கல்லுவேலை காரியக்காரர் செண்பகராமன் மாடன் பிள்ளை அவருடன் வந்த மிளகுமடிசீலை காரியக்காரர் மார்த்தாண்டன் நீலன் பிள்ளையுடன் கல்லாசாரிகள் வேலைசெய்துகொண்டிருந்த புறமுற்றத்தின் நடுவே நடந்தார்.
“பாத்து நடக்கணும்… தரை முழுக்க அம்புமுனை வாள்முனை மாதிரி கல்லுடைசல்கள் உண்டு… குத்தினா ரத்தக்கோரையாக்கும். தெய்வ சிற்பங்கள் உள்ள மண்ணு ஆனதினாலே மிதியடி போடக்கூடாது” என்றார் செண்பகராமன் மாடன் பிள்ளை
“ஆமா, இரும்புத்துண்டு மாதிரில்லா மின்னுது” என்றார் மார்த்தாண்டன் நீலன் பிள்ளை.
சிற்பிகள் கற்களின்மேல் தொற்றி அமர்ந்தும் அருகே மண்டியிட்டும் வேலைசெய்துகொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான அணில்களின் ஓசை எழுவதுபோலிருந்தது
சாத்தப்பன் ஆசாரி உளி தாழ்த்தி வாயில் வெற்றிலையுடன் தலைவணங்கினார்.
“பணி நடக்கட்டு” என்றார் செண்பகராமன் மாடன் பிள்ளை
சாத்தப்பன் ஆசாரி வெற்றிலையை கோளாம்பியில் உமிழ்ந்து “பணி நடந்திட்டேதான் இருக்கும் பிள்ளைவாள்” என்றார்.
மாடன்பிள்ளை “இது நம்ம மச்சினன், மார்த்தாண்டன் நீலன் பிள்ளை. புதுக்கடையிலே மிளகுமடிசீலை காரியக்காரராட்டு இருக்காரு…”
“ஈஸ்வரானுக்ரகம்” என்றார் சாத்தப்பன் ஆசாரி
நீலன் பிள்ளை “இது என்ன சிலை?”என்றார்
“இப்ப இது கல்லு.. சிலையிருக்குதது உள்ளே” என்று சாத்தப்பன் ஆசாரி சிரித்தார். “வெளியே வந்தா அகோர வீரபத்ரன்”
நீலன் பிள்ளை கும்பிட்டார்
“கல்லை ஏன் கும்பிடுதீக? வீரபத்ரன் முளைக்கல்லியே… இது வித்து, உள்ள அவரு கருவடிவா கண்ணுறங்குதாரு”
“ஆசாரியே சும்மா கல்லு கொத்துதை பாக்கணும்னு வந்தாரு… இங்க இருக்கட்டு நான் வாறேன்” என்று மாடன்பிள்ளை சொன்னார்
அவர் தலையசைத்து விலகிச் செல்ல நீலன் பிள்ளை அங்கே ஒரு கல்லில் அமர்ந்து சாத்தப்பன் ஆசாரியின் கைவிரல்களில் இருந்து உளி விரைவு கொள்வதை பார்த்தார்
“ஒரு சின்ன கிளிபோல”என்றார். திரும்பி கட்டப்பட்டுக்கொண்டிருந்த கோயிலின் பிராகாரத்தை பார்த்து “ஒத்த ஒரு கிளியாக்கும் இந்தா பெரிய கோயிலையும் தெய்வங்களையும் கொத்திக்கொத்திப் படைச்சுதுன்னு நினைக்கிறப்ப…”
சாத்தப்பன் ஆசாரி “கிளியை ஆகாசமுல்லா ஏந்தியிருக்கு” என்றார்
பக்கத்தில் பார்த்து, “ஆருவே இவன்?”என்றார் நீலன் பிள்ளை.
சாத்தப்பன் ஆசாரி திரும்பிப்பார்த்து “இவனா? புதிய ஆளாக்கும். சீவிலிப்புத்தூரிலே நம்ம தங்கச்சிக்க மகன். குமாரன்னு பேரு. விளிப்பேரு கோரன். இவனுக்க அம்மை சட்டுன்னு இரைக்குத்திலே போயிட்டா. இவனுக்க அப்பன் ஒரு கிறுக்கன். ஒத்தப்பயலா நின்னான். தாய்மாமன் அப்பனுக்க எடமுல்லா? அதான் வாலேன்னு கூட்டிட்டு வந்தேன்
“கல்லுபணி செய்வானா?” என்றார் நீலன் பிள்ளை
“கையிலே அருளு உண்டு” என்றார் சாத்தப்பன் ஆசாரி. அவனிடம் கையசைத்து “ஏலே பொட்டா, காட்டுலே” என்று ஆணையிட்டார்
குமாரன் கையால் சுட்டிக்காட்டினான். கல்லில் ஒரு சிறிய முகத்தின் ஒரு பகுதி தெரிந்தது. ஆனால் அதிலேயே அந்த முகத்தின் பேரழகு துலங்கியது. கல்லை திரையென விலக்கி ஓர் இளம்பெண் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வே, இவன் செதுக்கினதா? உள்ளதா?”
“ஆமா, இந்தா இப்ப, இன்னும் முடிக்கல்ல…”
“சிந்தாம செதுக்கிப்போட்டானே” என்றார் நீலன் பிள்ளை “அழகாட்டு கரிப்படம் வரைஞ்சிருக்கீரு, அவன் கல்லிலே அப்டியே கொண்டாந்துட்டான்”
“பிள்ளைவாள், நான் கரிப்படமே வரையல்லை. அவனே நேரடியா கல்லிலே செதுக்கிட்டான்”
“வரையாமலேயா? என்னவே சொல்லுதீரு?” என்றார் நீலன் பிள்ளை “நான் கேள்விப்பட்டதே இல்லியே”
“அவன் வழி அது… நேரா உளியை எடுத்து வைச்சு கொத்த தொடங்கீருவான். கல்லு பட்டுத்துணி மாதிரி விலகி சிற்பம் தெரிய ஆரம்பிச்சிரும். ஒரு கணக்கு தப்பாது… இங்க பாருங்க, முகத்திலே பாதி மட்டும்தான் வந்திருக்கு. அதுக்குள்ள நெத்திச்சுட்டியிலே முத்துக்கள் இருக்கு. காதிலே போட்ட குழையிலே நாகபடம் இருக்கு. சிற்பத்தை முடிக்காம கண்ணு திறக்குத வழக்கம் எங்கியும் இல்லை.ஆனா இந்த முகத்திலே இப்பவே கண்ணுலே உசிரு வந்தாச்சு. சிரிப்பு வந்தாச்சு”
“இப்டி உளிவைச்சு நேரா சிற்பத்துக்கு போற ஆளை இப்பதான் பாக்குதேன்” என்று நீலன் பிள்ளை சொன்னார். திரும்பி அவனைப் பார்த்து “சின்னப் பய” என்றார்
“இப்டி எவனும் செய்யுகதில்லை…கல்லிலே கரிப்படம் போடுறது ஒரு பெரியவேலை. அந்தக்கல்லுக்க அளவும் அமைப்பும் கணக்கு போடணும். அதுக்குள்ள சிற்பத்தை பாக்கணும். கரிப்படம் போடுறதை கல்லை கர்ப்பமாக்குததுன்னு சொல்லுவாங்க. அப்பதான் அதுக்குள்ள சிற்பம் சின்ன கருவா வந்து நிக்குது. பின்ன பத்துமாசம் அந்த கரு வளருற மாதிரி கல்லைச் செத்திச் செத்தி சிற்பத்துக்கு உருவம் குடுக்குதோம்” சாத்தப்பன் ஆசாரி சொன்னார்.
“முதல்ல கையும் காலும் கிரீடமுமா வெளிவட்டம் செத்துவோம். பிறகு நெஞ்சும் முகமும். அணியும் மணியும் கடைசியா. சிற்பம் திகைஞ்சு உலகத்தை பாக்க ஒருங்கின பிறகுதான் கண்ணைத் திறக்கணும். அது நாம சிற்பத்தைப் பாக்குதது மட்டுமில்லை, சிற்பம் நம்மளைப் பாக்குததும்தான்….” என்றார் சாத்தப்பன் ஆசாரி “ ஆனா இவன் இந்தமாதிரி செய்யுதான்”
“இவனுக்கு நல்ல கலையோ?”என்றார் நீலன் பிள்ளை.
“இவன் மனசிலே என்ன கெடக்குதுன்னு தெரிய ஒருவழியும் இல்லை. பயலுக்கு செவியில்லை, வாயுமில்லை. நாம ஒண்ணும் கேக்கமுடியாது, சொல்லவும் முடியாது. நாம சொன்னா செய்யமாட்டான். அவனே என்னமாம் செய்வான். செய்யட்டும், ஒருவாய் சோறுதானே அவனுக்கு”
“ஆமா” என்றபின் அவனை திரும்பிப் பார்த்தார். அவன் ஏதோ செதுக்கிக் கொண்டிருந்தான்
“செதுக்கிட்டிருக்கிறப்ப சின்னப்பிள்ளைக விளையாடுறது மாதிரி ஒன்றிப்போயி இருக்கான்”என்றார் நீலன் பிள்ளை
“பொட்டன் மாதிரி இருக்கான். பிள்ளைவாள் வந்து இவன் சோறு திங்கிறதை பாக்கணும். வாரித்தின்ன தெரியாத பிள்ளை மாதிரியாக்கும். ஒண்ணு சோறு கறி பொரியல் எல்லாத்தையும் தனித்தனியா ஒண்ணுபின் ஒண்ணா திம்பான். இல்லேன்னா எல்லாத்தையும் அள்ளிக்கூட்டி குளைச்சு ஒரே வாயிலே வாரித்திம்பான். குளிக்கத்தெரியாது. பாருங்க உடுமுண்டை எப்டி கெட்டியிருக்கான்னு. மேலே கச்சை நான் கெட்டி இறுக்கிவிட்டேன். இல்லேன்னா அவுந்து விளுந்திரும்…” என்றார் சாத்தப்பன் ஆசாரி
“ஒருவகையிலே நல்லது. கண்ணும் கையும் போரும், சில்பிக்கு” என்றார் நீலன் பிள்ளை
“என்னெண்ணு இவனை வச்சிருக்கிறதுன்னு தெரியல்லை. ஆனா ஆளு என்னமோ வேற ஒரு சீவனாக்கும். இந்தாலே வந்து இவன் கண்ணைப்பாருங்க.இது மனுசன்கண்ணு இல்லை. கல்லிலே நாம செதுக்கியெடுக்குத கந்தர்வன்மாருக்க கண்ணாக்கும்”
நீலன் பிள்ளை “ஆமா”என்றார். “தெய்வங்களுக்க கண்ணு” என்றபின் மெல்ல “இல்ல ஒரு சந்தேகம்”என்றார்
“என்ன?”
“அதில்லை, இப்பம் சில்பீன்னா சாமியை கல்லிலே இருந்து எளுப்பி கொண்டு வாரவன். அவன் கையிலேயும் மனசிலேயும் தெய்வம் நிக்கணும். குறைதீர்ந்த கல்லிலேதான் தெய்வம் நிக்கும்னு பழஞ்சொல்லு உண்டு. அப்ப சில்பிக்கு குறை இருக்கலாமா?” என்று நீலன் பிள்ளை கேட்டார்
உளியை வைத்துவிட்டு சாத்தப்பன் ஆசாரி திரும்பி அவனைப் பார்த்தார். பிறகு முத்துச்சிப்பி மூடியிட்ட செல்லத்தில் இருந்து ஒரு வெற்றிலைச் சுருளை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்.
“பிள்ளைவாள் கேக்கணும். கேரளபுரம் கோயிலிலே நம்ம முதுமூத்தான் பெருஞ்சாத்தன் தம்புரானுக்க சிலை இருக்கு. ஆண்டுக்கொருநாள் ஆடிமாசம் அம்மாசைக்கு நாங்க போயி அவருக்கு சந்தனமும் பட்டும் சாத்தி அஞ்சமுது படைச்சு கும்பிடுகதுண்டு” என்றார் சாத்தப்பன் ஆசாரி “பண்டு கேரளவர்மா மாக்கோதைத் தம்புரான் அவரையும் ஏழு குடும்பங்களையும் மருதையிலே இருந்து கூட்டிட்டு வந்தாரு. அதுக்கொரு கதை உண்டு”
மீண்டும் உளியை எடுத்துச் செதுக்கியபடியே அவர் பேசினார். “இங்க அப்ப இந்த திருவிதாங்கோடு ஒரு சின்ன கோயிலாக்கும். பாண்டிநாட்டு கோயிலை மாதிரி இதையும் பெரிசா எடுத்து கெட்டணும்னு கேரளவர்மா மாக்கோதை தம்புரான் நினைச்சாரு. இங்க கல்லாசாரிங்க அப்ப இல்லை. இங்க உள்ளவனுக முழுக்க மரஆசாரிமாராக்கும். இங்க அப்ப கோயிலும் வீடும் எல்லாம் மரம்தானே?. மூலஸ்தானத்து தேவனும் மரத்திலேதான். தாருசில்பம்தான் இப்பவும் பலகோயிலிலே மூலஸ்தானத்திலே இருந்திட்டிருக்கு”
கல்லாசாரிமாரு எங்கேன்னு தேடிப்போனாங்க ராஜாவுக்க மந்திரிகள் இடைக்கோட்டு மாடத்தான் செம்பகராமனும், மேலாங்காட்டு செந்நான் மழவராயனும். அவங்க பாண்டிநாட்டுக்கு போயி விசாரிச்சப்பதான் அழகர்கோயிலிலே ஒரு கல்லாசாரிமாருக்க குடி இருக்கது தெரிஞ்சுது. அஞ்சுதலைக்குடின்னு பேரு
அஞ்சுதலைக்குடியை போயி வெத்திலை வைச்சு கூப்பிட்டாங்க. அவனுக வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. “எங்க முன்னோடிகள் கலிங்கநாட்டிலே இருந்து சோழநாட்டுக்கு வந்தாங்க. சோழநாட்டிலே இருந்து பாண்டிய நாட்டுக்கு வந்தாங்க. இங்க நாங்க வீரபாண்டிய வம்சம்னு குடியடையாளத்தோட வாழுதோம். எதுக்கு கண்காணா சேரநாட்டுக்கு வரணும்.. போங்க போங்க”ன்னு வீரபாண்டியன் உடையப்பன் மூத்தாசாரி சொல்லிட்டாரு.
“நாங்க என்ன செய்தா வருவீங்க?”ன்னு மாடத்தான் செம்பகராமன் கேட்டார்.
“என்ன செய்தாலும் வரமாட்டோம் போங்கய்யா”ன்னு சொல்லிட்டாரு வீரபாண்டியன் காத்தான் மூத்தாசாரி.
செந்நான் மழவராயன் இன்னும் கொஞ்சம் கூர்மையுள்ள ஆளு. “ஆசாரியே உங்க வம்சம் எதுக்காக சோழநாட்டுக்கு வந்தது?” ன்னு கேட்டாரு.
வீரபாண்டியன் பொன்னான் மூத்தாசாரி சிரிச்சு “ஒண்ணுமில்லை சோழநாட்டு வைரம் ஒண்ணை கொண்டுவந்து காட்டி கூப்பிட்டாங்க. அந்தக் கல்லோட அழகிலே மயங்கி வந்திட்டாங்க”ன்னு சொன்னார்.
“சரி, பாண்டிய நாட்டுக்கு எப்டி வந்தீங்க?”ன்னு கேட்டார்.
“பாண்டியமன்னன் மாறவர்மன் உக்கிரப்பெருவழுதி கொற்கையிலே கிடைச்ச ஒரு முத்தை கொண்டுவந்து காட்டினான், மயங்கிட்டோம்”னு வீரபாண்டியன் கூத்தன் மூத்தாசாரி சொன்னான்.
விடைவாங்கி திரும்பி வந்தாங்க. விஷயத்தை சொன்னப்ப மகாராஜா சபைகூட்டி யோசிச்சாரு. எதைக் காட்டினா இவனுக வருவானுகன்னு பேசிக்கிட்டாங்க. வைரமும் முத்தும் சேரநாட்டிலே இல்லை. சோழனும் பாண்டியனும் குடுத்ததைவிட பெரிசா குடுக்க என்ன இருக்கு?
அப்ப மகாராணி நீலம்மை தம்புராட்டி எந்திரிச்சு ஆறுமாசம் பிராயமான தன் குழந்தையை தூக்கி குடுத்து “இதை அவனுக கிட்ட குடுங்க, சேரநாட்டுக்க பரிசு இதுதான்”ன்னு சொன்னா. மகாராஜா கண்ணீரோட அவளை கையெடுத்து கும்பிட்டார்.
இளையராசனை ஒரு தங்கத்தொட்டிலிலே கொண்டுபோயி அஞ்சுதலை பெருங்குடிக்கு முன்னாடி சபையிலே வச்சாங்க. “இது சேரன் செங்குட்டுவன் மாக்கோதை காலம் முதல் ஆலுபோலே விழுதோடின சேரநாட்டு முடிக்குரிய மகன். உங்க குலத்துக்கு மகாராஜாவுக்க காணிக்கை”ன்னு சொன்னாங்க.
குடிமூத்தார் அஞ்சுபேரும் கண்ணீரு விட்டு கைகூப்பி எந்திரிச்சு நின்னுட்டாங்க. அப்டிதான் அஞ்சாம்தலை வீரபாண்டியப் பெருஞ்சாத்தன் மாராயன் அவருக்க சீடப்பிள்ளைங்க ஏழுபேரோட இங்க கெளம்பி வந்தார். அவர் இங்க வந்தப்ப திருக்கணங்குடியிலே சேரமண்ணு தொடங்குற இடத்திலே மேளமும் மங்கலமுமா மந்திரிமார் போயி நின்னு எதிரேற்று கூட்டிட்டு வந்தாங்க.
அவருக்கு கேரளவர்மா மாக்கோதை தம்புரான் திருமனசு கல்பிச்சு சேரமான் பெருஞ்சாத்தன் மாராயன்னு ஸ்தானப்பேரு குடுத்து, ஏழுவீடும் ஏழு குளமும் ஏழு ஆனையும் குடுத்து, குடிவைச்சாரு. அவருக்க மகனா அந்த சேரர்குலத்து இளவரசன் வளந்து சேரமான் அச்சுதன் மாராயன்னு குடித்தலைவரா ஆகி பேரும் புகழும் தேடினார்.இப்பமும் எங்க குடிக்கு அரசகுடும்பத்திலே எல்லா சடங்குக்கும் சமானமாட்டு எடமுண்டு.
அந்த முதலாசாரி சேரமான் பெருஞ்சாத்தன் மாராயன் தொட்டெடுத்த உளியாக்கும் இது. எங்க குலம்பெருகி நாங்க இந்த சேரநாட்டு மண்ணிலே இதுவரை எழுபத்துநாலு கோயிலை கட்டியாச்சு. இன்னும் கட்டிக்கிட்டிருக்கோம். எறும்பு ஓடி ஓயாது, சிதலு கெட்டி ஓயாது.
சாத்தப்பன் ஆசாரி சொன்னார் “பிள்ளைவாள், கேட்டுக்கிடணும். அந்த முதலாசாரி சேரமான் பெருஞ்சாத்தன் மாராயன் வாய்பேசா காதுகேளா ஊமையாக்கும். இவனை மாதிரி”
”ஓ” என்றார் நீலன் பிள்ளை திரும்பி குமாரனைப் பார்த்து அவனை காணாமல் “ஆளு எங்க?” என்றார்
சாத்தப்பன் ஆசாரி திரும்பி பார்த்து “ஏலே அவன் எங்கலே?”என்றார்
“அந்தாலே போயி வேற என்னமோ செய்யுதான்” என்றான் ஒர் ஆசாரி
“கிறுக்குப்பயலாட்டு இருக்கானே… இந்தச் சில்பத்தை இப்டியே விட்டுட்டானா?” என்றார் நீலன் பிள்ளை
“விடமாட்டான், செய்வான். ஆனா ஒண்ணு செய்து முடிக்கதுக்குள்ள இன்னொண்ணை தொட்டிருவான். எப்ப செய்து முடிப்பான்னு சொல்ல முடியாது” என்றார் சாத்தப்பன் ஆசாரி
“மூத்தாசாரியே, அவனை விளிக்கட்டா?”
“அவனை அந்தாலே விட்டிரு… அவன் இதை இப்டியே முடிக்காம விட்டா நாம முடிச்சிருவோம்” என்றார் சாத்தப்பன் ஆசாரி “கிறுக்கனாக்கும்… ஆனா இந்தக் கலையிலே எப்பவுமே ஒரு கிறுக்கு உண்டு. கரும்பனைக்குள்ளே கள்ளு இருக்கப்பட்டதுபோல”
நீலன் பிள்ளை “அவன் அங்க என்ன செய்யுதான்?”என்று எழுந்து சென்று பார்த்தார்.
அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவன் மிகமிக வேகமாக செதுக்கிக்கொண்டிருந்தான். கருங்கல் அவன் உளிக்கு முன் வெண்ணைபோல நெகிழ்ந்தது
“ஆசாரியே, இது என்னவாக்கும் இவன் செதுக்கிட்டிருக்கான்?”
அவர் அங்கிருந்தே பார்த்து “என்னமோ மூர்த்தி… இப்ப அணியும் முத்திரையும் தெளியல்ல… அதுக்குப்பிறகுதான் சொல்லமுடியும்” என்றார்
“ஓ” என்று நீலன் பிள்ளை சொன்னார். “அணியும் முத்திரையும் இல்லாம தெய்வங்களை சொல்லமுடியாதோ?”
“பிள்ளைவாள் தெய்வமெல்லாம் ஒண்ணுதான். அணியும் முத்திரையும் மனுஷனுக்க கண் பாக்குதது. அதவச்சுத்தான் சிவன் வேறே விஷ்ணு வேறே” என்று சாத்தப்பன் ஆசாரி சொன்னார். “கேரளபுரம் கோயிலிலே மூணு சில்பங்கள் இருக்கு.எங்க மூத்தகுடியான் சேரமான் பெருஞ்சாத்தன் மாராயன் செதுக்கினது. இப்ப வரை அது என்ன தெய்வம்னு ஆருக்கும் தெரியாது. வழிவழியா வந்த ஆருகிட்டையும் அதுக ஒரு சொல்லும் பேசினதில்லை”
“ஏன்?”
“அவரு செதுக்கின மத்த சில்பம்லாம் அவரு நமக்காக செதுக்கினது. அதெல்லாம் நம்ம பாசை. அந்த மூணும் அவருக்காக செதுக்கினது, அவருக்க பாசை. அந்த பாசை நமக்கு தெரியாதுல்ல்லா?”
நீலன் பிள்ளை திரும்பும் வழியெல்லாம் அந்த சிற்பத்தைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தார். அது என்னவாக இருக்கும்? ஒருவேளை அது எவராலும் புரிந்துகொள்ள முடியாத விசித்திரமான சிற்பமாக இருந்தால்?
ஒருமுறை போய் பார்க்கவேண்டும் என்று நினைத்தார். ஆனால் மகாராஜாவிடமிருந்து முகம்காட்ட அழைப்பு வந்தது. திருவனந்தபுரம் சென்றால் அப்படியே கொல்லத்திற்கும் ஆலப்புழைக்கும் போக ஆணை வந்தது.
அவர் திரும்பி வந்தது ஒன்றரை மாதம் கழித்து. வந்ததுமே எல்லா கணக்குகளையும் பார்த்தபின் கோயில்பணிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை கல்லுவேலை காரியக்காரர் செண்பகராமன் மாடன் பிள்ளைக்கு கொடுக்கவேண்டும் என எடுத்து வைத்தார்.அவரை வந்து பணத்தை பெற்றுச் செல்லும்படி சொல்லி அனுப்பினார்.
திரும்பிவந்த சேவகன் கொச்சுராமன் நாயர் “அவரு திருவிதாகோட்டுக்கு போயிருக்காரு.அங்க கோயிலிலே ஏதோ குற்றவிசாரணை நடக்குது…. பேஷ்கார் மாதவராயர் வந்திருக்காரு” என்றார்
“பேஷ்காரா? எதுக்கு?” என்று கேட்டபடி நீலன் பிள்ளை எழுந்துவிட்டார்
“தெரியல்லை. குலசேகரமடத்தில் தந்த்ரியும் கொடுமடம் போற்றியும் விசாரணைக்கு போயிருக்காங்க”
“தந்த்ரியும் போற்றியுமா?” அவருக்கு ஏதோ தோன்றியது. “வண்டியை கட்டு… நான் உடனே திருவிதாங்கோடு போகணும்… ரெட்டைக்குதிரை வண்டி வேணும்… காத்துவேகத்திலே போகணும்”
அவர் மேலாடையை சுற்றிக்கொண்டு முற்றத்திற்கு வந்தபோது எடைகுறைவான குதிரைவண்டி வந்து நின்றது. அவர் ஏறி அமர்ந்ததும் அது விரைந்தோடியது.
அவர் பின்னால் அமர்ந்து வண்டிக்காரனிடம் “வேகம், வேகம்”என்று சொல்லிக்கொண்டிருந்தார். மனம் போகும் வேகம் வண்டியை காற்றில் மெல்ல ஊசலாடிக்கொண்டிருப்பதாகவே தோன்றச்செய்தது
மனம் திசைகளில் சென்று முட்டி முட்டி அவரை களைப்படையச் செய்தது. திருவிதாங்கோடு எல்லைக்குள் நுழைந்தபோது அவரால் எதையுமே யோசிக்கமுடியவில்லை. அகமும் புறமும் செயலற்று புழு போல கிடந்தார்
வண்டிக்காரன் சொன்னதும்தான் இடம் வந்துவிட்டதை உணர்ந்து, பாய்ந்து இறங்கி கோயிலுக்குள் சென்றார்
கோயிலுக்கு தெற்கே மார்த்தாண்டன் மண்டபத்தில் சபை கூடியிருப்பது தொலைவிலேயே தெரிந்தது. அவர் மூச்சிரைக்க ஓடினார். அருகே சென்றபோது கொஞ்சம் தணிந்து ஆடையைச் சீராக்கிக்கொண்டர்.
வியர்வை வழிய அவர் மண்டபத்தை அணுகியபோது குலசேகரமடத்தில் மூத்த தந்த்ரி விஷ்ணு நம்பூதிரியின் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. அவருக்கு முன்னால் நின்றிருந்த கூட்டத்தில் சாத்தப்பன் ஆசாரியும் குமாரனும் இருந்தனர்.
அவரைக் கண்டதும் சபை அசைவுகொண்டு ஓசை கலைந்தது.விஷ்ணு நம்பூதிரி தயங்கி அவரை பார்த்தார். அவர் அனைவருக்கும் தலைவணங்கி நேராகச் சென்று விஷ்ணு நம்பூதிரியின் காலருகே குனிந்து நிலம்தொட்டு வணங்கினார். அவர் தலைக்குமேல் இடக்கை தூக்கி வாழ்த்தினார். அவ்வண்ணமே கொடுமடம் போற்றியையும் வணங்கிவிட்டு பேஷ்காரின் அருகே கல்திண்ணையில் அமர்ந்தார். அவர் அருகே கல்லுவேலை காரியக்காரர் செண்பகராமன் மாடன் பிள்ளை இருந்தார்.
பேஷ்கார் மாதவராயரும் காரியக்காரர் செண்பகராமன் மாடன் பிள்ளையும் அவர் வந்ததை விரும்பவில்லை என்று தெரிந்தது. ஆனால் அவர்கள் அவர் தலைவணங்கியபோது புன்னகை செய்தனர். சாத்தப்பன் ஆசாரியும் சிற்பிகளும் அவரைக் கண்டு ஆறுதலடைந்தனர். சாத்தப்பன் ஆசாரி அவரைப் பார்த்துப் புன்னகைத்தார்.
பேஷ்கார் மாதவராயர் மலையாளத்தில் “மிளகுமடிசீலை காரியக்காரருக்கு இந்த விசாரணையில் பெரிய இடமெல்லாம் ஒன்றும் இல்லை என்றாலும் சுருக்கமாக என்ன விஷயம் என்பதைச் சொல்லிவிடுகிறேன்”என்றார். “இந்தப் பையன் ஒரு ஊமை, செவியும் இல்லை. இவன் மூத்தாசாரி சாத்தப்பனின் மருமகன். ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து கூட்டிவந்திருக்கிறார். கல்லுவேலைக்குச் சேர்த்துக்கொண்டிருக்கிறார்”
“இங்கே சில்பிகளுக்கு சில நியமநிஷ்டைகள் உண்டு. நெறியாசாரங்கள் உண்டு. ஏனென்றால் இது தாந்த்ரீக மண். உளி எடுப்பதற்கு முன் அதையெல்லாம் கடைப்பிடிப்பேன் என்று சில்பி கல்தொட்டு சத்தியம் செய்து சங்கல்பம் கொள்ளவேண்டும். இவன் அதையெல்லாம் செய்தானா என்று தெரியவில்லை—”
சாத்தப்பன் ஆசாரி பேசமுயல அதை கையால் தடுத்து “செய்தான் என்று சாத்தப்பன் ஆசாரி சொல்கிறார். செய்திருக்கலாம். ஆனால் அந்த சங்கல்பத்தைப் புரிந்துகொண்டு எடுக்க இவனுக்கு அறிவுண்டா, புரிந்துகொண்டானா என்று நம்மால் கேட்டு தெரிந்துகொள்ள முடியுமா? ஒன்றும் தெரியவில்லை” என்றார் பேஷ்கார் மாதவராயர்
சாத்தப்பன் ஆசாரி “இங்கே முதலாசாரி சேரமான் பெருஞ்சாத்தன் மாராயன்னு பேருகேட்ட எங்க மூத்தகுடியார் வாய்செவி இல்லா ஆளாக்கும்” என்றார்
பேஷ்கார் கடும் கோபத்துடன் முகம் சிவக்க “சரி…”என்றார்
கொடுமடம் போற்றி “அது கேரளவர்மா மாக்கோதை தம்புரான் செய்த மகாப்பிழை… பெருஞ்சாத்தன் செய்த அந்த மூன்று சில்பங்களும் இன்றைக்கும் பொருள்தெரியாமல் அங்கே நின்றுகொண்டிருக்கின்றன. அவை என்ன தெய்வம் என்று தெரியாமல் பூசை செய்யப்படுவதில்ல்லை. பூசையில்லா தெய்வங்கள் கட்டில்லாத யானைபோல. அவை அழிவையே அளிக்கும். அவற்றை கட்ட நம்மிடம் ஒரு மந்திரம்கூட இல்லை”
“நாம் இப்போது இதைப்பற்றிப் பேசுவோம்”என்று தந்த்ரி விஷ்ணு நம்பூதிரி சொன்னார்
“அதாவது, இவன் இந்த குமாரன் ஆசாரி, கோயில் உபமண்டபத்துக்கு உரிய பதினெட்டு தூண்களில் வலது முகப்புத்தூணில் ஒரு சிற்பத்தைச் செய்திருக்கிறான். அது எந்த சிற்ப சாஸ்திரத்திற்குள்ளும் வரவில்லை. அது என்ன என்று விளக்கவும் அவனால் முடியவில்லை. அவன் சொல்லாவிட்டால் அவன் குடி சொல்லட்டும் என்று தந்த்ரி சொன்னார். அவர்களுக்கும் தெரியவில்லை.அதைத்தான் விசாரித்துக்கொண்டிருந்தோம்” என்றார் பேஷ்கார் மாதவராயர்
செண்பகராமன் மாடன் பிள்ளை “தந்த்ரி திருமேனி முடிவைச் சொல்லிவிட்டார்.கொடுமடம் போற்றி திருமேனிக்கும் மாற்றுச் சொல் ஒன்றும் இல்லை. ஆகவே இனி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார்
பேஷ்கார் மாதவராயர் “மிளகுமடிசீலை காரியக்காரருக்கு இதில் சொல்லுரிமையும் இல்லை”என்றார்
“ஆமாம், சொல்லுரிமை இல்லைதான்”என்றார் நீலன் பிள்ளை “ஆனால் பொன்னுதம்புரான் என்னிடம் பன்னிரண்டு சந்தைகளின் தீர்வை வருமானத்தில் பத்து சதமானத்தை கோயில்பணிக்கு தரவேண்டும் என்று சொன்னபோது எல்லாம் நீயே பார்த்து நடத்து நீலா என்றுதான் சொன்னார்”
விஷ்ணு நம்பூதிரி “என்ன தீர்ப்பு என்று அவனிடம் சொல்லுடா மாடன் பிள்ளே”என்றார்
மாடன் பிள்ளை “அதாவது தீர்ப்பு என்பது…” என்று ஆரம்பித்தார். “இந்த கல்தூணை உடனே மாற்றவேண்டும்.இந்த சில்பம் கோயிலில் இருக்க கூடாது. இனி இவன் தன் கையால் எந்தச் சில்பமும் செய்யக்கூடாது…”
கைகூப்பி வணங்கி, “அடியேன், திருமேனி கல்பிச்ச தீர்ப்புக்கு மறுசொல் இல்லை”என்றார் நீலன் பிள்ளை. “ஆனால் ஒரு சின்ன சந்தேகம். அந்த செதுக்கிய தூணை நாம் என்ன செய்வோம்?”
“அதை…”என்றபின் தந்த்ரி விஷ்ணு நம்பூதிரி திகைத்து பார்த்தார்
“தூக்கி வேறெங்காவது போட்டால் அந்த தெய்வங்கள் பூஜையின்றி சாந்தியின்றி கிடக்கும். அது நாட்டுக்கு நல்லதல்ல, அரசருக்கும் நல்லது அல்ல…”என்று நீலன் பிள்ளை சொன்னார். தந்த்ரியை நோக்கி பணிந்து “அடியேனுக்கு தெரியாது. இது ஒரு சந்தேகம் மட்டும்தான்” என்றார்
“அதை பின்னப்படுத்திப் போட்டால்போதும்… உடைந்த சில்பம் தெய்வமில்லை” என்றார் மாடன்பிள்ளை
“ஆமாம், அப்படி கேட்டிருக்கிறேன். ஆனால் சில்பம் தானாகவே உடைந்து பின்னப்படவேண்டும். வேண்டுமென்றே யார் உடைப்பது? உடைக்க ஆணையிடுவது தந்த்ரி திருமேனி என்றால்…” என்று நீலன் பிள்ளை பணிவுடன் சொன்னார்.
“அய்யோ!” என்றார் விஷ்ணு நம்பூதிரி
“அவனே உடைக்கட்டும்” என்று மாடன் பிள்ளை சொன்னார்
“அதை அவன் கிட்ட எப்டிச் சொல்ல பிள்ளைவாள்? இந்த சாஸ்திரமும் சம்பிரதாயமும் கையை காட்டி சொல்லி புரியவைக்குத காரியமா?”என்று சாத்தப்பன் ஆசாரி கேட்டார்
“அப்ப, நீரு உடையும் வே ஆசாரி” என்றார் மாடன் பிள்ளை
“நான் உடைக்க மாட்டேன். எந்த சில்பியும் உடைக்க மாட்டான். நாங்க சிலை செதுக்குத கைகளாக்கும். பேறுபாக்குத வயற்றாட்டி பிள்ளையைக் கொலை செய்யுத மாதிரியாக்கும் நாங்க சிலையை உடைக்குதது” என்றார் சாத்தப்பன் ஆசாரி
“அதை எங்க போட்டாலும் சிக்கலாக்கும்” என்று நீலன் பிள்ளை தணிந்த குரலில் மாடன்பிள்ளையிடம் சொல்வதுபோலச் சொன்னார். “எங்கயாவது ஓரமா ஒதுக்குபுறமா காட்டிலயோ மேட்டிலயோ போடலாம். அங்க ஒரு பொதுவான தந்த்ரமுறையிலே சாந்திபூசைக்கும் ஏற்பாடாக்கலாம். ஆனா அது எவ்ளவுநாள் நடக்கும்? கொஞ்சநாளிலே விட்டிருவானுக… நம்ம ஆளுகளை தெரியுமே?”
தந்த்ரி விஷ்ணு நம்பூதிரி அசைந்து அமர்ந்தார். கொடுமடம் போற்றி அவரை பார்த்தார்
மாடன்பிள்ளை “அதைப் பாத்தா முடியுமா?” என்றார், அவர் குழம்பிப் போயிருந்தார்.
நீலன் பிள்ளை “பாக்கணுமே.பாத்தாகணுமே” என்றார் “அந்த தெய்வம் என்னதுன்னே நமக்கு தெரியாது. ஒருவேளை அது உக்ரஸ்வரூபியான சம்ஹாரதேவனா இருந்தா? ஏதாவது க்ஷுத்ரமூர்த்தியா இருந்தா? பூசை நின்னுபோயி பன்னிரண்டு ஆண்டு சும்மா கிடந்தா தெய்வங்கள் சீறி எழுந்துபோடும்னு கேட்டிருக்கேன். அப்ப அதுக்குண்டான நாசத்தை நாம அனுபவிச்சே ஆகணும்… நம்மாலே முடியுமா? நம்ம வருந்தலைமுறைகளுக்கு அப்டி ஒரு விஷயத்தை நாம விட்டுட்டு போகணுமா?”
“டேய்,பிறகு நீ என்னடா சொல்கிறாய்?”என்று தந்த்ரி விஷ்ணுநம்பூதிரி உரக்கக் கேட்டார்
“அந்த சிலையோடு அந்த தூண் அதே இடத்தில் அப்படியே மண்டபத்தில் இருக்கட்டும். அது கோயிலுக்குள் இருந்தால் கோயிலின் பொதுவான தாந்த்ரீக கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அதற்கு ஆண்டுக்கொரு பலியும் பூஜையும் வகுத்து கொடுத்தால் அதன் பாட்டுக்கு அது தலைமுறை தலைமுறையாக நடக்கும். எல்லாவற்றுக்கும் மேலே உக்ரமூர்த்தியான அகோரசிவம் பிரதிஷ்டை கொண்டிருக்கும் கோயில் இது. எந்த தெய்வமானாலும் சிவனுக்குக் கீழேதானே?” என்றார் நீலன் பிள்ளை.
“ஆனால்…”என்று கொடுமடம் போற்றி சொல்ல தந்த்ரி விஷ்ணு நம்பூதிரி கைகாட்டி தடுத்தார்
“அவன் சொல்லுவதில் நியாயம் இருக்கிறது கொடுமடம்” என்றார் விஷ்ணு நம்பூதிரி “யோசித்துப் பார்த்தால் இந்த தூணை வேறெங்கும் வைக்க முடியாது”
“அடியேன், நான் பணிந்து சொல்வதும் அதைத்தான்” என்றார் நீலன் பிள்ளை.
“எப்படியோ ஒரு தெய்வம் உருவம் கொண்டு மண்ணுக்கு வந்துவிட்டது. இந்த பொட்டனின் கையை அது தேர்வுசெய்துகொண்டது. நாம் அதை தடுக்கமுடியாது. அதை பணிந்து வணங்கி அனாதிசிவன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே நல்லது” என்றார் விஷ்ணு நம்பூதிரி.
“இவன் இதேமாதிரி இன்னும் சிலையை செய்தால் என்ன செய்வது? இவன் கட்டைவிரலை வெட்டவேண்டும்”என்றார் மாடன் பிள்ளை
”செய்யலாம்” என்று நீலன் பிள்ளை சொன்னார். “ஆனால் அவர்கள் சேரமானின் ரத்தம் உடையவர்கள். அதைச்செய்ய அரசருக்குத்தான் அதிகாரம், அதை திருவனந்தபுரம் ராஜசபையில் போய் சொல்வோம்… வேண்டுமென்றால் அடுத்த வாரம்….”
“வேண்டாம், அதெல்லாம் வேண்டாம்” என்றார் தந்த்ரி விஷ்ணு நம்பூதிரி
“அவன் இனிமேல் சிற்பம் செய்யக்கூடாது” என்றார் கொடுமடம் போற்றி
“ஆமாம், அதைச் சொல்லலாம்” என்றார் நீலன் பிள்ளை. “ஆனால் நம்மால் அவன் விரலை கட்டுப்படுத்தமுடியும், அவன் மனதை எப்படி கட்டுப்படுத்துவது? அவன் மனதில் தெய்வங்கள் தோன்றினால் அவன் சிற்பம் செய்யாமல் என்ன செய்வான்? செய்யாதே என்றால் அவன் அதை எங்காவது வரைந்து வைப்பான்… மண்ணில் செய்து வைப்பான். அதுவும் விக்ரகம்தான். பூஜை செய்யப்படாத தெய்வ விக்ரகம்…”
“எதிலும் செய்யக்கூடாது! அவன் எதிலுமே சிற்பம் செய்யக்கூடாது!”என்று மாடன்பிள்ளை கூவினார்
நீலன் பிள்ளை “சரி, அவன் செய்யாவிட்டால் சிற்பம் இல்லாமலாகிவிடுமா? அவன் அதை மந்திரமாகச் சொல்லிக்கொண்டால்? மந்த்ரரூபேண விக்ரஹம் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன்” என்றார் நீலன் பிள்ளை. “அவன் மந்திரமாகச் சொல்லிக்கொண்டால் அது என்ன என்றுகூட நமக்கு தெரியாது. அது இங்கேயே இருக்கும். தெய்வம் செய்யும் எல்லா லீலையையும் செய்யும்”
“என்னதான் செய்வது?”என்று கொடுமடம் போற்றி எரிச்சலுடன் கேட்டார்
நீலன் பிள்ளை குரலைத் தாழ்த்தி “அவன் சில்பம் செய்யட்டும்… அப்போதுதான் இங்கே என்னென்ன தெய்வங்கள் எழுகின்றன என்று நமக்கு தெரியும். அவற்றில் நாம் அறிந்த தெய்வங்கள் இருந்தால் வேண்டிய தாந்த்ரீகச் சடங்குக செய்து நிறுவி சாந்திசெய்வோம். தெரியாத தெய்வம் என்றாலும் இந்த கோயில் வளாகத்தில் முக்கண்ணன் ஆட்சிக்கு கீழே இருக்கட்டும்”
தந்த்ரி “ஆமாம், யோசித்து பார்த்தால் அதுதான் செய்யமுடியும் என்று தோன்றுகிறது” என்றார். “கேட்டாயா சாத்தப்பா, அவன் அவனுக்கு தோன்றியதைச் செய்யட்டும். அவன் என்ன செய்கிறான் என்பதை உடனுக்குடன் எங்களுக்கு தெரியப்படுத்தினால் போதும்”
மேலாடையை எடுத்துக்கொண்டு அவர் எழுந்தார். அவர் கைநீட்ட குட்டிப்பட்டர் வெற்றிலைச் சுருளை நீட்டினான். கொடுமடம் போற்றியும் எழுந்தார்.
ஸ்ரீகாரியக்காரன் சங்கு எடுத்து ஊத சபை கலைந்தது
கொடுமடம் “உத்தரவை ஒருமுறை நன்றாக உரக்கச் சொல்லிவிடு ஸ்ரீகாரியம்”என்று சொன்னபின் தந்த்ரி விஷ்ணு நம்பூதிரியுடன் நடந்தார்.
பேஷ்கார் மாதவராயர் நீலன் பிள்ளையை முறைத்தபின் அவர்களை தொடர்ந்து சென்றார்
ஸ்ரீகாரியம் மீண்டும் ஒருமுறை சங்கொலி எழுப்பி “அதாகப்பட்டது ராஜகீய உத்தரவு என்னன்னா….”என்று அறிவிப்பை தொடங்கினார்.
நீலன் பிள்ளைக்கு மட்டும் கேட்கும்படி “ஆளைக் கொன்னு போட்டா தீரும்” என்றார் மாடன் பிள்ளை
“ராஜரத்தம்… அது மண்ணிலே விழுந்தா மாபாவம்”என்றார் நீலன் பிள்ளை. “அதோட இப்டிச் சொன்னது மகாராஜா காதிலே விழுந்தா தலையும் இருக்காது”
மாடன் பிள்ளை வெளிறிவிட்டார்
“ஆயிரம் காதுள்ளவர் மகாராஜா. அடியாளர் காதெல்லாம் மகாராஜா காதுதான்” என்று நீலன் பிள்ளை மீண்டும் சொன்னார்
மாடன் பிள்ளை “வேய், விட்டிரும் வே” என்றார். அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது
நீலன் பிள்ளை புன்னகைத்து “நமக்குள்ள என்ன மச்சினா? இதென்ன பேச்சு?”என்றார்
மாடன் பிள்ளை படபடப்புடன் “வாறேன், சோலி கிடக்கு” என்று கோயிலை நோக்கி ஓடினார்.
நீலன் பிள்ளைக்கு வெற்றிலைபோட வாய் துடித்தது. அவர் தன் வண்டியை நோக்கிச் சென்றார். செல்லத்தை எடுத்து வெற்றிலையில் நீறு பூசிக்கொண்டிருந்தபோது சாத்தப்பன் ஆசாரி அருகே வந்தார்
“புண்ணியமாப் போச்சு… நல்ல பயலாக்கும்”என்றார்
“வெத்தில போடும் ஓய் ஆசாரி”
“போட்டாப் போச்சு”
நீலன் பிள்ளை அவரே வெற்றிலை சுருட்டி சாத்தப்பன் ஆசாரிக்கு கொடுத்தார்.அவர் வாங்கி வாயிலிட்டுக்கொண்டார்
“கேட்டீரா ஆசாரி, இப்ப இந்த அரசமரம் இந்தா நிக்குது. இதிலே வந்து உக்காந்திட்டுப்போற பறவைகளை நமக்கு தெரியுமா ஓய்? நாம யாருமே இன்னும் பாக்காத பறவைகூட வந்து உக்காந்திட்டு போகும்லா?”என்றார் நீலன் பிள்ளை
“பின்ன அப்டியாக்குமே” என்று மேலே அரசமரத்தின் விளிம்புவட்டத்தை பார்த்தபடி சாத்தப்பன் ஆசாரி சொன்னார் “ஆகாசமுல்லா!”