சுசீந்திரம் கோயிலுக்குள் காசிவிஸ்வநாதர் ஆலயம் ஒரு தனி உலகம். தெப்பக்குளம், அதற்கு இணையாக ஓடும் சாலையில் கடைகள், மூலம் திருநாள் மகாராஜா கட்டிய முகப்புக்கோபுரம், நந்தி, கொன்றைவனநாதர் சன்னிதி, கொடிமரம், அர்த்தமண்டபம், செண்பகராமன் மண்டபம், அனுமார் சன்னிதி என்று எங்கும் ஒளியும் திரளும் நிறைந்திருக்கும். காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் எரியும். வெளிச்சுற்றுப் பிராகாரத்தில் இருந்து விலகி யானைமேல் அம்பாரிபோல ஒற்றைப்பாறைமேல் அமைந்திருக்கும் சிறிய கற்கோயிலுக்கு வெட்டுபடிகளில் ஏறிச் செல்லவேண்டும்.
அது சுசீந்திரம் பேராலயத்தின் வயிற்றுக்குள் சுருண்டு உறங்கும் கருக்குழவி போல. அங்கே சன்னிதியில் சிவலிங்கம் ஒற்றை அகல்விளக்கொளி துணையுடன் எதிரில் நாய்க்குட்டி போன்ற நந்தியுடன் அமந்திருக்கும். பொதுவாக அந்திக்குப்பின் அங்கே எவருமிருக்க மாட்டார்கள். அங்கே சென்று தனிமையில் அமர்ந்திருப்பது எனக்கு ஒரு தியானம். எதையும் எண்ணாமல், அல்லது எண்ணவந்ததை அப்படியே ஒழுக்கிவிட்டபடி, அமர்ந்திருப்பேன். பின்னர் நெடுநேரமாயிற்றே என்று விழித்துக்கொண்டு கிளம்பிவிடுவேன். ஒரு கோயிலின் கருப்பைக்குள் சென்று மீள்வதைப்போல பெரிய அனுபவம் வேறென்ன?
அன்று உள்ளே நுழைந்தபோது அந்த வயது மனிதரைப் பார்த்தேன். முதலில் அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்ததும் நான் ஒரடி பின்னால் வைத்துவிட்டேன். அவர் அந்த தூண்களில் ஒன்றை நாவால் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அறுபது வயதுக்குமேல் இருக்கும். சிவந்த நிறம். முன்வழுக்கை. அருகே ஒரு தோல்பை இருந்தது. மனச்சிக்கல் ஏதாவது இருக்கும் என்று தோன்றியது. அப்படிச் சிலர் அங்கே வருவது உண்டு.
நான் கருவறை நோக்கி ஒரு கும்பிடு போட்டுக்கொண்டு அப்படியே மறுவாசல் வழியாக இறங்கிவிட்டேன். வழக்கம்போல அனுமார் சன்னிதியில் நெரிசல். ஆனால் கோயிலுக்குள் அரையிருளில் புதைந்திருக்க சில இடங்கள் உண்டு.
நான் திரும்பி வந்து செருப்பை போட்டுக் கொண்டிருக்கும்போது அருகே நின்றவர் “சாருக்கு இந்த ஊரா?” என்றார்.
நான் நிமிர்ந்து பார்த்தேன். அவர்தான்
“ஆமா” அவரை தவிர்க்க விரும்பினேன்.
“நமக்கு செய்துங்கநல்லூரு சார்… சுசீந்திரத்துக்கு அப்பப்ப வாறது.”
“ஓ” என்றேன். புன்னகைத்துவிட்டு கிளம்பினால் அவரும் கூடவே வந்தார். அவர் பேசவிரும்புவது தெரிந்தது. தவிர்ப்பதற்காக நான் வேகம் கூட்டினால் அவரும் வேகமாக வந்தார்.
“அம்பத்திமூணிலே இங்க திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை வாசிச்சிருக்காரு சார்!” என்றார்.
அதென்ன விசித்திரமான தொடக்கம் என்று நான் கவனம் கொடுத்துவிட்டேன். அவர் இயல்பாக புன்னகைத்து பேசத்தொடங்கினார்.
“அப்ப எனக்கு ஆறுவயசு. என் அத்தை ஒருத்தியை இங்க ஒசரவிளையிலே கட்டிக்குடுத்திருந்தது. அத்தைன்னா அப்பாவுக்கு சித்தப்பா பொண்ணு. அந்தச் சித்தப்பா சின்ன வயசிலே போய்ட்டதனாலே எங்க அப்பாதான் அவளுக்கு கல்யாணம் பண்ணிவைச்சார். ரெண்டாம்தாரம்தான், ஆனால் அந்தக்காலத்திலே அதெல்லாம் பெரிய விஷயமில்லை.”
“ஆமா” என்றேன் “என் அம்மாகூட ரெண்டாம்தாரம்தான்.”
“அப்ப ஆம்புளைங்க வாழ்க்கைன்னா என்ன சார்? குடும்பத்துக்காக உழைச்சு உழைச்சு அப்டியே சாகவேண்டியதுதானே?” என்றார். உடனே நினைவுகூர்ந்து “நம்ம பேரு சம்முகமணி… சமூகம் பேரு?”
“நாராயணன்… ” என்றேன்.
“நாங்கள்லாம் ஆசாரிமார்” என்றார்.
நான் புன்னகை செய்தேன். அவர் புன்னகை செய்து என்னை உற்று பார்த்தார். பின்னர் “வெள்ளாம்புள்ளைக தான் இந்த ஏரியாவிலே ஜாஸ்தி” என்றார்.
“ஆமா”என்றேன். சொல்லாவிட்டால் செத்துவிடுவார் என்று தோன்றியது “எங்க ஆளுங்க ரொம்ப இருக்காங்க.”
அவர் மலர்ந்து “ஆசாரிமாரும் நெறையபேர் இருக்காங்க சார். நான் அடிக்கடி வாரதுண்டு. ஆசாரிமார் தெருவே இருக்கே” என்றார். “என்ன சொல்லிட்டிருந்தேன்? ராஜரத்தினம் பிள்ளை வாசிப்பு பத்தி…”
“ஆமா.”
எங்க அப்பாவோட அப்பாவுக்கு நாலு தம்பிங்க, மூணு தங்கச்சிங்க. என் அப்பாவுக்கு பதினெட்டு வயசிலே தலைப்பொறுப்பு எடுத்து பட்டறையிலே உக்காருறப்ப அவரோட அப்பாவோட தம்பி தங்கச்சிகள் அத்தனைபேரும் போயாச்சு. அப்பல்லாம் விசக்காய்ச்சல் ஜாஸ்தி சார். காத்திலே ஆயிரந்தீபம் அணையிறது மாதிரி ஒரு ஏரியாவே இருட்டா ஆயிரும்.
அப்பாவுக்கு சொந்த அம்மாவிலே நாலு தம்பி, மூணு தங்கச்சின்னு சொன்னேனே. சித்தப்பாக்கள் வகையிலே பதினேழு தம்பி பதிமூணு தங்கச்சி. இத்தனை பேருக்கும் அவருதான் என்னமாம் பண்ணணும்… அவரு உழைச்சாரு சார். எங்க அம்மா சொல்லும், விடிகாலை நாலுமணிக்கே பட்டறையை தெறந்து உக்காந்திருவாரு. ராத்திரி பதினொரு மணிக்கு சாத்துவாரு. மூணு மணிநேரம்தான் தூக்கம்.
அப்டி வெறிபிடிச்சு வேலை செஞ்சாலும் பத்தாது. அத்தனை பேருக்கும் சோறுபோடணும். சோறுமட்டும்தான், அப்பல்லாம் ஆஸ்பத்திரிச் செலவு மருந்துச்செலவு கெடையாது. ஆனாலும் பத்தலை. பசியும் சீக்கும் சாவும் சடைவுமா வாழ்க்கை போச்சு. அப்பா வெறித்தனமான சிக்கனம். வருசத்துக்கு ரெண்டே வேட்டி. ஒரே சட்டை. பொடிப்பழக்கம்கூட கெடையாது. டீ காப்பி ஒண்ணுமே பழக்கமில்லை.
ஆனா ஒவ்வொருத்தராட்டு கரையேத்தினாரு. அத்தனை அத்தைகளையும் நகை போட்டு கட்டிக்குடுத்தாரு. அத்தனை தம்பிகளையும் பட்டறையிலே உக்காத்தி வச்சாரு. அம்பிடு பேருக்கும் கல்யாணத்தை பண்ணிவைச்சாரு. எங்க அம்மை, அவ உத்தமில்லா? அவ கூடவே நின்னா சார். ஒரு சொல்லு முகம்மாறிச் சொல்லாம புருசன்கூடவே நின்னா. அந்த மாதிரி பொம்புளைங்க இப்ப இல்ல.
நான் ஏன் பண்ணணுமுன்னு ஒரு செக்கண்ட் நினைச்சிருக்க மாட்டா. அப்டி ஒரு மனசே கெடையாது. சொன்னாலும் அதெல்லாம் உள்ள போகாது. இப்ப இருக்கா, வயசு எம்பதுக்குமேலே ஆச்சு. மெதுவடை வேணும்னு கேப்பா. வாங்கிக்குடுத்தா ஒரு கிள்ளு வாயிலே போட்டுட்டு கொள்ளுப்பேத்தி கொள்ளுப்பேரனுகளுக்கு ஊட்டிவிட ஆரம்பிச்சுருவா. நெறைஞ்ச ஆலமரம் விளுதாலே நின்னுட்டிருக்கும் சார்.
எனக்கு என்ன கிடைச்சுதுன்னு ஒருத்தன் கணக்கு பாக்க ஆரம்பிச்சா அதோட அவன் கை குறுகிரும். மனசு மூடிரும். அவ்ளவுதான். அதுக்குமேலே குடுக்கமுடியாது. குடுக்காதவன் விரியமாட்டான். விரியாதவனுக்கு மெய்யான சந்தோசம்னு ஒண்ணு இல்லை, என்ன நான் சொல்றது?
எங்க அப்பாவும் அம்மையும் சித்தப்பாவும் சித்தியுமாட்டு செய்துங்கநல்லூரிலே இருந்து ஒசரவிளைக்கு மாட்டுவண்டியிலே போறம். அத்தைக்கு வளைகாப்புக்கு பலகாரம் கொண்டு போறது. அஞ்சு போணியிலே முறுக்கு, முந்திரிக்கொத்து, அதிரசம், சீடை, காரச்சேவுன்னு இருக்கு. அப்பல்லாம் அஞ்சுபலகாரம் கொண்டுபோயி குடுக்கணும். மாப்பிள்ளைக்கு அரைப்பவுனிலே மோதிரமும் செஞ்சிருக்கு.
செய்துங்கநல்லூரிலே இருந்து எதுக்கு சுசீந்திரம் வளியாட்டு வந்தோம்னு தெரியல்லை. வண்டிக்காரனுக்கு ஒருவழியும் தெரியாது. வண்டிக்காளைக்கு வேற அங்க வாறதுக்கு விருப்பம் கெடையாதுன்னு நினைக்கேன். அப்பப்ப நின்னு பெருமூச்சுவிடும். அவன் பிள்ளையப்போல வளக்குத மாடு. அடிக்கமாட்டான். கோலாலே முதுகே தடவி “போ ராசா, எனக்க பொன்னுராசா”ன்னு கொஞ்சுதான்.
வழியிலே வண்டியை அவுத்துப்போட்டு சாப்பிட்டோம். மாட்டுக்கு புல்லும் தண்ணியும் வைச்சோம். பாத்தா வண்டிக்காரன் படுத்து தூங்கிட்டிருக்கான். அவனை தட்டி கையைப்பிடிச்சு கெஞ்சி வண்டியை எடுத்து ஒருவழியாட்டு சுசீந்திரம் எல்லைக்கு வாறப்ப ராத்திரி பன்னிரண்டு மணி தாண்டியிருக்கும்.
நல்லவேளையாட்டு அப்ப சுசீந்திரம் திருவிளா. அதனாலே தெருக்களிலே கொஞ்சம் ஆளும் சந்தடியும் இருந்தது. அங்க இங்க ஒண்ணுரெண்டு பேருகிட்ட பாதை கேக்க முடிஞ்சுது.
ஒரு பெரியவரு முண்டாசு கட்டி கையிலே கம்போட நின்னாரு. “ஏலே திருளாலே நடக்குது. இந்த வளியே போனா கூட்டத்திலே மாட்டிக்கிடுவே. கச்சேரிகேக்க ஊருபட்ட சனம் வந்திருக்கு. வழியில முளுக்க வண்டிகளை அவுத்து போட்டிருக்கான். இந்தால போங்க… இப்டியே போயி ரோட்டிலே ஏறிக்கிடலாம்”னு சொன்னார்.
நாங்க அப்டியே சுத்திக்கிட்டு போனம். நான் அதுவரை நல்லா தூங்கிட்டிருந்தேன். அந்த முண்டாசுக்காரரு பேய்க்கூச்சல் போட்டு பேசுத ஆளு. சத்தம் கேட்டு முளிச்சுகிட்டேன். பாத்தா தூரத்திலே வானத்திலே இருந்து என்னமோ சிவப்பா தீ மாதிரி மண்ணிலே எறங்கி நின்னுட்டிருக்கு.
“அப்பா, அங்க பாருங்க, தீ”ன்னு நான் சொன்னேன்.
“தீயில்லை…அது சுசீந்திரம் கோயிலு… அங்க திருளா நடந்திட்டிருக்கு. அது பெட்ரோமேக்ஸ் லைட்டுக்க வெளிச்சம்”னு அப்பா சொன்னார்.
நான் அப்பாவுக்க மோவாயை பிடிச்சு “அப்பா, மயிலு பாடுது!”ன்னு சொன்னேன்.
அப்பா அப்டியே என்னை கெட்டிபிடிச்சார். மார்போட அணைச்சுகிட்டார். “இல்ல மக்கா, அது நாதஸ்வரம்… திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை வாசிக்காரு”ன்னு சொன்னார்.
அதைக்கேட்டுக்கிட்டே போனம். ஒரு இருபது நிமிசம் காதிலே விழுந்திருக்கும். அப்டியே தூரத்திலே கரைஞ்சு போச்சு.
அப்பாவோட உடம்பு காய்ச்சல் வந்தது மாதிரி நடுங்கிட்டிருந்தது. அப்டி ஒரு சூடு. என் தோளில தண்ணி விழுந்தது. நான் நிமுந்து அப்பாவை பாத்தேன். அப்பா அழுதிட்டிருந்தார்.
“அப்பா”ன்னு கூப்பிட்டேன். “ஏன் அழுவுதீக?”
“பாட்டு கேட்டேம்லா மக்கா”
“அது கெட்ட பாட்டா?”
“அய்யோ இல்ல மக்கா… அது அமிர்தமாட்டு இனிக்குத பாட்டு. தெய்வங்கள்லாம் வந்து எறங்கி கேட்டுட்டு இருக்குத பாட்டு. பேயும் மனம்கனிஞ்சு கேக்குத பாட்டு.”
அப்பா என்னை சேத்துப் பிடிச்சப்ப என்னோட தோளெலும்பெல்லாம் நொறுங்குற மாதிரி இருந்தது.
“ஆனா இந்தப்பாவிக்கு இருந்து கேக்க வாய்க்கல்ல மக்கா… இருந்து ஒரு பாட்டு கேக்க யோகமில்லை இந்த சென்மத்திலே. வண்டிக்காளையா பொறந்தாச்சே… சாட்டைக்கோல் சத்தமில்லாம வழிநடையே இல்லைன்னு ஆயாச்சே!”
அப்பா என்னை நெஞ்சோட அணைச்சுகிட்டார். அவர் அழுற சத்தம் கேட்டுட்டே இருந்தது. பிறவு இருட்டை பாத்துட்டு உக்காந்திட்டிருந்தார். வண்டிக்குள்ள அம்பிடுபேரும் நல்ல தூக்கம். நானும் அந்தாலே தூங்கிட்டேன்
அதுக்கு மூணு வருசம் கழிச்சு ராஜரத்தினம் பிள்ளை செத்துட்டார். ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அம்பத்தாறுலே. அப்ப அவருக்கு அம்பத்தெட்டு வயசுதான். சாகிற வயசு இல்லை.
அப்பா பட்டறையிலே இருக்காரு. அப்ப பெருமாள் நாயிடு பதைபதைக்க ஓடி வந்து “ஆசாரியே கேட்டேரா, பிள்ளைவாள் போய்ட்டாரு” ன்னு சொன்னார்.
அப்பாவுக்கு ஒண்ணும் புரியல்லை. “ஆரு?”ன்னு கேட்டார்.
“என்னவே கேக்கேரு? நமக்கு பிள்ளைவாள்னா ஒருத்தர்தானே? நாதஸ்வரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை போய்ட்டாருவே… அவரு ரத்தினம்லா? ரத்தினங்களிலே ராஜால்லா! செத்துட்டாருவே. அப்டியே தோடியையும் கொண்டு போய்ட்டாருவே…”
சட்டுன்னு நாயிடு நெஞ்சிலே ஓங்கி அறைஞ்சு அலறினாரு. “பெருமாளுமேலே ஆணை, இனி இந்தக் காதாலே தோடியை கேக்க மாட்டேன். சத்தியம் வே!”
நாயிடு தளர்ந்து பட்டறை திண்ணையிலே உக்காந்திட்டாரு. நெஞ்சிலயும் தலையிலயும் அடிச்சுகிட்டு அழுதாரு. அப்டியே படுத்திட்டாரு.
ஆனா அப்பா ஒண்ணுமே சொல்லல. கையிலே இருந்த கிடுக்கியையும் குரடையும் ஒரு செக்கண்டு கூட தாழ்த்தலை. அப்டியே வேலை செஞ்சுகிட்டே இருந்தாரு. ஆனா கண்ணீரு சொட்டிக்கிட்டே இருந்தது.
ஒருநாளு ரெண்டுநாளில்லை. அய்யா, சொன்னா எவன் நம்புவான்? ஒருவாரம் பத்துநாளு. கண்ணீர் நிக்கவே இல்லை. வேலை நடந்திட்டே இருக்கும். நகைமேலே குரடுகள் மேலே கண்ணீர் விளுந்திட்டே இருக்கும்.
செய்றது கல்யாணநகை. கண்ணீரோட செய்றதைக் கண்டா என்ன நினைப்பாக? சித்தப்பா ரெண்டுபேரும் அவரை அப்பாலே உக்காரவைச்சு ஒரு சாக்குப்படுதாவை கட்டி மறைச்சாங்க.
பேச்செல்லாம் சித்தப்பாதான். அப்பா பேசமாட்டாரு. இவரு கைநுணுக்கம் திகைஞ்சவரு. அதனாலே இவரேதான் செய்யணும்னு நிலையா நிப்பாங்க. இவரு செஞ்சுகிட்டே இருப்பாரு. அவரு இந்த கூடுகெட்டுத பூச்சிகள்லாம் இருக்குல்லா, தேனீ இருக்குல்லா, அதை மாதிரி. அவருக்க கைரெண்டும் ரெண்டு பூச்சிகள்னு சொல்லுங்க. அது பூப்பூவா நுணுக்கமா செஞ்சுகிட்டே இருக்கும்.
ஆனா அவருக்க ரெண்டு கண்ணுக்கும் மனசுக்கும் அது தெரியாது. கண்ணிலே இருந்து கண்ணீர் வடிஞ்சு சொட்டிக்கிட்டே இருக்கும். மனசுலே என்ன இருந்ததோ யாரு கண்டா?
ஒருவாரம். அதுக்குப்பிறகு அவரு ஒண்ணுமே சொல்லல்ல. அவரு எப்பவுமே அப்டியாக்கும். பேச்சு குறைவு. அம்மைக்ககிட்ட கூட பேச்சு கிடையாது. மூஞ்சியப் பாத்து எவனாம் திட்டினாக்கூட கண்ணிலே ஒரு உணர்ச்சி தெரியாது. அது ஒரு ஜென்மம் இங்க வந்துது, போயிட்டுது.
ஆனா ஆயிரம் ரெண்டாயிரம் கழுத்திலயும் காதிலயும் அவருக்க கைதொட கலை நின்னுட்டிருக்கு. தங்கத்திலே பூ மலர வைச்சவருல்லா! அவரு ஆக்கிப்போட்ட சோத்த தின்னு வளந்து நிறைஞ்ச குடும்பம் ஒண்ணுரெண்டுல்ல சார், நாப்பத்திரெண்டு. ஆமா இன்னைத்தேதிக்கு நாப்பத்திரெண்டு குடும்பம்.
அவரைப்பத்தி எனக்கு என்ன தெரியும்? ஒண்ணுமே தெரியாது. பிறவு பெருமாள் நாயிடு கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டதுதான். நானாவது அதை தெரிஞ்சுகிட்டேன். மத்தவங்களுக்கு அவரு ஒரு சாமி. கோயில் கர்ப்பகிருகத்திலே கன்னங்கருப்பா உக்காந்திட்டிருக்குமே அது.
ஆனா தெரிஞ்சதனாலே அவரு எனக்கு மனுசனா தெரியுதாரு. நான் அவரை நினைச்சு நினைச்சு மாய்ஞ்சு போறேன். சார், மாசம் ஒருமுறை இங்கிண வாறது அதுக்காகத்தான். அவரை நினைச்சு அப்டியே உக்காந்துட்டு போறதுக்காகத்தான்.
பெருமாள் நாயிடுதான் சொன்னாரு. அவருக்கு சங்கீதம்னா கிறுக்கு சார். சில விசயங்களுக்காக நாம சங்கறுத்து செத்து விழுவோமே அந்த மாதிரியான கிறுக்கு. ஒரு பாட்டை அவராலே நாவாலே சொல்ல முடியாது. நெஞ்சு நடுங்கி சங்கு உருகி கண்ணீரு வந்திரும். அப்டி ஒரு பிரேமை.
பிரேமை! என்ன அருமையான வார்த்தை, ஏன் சார்? பிரேமை. அதான். கிருஷ்ணன் மேலே ராதைக்கு இருந்தது அது. பரமாத்மா மேலே ஜீவாத்மாவுக்கு இருக்கப்பட்டது. தேன்மேலே தேனீக்கு இருக்கப்பட்டது.
பிரேமைன்னா ஆசை இல்லை. விருப்பம் இல்லை. அது வேறே. என்னாலே சொல்லமுடியல்லை. இப்டி சொல்றேனே, பிரேமைன்னா ஒண்ணு நமக்கு வேணுங்கிறது இல்லை சார், அதுக்காக நம்மை நாமளே குடுத்திருவோமே அது … அதாக்கும் பிரேமை.
ஆனா அப்பா வித்வத் சங்கீதமே கேட்டதில்லை சார். சொரிமுத்தையன் சாமிமேலே சத்தியமா. ஆமா சார், அவரு பாட்டே கேட்டதில்லை. உள்ளதாக்கும். அவரு கேட்ட பாட்டெல்லாம் பெருமாள் நாயிடுவும் பட்டறைத்தெருவிலே ஓட்டல்கடை வச்சிருந்த சங்கரய்யரும் முனகிக்கிடுறத மட்டும்தான்.
அவருக்கு எங்க நேரம்? பட்டறையிலே இருந்து எந்திரிச்சவர் இல்லை அவரு. அவரு மூணு வயசிலே பட்டறையிலே உக்காந்தவரு. படிப்பே கெடையாது. கணக்கும் வாசிப்பும் எல்லாம் பட்டறையிலேயே அப்பாகிட்டே சித்தப்பாக்கள் கிட்டே கத்துக்கிட்டது. அவருக்கு முற்றத்து வெயிலே தெரியாதுன்னு அம்மை சொல்லுவா.
சார், வீட்டுக்குப் பக்கத்திலே எட்டுவச்சு போற தூரத்திலே ஓடிட்டிருக்கு தாமிரபரணி. அவரு ஆசையாக் குளிச்சதில்லை. குளிக்கணும்னு கொள்ளை ஆசைன்னு அம்மைக்கிட்டே சொல்லியிருக்கார். ஆனா போயிட்டு வர நேரமில்லை. அவரு அதிலே குளிக்கணும்னா யாராவது சாகணும். காரியம் செய்ய படித்துறைக்குப் போகணும். படுத்து உறங்கினதில்லை, இருந்து சாப்பிட்டதில்லைன்னு எங்க அம்மை சொல்லும்.
அந்த லெச்சணத்திலே எங்க கச்சேரி கேக்க? ரேடியோவிலே பாட்டு கேக்கலாம். ஆனா கேட்டா அவருக்கு சோலி ஓடாது. மனசு உருகிரும். அதோட கடையிலே ரேடியோ வைச்சா வேலை நின்னிரும். அவரு கேட்ட ரேடியோல்லாம் ரொம்பதூரத்திலே எங்கியாம் கேக்குறதுதான். அம்பதுகளிலே ரேடியோ பிளேட் எல்லாம் ரொம்ப கம்மி. எப்டியாவது ஏதாவது காதிலே விளுந்தாத்தான்.
ஒண்ணுசொல்றேன் சார், எப்ப நாம பாட்டைத்தேடிப் போகாம பாட்டு நம்மளை தேடி வர ஆரம்பிச்சுதோ அப்பவே சங்கீதம் வெளிறிப்போச்சு . எங்கப்பால்லாம் சங்கீதம் கேட்டு வாழ்ந்தவர் இல்லை, சங்கீதத்தை நினைச்சு நினைச்சு ஏங்கி தவம்செஞ்சு வாழ்ந்தவரு.
ஆமா சார், தவம்தான். அவரு பாட்டு கேட்டது ரொம்ப கம்மி. ஆனா மனசுக்குள்ளே பாட்டு ஓடிட்டே இருக்கும்னு பெருமாள் நாயிடு சொன்னார். “மூஞ்சியப்பாத்தா தெரியும்லே. அப்டியே சங்கீத கெந்தர்வன் மாதிரி மலர்ந்திருக்கும். திருணவேலி கோயிலுக்குப்போயி கெந்தர்வனுக்க சிலையை பாரு. அதாக்கும் உன் அப்பனுக்க முகம். கண்ணு அப்டி மலர்ந்திருக்கும். நான் பாத்தே சொல்லிருவேன், என்ன ராகம் ஓடிட்டிருக்குன்னு. என்னவே கானடாவான்னு கேப்பேன். ஒரு புன்னகை. இம்பிடுபோல”
பெருமாள் நாயிடு எங்கப்பாவை பத்தி பேசினா பேசிட்டே இருப்பாரு. “இந்த பட்டறை வாசலிலே சிதறிக்கிடக்குமே துளிக்கும் துளியான தங்கம். உறைமெழுகு வச்சு ஒத்தி எடுக்கப்பட்ட தங்கப்பொடித் துணுக்கு. அதமாதிரியாக்கும் உன் அப்பனுக்க சிரிப்பு. ஆமாடே உறைமெழுகு வச்சு ஒத்தி எடுக்கணும்… ”
“எம்மாடீ, அப்டி மனுசன் சிரிப்பானா? பல்லோ உதடோ இல்லாம. கண்ணுகூட இல்லாமல் ஆத்மா மட்டும் கண்ணுக்குள்ள வந்து எட்டிப்பாத்துட்டு அப்டியே உள்ள தலைய இளுத்துக்கிடும், சமைஞ்ச குமரிமாதிரி… அப்டி ஒரு சிரிப்பு… பாவிமட்டை, எதுக்கு பிறந்தானோ. ஏக்கத்தையே தபஸாட்டு பண்ணிட்டு அப்டியே போய்ட்டானே!” பெருமாள் நாயிடு எங்கப்பாவைப் பத்தி சொல்லிட்டே இருப்பாரு, அவரு சாகிற வரைக்கும் சொன்னாரு.
அந்தக் காலகட்டத்திலே சங்கீதக்கிறுக்கனுக அம்பிடுபேருக்கும் ராஜரத்தினம் பிள்ளைன்னா வெறி. சொத்த வித்து பொண்டாட்டிபுள்ளைய பட்டினி போட்டுட்டு கெளம்பிப்போயி கேப்பானுக. அவரு மருதையிலே வாசிச்சா அங்க கேப்பானுக. அந்தாலே அவரு திருணெல்வேலியிலே வாசிக்க வருவாரு. இவனுக கூடவே வருவானுக. மாடு போற எடத்துக்கு ஈ போற மாதிரி.
பெருமாள் நாயிடு களுகுமலையிலயும் சங்கரன் கோயிலிலேயும் சீவைகுண்டத்திலயும் நேரிலே போயி பிள்ளைவாள் வாசிப்பை கேட்டுட்டு வந்திருக்காரு. அவரு கதைகதையா சொல்லுவாரு. பாடிக்காட்டுவாரு. பாடுறப்பவே அளுதிருவாரு. ஒருவாட்டி நெஞ்சப்புடிச்சுட்டு சாய்ஞ்சுட்டாரு. வலிப்பு வந்திட்டுது.
அப்பா திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளையை கேட்டதே கெடையாது. பிளேட்டிலேகூட. ரேடியோவிலேகூட. எல்லாமே நாயிடு சொன்னதை வச்சு கற்பனை செஞ்சுகிட்டதுதான். அப்பதான் சுசீந்திரத்திலே நேரிலே கேக்க வாய்ச்சுது. நேரிலே என்ன, ஒரு ஃபர்லாங்கு இந்தாலே நின்னு. ஆனா மைக்கு இல்லை. அவருக்க குழாயிலே இருந்து நேரா. காத்துலே வந்து அப்பா காதிலே விழுந்திச்சு. இரக்கமான காத்து அய்யா, தாய்மனசு மாதிரியான காத்தில்லா அய்யா அது?
பின்னாடி பெருமாள் நாயிடு சொன்னாரு. அப்பா ஒருவாட்டியாவது ராஜரத்தினம் பிள்ளை வாசிப்பை கேக்க ஆசைப்பட்டாரு. “ஒருவாட்டிவே, ஒருவாட்டி கேட்டா செத்துடலாம் வே”ன்னு சொல்லிட்டே இருந்தாரு. அதுக்குப்பிறகு பிள்ளைவாள் சுத்துவட்டாரத்திலே ஏழு இடங்களிலே வாசிச்சாரு. ஆனா அப்பாவாலே எந்திரிக்கவே முடியலை. பெருமாள்நாயிடு போயிட்டு வந்து சொல்றத கண்ணு மலர கேட்டுட்டே இருந்தாரு.
அப்பா நகைவேலையை மறுக்கவே மாட்டாரு. வாங்கி வாங்கி தலைமேலே குவிச்சு வைச்சிருப்பாரு. நண்டுமாதிரி எட்டு கைவச்சு வேலைசெஞ்சாலும் தீராது. அப்டி செஞ்சு சம்பாரிச்சாலும் கடன் அடைச்சு தீராது. பதினேழு பொட்டைகளுக்கு செய்யணும். செஞ்சு செஞ்சு தீராது. செஞ்சாலும் நிறையாது. அது ஒரு தபஸு. எங்கோ அள்ளி அள்ளி எடுத்திருக்காரு. இப்பிறவியிலே கொடுத்து கொடுத்து கழிச்சாரு
அப்டியே போச்சு அவரு வாழ்க்கை. நான் தலையெடுத்தேன். அத்தைமாருக்கும் சித்திமாருக்கும் பிள்ளைகள் வளந்தாச்சு. அப்பா கொஞ்சம் கையொழிஞ்சு அமைஞ்சிருக்கலாம்னு வந்திச்சு. அதெப்டி, கணக்கு கணக்காட்டு இருக்குமே அவனுக்க ஏட்டிலே. அவருக்கு பக்கவாதம் வந்திட்டுது. ஆனா ரொம்பநாள் படுக்கலை. ஏழெட்டு மாசம்தான். பூமாதிரி உதுந்துட்டாரு.
அவரு மெலிஞ்ச உருவம். உக்காந்து உக்காந்து கூன்போட்ட முதுகு. நல்ல செவப்பு நெறம். செவப்புக்கல் கடுக்கன்போட்ட காது. நெத்தியிலே எப்பமும் விபூதி இருக்கும். குடுமி வச்சிருப்பாரு. சின்ன வாய், சின்ன மூக்கு. கண்ணுமட்டும் பெரிசு. அவரை நான்தான் குளிப்பாட்டுறது, உடம்புக்கு பௌடர் போடுறது, சாப்பாடு ஊட்டிவிடுறது எல்லாமே.
எங்கிட்ட கேட்டாரு “சம்முகம் என்னைய சுசீந்திரத்துக்குக் கூட்டிட்டுப் போலே”
“சரிப்பா” ன்னு சொன்னேன்.
”பிள்ளைவாள் வாசிப்பை கேக்கணும்” னு சொன்னாரு.
நான் ஒருமாதிரி ஆயிட்டேன். பிள்ளைவாள் போயி அப்ப பதினெட்டு வருசம் ஆயாச்சு. எப்டிச் சொல்ல? பக்கவாதம் வந்து மனசு குளம்பிட்டுதுன்னு நினைச்சேன்.
ஆனா அவரே சொன்னாரு. “அவரு போயிட்டாருலே, தெரியும். ஆனா அந்த தோடி அப்டி போயிருமா என்ன? அங்கதான் இருக்கும்… போய் பாப்பம்.”
எனக்கு அப்பவும் புரியல்ல. “சரிப்பா”ன்னு சொன்னேன்.
“நாளு நேரம் ஒண்ணும் வேணாம்… சும்மா போவம்”னு சொன்னார். “இப்பமே போவம்லே… ‘நாளை என்றால் யாரே கண்டார்?’னுல்லா பாட்டு?”
நான் அவரை கூட்டிட்டு வந்தேன். ஒரு காரு பிடிச்சு பின் சீட்டிலே படுக்கவைச்சேன். நானும் அவரும் மட்டும்தான். எங்க போறம்னு யாருக்கும் சொல்லல்ல.
சுசீந்திரம் வாரப்ப சாயங்காலம் அஞ்சரை மணி. பெரிசா கூட்டமில்லை. அது ஒண்ணும் விசேச நாள் இல்லை.
“உள்ளபோயி சாமி கும்பிட்டு வருவோம்”னு சொன்னார்.
உள்ள போயி சுத்தி கும்பிட்டோம். அப்பா செய்துங்கநல்லூர் கோயிலை தவிர எந்தக் கோயிலையுமே பாத்தவரில்லை. செய்துங்கநல்லூர் கோயிலுக்கே நாலஞ்சுதடவைகூட போனதில்லை.
கைகூப்பி கும்பிடமுடியாது. ஒருகையை நான் பிடிச்சு தூக்கணும். மத்த கையை அவர் கொண்டுவந்து சேத்துக்கிடுவார். அர்ச்சனை பூஜை எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டார். ஒண்ணுமே வேண்டிக்கிடலை. சும்மா பாத்துட்டு இருந்தார்.
அப்பதான் நான் முதல்முதலா காசிவிஸ்வநாதர் கோயிலுக்குள்ள போனோம். அங்க யாருமே இல்லை. அப்ப கரெண்டு வெளக்கும் இல்லை. உள்ள ஒரு நெய்வெளக்கு மட்டும்தான். அப்பாவும் நானும் அங்க உக்காந்தோம்..
அப்பா சும்மா கல்லுசுவரிலே சாய்ஞ்சு காலைமடிச்சு உக்காந்திட்டிருந்தார். நல்லா வளைஞ்ச உடம்பு. வாயிலே இருந்து எச்சி குழாயா ஒளுகி மடியிலே விளுந்திட்டிருக்கு. நான் துடைச்சு விட்டேன்.
அப்ப நினைச்சுகிட்டேன், எங்க அம்மை சொன்னதை. நான் சின்னப்பிள்ளையா இருக்கிறப்ப நல்லா வாநீ ஊத்துவேனாம். அப்பா அதை விரலாலே துடைச்சு “தேனுல்லா! தேனுல்லா!”ன்னு சொல்லிட்டே வாய்லே வச்சு குடிப்பாராம்
அப்பா எங்கிட்டே “ஏலே பிள்ளைவாள் வாசிப்பு இங்கெல்லாம் இருக்கும்லே?” னு சொன்னார்.
“ஆமா”ன்னு நான் சொன்னேன்.
“இந்த கல்லிலே, தூணிலே இருக்குலே.”
“ஆமா”ன்னு சொன்னேன்.
அப்பா “இங்க உக்காந்துதான் நான் கேட்டேன்”ன்னு சொன்னார்.
என்ன சொல்றார்னு புரியலை. நான் சும்மா பாத்துட்டிருந்தேன்.
“கேக்குதுலே!”
எனக்கு சிலுத்துப்போச்சு சார். பெருமாள் நாயிடு சொன்னாரே, அந்த மொகம். கந்தர்வனுக்க மொகம். சார், நெஜம்மாவே அவரு பாட்டை கேட்டுட்டிருந்தார்.
ஆமா சார், முழுக்கச்சேரி. அப்பப்ப தலையை ஆட்டினார். முகம் மலந்து சிரிச்சார். எங்கிட்ட “அடாணா!” அப்டீன்னு ராகம்பேரு சொன்னார். “நிதி சால சுகமா?”ன்னு பாட்டு பேரைச் சொன்னார்.
கச்சேரி முடிஞ்சப்ப “போலாம்டா”ன்னார். நான் தூக்கி கொண்டுவந்து காரிலே ஏத்தினேன்.
கெளம்பறப்ப திரும்பிப் பாத்து “என்ன ஒரு கச்சேரி… என்னா வாசிப்பு… எல்லாமே ரத்தினம்… ஆனா தோடி இருக்கே, அது ராஜரத்தினம்!”னு சொன்னார்.
அவரே அதை நினைச்சு நினைச்சு சிரிச்சுகிட்டார். அப்டி ஒரு வார்த்தையை அவரே சொல்லிட்டார்ல! சின்னப்பிள்ளை மாதிரி அதையே பலவார்த்தைகளிலே சொல்லிட்டே இருந்தார். அவர் அவ்ளவு பேசி நான் கேட்டதே இல்லை. செய்துங்கநல்லூர் வரை பேச்சுதான். பிள்ளைவாள் பத்தி, கச்சேரியைப்பத்தி, ஒவ்வொரு பாட்டையும்பத்தி, தோடியப்பத்தி.
வீட்டுக்கு கொண்டுபோயி படுக்கவைச்சேன். மறுநாள் அவரு எந்திரிக்கலை. நான் குடுத்துவச்சது அவ்ளவுதான்.
“ராஜரத்தினம்பிள்ளை இங்க இருக்கார்னாக்க அப்பாவும் இருப்பார்னு நான் சொல்லிக்கிடறது. அப்பப்ப வந்திருவேன்” என்றார் சண்முக மணி.
“இன்னிக்கு அவரோட நினைவுநாளா?”
“சேச்சே, அதெல்லாமில்லை. சும்மா தோணுறப்ப வாறதுதான். சிலநாள் மனசிலே என்னமோ ஒரு தித்திப்பு இருக்கும். ஒரு இனிப்பு… அப்ப காலுநிக்காது. கெளம்பிருவேன்.”
“பாப்பம்” என்றேன்.
“பாப்பம்சார். யாரோ நீங்க… உங்ககிட்ட சொல்லணும்னு இருந்திருக்கு” என்றார்.
***