கூடு [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
கூடு சிறுகதை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. என் வீடு புதுக்கோட்டை அருகே. அங்கே ஒரு கம்யூன் உண்டு. மெய்வழிசாலை என்று பெயர். என் தாத்தா அதனுடன் தொடர்புடையவர். அப்போது மெய்வழிச்சாலை ஆண்டவர் இருந்தார். அவர் எவர் என்பதே தெரியாது. பிறப்பால் முஸ்லீம். ஆனால் சித்தர். அவர் அதை உருவாக்கினார். அவர் காலகட்டத்தில் அது வளர்ந்து வளர்ந்து ஒரு பெரிய அமைப்பாக ஆகியது. பிறகு சுருங்கிச் சுருங்கி இன்றைக்கு கூடு நாவலில் வரும் அந்த மடாலயம் போல ஆகிவிட்டது
இப்படி ஏன் பெருகி வளர்கிறது, ஏன் தேய்ந்து மறைகிறது? தேய்ந்து விடுவதைக் கண்டு அது பயனற்றதாகிவிட்டது அல்லது தோல்வியடைந்துவிட்டது என்று அர்த்தம்கொள்ளலாமா? எனக்கு அப்படித்தோன்றவில்லை. அது ஒரு செடிபோல வளர்ந்து அதனால் ஆற்றத்தக்கதை ஆற்றிவிட்டு அப்படியே மறைந்துவிட்டது, அவ்வளவுதான். அது வள்ர்ந்தபோது அதன் பணி நிறைவுபட்டுவிட்டது. அது வளரவேண்டும் என்பது விதி. சுருங்கி ம்றையவேண்டும் என்பதும் விதிதான்.
செல்வ நாகராஜன்
***
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
கூடு சிறுகதை வாசித்தேன். உவகையானதொரு பயணம். தாந்ரீகத்தின் கூறுகளை கொண்ட திபெத்திய பௌத்தம் சுவாரசிமானது. எந்தவொரு மதத்திற்கும் சுவாரசியம் அளிக்க அதற்குள் சற்று தாந்ரீகம் இருப்பது அவசியம் என்று தோன்றுகிறது. அமிதாப புத்தரின் கையில் இருக்கும் அமுதகலம் போன்ற உம்லா மடாலயம் நோர்பு திரக்பாவின் இரண்டாம் கூடு, மூன்றாம் கூட்டையும் அவர் திறந்து கொண்டார் என்று என்று எண்ணுகிறேன். நம் தென்நிலம் போன்று அசைவின்மை கொண்ட நிலம் மனதை ஒயாமல் அசைவு கொள்ளச்செய்கிறது போலும். அசைந்து கொண்டே இருக்கும் இமாலயத்தின் நிலம் மனதின் அசைவின்மையை அவசியத் தேவையாக்குகிறது போலும். கதை முழுவதும் திபெத்திய பௌத்தம் பேணப்படுகிறது இறுதியிலும் ராப்டன் ஒன்றும் சொல்லாமல். பரமனின் முடி கண்டேன் என்று பொய்யும் அடி காணவில்லை என்று உண்மையும் அல்லாமல் உண்மை பேசுபவரான திருமால் மௌனமாக இருந்திருந்தால்? பெருமானை அவர் வேறுவகையில் அணுகியதாகிவிடும் அல்லவா? அடிமுடி காணவொண்ணாத ஒளி வேடம் கலைத்து “கட்டி அணைத்து முத்தமிட முடியும் இருந்தாலும் ஒரு காபி சாப்பிடலாம் வா” என்று அழைத்திருக்க மாட்டாரா?
சம்மந்தம் இல்லாமல் பேசுவதாக கருதினால் வழக்கம்போல் மன்னித்துவிடவும். எழுத்துப் பிசாசான உங்களும் பிடியில் இருக்கும் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள். தவறாக நினைக்க வேண்டாம் வெண்முரசு மரபின்படி எல்லாவும் தெய்வ கணக்கில் வருவதுபோல புனித பிசாசு என கடவுள் உட்பட எல்லாவற்றையும் பிசாசு கணக்கில் கொண்டு வரும் மரபின்படி. என் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
அன்புடன்
விக்ரம்
கோவை
***
‘பிறசண்டு’ [சிறுகதை]
அன்புள்ள ஜெ
பிறசண்டு கதையின் அழகு என்பது அந்த அலுவலகம் பற்றிய வர்ணனைதான். நான் ஒரு கதையில் விரும்புவது இந்த அம்சம்தான். அந்த அரசு அலுவலகம் ஓடுபோட்ட கட்டிடமாக இருப்பது. வேம்பு மரங்கள். மரபெஞ்சு. ஒட்டப்பட்ட காகிதங்கள். இன்ஸ்பெக்டர் வரும்போதுள்ள பரபரப்பு. இதெல்லாம் சேர்ந்து நாம் அங்கே சென்றுவிட்டதுபோன்ற உணர்வை அளிக்கின்றன. அதுதான் முக்கியமானது. கதை என்பது உண்மையில் அதுதான்
அந்த திருடனின் ஜாலியான மனநிலை. அப்படிப்பட்டவன்தான் மாடிப்படியில் அமர்ந்து யோசிப்பான். அவனை அந்தப்பெண் ஏன் லவ் செய்கிறாள்? அப்படி ஒரு ஸ்மார்ட் ஆன திருடனை காதலிக்காமல் என்ன செய்வாள்?
எஸ்.ஆர். மகேஷ்
***
அன்பு மிக்க நண்பர் ஜெயமோகனுக்கு
வணக்கம், நலம்தானே
“பிறசண்டு” சிறுகதை படித்தேன்.திருடர்கள் உலாவும் எத்தனையோ கதைகள் படித்திருக்கிறேன்..ஆனால் இது சற்று வித்தியாசமானது.
ஒருவனையோ அல்லது ஒருத்தியையோ யாரோ கடத்திக்கொண்டு போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பணத்துக்காகவோ, அல்லது பயமுறுத்தவோ கடத்தப்பட்டிருக்கிறோம் என்பது தெரிந்து, அவர்கள் அன்புடன் நடத்தினால் கடத்தப்பட்டவர்களுக்கே, தன்னைக் கடத்தியவர்களிடம் அன்பு தோன்றி அவர்களைப் பிரிய மனமில்லால் போவதும் உண்டு. அதை ஆங்கிலத்தில் Stockholm syndrome என்பர். தமிழில் எப்படிச் சொல்லலாம் என்பது தெரியவில்லை.
வந்த திருடனின் சூழலையும், மணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணையும் பார்த்த சிரோமணிக்கு அப்படித்தான் ஒருவித அன்பு தோன்றி விடுகிறது. அதுவும் அவன் இனிமேல் திருந்தி வாழப்போவதாகச் சொல்கிறான்.அதனால்தான்.அவனை மீண்டும் வீட்டுக்கு வந்து விட்டுப் போ என்று அழைக்கிறார். திருட்டு நடந்த சூழலைப் படைப்பாளரே விவரிக்காமல் ரத்தினம் மூலம் சொல்லும் உத்தி கதையில் நம்பகத்தமையை அதிகமாக்குகிறது.
போகிறபோக்கில் திருடன் நாள்தோறும் ஏறும் பெட்ரோல் விலையைச் சாடுவதும் அதுவும் திருடக்காரணம் என்பதும் நாட்டுநடப்பைக் காட்டுகிறது.அவனைக்காட்டிக் கொடுத்தால் அவன் என்னென்ன துன்பஙகள் அடைவான் என்பதைச் சிரோமணி முன்பே 4 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் அறிந்திருப்பார். அதனாலும் அவர் அன்பு காட்டுகிறார்.
பிறசண்டு என்பதை அவ்வப்பொழுது சூழலுக்கேற்றபடி தோன்றும் அறிவு என்றுதான் கொள்ள வேண்டும். படிக்கட்டில் உட்கார் ந்து கொண்டிருக்கும் திருடனுக்கு எப்படிப் பதில் சொல்லிச் சமாளிக்கவாண்டும் என்ற அறிவு பட்டென்று தோன்றுகிறது.
ஆனால் அவன் அதன் பொருளைத் தேர்ந்த அறிவு எனக் கொண்டுத் தான் ம ணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணுக்கும் அது இருப்பதாகக் கூறுகிறான்.சிரோமணியே அது தனக்கு அப்போது இருந்திருகுமானால் அப்பாசாமியை மாட்டி விட்டிருக்கலாமே என் நினக்கிறார்.அறிவு என்பது அற்றம் காக்கும் கருவிதான். ஆனால் அது வெளிப்படும் சூழலே முக்கியம். அப்படி வெளிப்படுத்துபவரே எச்செயல் மேற்கொண்டாலும் வெற்றி அடைகிறார்கள்.
வளவ.துரையன்
***