முதுநாவல்[சிறுகதை]
அன்புள்ள ஜெ,
தலைக்கெட்டு காதரும் இடும்பனும் போரிடும் காட்சியின் வர்ணிப்பை படித்தேன். அவர்கள் மோதிக்கொண்ட கணத்தில் அப்படியே கதையை ஃபோக் பாடலுக்குள் கொண்டுசென்று அவனுடைய கண்வழியாகச் சொல்ல ஆரம்பித்ததுதான் கிளாஸ். ஒரு படைப்பாளி இயல்பாக மூதாதையரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது இதுதான். இங்கே என்னதான் சொன்னாலும் அதெல்லாம் யதார்த்தவாத எல்லைக்குள்தான் நிற்கும். அதில் மிகை இல்லாவிட்டால் அந்த கதைக்கு குறியீட்டு அர்த்தமே வராது. தரைவிட்டு கதை மேலே எழமலேயே போய்விடு
அந்தக் கதையின் அமைப்பே அப்படித்தான் இருக்கிறது. மிகத்தெளிவான வரலாற்றுக்குறிப்புடன் கதை தொடங்குகிறது அப்படியே மேலெழுந்து ஃபோக்குக்குள் நுழைகிறது. மேஜிக்கலாகி செவிவழிச்செய்தியாகி தொன்மமாக ஆகி முடிகிறது. அந்த சரித்திரத் தொடக்கம்தான் கடைசியில் அது தொன்மத்தில் முடிவதற்கான அடிப்படையை அளிக்கிறது
***
அன்புள்ள ஜெ,
‘முதுநாவல்’ சிறுகதையில் வரும் இடும்பன் நாராயணனும், தலைக்கெட்டு காதரும் ஓர் மனம் கொண்ட இரண்டு உடல்கள் என்றே எனக்கு தோன்றுகிறது.. இருவருக்கும் வித்தியாசமே இல்லை. உலகுக்கு ஒருவன் ரவுடி, இன்னொருவன் போலீஸ். ஆனால், அவர்கள் ஒரே ஒருவர் தான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் போர் புரிந்திருந்த போது தான் அதை தாங்களே உணர்திருப்பர்.
இடும்பன், காதர், இருவரின் வாழ்க்கை சித்தரிப்புகள் நேர்த்தியாக இருந்தன. அவற்றின் ஊடாக அவர்கள் புரிந்த சண்டையை பார்க்க முடிகிறது. ‘தான்’ என்ற மனநிலை கொண்ட இருவரும், அயராது சண்டை செய்யும் போது, அது அவ்விருவரிடமிருந்தும் விலகுகிறது. பாறசாலை சந்தையில் நடந்த அந்த கடும் போரில், அவர்கள் மாறி மாறி அடித்துக் கொண்டு அதனை கண்டடைந்தனர். இரு பெரும் மலைகளின் போர் போல் இருந்தது அவர்களின் யுத்தம்.
போரின் உக்கிரதைப் பாடும் ‘தேற்றக்கடுவாயும் ஈற்றப்புலியும்’ சந்தைப்பாடல் உண்மையில் புலிக்கும், கழுதைப்புலிக்கும் நடக்கும் யுத்தம் போன்றே உள்ளன. இங்கே அவர்கள் ‘அடியடி’ என அடித்துக் கொண்டும், சமயங்களில் இருவரும் சேர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டும், ஆயுதங்களை இருவரும் எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தாமல் இருந்ததும் வியப்பாகவே இருந்தது. அவர்கள் போரிட்டது தங்களுக்காக, வேறு யாருக்காகவும் இல்லை. இதில் வெல்வதும், வீழ்வதும் அவர்களுக்கு சமமே.
இருவரும் ஓயாமல் அடித்துக் கொண்டு அந்த முதுநாவல் மரத்தடியில் வந்தமர்ந்த போது, முதியவன் ஒருவனிடம் நீர் வாங்கி இடும்பன் குடித்து பிறகு காதருக்கு கொடுத்ததும், காதரை இடும்பன் கட்டி இழுத்து வர ஊர்மக்கள் அவன் மேல் எச்சில் துப்பியதைக் கண்டு இடும்பன் கோபம் கொண்டதும், இருவரும் மற்றோரின் மேல் தாங்கள் வைத்திருந்த மரியாதையைக் காட்டுவதாக உள்ளது. இது, உண்மையில் இவர்கள் இருவரும் தான் மூடர்களா அல்லது சுற்றிக் கூடி இச்சண்டையை வேடிக்கைப் பார்த்த மக்கள் தான் மூடர்களா என்ற சந்தேகமும் எழுகிறது.
சண்டை முடிந்து, காதர் ஜெயிலிலும், இடும்பன் மலையிலும் வாழ்ந்த போதும், அவர்கள் இருவரும் அந்தச் சண்டைக்குப் பின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்கள் பேச நினைத்த அத்தனை வார்த்தைகளும், அவர்களின் ‘அடியடி’களே பேசி ஓய்ந்துவிட்டது. இனிமேல் அவர்களுக்கு பேச ஒன்றுமே இல்லை. அவர்களின் மனம் அந்த போரினால் ஆழ்ந்த அமைதி அடைந்தது. இடும்பன் ஊமைச்சாமி ஆனதும், காதர் அந்த முதுநாவல் மரத்தடியில் சூஃபி ஆனதும் மனித மனங்களின் இரு எதிர் எல்லைகளின் வெளிப்பாடாக உள்ளது. ஒரு எல்லையிலிருந்து மற்றோரு எல்லைக்கு செல்ல, ஒரு வினாடியும் ஆகலாம், அல்லது ஒரு வாழ்க்கை முழுதாக வாழ்ந்தாலும் முடியாமலும் போகலாம்.
இம்மாதிரியான மனித மனங்களின் போர்களை அந்த முதுநாவல் மரம் காலந்தொட்டு பார்த்துக்கொண்டே இருக்கிறது. போர்களின் முறையில் மாற்றம் வந்தாலும், போர் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த முதுநாவல் மரத்தடியில் இருவருக்கும் நீர் தந்த அந்த வயதானவருக்கும் அந்த முதுநாவல் மரத்திற்கும் வேறுபாடே இல்லை. அது நிழல் தந்தது, அவர் நீர் தந்தார், போருக்கு. அல்லது போர் முடிவிற்கு!
அன்புடன்,
பிரவின்
தர்மபுரி
***
கரு [குறுநாவல்]- பகுதி 2
கரு [குறுநாவல்]- பகுதி 1
அன்புள்ள ஜெ,
இந்தக்கதைகளின் ஆன்மிகமான பின்னணியிலேயே எனக்கு வாசிப்பதற்கும் கற்பனைசெய்வதற்கும் நிறைய உள்ளது. கரு அப்படிப்பட்ட கதை. அது வரலாறு தொன்மம் கனவு மூன்றும் கலந்தது. எங்கே எது முடிந்து இன்னொன்று தொடங்குகிறது என்று கண்டறியவே முடியவில்லை. சூசன்னாவுக்கும் பெட்ரோஸுக்குமான உறவு விசித்திரமான ஒன்று. அவளுக்கு அவர் மனதில் தனக்கு இடமில்லை என்று தெரியும். ஆனால் அவளை கவர்ந்து இழுப்பதே அவருக்கு எதுவுமே ஒரு பொருட்டு இல்லை என்பது. எனக்கு நான் கூட பொருட்டில்லை என்கிறார். அப்படியென்றால் அவருக்கு என்னதான் பொருட்டு? அதை கதை சொல்லவில்லை
ஆன்னியும் சூசன்னாவும் திபெத்துக்குள் நுழைந்தவர்கள் என்ற அளவிலே ஒன்றானவர்கள். அதற்கு அப்பால் அவர்களுக்கிடையே உள்ள உறவு என்ன? அவர்கள் இருவரின் மனநிலைகளுமே வேறு. ஆன்னியை ஒரு ஆழமில்லாத மதப்பிரச்சாரப் பெண்ணாகவே நினைக்க தோன்றுகிறது. சூசன்னா ஸ்பிரிச்சுவலான பெண். இருவரையும் இணைப்பது சார்ல்ஸ் என்ற தொன்மம்தான்.
அடுக்குகளாக சென்றுகொண்டே இருக்கும் இந்நாவலை விரிவாகப்பேசிப்பேசித்தான் புரிந்துகொள்ள முடியும். கொள்ளையர்கள் பயணிகள் மதப்பரப்புநர்கள் என்று வேவ்வேறு வகையான கதாபாத்திரங்களின் ஒரு பெரிய சங்கமம் இந்தக் கதை
மகாலிங்கம்
வணக்கம் ஜெ.
கரு குறுநாவலை வாசித்தேன். அசாத்தியமான கதை. ஷம்பாலா மட்டுமல்ல இதே மாதிரியான ஆன்மிகக் கருத்துருக்களுக்கு ஒளிகளுக்கும் முன்னே கரு வடிவாக உள்ளுறைந்திருந்த ஆற்றல் குறித்த சிலிர்ப்பை உருவாக்கும் கதை. இடர்களில் துயருரும் அன்னையர்களின் மன்றாடல்களுக்குக் கனிந்து அருளுகின்றன தெய்வங்கள். அன்னையர்கள் தெய்வங்களுக்கு நெருக்கமானவர்களாக இருக்கின்றனர்.
இந்தக் கதை தன்னளவில் இருக்கும் ஆன்மீகத்தளங்ககையும் ஆன்ம அலைதல்களையும் தாண்டி அன்னையர் கதையாகவே எனக்கு பட்டது. இறந்த தங்கள் குழந்தைகளைக் கனவு காணாமற் இருந்த அன்னையரே இல்லை. அந்தக் குழந்தைகள் அவர்களின் ஆழுள்ளத்தில் கனவுகளாலும் தனிமையில் சிந்தப்படும் கண்ணீராலும் வளர்கின்றன. மனிதர்கள் தமக்குள் இப்படியாகப் புனைந்து கொள்கிற கனவுகளும் கருவாக உறைகின்றன. வஜ்ரயான பெளத்தம், ஷம்பாலாவின் ஒளிதிகழ் நகர் என அனைத்துமே இப்படியாகத்தான் உறைகின்றன. அவையனைத்துமே வெளியிலிருந்து செலுத்தப்படும் அபூர்வ ஒளிக்கதிர் பெற்று கருவிலிருந்து எழுபவைப் போல எழுகின்றன.
ஒவ்வொருவரும் திபெத்தில் கண்ட சார்ல்ஸைப் போல. திபெத்தின் பனி சூழ் பயணமும் சாகசங்களும் கண்முன்னால் விரிந்திருந்தன. மிகச்சிறப்பான ஆன்மீகமும் சாகசமும் நிறைந்த கதை.
அரவின் குமார்
மலேசியா
***