கூடு,பிறசண்டு- கடிதங்கள்

‘பிறசண்டு’ [சிறுகதை]

அன்புள்ள ஜெ

பிறசண்டு கதை எங்கோ நிஜமாகவே நடந்ததாகத்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் இதை நான் கண்டிருக்கிறேன். என் மாமாவீட்டில் திருட்டு போயிற்று. கேஸ் கோர்ட்டிலே நடந்தது. மாமா திருடனை கண்ணால் பார்த்த சாட்சி. மாமா சத்தம் கேட்டு கண்விழித்துப் பார்த்தால் திருடன் ஓடுவதை கண்டிருக்கிறார். சின்னப்பையன்தான், இந்தக்கதையிலே வருவதுபோல

பிறகு போலீஸ் ஸ்டேஷனிலும் கோர்ட்டிலும் விசாரணை. அவர்கள் தொடர்ச்சியாக சந்தித்திருக்கிறார்கள். நடுவிலே இவருக்கு சுகரினால் மயக்கம் வந்தபோது அவன் டீ வாங்கி தந்திருக்கிறான். அப்படியே நெருக்கமாகிவிட்டார்கள். நல்ல அன்பு உருவாகிவிட்டது. கேஸில் இவர் சாட்சி சொல்லவில்லை. அவன் தப்பிவிட்டான். ஆனால் அவர்கள் இருவரும் நல்ல நட்புடன் இருந்தார்கள். மாமா வீட்டில் ஏதோ பிரச்சினை என்றபோது அவன்தான் வந்து தீர்த்துவைத்தான்

இதெல்லாம் நடப்பதுதான். மனிதர்கள் மனிதர்களை இயல்பாக சந்திக்கிறார்கள். மனிதர்கள் பழக ஆரம்பித்தால் அன்பானவர்களாக ஆகிவிடுவார்கள். திருடன் போலீஸ் இதேபோன்ற அடையாளங்கள்தான் பிரச்சினை

எஸ்.கிருஷ்ணன்

***

அன்புள்ள ஜெ,

இரண்டு எதிரெதிர் துருவங்களாக ‘பாட்டா’வும், ‘கள்ள’னும் உள்ளார்கள். வாழ்வில் வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று ‘இறகு’ போல மனம் கொண்டவன் கள்ளன். இப்படித்தான் நிகழ்வுகள் இருக்க வேண்டும் என்று முன்னமே தீர்மானித்து வாழ்பவர் ‘பாட்டா’. அப்படி  அவர் இருந்ததனாலேயே அவர் 4 ஆண்டு காலம் சிறையில் இருக்க வேண்டியது ஆனது.
கள்ளனோ திருட வந்த இடத்தில அமைதியாக குத்திட்டு ஒக்காந்து யோசித்ததை,  பாட்டாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரை பொறுத்த வரையில் திருடன் என்பவன் அவசரத்திலும், பொறுமையின்மையிலும் செயல்படுபவன். அதனாலே அவன் திருடத்தான் வந்திருக்கான் என்று அவருக்கு தெரியவில்லை. மாறாக, கள்ளனோ அமைதியாக வந்து, அமைதியாக திருடி, அமைதியாக சென்றான்.
சிரோமணி பாட்டா, தன்னைப்பற்றி மட்டுமே யோசித்து வாழ்வில் நன்றாக படித்து, அரசாங்க வேலைக்குப்போய்  கௌரவமாக வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதையே தன் வாழ்நாள் லட்சியமாக வாழ்ந்ததால், அவர் ஒரு கடிவாளம் போட்ட குதிரை போல ஆனார். உலகின் நல்லது/கெட்டதுகளின் பிரித்தறியும் பக்குவம் அவருக்கு கிட்டவில்லை. சற்றே யோசித்துப் பார்த்தால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் முந்தைய தலைமுறையிலேயே பலபேர் இப்படித்தான் இருப்பார்கள். குறிப்பாக, குடும்பத்தில் முதல் பட்டதாரிகள். இவர்கள் தங்கள் ஊரையும் உடமைகளையும்  விட்டு வேறு எங்கோ சென்று படிப்பது, மிகப்பெரும் சவால். அவர்களால் தங்களின் இயல்பை விட்டு சமரசம் செய்து கொண்டு புதிய ஊர்களில் வாழசிரமப்படுவார்கள். அதனாலேயே அவர்கள் மிகவும் தனிமையாகிறார்கள். தனிமை ஆன பின்பு அவர்களுக்கு தெரிந்தது படித்து முன்னேறுவது மட்டுமே. இப்படிப்பட்ட ஒருவரகத் தான் சிரோமணி பாட்டாவை என்னால் பார்க்க முடிகிறது.

வீட்டில் உள்ளவர்களால் இவர்களை புரிந்து கொள்வது மிகவும் கஷ்டம். அவர்களின் உலகம் வேறு. உலகத்தின் நிகழ்வுகள் வேறு. கள்ளன், தன்னைக் காட்டிக் கொடுக்க கூடாது என்று தன்னுடன் சொல்லும் போது கூட, அவர் அவனிடம் அமைதியாக உரையாடிக் கொண்டிருந்தார்.

வீட்டில்  கிடைக்காத உறவின் உரையாடல்கள் அவருக்கு அந்த கள்ளனிடம் கிடைத்தது. அதனாலோ என்னவோ அவன் விடைபெறும் முன், ‘அடிக்கடி வீட்டிற்கு வாடே’ என்று சொல்லி அனுப்பினார்.

அன்புடன்,

பிரவின்

தர்மபுரி

கூடு [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

கூடு கதையை வாசிக்கும்போது ஒரு விஷயத்தை நினைத்துக்கொண்டேன். ஒவ்வொருவரும் ஒரு மொனாஸ்ட்ரியில் இருந்து இன்னொன்றுக்குச் சென்றுகொண்டே இருக்கிறார்கள். இதில் வரும் பயணச்சித்தரிப்பும் சரி, நிலவர்ணனையும் சரி ஒரு மொனாஸ்ட்ரியில் இருந்து இன்னொன்றுக்குப் போகும் பாதைதான். இல்லையா?

அந்த பார்வை வந்ததும் என் வாசிப்பே வேறாக ஆகிவிட்டது. அத்தனை மொனாஸ்ட்ரிகள் இருந்தும் நோர்பு ஏன் தெற்குவரை வந்தார். இவர்கள் ஏன் வடக்கே செல்கிறார்கள்? அவ்வளவு தேடித்தேடி இடங்களை கடந்து சென்றபிறகுதான் எங்காவது அமரமுடியுமா என்ன?

அஸ்வின்குமார்

***

என் அன்பிற்கினிய ஜெ,

இந்த சிறுகதை வாசித்து முடிக்கையில் ஓர் மெளனம் என்னுள் குடி கொண்டது ஜெ. அதீத மெளனம். அந்த மெளனம் ஓர் இல்லாமையை உணரச் செய்தது. எப்பொழுதும் உங்கள் ஆன்மீகம் சார்ந்த எழுத்து என்னை மிகவும் பாதிக்கிறது. ஏனோ நீங்களே அதில் வாழ்ந்து பார்த்து விட்டு அதன் முழுமையையும் எங்களுக்கு எழுத்தின் வழி கடத்துவதாக உணர்கிறேன். அதனாலோ என்னவோ.

நான் பத்தாம் வகுப்பில் அஷூதி தேஷ்பாண்டே எழுதிய “To the Land of Snow” என்ற பயணக்கட்டுரையை படித்தது நினைவிற்கு வந்தது. இன்னமும் பனி படர்ந்த மலைச் சிகரங்களை நான் பார்த்ததில்லை. பார்க்க வேண்டுமென்ற எண்ணம் அவரின் எழுத்துக்களால் உருவானது. பஞ்சகுளி ஆறு, முன்சியாரி, பூடியா கிராமம் போன்ற இடங்களை நான் போக விரும்பும் இடங்களாக கூகுல் வரைபடத்தில் சேமித்து வைத்திருப்பதும் அவரால் தான். அது ஓர் பயணக் கட்டுரை. பொதுவாக ஆங்கில கட்டுரை தாளில் அந்த வினா கேட்டால் யாரும் எழுத மாட்டார்கள். நான் அது வந்தால் எழுதுவதற்கு மிகத் தயாராக இருப்பேன். இன்று அதை நினைவு படுத்திவிட்டீர்கள் ஜெ.

ஆனால் நீங்கள் எழுதியிருப்பது பயணக் கதை. இந்தப் பயனத்தில் உடலளவிலான பயணம் என்பதைத் தாண்டி ஆன்மப் பயணத்தையும் அளித்திருக்கிறீர்கள். முக்தானந்தா பயணத்தைத் தொடர்ந்ததாக சென்றுகொண்டிருந்த நான் சிறிது தூரத்தில் அவரை மறந்து உங்களைப் பொருத்திக் கொண்டேன். பின் கனவுகளால் மட்டுமே பயணிக்க முடிந்த பெண் என்னை அதில் பொருத்தி தரிசனங்கள் செய்தேன். ஒன்றன் பின் ஒன்றாக தேடல்; கூடுமான எல்லை முட்டி பார்த்துவிடத் துணியும் தெம்பை அந்த பயணிக்கு அளித்து விட்டதற்காய் நன்றி.

நோர்பு திரக்பா வடக்கிருந்து தெற்கு நோக்கி வந்தது போலவே, முக்தானந்தா தெற்கிருந்து வடக்கு நோக்கி சென்றிருக்கிறார். இருவரும் மேற்கொண்ட புற நோக்கான ஆன்மப் பயணம். திரும்ப நோர்பு திரக்பா அவர் ஆரம்பித்த இடத்திரற்கே வந்தது போல இவரும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டார். இவரும் நோர்பு திரக்பா வை சந்தித்திருக்கக் கூடும் அந்த மலைச் சரிவில். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் தன் ஆன்மாவிற்கான ஒன்றை கை கொள்ளாமல் திரும்பியிருக்கமாட்டார்.

கூடு பற்றிய உங்கள் விளக்கங்கள் மேலும் ஓர் ஆன்மீகத் தேடலைச் சொன்னாற் போலிருந்தது. ‘மூன்றுமுறை உங்கள் உடலை திறந்து வெளியேறுங்கள்’ என்ற வாக்கியம் மிகவும் சிந்திக்க வைத்தது. பல வகைகளில் நாம் கூடுகளை உருவாக்கிக் கொள்ள முடியும், அதன் மூலம் ஆன்மாவை அடுத்தகட்ட நகர்வுக்கு இட்டுச் செல்லலாம் என்ற பிரமை ஏற்பட்டது ஜெ. அதை வாழ்ந்து காட்டியது நோர்பு திரக்பா. ராப்டனும் அத்தகையதோர் பயணத்தில் இருக்கலாம்

ஓர் இல்லற வாழ்விலிருக்கும் என் போன்றவர்கள் கூடுகளை எப்படி, எப்போது, சமைத்துக் கொள்ளலாம் என்ற கேள்வி எழுகிறது என்னுள்? உங்கள் வாழ்வில் அப்படிப்பட்ட எத்தனையாவது நிலையிலிருக்கிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது என்னுள். முடிந்தால் பகிருங்கள் அன்பு ஜெ. நீங்கள் குறிப்பிட்ட அனைத்து இடங்களையும் கூகுள் வரைபடத்தில் தேடி கண்டு கொண்டேன். அது தவிறவும் அதன் அழகுகளை படங்களின் வாயிலாகவும் கண்டேன். தெரியாத பல இடங்களின் முகவரிகளை அளித்தமைக்கு நன்றி ஜெ.

இடங்கள்: 

மலையடிவாரத்தில் தனித்திருந்த லிகிர்;லடாக்கில் திக்ஸே மடாலயம் சிந்துவின் கரையில் இருக்கும் சிற்றூர்களில் ஒன்று ஸ்பிடுக். ஸ்பிடுக் கோம்பா என்று அழைக்கப்படும் தொன்மையான மடாலயம்  சிந்துவிலிருந்து வடக்கே பியாங் கோம்பா என்னும் மடாலயம்  வடமேற்கில் உம்லா)

என்றாவது போகவேண்டும்!!! ஒருமுறை அதை உணர வேண்டும்.

என்றும் அன்புடன்,

இரம்யா.

முந்தைய கட்டுரைஅன்னம், அருள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇணைவு, ராஜன் – கடிதங்கள்