‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–70

பகுதி ஆறு : படைப்புல் – 14

தந்தையே, அந்த ஒரு நாள் ஊழின் தருணம். அது ஒரு எண்ணமாக எவ்வாறு தொடங்கியது, பலநூறு செயல்களினூடாக எவ்வாறு ஒருங்கிணைந்தது, பல்லாயிரம் பேரினூடாக எவ்வண்ணம் தன்னை நிகழ்த்திக்கொண்டது என்று துளித்துளியாக என்னால் நினைவுகூர இயல்கிறது. ஆனால் அதன் உச்சம் இவ்வண்ணம் நிகழ்ந்தது என்பதை எத்தனை எண்ணியும் என்னால் இன்றும் நினைவுகூர இயலவில்லை.

எண்ணி நெஞ்சு நடுங்கும் ஓர் நாள். என் நாவினூடாக வரும் தலைமுறைகளுக்கு செல்லவேண்டிய ஒரு நாள். எனினும் என்னால் அக்கணத்தை சென்றடைய முடியவில்லை. இத்தனைக்கும் நான் அதிலிருந்தேன். அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தேன். எதையும் நிகழ்த்தவில்லை என்பதனால் நான் அனைத்தையும் எண்ணிக்கோத்து எடுக்க வாய்ப்புள்ளவன். ஒருவேளை அதன்பொருட்டே விட்டுவைக்கப்பட்டவன்.

இத்தனை முயற்சிகளுக்குப்பின் இப்போது தெளிவடைந்திருக்கிறேன் எனினும் அத்தருணத்தை என்னால் மிகச் சரியாக கூறிவிட இயலாது. ஏனெனில் அத்தகைய தருணங்களை எவராலும் சென்றடைய இயலாது. கண்ணெதிரே நிகழ்ந்தாலும் அறிய முடியாதென ஊழ் நம்முடன் மாயம் காட்டி விளையாடும் உச்சத் தருணங்களில் ஒன்று அது. தந்தையே, ஒருவகையில் அனைத்துத் தருணங்களும் அப்படித்தானோ? இங்கு நிகழும் அனைத்து கணங்களும் விதியின் திருப்புமுனைத் தருணங்கள்தானோ?

நெஞ்சம் மலைக்கிறது. சொற்கள் வெற்றொலிகளென மாறிச் சூழ்கின்றன. அனைத்தையும் உதறி மானுடர் கரைக்க இயலாத சொல்லின்மைகளுக்குச் செல்லும் அந்த ஆழ்ந்த பாதை என்ன என்று இப்போது தெரிகிறது. நான் நின்றிருப்பது இருண்ட குகை ஒன்றின் தொடக்கம். ஒற்றை அடியில் அவ்விளிம்பில் நின்றிருக்கிறேன். ஒரு சிறு நிலைகுலைவு போதும், அதற்குள் சென்றுவிடுவேன். மொழியை முற்றாக இழந்துவிடுவேன். சொல்லின்மையின் இருளுக்குள், அதன் ஆழத்திற்குள், அடியிலிக்குள் சென்று கொண்டிருப்பேன். அது யோகியரும் முனிவரும் சென்றடையும் சொல்லின்மையின் எண்புறமும் திறந்த பெருவெளி அல்ல. சொல்லின்மை தவிப்புகள் என மாறி எண்புறமும் அழுத்தும் எடைமிக்க சிறு கடலடிக்கூடு.

அன்று உண்டாட்டும் மதுக்களியாட்டும் இயல்பாக நிகழ்ந்து உச்சம் கொண்டன. நானும் உண்டேன், மகிழ்ந்தேன், களியாடினேன். பெண்டிருடன் நடனமாடினேன், பல கன்னியருடன் காமத்திலாடினேன். உடல் களைத்து உள்ளம் சோர்ந்து மீண்டு வந்து மணற்கரையில் படுத்தபோது இன்னும் இன்னும் என எழுந்தேன். மீண்டும் சலித்தேன். நிறைகையில் சலிக்கவும் சலிக்கையில் மீளவும் செய்து மானுடனை ஆட்டுவிக்கின்றன விழைவுகள். அந்தியில் அதன் எல்லை கண்டேன். மீண்டும் அரசவையை ஒட்டி நாணலால் அமைக்கப்பட்டிருந்த எண்கோண வடிவுகொண்ட கூத்தம்பலத்திற்கு மீண்டேன்.

அங்கே நான்கு இளிவரல் சூதர்கள் என் முன் நகையாட்டு நாடகம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன் கையில் மதுக் கலங்களுடன் சாத்யகியும் கிருதவர்மனும் தோள் தொட்டு அமர்ந்திருந்தனர். சற்று அப்பால் ஆடை கலைந்து பரவியிருக்க, தலைமயிர் குலைந்து முகத்தில் விழ, மூக்கினூடாக கள் வழிய, கைகளை பின்னால் ஊன்றி ஃபானு பொருளின்றி சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். நேர் எதிர்ப்புறம் பிரத்யும்னன் பேசிச் சிரித்து தொடையிலறைந்து கூச்சலிட்டபடி இருந்தார். சாம்பன் அங்கில்லை என்பதை கண்டேன். உடன்பிறந்தார் எவரெவர் என்று அறியக்கூடவில்லை. அத்தனைபேரும் களியாடிச் சலித்துவிட்டிருந்தார்கள். களைப்பும் சலிப்பும் நிறைவும் ஒன்றே என ஆன ஓய்ந்த நிலை.

அவையில் யாதவர்கள் வந்தும் எழுந்தும் சென்றுகொண்டிருந்தார்கள். இளிவரல் நாடகத்தை எவரும் அறிவதுபோல் தெரியவில்லை. இளிவரல் சூதர்களோ அவர்களுக்கே என அதை நடித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் பேச்சுக்குரல்கள் செவியில் விழவில்லை. ஆனால் அதிலொன்று செவியில் விழுந்ததும் மொத்தச் சொல்லடுக்குகளும் கேட்கத் தொடங்கின. அப்போதுதான் உணர்ந்தேன், அவர்கள் சியமந்தக மணியைப்பற்றி நடித்துக்கொண்டிருந்தனர். நான் அதை கண்டதில்லை. அதைப்பற்றிய கதைகளை கேட்டிருந்தேன். அந்தகர் மேல் விருஷ்ணிகளின் வெற்றியாகவும் விருஷ்ணிகளும் அந்தகர்களும் கொண்ட இணைப்பாகவும் அதை விளக்கும் பாடல்களும் கூத்துக்களும் பல உண்டு.

அங்கே அதை இகழ்ந்து களியாடி நடித்தனர். சியமந்தக மணி உண்மையில் மணியே அல்ல. அது பீதர்நாட்டு செந்நிற மதுப்புட்டி ஒன்று விழுந்து உடைந்ததன் துண்டு. ஒரு வணிகன் அதை சிறிய கழியொன்றில் பொருத்தி வைத்திருந்தான். முதுகு அரிக்கும்போது அதைக்கொண்டு சொறிந்துகொண்டான். அவன் யாதவ நிலம் வழியாகச் சென்றபோது அது கழியிலிருந்து உதிர்ந்து கிடந்தது.

கன்றோட்டும் யாதவர்கள் அப்படி ஒன்றை அதற்கு முன் கண்டதில்லை. ஆகவே அவர்கள் அதை சூழ்ந்துகொண்டனர். அதை எடுத்து கூர்ந்து பார்த்தனர். அது ஒரு மலர் என்று ஒருவன் சொன்னான். இல்லை அனல் என்றான் ஒருவன். அதை கொண்டு சென்று சருகில் வைத்து ஊதிஊதி பற்றவைக்கப் பார்த்தார்கள். அது ஒரு விழி என்று ஒருவன் கூற அதற்கு முன் நின்று வெவ்வேறு வகையில் நடித்துப் பார்த்தார்கள். இளித்தனர், சொறிந்துகொண்டனர், குதித்தனர், மிரட்டினர். அதை ஒருவன் துளி நீரென்று கூற ஒருவன் அதை விழுங்க முற்பட்டான். அது உயிரினம் என்று கூற அதை குச்சிகளால் குத்தி கிளப்ப முயன்றார்கள். ஒரு துளிக் குருதி என்று காட்ட நாய்க்கு முன் காட்டி அதை மோப்பம் பிடிக்கச் சொன்னார்கள்.

அந்த ஒவ்வொன்றையும் அவர்கள் செய்து காட்ட கூடிநின்றவர்கள் சிரித்து கூத்தாடினர். இறுதியில் அதை தங்கள் அரசரும் அந்தகக் குடித்தலைவரும் சத்யபாமையின் தந்தையுமான சத்ராஜித்துக்கு கொண்டுசென்று பரிசாகக் கொடுத்தனர். அவர் அதைக் கண்டதும் பாய்ந்து அஞ்சி அரியணை மேல் ஏறிக்கொண்டார். அவர் இளையோனாகிய பிரசேனன் அதை எடுத்து கூர்ந்து பார்த்தார். அதன்மேல் சற்று உப்பைத் தடவி வாயிலிட்டு மென்று பார்த்தபின் சுவையாக இல்லை என்று சத்ராஜித்திடம் சொன்னார். அவர் அதை தான் வாங்கி தேன் சேர்த்து வாயிலிட்டு சற்றே சுவையாக இருக்கிறது என்றார். அவையிலிருந்த ஒவ்வொருவரும் சுவைத்துப் பார்த்தனர்.

பின்னர் அவர்கள் சத்யபாமையை வரச்சொல்லி அது என்ன என்று கேட்டனர். சத்யபாமை அதைக் கண்டு திகைத்தாள். அதன்பின் அது ஓர் அருமணி என்றும், சூரியன் தன் மார்பில் அணிந்திருந்தது என்றும், வானில் உலா சென்றபோது அது உதிர்ந்து மண்ணில் கிடந்தது என்றும் சொன்னாள். அதை சத்ராஜித் தன் மார்பில் அணியலாம் என்றாள். மார்பில் எவ்வாறு அணிவது என்று எண்ணி குழம்பினார்கள். அதன்பிறகு அரசர் அதை கன்றின் நெற்றியில் கட்டும் கயிற்றில் கட்டி தன் மார்பில் அணிந்துகொண்டார்.

ஆனால் அவர் படுத்துக்கொண்டிருந்தபோது அரச மருத்துவர் அதை ஒரு குருதிப்புண்ணென்று எண்ணி அதன்மேல் மருந்து பூசினார். அரண்மனைப் பெண்டிர் அது அரசரின் கண் என்று எண்ணி ஒரு கையால் அவர் கண்களையும் மறுகையால் அதையும் மூடிய பின்னரே அவருடன் கூடினார்கள். இளிவரல் முதிர்ந்துகொண்டே இருக்க கூடியிருந்தவர்கள் சிரித்துக் குழைந்தனர். ஒருவரை ஒருவர் தோளில் அறைந்துகொண்டு கூச்சலிட்டு நகைத்தனர். அதை அரசர் தன் காதல்கிழத்தி ஒருத்திக்கு அளித்தார். அது பெண்ணுறுப்பென்று எண்ணி பிரசேனன் அதை புணர முயன்றார். அதை நடித்தபோது கிருதவர்மன் சிரித்தபடி எழுந்து ஓடிவிட்டார். சாத்யகி ஓடிச்சென்று அவரைப் பிடித்து சுழற்றிக்கொண்டுவந்து மணலில்விட்டார்.

பின்னர் அந்த மணிக்கான பூசல் தொடங்கியது. அந்த மணி தனக்குத் தேவை என்று சூரசேனர் தன் பெயர்மைந்தர் பலராமனையும் கிருஷ்ணனையும் தூதனுப்பினார். தரமுடியாது, அதன்பொருட்டு அந்தகக் குடியே உயிர்விட ஒருக்கமாக இருப்பதாக சத்ராஜித் சொன்னார். அந்த அருமணியை கையில் வைத்திருப்பவரை எவராலும் கொல்லமுடியாது என்றார் சத்ராஜித். அதை நம்பிய பிரசேனன் அதை அணிந்துகொண்டு காட்டுக்குச் சென்று அங்கிருந்த சிம்மம் ஒன்றின் பிடரி மயிரை பிடித்து உலுக்கினார். அது அவரை அடித்துக் கொன்றது.

அந்த சிம்மத்தின் வாயிலிருந்து சியமந்தகத்தை ஜாம்பவான் கொண்டுசென்றார். அதை அவர் தன் மகளிடம் அளித்தார். அவள் அதை வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். அவ்வழியாகச் சென்ற இளைய யாதவர் அதை பார்த்தார். அந்த அருமணியை பெறவிரும்பி விலைபேசினார். தன் மகளை மணந்தால் அதை தருகிறேன் என்றார் ஜாம்பவான். கரடிபோல மரத்தின் மேல் இருந்த பெண்ணைப் பார்த்து அஞ்சினாலும் சியமந்தகத்திற்காக இளைய யாதவர் அவளை மணந்துகொண்டார்.

இளிவரல் நாடகங்களுக்கு ஓர் இயல்புண்டு. அவை சிரித்து ஊக்கும்தோறும் அதன் நிலை கீழிறங்கும். எப்போதுமே இழிந்த நகையாடலுக்கு மிகுதியான சிரிப்பு எழும். நடிக்கும் சூதரோ அந்நாடகம் தொடங்கியதுமே அரங்கிலிருப்பவர்களுடன் ஒரு உரையாடலை தொடுத்துவிட்டிருப்பார். பிற கூத்தும் ஆட்டமும் பெரும்பாலும் மேடையில் முழு இசைவு கொண்ட உடனேயே அரங்கினரிடமிருந்து விலகி தங்களுக்கென ஓர் உலகை உருவாக்கிக்கொள்ளும். அவ்வடிவின் முழுமைக்காகவே அவை முயலும். வாழ்விலிருந்து எடுத்த ஒரு கட்டமைப்பை திருப்பித் திருப்பி சீரமைத்துக்கொண்டே செல்லும். ஆனால் இளிவரல் நாடகம் மட்டும் மேலும் மேலும் அரங்கினரை நோக்கி வரும். அரங்கினருக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டே செல்லும்.

அன்று அரங்கிலிருந்த அனைவருமே கள்வெறி கொண்டிருந்தனர். சிரித்துக் களியாடி தங்கள் தயக்கங்களையும் விலக்கங்களையும் களைந்துவிட்டிருந்தனர். உள்ளத்தின் முதல் திரையை விலக்கியதுமே கீழ்மைதான் வெளித்தெரிகிறது. மேலும் பல திரைகளை விலக்கிய பின்னரே மேன்மை எழுகிறது. எனவே அங்கு அரங்கினர் கொண்டிருந்தது அவர்கள் தலைமுறைகளாகச் சேர்த்து பேணிக்கொண்ட கீழ்மையும் சிறுமையும்தான். ஒருவரை ஒருவர் சீண்டி இழிவுபடுத்தி அடித்து துரத்திப் பிடித்து மண்ணில் உருட்டி விளையாடிக்கொண்டிருந்தனர்.

அவர்களிடமிருந்து எழுந்து ஆடியிலென நிகழ்ந்து அந்தச் சிறுமை சூதரில் பல மடங்காகப் பெருகி அவர்களிடம் திரும்பி வந்தது. அவர்கள் அன்று உளவிழிப்புள்ள உள்ளங்களுக்கு முன் சொன்னால் ஓரிரு சொற்களுக்குள்ளேயே உடைவாள் உருவி கழுத்தை வெட்டி வீசத்தக்க கீழ்சொற்களை நாணமில்லாது உரைத்தனர். அவை ஒவ்வொன்றும் அனைவராலும் மகிழ்ந்து கொண்டாடப்பட்டன. ஒவ்வொன்றுக்கும் களிப்பேறிய கூச்சலும் பாராட்டும் எழுந்தன.

சியமந்தக மணியை விரும்பி சிசுபாலன் அங்கு வந்ததை அவர்கள் நடித்தனர். வெண்குடையும் சாமரமுமாக அணிப்படகில் வந்திறங்கிய சிசுபாலன் சத்ராஜித்தாலும் கூட்டத்தினராலும் அழைக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டான். “எங்கள் அரண்மனைக்கு நல்வரவு” என்றார் சத்ராஜித். அரசனின் அரண்மனை ஒருவர் உள்ளே சென்றால் ஒருவர் வெளியே வரவேண்டிய புற்குடிலாக இருந்தது. அதன் திண்ணையில் பசுவை கட்டியிருந்தார்கள். “சற்று பொறுங்கள், அரசே” என்று சொல்லிவிட்டு பசுவை வெளியே கொண்டுவந்து சிசுபாலனை உள்ளே அமர வைத்தார்கள்.

பெருங்குவளையில் அவருக்கு கறந்த பாலை கொண்டுவந்தனர். “வருபவர்களுக்கு பால் அருந்தக் கொடுப்பதில் நாங்கள் எந்தக் கணக்கும் பார்ப்பதில்லை. ஏனெனில் ஒருநாள் புளித்த பாலை எப்படியும் வெளியேதானே வீசப்போகிறோம்” என்று சத்ராஜித் சொன்னார். பெண்ணை பார்க்க விரும்புவதாக சிசுபாலனின் அமைச்சர் சொன்னார். “இளவரசியை அழைத்து வாருங்கள்!” என்று சத்ராஜித் ஆணையிட்டார். ஆனால் இளவரசி மாட்டுத் தொழுவத்தில் சாணி வழித்துக்கொண்டிருந்தாள். முழங்கை வரை சாணியுடன் வந்து கைகூப்பி நின்றாள். சிசுபாலன் வாயுமிழ்ந்து கண்கலங்கினான். மயங்கி விழுந்த அவன் முகத்தில் பசுவின் சிறுநீர் தெளித்து எழுப்பினார்கள். அந்தக் கெடுமணத்தில் மீண்டும் வாயுமிழ்ந்து அவன் மயக்கமடைந்தான்.

பின்னர் சததன்வா அங்கு வந்து அந்த மணி தனக்கு வேண்டும் என்று கேட்டான். அதை அளிப்பதாக இருந்தால் சத்யபாமையை மணம்புரிய ஒருக்கம் என்றான். அது தன்னிடம் இல்லை என்றார் சத்ராஜித். அதை அறியாமல் கிருதவர்மனும் சததன்வாவும் அந்த மணிக்காக பூசலிட்டனர். நடுவே இளைய யாதவர் வந்து சத்யபாமையையும் மணந்துகொண்டார். சியமந்தகத்தை தலையில் சூடி அவையில் கொலுவீற்றிருந்தார். அந்த அவைக்கு வந்த பீதர்நாட்டு வணிகர்கள் சியமந்தகத்தைக் கண்டு திகைத்தனர். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஒருவன் சிரிக்கத் தொடங்க இன்னொருவன் மேலும் வெடித்துச் சிரித்தான்.

சததன்வா துவாரகையில் இருந்து அந்த மணியை திருடிக்கொண்டு ஓடினான். அவனைத் துரத்தி இளைய யாதவர் சென்றார். கிருதவர்மனும் சததன்வாவும் இளைய யாதவரும் அந்த மணிக்காக பூசலிட்டனர். சததன்வா தோற்று அந்த மணியை திருப்பி இளைய யாதவரிடம் கொடுத்துவிடுவதாக சொன்னான். கொடு என்று சொல்லி இளைய யாதவர் கைநீட்டினார். கிருதவர்மன் கண்ணீர்விட்டு கதறி அழுது தன் குடியின் அருமணியை அளிப்பதை எண்ணி புலம்பினான். இந்திரனும் வருணனும் எமனும் குபேரனும் அதன்பொருட்டு ஏழு முறை அந்தகக் குடியுடன் போருக்கு வந்திருக்கிறார்கள் என்றான். அதை அளித்த பின்னர் முத்தை இழந்த சிப்பி போலாகும் யாதவர் குடி என்றான்.

“அதை அளிக்காவிடில் இக்கணமே உன் தலையை வெட்டுவேன்!” என்று ஆழியை எடுத்தார் இளைய யாதவர். தன் இடையிலிருந்து ஒரு பட்டுத் துணியை எடுத்து அதை விரித்து இளைய யாதவர் முன் வைத்து கைநடுங்கி நின்றான் சததன்வா. குனிந்து அந்தக் கல்லைப் பார்த்த இளைய யாதவர் திகைத்து சாத்யகியிடம் “இது என்ன?” என்றார். சாத்யகி அதை கையில் எடுத்துப் பார்த்து “நானும் இதை இப்போதுதான் கூர்ந்து பார்க்கிறேன். இது ஏதோ பீதர்நாட்டுப் பொருள்” என்றான். இளைய யாதவர் தன் படையில் இருந்த ஒரு பீதனிடம் இது என்ன என்றார். “இது மதுப்புட்டி உடைந்த துண்டு” என்று அவன் சொன்னான்.

இளைய யாதவர் சீற்றத்துடன் “இதையா சியமந்தகம் என்றீர்கள்?” என்றார். “ஆம் இளைய யாதவனே, இதுதான் சியமந்தகம் என எங்கள் தலைமுறைகளை ஆட்டிவைக்கும் அருமணி” என்றான் சததன்வா. “அறிவிலி, இதன் பொருட்டா என்னை துவாரகையிலிருந்து இத்தனை தொலைவுக்கு படைகொண்டுவரச் சொன்னாய்?” என்று கூவி ஆழியை எடுத்து சததன்வாவின் தலையை சீவினார் இளைய யாதவர். சததன்வா கீழே விழுந்ததுமே கிருதவர்மன் கைகூப்பி “நான் ஒரு சொல்லளிக்கிறேன்! நான் ஒரு சொல்லளிக்கிறேன்!” என்றான்.

“இது ஏதோ வணிகனின் கோலிலிருந்து விழுந்தது என்று நான் எங்கும் சொல்லமாட்டேன். இதை அருமணி என்றே சொல்வேன். எஞ்சிய வாழ்நாள் முழுக்க இதை கவர்வதற்காக வஞ்சினம் கொண்டு காத்திருப்பேன். இதன்பொருட்டு பகை நோற்பேன்” என்று கிருதவர்மன் கதறினான். சாத்யகி “எனில் நீ எஞ்சிய வாழ்நாள் முழுக்க இந்த மணியை உன்னிடம் இருந்து கவர்ந்ததன் பொருட்டு போர்புரிய வேண்டும். எவர் கேட்டாலும் எங்கள் குலத்து அருமணிக்காகவே இப்போர் நிகழ்கிறது என்று சொல்லவேண்டும்” என்றான். “சொல்கிறேன்! சொல்கிறேன்!” என்று கிருதவர்மன் கூறினான். “பகை நோற்கிறேன்! வஞ்சினம் கொள்கிறேன்!”

“நன்று, எனில் நீ பிழைப்பாய்” என்று சாத்யகி கூறினான். இளைய யாதவர் “இந்த அருமணியை இக்கணமே தூக்கி எங்காவது போட்டுவிடுங்கள். இதைப்பற்றி கவிஞர்களைக்கொண்டு பாடல் புனைய வைப்போம். அப்பாடல்களில் எல்லாம் மணியை இழந்த வஞ்சத்துடன் எரிந்துகொண்டிருக்கும் மாவீரனாக இவனை காட்டுவோம். நாம் பெரும்படைகொண்டு இத்தனை தொலைவுக்கு இதை துரத்தி வந்த சிறுமையை அவ்வாறன்றி மறைக்க இயலாது” என்றார்.

“அன்றி இம்மணி எவர் கையிலேனும் சிக்கினால், இங்கு நிகழ்ந்ததென்ன என்று எவரேனும் அறிந்தால் பாரதவர்ஷத்தில் அரசர்கள் நம்மை எள்ளி நகையாடுவார்கள். அவர்கள் தங்களிடம் வைத்திருக்கும் கூழாங்கற்களுக்கெல்லாம் யாதவ மணி என்று பெயரிடுவார்கள்” என்றார் அக்ரூரர். ”ஆம், நான் எஞ்சிய வாழ்நாளெல்லாம் இனி இம்மணியை இழந்தமைக்காக வஞ்சம் கொண்டாடுவேன், இது உறுதி!” என்றான் கிருதவர்மன். “அவ்வாறே ஆகுக!” என்றபின் “ஓடு” என்று கைகாட்டினார் இளைய யாதவர்.

கிருதவர்மன் அங்கிருந்து கிளம்பி அப்பால் சென்று “யாதவனே, இந்திரனும் விரும்பும் விண்ணளந்தோன் நெஞ்சில் அமைந்திருப்பதற்கு தகுதி கொண்ட அருமணியை எங்கள் குலத்திலிருந்து பறித்தாய். இதன்பொருட்டு உன்னை பழி கொள்வோம். இது உறுதி! இது உறுதி!” என்று வஞ்சினம் உரைத்துவிட்டு தப்பி ஓடினான். அருமணியை எடுத்து தன் மடியில் வைத்தபின் இளைய யாதவரும் சாத்யகியும் நடனமாடிக்கொண்டு துவாரகை திரும்பினார்கள்.

சூழ்ந்திருந்த ஒவ்வொருவரும் சிரித்துக்கொண்டிருந்தனர். களிவெறியில் தன்னை மறந்திருந்த ஃபானுவுக்கு அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்று புரியவில்லை. “ஏன் சிரிக்கிறீர்கள்? என்ன ஆயிற்று? ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று மாறி மாறி கேட்டுக்கொண்டிருந்தார். பிரத்யும்னன் “நல்ல நாடகம். இவனுக்கு நான் இன்னொரு மொந்தை கள் அளிப்பேன்” என்றார். “எங்கே? இன்னொரு மொந்தை கள் கொண்டு வருக!” என்று கூவினார். கிருதவர்மன் சலிப்பும் எரிச்சலும்கொண்ட முகத்துடன் இருப்பதாகத் தோன்றியது.

ஆனால் சாத்யகி இரு கைகளையும் பின்னால் ஊன்றி உரக்க நகைத்துக்கொண்டிருந்தார். கிருதவர்மனும் சற்றே தயக்கத்துடன் அவருடன் இணைந்து நகைத்தார். சாத்யகி கண்களில் வழிந்த நீரை துடைத்த பின் “ஆனால் அது இளிவரல் அல்ல, உண்மை” என்றார். “அது உண்மை… ஆமாம், அது உண்மை… இப்போது சொல்கிறேன் அது உண்மை…” கிருதவர்மன் விழிகளைச் சுருக்கியபடி “உண்மையில் அந்த அந்த மணி எங்கே?” என்றார். “அது போயிற்று… அதை இனி எவரும் பார்க்கமுடியாது. அது என்ன என்று எவருக்குமே தெரியாது!” என்று சாத்யகி மீண்டும் சிரித்தார்.

கிருதவர்மன் “அது உங்கள் கருவூலத்தில் அல்லவா இருக்கிறது?” என்றார். “இல்லை! இல்லை! அஹ்ஹஹா!” என்று சாத்யகி வெடித்துச் சிரித்தார். “அதை அப்போதே கடலில் தூக்கி வீசிவிட்டார்கள். அது கடலுக்கடியில் இருக்கிறது.” கிருதவர்மன் “மெய்யாகவா?” என்றார். “தெய்வங்கள்மேல் ஆணை, மூதாதையர் மேல் ஆணை, அதுதான் உண்மை” என்றார் சாத்யகி. “பொய் கூறவேண்டாம். நான் மெய்யை கேட்கிறேன். அது எங்கே?” என்றார் கிருதவர்மன். அவர் முகம் சிவந்திருந்தது.

அதை சாத்யகி உணரவில்லை. “கேள், இங்குள்ள எவரிடம் வேண்டுமென்றாலும் கேள். அப்போதே அதை கடலுக்குள் வீசிவிட்டார்கள். ஏனெனில் இந்த இளிவரல் கதையில் வருவது போலவே அது வெறும் கல், வெறும் கூழாங்கல்” என்றார். உரக்க நகைத்து தன் நெஞ்சில் அறைந்து “அது அந்தகர்களின் கூழாங்கல். அந்தகர்களின் கூழாங்கல் அது!” என்றார். “அந்தகர்களை நம்பி அதை அருமணியென விருஷ்ணிகள் எண்ணினார்கள். அதன் பின் படைகொண்டு சென்றார்கள். வென்று வந்து நோக்கினால் அது கூழாங்கல்.”

“எங்கிருக்கிறது அது?” என்று கிருதவர்மன் கேட்டார். அவர் விம்மிக்கொண்டிருந்தார். “அதை அரசியர் அருவருத்து ஒதுக்கினர். அறியாமைகொண்ட காளிந்தி அது கூழாங்கல் என்றே சொல்லிவிட்டார். சுபத்திரை அதைத் தூக்கி சாளரம் வழியாக துவாரகையின் கடலுக்குள் வீசினார்” என்றார் சாத்யகி. கிருதவர்மன் திரும்பி ஸ்ரீகரரிடம் “மெய்யாகவே அது இல்லையா? அது எங்கே? சொல்க, எங்கிருக்கிறது அது?” என்றார். “கடலுக்குள், கடலுக்குள் ஆயிரம்கோடி கூழாங்கற்களுக்குள் இன்னொன்று…” என்று சாத்யகி நகைத்துக்கொண்டிருந்தார்.

“மெய்யாகவே அந்த மணி எவரிடமும் இல்லையா?” என்றார் கிருதவர்மன். பிரஃபானு “ஆம், அதை கடலுக்குள் வீசிவிட்டார்கள். காளிந்தி அன்னை வீசியதாகச் சொன்னார்கள்” என்றார். பிரத்யும்னன் “காளிந்தி அன்னை வீசவில்லை. எனது அன்னை வீசப்போனபோது எந்தை அதை வீசவேண்டாம் என்றார். பின்னர் இளைய அரசி சுபத்திரை எடுத்து அதை கடலுக்குள் வீசினார்” என்றார். ஒவ்வொருவரையாக பார்த்துக்கொண்டிருந்த கிருதவர்மன் உரத்த குரலில் “மெய்யாகவே சியமந்தகம் கடலுக்குள் வீசப்பட்டதா?” என்றார்.

சாத்யகி சீற்றம்கொண்டார். “பிறகென்ன சொல்லிக்கொண்டிருக்கிறோம்? கேட்டுப்பார் இங்கிருக்கும் யாதவ மைந்தரிடம். மெய்யாகவே கடலுக்குள் வீசப்பட்டது. என் குல தெய்வங்கள் மேல் ஆணையாக கடலுக்குள் வீசப்பட்டது” என்றார் சாத்யகி. கிருதவர்மன் “மெய்யாகவா? ஸ்ரீகரரே, மெய்யாகவா?” என்றார். ஸ்ரீகரர் “யாதவரே, அதை சுபத்ரை கடலுள் வீசியது உண்மை” என்றார். கிருதவர்மன் “கடலுக்குள் ஏன் வீசினார்கள்?” என்றார்.

சாத்யகி “இத்தனை பொழுதும் இளிவரல் நாடகமாக நடித்துக்காட்டினார்களே இன்னமும் உனக்கு புரியவில்லையா? அது அருமணி அல்ல, முதுகு சொறிவதற்கான கல். அந்தகர்களின் நாட்டிலிருந்து யாதவ அரசி கொண்டுவந்த பெண்செல்வம் அக்கூழாங்கல். அக்கூழாங்கல்லுக்கு நிகராக விருஷ்ணிகள் கொடுத்ததோ அதோ அங்கே ஆயிரம் வீரர்களால் காவல் காக்கப்படும் கருவூலம். நல்ல வணிகம்! இதைப்போல் ஒரு வணிகம் வேறில்லை! கல் கொடுத்து பொன் பெறும் வணிகம்! ஆஹஹ்ஹஹா! கூழாங்கல் கொடுத்து மணிமுடி பெறும் வணிகம்! நன்று! நன்று!” என்றார்.

“வாயை மூடு!” என்று கிருதவர்மன் கூவினார். சாத்யகி “மூடாவிட்டால் என்ன செய்வாய்? நான் தூங்கும்போது தீ வைப்பாயா? தூங்குபவர்களை எரிக்கும் மாவீரன்! எவரும் தூங்கவேண்டாம், இவர் எரித்துவிடுவார்! அஹஹஹஹா!” என்று கூவிச் சிரித்தார். அக்கணத்தில் பின்னிருந்து பெரிய கால் ஒன்றால் உதைக்கப்பட்ட பந்துபோல சாத்யகியை நோக்கி ஓடிவந்த கிருதவர்மன் எட்டி அவர் நெஞ்சில் உதைத்தார். சாத்யகி மல்லாந்து விழுந்த அதே கணத்தில் இடையிலிருந்து வாளை உருவி அவர் தலையை வெட்டித் துணித்தார்.

சாத்யகியின் தலை நிலத்தில் விழுந்தது. கிருதவர்மன் குருதி சுழல வாளை தூக்கி வீசி “கீழ்மக்களே! கீழ்மக்களே! அந்தகர்கள் மேல் இழிவை சுமத்துகிறீர்களா? அந்தகன் என்று இங்கிருந்தால் எழுக! கொன்றழியுங்கள் இந்த விருஷ்ணிகளை! கொன்றழியுங்கள் இக்கீழ்மக்களை!” என்று கூவினார்.

முந்தைய கட்டுரைமூன்று பறவைகள்
அடுத்த கட்டுரைதேனீ,நிழல்காகம் – கடிதங்கள்