கரு,ராஜன்- கடிதங்கள்

நிகோலஸ் ரோரிச்

அன்புள்ள ஜெ

கரு குறுநாவலை இப்போதுதான் வாசித்து முடிக்க முடிந்தது. முதல் வாசிப்பில் அதன் தகவல்களும், ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாத கதாபாத்திரங்களும், நிகழ்வுகள் தனித்தனிச் சரடுகளாகப் போவதும் நாவலை தொகுத்துக்கொள்ள முடியாமல் செய்தன. ஆனால் கதை நிகழும் களம் அற்புதமாக விவரிக்கப்பட்டிருந்தது. ஆகவே கதையில் யூனிட்டியும் இருந்தது

முக்தா சொல்வதுபோல அகத்தேடலை புறத்தே நடத்திக்கொள்வது எளிது. ஏனென்றால் புறவுலகம் பருண்மையானது. ஆகவேதான் பயணம் செய்கிறார்கள். இவாஞ்சலிஸ்டுகளின் மதமாற்றப் பயணம் உண்மையில் ஒரு pilgrim’s progress தான் என்றுதான் சொல்லவேண்டும். மலையில் ஏறி திபெத்தை அடைவது என்பது ஒரு வகையான அகப்பயணம்.

ஆனால் இந்தக்கதையின் வசீகரம் என்பது ஆனி, சூசன்னா எல்லாருமே லாஸாவை வெல்ல நினைக்கிறார்கள். அவர்களுக்கு ஷம்பாலா தெரியவில்லை. அங்கிருந்து உதவிக்கு கை நீண்டு வந்தாலும் பார்க்கமுடியவில்லை

எஸ்.ரவிச்சந்திரன்

***

நிகோலஸ் ரோரிச்

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு

நலம் தொடர்க,

‘கரு’ நாவல் இருவித மனநிலைகளைத் தோற்றுவித்தது.  முதன்மையாக  அதன்  பன்முகப் படிமங்களைத் தாண்டி மனதை ஆக்கிரமித்தது அந்த நிலவெளி தான்.  வரலாறு சார்ந்த நிகழ்ச்சிகளைத் தேடிச்சென்றது  இரண்டாவது.

கதை மனிதர்களும் அவர்களின் உணர்வு எழுச்சிகளும் எதிர் நிலைகளும், வரலாறும் படிமத்தின் மேல் படிமமாக வந்து படிந்தார்கள்,  திபெத்தின் பனி மலைகளைப் போலவே.  மனித உறவுகளின் விசித்திரங்கள் தாண்டி அந்த மாமலைநிலம் அகத்துள் வெறுமை கொண்டு விரிந்தபடியே சென்றது.

” நூறு நிலங்களின் மலை” படிக்கும்போதே  லடாக்கின் நிலவெளியில் மனதைப் பறிகொடுத்திருந்தேன்.  ‘கரு’ நாவலின் அனைத்திற்கும் மேலாக எழுந்ததது அந்த  நிலத்தின் பேருரு. காலம் நகராத ஒருவெளியென்பது தாளமுடியாத ஆனால் அதில் லயிக்க விரும்புகிற  ஒரு வினோத உணர்வு.

தொன்மங்கள் நுண்வடிவாவதென்னும் படிமமே மனதை மயக்குவதாக இருந்தது.  அந்த நுண்வடிவு, திறனுள்ள தொலைநோக்கியின் குவியத்தை சரிசெய்யும் ஒரு கணத்தில் கண்ணருகே காட்டும் காட்சியைப்போன்று தொன்மங்களை அருகில் காணச்செய்வதை உணர முடிந்தது.  நுண்ணுணர்வின் தேடல் கொண்ட மனிதர்கள் தங்களின் அக ஆழத்தில் ஒரு ஷம்பாலாவை தேடிக்கொண்டேயிருப்பார்களென்று தோன்றியது.  அதை தரிசிக்கும் பொழுதில் இருநிலையிலிருந்து விடுவித்துக்கொண்டு ஆத்ம தரிசனத்தில்   ஒளிர அங்கேயே அமைவதும் நிகழக்கூடும்

நூற்றாண்டுகளுக்கு முன், அந்நியர் படையெடுப்பு நிகழாதபொழுதில், தன்னளவில் நிறைவுற்று அறம் சார்ந்து நின்றிருந்தவர்கள் ஒளிர்ந்து  அந்நிலம் முழுவதுமே ஷம்பாலாவாக திகழ்ந்திருக்கக்கூடும்.   அரசைக் கைப்பற்றுதலோ, ஆன்மீகத்தை உடைத்தலோ, மக்களின் கலாச்சாரத்தை ஊடுருவுதலோ என   எவ்வகையிலேனும் ஆட்சி அதிகாரத்தை அடைவெதென்னும் காலனிய மனநிலை ஒரு வகையில் நோயுற்ற தன்மையே.

ரோரிச்சின் வரலாறு ஆச்சரியமூட்டுவதாக இருந்தது.  அவருக்கு ஒரு அருங்காட்சியகம் நியூயார்க்கில் இருப்பதை அறிந்தேன்.   roerich.org    என்ற வலைதளத்தில் கட்டுரைகளும் மயக்கும் கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் பலவும் இருக்கின்றன.  SHAMBALA , THE RESPLENDENT  என்ற கட்டுரை மிக சுவாரஸ்யமாக இருந்தது. லாமாவுக்கும் ரோரிச்சுக்குமான சுவையான உரையாடல்.

அதில் அறம் சார்ந்து நிற்பவராயும், மன்னித்தாலும் அறம்  பிழைத்தோரை தண்டிப்பவராயும்   Rigden – Jyepo    சொல்லப்படுகிறார்.  பனிமலைவெளியில் தன் இருப்பாக வசீகர மணத்தைப் பரப்பி வழிகாட்டுகிறார்.    இதில் வரும் ஒரு வரி ” அபூர்வங்கள் அதிகம் பேசப்படக்கூடாது”.  ஆனால் அது அபூர்வமாக இருப்பதாலேயே அதிகம் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. சியமந்த மணியுடன் மேற்கில் திகழும்   இளமையை மீட்கும் LAPIS EXILIS அருமணியுடன் ஒரு ஒப்பிடல் இருந்தது. மேற்கின் தொன்மம்.

Humanity does not know the significance and the definite effect of auras; they do not realize that not only human beings, but even inanimate objects, have their significant and effectual auras.”    என்று ஒரு வரி வருகிறது.   இதை ‘கரு’வின் கடைசி வரிகளான  “ இந்த ஒவ்வொரு அசைவுக்கும் பொருள் உண்டு என்றால், இந்த ஒவ்வொரு மழைத்துளிக்கும் இலக்கு உண்டு என்றால் நான் என்னுள் ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த தர்க்கத்திற்கு என்னதான் பொருள் என்னும் எண்ணம் என்னுள் எழுந்து சாவை கண்முன் கண்டதுபோல மெய்சிலிர்ப்பு கொள்ள செய்தது”  இதனுடன் ஒப்புநோக்கத் தோன்றியது\

“இந்தப் பனிவெளியில் நான் இறந்தால் உண்மையில் ஷம்பாலாவுக்குச் செல்லவே விரும்புவேன்.”

“ஏசுவிடம் செல்ல விரும்ப மாட்டாயா?”

“பேட், ஏசு அங்கேதான் இருப்பார்.”

இந்த வரிகள்  அனைத்து மெய்ஞானத் தேடல்களும் தமக்குள்ளே ஒரு ஷம்பாலாவை உருவகித்துச் செல்கின்றன  என்றும்  ஒளிவடிவில் பேதமின்றி திகழ்கின்றன என்பதையும் ஒரு உரையாடலில் சொல்லிச்சென்றது அருமை.

“ வாழ்பவர்கள் அங்கே செல்லமுடியாது. ஏனென்றால் ஒவ்வொரு கணத்திலும் அவர்கள் முந்தைய கணம்வரை செய்த செயல்களின் தொடர்ச்சியில் இருக்கிறார்கள். அடுத்த கணத்தில் செய்யவேண்டிய செயல்களின் தொடக்கத்தில் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு அந்த இரு காலங்களில் இருந்தும் விடுதலை இல்லை.” –  உண்மைதான்.  ஆனால் ஆழ்மனதளவில் ஷம்பாலாவை உருவகித்துக்கொண்டிருப்பவர்களுக்குஅதன் உள்ளார்ந்த தேடல் சற்றேனும் இந்த உலகியலிலிருந்து விடுதலையளிக்கக்கூடும்.

சொல்லற்று மனதில் விரிந்திருந்த அப்பெருநிலத்தை நினைவில் கொண்டபடியே வெளியில் வந்தேன்.  ஊரடங்கினால்  சாலைகளில் வாகனங்கள் குறைந்திருந்தாலும் காங்க்ரீட் கட்டிடங்களின் குவியல்களுக்கு மத்தியில் சென்றது, ரைஸ் மில்லின் வெற்று சக்கரங்களின் க்ரீச்சிடல் போல் ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்தியது.

வாசிப்பினூடே நிகழ்ந்த தேடல்களுக்கு நன்றி

நா. சந்திரசேகரன்

***

அன்புள்ள ஜெ

பூதத்தான் நாயரின் ஒரு நாள். புழுவிலிருந்து சிறகு முளைத்து பட்டாம்பூச்சி ஆவது வரை. பட்டாம்பூச்சி எந்த கூட்டை உடைக்கிறது? அதுவே கட்டிக்கொள்வதைத்தானே? பூதத்தான் உடைப்பதும் அதுவே. அதை உள்ளிருந்தே உடைக்கமுடியும்.

பூதத்தான் யானையைக் கொல்வது என்ற ஒருநிலை வந்தபோதுதான் தன்னை உணர்கிறான். தன்னை தொகுத்துக்கொள்கிறான். அவன் செய்யும் அந்தப் பயணம் முக்கியமானது. அது அவன் தான் என நினைத்த அனைத்தையும் உதறிச் செல்லும் பயணம். திசைதிரும்புதலே அற்றது. நேராக யானையைச் சென்று சேர்கிறான். யானைமேல் ஏறிவிடுகிறான்

அருண் மாதவ்

***

அன்பு ஜெ,

’யானைக்குள் எப்பொழுதும் ஒரு காடு இருக்கிறது’ என்று பல்வேறு தருணங்களில், நாவல்களில் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்குள் ஓர் யானை எப்பொழுதும் இருந்து கொண்டே இருப்பதாக நான் பார்க்கிறேன் ஜெ. “அருகம்புல் முளைக்கிற இடம் மக்களுக்கானது. யானைப்புள் முளைக்கிற இடம் யனைக்கு”, என்று பிரித்தே கொடுத்தாலும், இன்று மனிதன் அதையெல்லாம் கடைபிடிப்பதாய்த் தெரியவில்லை.இன்று யானைக்கான காடு குறுகிக் கொண்டே இருப்பதாகத் தெரிகிறது.”ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுச்சாம்” என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. ஒண்ட  இடம் கேட்டு இறுதியில்  பர்வதத்தின்  ராஜனையே அடிமையாக்கிவிட்டோமே.

“ஆனைக்க நாடு இது… நான் இங்க இவருக்க அடிமை, ராஜாவுக்க படை. ஆனா ஆனைக்க பிரஜையாக்கும்”  என்று சொல்லும்போது கலங்கித்தான் விட்டிருந்தேன். பர்வத ராஜன் கட்டுடைத்து காட்டிற்குள் செல்லும் போது பூதத்தான் தன் அடிமையென்னும் சங்கிலையைக் கட்டுடைத்து காட்டிற்குள் சென்றுவிட்டதாகப்பட்டது. பூதத்தான் தன் மேல் எச்சில் துப்பும் போதும், தன்னை அடிமையாய் நடத்தும் போதும் கட்டுடைத்திருக்கவில்லை. மாறாக தன் மரபின் வேரில் கையை வைக்கும்போது திமிரி எழுகிறான். அவனுக்குள் இருக்கும் மொத்த ஆற்றலும் பொங்கி வழிந்ததாக, தான் யார் என்று உணர்ந்தவனாக இந்நாடு  நமக்கு  வேண்டாம்  ராஜாவே,  இந்த மண்ணு  வேண்டாம் ராஜாவே! “ என்று கதறிவிட்டான் எனப்பட்டது ஜெ. மண்ணுக்குரிய பூதத்தானும், மேற்கு பர்வதங்களின் இந்த கஜராஜனும் திமிரி எழும்போது  குனிந்து வணங்கியவர்களைக் கண்டு செருக்கு ஏற்பட்டது என்னுள். அடிமையாயிருப்பவர்கள் தங்களை  கட்டுடைத்துக் கொள்ளும் போது என்னில் பொங்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை ஜெ.

சாதிகளின் அப்பட்டங்களை அதைப் பற்றி பேசாமல் சொல்வது கடினம். தேனீ கதையிலுங்கூட சண்முகம் தன் சாதிப்பெயரைச் சொல்வதோடு பூடகமாக நாரயணனின் சாதிபெயரை கேட்க விழைந்ததை சுட்டிக் காட்டியிருந்தீர்கள்.

“சொல்லாவிட்டால் செத்துவிடுவார் என்று தோன்றியது” என்று நாரயணன் சொல்வது போல பகடி செய்திருந்தீர்கள். சாதி என்ற ஒன்று சமூகத்தில் இப்படித்தானிருக்கிறது. அதைப் பற்றி பேசாமல் அதன் அப்பட்டங்களை எப்படிக் காணிப்பது?  எனக்கு பரியேரும் பெருமாள் ஞாபகம் வந்தது ஜெ. சாதியின் கொடுமைகளை அப்பட்டமாகக் காணிக்காமல்  அதன் கோரத்தை எடுத்தியம்பாமல், அவர்களை குற்ற உணர்ச்சிக்கு ஆட்படுத்தாமல் இதை அழிக்க முடியாது. பலிக்கல் கதையிலுள்ள பிரச்சனையும், ராஜன் கதையிலுள்ள பிரச்சனையும் அப்படி எடுத்தியம்பப்பட்ட பிரச்சனை. இது  சமூகத்தில் அதிகார வர்க்கத்திடம்  நாம் கேட்க வேண்டிய  கேள்விகளை  நாமே  முன் வைக்க நம்மைத் தூண்டுகிறது.

”கேரளத்து மண்ணை பரசுராமனாக்கும் மழு எறிஞ்சு உண்டாக்கினது” இந்தத் தொன்மக் கதையை பல இடங்களில் நீங்கள் சொல்லியிருப்பீர்கள். புவியியலிலும் கூட மேற்குத்தொடர்ச்சிமலை உண்மையான மலை இல்லை எனவும், இந்தியக் கண்டத்தட்டு சற்று கிழக்கு நோக்கி சாய்ந்ததால், கடல் பின் நகர்ந்து உண்டான ஓர் தோற்றமென்றே படித்திருக்கிறேன். உண்மையில் பரசுராமன் மழு எறிந்தாரா என்பதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு தொன்மத்தின் வழி எப்படி புவியியல் வரலாறு கடத்தப்பட்டிருக்கிறது என்றே ஆச்சரியப்பட்டேன் ஜெ. நெகிழ்ச்சியான கதை.நன்றி ஜெ.

அன்புடன்

இரம்யா.

***

முந்தைய கட்டுரைதேனீ,நிழல்காகம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைகள் கடிதங்கள்