மூன்று பறவைகள்

மூன்று டைனோசர்கள்

மூன்று வருகைகள்.

செங்கோலின் கீழ்

இரண்டுநாட்களாகவே பக்கத்து அறையில் ஒரே சந்தடி. குருவிக்குரல்களுக்கு வேகம் கூடியிருப்பதைக் கண்டேன். கீழே நின்று பார்த்தபோது மூன்று குருவிக்குஞ்சுகளும் கூண்டின் விளிம்பில் வந்து அமர்ந்து அலகை மேல்நோக்கி ஏந்தி வைத்திருந்தன. தீனிக்கான தவம்

அவற்றின் அன்னையை அரைக்கணம்கூட பார்க்கமுடியாது, அத்தனை விசை. டிவிட் என்று ஓர் ஓசை, சென்றுவிடும். அதன் உத்தியே நாம் பார்க்கும்போது சட்டென்று பறந்து சென்று கூட்டில் இருந்து நம் கவனத்தை கலைப்பதுதான்.

ஆனால் குஞ்சுகளுக்கு இன்னும் அபாயம் ஏதும் பழகவில்லை. அன்னை சொல்லிக்கொடுக்கவில்லை. ஆகவே அவை கீழே என்னை கூர்ந்து பார்த்தன. மென்மையான சிறகுகள் உருவாகிவிட்டிருந்தன. அலகு கூர்கொண்டுவிட்டிருந்தது. வெளியுலகை பார்க்கும் ஆர்வம் எழுந்துவிட்டது

இரண்டு நாட்கள் இங்கே புயல் அடித்தது. தென்னை மரங்கள் நாணல்கள் போல வெறிகொண்டு சுழன்றன. தென்னை மட்டைகள் இறகுகள் போல பறந்தலைந்தன. ஆனால் அந்தப்புயலிலும் அன்னைக்குருவி வெளியே சென்று உணவு தேடி கொண்டுவந்து ஊட்டிக்கொண்டிருந்தது. ஒருநாளுக்கு பத்துப்பதினைந்து தடவை. புயல் காற்றில் வீசியெறியப்பட்டதுபோல சன்னல் வழியாக உள்ளே வந்து விழும். ஊட்டிவிட்டு அந்தக் காற்றிலேயே ஏறி வெளியே செல்லும்.

பின்னர் குஞ்சுகள் கீழே என்னைப் பார்த்து கூச்சலிட தொடங்கின. “அம்மாதான் வரல்லையே, உனக்கென்ன கேடு, தீனி தரவேண்டியதுதானே?” அவற்றின் வாயில் இளஞ்சிவப்பான ஒரு வட்டம். அம்மாவுக்கு வாயைப் பிளந்து காட்டுவதற்கு உரியது. அரையிருட்டிலும் அம்மா உணவூட்ட வசதியாக. அந்த வட்டம் குறைந்து இருபக்கமும் இரு தீற்றல்களாக மாறிவிட்டிருந்தது.

இருநாட்களாக இரவுகளில் அம்மா வருவல்லை. குஞ்சுகள் மட்டும் ஒடுங்கிக்கொள்கின்றன. அம்மா அதிகாலையில் உணவுடன் வந்துவிடுகிறது. அதற்கு ஒரே சண்டை. ஒன்றையொன்று கொத்திக்கொண்டு பூசலிடுவதையும் பார்த்தேன்

இன்று காலை பக்கத்து அறையில் இருக்கையில் ஒரே சத்தம். என்ன என்று சென்று பார்த்தேன், குஞ்சுகள்அறையெங்கும் சுழன்று பறந்துகொண்டிருந்தன.  சிறகு ஓய்ந்ததும் ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுத்தபின் மீண்டும் சுற்றிப் பறந்தன.

அம்மாவும் அப்பாவும் வந்து கூப்பிட்டன. அவை ட்ர்ரட் ட்ர்ரட் என்று ஓர் ஓசையை எழுப்பின. குஞ்சுகள் பெற்றோருடன் செல்ல தயங்கின. சன்னலில் அமர்ந்து வெளிவானை ஏக்கத்துடன் பார்த்தன. தூக்கம் முற்றாக கலையாததுபோல ஆங்காங்கே அமர்ந்திருந்தன

அம்மா ஆணையிட்டது. கடிந்துகொண்டது. அவை தயங்கி எழுந்து பறந்து தொடர வெளியே பாய்ந்து காற்றில் மிதந்தது அன்னை.  நான் சன்னல் வழியாக பார்த்துக்கொண்டு நின்றேன். அவை கோணலாக பறந்து கருவேப்பிலை மரம்நோக்கிச் சென்றன. மீண்டும் எழுந்து சுழன்று அமைந்தன. வானம் சிறகுக்கு வசப்பட்டுவிட்டது. கூட்டுப்பருவம் முடிந்துவிட்டது

அருண்மொழியிடம் சொன்னேன்,  “பார் மொத்தமே பதினைந்து நாட்கள்.அவள்தான் அம்மா. நீ இருபத்தாறு வருடங்களாக வைத்து ஊட்டிக்கொண்டிருக்கிறாய்” அவள் கோபித்துக்கொண்டு கீழே போய்விட்டாள்.

மீண்டும் அறைக்குள் வந்து சுழன்று பறந்தன. மீண்டும் சென்றன. ஆனால் பகல் முழுக்க பதற்றம். அம்மா வந்து குருவிகளை அழைத்துச் சென்றுவிட்ட பிறகும் என் அறைக்குள் கூரிய டிப் டிப் ஒலி.முதலில் பக்கத்து அறையில் கேட்கிறது என்று நினைத்தேன். பிறகு தேடிப்பார்த்தால் கணினித் திரைக்கு பின்னாலேயே அமர்ந்திருந்தது ஒரு குஞ்சு

அதை கையில் எடுத்தால் பதமாக அமர்ந்துகொண்டது. கொண்டு சென்று பக்கத்து அறையில் விட்டேன். அங்கே அம்மா இல்லை. இது மட்டும் சுற்றிச்சுற்றி பறந்தது. அங்கேயே அமர்ந்து டிப் டிப் என்று சொல்லிக்கொண்டே இருந்தது, அம்மா திரும்பி வராமலேயே போய்விடுமா? இதை பராமரிக்க முடியாமலேயே ஆகிவிடுமா?

கையில் நெல் கொண்டுசென்று கொடுத்தேன். சாப்பிட அதற்கு தெரியவில்லை. ஆனால் பசி தெரிந்தது. அருகே சென்றாலும் பறக்கவில்லை. டிப் டிப் டிப் என்று ஓர் ஓசை. என்ன செய்யும் என்று குழம்பிக்கொண்டே இருந்தேன்.

ஆனால் மதியம் அன்னை வந்துவிட்டது. அது மட்டும். இதை கூட்டிக்கொண்டு சென்றது. திரும்பி ஒருமுறை மூன்றுமே அன்னையுடன் அறைக்குள் வந்து பறந்தன. சென்றுவிட்டன

அந்தி வரை வெளியே இரு குருவிகளின் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. எங்கள் வீட்டைச் சுற்றி வெவ்வேறு இடங்களில் அன்னையும் தந்தையும் அமர்ந்து க்ர்ட் க்ர்ட் என்று ஒலியெழுப்பின. இந்த பகுதியில் பறந்த ஒரு காகத்தை அவை இரண்டும் சேர்ந்து கொத்தி விரட்டின.

அப்போதுதான் பயிற்சி நடக்கிறது என்று தெரிந்தது. மாலை ஆறுமணிவரை ஒரே சத்தம். அதன்பின் அமைதி. கூட்டுக்கு திரும்பி வருமா என்று பார்த்தேன். ஏழுமணிவரை பார்த்தபின்னர்தான் அவை வராது என்று உறுதியாயிற்று

அவ்வளவுதான், மிகச்சிறிய அழகிய ஒரு பிறவிநாடகம் முடிவுற்றது. இனி அவை வானுக்குரியவை.வானம் அவற்றை ஏந்திக்கொள்ளட்டும்.

முந்தைய கட்டுரைஆகாயம் [சிறுகதை]
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–70