முதுநாவல்[சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஓஷோ ஓர் உரையில் ஒரு கேள்வியை எதிர்கொள்கிறார். ஏன் பெரிய ரவுடிகள் கேடிகள் முதலியவர்கள் திடீரென்று துறவிகளும் செயிண்டுகளும் ஆகிவிடுகிறார்கள்?அவர்கள் மட்டும் ஏன் அப்படி மனம் மாறுகிறார்கள்? அதற்கு ஓஷோ சொன்ன பதில் இது. மனிதனுக்குள் இருப்பது ‘எலிமெண்டல் பவர்’ ஆற்றல் என்பது ஒன்றுதான். அதுதான் அறிவாற்றல் கற்பனை ஆற்றல் ஆன்மீகமான ஆற்றல் எல்லாமே.
அது ஒரு மடைவழியாக வெளியே வரும்போது கிரைம். இன்னொன்றிலே கிரியேட்டிவிட்டி. இன்னொன்றிலே விஸ்டம். எப்போது எந்த மடை திறக்கிறது என்பது ஒரு தற்செயல் மட்டும்தான். அதற்கென்று எந்த அர்த்தமும் கிடையாது. இதை நீங்களும் எங்கோ சொன்னீர்கள். திருச்சியிலே ஒரு உரையிலே சொன்னதாக நியாபகம்.
ஆனால் அது ஒரு வகையான அருள் என்றுதான் நான் நினைக்கிறேன். அது விதியால் அமையும் அருள். அந்த மாதிரியான ஒரு அருள்தான் இரண்டு மல்லர்களுக்கும் வந்தது. அந்தமாதிரியான ஒரு பெரிய ஆன்மிகமான திறப்பை தாங்கிக்கொள்ளும் சக்தி அவர்கள் இருவருக்கும்தான் உண்டு. மனச்சக்தி, உடல்சக்தி. அங்கே இருக்கும் வேறெந்த வியாபாரிக்கும் குடும்பஸ்தர்களுக்கும் அதெல்லாம் இருக்காது. அவர் அந்த நீரை அவர்களுக்குத்தான் கொடுக்கமுடியும். அவர்களால்தான் அதை குடிக்கமுடியும்
அந்த இரண்டுபேருமே அசாதாரணமானவர்கள். சூஃபிகளாகவோ ஞானிகளாகவோ பின்னாளில் மாறக்கூடிய அத்தனைபேரிடமும் அந்த அடிப்படையான எலிமெண்டல் பவர் இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது
எஸ்.பிரபு
***
அன்புள்ள ஜெ,
இரண்டு பலம் வாய்ந்த முரடர்கள் நுண்ணுணர்வு கொண்டவர்களும் கூட அதுவே அவர்களை அத்தனை காலம் அவரவர் சந்தையில் நீடிக்க வைத்திருந்தது; ஒருவன் நீதியை காக்கும் காவலன் வடிவிலும் இன்னொருவன் அதற்குப் புறம்பான சண்டியனின் வடிவிலும். இருவருமே தம் உடல் பலம் மீதான அதிகாரத்தில் பிழைப்பவர்கள், தர்ம நியாயங்கள் அவர்களின் தேவைக்கேற்ப சூழ்நிலைக்கேற்ப மாறுகிறது. காதர் பெருஞ்சூதாடியாகி மீள இயலாமல் எளியவர்களை வதைக்கிறான். இடும்பன் அவன் பணிக்குப் புறம்பாக பணத்தைப் பிடுங்குகிறான்.
எங்கிருந்தோ திடீரென தோன்றிய சூஃபி சாமியார் அவர்கள் இருவருக்கும் இறையமுதை கொடைய்ளிக்க வேண்டியதன் அவசியம் என்ன? அவர்கள் இருவரும் அடித்துக் கொண்டதில் , எளியவர்க்கு செய்த துன்பங்களுக்கான தண்டனையாக கழிந்து விடுகிறது. இருவர்க்குள்ளேயும் அறம் என்ற ஒன்று உள்ளீடாக இருக்கிறது. அதனால்தான் கத்தி கிடைத்தும் கொல்ல முயற்சிக்கவில்லை. காதர் வீழ்த்தப்பட்ட பிறகு மக்கள் கூட்டம் தாக்க வந்ததை இடும்பன் தடுத்ததும் அந்த அறச்சார்புதான்.
தனக்கு கிடைத்த இறையமுதை காதருக்கும் அளித்து அவனை மீட்கிறான். இருவரும் சித்தர்க்ளாகிறார்கள், இறையமுதின் பேரருளால். அது சரி, சூஃபி சாமியார் ஏன் சந்தையில் இருந்த அப்பெரிய மண்ணாந்தைக் கூட்டத்திற்கு தென்படவில்லை. ஏனெனில் அவர்கள் அனைவருமே சுயம் இழந்த புழுக்கள். புல்லின் பனித்துளியோ பாங்கு சத்தமோ கோவில் மணியோசையோ குயிலின் கூவலோசையோ இன்னும் வேறெதுவோ, இறைமீட்சியின் வடிவங்கள், விதிக்கப்பட்டவர்க்ளுக்கே புலப்படுகின்றன. அவர்கள் முதுநாவலின் இனிமையை காலம்தோறும் நிரப்புகிறார்கள்.மகத்தான ஆன்மிக உணர்வினை வழங்கிய சிறுகதை.
நன்றிகள்
தண்டபாணி
***
‘பிறசண்டு’ [சிறுகதை]
அன்புள்ள ஜெ
பிரெசெண்டு ஓர் அருமையான சின்னச் சொட்டு. சுவையானது. கூடு, கரு போன்ற சிக்கலான பெரிய படைப்புக்களை படித்தபின் அதைப் படிக்கும்போது ஒரு பெரிய நிறைவை உணர்ந்தேன். அதுவும் கலைதான். ஆனால் இதுவும் கலைதான். அந்த திருடனின் ஈஸியான மனநிலை. அதைத்தான் சிரோமணி வாழ்க்கையின் கடைசியில் கண்டுகொள்கிறார். இறுகப்பிடித்துக்கொண்டதுதான் தன்னுடைய தப்பு என்று. அடிக்கடி வீட்டுக்கு வாடே என்று அவர் அழைக்கும்போது புன்னகைத்துவிட்டேன்
சரவணக்குமார்
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
கொரோனா காலத்துக்கதைகளில் பல புன்னகைக்கவும் லாசர் போல சிலது கண்ணை நிறைத்தும்,’கரு’வைபோல சொல்லின்றி மனமே அமைதியாக நின்று போன உணர்வையும் அளித்ததென்றால், இன்றைய ’பிறசண்டு’ கடைசி வரியில் வாய்விட்டு சிரிக்க வைத்துவிட்டது, சிரோமணியின் தூய அன்பில் மனமே நிறைந்தது.
புதிதாய் மாற்றி இருக்கும் ஓட்டுக்கூரை, சுதைத்தூண்கள் கல்சுவர்கள், மெல்லச்சுழலும் மின்விசிறிகள், அரையிருள் அறைகள், அங்கே குந்தி அமர்ந்திருப்பவர்கள், ஜீப் வருவது, இன்ஸ்பெக்டர் ஒரு சடங்கு போல உள்ளே நுழைந்ததும் கடிந்துகொள்வது, ’’தள்ளுங்க கூட்டம் போடாதீங்க’’, என்னும் அதட்டல்கள் வேப்பமரச்சருகுகளும், நிழலும் காகங்களுமாய் அந்த ஸ்டேசன் கட்டிடம் அப்படியே ஒரு திரைப்படத்தின் முதல் காட்சியைப்போல கண்முன்னே விரிந்தது. அதுவும் அந்த வக்கீலின் விவரணை பிரமாதம்.
கொரோனா கதைகளின் வழியே இப்போது கள்ளன்கள் மனதுக்கு மிகவும் அணுக்கமாகி விட்டிருக்கிறார்கள், அவர்கள் தரப்பு நியாயங்களையும் அநியாங்களையும் பிறசண்டு அழகாக சொல்லியிருக்கிறது.
அத்தனை அர்ப்பணிப்புடன் இளமையில் வேலை செய்த ஒருவர், தன்னைபிறர் அநியாயமாக ஏமாற்றியதற்கும் எந்த எதிர்வினையும்காட்டாதவர்,உலகமே தெரியாதவர், முதுமையிலும் உடல்நலிவிலும் அப்படியே சுபாவம் மாறாமல் இருக்கிறார். இப்படி எனக்குத்தெரிந்த பிழைக்கத்தெரியாத பலரை நினைவூட்டிய சிரோமணியை அத்தனை பிடித்துவிட்டது.
வாசிக்கையில் பலஇடங்களில் மனம் நிறைந்தபடியே இருந்தது. அதுவும் அந்த இளம் திருடனைக்கண்டு அவர் பயந்துபோவதும் அவன் அவர் கையைப்பிடித்து அழுத்தி ’’பயப்படாதீங்க’’ என்பதும் என்னவோ பெரும் ஆறுதலை அளித்தது ’’பின்ன செலவுக்கு என்ன பண்ண’’ என்னும் அவன் நேரடியான நேர்மையான கேள்வியும் ’’என்ன செலவு’’ என்று சிரோமணி கேட்க அவன் சொல்லும் பட்டியலும் மனம்விட்டு சிரிக்கவைத்தது. அந்த பிரெசென்ஸ் பிறசெண்டு ஆவதும் அப்படியே!
தன் கஷ்டநஷ்டங்களை எடுத்துச்சொல்லி, வருங்கால மனைவியை கூட்டிவந்து காண்பிப்பது, முழுப்பெயரை இனிஷியலோடு சொல்லுவதுமாய் அந்தகள்ளனுக்குத்தான் எத்தனை பிறசண்டு?
நான் பள்ளியில் படிக்கையில் செல்வந்தரகளான என் அத்தை வீட்டில் ஒரு டெரியர் ரக நாய்குட்டியை வாங்கி வந்தார்கள். சவரன் முன்னூறு ரூபாய்க்கு விற்ற காலத்தில் அந்த நாய் பத்தாயிரம் கொடுத்து வாங்கப்பட்டது. கால்கள் மட்டும் கூடுதல் உயரமாக வித்தியாசமான அழகு நாய் . டெரி என்றழைக்கபட்ட அது அத்தனை சாந்தஸ்வரூபி, அதை பார்க்க வரும் சொந்தபந்தங்களைப் பார்த்து குறைக்காவிட்டால் பரவாயில்லை ஒரு தும்மல் கூட போடாது . அதை வாங்கி ஒருவாரத்தில் அத்தை வீட்டுக்கு வந்த ஒரு பிறசண்டு இருந்த கள்ளன் வராந்தாவில் இருந்த பிரம்பு நாற்காலிகளை திருடிக்கொண்டு கூட போனஸாக டெரியையும் தூக்கிப்போன கதையை இன்றைக்கும் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தோம்
’அடிக்கடி வீட்டுக்குவாடே’’ இந்த இறுதிவரியில் தெரியும் பிரியத்தை எப்படி வகைப்படுத்துவது!
வீடே கதியென்று இருக்கு இந்நாட்களில் தினம்வரும் கதைகளை நாளெல்லாம் பலமுறை வீட்டில் பேசிக்கொண்டிருப்பதால் நாரோயில் பேச்சுவழக்குக்கு மெல்ல மெல்ல மாறிவிட்டோம். கொங்கு வழக்கு இன்னும் பத்துக்கதைகள் படிக்கையில் சுத்தமாக மறந்தாலும் மறந்துவிடும்
’’நான் சாவுதேன்’’ அடிக்கடி புழங்குகிறது வீட்டில் இப்போது. ’’அரைமணி நேரமா வாசக்கூட்டி நிமிராதுக்குள்ள இந்த மரம் மறுபடியும் இத்தனை குப்பை போடுதே நான் போய் சாவுதேன்’’ என நான் அலுத்துக்கொண்டால், சலூன் இல்லைனுதானே முடிவெட்டாம இருக்கேன் இதுக்கேன் திட்டறே, நான் சாவுதேன்’’ என்கிறான் மகன். ஆன்லைன் வகுப்புக்களில் இருக்கும் பெரியவன் ‘’ ’’என்னம்மா இந்த சார் ஒரு பிறசண்டெ இல்லாம கேள்விகேட்டுட்டு இருக்காரு’’ என்றான் இன்று
உங்களின் இந்த ’’தொடர்’’கதைகளும் அவை அளிக்கும் மனமகிழ்ச்சியும் சிந்தனையும் நிறைவும் இல்லாமலிருந்திருந்தால் ஒரே கூரையின் கீழ் பலவற்றை சகித்துக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நிச்சயம் மனச்சிதைவே உண்டாயிருக்கும்.
அனைத்திற்கும் நன்றி
அன்புடன்
லோகமாதேவி
***