‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–67

பகுதி ஆறு : படைப்புல் – 11

பிரஃபாச க்ஷேத்ரத்தில் மிக விரைவாக குடில்கள் அமைந்தன. அத்தகைய ஒரு நிலத்தில் யாதவர்கள் எவரும் அதற்கு முன் குடியேறியதில்லை. பெரும்பாலும் அவர்கள் அனைவருமே துவாரகையில் பிறந்து வளர்ந்தவர்கள். முதியவர்களோ வடக்கே செழித்த புல்வெளிகளிலும், மதுவனம், மதுராபுரி போன்ற அரசு நிலைத்த நகர்களிலும் பிறந்தவர்கள். ஒரு கடலோரச் சதுப்பு நிலத்தில் குடில் கட்டி நகர் அமைக்கும் பயிற்சியை அவர்கள் எங்கிருந்தும் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆணையிடாமலேயே ஒவ்வொருவருக்கும் அனைத்தும் தெரிந்திருந்தது. நூற்றுக்கணக்கான குலக்கதை அடுக்குகளினூடாக அவர்கள் வெவ்வேறு நிலங்களில் யாதவர்கள் எவ்வண்ணம் குடியேறினார்கள் என்பதை அறிந்திருந்தார்கள். தேவையில்லை என்பதனால் மறந்திருந்தார்கள். தேவையென்பதனால் தெய்வம் எழுந்ததுபோல் அந்த அறிதல் எழுந்தது.

சதுப்பு நிலத்தில் இறங்கியதுமே அங்கே பெரும்பாலான இடங்களில் இடையளவு சேறு புதைந்து உடல் உள்ளே செல்லும் என்பதை அறிந்துகொண்டார்கள். ஆகவே எடைமிக்க பொருட்களை அங்கே இறக்கலாகாது என்று சொல்வழியாகவே ஆணைகள் பரவிச்சென்றன. காளைகளையும் பசுக்களையும் அச்சதுப்பில் இறக்குவதென்பது இடர் அளிப்பது என்று உணர்ந்து முதியவர்கள் “பசுக்களையும் காளைகளையும் பின்னுக்கு கொண்டு செல்லுங்கள். புரவிகளும் அத்திரிகளும்கூட பின்னால் இருக்கட்டும். நம்மிடம் இருக்கும் எருமைகள் மட்டும் முன்னால் வரட்டும்” என்றனர்.

அவர்களிடம் எருமைகள் மிகக் குறைவாகவே இருந்தன. அவை பாலையின் அந்த வறுபரப்பில் நீரிலாது வாழக்கூடியவை அல்ல. எனினும் வரும்பெருக்கில் முற்றிலும் எருமை இல்லாமல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே எருமைகளை கொண்டுவந்திருந்தனர். வியத்தகு முறையில் அவை பாலைநிலத்தின் வெம்மையை ஏற்றுக்கொண்டன. குறைவான நீரில் உயிர்வாழ்ந்தன. திரளின் உணர்வுகளை புரிந்துகொண்டு ஒத்துழைத்தன. இயல்பாக அந்த நெடுந்தொலைவை கடந்து வந்தன.

நாற்பது எருமைகள் முன்னால் அழைத்துவரப்பட்டன. அவை புல் செறிந்த சேற்று நிலத்தைக் கண்டதுமே மகிழ்ந்து முக்காரையிட்டுக்கொண்டு செவி குவித்து முன்னால் செல்ல விரும்பின. குட்டிகளிடம் நிறைய புல், நிறைய நீர் என அறிவித்தன. ஆணையிடப்பட்டதும் சதுப்பில் இறங்கி வயிற்றை உப்பி தெப்பங்கள்போல மாறி உழன்றும் மிதந்தும் சென்றன.

அவற்றின் உடலில் கட்டப்பட்டிருந்த கயிறுகளைக் கொண்டு பலகைகளை இழுத்து சேற்றுப் பரப்பின்மீது நீண்ட பாதை ஒன்றை அமைத்தனர். பலகைகள் ஒன்றுடன் ஒன்று சேர்த்து கட்டப்பட்டன. அவை எடையால் சேற்றில் மூழ்காமல் இருக்க அவற்றுக்கு அடியில் பெரிய மூங்கில்கள் குறுக்காக அமைக்கப்பட்டன. அம்மூங்கில்களுடன் மேலும் மரச்சிம்புகள் இணைக்கப்பட்டன. மேலிருந்து பார்த்தபோது ஒரு பெரிய முதுகெலும்பு அச்சேற்று நிலத்தில் பதிந்ததுபோல் தோன்றியது.

“நிலம் முதுகெலும்பு கொண்டுவிட்டது. இனி இது எழுந்து நின்றிருக்கும். பேருருக்கொண்டு போர்புரியும். நிலம் வெல்லும். புகழ்கூடும்!” என்று ஒரு சூதன் சொன்னான். யாதவர்கள் அனைவரும் மகிழ்ந்து கூச்சலெழுப்பி நகைத்தனர். கால்கள் விரிந்த அந்தப் பாதையை பூரான் என்று அழைத்தனர். அதில் ஏறியபோது படகில் செல்லும் உணர்வு ஏற்பட்டது. ஆனால் எளிதில் அதற்கு அவர்கள் உடல்பழகினர். மானுடரும் விலங்குகளும்.

வண்டிகளும் பசுக்களும் காளைகளும் சுமை விலங்குகளும் பெருந்திரளான மக்களும் அதன்மேல் ஏறிய போதும்கூட அது சேற்றிலேயே மிதந்து சற்றே அசைவு அளித்தாலும் கவிழாமல் நின்றது. அதனூடாக மக்கள் சென்று பரவினர். குடில்கள் அமைக்கும் பணியை உடனே தொடங்கினர். ”சேற்றில் மூங்கில்களை ஓங்கிக் குத்தி அடிநிலம் எங்குள்ளது என்று பாருங்கள். எங்கு அவை உறுதியாக நிலைகொள்கின்றனவோ அங்கு நாட்டுங்கள். அவற்றை வேர் என்றாக்கி குடில் அமைக்கலாம்” என்றார் முதியவர்.

அதுவரை நான் நான்கு மூங்கில்கள் குத்த இடம் இருந்தால் மட்டுமே ஒரு இல்லத்தை அமைக்கமுடியும் என்று எண்ணியிருந்தேன். அப்போதுதான் ஒற்றைப் பெருமூங்கிலை அழுத்தமாக நட்டு அதை மேலிருந்து மரத்தடிகளால் அறைந்து அறைந்து உள்ளே செலுத்தி நாட்டிய பின் அதிலிருந்து நாற்புறமும் இணைப்பு கொடுத்து சதுப்புக் குடில்களை கட்ட முடியும் என்று கண்டேன்.

பெரும்பாலான குடில்கள் ஆணிவேர் மட்டுமே கொண்டவை. அவற்றின் எடை சதுப்பில் பரவும் பொருட்டு ஒவ்வொன்றுக்கு அடியிலும் பெரிய கிடைமூங்கில்கள் அமைக்கப்பட்டன. குடில்கள் கட்டப்பட்டு அவை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டன. அவை வலைபோலப் பரவியபோது சேறு அவற்றை தாங்கிக்கொண்டது. அந்தக் குடில்பரப்பே ஒரு மாபெரும் பாசிப்படர்வு என்று தோன்றியது.

முதல் நாளிலேயே அங்கு கரையோரம் பெருகி நின்றிருந்த உயரமான நாணல்புதர்கள் பயன்படக்கூடியவை என்று ஆயர்கள் கண்டனர். அந்த நாணல் மூங்கில் போலவே உள்ளே துளைகொண்டது. மிகமிக உறுதியானது. சிறிய மூங்கிலென பயன்படக்கூடியதென்பதை யாதவர்கள் கண்டுகொண்டதும் மட்கிய மரத்தடிகளை தெப்பங்களாக்கி உள்ளே சென்று அந்த நாணல்களை வெட்டிக் குவித்து கயிற்றால் இழுத்துக் கொண்டுவந்து முடைந்து தட்டிகளும் பாய்களும் ஆக்கினர். அவற்றைக் கொண்டே இல்லங்களுக்கு சுவர் அமைக்கலாம் என்றும் கூரை அமைத்து அதன்மேல் மூங்கில் தாள்களையே பரப்பி நீரொழுகாது ஆக்கலாம் என்றும் கண்டுகொண்டார்கள்.

பின்னர் அந்தப் புல் தண்டுகளை அடுக்கடுக்காக சேர்த்துக் கட்டி ஒன்றுடன் ஒன்று இணைத்து பெரிய பரப்பென்றாக்கி சதுப்பின்மேல் போட்டால் அது மிதந்து கிடக்கும் நிலப்பரப்பென ஆவதை கண்டுபிடித்தனர். மூங்கில்வேர்கள் இல்லாமலேயே அந்த மிதக்கும் நிலத்தின்மேல் இல்லங்களை அமைக்க முடியும். அந்த நாணல் சதுப்பின் ஈரத்தில் மட்குவதில்லை. அழுந்தும்போது சதுப்பிலிருந்து நீரை மேலே ஊறிஎழச் செய்வதுமில்லை.

ஒவ்வொருநாளும் புதியன கண்டறியப்பட்டன. புதியவை உருவாகி வந்தன. ஐந்து நாட்களுக்குள் பிரஃபாச க்ஷேத்ரம் முழுக்க பரவி எழுந்த ஒரு நகரத்தை கண்டேன். நாணற் கூரைகளும் நாணல் சுவர்களும் கொண்டது. சீரான தெருக்களுக்கு இருபுறமும் மூங்கில்கால்களின் மேல் எழுந்து நின்ற இரண்டு அடுக்கு மாளிகைகளின் நிரை. அங்காடி ஒன்று. அதனருகே கேளிக்கை களம். குடிமூத்தோருக்கும் குலதெய்வங்களுக்குமான ஆலயங்கள். அனைத்துமே நாணல்களால் ஆனவை.

பன்னிரண்டு மூங்கில்களை நாட்டும் இடமிருந்த ஒரு இடத்தில் மூன்றடுக்கு மாளிகை எழுந்தது. சாம்பனுக்கும் பிரத்யும்னனுக்கும் அநிருத்தனுக்கும் தனித்தனி மாளிகைகள் கட்டப்பட்டன. அவை தனி மையங்களாக மாறின. அவற்றைச் சுற்றி அவர்களின் ஆதரவாளர்களின் குடில்கள் அமைய அவை நகரத்திற்குள் தனிநகரங்களாக மாறின.

நகரத்தைச் சுற்றி இருபது காவல்மாடங்கள் அமைந்தன. அவற்றில் இரவுபகலாக வில்லேந்திய காவலர்கள் அமர்ந்திருந்தனர். பிரஃபாச க்ஷேத்ரத்தில் பெருகிக்கிடந்த லோகநாசிகை என்னும் அந்தப் புல் அம்புக்கு மிக உகந்தது என்று கண்டடையப்பட்டது. அதைக் கொண்டு நெடுந்தொலைவுக்கு அம்பு செலுத்த முடிந்தது. சிறகு கொண்ட பறவைபோல அவை எழுந்து விண்ணில் நீந்திச்சென்று இலக்கை அடைந்தன.

அந்த அம்புகள் யாதவர்களை நம்பிக்கையும் மிதப்பும் கொண்டவர்கள் ஆக்கின. எவரும் பிரஃபாச க்ஷேத்ரத்தை அணுகிவிட முடியாது என்ற நம்பிக்கை எழுந்தது. அந்நகருக்கு ஒரு கோட்டைகூட தேவையில்லை என்றார் பிரத்யும்னன். ”இந்த அம்புகளைக் கடந்து கொசுக்களும் ஈக்களும்கூட இங்கே வந்துசேர முடியாது” என்றார்.

தெப்பங்கள்போல் மிதந்து கிடந்த பாதைகளினூடாக புரவிகள் நனைந்த முரசுத்தோலில் கோல் ஒலிப்பதுபோல் குளம்புகள் முழங்க விரைந்தோடின. அங்கே விலங்குகளுக்கான புல்லுக்கு குறைவே இல்லை. ஆகவே பசுக்களும் எருமைகளும் தின்றுகொண்டே இருந்தன. ஓரிரு நாட்களிலேயே அவை வாட்டம் அகன்று மின்னும் விழிகள் கொண்டவையாக ஆயின. பசுக்களும் எருமைகளும் குடமென அகிடு கனத்தன. கலங்கள் நிறைந்து நுரைக்க பால் அளித்தன.

புல்வெளியில் விலங்குகளை வேட்டையாடி கொண்டுவருவது எளிதாக இருந்தது. அங்கே விலங்குகள் பெருகிக்கிடந்தன. அவை மானுடர் வேட்டையாடுவதை அறிந்திருக்கவில்லை என்பதனால் மிகச் சிறிய பொறிகளிலேயே சதுப்பில் மேயும் மறிமான்களும் முயல்களும் சிக்கிக்கொண்டன. பன்றிகள் இரவில் படையென கிளம்பி வந்தன. ஓரிரு நாட்களுக்குள்ளேயே மூன்று வேளையும் பன்றி இறைச்சியை உண்ணலாயினர். பாலையில் நடந்த மெலிவும் கருகலும் உடல்களிலிருந்து மறைந்தன. முகங்களில் மகிழ்ச்சியும் கண்களில் ஒளியும் ஏற்பட்டது.

யாதவர்கள் புல்வெளிகளில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று அப்போது கண்டேன். புது நிலம் ஒன்றை வென்று கையகப்படுத்துவதே அவர்கள் அடையும் முதன்மை மகிழ்ச்சி என்பதையும் அப்போது உணர்ந்தேன். கலைகள், கேளிக்கைகள், வெற்றிகள், புகழ் எதுவுமே அவர்களுக்கு மெய்யாகவே பொருட்டு அல்ல.

ஒவ்வொரு நாளும் புதிய முறைகள் உருவாகி வந்தன. எருமைகளைக் கொண்டு பிற எருமைகளை வெல்லும் உத்தி ஒன்றை முதியவரான சக்ரர் வகுத்தார். புணர்வுக்கு மணம் எழுப்பிய இளம் எருமை ஒன்றின் பின்பக்கத்திலிருந்து எடுத்த மதநீரை நீரில் கரைத்து அனைத்து எருமைகள் மேலும் தெளித்து அவற்றை பிரஃபாச க்ஷேத்ரத்தின் எல்லைகளில் கட்டி வைத்தார்கள். ஒவ்வொரு எருமையைச் சுற்றியும் புலரியில் பல ஆண் எருமைகள் நிற்பதைக் கண்டனர். அவற்றை கயிறு எறிந்து கொம்புகளில் சுருக்கிட்டு துள்ள வைத்து கால்களில் சுருக்கிட்டு வீழ்த்தி பிடித்துவந்தனர்.

பின்னர் அவற்றை கட்டி வைத்து பட்டினி இட்டு, நீரும் உணவும் இட்டு, உணவுடன் ஆணைகளை இணைத்து சில நாட்களிலேயே பழக்கினர். அந்த மதம் எழுந்த ஆண் எருமைகளை கொண்டுசென்று சதுப்பில் எடை இழுக்கவும் உழவும் பழக்கினர். அவற்றின் விந்து நீரை வெளியே எடுத்து நீரில் கலக்கி பிற எருமைகளின் உடலில் தெளித்து காட்டில் இரவில் கட்டிவைத்து மறுநாள் அழைத்து வந்தபோது கன்னி எருமைகள் பெருந்திரளாக பிரஃபாச க்ஷேத்ரத்திற்கு வந்தன.

ஒரு மாதத்திற்குள் பிரஃபாச க்ஷேத்ரம் எருமைகளின் முக்காரைகளால் நிறைந்தது. எங்கும் எருமைகளின் செவியாட்டல், வால் சுழற்றல். அவை அச்சேற்றில் திளைத்தன. உண்டு கழித்து அந்த நிலத்தை வளம் கொண்டதாக்கின. சேற்றில் செழித்து விளையும் செடிகளை கண்டடைந்தனர். சேம்பு முதலிய பல்வேறு கிழங்குகள் சேற்றில் மிகச் சிறப்பாக விளையுமென்பதை கண்டனர்.

பின்னர் சேற்றுநிலத்தை விளைநிலமாக்கத் தொடங்கினர். சேற்றுக்குள் காற்று நுழையாததனாலேயே அங்கு செடிகள் வளர்வதில்லை. நாணல் குழாய்த் துண்டுகளை நறுக்கி அச்சேற்றில் விட்டு அவை புதைந்தபோது உள்ளே காற்று புகுந்து நுரைக்குமிழிகள் எழுந்தன. உள்ளிருந்து அழுகலை உண்ணும் சிறு வெண்புழுக்கள் பெருகி வந்தன. பின்னர் கிழங்குகளை நட்டால் அவை பெருகும் என்று தெரிந்தது.

சேற்றுக்கு நடுவே இடையளவு ஆழத்தில் நீண்ட ஓடைகளை வெட்டி ஆங்காங்கே வெட்டப்பட்ட பெரிய குளத்தில் சேர்த்தனர். நீர் வடிந்ததும் சேற்றுப்பரப்பு வறண்டு வெடித்தது. அதன் பின்பு அங்கு நடப்பட்ட வாழைகள் தளிரெழுப்பி, குளிர்ந்த உடல் எழுப்பி தலைக்குமேல் வளர்ந்தன. எருமைகளின் சாணி அவற்றுக்கு சிறந்த வளமென ஆயிற்று. பிரஃபாச க்ஷேத்ரம் எட்டு மாதங்களுக்குள் மாபெரும் வாழைத்தோட்டமென மாறியது.

சதுப்பு நிலம் வேளாண்மைக்கு உரியதல்ல என்று நான் அறிந்திருந்தேன். அதை வேளாண்மை நிலமாக ஆக்குவது எப்படி என்பது யாதவ முதியவர் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருந்தது என்பதை வியப்புடன் உணர்ந்தேன். முதியவராகிய சம்பூதர் பல தலைமுறைகளுக்கு முன்பு யாதவர்களுக்கு நிலம் தேடிச்சென்று யமுனை நதிக்கரையிலிருந்த சதுப்பு ஒன்றை அடைந்து அதைத் திருத்தி நிலமென்று ஆக்கியதைப்பற்றி சொன்னார். அது பின்னர் மதுராபுரி என்று ஆகி கோல் கொண்டு முடிசிறந்தது.

அந்நிலத்தில் இருந்து அவர்கள் உயிரை மீட்டெடுத்ததைப் பற்றி கூறும் யமுனாவிலாசம் எனும் காவியம் நீண்ட மேய்ச்சல் பாடலாகவே அவர் நினைவில் இருந்தது. அதிலிருந்த ஒவ்வொன்றையாக பிரஃபாச க்ஷேத்ரத்தில் செய்தனர். மண்ணில் சுண்ணமும் சாம்பலும் சேர்த்தனர். மணலையும் கூழாங்கற்களையும் கொண்டுவந்து கலந்தனர். மூங்கிலை ஆழமாகப் பதித்து எடுத்து கூரிய சிறு குழிகளை உருவாக்கினர்.

சதுப்பு நிலத்துக்குள் நூறு தெய்வங்கள் ஆவி வடிவில் குடிகொள்கின்றன. அவை மழை பெய்து நீர் பெருகும்போது குமிழிகளாக வெளிக்கிளம்புகின்றன. வெயில் மூத்து நிலம் வெடிக்கும்போது அனலாக எழுந்து பற்றிக்கொள்வதும் உண்டு. அந்த தெய்வங்களை அந்நிலத்திலிருந்து உரிய முறையில் வெளியேற்றுவதே மானுடன் அங்கே செய்யவேண்டியது.

பிரஃபாச க்ஷேத்ரத்தில் எங்கெல்லாம் மாடுகள் மேயாமல் ஒழிகின்றனவோ அங்கே அடியில் தீய தெய்வங்கள் வாழ்கின்றன என்று பொருள். அங்கே மூங்கில்களை அறைந்து ஆழ்ந்த துளைகள் இடப்பட்டன. பக்கவாட்டில் பலநூறு துளைகள் கொண்ட சல்லடைமூங்கில்கள் அவை. அந்த மூங்கில்களுக்குள் வந்த ஆவி மேலெழுந்து தலைக்கு மேல் சென்று மறைந்தது. எப்போதாவது அதில் அனல்துளி பட்டால் நீலநிறமாக பற்றிக்கொண்டு சிறிய ஒற்றைக்குமிழி என கொப்பளித்து வானில் எழுந்தது.

அதன் பிறகு வழிபடும் தெய்வங்களை மண்ணுக்குள் அனுப்பினார்கள். துளையிடப்பட்ட பலநூறு மூங்கில்கள் மண்ணில் அழுத்தப்பட்டன. நெற்றுகளும் ஓடுகளும் அம்மண்ணுக்குள் புதைக்கப்பட்டன. அவை போதாமலானபோது நெற்றுகள்போல் குழாய்கள்போல் மண்ணில் செய்து உலர வைத்து சுட்டு அம்மண்ணில் புதைத்தனர்.

“நூற்றெட்டு மாருத மைந்தர்கள் மண்ணுக்குள் குடியேற வேண்டும். அவர்கள் உள்ளே வாழும் புழுக்களை, வேர்களை புரக்கவேண்டும். அதன் பின்னரே இங்கே உயிர்க்குலம் எழும்” என்றார் சக்ரர். மாருதர்கள் மண்ணுக்குள் வாழத் தொடங்கினர். அவர்கள் அங்கே உயிர் பெருக்கினர். மண்ணின் மணம் மாறத்தொடங்கியது. அதில் எப்போதுமிருந்த புளித்த வாடை அகன்றது. எரியும் சாம்பல்சுவை தோன்றியது. மண்ணின் நிறம் ஆழ்ந்த நீலச் சாம்பல் நிறத்தில் இருந்து வெளிறி சிவப்பு கொண்டது.

அங்கு வந்தபோது அச்சதுப்பு நிலமெங்கும் ஒற்றைப் புல்லே நிரம்பியிருந்தது. கூரிய அரம் கொண்ட குறுவாட்கள் போன்ற இலைகளும் நீர்நிறைந்த தண்டும் கொண்டது. பிறிதொரு நிலையுயிர் அங்கே எழமுடியாமல் இருந்தது. அந்தப் புல் தன் வேர்களை வளர்த்து மேலே கொண்டுவந்து செந்நிறமான புழுக்கூட்டங்களைப்போல மிதக்கவிட்டு வெளிக்காற்றில் மூச்சுவிட்டது. வேர் அழுந்தும் செடிகள் அங்கே எழமுடியவில்லை. அவற்றின் விதைகள் சேற்றுள் வாழ்ந்த நீலநிற அனலால் எரித்து அழிக்கப்பட்டன.

மண்ணுக்குள் மாருதர்கள் சென்றதும் மண்புழுக்கள் எழுந்தன. உள்ளிருந்து மண்ணை கொண்டுவந்து மேலே குவித்தன. ஒவ்வொரு நாளும் பிரஃபாச க்ஷேத்ரத்தில் காலை எழுந்து மண்ணை நோக்கினால் பல்லாயிரம் மண்குவைகளை காணமுடிந்தது. உள்ளே மண்புழுக்கள் வேர்கள் என நெளிந்து இறங்கின. அவை மாருதர்களின் மைந்தர்கள். மாருதர்கள் நிலத்திற்குள் செல்வதற்கான வழி அமைப்பவை என்றார்கள் மூத்தவர்கள்.

உள்ளே சென்ற மாருதர்கள் அங்குள்ள அனைத்து உயிர்களையும் தொட்டெழுப்பினார்கள். ஒவ்வொருநாளும் புதிய செடிகள் மேலெந்து வந்தன. அங்கே கோடை காலம் வந்தபோது முதல் முறையாக மிதக்கும் நகரம் முழுக்க பலவண்ண மலர்கள் மலர்ந்தன. ”முதல் முறையாக இம்மண்ணில் இளவேனில் எழுந்திருக்கிறது” என்று மூத்தவர் ஃபானு கூறினார். “இத்தனை வண்ண மலர்கள் இங்கு மலரக்கூடுமென எவரும் எண்ணியிருக்கமாட்டார்கள்.”

சூதர் ஒருவர் “மலர்கள் கந்தர்வர்களையும் தேவர்களையும் அழைப்பவை. வண்டுகளாகவும் தேனீக்களாகவும் வண்ணத்துப்பூச்சிகளாகவும் அவர்கள் இங்கு வருவர்கள். தேவர்கள் குடிகொள்ளும் நிலம் மானுடர் வாழ்வை பெருக்குவது” என்றார். “தேவர் வருக! மூத்தார் வருக! இந்நிலத்தில் எங்கள் குலம் எழுக!” என்றார் ஃபானு.

எங்கிருந்தென்று தெரியாமல் வண்ணத்துப்பூச்சிகள் வந்து பிரஃபாச க்ஷேத்ரத்தை நிரப்பின. மலர்களும் வண்ணத்துப்பூச்சிகளும் நிறைந்து அந்நிலம் முதல் முறையாக வண்ணம் பொலிந்தது. அதன் நடுவே சிறுவர்கள் ஓடி விளையாடினார்கள். வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றிய தொன்மையான யாதவப் பாடல்கள் அனைத்தும் நினைவிலிருந்து மீண்டு வந்தன. யாதவர் வண்ணத்துபூச்சிகளை அந்த அளவுக்கு கொண்டாடியிருக்கிறார்கள் என்று அப்போது அறிந்தேன்.

அங்கே வந்த சில நாட்களிலேயே ஒவ்வொருவரும் சதுப்புக்குள் வாழும் கலையை கற்றுக்கொண்டிருந்தார்கள். வாழைத்தண்டுகளை இணைத்து பாதையாக்கி சதுப்புகளுக்குள் செல்லவும் மிதக்கும் மரங்களை படகுகளாக்கி கழிகளை ஊன்றி உளைச்சதுப்புக்கு மேலே நீந்தவும் அவர்கள் பழகியிருந்தார்கள். “முதன்முறையாக இந்நிலம் புன்னகைக்கிறது. வருக என்கிறது. இங்கு வாழ்வு செழிக்கும்” என்றார் ஃபானு.

“எங்கும் மனித வாழ்வு செழிக்க முடியும். பாலை நிலத்தில் துவாரகை எழமுடியும் எனில் இந்நிலத்தில் மும்மடங்கு செழிப்பும் செல்வமும் கொண்ட பெருநகரொன்று எழமுடியும்” என்றார் பிரஃபானு. தன் மாளிகையின் மூங்கில் முகப்பில் நின்றபடி சுற்றிலும் நிகழ்ந்துகொண்டிருந்த இளவேனிற்கால பணிகளை பார்த்துக்கொண்டிருந்தார். பணிகளையே விளையாட்டென, களியாட்டென மாற்றிக்கொண்டிருந்தனர். கைகொட்டி பாடியபடி, நடனமிட்டபடி வேலை செய்தனர்.

இளவேனிற்காலத்தில்தான் யாதவர்கள் தேன் எடுக்கும் கலையை கற்றனர். பலநூறு தேன் கூடுகள் அங்கே அமைக்கப்பட்டன. தேன்கூடுகளிலிருந்து தேன் எடுப்பதற்கான வழிமுறைகள் அனைத்தையுமே அவர்கள் தங்கள் தொன்மையான குலப்பாடல்களில் இருந்தே கற்றுக்கொண்டனர். தேன் கலந்த மதுவை தயாரிப்பதும் அங்கு அறிந்ததுதான். “தொன்மையான நூல்கள் விதைத்தொகுதிகள். நம் முன்னோர் வாழ்ந்த முழு வாழ்வையும் அவற்றிலிருந்து நாம் மீட்டுக்கொள்ள முடியும் போலும்” என்றார் சுருதன்.

மூத்தவர் ஃபானுவும் உடன்பிறந்தவர்களும் அவருடைய மூங்கில் மாளிகையின் உப்பரிகையில் நின்றிருந்தோம். அங்கே வந்தபின் துவாரகையில் இருந்த பூசல்களும் காழ்ப்புகளும் மறைந்துவிட்டிருந்தன. நான்கு மையங்களாகவே அங்கும் இருந்தனர் என்றாலும் பகைமை இல்லாமலாகிவிட்டிருந்தது. பகைமைகொள்ள எவருக்கும் பொழுது இருக்கவில்லை. கண்டடைதலின், வென்றுசெல்லலின் கொண்டாட்டம் வாழ்கையை நிறைத்திருந்தது.

யாதவ மைந்தர் மூவர் கொல்லப்பட்டிருப்பதையே கூட அனைவரும் மறந்துவிட்டனர். அங்கு வருவதற்கு முன்புவரை இருந்த வாழ்க்கையை பாம்பு சட்டையை உரிப்பதுபோல கழற்றி அப்பால் விட்டுவிட்டிருந்தனர். அதுவும் நன்றே என்று தோன்றியது.

அங்கு வந்தபின் அனைவருமே உடல்நிலை மேம்பட்டிருந்தனர். அங்கிருந்த வெம்மைமிக்க காற்றும் அந்திச்சாரலும் முதல் சில நாட்களுக்குப் பின் பழகிவிட்டிருந்தன. கணிகர் ஒருவருக்கு மட்டுமே உடல்நிலை சீர்கெட்டிருக்கிறது என்றார்கள். அவருக்கு மூச்சிளைப்பும் வெப்பும் இருந்தது. ஆனால் அதை எவரும் பொருட்டெனக் கருதவில்லை. அவர் தேவையற்றவராக ஆகிவிட்டிருந்தார். அவர் இறந்தாலும் நன்றே என்று பொதுவாக அனைவரும் எண்ணினர்.

அங்கே அரசு உருவாகவில்லை. மூத்தவர் ஃபானு முடிசூட்டிக்கொள்ளவில்லை. அரசவை கூடவோ அமைச்சரும் படைத்தலைவரும் வகுக்கப்படவோ இல்லை. சுருதன் வந்த நாள் முதல் அதை சொல்லிக்கொண்டிருந்தார். “அரசு என ஒன்று உருவாகவேண்டும். அதன் பின்னரே நாம் இங்கே வேரூன்றிவிட்டோம் என்று பொருள். முடிகொண்ட அரசனின் ஆணைகளின்படி இங்கே ஒவ்வொன்றும் நிகழவேண்டும்…”

“இன்று என்ன குறைகிறது?” என்று நான் கேட்டேன். “ஒவ்வொருவரும் நலமாகத்தானே இருக்கிறார்கள்?” சுருதன் “ஆம், ஆனால் எக்கணமும் பூசல் தொடங்கும். குற்றங்கள் நிகழும். இங்கே இன்னமும் நிலம் பகுக்கப்படவில்லை. அனைவருக்கும் உரியதாகவே நிலம் உள்ளது. மக்கள் பெருகும்போது நிலம் பெருகுவதில்லை. அதை இன்றே பகுத்தாகவேண்டும்… பூசலுக்குப் பின் பகுக்க இயலாது” என்றார்.

“அத்துடன் இங்கே இன்னும் குலம் பகுக்கப்படவில்லை. அனைவரும் ஆ புரக்கின்றனர். அனைவரும் மண் உழுகின்றனர். அனைவரும் வேட்டையாடவும் மீன்கொள்ளவும் செல்கிறார்கள். இவ்வண்ணம் அது நீடிக்க முடியாது. அதை வகுக்க முனையும்போது ஏற்றதாழ்வு உருவாகும். அங்கும் பூசல்கள் எழும்.”

“இதையெல்லாம் ஏன் செய்யவேண்டும்?” என்று நான் கேட்டேன். “இன்னும் நாம் மக்களிடமிருந்து வரிகொள்ளத் தொடங்கவில்லை. நம் கருவூலத்தையே செலவிட்டு வருகிறோம். இங்கே இப்போதே வணிகம் தொடங்கிவிட்டது. அதற்கு நாம் காப்பு அளிக்கவேண்டும். அதற்கு நமக்கு படை வேண்டும். படைபுரக்க செல்வம் வேண்டும். செல்வத்தின்பொருட்டு நாம் குடிகளைப் பகுத்து நிலத்தை பங்கிட்டாகவேண்டும்.”

“அவ்வண்ணமென்றால் பூசல்களை போக்குவதல்ல அரசின் பணி, உருவாக்குவதுதான் என்கிறீர்கள்” என்றேன். “ஒருவகையில் அது மெய். அரசு தன் குடிகளை ஆளவேண்டும் என்றால் பிரித்தாக வேண்டும். அரசு என்பது களிற்றின் கொம்புபோல” என்றார் சுருதன்.

மூத்தவர் ஃபானு மகிழ்ந்ந்திருந்தார். உரக்க நகைத்தார். எண்ணியிராக் கணத்தில் கையைத் தூக்கி “இளவேனிற்காலக் கொண்டாட்டம் ஒன்று இங்கு நிகழட்டும். நாம் இங்கு நிலைகொண்டுவிட்டோம் என்று தெய்வங்கள் உணரட்டும். தெய்வங்களுக்கான கொடையும் பலியும் களியாட்டும் எழுக!” என்று ஆணையிட்டார்.

முந்தைய கட்டுரைமுதுநாவல்[சிறுகதை]
அடுத்த கட்டுரைகரு, இணைவு- கடிதங்கள்