தேனீ, ராஜன்-கடிதங்கள்

ராஜன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ராஜன் கதை ஒரு ஃபேபிளின் தன்மையுடன் இருக்கிறது. இந்த வகையில் பல வடிவங்களை இந்தக் கதைவரிசையில் முயற்சி செய்திருக்கிறீர்கள். நிழல்காகம் போன்ற கதைகளில் தத்துவ விவாதம் வழியாக ஃபேபிள் சிறுகதைக்குரிய சப்டெக்ஸ்ட் கொண்டதாக ஆக்கப்பட்டுள்ளது. இந்தக்கதையில் யதார்த்தவாதக் கதை நகர்ந்து சென்று ஃபேபிள் ஆக மாறுகிறது.

ஆனால் இந்தவகையான கதைகளில் எப்போதுமே நுட்பமான குறிப்புகளை கொடுத்துவிடுவீர்கள். கதைக்குள் பேச்சுவழியாக அது வந்துவிடும். இன்னொரு முறை கதையை வாசித்தால் அந்த மென்மையான முள்ளை கண்டுபிடித்துவிட முடியும். இந்தக்கதையில் அவைகளை அப்படியே விட்டுவிட்டிருக்கிறீர்கள். அவைகளை அறிந்தால் இந்தக்கதை மேலே திறக்கும் என நினைக்கிறேன்

பூதததான் சாஸ்தா யானைமேல் இருப்பவர். இந்தக்கதையில் கதாநாயகன் பெயர் பூதத்தான். இந்தக்கதையில் அவன் யானைமேல் ஏறுகிறான். பல சித்தர்பாடல்களில் யானைமேல் ஏறுவது என்பது யோகத்தில் ஏறுவது என்பதற்கு அடையாளமாக சொல்லப்படுகிறது. ‘தன்னையறிந்தபின் என்னையவனே யானைமேல் ஏறவைத்தான்’. இந்தக்கதையில் யானை இருட்டு என்றும், மேகம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு குறிப்பும் கதைக்குள் எங்காவது இருந்திருக்கலாம் என்பது என் கருத்து

எஸ்.மாதவன்

பிகு”ஈராறுகால்கொண்டு எழும் புரவி வாசித்தேன். திருமூலர் பற்றிய பகடிக்குறிப்புகள் அருமை.

***

அன்புள்ள ஜெ

பூதத்தான் ஞானம் அடைந்து யானைமேல் ஏறி மேகத்தில் ஊரும் தேவனைப்போல அவனை புழுவினும் கேவலமாக நடத்தியவர்களின் தலைக்குமேல் செல்லும் கதையை வாசித்தேன். யானை அவனை தூக்கி மத்தகத்தின்மேல் வைத்துக்கொள்ளும் கணம்தான் கதையின் கவித்துவம்

அவன் அதை அடைந்தது அர்ப்பணம் வழியாக. அதன் காலடியில் செத்தால் அது மோட்சம் என்ற எண்ணம். அதற்கு தன்னை முழுமையாக அளித்துவிட்டான். அதற்காக மனைவிகுழந்தை எதையுமே நினைக்கவில்லை. பக்தன் பித்துகொண்டு சாமியை தேடிச் செல்வதுபோலச் செல்கிறான்.

அர்விந்த் குமார்

***

தேனீ [சிறுகதை]

அன்புள்ள ஜெ

தேனீ கதை என் அப்பாவின் கதை. அவர் ஒரு அர்ச்சகரின் மகனாக பிறந்தார். எட்டு பேர். அதில் ஏழுபேர் பெண். என் அப்பாவின் வாழ்க்கையே தங்கைகளுக்கு திருமணம் செய்துகொடுப்பதில் செலவாகியது. அவர் திருமணம் செய்துகொண்டது கடைசி தங்கையை திருமணம் செய்து அனுப்பியபின் 46 வயதில்தான். அதன்பிறகுதான் அவருக்கான வாழ்க்கை. ஆசிரியராக இருந்தார். கணக்கு டியூஷன் எடுப்பார். ஒருவழியாக எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டபிறகு படம் வரைய ஆரம்பித்தார். அப்போது வயது ஐம்பத்தைந்து. கை ஒத்துழைக்கவில்லை. ஆனாலும் வரைந்துகொண்டே இருப்பார். ஆனால் வரைந்த எதையுமே வைத்திருக்க மாட்டார். சாயம் காய்வதற்குள் கிழித்துபோட்டுவிடுவார்.

பல ஓவியங்கள் நன்றாகவே இருக்கும். அவருக்கு இம்ப்ரெஷனிஸ்ட் ஓவியங்களில் நல்ல ஈடுபாடு இருந்தது. நான் அவருடைய கலெக்‌ஷனில் ரோரிச்சின் ஓவியங்களைக்கூட பார்த்திருக்கிறேன். அவருக்கு மட்டும் ஒரு வாழ்க்கை அமைந்திருந்தால் ஓவியராக மலர்ந்திருப்பார். அந்த சின்ன ஊரில் சின்ன சூழலில் அவருக்கு நவீன ஓவியம் பற்றி அவ்வளவு தெரிந்திருந்தது. இப்போது அவர் இல்லை. அவரை நினைத்துக்கொள்கிறேன்

எம்.கிருஷ்ணமூர்த்தி

***

அன்புள்ள ஜெ.

உங்களுடைய தேனீ கதை வாசித்திருந்தேன். இதனை என் அனுபவத்தில் இருந்தே மனதுள் தகவமைக்கிறேன் ஜெ.  என்னுடைய அப்பாவின் அப்பா காரைநகரைச் சேர்ந்தவர். அவர் அங்கிருந்து வன்னிக்கு வியாபார நோக்கமாக வந்து செல்வதுண்டு. அக்காலத்தில் அவர் நிலாக்கிழாராக இருந்தார் என்று ஊர்க்காரர்கள் சொல்வார்கள். பின்னர் இங்கேயே (வன்னியில்) வந்து தங்கிவிட்டனர். அந்த நிலப்பிரபுத்துவம் இன்று எமது சந்ததிக்கு இல்லாமல் போய்விட்டது. அதனை நான் இன்று ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன். அப்படி இருந்திருந்தால் மேட்டிமைத்தன்மையால் உண்டாகும் பெருமைக்குணம் தேடல்களை என்னுள் ஒழித்துக்கட்டியிருக்கும்.

எனது தாத்தா இறக்கும் தறுவாயில் இருந்தார். அவரது இளமைக் காலத்தில் காரைநகரில் நாதஸ்வரத்தைப் பிரதான வாத்தியமாகக் கொண்டியங்கும் யாரோ ஒருவரின் இசைக் கச்சேரியைக் கேட்டிருக்கிறார். அது ஏதோ ஒரு சிவன் கோயிலில் என்று எனது அத்தை பின்னாளில் கூறியிருந்தார். அதனால் அவரின் ஆழ்மனம் பாதிக்கப்பட்டு அந்த ரசனை உறக்கநிலையில் இருந்துள்ளது போலும். அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அந்த பாட்டையும் வாத்தியத்தையும் கேட்கவேண்டும் என்று மிக ஒடுங்கிய முகத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். எங்களால் அதனைக் கடைசியில்தான் புரிந்துகொள்ள முடிந்தது. எங்கள் தந்தையாலும் உறவினர்களாலும் அந்த ரசனையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் சிலநாட்களில் மூப்பினால் இறந்துவிடுகிறார்.

இங்கு அமங்கல நிகழ்வுகளுக்கு மங்கல வாத்தியக் கோஷ்டியினர் இசைக்கருவி வாசிப்பதில்லை. அதேபோல நாதஸ்வரமும் வாசிப்பதில்லை. ஆனால் காரைநகரில் இருந்து மேளவாத்தியங்கள் முழங்கவே அவர் இடுகாட்டில் எரிக்கப்பட்டார். அவர் இடுகாடுவரைக்கும் தான் விரும்பிய ரசனையைக் கேட்காமலே போய்விட்டார்.

இந்தக் கதையை வாசிக்கும்போது எனக்கு  அந்த நினைவுகள்தான் உண்டாகிறது. ஆனால் இக்கதையில் வரும் ஆசாரிபோல் அவர் இசையின் ரசனைகளைத் துய்த்தவரல்ல. ஆனால் ஆழ்மனதில் அதுதொடர்பான நினைவுகள் இருந்துள்ளது. எவ்வளவு அழகான ஞாபகங்கள் ஜெ. இதனை எனக்கான கதையாக நினைத்துக்கொள்கிறேன்.

மேலும்,கை தேர்ந்த ஆசாரி சங்கீதத்தில் லயிப்பதெல்லாம் எங்காவது இருந்திட்டு நடக்கும். அதுவும் செவிஞானம் என்பதும், ராகங்களைச் சொல்வதும் அரிது. புனைவில் மிகவும் சாத்தியம். அகல எழுதிய கை ஓயாது. நாளும் விதவிதமான Content கொண்டு எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் எழுதுவதைவிட நாம் வாசிக்கும் வேகம் குறைவாகவே உள்ளது என்று நினைக்கிறேன்.   ஒன்றின் திகைப்பில் இருந்து மீளமுன்னர் இன்னொன்று. மறுபடியும் இன்னொன்று. ஆசாரியும், பிள்ளையும் நுணுக்கமான தேனீக்கள் என்றால் அந்தத் தேனீக்களின் தேனைத் தேடிவரும் சண்முகமணியும் சிறு தேனீதான்.

சுயாந்தன்.

***

முந்தைய கட்டுரைதேவி, சிவம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமுதுநாவல்,கரு- கடிதங்கள்