சாமர்வெல் ஓர் விவாதம்

ஓலைச்சிலுவை பற்றி பல தரப்பிலான விவாங்கள் குழுமத்தில் வந்தன. வழக்கம்போல இங்கும் நான் மத்திம மார்க்கத்தின் ஆள். கிறிஸ்துவை எப்போதுமே இரண்டாகப் பார்க்கலாம். ஒன்று, ஆன்மீகக் கிறிஸ்து. வரலாற்றில் எல்லா ஞானிகளும் சான்றோர்களுக்காகப் பேசியபோது கைவிடப்பட்டவர்களுக்கும் தகுதியற்றவர்களுக்குமாக பேசிய முதல் ஞானகுரு, முதல் இறைமைந்தர் அவர். அந்த அம்சமே என்னை அவரிடம் வைத்திருக்கிறது. மிக அந்தரங்கமாக அவரை உணரச் செய்கிறது. கிறிஸ்துவை அறிய சரியான வழி இந்தப் புரிதலே அந்த ஞானகுருவால் உந்துதல் கொண்ட மெய்ஞானிகள் பலர் கிறித்தவ மரபில் உண்டு. தன் வீடு வாசல் அனைத்தையும் உதறி அறியொணா நாடுகளில் சேவையின் சிலுவையுடன் சென்றவர்கள். அங்கே இறந்தவர்கள் . வரலாறெங்கும் அன்பென்பதையே அறியாதவர்களாக வாழ்ந்த கோடானுகோடி மக்களுக்கு அன்பையும் கருணையையும் கொடுத்தவர்கள். அவர்கள் பல்லாயிரம் பேர். அவர்களின் சேவையை, மன விரிவை மறுத்து ஒரு வரலாற்று நோக்கே சாத்தியமல்ல என்றே நினைக்கிறேன். அவர்களின் சேவை வெறும் உள்நோக்கம் கொண்ட சுயநலச் செயல்பாடு, அரசியல் செயல்திட்டம் என்று சொல்வதன் மூலம் நம் ஆன்மாவின் முக்கியமான ஒரு பகுதியை நாம் கறைப்படுத்திக்கொள்கிறோம் மேலும் இந்துவாகிய நான் இன்னும் பெரிய சங்கடத்தில் இருக்கிறேன். என் மதம் அதன் சாராம்சத்தில் உள்ள பற்றற்ற வேதாந்த உச்சத்தை சகமனிதர்கள் மீதான அக்கறையின்மையாக விளங்கிக்கொண்ட அமைப்பு மனிதர்களால் ஆனதாக பல நூற்றாண்டுக்காலம் இருந்திருக்கிறது. சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இளகாதவர்களாக இருந்திருக்கிறது அமைப்பை அப்படியே பேணுவதன்றி வேறு எதுவுமே தேவை இல்லை என்ற இறுக்கத்தை பல நூற்றாண்டுக்காலம் பேணியிருக்கிறது. அதன் மீதான அன்னியத்தாக்குதல்களால் அது நிகழ்ந்திருக்கலாம். ஆனால் அதன் மூலம் அது தன்னை இரக்கமற்றதாக ஆக்கிக்கொள்ள நேரிட்டது ஆகவே ஓர் இந்துவாகிய நான் என் மக்களை கைவிட்ட முன்னோடிகளின் வாரிசாக உணர்கிறேன். அந்தக் குற்றவுணர்ச்சி இல்லாமல் என்னால் பேச முடிவதில்லை. இந்தக்காலகட்டத்தில் என் ஆன்மீகத்தின் முதல் வெளிவிளக்கம் அந்தக்குற்ற உணர்ச்சிதான். அதை மழுப்பிக்கொள்ளும் எதையும் நான் ஏற்க முடியாது. ஆகவே இங்கே வந்து என் முன்னோர்களால் கைவிடப்பட்ட மக்களுக்கு ஒரு பிடி சோறோ ஒரு சிறு புன்னகையோ அளித்த அனைவருமே என்னால் வழிபடப்படுபவர்களே. எனக்கு மெய்மையைச் சுட்டிக்காட்டுபவர்களே. அவர்களால் கொண்டுவரப்பட்ட கிறிஸ்து என் மரபில் உள்ள மாபெரும் விடுபடல் ஒன்றை நிரப்புபவர் என்றே நான் நினைக்கிறேன். கிறிஸ்து இல்லாமல் என் கிருஷ்ணனோ என் புத்தரோ நிறைவடைவதில்லை என்றே நம்புகிறேன். இன்னொரு கிறிஸ்து உள்ளார். அவர் கான்ஸ்டண்டீனின் கிறிஸ்து. நூற்றாண்டுகளாக ஆதிக்கத்தின் கருவியாக ஆக்கப்பட்டவர். வெள்ளை இனவாதத்தின் அடையாளமாக இருந்தவர், இருப்பவர். உலகை ஒருகுடைக்கீழ் ஆள நினைப்பவர்களின் ஆயுதம். அந்தகிறிஸ்துவையே இன்று பெரும்பாலான சபைகள் முன்வைக்கின்றன. கோடானுகோடி பணச்செலவுடன் அவர்தான் பிரச்சாரம் செய்யப்படுகிறார். தெருவெங்கும் நின்று நம்மை அவர் அழைக்கிறார் நாம் கொஞ்சம் பலவீனம் அடைந்தால், கொஞ்சம் கால் தளர்ந்தால், நமது அச்சத்தையும் சஞ்சலத்தையும் பயன்படுத்திக்கொண்டு நம்மை விழச்செய்யும் சதிக்குழிகளை வெட்டி வைத்திருக்கிறார்கள் இந்த அமைப்புக்கிறிஸ்தவர்கள். அதில் விழுந்தவர்கள் தங்கள் பண்பாட்டை மரபை இழக்கிறார்கள். உலகப்பொதுவான எளிய அடையாளங்களுக்குள் சென்று சிக்குகிறார்கள். அனைத்துக்கும் மேலாக ஒன்றுண்டு. அவ்வாறு கோடானுகோடி பொருட்செலவில் செய்யப்படும் மதமாற்றம் அந்த பணத்தைச் செலவிடுபவர்களின் நலனுக்காகத்தான் இருக்கமுடியும் என நான் நினைக்கிறேன். ஆகவே அது அரசியல் நடவடிக்கையே ஒழிய ஆன்மீக வழிகாட்டல் அல்ல ஆகவே அந்தவகையான மதமாற்ற முயற்சிகளை, அதற்கான வெறியை அருவருத்து ஒதுக்குகிறேன். தன் நம்பிக்கையை பிறரிடம் சொல்ல எவருக்கும் உரிமை உண்டு. தன்னுடைய நலன்களை பிறருக்களிக்க விழைவதும் நியாயமே. ஆனால் அதை ஒரு அரசியல் நடவடிக்கையாக திட்டமிட்டு செய்யும் ஒருவர், அதற்காக எந்த ஏமாற்றுவழிகளையும் நியாயப்படுத்திக்கொள்ளும் ஒருவர், ஆன்மாவை இருட்டுக்கு ஒப்புக்கொடுத்தவர். அவரிடமிருப்பது கிறிஸ்து அல்ல. அவரால் கிறிஸ்துவின் மகத்தான தியாகத்தை புரிந்துகொள்ளவே முடியாது. அவரிடம் இருக்கும் கிறிஸ்து ஒரு ரப்பர் ஸ்டாம்ப் மட்டுமே. அதை நம் முதுகில் குத்த அவர் விழைகிறார் உலகமெங்கும் அந்த அமைப்புக்கிறிஸ்தவர்கள் ஆற்றிய கொடுமைகள் வரலாறு. அவர்கள் எப்போதும் வெள்ளை ஆதிக்கத்தின் கையாட்களாகவே செயல்பட்டுள்ளார்கள். பண்பாடுகளை அழித்திருக்கிறார்கள். மக்கள்கூட்டங்களை கொன்றொழித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை மட்டும் கொண்டு கிறிஸ்துவை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதும், கிறிஸ்து என்ற ஞானகுருவால் எரியூட்டப்பட்டு மாபெரும் தியாகங்களில் தன்னை ஆகுதியாக்கிய மாமனிதர்களைப் புரிந்துகொள்ள மறுப்பதும் நம் பிரக்ஞையை நாமே அழுக்குபடுத்திக்கொள்வது. மாறாக ஆன்மீககிறிஸ்துவை ஏற்பதன் வழியாகவே நாம் அரசியல் கிறிஸ்துவை நிராகரிக்க முடியும். அதுவே விவேகானந்தரும் காந்தியும் காட்டிய வழி. கிறிஸ்தவத்திற்கு நாம் போடும் இதே அளவுகோலை இந்து மரபுக்கு அவர்கள் போடுகிறார்களே என்று கேட்கலாம். இந்து மதத்தில் உள்ள எதிர்மறைக்கூறுகளை மட்டுமே இந்து மதமாகக் காட்டுகிறார்கள். இதன் நடுக்காலகட்டத்தின் உறைநிலையை மட்டுமே இதன் இயல்பாக முன்வைக்கிறார்கள். அதன் அடிப்படையில் இதன் மகத்தான ஞான வெற்றியை, ராமானுஜர் முதல் விவேகானந்தர் வரை இது உருவாக்கிய மாபெரும் சேவைப்பாரம்பரியத்தை களங்கம் சுமத்தி புறந்தள்ளுகிறார்கள் என்கிறார்கள் உண்மை. ஆனால் நாம் பிறரை பார்க்கும் பார்வையை தெளிவாக வைத்துக்கொண்டால் நம் பார்வையை பிறருக்கும் சொல்லமுடியும். அதற்கான நியாயம் நம்மிடம் இருக்கும். ஆம் ஆதிக்கத்தை தியாகமாவும் சேவையாகவும் ஞானமாகவும் எண்ணாமலிருப்போம். அதே சமயம் தியாகத்தையும் சேவையையும் ஞானத்தையும் ஆதிக்கமாக சிறுமைப்படுத்தாமலும் இருப்போம். ஆகவேதான் சரியான வழி என்பது சவரக்கத்தியின் நுனியில் நடப்பது போல என்று சொல்லப்பட்டிருக்கிறது ஜெ ———— ஓலைச்சிலுவைக்கு மீண்டும். இந்த காலரா நிகழ்வு குறித்து மற்றொரு முக்கியமான தகவலை கேள்விப்பட்டதுண்டு. அது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. இப்போது புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் நிரம்ப இருக்கும் நாகர்கோவிலின் பகுதியில் அப்பொது ஒரு வளமான இஸ்லாமிய சமுதாயம் இருந்தது. இந்த காலரா சேவையை பயன்படுத்தி அந்த இஸ்லாமிய சமுதாயம் விரட்டியடிக்கப்பட்டு அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன என்று செவிவழி செய்தியாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதற்கு (அதாவது அங்கே இஸ்லாமிய சமூகம் இருந்தது என்பதற்கு) ஆவண ரீதியிலான ஒரே ஆதாரமாக நான் பார்த்தது மீட் பாதிரியாரின் நாட்குறிப்பில் கல்-சர்ச்சுக்கு ஒரு புறம் இருக்கும் நாகராஜா கோவிலும் மறு பக்கம் இருக்கும் மசூதியும் வாழ்விழந்து உண்மை தேவனான ஏசுவின் கோவில் மேலும் மேலும் சிறப்படைய வேண்டுமென ஒரு பிரார்த்தனை. ஓலைச்சிலுவையை மீண்டும் படித்த போது இன்னும் சில விஷயங்கள் கண்களில் பட்டன. சாமர்வெல் நான்காண்டுகளில் நெய்யூரில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை உருவாக்கினார். 1838 ல் திருவிதாங்கூர் மகாராஜா மூலம்திருநாளின் நன்கொடையுடன் ஆர்ச்பால்ட் ராம்ஸே நிறுவிய மருத்துவமனை அது. அடுத்துவந்த சார்ல்ஸ் கால்டர் லேய்ச் வீடுகள் தோறும் சென்று அரிசியும் தேங்காயும் நன்கொடையாகப்பெற்று அதன் கட்டிடங்களை எழுப்பினார்.சாமர்வெல்லின் காலத்தில் பேராலமரமாக அந்த மருத்துவமனை எழுந்தது. சூரியன் அணையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இருந்த லண்டன்மிஷன் ஆஸ்பத்திரிகளில் அதுவே மிகப்பெரியது. அன்றைய திருவிதாங்கூர் அரசாங்கம் ஒரு மிகப்பெரிய தொகையை பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்தது. ஆனால் நெய்யூர் மருத்துவமனை உட்பட மருத்துவ உள்கட்டமைப்புகளுக்கு பெருமளவில் உள்ளூர் தர்ம சிந்தனையையும் மிஷனையுமே திருவிதாங்கூர் நம்ப வேண்டியிருந்தது. லண்டன் மிஷனின் நூற்றாண்டு மலரை மீண்டும் எடிட் செய்து டயசீசனில் போட்டிருக்கிறார்கள். அதை படித்த போது மற்றொரு விஷயம் கண்ணில் பட்டது ஒரு இந்து தக்கலை பக்கமாக பெண் குழந்தைகளுக்கான கல்விச்சாலை ஒன்றை ஆரம்பிக்கிறார். (150 அல்லது 200 ஆண்டுகளுக்கு முன்னர்: இது ஒரு பெரிய சவால்.) இதில் கிறிஸ்தவர்கள் தனக்கு உதவுவார்கள் என அவர் நம்புகிறார் போய் மிஷினரியிடம் உதவி கேட்கிறார். அவர்கள் மறுத்துவிடுகின்றனர். இந்த இரண்டையும் இணைத்து சிந்தித்துப் பார்க்கிறேன். இந்த கடிதத்தை எழுத ஆரம்பித்த பிறகு ஜெயமோகனின் கடிதத்தில் ஒரு குற்ற உணர்ச்சி குறித்து வருகிறது. உண்மை இன்னும் சிக்கலாக எனக்கு தோன்றுகிறது. ஒரு பக்கத்தின் கதை சொல்லப்படவே இல்லை. பெண்களுக்கான பள்ளியை ஆரம்பிக்க நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் மிஷினரிகளிடம் கையேந்திய இந்த மனிதர் யார்? இந்துக்களிடம் எந்த பதிவும் இல்லை. இவர் பெயர் கூட இல்லை. ஆனால் இவரைக் குறித்த ஒரு சிறு குறிப்பு மட்டும் எடிட் செய்யப்பட்ட டயோசீசன் மானுவலில் இருக்கிறது. அடுத்த பதிப்பில் அதையும் எடிட் செய்து அழித்துவிடுவார்கள் என நம்பலாம்.   என் மதம் அதன் சாராம்சத்தில் உள்ள பற்றற்ற வேதாந்த உச்சத்தை சகமனிதர்கள் மீதான அக்கறையின்மையாக விளங்கிக்கொண்ட அமைப்பு மனிதர்களால் ஆனதாக பல நூற்றாண்டுக்காலம் இருந்திருக்கிறது இது ஒரு பாதியளவேயான உண்மை என்றே எனக்கு தோன்றுகிறது. உதாரணமாக அம்மை தடுப்புக்கான நாட்டு வைத்திய முறையை (innoculation) ஊர் ஊராக சென்று எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் செய்த பைராகி பண்டாரங்கள் ஒரு அமைப்பாகவே இயங்கி வந்திருக்கிறார்கள். இந்த முறையை ஜென்னர் எடுத்து நவீனப்படுத்தி மேம்படுத்தி அதன் குறைகளை களைந்து immunization என கொண்டு வரும் போது இந்த உள்ளூர் முறை எவ்வித சுவடும் இல்லாமல், அதனுடன் எந்த உரையாடலும் இல்லாமல், அழிக்கப்பட்டது. காலனியம் ஒரு சித்திரத்தை தொடர்ந்து எழுப்பியது. உங்களீடம் கருணை இல்லை. அன்பு இல்லை. சகமனிதர்கள் குறித்த பாசம் இல்லை. எங்களிடம் அது இருக்கிறது. கிறிஸ்துவிடம் அது இருக்கிறது. இதை அவர்கள் பல சித்திரங்களின் மூலம் ஊடக சித்தரிப்புகள் மூலம் உருவாக்கியபடியே உள்ளனர். டாமினிக் லாப்பயரின் சிட்டி ஆஃப் ஜாய் நாவலில் இது தெளிவாக உள்ளது. புயலில் சிக்கிய வங்க குழந்தைகளை விபச்சார விடுதிகளில் அரசு உதவியுடன் விற்பவர்களாக ராமகிருஷ்ண மடத்தின் துறவிகள் காட்டப்படுகிறார்கள். மாறாக தெரசாவின் சகோதரிகள் மட்டுமே கருணை பொங்க உண்மை சேவை செய்பவர்கள். ஆனால் வங்காளத்தின் மிகப்பெரிய பஞ்சத்தையும் பட்டினியையும் உருவாக்கிய சர்ச்சில் மேற்கத்திய கிறிஸ்தவ உலகின் பெரும் கதாநாயகர். மிகப்பெரிய அளவில் மூலதனத்தை உறிஞ்சிய பெரும் இயந்திரமான ஆங்கிலேய காலனியாதிக்கத்துக்கு எதிராக கிறிஸ்தவ மனசாட்சியிலிருந்து எழுந்த குரல்களை இரு கைகளின் விரல்களில் அளந்துவிடலாம். அப்போதும் அவை பலவீனமான ஒற்றைக் குரல்களாகவே இருந்திருக்கின்றன. உண்மையான சாமர்வெல் தனது நூலில் எழுதுகிறார்: “ஒரு சமஸ்தானத்தைச் சேர்ந்த (திருவிதாங்கூர் அல்ல) அரசர் என்னிடம் கேட்டார் “உங்கள் நாட்டில் பேரரசியும் சாதாரண தொழிலாளியும் ஒரே தேவாலயத்தில் வழிபட செல்வார்களாமே. நான் ஆம் என்று சொன்னேன். அவர் முகம் வெறுப்பால் நிறைந்தது. அவரால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.” இதையே அவர் இந்து மதத்தின் சாராம்சமாக முன்வைக்கிறார். ஆனால் சாமர்வெல்லின் நாட்டில் இன்றைக்கும் இளவரசியை ஒரு சாமானியன் திருமணம் செய்தால் அந்த சாமானியன் சிரச்சேதம் செய்யப்படுவான். இந்த சட்டட்தை சாமர்வெல்லின் ஆங்கிலிக்கன் சபை அனுமதிக்கிறது. சாமர்வெல்லின் நாட்டின் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் குடிமக்களுக்கு கிடையாது. இன்னும் சொன்னால் சாமர்வெல்லின் நாட்டவர் குடிமக்களே கிடையாது அவர்கள் அரசனின் subjects not citizens. இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை அதே காலகட்டத்திய இந்தியாவைக் காட்டிலும் மோசமான ஏழடுக்கு சாதியம் இங்கிலாந்தில் நிலவியது. இன்றைக்கும் பல அமைப்புகளில் அங்கு தீண்டாமை உண்டு. அதாவது உயர்குல பிரபுக்களே அன்றி பிறர் பங்கு பெற முடியாத பல சடங்குகள் உண்டு. அவற்றுக்கு பொருளாதார அரசியல் முக்கியத்துவங்கள் இல்லை என்பதுதான் அதன் நந்நிலை. மூலதன உள்ளேற்றமும், ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் கருவறுத்து விரிவாகிய ஆங்கிலோ சாக்ஸன் குடியேற்றமும் நடவாமல் இருந்திருந்தால் சாமர்வெல் வியந்தோதும் குடிமகனும் அரசனும் ஒரு தேவாலயத்தில் வழிபடும் நிலை வந்திருக்குமா என்பது ஐயமே. எதற்கு சொல்கிறேனென்றால் ஏசுவின் தியாகம் என்பது ஒரு இறையியல் கணக்குடன் வருகிறது. அந்த கணக்கை நீக்கி அந்த தியாகத்தை மட்டும் வடித்தெடுத்து பார்க்க ஒரு டால்ஸ்டாயால் ஒரு ஜெயமோகனால் முடியும். ஆனால் அவை ஒற்றை குரல்களாகவே விளங்கும். எந்த ஒரு கிறிஸ்தவ சேவையின் பின்னாலும் (காலரா சேவையுடன் இணைந்து இஸ்லாமியரின் நில அபகரிப்பு) ஒரு துல்லியமான அதிகார-லௌதீகமான லாப கணக்கு இருப்பதை நான் மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். நாராயணகுருவிலோ அல்லது அய்யா வைகுண்டரிலோ அல்லது நாம் மறந்துவிட்ட நிவேதிதையிலோ அந்த கணக்குகள் ஏதும் இல்லை. அந்த காரணத்தினாலேயே ஒன்று அவை பின்னாட்களில் அந்த பெரும் ஆளுமைகளுக்கு பின்னர் சாதிய அமைப்புகளாக தேங்கி விடுகின்றன அல்லது மறக்கடிக்கப்பட்டு விடுகின்றன. (அப்படியே இன்னொரு விசயம்: காலரா பாக்டீரியங்கலின் உயிரிலக்கணத்தை கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்தும் முறைமைகளை உருவாக்கிய உயிரியலாளர் சங்கர் தே என்பவர். காப்புரிமை பெறுவதை கொள்கை ரீதியில் ஏற்காத போஸ் ஆராய்ச்சி மையத்தை சார்ந்தவர். இவரது வாழ்க்கையால் காப்பாற்றப்பட்ட மூன்றாம் உலக உயிர்கள் பல கோடி ஆனால் இவருக்கெல்லாம் நோபெல் பரிசு கொடுக்க மாட்டார்கள். இறக்கும் கறுப்புத் தோல் சிசுக்களை கையிலேந்தி பிரார்த்திக்கும் வெள்ளை அன்னை, கறுப்புத் தோல் அறிவியலாளரைக் காட்டிலும் சிறப்பான பண்பாட்டுப் போர் சின்னம் அல்லவா?) இவை எல்லாவற்றுக்கும் மேலாக காப்பாற்றப்பட்ட உயிர்கள் சாமர்வெல் போன்றவர்களின் சேவைகளை எப்படி உள்வாங்கியிருக்கும் என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். எனக்கு வேண்டிய ஒரு வயதான பெண்மணியின் அறையை ஒழுங்கு படுத்த வேண்டியிருந்தது. அம்மணி தீவிர ஹிந்து மத பிடிப்புடையவர் அவரது கைப்பையில் நாட்குறிப்பில் ஒரு பழைய படம் ஒன்று இருந்தது. ஒரு வெள்ளைக்கார தம்பதிகளும் அவர்களின் குழந்தைகளும். நான் அவர்கள் யார் என அந்த பெண்மணியிடம் கேட்டேன். சால்வேஷன் ஆர்மி மிஷினரிகள் என்றார். இதென்ன இந்த தீவிர ஹிந்து இந்த மிஷினரிகளின் படத்தை வைத்திருக்கிறாரே என கேட்ட போது கிடைத்த பதில் இது: சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்னர் அவர் பிரசவத்தின் போது சில சிக்கல்கள் ஏற்பட்டன. அப்போது அவர் ஊரின் ஓரத்திலிருந்த சால்வேஷன் ஆர்மி ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டிருந்தார். அந்த சிக்கல்களிலிருந்து அந்த குழந்தையை உயிர் பிழைக்க செய்ய அவர்கள் கற்றிருந்த சில புதிய முறைகளை பயன்படுத்தி மிகவும் கஷ்டப்பட்டு வெற்றிகரமாக தாயையும் சேயையும் காப்பாற்றினார்களாம். பிறகு அங்கேயே முழங்காலிட்டு அந்த குழந்தைகாக, அவன் வளர்ந்து நல்லவனாக வர வேண்டுமென பிரார்த்தனை செய்தார்களாம். தன் குழந்தையை காப்பாற்றியதுடன் தன் குழந்தைக்காக முதல் பிரார்த்தனை செய்தவர்கள் என்பதை அந்த தாய்க்கு மறக்கவே முடியவில்லை. என்னதான் ஹிந்து மத பற்று மதமாற்ற எதிர்ப்பு எல்லாம் இருந்தாலும் நாற்பதாண்டுகளாக அந்த மிஷினரிகளின் புகைப்படத்தை ஏதோ ஒரு சால்வேஷன் ஆர்மி மாகஸீனிலிருந்து வெட்டி தன்னுடனேயே வைத்துக் கொண்டிருந்திருக்கிறார். ஊகித்திருபீர்கள். அந்த பெண்மணி என் தாய். அந்த குழந்தை நான்தான். அன்புடன் அரவிந்தன் நீலகண்டன் ——————————————— ஜெ, இதுவே எனது நிலைப்பாடும். ஆனால் மிகச் சக்தி வாய்ந்த அதிகார அமைப்புகள் மூலமும், ஊடகங்கள் மூலமும் காலனிய கிறிஸ்தவத்தின் ஆதிக்கமே உண்மையான ஞானமும், தியாகமும், சேவையும் என்று மீண்டும் மீண்டும் இங்கே சொல்லப் பட்டு வருகிறது. இதற்காக மற்ற பண்பாடுகளை முற்றாக அழித்தொழிப்பதும் நியாயப் படுத்தப் படுகிறது. இங்கு நடப்பது மதங்கள், நாகரீகங்களுக்கு இடையேயான சம்வாதமோ,விவாதமோ அல்ல, போட்டி கூட அல்ல. ஆதிக்க கிறிஸ்தவம் நடத்தும் வேட்டை இது, ஒரு வனமிருகத்தின் Predatory செயல்பாடு போன்றது. இத்தகைய ஒரு சூழலில் தான் இந்தக் கதை படிக்கப் படுகிறது என்பதையும் நாம் கணக்கில் கொண்டே ஆக வேண்டும். அந்த சூழலில் ”ஆதிக்கத்தை தியாகமாவும் சேவையாகவும் ஞானமாகவும் எண்ணாமலிருப்போம்” என்று நீங்கள் கூறும் அறத்தின் குரல் அமுங்கிப் போகவே சாத்தியம் அதிகம். இந்தியப் பண்பாடு தன் சக மனிதர்களை எந்த அளவுக்கு காட்டுமிராண்டியாக, wretched ஆக நடத்தியிருக்க்கிறது என்பது பற்றி ஒரு அமெரிக்கப் பல்கலையின் தெற்காசியத் துறை ஆய்வாளர் சமர்ப்பிக்கும் ஆய்வுக் கட்டுரையில் இந்தக் கதையே கூட ஒரு சான்றாகக் காண்பிக்கப் படலாம்! நீங்கள் இப்படி ஒரு சாத்தியத்தை அனேகமாக எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள். சூழல் அப்படியிருக்கிறது, ஜெ. அதைத் தான் சுட்டிக் காட்ட விரும்பினேன். சுவாமி ரங்கநாதானந்தரை என் மானசீக குருநாதர்களில் ஒருவராகக் கருதுகிறேன். அவர் கண்ட ஆன்மீக ஏசுவை, அவிலாவின் செயிண்ட் தெரஸாவை, புனித ஜானை நான் அதே உணர்வுடன் மதிக்கிறேன் என்பதனையும் பதிவு செய்கிறேன். அன்புடன், ஜடாயு கதைகள் பெருவலி மெல்லிய நூல் ஓலைச்சிலுவை நூறுநாற்காலிகள் மயில்கழுத்து யானைடாக்டர் தாயார் பாதம் வணங்கான் தாயார் பாதம் மத்துறு தயிர் சோற்றுக்கணக்கு அறம்

முந்தைய கட்டுரைபெருவலி- மேலும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைபெருவலி: கடிதங்கள் 2