தேனீ,நிழல்காகம் – கடிதங்கள்

தேனீ [சிறுகதை]

அன்புள்ள ஜெ

தேனீ கதை நம்முடைய போன தலைமுறையில் பலருடைய வாழ்க்கையின் பதிவு. அன்றைக்கு உண்மையிலேயே வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. பெரும்பாலானவை கூட்டுக்குடும்பங்கள். வருமானம் ஆண்கள் மட்டுமே கொண்டுவருவது. அதற்கு கடுமையான போராட்டம். பதினேழு பதினெட்டு வயதிலேயே குடும்பப்பொறுப்பு. அதன்பி  பல திருமணங்களை நடத்தி வைத்து ஓயும்போது வயதாகிவிட்டிருக்கும். சொந்தமான வாழ்க்கை என்பதே கிடையாது. எந்த தனிரசனைக்கும் இடம் கிடையாது. அவர் சொல்வதுபோல பின்னால் சாட்டை ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும் செக்குமாட்டு வாழ்க்கை.

ஆனால் தேனீயின் மனசுக்குள்ளும் தேன் இருக்குமில்லையா? அவர் தேனை சுவைத்துக்கொண்டேதான் இருந்திருக்கிறார்

லட்சுமணன்

***

அன்பு ஜெ,

தேனீ சிறுகதை மிக இயல்பாக என்னை உள்ளிழுத்து விட்டது நாராயணனுக்கு நடப்பது போல் பலருக்கும் இது நடந்திருக்கும். சம்மந்தமேயில்லாமல் எங்கிருந்தோ வந்து நம்மிடம் உரையாடுவார்கள் வானில் இருந்து இறங்கி வந்து  கந்தர்வர்கள் நமக்கு செய்தி சொல்வது போல் ஏதோவொன்று நமக்கானது அதில் இருக்கும். அவ்வாறே நாராயணனுக்கும் இநத செய்தியால் அவன் என்ன அடைந்தான்? அந்த நாராயணன் வாசிக்கும் நாங்கள்தானா? அவ்வாறுதான் நான் எடுத்துக்கொண்டேன். இந்த ஒரு கதையில் நான் அடைவது அதிகம். தன்னை நம்பி வந்தவர்களை காப்பாற்ற தன் சக்தியை மீறி உழைக்கும் ஆசாரி மீது யக்ஷ்ன் இறங்கி இருந்தால் தான் இப்படி பேய் போல் வேறு எந்த நினைப்பும் இல்லாமல் உழைக்க முடியும். ஒரு காலகட்டத்தில் நாதஸ்வரத்தில் இவ்வளவுபேர் பித்துபிடித்து இருந்துள்ளனர் என்பதை நினைத்தால் மிக வியப்பாக உள்ளது. தற்காலத்தில் எங்கள் தலைமுறையினருக்கு அது ஒரு இசைக்கருவி எனும் நிலைக்கு மேல் அதைப்பற்றி ஒன்றும் தெரியாது. தோடி ஆபேரம் போன்ற ராகங்களை வாசிக்க வாசிக்க அந்த வார்த்தைகளே ஒருவித ஈர்ப்பை தருகிறது. திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருக்குறிச்சி அருணாசலம், திருவெண்காடு சுப்பிரமணியம் பிள்ளை ஆகியோர் நாதஸ்வர மும்மூர்த்திகள் என்று கூறுமளவிற்கு சிறப்பான இடத்தை மக்கள் மத்தியில் அடைந்துள்ளனர். இதில் ஆச்சரியமான ஒரு விஷயம் ராஜரத்தினம் பிள்ளைக்கு கீர்த்தனைகள் சொல்லிக்கொடுத்தது முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் தந்தை முத்துவேலர். மேலும் ராஜரத்தினம் பிள்ளை அக்காலத்தில் சில படங்களிலும் நடித்துள்ளார்.

இக்கதையில் தன் இறுதிகாலக்கட்டத்தில் ஆசாரி தான் நேரில் சங்கீதம் கேட்ட சுதீந்திரம் கோயிலுக்கு அழைத்துச்செல்ல தன் மகனிடம் கேட்கிறார். ராஜரத்தினம் பிள்ளை இறந்தாலும் அவர் வாசித்தது அங்குதான் இருக்கும் என்கிறார் இது அவரின் மகனுக்கு புரியவில்லை. சுதீந்திரத்தில் ஆசாரி சொன்னதுபோலவே அந்த இசை காற்றில் கலந்து உள்ளது. ஆம் நாதஸ்வர இசை காற்றில் இருந்து பிறந்து மீண்டும் காற்றில் சென்று கலப்பது. எவவாறு நாம் பிரம்மத்தின் ஒருதுளியாக இங்கே வந்து பிறக்கிறோமோ அவ்வாறு காற்றில் இருந்து ஒரு துளியாக பிறக்கிறது நாதஸ்வர இசை அது தூய இசையாதலால் கேட்கும் அனைவருக்கும் இன்பத்தை கொடுத்துவிட்டு மீண்டும் பிரம்மத்திடமே அடைந்துவிடுகிறது. ஆனால் மானுடர் அனைவருக்கும் அது இயல்வதல்ல. நாம் இறந்தவுடன் நம்மை எப்படி நம் அடுத்த தலைமுறையினர் நினைவு கொள்கின்றனறோ அவ்வாறே அந்த இசையை கேட்டவர்களும் நினைவுகொள்கின்றனர். அவர்கள் இறந்த  நம்மை முழுவதும் விட்டுவடுவது இல்லை. விண் அடைந்த மூத்தோருக்கும் இப்புவி உணவு கொடுத்து மூத்தோரின் ஒரு துளியை புவியில் நிலைக்க செய்கின்றனர் அவ்வாறுதான் காற்றும் தன் இசையை ஒருதுளியில் நிற்க செய்கிறது. விண் அடைவதற்கான பாதையின் முடிவில் இருக்கும் அவருக்கும் இது தெரிந்திருந்ததால் தான் அவரால் அங்கு அந்த இடத்தில் உருவான இசையை காற்று மீண்டும் அவருக்கு அது மீட்டி தந்தது. அவர் அடையும் முக்தி அதுதான். அது மூலம் அவர்  பிரம்மத்தை அடைந்து பிறவா பெருநிலை அடைவார்.  விண்ணுறை தெய்வங்களுக்கு இது தெரியும். அந்த ஆசையை அவர் அடைந்தார் தன்னையே கரைத்து பல குடும்பங்களை வாழ வைத்ததற்காக. அவரின் வேலையை சற்றும் முகம் சுளிக்காமல் ஒரு ஊழ்க நிலையில் அவர் பணியாற்றி அதை தியானித்து பிரம்மத்தை அடைந்தார். அதை அடைவதற்கான ஊன்றுகோல் ராஜரத்தினம் பிள்ளையின் அந்த தேவகானம்.

அன்புடன்

ரா. பாலசுந்தர்

***

நிழல்காகம்[சிறுகதை]

அன்புள்ள ஜெ

நிழல்காகம் கதையை நான் நேரடியான அர்த்தத்திலேயே எடுத்துக்கொண்டேன். பித்ருகோபம் என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. நாம் தெரிந்தோ தெரியாமலோ அதைச் செய்துவிடுகிறோம். அதிலிருந்து வெளியே வர ஒரே வழிதான். பித்ருக்களுக்கு முன்னால் போய் குழந்தையாக நின்றுவிடுவது. அவ்வளவுதான். என்ன இருந்தாலும் நம்முடைய முன்னோர்கள் அவர்கள். நம்முடைய அப்பா அம்மாக்கள். அவர்கள் நம்மை மன்னித்துவிடுவார்கள்

என்.சாம்பமூர்த்தி

***

ஆசிரியருக்கு வணக்கம் ,

நிழல் காகம், அசிதரின் கதையை கேட்டேன் (பார்த்தேன் ).என் வாழ்வில் காகங்களுடனான நினைவுகளை தட்டி எழுப்பியது .

ஆறு மாததிற்கு முன் எனது கிராமமான மணவாளகுறிச்சியில் எனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்தேன் .அதிகாலை தொழுகைக்கு பள்ளி வாசல் சென்று வந்தபின் வீட்டில்  தொழுகை முடித்து அமர்ந்திருந்த எனது சகோதரியுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

வீட்டு ஜன்னலை யாரோ தட்டும் சப்தம் கேட்டு நான் பதறி எழுந்து யார் என கேட்டேன் .சகோதரி சிரித்து கொண்டே “சாலமி (அவள் எப்போதும் அப்படிதான் என்னை அழைப்பாள்)அது காக்கையாக்கும்” என்று ஜன்னலை திறந்தாள் .

பின்பு அடுமனையில் சென்று முந்தையநாள் இரவே வைத்திருந்த சாதத்தை,பாத்திரத்தில் வைத்து,வீட்டிற்கு வெளியே கொண்டு வைத்தாள்,சிறிது நேரத்தில் நேரத்தில் காகங்கள் கூட்டமாக வந்து உண்டு கொண்டிருந்தன.

அவள் சொன்னாள் “ஒரு காக்க மட்டும் முதல்ல வந்து ஜென்னல தட்டும் ,தொறக்கது வர தட்டிகிட்டே இருக்கும் ,தொறந்த பொறவு அது போய் நறைய காக்கைய கூட்டிட்டு வரும் பாத்துக்கோ” என்றாள்.ஆச்சரியமும் ,அதிசயமுமாக இருந்தது .காகம் வீட்டு ஜன்னலை தட்டி தன் கூட்டதிற்கான உணவை உரிமையுடன் கேட்டது .

பின்பு போனில் பேசும்போது அவளிடம் கேட்பேன் “அக்கா உனக்க  காக்கையெல்லாம் எப்படி இருக்குனு”  நல்லா இருக்குனு பதில்  சொல்வாள்.

தற்போது மருத்துவ சிகிட்சைக்காக நாகர்கோவில் வந்தவள் தம்பியின் வீட்டில் இருக்கிறாள்.இப்போது அந்த காகங்களுக்கு யார் உணவு கொடுப்பார்களோ ?

எனது எண்ணை ஆலையிலும் ஜன்னலில் வந்து காகங்கள் உணவு கேட்கும் . இந்த கடிதம் எழுதும் இந்த அதிகாலை வேளையில் உணவு கேட்ட காகத்திற்கு உணவு கொடுத்துவிட்டு வந்தே கடிதத்தை தொடர்கிறேன் .ரமாலன் நோன்பு வைப்பதற்காக மூன்று மணிக்கு எழுந்து எனக்கான உணவு தயாரிக்கையில் காகதிற்காக கொஞ்சம் சேர்த்தே அரிசியை போடுவேன் .ஏனோ பூண்டு கலந்த நோன்பு கஞ்சியை இந்த காகங்கள் உண்ணுவதில்லை .(ஜெயின் காக்கையாக இருக்குமோ )

எனது வீட்டு பால்கனியில் ஒரு காகம் வந்தமர்ந்து கரையும் சுனிதா சொல்வாள் “உமா ஆண்ட்டி இல்ல போல” என.  “ஏன்னு” கேட்பேன். “அவங்க இல்லேன்னாதான் இந்த காக்கை நம்ம வீட்டுக்கு வரும்” என சொல்லிவிட்டு அதற்கான உணவை வைப்பாள் .ஒரே காக்கை தான் வருகிறது என்பாள் .அதை எப்படி அவள் அடையாளம் காண்கிறாள் என்பது எனக்கு புரிவதேயில்லை .

“நல்லா பாருங்கோ ,இது கருப்பா கழுத்து சின்னதா இருக்கு என்பாள் .நான் பார்க்கையில்  எல்லா காகமும் கறுப்பாக ஒரே மாதிரியாக தான் இருக்கிறது .

ஷாகுல் ஹமீது ,

நாகர்கோயில்.

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–70
அடுத்த கட்டுரைகரு,ராஜன்- கடிதங்கள்