‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–66

பகுதி ஆறு : படைப்புல் – 10

பிரஃபாச க்ஷேத்ரத்தின் தென்கிழக்கு எல்லையென அமைந்த மண்மேட்டை அடைந்து மேலேறத் தொடங்கியதும் அனைவரும் தயங்கினர். அதுவரை உள்ளம் எழுந்து எழுந்து முன்செலுத்திக்கொண்டிருந்தது. மேடேறுவதன் சுமையால் மூச்சு இறுகி உடல் களைத்தபோது உள்ளமும் தளர்ந்தது. முன்னால் சென்றவர்கள் தயங்க பின்னால் சென்றவர்கள் வந்துகொண்டிருக்க அந்தத் திரள் தன்னைத்தானே முட்டிச் சுழித்து பக்கவாட்டில் விரித்துக்கொண்டது.

இருளுக்குள் நீர் வந்து நிறைவதுபோல அம்மேட்டை கீழிருந்து நிரப்பி முடி வரை சென்றோம். அதன் மேற்குச்சரிவு முழுக்க மக்கள் இடைவெளியில்லாமல் நிறைந்திருந்தனர். அதன் உச்சியில் நின்றிருந்த உருளைப்பாறை ஒன்றின்மேல் கால் மடித்தமர்ந்து ஃபானு மேற்கே தெரிந்த இருண்ட வெளியை பார்த்துக்கொண்டிருந்தார். அது அப்போது மென்மையான நீராவியாக, பசுந்தழை வாசனையாக மட்டுமே தெரிந்துகொண்டிருந்தது. வானின் ஒளியில் ஆங்காங்கே இருந்த நீர்ப்படலங்கள் மின்னின.

இளையோர் ஃபானுவைச் சூழ்ந்து நின்றிருந்தார்கள். எவரும் எதுவும் பேசவில்லை. விழிகளால் அங்கே தங்களை நிரப்பிக்கொள்ள முயன்றவர்கள் போலிருந்தனர். ஃபானு பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டிருந்தார். அவர் உள்ளம் எங்கிருக்கிறது என்று எனக்கு புரிந்தது. பிரஃபானு ஃபானுவிடம் “இங்கே நாம் நிலைகொண்டது நன்று, மூத்தவரே. இது நாம் வளரவிருக்கும் நிலம். ஆனால் இங்கு இப்போது நமக்கு என்ன காத்திருக்கிறதென்பதை அறியோம். விடிந்தபின் நன்கு நோக்கி உள்ளே நுழைவதே உகந்தது” என்றார்.

அந்தச் சொற்களால் ஃபானு கலைந்து திரும்பிப் பார்த்தார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை என்று தோன்றியது. ஃபானுமான் பிரஃபானு சொன்னதை மீண்டும் சொன்னான். ஃபானு “ஆம், அது நன்று. அவ்வாறே செய்வோம்” என்றார். அப்போதும் அவருக்கு ஒன்றும் புரிந்திருக்கவில்லை. பிரஃபானு “நிமித்திகர்கள் பொழுது கணித்து சொல்லட்டும். முதல் நற்காலை நூல்முறைப்படி வைத்து நாம் உள்ளே நுழைவோம். நாம் அரசர் என்று இந்நிலத்திற்குள் நுழையவேண்டும். இதற்குரிய தெய்வங்கள் நம்மை அவ்வண்ணமே அறியவேண்டும்” என்றார்.

“ஆம், தெய்வங்கள் அறியவேண்டும்” என்றார் ஃபானு. “எனில் நிமித்திகர்களை அழைத்து வரச்சொல்கிறேன்” என்றார் பிரஃபானு. “ஆம், அழைத்து வாருங்கள்” என்று ஃபானு சொன்னார். ஏவலர்கள் அவ்வாணையை ஏற்று தலைவணங்கினர். நான் “இத்திரளில் ஒவ்வொருவரும் அடையாளம் அழிந்து கலந்துவிட்டிருக்கின்றனர். நிமித்திகர்களை எப்படி தேடுவது?” என்றேன். “அனைவரும் சொல்லிழந்து அமைதியாக நின்றிருக்கிறார்கள். கூவி அழைத்தால் நிமித்திகர்கள் மறுமொழி சொல்வார்கள்” என்றார் பிரஃபானு. ஏவலர் தலைவணங்கி அப்பால் சென்றனர்.

பொழுது மெல்ல விடிந்து வந்தது. வானில் முகில்கள் தெளியத் தொடங்கின. கீழ்ச்சரிவில் சிவப்பு திரண்டது. கடலோரங்களில் மட்டுமே தெரியும் ஆழ்சிவப்பு அது. சில மலர்களில் மட்டுமே அவ்வண்ணம் தெரியும். கண்கள் துலங்கி வந்தன. காட்சி தெளிந்தபோது எங்களைச் சுற்றி மானுடத்தலைகளாலான ஏழு குன்றுகள் இருப்பதை நாங்கள் கண்டோம். மரங்களோ புல்லோ பாறைகளோ தெரியாத மானுட அலைகள். ஓசையற்று செறிந்து எழுந்து வான்கீழ் நின்றிருந்தன.

ஃபானு திரும்பிப்பார்த்து “நமது குடி! நம் மக்கள்!” என்றார். அவர் முகம் மலர்ந்திருந்தது. கைகளை விரித்து “வெல்லும் குடி! அழியாக் குடி!” என்று சொன்னபோது அவர் நெஞ்சு விம்முவதை என்னால் உணரமுடிந்தது. ஏனோ அந்த உணர்வை அப்போது என்னால் பகிர்ந்துகொள்ள இயலவில்லை. அவர்கள் ஒற்றை உடல் என ஒருவருக்கொருவர் அழுத்திக்கொண்டு அங்கு செறிந்திருந்தார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் முந்தவும் வெல்லவுமே உள்ளங்கள் முயன்றுகொண்டிருந்தன. உடல்கள் பருப்பொருளால் ஆனவை என்பதனால்தான் அவர்கள் அங்கு தேங்கியிருந்தார்கள். அவர்களுக்குள் இருக்கும் உணர்வு அவர்களை ஒன்றாக்கவில்லை. ஒவ்வொருவரையும் தனித்தனியாக பிரிக்கிறதென்றே எனக்கு தோன்றிக் கொண்டிருந்தது.

எங்களுக்கு முன்னால் எழுந்த நிலத்தின் மீது காலை வெண்முகில் பரவியிருந்தது. நிலத்தில் இருக்கும் முகில்களுக்கே உரிய பாற்படலம் போன்ற வெண்மை. புல்வெளியிலிருந்து பகல் முழுக்க எழுந்த நீராவி குளிர்ந்து நீராக மாறி அதன் மேலேயே படிந்து உருவான முகில் அது. அப்பாலிருந்து கடலும் அங்கே நீராவியை பொழியக்கூடும். பிரஃபாச க்ஷேத்ரம் முன்னிரவுகளில் மூச்சுத்திணற வைக்கும் அளவுக்கு நீராவிப் புழுக்கம் கொண்டிருக்கும் என்றும் பின்மாலையிலேயே உடலில் வியர்வை ஊறி எரிச்சல் எழும் என்றும் சிற்றுண்ணிகள் கடிக்கத் தொடங்கும் என்றும் ஒவ்வொரு நாளும் மழைக் கருக்கல்போல வானம் ஒரு பாவனை காட்டி, சிறுதுளிச் சாரலை காட்டி மீண்டும் வெளிக்கும் என்றும் நான் எண்ணிக்கொண்டேன். அது யமுனைக்கரை புல்வெளிகளின் இயல்பு.

அப்பால் இருக்கும் கடலிலிருந்து நீராவி எழுந்து வானில் பறந்துகொண்டே இருக்கும். ஆனால் மழையாகாமல் கீழிருந்து காற்று அதை தள்ளி அகற்றும். முதல் மழைக்காலத்தில் பெருங்காற்று கடலில் இருந்து நிலத்தின்மேல் பரவும். அலைஓசை காதில் விழும். கோடையிடியும் மின்னலும் வானை நிறைக்கும். அங்கே மழை வஞ்சம் கொண்டதுபோல் மண்ணை அறையும். புதர்கள் குமுறிக்கொந்தளிக்கும். புல்லை நிறைத்து நீர் பெருகி ஒழுகும். நீர் வடியும்போது கோதப்பட்ட புற்களின் மேல் சருகுகள் படிந்திருக்கும். அங்கே விசிறிகள் இன்றி வாழமுடியாது. சிற்றுயிர்கள் பெருகி வாழும். ஆகவே தூபப் புகை சூழாமல் இருக்கமுடியாது.

நுரையென புல் பெருகுவதால் ஆநிரைகள் செழிக்கும். ஆனால் மானுடர் வெவ்வேறு தோல்நோய்களால் துன்புறுவார்கள். சற்றே எச்சரிக்கையுடன் இல்லையென்றால் மூச்சு நோயும் குடல் நோயும் பெருகும். கொசுக்களும் ஈக்களும் வண்டுகளும் என சிற்றுயிர்களால் எப்போதும் சூழப்பட்டிருப்பார்கள். உணவுப்பொருட்களை எப்போதும் மூடியே வைக்கவேண்டும். ஆறிப்போனவற்றை உண்ணக்கூடாது. நான் புன்னகைத்தேன். அங்கே நான் முழு வாழ்க்கையையும் முடித்துவிட்டிருந்தேன். தனியாக, எனக்குள். திரும்பி சூழ்ந்திருந்த திரளைப் பார்த்தபோது ஒரு நாணத்தை அடைந்து விழி திருப்பிக்கொண்டேன்.

வெயில் வெம்மைகொண்டபோது வெண்முகில் திரை நிலத்தில் இருந்து மேலெழுந்தது. கடற்காற்றால் மெல்ல மெல்ல அகற்றப்பட்டது. வெயில் எழுந்து நிலம் சூடாகும் தோறும் மேலே தூக்கப்பட்டது. அந்தப் பெருவிரிவில் திரைவிலகி ஒழுகிச் சுருண்டு அகல நிலம் தெளியத் தொடங்கிய காட்சி உளம்விரியச் செய்வதாக இருந்தது. செழித்து நீலமோ என இலைப்பசுமை கொண்ட புல் நிறைந்த வெளி சிற்றலைகளாக விழி தொடும் எல்லை வரை நிறைந்திருந்தது. அதற்கப்பால் பச்சை வரம்பென மிகப் பெரிய கோட்டை ஒன்று இருந்தது.

“அது என்ன?” என்று ஃபானு என்னிடம் கேட்டார். “தென்னையா? ஈச்சையா?” நான் கூர்ந்து பார்த்தபோது அது உயரமற்ற குறுங்காட்டுச் செறிவென்றே தோன்றியது. “மூங்கில்களா?” என்றார் ஃபானு. என்னால் சொல்லக்கூடவில்லை. “ஒற்றர்களை வரச்சொல்” என்றார் ஃபானு. சற்று நேரத்தில் வந்து தலைவணங்கிய முதிய ஒற்றனிடம் “அது என்ன, அங்கே மறு எல்லையில் வேலியிட்டிருப்பது?” என்றார். அவன் “அரசே, அது ஒருவகை நாணல். நம் கைகளின் கட்டைவிரலைவிட தடிமனான உறுதியான தண்டுகள் கொண்ட நாணல்கள் அவை. அக்கரையில் அவைதான் இடைவெளியில்லாமல் செறிந்திருக்கின்றன” என்றான்.

“நாணலா?” என்று ஃபானு கேட்டார். “ஆம், அது சற்றே உப்பு கலந்த சதுப்பில் மட்டுமே வளர்கிறது. இந்தப் புல்வெளிச் சதுப்பிற்கு அப்பால் கடல்நீர் வந்து கலக்கும் உப்புச் சதுப்பு உள்ளது. அதற்கு அப்பால் மணலும் அதற்கப்பால் கடல் விளிம்பும் உள்ளன. அந்த உப்புச் சதுப்பு மிக ஆழமானது. அதில் இறங்கினால் மனிதர்கள் முற்றாகவே புதைந்துவிடக்கூடும். நெடுந்தொலைவிற்கு கடலையும் இப்புல்வெளியையும் பிரிப்பது அது. கடலிலிருந்து வரும் உப்புநீர்த் துளிகளை அச்சதுப்பும் நாணலும் தடுத்து விடுவதனால்தான் இப்புல்வெளி இத்தனை பசுமைகொண்டு செழித்திருக்கிறது. வேறெங்கும் கடலோரமாக இத்தனை பெரிய புல்வெளியை நாம் பார்க்க முடியாது” என்றான்.

“ஆம், இந்த நாணல்களைப்பற்றி எவரோ எப்போதோ சொன்னார்கள்” என்றார் ஃபானு. “அங்கே மணலில் ஆமைகள் வந்து முட்டையிடுகின்றன. பாறைகளில் சிப்பிகள் செறிந்துள்ளன. ஆழமற்ற புற நீரில் மீன்கள் நிறைந்துள்ளன” என்று ஒற்றன் சொன்னான். “சதுப்பில் செல்லும் திறன் கொண்ட பன்றிகள் சில சென்று அந்த நாணலின் இனிய தண்டுகளை உண்பதுண்டு. யானைகளும் அரிதாக அத்தனை தொலைவு சென்றுவிடுகின்றன.”

நான் அக்கணம் என் தலைக்குள் ஒரு குளிர்ந்த ஊசி நுழைவதுபோல் உணர்ந்தேன். அந்த நாணல்களைப் பற்றித்தான் சூதர்கள் பாடினார்கள், விஸ்வாமித்ரரின் தீச்சொல்லால் பிறந்த இரும்புத் தடியின் துகள்கள் அலைகளில் மிதந்துசென்று படிந்து முளைத்தவை அந்நாணல்கள். கூரிய படைக்கலங்களாகி யாதவக் குடியை அழிக்கவிருப்பவை. நான் எண்ணிக்கொண்டிருக்கையிலேயே ஒற்றன் சொன்னான் “அந்நாணல்கள் மிகமிக உறுதியானவை. ஆனால் எடையற்றவை. கூர்முனையாக செதுக்கினால் ஆற்றல்மிக்க அம்புகளாக ஆக்கலாம். இவ்விடத்தை நாங்கள் முதலில் பார்க்கவந்தபோதே அதை செய்து பார்த்தோம். மிகமிகச் சிறப்பானவை.”

ஆனால் ஃபானு அவ்வுணர்வுகளை அறியவில்லை. “நிமித்திகர்கள் வரட்டும். இந்நிலத்திற்குள் நாம் எழுவதற்கான பொழுதென்ன என்று பார்க்கவேண்டும்” என்றார். பிரஃபானு “நிமித்திகர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள், மூத்தவரே” என்றார். நிமித்திகர்கள் ஏவலரால் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அங்கேயே புற்பரப்பை ஒதுக்கி அமர்ந்து தோலாடையை விரித்து அதன்மேல் கோடு கிழித்து களம் வரைந்து கூழாங்கற்களை பரப்பி குறிநோக்கத் தொடங்கினார்கள். இடையில் கை வைத்தபடி அவர்கள் கணிப்பதை ஃபானு நோக்கி நின்றார். பிற இளையோர் அவரைச் சூழ்ந்து நின்றனர்.

வெயில் ஏறிக்கொண்டே வந்தது. வெண்முகில்திரை மேலெழ மேலெழ அந்நிலம் மேலும் தெளிவாகத் தெரிந்தது. ஒவ்வொரு புல்லிதழும் தனித்தனியாகத் தெரியும்படி அது அருகே எழுந்து திரையெனத் தொங்கியது. நிலத்திற்குள் நுழையும் தவிப்புடன் அரசரின் ஆணைக்காக காத்து நின்றிருந்த யாதவப் பெருந்திரள் எழுப்பிய ஓசை வலுத்தபடியே வந்தது. அத்திரளே காற்றில் அலைவுறுவதுபோல் அந்த ஓசை எழுந்தமைந்தது.

“இந்த நிலம் மெய்யாகவே உகந்ததுதானா?” என்று சுருதன் கேட்டார். எரிச்சலுடன் திரும்பி “இல்லையென்றால் என்ன செய்யப்போகிறீர்கள்? திரும்பிச்செல்லலாமா?” என்று ஃபானு கேட்டார். “அல்ல, இது புதையும் சதுப்பென்று தோன்றுகிறது. இதில் இப்போது நாம் சிறிய குடில்களை அமைக்க முடியும். ஆநிரைகள் இதில் பெருகவும் கூடும். ஆனால் ஒரு பெருநகரை இதில் அமைக்க முடியாது” என்றார் சுருதன்.

“எனில் அது மிதக்கும் பெருநகராக அமையட்டும். கல்லால் அமைக்கவேண்டியதில்லை, மரத்தால் அமைப்போம். அங்கே மரத்தெப்பங்களை அடுக்கி அவற்றின்மேல் ஒரு நகரத்தை அமைப்போம். இது நம் நிலம். இங்கு எதைக்கொண்டு நகரமைப்பது என்பதை பின்னர் முடிவு செய்வோம்” என்றார் ஃபானு. பிரஃபானு “மூத்தவரே, இது உகந்தது அல்ல என்றால் பிறிதொரு இடத்தை தெரிவுசெய்யும் வரை, ஆநிரைகள் பெருகி வலுவான யாதவக் குடிகளாக நாம் ஆகும் வரை, இங்கிருப்போம். பின்னர் இங்கிருந்து அகன்று சென்று பிறிதொரு நகரத்தை வென்றெடுப்போம்” என்றார்.

நிமித்திகர் எழுந்து “அரசே, நற்பொழுது இன்னும் ஒரு நாழிகை கழிந்து எழுகிறது. அப்போது கதிர் சற்று மேலெழுந்திருக்கும். இப்புல்வெளியில் ஈரம் உலர்ந்திருக்கும். இதில் பாம்புகள் இருந்திருந்தால் அவை தங்கள் வளைகளுக்குள் நுழைந்திருக்கும். நாம் புல்வெளிக்குள் நுழையும் தருணம் அதுவே” என்றார். ஃபானு “அதற்கு முன் நமது வண்டிகள் இந்நிலத்திற்குள் நுழைவதற்கு பாதை அமைக்கப்படவேண்டும்” என்றார்.

பிரஃபானு “ஆம், ஆனால் அதற்கு முன் நற்பொழுதில் முறையாக ஐம்மங்கலங்களுடன் தாங்கள் இந்நிலத்தில் காலடி வைத்து முன் நுழையுங்கள். மங்கலச்சேடியரும் இசைச்சூதரும் எழுக! அனைவருக்கும் முன்னால் வேதம் ஓதி அந்தணர் செல்க! கங்கை நீர் முதலில் அதன்மேல் விழவேண்டும். நாம் இதனுள் நுழைகையில் வேதச்சொல்லே முதற்சொல்லென எழவேண்டும். அதுவே நம் குடிக்கு உகந்த வழக்கம், நாம் செழிக்கும் வழி” என்றார்.

“ஆணை, அந்தணரும் சேடியரும் இசைச்சூதரும் ஒருங்கட்டும்” என்றார் ஃபானு. “அரசே, தங்கள் மணிமுடியும் செங்கோலும் இங்கே கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் அணிந்துகொள்ளலாம்” என்றார் பிரஃபானு. ஃபானு “இப்பொழுதில் அரச உடை என்பது…” என்று தயங்கினர். “அரசருக்குரிய அணிப்பொன் மேலாடை ஒன்றையேனும் அணிந்துகொள்ளுங்கள். மணிமுடியை சூடி செங்கோலை கையிலேந்திக் கொள்ளுங்கள். தங்களை பல்லாயிரம் விழிகள் பார்க்கின்றன என்பதை மறக்க வேண்டியதில்லை. அவர்கள் தங்கள் நிலமென்றும், இதை தாங்கள் ஆளவேண்டும் என்றும் எண்ணவேண்டும். அவர்களில் நம் தெய்வங்கள் எழ வேண்டும்” என்றார் பிரஃபானு.

மூத்தவர் ஃபானு அங்கே ஒரு பாறையில் அமர்ந்தார். இரு ஏவலர் வந்து அவருக்கு பொன்னூல் பட்டாடைகளை அணிவித்தனர். மூங்கில் பெட்டிகளிலிருந்து அரச அணிக்கோலத்திற்கான நகைகளை அவருக்கு சூட்டினர். மணிமுடியும் துவாரகை செங்கோலும் வந்து அருகே பிறிதொரு பாறையில் காத்திருந்தன. முதலில் சற்று தயங்கினாலும் அணிகொள்கையில் மூத்தவர் ஃபானு மகிழ்வதை பார்க்க முடிந்தது. அவர் முகம் மலர்ந்தபடியே வந்தது. தோள்கள் எழுந்தன. ஒவ்வொரு அணியாகச் சுட்டி அதை அணிவிக்கும்படி ஆணையிட்டார். அவர்கள் தவறவிட்டார்கள் எனில் அதை சற்று சுட்டிக்காட்டினார். ஒவ்வொன்றையும் அணிந்து அணிசெய்த ஏவலன் காட்டிய ஆடியில் தன்னை பார்த்துக்கொண்டார்.

மணிமுடிக்கு காவலாக நானும் சுருதனும் நின்றிருந்தோம். அந்தணர்கள் கங்கை நீர் நிறைத்த சிறு குடங்களுடன் முன்னால் அணிவகுத்தனர். அணிச்சேடியர் மங்கலத்தாலங்களை ஏந்தி நின்றனர். இசைச்சூதர்கள் தங்கள் இசைக்கலன்களை இறுக்கி சுதி சேர்த்துக்கொண்டனர். ஒவ்வொன்றும் ஒருங்கிக்கொண்டிருந்தது. மெல்ல மெல்ல எனக்கும் ஒரு நிறைவு எழுந்தது. முறையாக ஒரு புது நிலத்திற்குள் செல்லவிருக்கிறோம். ஐயங்களும் தயக்கங்களும் விலகவேண்டும். தெய்வங்கள் உடன் நிற்கவேண்டும். இங்கு யாதவ அரசு எழவிருக்கிறது.

நான் வேண்டிக்கொண்டேன். மீண்டும் மீண்டும் அறிந்த தெய்வங்களையெல்லாம் அகத்தால் தொழுதேன். மூதாதையரை வழுத்தினேன். தந்தையே, அப்போது ஒருமுறைகூட தங்களை நினைத்துக்கொள்ளவில்லை. மறந்தும் எவர் நாவிலும் தங்கள் பெயர் எழவில்லை. தங்களை எண்ணிக்கொள்வதாக ஃபானு கூறவில்லை. நிமித்திகரோ அந்தணரோ அமைச்சரோ கூட உங்களைப் பற்றி சொல்லவில்லை. எவரும் உண்மையிலேயே நினைவுகூரவில்லை.

முதிய அந்தணர் இருவர் வந்து செங்கோலையும் மணிமுடியையும் எடுத்து ஃபானுவுக்கு அணிவித்தனர். மணிமுடி சூட்டப்பட்டபோது ஃபானு மூதாதையர் பெயர்களை சொல்லும் நீண்ட பாடல் ஒன்றை சொன்னார். அதில் உங்கள் பெயர் வருகிறது. ஆனால் ஃபானு ஒரு சொல்லென அதை கடந்து சென்றார். செங்கோல் அவருக்கு அளிக்கப்பட்டபோது “மூதாதையரே! தெய்வங்களே! காத்தருள்க தேவர்களே!” என்றார். அப்போதும் தங்கள் பெயர் வரவில்லை.

இப்போது இங்கே நின்று எவ்வளவு இயல்பாக உள்ளம் உங்கள் பெயரை வெளியே தள்ளிவிட்டது என்று எண்ணி எண்ணி வியக்கிறேன். வேண்டும் என்றே அல்ல. நாவில் எழவில்லை. தேவையில்லை என்று ஆனதனால் அவ்வண்ணம் சுருங்கி உதிர்ந்துவிட்டிருந்தது.

ஃபானு மணிமுடி சூடி அந்தப் பாறைமேல் அமர்ந்தார். செங்கோலை தோளில் வைத்துக்கொண்டார். ஓர் அந்தணர் “ஒரு கன்றும் பசுவும் பின்தொடரட்டும்” என்றார். “கன்றும் பசுவும்!” என்று குரல்கள் எழுந்தன. ஒருவர் அப்பால் சென்று “ஒரு கன்றும் பசுவும் வரட்டும். வெண் பசு, கரிய மூக்கும் கரிய காம்புகளும் கொண்டது” என்றார். பசுவுக்காக பல குரல்கள் சென்றன. பசுக்களை குன்றுக்குக் கீழே நிரைவகுத்து நிறுத்தியிருந்தோம். அங்கிருந்து பசுக்களை மேலே கொண்டு வர வழியெங்கும் செறிந்து இருந்த மக்களைப் பிளந்து வழியமைக்க வேண்டியிருந்தது.

அப்போது அந்த ஓசையை கேட்டேன். முதலில் அது என்ன என்று எனக்கு தெரியவில்லை. நான் சூழப் பார்த்தபின் அதை அறியமுடியாமல் அருகிலிருந்த சிறுபாறைமேல் ஏறிப் பார்த்தேன். தேங்கி நின்றிருந்த துவாரகையின் குடிகளில் ஒரு பகுதி முன்விளிம்பு உடைந்து ஒரு கையென நீண்டு பிரஃபாச க்ஷேத்ரத்தின் புல்வெளிக்குள் ஊடுருவிச் சென்றுகொண்டிருப்பதை பார்த்தேன். அதன் முகப்பில் சாம்பனும் அவர் இளையோரும் குவிந்த அம்புபோல சென்றுகொண்டிருந்த்னர்.

“என்ன ஆயிற்று? என்ன ஆயிற்று?” என்று நான் கூவினேன். ஃபானு “என்ன அது ஓசை?” என்று கூவினார். ஓடிவந்த சிற்றமைச்சர் “அரசே, அந்தப் புல்வெளியில் யானை ஒன்றை சாம்பன் பார்த்தார். அது சேற்றில் இடைவரை புதைந்து வெளியே வராமல் தவிக்கிறது. தன்னை மறந்து அதை வேட்டையாடிக் கொல்லும்பொருட்டு அவர் வேலுடன் பாய்ந்துவிட்டார். அவர் உடன்பிறந்தாரும் குடிகளும் தொடர்ந்து சென்றார்கள்” என்றார். ஃபானு “அறிவிலி!” என்று கூவியபடி எழுந்தார். பிரஃபானு “மூத்தவரே, அமர்க! நாம் இப்போது ஒன்றும் செய்யமுடியாது” என்றார்.

நான் நோக்கிக்கொண்டிருந்தபோதே அந்த உடைவினூடாக அதுவரை தேங்கித் ததும்பி நின்றிருந்த துவாரகையின் குடிகள் அனைவரும் பெருகி பிரஃபாச க்ஷேத்ரத்தின் விரிந்த புல்வெளிக்குள் நுழைந்தனர். மொத்தத் திரளும் நீண்டு நீண்டு பெருக்கென ஆகிச் சரிந்து ஒழுகி புல்வெளியில் இறங்கி சிதறிப் பரவி நிறைந்துகொண்டிருந்தது.

முந்தைய கட்டுரைஇணைவு [சிறுகதை]
அடுத்த கட்டுரைநிழல்காகம்,தேவி- கடிதங்கள்