கரு- கடிதங்கள்

ஷம்பாலா- நிகோலஸ் ரொரிச்

கரு [குறுநாவல்]- பகுதி 1

கரு [குறுநாவல்]- பகுதி 2

ஜெ,

எளிதில் வாசித்துவிடக்கூடிய ஒரு கதை அல்ல கரு. அது அடிப்படையில் மெட்டஃபிசிக்கலான ஒரு படைப்பு. ஒரு தனிப்பட்ட ஆன்மிகக் கனவை வெளியே ஏதேனும் வழியில் சொல்லிவிடமுடியுமா என்ற முயற்சி. அதற்கு நீங்கள் இவ்வளவு அப்ஜெக்டிவான செய்திகளை ஏன் அளிக்கிறீர்கள் என்று யோசித்துப் பார்த்தேன். ஒரே காரணம்தான் தட்டுப்பட்டது. இது சப்ஜெக்டிவானது. மிகமிக அந்தரங்கமானது. இதை நீங்கள் வெளியே சொன்னால் ஒரு அசட்டுக்கனவாகவோ வேடிக்கையாகவோ ஆகிவிடும். ஆகவே இதை முடிந்தவரை சரித்திரத்தில், உண்மையான டேட்டாக்களோடு நிறுத்த முயல்கிறீர்கள். இதெல்லாம் உண்மை, இதெல்லாம் அப்ஜெக்டீவானது என்று நீங்களே சொல்லிக்கொள்கிறீர்கள்

ஆனால் அதுதான் இந்தக்கதையை நம்மிடமும் கொண்டுவந்து சேர்க்கிறது. ஒரு தத்துவ விவாதம், நிறைய சரித்திர பின்னணி, நுணுக்கமான பாதைவிவரிப்பு ஆகியவற்றை கொண்டு அந்த அப்ஸ்டிராக்டான தரிசனத்தை நாமும் சென்றடைய வைக்கிறீர்கள். டைம்லெஸ்னெஸ் என்று சொல்லலாம். ஆனால் அதை உணரவைக்க கலையால்தான் முடியும். இதில் அந்தப் பையன் பிறப்பதற்கு முன் தோன்றுகிறான் என்பது  mind-bogglingஆன விஷயம். அந்த இடம் தான் மொத்தமாக தர்க்கம் கடந்த தரிசனம் வெளிப்படும் இடம். அந்த நான்சென்ஸ் லெவல் வரை கொண்டுசென்று சேர்க்கத்தான் அத்தனை தர்க்கம், அத்தனை நுட்பமான விவரிப்பு, அவ்வளவு கதைக்குள்கதை என்ற அமைப்பு.

அந்த தரிசனம் ஏற்கனவே உள்ளது அல்ல. நான் இந்த ஷம்பாலா பற்றி நிறைய படித்திருக்கிறேன். என்னுடைய பத்தாண்டுக்கால வாசிப்பு இது. நானும் லாப்சங் ராம்பாவிலிருந்துதான் தொடங்கினேன். ஆனால் திபெத்தியன் புக் அஃப் டெட் வரை ஏராளமாக வாசித்திருக்கிறேன். நீங்கள் அந்த ஐடியாவை உங்களுக்குரிய மெட்டஃபர் ஆக மாற்றிக்கொள்கிறீர்கள். ஷம்பாலாவுக்கு நீங்கள் கொடுக்கும் விவரிப்பு எவரும் கொடுத்தது இல்லை. இதுதான் உங்கள் பெர்சனல் விஷன் என்று நினைக்கிறேன்.

அந்த விஷன் ஒரு காலமில்லாத நிலையில் இந்தக்கதையில் வெளிப்படுகிறது. எனக்கு இப்படி தோன்றியது. கல் மண் எல்லாவற்றையும் எடுத்து அடுக்கி ஒரு பானைமாதிரி செய்தால் உள்ளே வெற்றிடம் அல்லது வானம் அடைபட்டிருக்கும். அதேபோல சரித்திரத்தைக்கொண்டு சரித்திரத்தைக் கடந்த ஒரு அப்ஸ்ட்ராக்டான விஷயத்தை அல்லது ஒரு பைத்தியத்தரிசனத்தை முன்வைக்கிறது கரு என்ற இந்நாவல்.

ஏற்கனவே விஷ்ணுபுரம் போன்ற நாவல்களில் இதைச் சொல்லியிருக்கிறீர்கள். விஷ்ணு ஒரு கருக்குழந்தைபோல ஒரு நாற்றமடிக்கும் குளத்தின் இருட்டுக்குள் சுருண்டு கிடப்பதை காசியபன் பார்க்கும் இடம் ஞாபகம் வருகிறது. ஒரு பெரிய சிலிர்ப்பை அளித்த இடம் அது. அங்கிருந்தே வந்துகொண்டிருக்கும் ஒரு பெர்சனல் ஸ்பிரிச்சுவல் விஷன் இது. அதை இங்கே ஒரு மெட்டஃபர் ஆக்கி முன்வைக்கிறீர்கள் என நினைக்கிறேன்

இந்தக்கதைகள் வழியாக எழுதி எழுதி வந்தடைந்த இடம் இது என்று கொள்ளலாமா?

ஜெயராமன்

***

ஷம்பாலா- நிகோலஸ் ரொரிச்

நம் பகுத்தறிவிற்கு அப்பால் உள்ளதை அறியும் விழைவு கூட பகுத்தறிவிற்கு உட்பட்டு புரிந்து கொள்ளக் கூடியதல்ல. தனிமையும் வெறுமையும் குற்றவுணர்வும் பாதுகாப்பற்ற நிலையில் உருவெளித் தோற்றங்களை காண்கின்றன. இது உண்மை இது வெறும் தோற்ற மயக்கம் தான் என்று அறுதியிட்டு கூற அங்கே யாரும் இல்லை. தியான அனுபவங்களாகக் கூறப்படுபவை எல்லாம் பெரும்பாலும் இவ்வாறானது தான்.

ஆனால் இதை புறத்தே நிகழ்த்த முடியுமா புறவயமாக ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்றால் அதற்கு பகுத்தறிவு சார்ந்த நிரூபணம் தேவை. சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் உங்களுக்கும் எனக்கும் நம் அனைவருக்கும் பொதுவானவை தான். பிரத்யட்சமான அவற்றுக்கு நிரூபணம் தேவையில்லை. ஆனால் பல ஆயிரமாண்டுகளாக இதே போன்ற ஒரு உலகம் அகவயமாகவும் இருக்கிறது என்று கூறி வந்திருக்கிறார்கள்.

மிகச் சிறிய எண்ணிக்கையில் இருந்த இவர்கள் ஒரு பெரும் இயக்கமாக அல்லது பல்வேறு உதிரி அமைப்புக்களாக உருவெடுத்தது பிரம்ம ஞான சபையும் அதைத் தொடர்ந்து உருவான human potential movement ஏற்பட்ட காலகட்டங்களில் தான்.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னான தலைமுறை மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இதில் பெருமளவு ஆர்வம் கொண்டது. மனித குல வரலாற்றில் அந்தப் போர் ஏற்படுத்திய காயங்கள் மிக உக்கிரமானவை. ஹிப்பிக்கள் இதில் பெரிய அளவில் ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். ஷம்பாலா குறித்த கதைகளும் தொன்மங்களும் இதற்கு பெரிய அளவில் தீனி போடுவதாக இருந்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை இன்றைக்கும் பரமஹம்ச யோகானந்தர் தனது நூலின் வழியாக ஏற்படுத்திக் கொடுத்தப் பாதை அதே மர்மங்களுடன் பின்பற்றப் படுகின்றன. அவரது சுயசரிதை நூலை படித்த போது அந்த சமயத்தில் ஒரு தரமான விட்டலாசார்யா படத்தை பார்த்தது போலவே உணர்ந்தேன்.

இவ்வாறு பெரிய அலையாக எழுந்த இந்த ஆன்மிக கதைகள் தகவல்கள் எண்பதுகளின் இறுதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போன காரணம் என்ன? தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு மிகப்பெரிய பாய்ச்சல் பல மர்மங்களை நம்மிடம் இருந்து விலக்கிச் சென்று விட்டது தான் காரணம். அச்சு தொழில்நுட்பத்தைக் கொண்டு அமானுடங்கள் குறித்து மனித மனத்தில் ஏற்படுத்த முடிந்த  தாக்கம் அவற்றின் உண்மைத் தன்மை குறித்த ஆவலை ஏற்படுத்தியது. அதைப்பற்றி பேசியும் விரித்தும் சிந்தித்தும் மனிதன் அதை ஆயிரம் பல்லாயிரமாகப் பெருக்கிக் கொண்டான். டிஜிட்டல்-காட்சி தொழில்நுட்பம் மிக நேரடியானது. மேற்குறிப்பிட்ட எதுவும் சாத்தியப்படவில்லை. இன்றைக்கு போல் மனிதன் அம்மணமாக உணர்ந்த பிரிதொரு காலம் இருந்திருக்காது :)

இந்த பின்னணியில் ஷம்பாலா குறித்து பேசப்பட்டவையும் எழுதப்பட்டவையும் தனி மனித அனுபவங்களுமாக திரண்டு வந்திருப்பது தான் ஜெயமோகனின் குறுநாவல் கரு. கதை நடக்கக்கூடிய காலகட்டம் மிக முக்கியமானது. திபெத்தின் அதன் பழமையின் ஆன்மிகத்தின் அரசியலின் ஒரு சந்திப்பு காலம் அது. சந்தேகமேயில்லாமல் இன்று அது தன் ஆன்மாவை இழந்து விட்ட வெறும் கூடாகவே இருக்கிறது.

ஷம்பாலா- நிகோலஸ் ரொரிச்

இங்குள்ள எதுவும் நிரந்தரமாக அழிவதில்லை மாறுதல் அடைந்தவாறே இருக்கிறது. காலமும் வெளியும் நம் புரிதலுக்கும் அப்பாலும் கூட ஆழமான ஒரு பொருளை உடையது. புறவயமாக அதன் பொருளை விளக்க முற்படும் தோறும் அது எப்போதும் திருப்தி அளிக்காததாக குறையுடையதாகவே இருக்கிறது. முக்தானந்தாவிற்கு அது ஷம்பாலா கதை என்று தெரியும் ஆயிரம் பல்லாயிரம் வகைகளில் ஆடம் விளக்க முற்படுவதை எல்லாம் தர்க்க அறிவுடன் ஒப்பிட்டே புரிந்து கொள்ள முயல்கிறார். ஆனால் ஆடம் விடைபெற்று தனக்கான அழைப்பு வந்து விட்டது எனக் கூறி புறப்படும் போது அவனுடைய மெய்யான தீவிரம் பெரும் திகைப்பை ஏற்படுத்துகிறது.

ஆன்மிக வெளிப்பாடு மெய்யை கற்பனையுடன் கலக்க விடுவது. தூய மெய்மை என்று புறவயமாக ஒன்று இருக்க முடியாது என்று ஜே. கிருஷ்ணமூர்த்தி கூறுவார். பிரம்ம ஞான சபையின் மாணவர். பிறகு முற்றாக அதை உதறியவர். புரிதலின் வழி மட்டுமே போதுமானவறாக அமைந்து விட்டவர். ஆனால் முற்றறிதலை வேண்டுவோருக்கு அது மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. திட்டவட்டமான ஒரு அனுபவத்தை வேண்டுகிறது மனம். ஆனால் தர்க்க அறிவிற்கு புறம்பான சம்பவங்கள் நடைபெறும் போது குழப்பமும் அதற்கான விளக்கமும் தேடி அலைகிறோம்.

முக்தா தன் கதையின் வழியாக ஒரு மாபெரும் ஓவியத்தை காட்டுகிறார். அதில் ஆன்னியும் சூசன்னாவும் பெட்ரூஸூம் இடமும் தர்கத்திற்கு புறம்பான வேறொரு இருப்பில் வாழ்கிறார்கள். கற்பனைக் கொண்டு இட்டு நிரப்பிய தன் கதைக்குள் நுழைகிறான் ஆடம் ஆனால் மேலதிகமாக அதை ஆய்வுக்குட்படுத்தாமல் அப்படியே விட்டு விடுகிறார் முக்தா. பின்னாளில் ஹெலனை சந்திக்கும் போது கதையாக அறிந்ததின் உண்மைக்கூறு திரண்டு வருவதை காண்கிறார்.

தர்க்கம் பகுத்தறிவு தோற்கும் இடமது. ஷம்பாலா மரணத்தின் குறியீடு தான். மரணத்தின் உள்ளே தான் இன்னொரு வாழ்வுக்கான கருமுட்டைகள் விதைகள் உறங்குகின்றன. கனியும் போது பேருரு கொள்கின்றன. இன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கைக்கான திறப்பு அது. மிச்சம் மீதியற்று மறைபவர்களுக்கு ஷம்பாலா வீடுபேறு.

கூடு சிவம் காக்கை பொன் கரு அனைத்துமே தரிசனக் கதைகள். Darshan stories. தமிழில் முதல் முயற்சி (நானறிந்தவரை) இந்த கோவிட் காலத்தை அர்த்தமுடையதாக்கியதற்கு நன்றிகள் ஜெ.

சிவக்குமார் ஹரி

சென்னை

***

ஷம்பாலா- நிகோலஸ் ரொரிச்

என் அன்பு ஜெ

கரு ஈர்க்கும் தன்மையது. உயிருக்கான வித்து உறைந்திருக்கும் இடம். அனைத்தின் மூலம். ஆற்றல்கள் அனைத்தின் மூலம். ”யோகிகளும், முனிகளும், ஞானிகளும் சக்தி இயந்திரங்களை, ஆற்றல் மூலங்களைத் தேடி எப்போதும் அலைந்து கொண்டிருப்பதாகவும், சில வற்றை கண்டுபிடித்திருப்பதாகவும் விஷ்ணுபுரத்தில் சொல்லியிருப்பீர்கள். நான் ஷம்பாலாவையும் அப்படிப்பட்ட ஓர் ஆற்றலின் மையக் கருவாக பார்க்கிறேன்.

இது பெளத்ததில்/ வஜ்ராயன/ தாந்த்ரீக பெளத்ததில் கரு எனக் கொண்டேன்.  கிட்டத்தட்ட நான்கு அடுக்கான ஓர் கதை சொல்லல். ஒவ்வோர் படியாக ஷம்பாலா வின் இருப்பின் ஆர்வம் குடியேரத் தொடங்கியது என்னுள். ஆடமிற்கு எப்படி சூசன்னா, ஆனியின் மூலமாக தூண்டுதல் ஏற்பட்டதோ, முக்தா ஆடமின் மூலம் அந்த ஷம்பாலாவின் மீதான ஈர்ப்பை தூண்டிவிட்டது போல இருந்தது.  எதை நம்பிப் போக, யார் உதவுவார்கள் என்றால் நம் உள்ளுணர்வு/ மூதாதையர் உருவில் (சூசன்னாவுக்கு சார்லஸ் போலவோ/ ஆடமிற்கு அவன் தந்தை போலவோ) ஏதேனும் ஒன்று. வழியில் சந்திக்க வேண்டிய துன்பங்கள் தெரிகிறது. ஆனால் அதைதாண்டிய அந்த சத்ய யுகமாயிருக்கும் இலக்கு ஈர்க்கிறது.

முக்தா தெளிவாக இருந்தது போல ஆடமின் பேச்சுக்களில் நான் இல்லை. நான் மயங்கியிருந்தேன். அவன் தருக்கங்களுக்கு அவனே ஓர் தத்துவத்தை உதிர்க்கும் போது ஆ! என்று வாயைப் பிளந்திருந்தேன். “நதி ஒரே திசைக்கே செல்கிறது. அதிலிருக்கும் மீன்கள் நான்கு திசைக்கும் செல்வன. மீன்களை பிடிக்கும் பறவைகள் ஐந்தாவது திசையையும் அறிந்தவை. அருகே மரத்தடியில் அமர்ந்து தவம் செய்யும் யோகியின் உள்ளம் ஆறாவது திசையையும் அறிந்தது”  என்ற வரிகளில் நான் நாரையை எண்ணிப் பார்த்தேன். அது ஐம்பரிமாணங்களைத் தெரிந்து அந்த மீனுக்காக காத்துக் கொண்டிருக்கிறதா? ஒற்றைக் காலில். அந்த தவக் கோலத்தில் வரப்போகும் காலவெளியில் அந்த ஒரு மீனுக்காக! ஆமாமல்லவா! ஓர் சரியான உத்தேசம் அனுமானம் செய்யும் யாவும் ஐம்பரிமாணம் அறிந்தவையா? வள்ளுவரும் அறிவுடையார் ஆவதறிவார் என்கிறாரே! ஆறாம் பரிமாணமா?? அது என்ன? நமக்கும் அப்பாற்பட்டதா? தவம் செய்யும் முனிவர்க்கு வாய்க்கும் அந்த பரிமாணம் எத்தகையது? என்றெல்லாம் கேள்விகள் என்னுள் எழுந்தன்

ஷம்பாலா- நிகோலஸ் ரொரிச்

இவ்வுலகியலில் நமக்கு அப்பாற்பட்டது என்ற ஒன்று இருக்கிறது என்றே நம்புகிறேன் ஜெ. இந்த கணிதத்தில் “Assumptions” என்ற ஒன்று இருக்கிறது. இயற்பியலிலும், வேதியலிலும், புவியியலிலும் இது இருக்கிறது. அதைத் தகர்த்தால் யாவும் அர்த்தமற்றவையாகிவிடும். இது தவிரவும் புவியியலில் Arm chair theory என்ற ஒன்று இருக்கிறது. உட்கார்ந்து கொண்டே இது இப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்வது. அதன் பின் அதற்கான ஆதாரங்களைத் திரட்டுவது. ஒரு வகையில் பெருவெடிப்புக் கொள்கை என்பதும், கண்ட நகர்வுக் கொள்கை என்பதும், புவியியல் கால அளவுகள் என்பதும், பரிணாமக் கொள்கை என்பதும், ஐன்ஸ்டீனின் கருந்துகள், அண்டவெளி புழுத்துளைக்(Wormhole) கோட்பாடு யாவுமே அப்படிப்பட்ட Arm chair theory தான். ஐன்ஸ்டீன் வரும் வரை இப்பிரபஞ்சம் நியூட்டனின் விதிகளை நடித்துக் கொண்டிருந்தது. ஹப்புல் சொல்லும் வரை ஐன்ஸ்டீன் சொன்னதை நடித்திருந்தது. இன்று அனைவரும் பிரபஞ்சம் நகரும் தன்மையது என்றே நினைக்கிறோம். அதுவும் நகர்கிறது. பிரபஞ்ச பெருவெடிப்புக் கொள்கை மீது நம்பிக்கை வைத்து அதற்கான ஆதாரங்களில் மூழ்குகிறோம். இன்னும் பல மில்லியன் வருடங்களுக்குப் பின் இருக்கும் மக்கள் இப்பிரபஞ்சத்தை எப்படிச் சொல்கிறார்களோ அப்படி அதுவும் இருக்கும். இந்த எண்ணங்கள் யாவும் நிழல்காகம், கரு என்ற கதைகளின் வழி நான் அறிந்ததை, அறியாத ஒன்றோடு கோர்த்துக் கொண்டது( நீங்கள் சொல்வது போல). நான் பள்ளியில் பயிலும் போது புளூட்டோவையும் சேர்த்து 9 கோள்கள் இருக்கின்றன என்றார்கள். இன்று 8 கோள் தான் என்கிறார்கள். நான் என் வாழ் நாளின் சில காலம் 9 கோல் இருந்தன என்று நம்பி இருந்தேனே. நான் மட்டுமா. ஒட்டுமொத்த உலகமும். அப்படியானால் நாளை என்னவெல்லாம் ஆகும்? என்ற கேள்வி இருந்திருக்கிறது என்னுள். இன்று புரிகிறது. எக்காலத்திலும் பிரபஞ்சம் அப்படியே இருந்திருக்கிறது. மனிதர்கள் அவர்களுக்கு தெரிந்த இந்த எளிய அறிவினால் அதை கணிதத்திலும், புவியியலிலும், இயற்பியலிலும், வேதியலிலும் வகுத்துக் கொள்கின்றனர். வகுத்துக் கொள்வதால் பிரபஞ்சம் நடிக்கிறது.

இந்த ஓர் நிலையாமையினால் நான் ஆட்பட்டிருக்கிறேன். அதனால் என்னை மீறிய ஓர் ஆற்றலை புறவயமாக தேடமுற்படுகிறேன். அறிவியல் காரணம் கட்டப்படாத ஒன்றை மனம் நாடுகிறது. இதனால் தான் நான் இல்லாமை, இரண்டின்மை மீது ஓர் ஆர்வத்தைக் கொண்டேன். “ஒரு போதும் சென்றடையவில்லை என்ற நிறைவின்மையை அடைக” என்று நீங்கள் இந்த மனுடத்தை நோக்கி விசும் போதும் இருகப் பற்றிக் கொண்டது அதனால் தான்..

பனிக் கட்டிகள் நிறைந்த அந்த திபெத். குறிப்பாக அந்த லாசா என் கனவுப் பிரதேசங்களில் ஒன்று. ஆனால் நீங்கள் சொன்னது போலவெ இன்று சுற்றுலாத்தளமாக உருவாகி விட்ட பின்னர் காண்பதற்கான ஓர் உந்துவிசை குறைந்து விட்டது. அதனை வருடந்தோரும் நடக்கும் ஊட்டி பூக்கள் ஷோ போல, குன்னூர் பழ ஷோ போல செயற்கை தன்மை நிறந்த சுற்றுலா போல ஆகிவிட்டது. அங்கு மக்கள் என்ன விசயங்களை இரசிக்கிறார்கள் என்பதே வியப்பாக இருப்பதுண்டு. இன்று என் கனவு இடங்களாக, ஓர் விருப்பத்தைத் தூண்டக்கூடிய இடங்களாக ஷம்பாலா, நாக்சு நகர், தேனீர்ச்சாலை, போ-சு என்னும் ஆறு, கெய்கு [Gyegu], காங்டிங் நகர் ஆகியவை அமைந்துவிட்டன. ஆனால் லாசாவும் செல்ல வேண்டும் அதன் மிச்சமிருக்கும் இயற்கையைக் காண வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் ஜெ.

சில மாதங்களுக்கு முன் பனி மனிதன்/ yeti யின் கால் தடத்தை பார்த்ததாக ஓர் இராணுவ வீரர் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்தது ஓர் பெட்டிச் செய்தியாக தின நாளிதல் ஒன்றில் படித்தது நினைவிற்கு வந்தது. அதை நான் எளிதாக அன்று  கடந்து விடவில்லை. நீண்ட நேரமாக அந்த மாயாவத நம்பிக்கையைப் பற்றி தேடிக் கொண்டிருந்தேன். அது சார்ந்த கதைகள் இன்னும் அங்கு சொல்லப்பட்டு வருவதாகப் பார்த்தேன். இங்கு நாம் நம்பும் அய்யனார், பைரவர், மாரியம்மாள், குல தெய்வங்கள், எல்லைச் சாமி போல என்று நினைத்திருந்தேன். பனிமனிதன் அங்குள்ள கொள்ளை கூட்டத்திற்கு எத்துனை தெவையென்பதை உணர்ந்தேன். நாம் இன்று வகுத்துள்ள அறிவியல்/ அது சார்ந்த புரிதல்கள் இல்லாத கால கட்டத்தில் வாழ்ந்த மூதாதையர்கள் கண்டிப்பாக “உள்ளுணர்வுகளால்” தான் வழி நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொன்றையும் கடத்த அவர்கள் பல கதைகளை உருவாக்கியிருக்க வேண்டும்.

யுக முடிவுகளைப் பற்றி எந்த மதமும் பேசாமல் இல்லை எனலாம் ஜெ. எனக்கு விஷ்ணுபுரம் மணிமுடி படிக்கையில், பைபிலில் திருவெளிப்பாடு என்ற அதிகாரம் நினைவுக்கு வந்ததது. அது போலவே இன்றும் இதில் பெளத்தத்தின் யுக முடிவு பற்றியும், ஷம்பாலா என்ற கற்பனை நகரத்தின் எழுச்சி, முடிவில் மைத்ரேயா என்ற வருங்கால புத்தரின் தோற்றம் ஆகியவற்றை ஆடம் வாயிலாக நீங்கள் சொல்லும் போதும் நினைவிற்கு வந்தது அந்த திருவெளிப்பாடு அதிகாரம் தான். ஏதோ ஒரு வகையில் எல்லா மதங்களும் உலகின் முடிவைப் பற்றிய நம்பிக்கைகளைக் கொண்டுள்ளன. உலகின் முடிவில் பரம பிதா/ அல்லாஹ்/ விஷ்ணு/ மைத்ரேயா தோன்றுவதாகச் சொல்கிறார்கள். ஏதோ ஓர் வகையில் அமானுஷ்யமான/ ஆர்வத்தைத் தூண்டக் கூடிய ஓர் முடிவை நோக்கி மானுடத்தை செலுத்திவிட்டிருக்கிறார்கள்.

ஷம்பாலா- நிகோலஸ் ரொரிச்

கலியுகம், சத்திய யுகம் என்ற பல வகை யுக வகைபாடுகளையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்று நீங்கள் ஒவ்வோர் இடத்திற்கும் அதே காலவெளியில் ஒவ்வோர் வகையான யுகத்தை சொன்னது என்னை திகைப்பிற்குள்ளாக்கியது. அப்படியானால் எவ்வளவு சீக்கிரமாக வளர்கிறோமோ அவ்வளவு சீக்கிரமான அழிவு தானோ என்று நினைத்துக் கொண்டேன். தீண்டப்படாத புத்தம் புதிய இடங்களின் அழிவு நம்மைவிடப் பிந்தியிருக்கும் எனப்பட்டது. சட்டென்று 2004 சுனாமியின் போது அந்தமானில் வாழும் பழங்குடியின மக்கள் (செண்டினலீஸ்) முன்னமே வரப்போவதை அறிந்து மலைப் பகுதிகளுக்குச் சென்று தப்பித்துவிட்டார்கள் என்ற செய்தி நினைவுக்கு வந்தது. அப்படியானால் அவர்களை வழி நடத்திஅய்து எது? உள்ளுணார்வா? அல்லது அங்கே அவர்களுக்கு வழிகாட்ட பனிப்பிரதேசத்திலுள்ள யதி போன்ற ஆன்மா உள்ளதா? உள்ளுணர்வின் சங்கேதத்தை விட்டு எத்துனை தொலைவு நாம் சென்று விட்டோம் என்ற கவலை எழுகிறது என்னுள். அறிவியல்/ பகுத்தறிவு/ ஏற்கனவே அறியப்பட்ட அறிவை மட்டுமே வைத்ததான புரிதல்கள் என்று நமக்கே உரித்தான உள்ளுணர்வினின்று வெளியேறிவிட்டோமே என்ற கவலை எழுகிறது. அதற்காக மூட நம்பிக்கைகளை/ முட்டாள்தனங்களை கேள்வி கேட்கக் கூடாது என்றில்லை. அது செய்ய வேண்டும். ஆனால்… மரபின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ள முயல வேண்டும் எனப்பட்டது ஜெ.

எல்லா மதங்களிலும் ஏதோ ஓர் வகையில் தாந்த்ரீகம் குடி கொண்டிருக்கிறது. பெளத்தத்திலும் அது சாதாரண மனிதர்களிடமிருந்து வெகு தொலைவிலுள்ளது. சாதாரண வாழ்வைத் தாண்டிய ஒன்றை மானுடன் தேடுகையில் கண்டடையும் ஒன்றாக அது தெரிகிறது எனக்கு. அதை அடையும் இலட்சியம் எனக்கில்லை எனினும், அதைப் பற்றி நீங்கள் எழுதுகையில் மிகப் பிரம்மாண்டமான கற்பனைக் கோட்டைகளை கட்ட முடிகிறது என்னுள். போக முடியாத ஓர் கற்பனை/உண்மை நகரத்தை கட்டமைப்பது என்பதே வாசிப்பில் ஒரு சுகம் தான்.

நேற்று இரவின் விளிம்பில் இந்தக் குறு நாவலை முடித்து அதை பற்றியே சிந்தித்துக் கொண்டே கண் அயர்ந்து விட்டேன். கனவில் நீங்கள் முக்தாவைப் போலேயே ஆனால் சுற்றிலும் வெண்மையான மலை இருக்கும் பகுதியில், ஓர் உச்சியில் அமர்ந்து, போர்வையைப் போர்த்திக் கொண்டு, எங்களுக்கு ஷம்பாலாவைப் பற்றி சொல்லிக் கொண்டிருப்பதாக இருந்தது.  மிகப் பெரிய வெண்மையான ஒளி உங்களுக்கு கீழே,  அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் எங்களைச் சுற்றியும் நிறைத்திருந்தது.  திடீரென மூச்சுவிட முடியாமல் எழுந்து விட்டேன். பார்த்தால் மணி நான்கு சொச்சம். உடல் முழுவதும் வியர்த்து நனைந்திருந்தது. பிறகு தான் தெரிந்தது மின் துண்டிப்பினால் அறையின் குளிர் கன்றி, வெப்ப மிகுதியால் வியர்த்து உடல் நனைந்திருந்ததென்று. அதன் பின் தூங்க முடியவில்லை. மாடிக்குச் சென்று கதிரவன் எழும் வரை குருவிகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். காலை மீண்டும் மறுவாசிப்பு செய்தேன். இந்த நாள் முழுதும் இதன் சிந்தனை என்னில் ஆட்கொண்டிருந்தது. மாலையில் மீண்டும் வாசித்துவிட்டு, உங்களுக்கு பதில் கடிதம் எழுதியபின் மனம் அமைதியடைகிறது.

அற்புதமான இந்த அனுபவத்தை அளித்ததற்காய் நன்றி ஜெ

என்றும் அன்புடன்

இரம்யா.

***

கரு,கூடு- கடிதங்கள்

கரு,நிழல்காகம்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைநற்றுணை ,கூடு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமுதுநாவல்[சிறுகதை]