொண்டேன்
அன்புகளுடன்,
லிங்கராஜ்
***
ராஜன் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ராஜன் கதை மீண்டும் ஒரு யானைக்கதை. உங்கள் எழுத்தில் யானையை யானையாகவே கொண்டுவரும் கதைகள் உள்ளன – துளி, ஆனையில்லா போல. யானை ஓர் அடையாளமாகவும் குறியீடாகவும் வரும் கதைகள் உள்ளன. இந்த எல்லாக் கதைகளிலும் யானையை பெரிதாக ஆக்கிவிடுகிறீர்கள். யானையின் உயரம் கொம்பின் அளவு ஆகிய இரண்டைப்பற்றிய குறிப்பும் கொஞ்சம் கூடுதலாகச் சொல்லப்பட்டாலே அது யதார்த்த யானை இல்லை, குறியீட்டு யானை.
இந்த யானையை விவரிக்கவே இல்லை. அதற்கு கம்பீரம் தவிர வேறெந்த இயல்பும் அளிக்கப்படவில்லை. அது வென்றெடுக்கப்படவேண்டிய ஐந்து ஐஸ்வரியங்களில் ஒன்றாக திருவடிவமாக இவர்களால் கருதப்படுகிறது. ஆனால் அதில் பூதத்தான் காண்பது அதற்கு மேலே ஒன்றை.
அந்த வேறுபாடு கதையில் கூர்மையாக சொல்லப் பட்டுள்ளது. மற்றவர்கள் யானையை உரிமைகொண்டாடுகிறார்கள். பூதத்தான் தன்னை யானைக்குக் கொடுக்கிறான். அவனைத்தான் யானை தன்மேல் ஏற்றிக்கொள்கிறது
விஜயகுமார்
***
அன்பு ஜெயமோகனுக்கு வணக்கம்.
நலம்தானே
ராஜன் படித்தேன். தன் மீது எஜமான் எச்சில் சாற்றை உமிழ்ந்தாலும் அது பற்றிக் கவலைப்படாத அடிமை மனம் கொண்டவன் பூதத்தான். அவர் எது சொன்னாலும் அடிபணிபவன். ஆனாலும் ஒரு யானைக்கு நஞ்சு கொடுத்து கொல்லச் சொல்லும்போது மறுக்கிறான். இத்தனைக்கும் கோவிந்தன் நாயர் அதனால் நமக்குப் பாவம் இல்லை.நாம் கட்டாரிகள்தாம்.கொல்பவர் எஜமான்தான் என்றெல்லாம் சொல்கிறான். அதற்கும் பூதத்தான் மசியாதபோது உன் குடும்பமே அழிக்கப்படும் என்றும் பயமுறுத்துகிறான்.
யானையா குடும்பமா என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை. அது கதையில் காட்டப்படவில்லை. ஆனாலும் அவன் மனத்தில் தான் அதைச் செய்யாவிடினும் வேறு யாரையேனும் ஏவிவிட்டு முடிப்பார்கள் என்ற எண்ணம் விழுந்து விடுகிறது.
அவன் கோவிந்தன் நாயரிடம் பேசும் உரையாடலின் மூலம் இதை வாசகர்களைத் தாங்கள் உணர வைக்கிறீர்கள் . யானைக்கெல்லாம் ஓர் உள்ளுணர்வு இருக்கும்.முன்பின் அறியாத பூதத்தான் வரும்போது இவன்தான் தன் பாதுகாவலன் என்று அது உணர்கிறது. என்ன செய்யலாம் என்று அவன் வந்தவுடன் முடிவெடுத்து விடுகிறது.
எப்பொழுதும் யானையின் கண்களில் காடு இருக்கும் என்பார்கள். அது மனிதரை நம்பாமல் தன் பூர்வீக இடமானக் காட்டிற்கே சென்று விடுகிறது. தன் குடும்ப எதிர் காலம் பற்றி எண்ணாமல் இந்த இடத்தை வழங்கிய யானையைக் காப்பாற்றி உயர்ந்து நிற்கிறான்.
வாசகர் ஊகங்களுக்கு அதிக வேலை தரும் அற்புதமான கதை
வளவ. துரையன்
***