இணைவு, ராஜன் – கடிதங்கள்

இணைவு [சிறுகதை]

போழ்வு [சிறுகதை]     

அன்புள்ள ஜெ,

போழ்வு இணைவு இருகதைகளும் இணைந்து ஒரு நீண்ட குறுநாவலாக ஆகின்றன. அதற்குள் வேலுத்தம்பியின் ஒரு வாழ்க்கை நிகழ்ந்து முடிகிறது. அகரவரிசையிலே சொன்னால் ராஜா கேசவதாஸ் பெயரிடும் இடத்தில் தொடங்கி கடைசியில் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையின் பெயரைச் சொல்லி வெட்டுடா என்று கூவும் இடம் வரை.

அதுவரை எவ்வளவு பதற்றம் எவ்வளவு அலைக்கழிவு. வெளியே இருந்து பார்த்தால் சின்னவிஷயமாக தெரியலாம். ஆனால் அந்த சின்னநாட்டின் திவான் பதவிக்கும் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கும் இடையே அவஸ்தையில் எந்த வேறுபாடும் இருக்க வாய்ப்பில்லை

செந்தில்குமார்

***

அன்புள்ள ஜெ.

இணைவு கதை வாசித்தேன். அபாரமான கதை என்றே கூறுவேன். எழுதித் தீராத கைகளின் ஆழமான வெற்றி இக்கதை. இது என்னை வரலாற்றுக்குக் கூட்டிச்சென்று பல படிப்பினைகளைத்  தந்துள்ளது என்றே நினைக்கிறேன். இலங்கையிலுள்ள எனக்கு இது சரியான புரிதலைத் தருகிறது.  கேரளத்தின் ஒருபக்க வரலாற்றையும் கதாபாத்திரங்களின் வழியாக முன்வைத்துள்ளீர்கள். தோமா என்ற வெள்ளையரின் பெயர் எனக்கு ஊமைச்செந்நாயில் துரைக்கு சேவகம் செய்பவனை ஞாபகப்படுத்துகிறது. இது வரலாற்றை ஆய்வுடன் எழுதுதல் என்ற வகைப்பாடு என்று நினைக்கிறேன். கதையில் காந்தீயத்தின் தொனி தெரிகிறது. அது நமது அரசியலில் செத்துப்போன ஒன்று என்பதனால் என்னால் தெளிவாகவே உணரமுடிகிறது.  இக்கதை மேலும் பல விவாதங்களை தமிழ் மலையாள சூழலில் எழுப்பும் போல தெரிகிறது.

இது தொடர்பாகச் சில குறிப்புகள் எழுதியுள்ளேன்.

https://suyaanthan.blogspot.com/2020/05/blog-post_43.html?m=1

சுயாந்தன்.

ராஜன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

ராஜன் கதையை இதற்கு முன்னால் வந்த வணங்கான் போன்ற கதைகளுடன் ஒப்பிட்டு வாசித்துக்கொண்டேன். யானைமேல் ஏறுவது என்பது ஒரு பெரிய எழுச்சி. மேகங்களில் ஏறிக்கொள்வது. அதன்பின் அவன் ஊருக்கே வரவில்லை என்ற இடத்தில்தான் கதை உச்சம் கொள்கிறது

கேரளவரலாற்றில் மண்ணே யானைக்கு உரியது என்பதில் ஒரு அற்புதமான கவித்துவம் உள்ளது

ராஜேந்திரன். எம்

***

வணக்கம் ஜெ

ராஜன் சிறுகதையை வாசித்தேன். பூதத்தான் நாயரை பர்வதராஜன் தன் மேல் அமர்த்திக் கொண்டதை நீலகண்டபறவையைத் தேடி நாவலில் வரும் மணீந்திரநாத்தை அமர்த்திக் கொண்ட யானையுடன் ஒப்பிடத் தோன்றியது. இவர்கள் ஏன் யானைக்கு அணுக்கமாக இருக்கின்றனர் என்ற கேள்வி எழுகிறது. பூதத்தானுக்கு யானை என்பது தெய்வ வடிவம். மணிந்தீரநாத்க்கு யானை என்பது குழந்தை அணுகுவதைப் போன்ற உணர்வுத்தான். அவர்கள் இருவரையும் அள்ளி எடுத்துத் தனக்கு நெருக்கமானவர்களாக ஆக்கிக் கொள்கிறது. உலகில் இருக்கும் பிரம்மாண்டமான புவிராஜன் ஒன்றின் முன் பணிந்து கைகூப்பி நிற்கும் எளிய மனிதன். இங்கு நம் இடமென்ன என்று நினைக்க செய்யும் பெருந்தோற்றமது.

அரவின் குமார்

முந்தைய கட்டுரைகூடு,பிறசண்டு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉதிரம்,கவி,இசூமியின் நறுமணம்- கடிதங்கள்