‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–65

பகுதி ஆறு : படைப்புல் – 9

பதினாறாவது நாள் பாலையின் மறு எல்லையை நெருங்கிக்கொண்டிருந்தோம். விடிவெள்ளி எழத்தொடங்கியிருந்தது. தங்குவதற்கான மென்மணல்குவைகள் கொண்ட இடம் ஒன்றை கண்டடைந்து, அங்கே அமைவதற்கான ஆணையை கொம்பொலிகளினூடாக அளித்து, ஒவ்வொருவரும் மணலில் நுரை ஊறிப் படிவதுபோல் மெல்லிய ஓசையுடன் அடங்கத் தொடங்கியிருந்தனர். வளை தோண்டுபவர்கள் அதற்கான தொழிற்கலன்களுடன் கூட்டமாகச் சென்றனர். பெண்கள் அடுமனைப் பணிக்கு இறங்கினர். குழந்தைகளை உலருணவும் நீரும் அளித்து துயில வைத்தனர்.

இரவில் ஓசையில்லாமல்தான் நடந்துகொண்டிருப்போம். இருட்டுக்குள் ஒரு கரிய நதி ஒழுகிச் செல்வதுபோல என்று தோன்றும். அல்லது மரக்கிளைகளில் காற்று செல்வதுபோல. காலையில் அமையப்போகும் இடம் கண்டடையப்பட்டதுமே ஓசை எழும். முதலில் அது கலைவோசையாக, பின்னர் பேச்சொலிகள் கலந்த முழக்கமாக, பின்னர் ஓங்கி ஓங்கி பெருகும் ஓசையலைகளாக எழும். பின்னர் மெல்ல அடங்கத் தொடங்கும். ஒவ்வொருவரும் உண்டு உறக்கம் நோக்கி செல்வார்கள். விரைவிலேயே அங்கே ஒரு பெருந்திரள் இருப்பதற்கான சான்றே இல்லாமல் அனைவரும் மறைந்துவிட்டிருப்பார்கள்.

அன்று அந்தக் கலைவோசை அடங்கிக்கொண்டே செல்கையில் முகப்பு முனையில் உரத்த குரலில் பூசலிடும் ஓசை எழுந்தது. சிலர் ஓடினார்கள். சிலர் கூச்சலிட்டார்கள். பெண்களும் குழந்தைகளும் அழுதனர். நான் எழுந்து என்னருகே நின்ற காவலனிடம் “என்ன? என்ன?” என்றேன். அவன் “நோக்கிவருகிறேன், இளவரசே” என்று முன்னால் ஓடினான். இன்னொருவன் என்னை நோக்கி வந்து “முகப்பில் தென்மேற்கு முனையில் அந்தகர்களுக்கும் ஹேகயர்களுக்குமிடையே பூசல் எழுந்துள்ளது…” என்றான். “எதன் பொருட்டு?” என்றேன். “அறியேன். பூசல்கள்…” என்று அவன் சொன்னான்.

நான் என் புரவியை ஆற்றுப்படுத்தி அதற்கு ஸாமி மரஇலைகளை உப்பு கலந்த மாவுடன் உணவாக வைத்துக்கொண்டிருந்தேன். பூசல் அதுவாகவே அமைந்துவிடும் என்று எண்ணினேன். அந்த நீண்ட பாலைநிலப் பயணத்தில் துவாரகையில் இருந்த பூசல்களும் கசப்புகளும் பொருளற்றதாக பின்னகர்ந்துவிட்டிருந்தன என்று எனக்கு தோன்றியது. துவாரகையே ஏதோ பழைய நினைவெனத் தோன்றியது. ஆனால் அங்கு பூசல் ஓங்கிக்கொண்டே இருப்பதை உணர்ந்தேன். அதன் பின் அதை தணிக்கும் குரல்கள் எழுந்திருக்கலாம். ஓசைகள் நின்றன. செவிகளாலேயே அவர்கள் ஒவ்வொருவரும் பிரிந்து விலகி அகல்வதை அறிந்து கொண்டிருந்தேன்.

எண்ணியிராக் கணத்தில் அலறலோசை கேட்டு திரும்பிப்பார்த்தேன். எவரோ எவரையோ கடுமையாகத் தாக்கிவிட்டார்கள் என்று தெரிந்தது. “அந்தகர்கள் கொன்றுவிட்டார்கள்! போஜர்களை அந்தகர்கள் கொன்றுவிட்டார்கள்!” ஒரு மின்னல் திரள் மேலே பாய்ந்ததுபோல மொத்த யாதவக் குடியும் ஒரு திடுக்கிடலை அடைந்தது. பின்னர் என்ன நிகழ்ந்தது என்று தெரியவில்லை. ஒவ்வொருவரும் வெறிகொண்டு ஒவ்வொருவரையும் தாக்கிக்கொள்ளத் தொடங்கினார்கள். படைக்கலங்களாலும் தொழிற்கலன்களாலும் போரிட்டனர். அருகிலிருந்த அனைத்துப் பொருட்களையும் எடுத்து வீசினர். ஒருவர் மேல் ஒருவர் பாய்ந்து பற்களாலும் நகங்களாலும் கடித்தனர்.

முதலில் தங்கள் எதிரிகளை அவர்கள் தாக்கிக்கொண்டார்கள். அவ்வாறு தாக்குவதை பலமுறை அவர்கள் உள்ளத்தில் நிகழ்த்திக்கொண்டிருந்ததனால், கனவுகளில் அது பலமுறை நிகழ்ந்துவிட்டிருந்ததனால், வெறிகொண்டபோது அது கணந்தோறும் மிகுந்து எழ அதை இயல்பாக செய்தார்கள். பாய்ந்து குரல்வளைகளைக் கடித்து குருதியுடன் நரம்புகளை பிய்த்தெடுத்தார்கள். அறைந்து செவிகளையும் மூக்கையும் கடித்து துப்பினார்கள். கைகளை முறுக்கி ஒடித்தனர். உயிர்க்குலைகளை கவ்வி கசக்கினர். பெரும்பாலானவர்களிடம் கொல்லும் படைக்கலம் எதுவும் இல்லை. துவாரகையில் இருந்து கிளம்பும்போது மிகக் குறைவாகவே எங்களிடம் படைக்கலங்கள் இருந்தன. எளிய யாதவரும் வேளாண்குடியினரும் படைக்கலம் பயின்றவர்கள் அல்ல என்பதனால் அவர்களுக்கு அவை அளிக்கப்படவில்லை.

உண்மையில் படைக்கலங்களை வைத்திருந்தவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு இருந்தது. வெறி கொண்டு தாக்கியவர்க்ள் எந்த படைக்கலமும் இல்லாதவர்கள். அவர்கள் அதை தங்கள் வெறியால் ஈடுகட்டினர். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொல்ல உள்ளமே போதுமானது என்று அப்போது கண்டேன். ஒரு கணத்தில் என்னைச் சூழ்ந்து வெறிகொண்ட முகங்களும், பித்தெடுத்த கண்களும், வலிப்பெழுந்த உடல்களுமாக நான் அன்றுவரை கண்டுவந்த மக்களே பாதாள உலகங்களிலிருந்து எழுந்து வந்த பேயுருவங்களாக மாறுவதை கண்டேன். குருதி மணம் எழுந்தது. அது ஆணையிடும், கவரும், பித்தெடுக்க வைக்கும் மணம். தெய்வங்களுக்கு திமிரேற்றுவது, மானுடரை பற்றி எரியவைப்பது. குருதி மணம் ஒவ்வொருவரையும் விலங்குகளாக்கியது. பலிகொள்ளும் தெய்வங்களாக்கியது.

ஃபானு தன் குடிலிலிருந்து வெளிவந்து “என்ன நடக்கிறது? பூசலா? உடனடியாக அமையச் சொல்லுங்கள். இங்கு பூசலுக்கு ஒப்புதல் இல்லை. பூசல்களில் ஈடுபடுவோர் கடுமையாக ஒடுக்கப்படுவார்கள். இது எனது ஆணை” என்றார். பிரஃபானு சலிப்புடன் “எவரிடம் ஆணையிடுவது?” என்றார். “நமது படையினரை அவர்களை அடக்கச் சொல்லுங்கள்” என்றார் ஃபானு. “அரசே, இப்போது படையென இருப்பது கருவூலத்தைக் காத்துவரும் இந்த ஆயிரம் பேர்தான். இவர்களை இங்கிருந்து அனுப்பினால் நாம் பாதுகாப்பற்றவர்கள் ஆகிவிடுவோம்” என்றார் பிரஃபானு.

“என்ன செய்வது? பிறகென்ன செய்வது இப்போது?” என்று ஃபானு பதறினார். “அவர்களே அடித்துக் கொன்று விலகட்டும். இத்திரளில் எத்தனை பேர் செத்துவிழுகிறார்களோ அத்தனை நன்மையென்று கொள்வோம். நம்மிடம் இருக்கும் உணவு போதாமலாகுமோ என்ற ஐயம் நமக்கு இருந்தது. அவர்கள் அவ்விடருக்கு தாங்களே விடை காண்கிறார்கள். இதில் உயிரிழப்பவர்கள் நமக்கு உணவை மிச்சம் ஆக்குகிறார்கள் என்று கொள்வோம்” என்றார். “அரசனென இதை பார்த்து நிற்பது பதற வைக்கிறது” என்றார் ஃபானு. “அரசர்களை இது பதற வைக்காது. குடித்தலைவர்களையே இது பதற வைக்கும்” என்று பிரஃபானு சொன்னார்.

கூச்சலிட்டும் கொன்றும் அலறியும் செத்தும் கொப்பளித்துக்கொண்டிருந்த கும்பல் மிக விரைவிலேயே உணர்ச்சிகளை இழந்தது. உடலாற்றல் கூடவே சரிந்தது. போர்வீரர்கள் என்பவர்கள் சினமின்றி போராடக் கற்றவர்கள். ஆகவே அவர்களால் நெடுநேரம் போரிட முடியும். தங்களை ஒற்றைத்திரள் என்று ஆக்கிக்கொண்டவர்கள், ஆகவே ஒருவர் களைப்புற இன்னொருவர் மேலெழ விசை குறையாது அவர்களால் நெடுந்தொலைவு செல்லவும் முடியும். பெருந்திரள் மிக விரைவிலேயே உடலாற்றலையும் உணர்வாற்றலையும் இழந்தது. பெருந்திரளால் மிகக் குறைவான பொழுதே அழிவை உருவாக்க முடியும் என்பதை அப்போது கண்டேன்.

ஒரு நாழிகைக்குள் ஒவ்வொருவரும் விலகி அங்கங்கே படிந்தனர். புண்பட்டவர்களும் இறந்தவர்களும் பிரித்தறிய முடியாதபடி கிடந்தனர். கொன்றவர்களும் கொல்லப்பட்டவர்களும் ஒன்றேபோல மணலில் வெற்றுடல்களாக விழுந்து கிடந்தனர். விழிதொடும் எல்லைவரை நெளிந்துகொண்டிருந்த புழுக்கூட்டங்களைப்போல் அத்திரளை பார்த்தேன். விருகன் புரவியில் வந்து பாய்ந்திறங்கி “என்ன நிகழ்கிறது அங்கே? எதிரிகளா?” என்றார். “ஒன்றுமில்லை, நெடும்பொழுதாக அவர்கள் வெறும் உடல்களாக வந்துகொண்டிருந்தார்கள். இப்போது உள்ளங்களாக வெளிப்பட்டுவிட்டார்கள். மீண்டும் உடல்களாக மாறுவார்கள்” என்று பிரஃபானு சொன்னார்.

மெல்ல அவர்கள் அடங்கினர். ஒவ்வொருவரும் நிலைமீண்டனர். பெருமூச்சுடன் தனிமையுடன். என்ன நிகழ்ந்தது என்றே தெரியாத திகைப்புடன். பெண்கள் மட்டும் கதறிக்கொண்டிருக்க ஆண்கள் மணலில் விண்ணையோ மண்ணையோ வெறித்து நோக்கி அமர்ந்திருந்தனர். அன்று அத்திரளில் ஐந்தில் ஒருவர் கொல்லப்பட்டனர். அவ்வுடல்களுடன் அங்கே தங்கமுடியாதென்பதனால் உடனடியாகக் கிளம்பி அடுத்த சோலைக்கு செல்ல ஃபானு ஆணையிட்டார். அவ்வெண்ணத்தை அவருக்கு சொன்னவர் பிரஃபானு. “இங்கிருந்து நாம் விலகிச்செல்ல வேண்டும். ஒன்று, இவ்வுடல்களைவிட்டுச் செல்வதற்காக. இன்னொன்று, இங்கிருந்து நம்முடன் எழுந்து வருபவர்கள் மட்டும் வந்தால் போதும் என்பதற்காக” என்றார்.

ஃபானு “புண்பட்டவர்கள்…” என்று சொல்லத் தொடங்க பிரஃபானு “புண்பட்டவர்கள், நடக்க முடியாதவர்கள் இங்கேயே கைவிடப்படவேண்டும். அவர்கள் இங்கேயே இறந்துபோவது நமக்கு நல்லது. நம்மால் நோயாளிகளை சுமந்துகொண்டு பயணம் செய்ய இயலாது. அவர்கள் அங்கே வந்து நமக்கு சுமையாக ஆகக்கூடும்” என்றார். நான் “ஆனால் அவர்கள் நம்மவர்” என்றேன். “அங்கே துவாரகையில் பேரலையில் பல்லாயிரம் பேர் இறந்தனர். அந்த உடல்களை அப்படியே மணலில் புதையவிட்டுவிட்டு நாம் கிளம்பினோம். அவர்களில் மேலும் சிலர் இறந்தால், கைவிடப்பட்டால் என்ன குறைகிறது?” என்று பிரஃபானு கேட்டார்.

உடனே கிளம்பும்படி ஃபானுவின் ஆணை வந்தது. அது முரசொலியாக எழுந்ததும் அனைவரும் திடுக்கிட்டனர். ஆணைதானா என்று குழம்பினர். உறுதியாக முரசுகள் ஆணையிட்டுக்கொண்டே இருந்தன. அவர்கள் எழுந்து நிரைகொண்டனர். பொருட்களையும் குழந்தைகளையும் எடுத்துக்கொண்டனர். புண்பட்டவர்களும் நோயுற்றவர்களும் கூடவே எழுந்து நின்று கூச்சலிட்டனர். அவர்களின் உற்றார்கள் அவர்களை அழைத்து வருவதற்கு முயன்றனர். ஆனால் அரசப்படையும் உடல்நலம் கொண்டவர்களும் விரைந்து விலகிச்செல்ல ஆணை எழுந்தது. அவர்கள் விரைந்து செல்ல செல்ல மற்றவர்கள் கூச்சலிட்டனர்.

வேறுவழி இருக்கவில்லை. மிக விரைவில் கதிர் மேலெழுந்து வெப்பம்கொள்ளத் தொடங்கிவிடும். அதன்பின் நடக்க முடியாது. உடனே அடுத்த சோலைக்கு சென்றாக வேண்டும் என்பதனால் ஒவ்வொருவரும் முடிந்த விரைவில் சென்றனர். அவர்களின் விசையைக் கண்ட பின்னர் மற்றவர்கள் தங்கள் உற்றவர்களை ஆங்காங்கே அப்படியே விட்டுவிட்டு ஓடிவந்தனர். காலொடிந்தவர்கள் தசைகிழிந்தவர்கள் தங்களை விட்டுவிட்டு செல்ல வேண்டாம் என்று கைநீட்டி கூச்சலிட்டு அழுதனர். “அழைத்துச் செல்லுங்கள், தந்தையே!” என்று மைந்தர்கள் அலறினர். “மைந்தா, நான் உடன் வருகிறேன்!” என்று தந்தையர் கூவினர்.

சற்று நேரத்தில் தொலைவில் இருந்து பார்த்தபோது அங்கு உடல்கள் சிதறிக் கிடந்தன. அவ்வுடல்களிலிருந்து தவழ்ந்தும் உந்தியும் தங்களை முன்னெழுப்பிக்கொண்ட உடல்கள் நெடுந்தொலைவு வரை வழிந்து வந்திருந்தனர். தளர்ந்து நடந்து வந்தவர்களின் நிரை எங்களுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்தது. நடைதளராதவர்கள் முன்னால் நடந்து சென்றனர். திரும்பிப் பார்த்த ஃபானு “குறைந்துகொண்டே வருகிறோம்” என்றார். பிரஃபானு “ஆம், ஆனால் வருபவர்கள் அனைவரும் உடலூக்கம் கொண்டவர்கள்” என்றார்.

பிரஃபாச க்ஷேத்ரம் மேலும் இரண்டு நாள் நடையில் வந்து சேர்ந்துவிடும் என்று சுருதன் கூறினார். அங்கு சென்று சேரும்போது கிளம்பியவரில் மூன்றில் ஒரு பங்கினரே இருப்பர். “பசியில், நோயில், பூசலில் இரு பங்கினரை இழந்திருக்கிறோம். ஒருவகையில் நன்று. எத்தனை குறைவானவர்கள் செல்கிறோமோ அத்தனை நிறைவானவர்கள் நாம். நமது செல்வம் அங்கு மேலும் பல ஆண்டுகள் வாழ்வதற்குப் போதுமானது. அங்கு உணவில்லையென்றாலும் கூட பதினைந்து நாட்களுக்கு மேல் நம் உணவைக்கொண்டு அங்கு வாழமுடியும்” என்றார் பிரஃபானு.

 

இரவெல்லாம் நடப்பதும் பகலெல்லாம் ஓய்வெடுப்பதுமாக எங்கள் பயணம் நீடித்தது. நிலக்காட்சி மாறத்தொடங்கியது. அது எங்களுக்கு தெளிவுறத் தெரியவில்லை. ஏனென்றால் மிகமிக மெல்ல அது மாறிக்கொண்டிருந்தது. வானில் பறவைகளின் எண்ணிக்கை மிகுந்தது. பறவைகள் எங்கள் அருகே வந்து இறங்கி எழலாயின. பின்னர் நீராவி கொண்ட காற்று பச்சிலை மணத்துடன் வந்தது. நிலத்தில் மெல்லிய தீற்றல்போல ஆங்காங்கே புற்கள். புல்லை கொறிக்கும் சிற்றுயிர்கள். ஒவ்வொன்றாக நாங்கள் புல்வெளியை நெருங்குவதை காட்டின. ஆனால் அந்த அறிதல் சிலருக்கே இருந்தது.

குறும்புதர்களும் தழைந்த மரங்களும் கொண்ட புல்நிலம் வரத்தொடங்கியபோதும் கூட எங்கள் ஒழுங்கு பெரிதாக மாறவில்லை. இரவில் விழித்திருக்கவும் ஊக்கம் கொண்டு நடக்கவும் மானுடரும் விலங்குகளும் பயின்றுவிட்டிருந்தனர். இரவில் அனைவருக்குமே நன்றாக விழிகள் தெரியத்தொடங்கின. இரவு பயணத்தின் விசையும் தொடர்ச்சியும் பகலில் அமைவதுமில்லை. ஆகவே இரவிலேயே தொடர்ந்து செல்லலாம் என்று படைத்தலைவர்கள் முடிவெடுத்தனர்.

பாலைநிலங்களைக் கடந்ததும் புல்வெளிகளில் வண்டிகளின் சகடங்கள் அவ்வப்போது சேற்றில் பதிந்தன. ஏழெட்டு முறை சகடங்கள் மண்ணில் தாழ்ந்து வண்டிகளைத் தூக்கி கொண்டு செல்லவேண்டும் என்ற நிலை வந்தபோது ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டது. மரப்பலகைகளையும் தடிகளையும் விரைந்து அடுக்கி ஒரு நீண்ட சாலை போடப்பட்டது. அச்சாலையினூடாக வண்டிகள் முன்னால் சென்றன. பின்னர் அச்சாலைகளை பெயர்த்து எடுத்து முன்னால் கொண்டு சென்றனர். அது வண்டிகள் எங்கும் புதையாமல் இயல்பாக உருண்டு செல்ல வழி வகுத்தது. விலங்குகள் களைப்படையாமல் இருக்கவும் உதவியது. பின்னர் அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தனர். பகலில் பாதை அமைப்பவர்கள் முன்னரே சென்று நெடுந்தொலைவு வரைக்கும் மரப்பாதைகளை அமைத்தனர். அதை தொடர்ந்து இரவில் நாங்கள் கிளம்பிச்சென்றோம்.

முதல் சிலநாள் பயணத்திற்குப் பின்னர் அப்பயணத்தை ஒவ்வொருவரும் மகிழத் தொடங்கியிருந்தனர். அதிலிருந்த அச்சமும் தயக்கமும் ஐயங்களும் அகன்றன. ஒவ்வொருவருக்கும் அதில் செய்வதற்கு ஏதோ இருந்தது. அந்தியில் ஒரு இடத்தில் படுத்ததுமே இரு பக்கங்களிலாக பிரிந்து சென்று பறவைகளை பிடிப்பதற்கு, வலைவிரிப்பதற்கு திறன்கொண்டவர்கள் உருவானார்கள். பாலைவனப் பறவைகள் கூட்டம் கூட்டமாக தங்குமிடங்களை அவற்றின் எச்சங்களைக் கொண்டே கண்டுபிடிக்கத் தொடங்கினார்கள். உணவில் பெரும்பகுதி பாலைவனப் பறவைகளாலானதாக ஆகியது.

பிரஃபாச க்ஷேத்ரத்திற்கு சென்றபின்னும் பல மாதங்களுக்கு எங்களிடம் உணவு எஞ்சியிருக்கிறது என்ற செய்தி ஒவ்வொருவரையும் மகிழ வைத்தது. பிரஃபாச க்ஷேத்ரத்திலும் வேட்டை விலங்குகள் உண்டு, அருகே சிந்து ஓடுவதனால் மீன் பிடிக்கமுடியும். கடலில் இருந்தும் மீன் பிடிக்க முடியும் என்ற செய்தி ஒவ்வொருவருக்கும் நிறைவளித்தது.

மரப்பலகைகளை அடுக்கி இரவு தங்குவதற்கான பாடி வீடுகளை அமைப்பதும், குடில்களை தட்டிகளாக தனித்தனியாக செய்துகொண்டு சிறிய மூங்கில் உருளைகளால் சகடங்கள் அமைத்து அவற்றை அதன்மேல் ஏற்றி தள்ளிக்கொண்டு செல்வதும், தேவையான இடங்களில் நிறுத்தி நான்கு பக்கமும் இழுத்து விரிய வைத்து விரைவில் குடிலாக்கிக்கொள்வதும் பயிலப்பட்டது.

பிரஃபாச க்ஷேத்ரத்தை நெருங்கியபோது முடிவிலாது அவ்வண்ணமே சென்றுகொண்டிருக்கும் ஒரு பெருந்திரளாக நாங்கள் மாறிவிட்டிருந்தோம். முதல் புலரியில் பிரஃபாச க்ஷேத்ரத்திற்கு ஒரு நாழிகைத் தொலைவில் வந்தபோது கடற்பறவைகளின் தொடர்குரலைக் கேட்டோம். முதலில் என்ன என்று ஏன் என்று தெரியாமல் துவாரகை நினைவில் வந்து அறைந்தது. துவாரகையின் காட்சிகள் கனவுகள்போல் ஓடத்தொடங்கின. பின்னர்தான் அந்நினைவையும் கனவையும் எழுப்புவது அந்த ஓசை என்று தெரிந்தது. அதன் பின்னரே அது கடற்காகங்களின் பெருங்குரலென்று தெளிந்தது.

அப்போது நான் மூத்தவர் ஃபானுவின் அருகில் இருந்தேன். “கடற்காகங்களா?” என்று அவர் மலர்ந்த முகத்தோடு என்னை நோக்கி சொன்னார். “அருகிலிருக்கிறது கடல் எனில் நாம் பிரஃபாச க்ஷேத்ரம் வந்துவிட்டோம் என்றுதான் பொருள்.” நான் “இங்கிருந்து இன்னும் ஒரு நாழிகைத் தொலைவிலேயே பிரஃபாச க்ஷேத்ரம் உள்ளது. பிரஃபாச க்ஷேத்ரத்திலிருந்து சிந்துவின் புறநீர் தேக்கத்தின் வழியாகவே நாம் கடலுக்குள் செல்ல முடியும்” என்று சொன்னேன். “சிந்து கடலுக்கு நிகரானது. கடலின் ஒரு கை அது” என்று ஃபானு சொன்னார்.

பிரஃபாச க்ஷேத்ரத்தை அடைந்துவிட்டோம் என்ற செய்தி அனைவரையும் சென்று அடைந்தபோது ஒவ்வொருவரும் மேலும் ஊக்கம் கொண்டனர். முதற்புலரியில் பெரும்பாலானவர்கள் நடைதளர்ந்து மெல்ல மெல்ல ஊர்ந்துகொண்டிருப்பார்கள். எவரும் அறிவிக்காமலேயே அச்செய்தி ஒவ்வொருவரையும் சென்று தொட எங்களைச் சூழ்ந்து இருளின் அலைகளென வந்துகொண்டிருந்த பெருந்திரளில் ஊக்கம் எழுவதை நான் அசைவெனக் கண்டேன். மெல்ல அந்த ஓசை பெருகி அலையலையென எழுந்து சூழ்ந்துகொண்டது.

மலைவெள்ளம் செல்வதுபோல வழி நிறைத்து முன்னால் சென்றது மக்கள் திரள். எவராலும் வழிநடத்தப்படாததால் ஆணைகள் அனைத்தையும் கடந்து தன்னைத்தானே ஒழுங்கமைத்துக்கொண்டதாக அது மாறிவிட்டிருந்தது. நெடுங்காலத்திற்கு முன்பெனத் தோன்றிய ஒரு காலத்தில் துவாரகையிலிருந்து கிளம்பும்போது அனைத்து ஆணைகளையும் கடந்து மக்கள் தாங்களே பெருகி எழுந்ததுபோல அப்போதும் நிகழ்ந்தது.

விண்ணில் மீன்கள் நிறைந்திருந்தன. தொலைவில் விடிவெள்ளி தனித்து மின்னிக்கொண்டிருந்தது. கடலிலிருந்து வந்த காற்றில் நீர்வெம்மையை உணர்ந்தோம். சிலர் அழுதனர். சிலர் வான்நோக்கி கைவிரித்தனர். ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டார்கள். இன்னமும் எவரும் அந்நிலத்தை பார்க்கவில்லை. ஆனால் அங்கே உள்ளம் சென்றுவிட்டிருந்தது. தந்தையே, அங்கே ஒருவரேனும் அத்தருணத்தில் துவாரகையை நினைவுற்றார்களா என்று நான் எண்ணினேன். துவாரகை என்ற சொல்லை ஒருவர் சொன்னாலும் உளம் மலர்ந்திருப்பேன். ஆனால் ஒருவரும் கூறவில்லை.

நெஞ்சில் அறைந்துகொண்டு “துவாரகை துவாரகை!” என்று கூவவேண்டும் என்று நினைத்தேன். என் நரம்புகள் உடைந்துவிடுமளவுக்கு உள்ளம் இறுகி இறுகிச் சென்றது. அதன் உச்சியில் மெல்ல தளர்ந்தேன். பின்னர் புன்னகைத்தேன். இந்தப் பெருக்கு ஒரு கலத்தில் இருந்து இன்னொரு கலத்திற்கு எண்ணை விழுதுபோல ஒழுகிச் சென்றுகொண்டிருக்கிறது. என்றும் அது அவ்வாறுதான் இருந்துள்ளது. நேற்றைக் களைந்து நாளை நோக்கி சென்றுகொண்டே இருக்கிறது. காலத்தில் நகர்கையில் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. இடத்தில் அந்நகர்வு நிகழ்கையில் நமக்குத் தெரிகிறது.

அல்லது ஒரு சிறு பஞ்சுவிதை. காற்றில் பறந்து அலைக்கழிந்து சுழன்று சென்று தனக்கான மண்ணில் படியவிருக்கிறது. அந்த மண்ணில் அதற்கான உணவும் நீரும் இருக்கவேண்டும். அனைத்து அலைக்கழிப்புகளும் விலக நான் விழிநீர் கோத்து மெய்ப்பு கொண்டேன். “தெய்வங்களே, மூதாதையரே! காத்தருள்க!” என்று என்னுள் கூவினேன்.

முந்தைய கட்டுரைபொன்னீலன்
அடுத்த கட்டுரைசீட்டு,நஞ்சு- சிறுகதை