இணைவு [சிறுகதை]

போழ்வு [சிறுகதை]     முன்தொடர்ச்சி

[1 ]

கொல்லம் படகுத்துறையில் இறங்கி நேராக என் சாரட் நோக்கி ஓடினேன். ஸ்காட் மிஷனில் இருந்து எனக்காக அனுப்பப் பட்டிருந்த வண்டி.என்னுடன் என் பெட்டியை தூக்கியபடி மாத்தன் ஓடிவந்தான். நான் மூச்சிரைக்க ஏறி அமர்ந்ததும் அவன் பெட்டியை என் அருகே வைத்தான். வண்டிக்காரன் மாத்தனிடம் “எங்கே?” என்றான்.

நான் உரக்க “பன்னிரண்டாம் ரெஜிமெண்ட்… பன்னிரண்டாம் ரெஜிமெண்டின் தலைமை அலுவலகம்” என்றேன்.

அவன் திரும்பி “பொதுவான வண்டிகளை உள்ளே விடமாட்டார்கள்” என்றான்.

“என்னிடம் கர்னல் மெக்காலேயின் ஆணை இருக்கிறது… போ” என்று நான் சொன்னேன்.

மாத்தன் “டாக்டர் அலெக் பெய்ன்ஸ்” என்று முறைப்படி அழைத்தான்.“நான் இப்போது என்ன செய்யவேண்டும்?”

“நீ மெதுவாக அங்கே வா. என் பெயரைச் சொல்.”

“என்னிடம் ஸ்காட்டிஷ் மிஷனில் இருந்து இதைப்போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று சொன்னார்கள்.”

“மிஸ்டர் மாத்தன் செறியான்” என்று நான் அழைத்தேன் “உங்களுக்கு எந்தக் கட்டாயமும் இல்லை. நான் எதையுமே தவறாக நினைக்கப் போவதில்லை. நீங்கள் இப்போதே விலகிச்செல்லலாம். இதில் தலையிடவே வேண்டியதில்லை.”

“ஆம்” என்று அவன் சொன்னான். “ஆனால்…” பின்னர் “நல்லது, நான் வருகிறேன்” என்றான்.

“இல்லை, எனக்கு வெள்ளையன் என்ற பாதுகாப்பு இருக்கிறது. உள்ளூர்க்காரனாகிய உனக்கு அது இல்லை. நீ விலகிக்கொள்ளலாம் மாத்தன்.”

“இல்லை, நான் வருகிறேன்.”

அவனை ஒருகணம் பார்த்துவிட்டு “போகலாம்” என்று சொன்னேன்.

வண்டி செல்லும்போது சற்றே உடலை நீட்டி இளைப்பாறினேன். கொல்லம் நகர் வழக்கமான பரபரப்புடன் இருந்தது. தலைச்சுமையாக பொருட்களை படகுத்துறைக்குக் கொண்டுசென்றுகொண்டிருந்தனர். பெரும்பாலும் வாழைக்குலைகள், கொப்பரைக்கூடைகள். பெண்கள் இப்பகுதியில் மார்புகளை மறைப்பதில்லை. உயர்குடிப் பெண்களும்கூட. ஆனால் அவர்கள் வெளியே வருவதில்லை. அரசகுடியினர் அல்லாத ஆண்களும்கூட இடைக்குமேல் ஏதும் அணியக்கூடாது.

கொல்லம் அதைச் சூழ்ந்திருந்த காயல்களாலேயே ஒரு நகரமாக ஆகியிருந்தது. படகுகளால் அது பிற ஊர்களுடன் இணைக்கப்பட்டது. துறைமுகம் அதை உலகுடன் இணைத்தது. ஊரெங்கும் படகுகளின் உடைசல்களை துடுப்புகளை பார்க்கமுடிந்தது. மக்களிலேயே பெரும்பாலும் அனைவரும் படகோட்டிகளின் நடை கொண்டிருந்தார்கள். ஐரோப்பாவில் குதிரை போல இங்கே படகு. குதிரையில் அமர்ந்து அமர்ந்து தோளில் ஒரு நிமிர்வும் முகவாய் எடுப்பும் வந்துவிடும். படகை நெடுநாட்கள் ஓட்டினால் பின்பக்கம் வளைந்து நடை மாறிவிடும்.

வண்டிக்காரன் திரும்பி “பீரங்கி மைதானத்திற்குத்தானே?” என்று கேட்டான்.

“ஆமாம்” என்றேன்.

“போருக்குப்பின்னால் அங்கே எந்த வண்டிகளும் செல்ல அனுமதிப்பதில்லை”.

“நான் சொல்லிக்கொள்கிறேன்.”

கொல்லம் நகரின் கிழக்காக அமைந்திருந்தது கொல்லம் கண்டோன்மெண்ட். நகரிலிருந்தும் படகுத்துறையில் இருந்தும் அங்கே செல்வதற்கு கல்பதிக்கப்பட்ட சாலை அமைந்திருந்தது. உள்ளூரில் நிறைய உறுதியான செம்பாறையை மண்ணிலிருந்தே வெட்டி எடுக்கிறார்கள். அவற்றையே கோட்டைகட்டவும் தரையில் பரப்பவும் வீடுகட்டவும் பயன்படுத்துகிறார்கள். வண்டியின் சக்கரம் கற்கள்மேல் ஏறிச்சென்றபோது என் உடல் அதிர்ந்துகொண்டிந்தது.

கொல்லம் கோட்டை அமைந்து நூறாண்டுகள் கடந்துவிட்டிருந்தன நான் அதற்குமுன் ஒருமுறை அங்கே சென்றிருக்கிறேன். உயரமில்லாத கோட்டை. செம்பாறைகளால் கட்டப்பட்டப்பட்டது. இருமுனைகளிலும் மரத்தாலான காவல் மேடை நீண்ட மஸ்கட்டுகளுடன் காவலர்கள் நின்றிருந்தனர்.

கோட்டையின் நுழைவாயிலின் இருபுறமும் பீரங்கிமேடைகள். அவற்றில் சிறியவகை பீரங்கிகள் கரிய உருளைபோல தெரிந்த வாய்த்துளைகளுடன் சற்று அண்ணாந்து நின்றிருந்தன. கோட்டைக்குள் உயரமாக எழுப்பப்பட்ட பெரிய பீரங்கிமேடைகள் எட்டு இருந்தன. அவற்றின்மேல் பெரிய வகை பீரங்கிகளின் இரும்பு உடலை காணமுடிந்தது. அங்கே கருஞ்சிவப்பு பிரிட்டிஷ் சீருடை அணிந்த வீரர்கள் தென்பட்டனர்.

மைதானம் மிக விரிந்தது. அதில் ஒரு முழு ரெஜிமெண்டே அணிவகுப்பு மரியாதையை நிகழ்த்தமுடியும். ஆனால் அதில் ஐந்தடி இடைவெளியில் நூற்றுக்கணக்கான கமுகுத்தடிகள் நடப்பட்டிருந்தன. அவற்றை ஒன்றுடன் ஒன்று மூங்கிலால் சேர்த்துக் கட்டியிருந்தனர். பின்காலை வெயிலில் அவற்றின் நிழல் பெரிய வலைபோல மண்ணில் விழுந்து பரவியிருந்தது.

எங்கள் வண்டி பீரங்கி மைதானத்தை நெருங்கும்போதே அங்கிருந்து நான்கு குதிரை வீரர்கள் வந்தனர். பின்னால் வந்த ஒருவன் வெயிiலில் மின்னிய நீண்ட பயனெட்டுடன் கூடிய மஸ்கட் வைத்திருந்தான். முன்னால் வந்தவன் வெள்ளைக்காரன், அல்லது ஆங்கில இந்தியன். கரிய தலைமயிர், கருப்புக் கன்கள், வெண்சிவப்பு நிறம், ஒடுங்கிய முகமும் கூர்மூக்கும் வெள்ளையர்களுக்குரியவை.

“வணக்கம், நான் சார்ஜெண்ட் ஜான் பெர்ஜர். நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ளலாமா?”

“நான் டாக்டர் அலெக் பெய்ன்ஸ்” என்றேன். “நான் அரசு விவகாரமாக உடனே கர்னல் சேமர்ஸை பார்க்கவேண்டும்” காகிதப்பையை எடுத்து கர்னல் மெக்காலேயின் கடிதத்தை உள்ளிருந்து எடுத்து அவனிடம் காட்டினேன். “என்னிடம் கர்னல் மெக்காலே அளித்த கடிதம் இருக்கிறது.”

“நான் கர்னல் சேமர்ஸின் அனுமதி இல்லாமல் உள்ளே அனுப்பமுடியாது டாக்டர்.”

“நீங்கள் இந்த கடிதத்தையே அவரிடம் காட்டலாம்.”

“நல்லது” அவன் அதை வாங்கிக்கொண்டான். “அதுவரை இவர்களின் காவலில் நீங்கள் இங்கே நின்றிருக்கவேண்டியிருக்கும்.”

“பரவாயில்லை.”

அவன் குதிரையில் திரும்பிச் சென்றான். அவன் குதிரையின் வால் சுழல்வதை நான் பார்த்துக்கொண்டு நின்றேன். வெயில் ஏறி ஏறி வந்தது. வெட்டுக்கல் பரவிய பெரிய மைதானம் வெப்பத்தை உமிழத்தொடங்கியது. மேலே தெரிந்த பீரங்கிகளின் திமிங்கல உடல்கள் ஒருவகையான அமைதியின்மையை உருவாக்கின.

உள்ளே ஒரு முழு பட்டாலியனும் இருக்கிறது என்று தோன்றியது. காலையிலேயே அவர்கள் பணிகளை தொடங்கிவிட்டிருந்தார்கள். கோட்டையும் உள்ளிருக்கும் கட்டிடங்களும் பழுதுபார்க்கப்பட்டுக் கொண்டிருந்தன. பிரிட்டிஷ் காரிசனாக இருந்தாலும் பெரும்பாலான படைவீரர்கள் இந்தியர்கள், குறிப்பாக மெட்ராஸ் ரெஜிமெண்டில் இருந்து வரவழைக்கப்பட்டவர்கள். அவர்களின் கன்னங்கரிய நிறமும் பெரிய வெண்ணிற கண்களும் இந்த மண்ணுக்குரியவை அல்ல.

சார்ஜெண்ட் ஜான் பெர்ஜர் திரும்பி வந்தான். “உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது” என்றான் “ஆனால் உங்கள் வண்டிக்கு அனுமதி இல்லை. நீங்கள் இறங்கி உங்கள் பெட்டியுடன் உள்ளே செல்லலாம்.”

“நன்றி, ஜான் என்னுடைய உதவியாளர் இங்கே வருவார். அவர் இங்கே என் வண்டியில் எனக்காகக் காத்திருக்க அனுமதிக்கவேண்டும்.”

ஜான் “சரி” என்றான். “இவன் சார்ஜெண்ட் தோமா. உங்களை உள்ளே அழைத்துச் செல்வான்.”

நான் கோட்டைக்குள் நுழைந்தேன். உள்ளே பிரிட்டிஷ் பாணியின் சுட்டசெங்கற்களால் தரை போடப்பட்டிருந்தது. சிவப்பு ஓடு வேய்ந்த தாழ்வான கூரைகொண்ட பெரிய கட்டிடங்கள் செம்மண்குன்றுகள் போல நீளமாக சென்றன. அவற்றை ஒட்டி செங்கல்பாதைகள். நடுவே பூச்செடிகள் வைக்கப்பட்டிருந்தன. குரோட்டன்ஸ் செடிகள், கப்பலில் கொண்டுவரப்பட்டவை.

தோமா என்னை ஓர் உயரமான ஓட்டுக்கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றான். பிரிட்டிஷ் பாணியிலான உருளையான சுதைத்தூண்கள் கொண்ட நீண்ட வராண்டாவால் சூழப்பட்ட இரண்டு அடுக்கு மாளிகை. மாடியிலும் சுற்றிலும் வராண்டா. வராண்டாக்களின் விளிம்பில் மரத்தாலான கைப்பிடிச்சுவர். சன்னல்கள் மிகப்பெரியவை. அனைத்திலும் வெட்டிவேர் தட்டிகள் தொங்கின. அதைச்சூழ்ந்து பூச்செடிகளால் ஆன தோட்டம் இருந்தது.

அந்த மாளிகையின் முகப்பு சற்று வேறுபட்டதாக இருந்தது. இரட்டைச் சுதைத்தூண்களால் அரைவட்டவடிவமாக மையக் கட்டிடத்தில் இருந்து முகம்போல எழுந்து நின்றது. டாஃல்பினின் மூக்குபோல. மேலேயும் அதே வளைவு.

என்னை அவன் உள்ளே அழைத்துச் சென்றான். அங்கே மிக உயரமான கூரை கொண்ட அகலமான கூடத்தில் தேக்குமரத்தாலான நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஐரோப்பியருக்கு வசதியான உயரமான நாற்காலிகள். என்னை அமரும்படிச் சொன்னான்.

சீருடை அணிந்த பிரிட்டிஷ்காரர் வந்து பட்டுக் கையுறை அணிந்த கைகளை நீட்டி “நான் காப்டன் கோர்டான். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி டாக்டர் அலெக் பெய்ன்ஸ்” என்றார்.

“மகிழ்ச்சி காப்டன் கோர்டான். நான் உடனே கர்னல் சேமர்ஸை சந்திக்கவேண்டும்.”

“கர்னல் மெக்காலேயின் கடிதத்தை பார்த்தேன். அதை கர்னலுக்கு அனுப்பியிருக்கிறேன். அவர் ஓர் ஆலோசனையில் இருக்கிறார்…” என்று கோர்டான் சொன்னார். “நீங்கள் சற்றே காத்திருக்கவேண்டும்.”

“நன்றி” என்றபின் அமர்ந்து என் கோட்டை தளர்த்திக்கொண்டேன்.

கோர்டான் “உங்களுக்கு ஐஸ் போட்ட பானங்களை நான் தரமுடியும். இங்கே கொச்சியிலிருந்து ஐஸ் வருகிறது.”

“நன்றி” என்றேன்.

கோர்டான் கைகாட்ட பட்லர் தாலத்தில் வைக்கப்பட்ட கண்ணாடிக் கோப்பையில் நிறைந்த விஸ்கியுடன் வந்தார். கூடவே ஒரு வெண்ணிறத் துவாலை.

நான் துவாலையை எடுத்து முகம் துடைத்து மடியில் போட்டபின் ஐஸ்போட்ட விஸ்கியை கையில் எடுத்தேன். அதை ஒருமுறை முகர்ந்து சிலகணங்கள் கழித்து ஒரு சொட்டை நுனிநாக்கில் நனைத்தபின் “கோர்டான், வெளியே அத்தனை மூங்கில் கழிகள் எதற்காக? ஏதாவது பந்தல் போடப்போகிறீர்களா?” என்றேன்.

“அவை தூக்குமரங்கள்” என்று கோர்டான் சொன்னார்.

என்னால் சற்றுநேரம் ஒன்றும் சொல்லமுடியவில்லை. கோர்டான் கண்சிமிட்டி தலைவணங்கி உள்ளே சென்றார்.

[ 2  ]

திருவிதாங்கூரில் அப்போதுதான் ஒரு பெரிய கலவரம் நடந்து ஓய்ந்திருந்தது. சில ஆயிரம் உயிர்கள் அகன்றுவிட்டிருந்தன. பிரிடிட்ஷ் ஆட்சியில் இந்திய நிலம் முழுக்க கலவரங்கள் நடந்துகொண்டே இருந்த காலம், ஆகையால் பொதுவாக ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கலவரச் செய்திகளையே பேசிக்கொண்டார்கள். ராணுவ அதிகாரிகளுக்கு அவை அவர்களின் திறமையை நிரூபித்து மேலே செல்வதற்கான வாய்ப்பு. வணிகர்களுக்கு அவை வணிகத்தின் நல்வாய்ப்பு அல்லது இழப்பு.

கலவரம் நடந்தபோது நான் மெட்ராஸில் இருந்தேன். கல்கத்தாவுக்குச் செல்வதற்கான கப்பலுக்காக காத்து ஓரியண்டல் ஹோம் என்ற விடுதியில் தங்கியிருக்கும் போதுதான் திருவிதாங்கூரில் இருந்து அங்கே வந்திருந்த தோந்நியில் இட்டூப்பு என்ற சிரியன் கிறிஸ்தவரைச் சந்தித்தேன். அவரும் கல்கத்தா செல்வதற்காக கப்பலுக்காக காத்திருந்தார். திருவிதாங்கூரில் வேலுத்தம்பி தளவாய் தொடங்கிய கலவரத்தைப் பற்றி அவரிடமிருந்தே விரிவாக தெரிந்துகொண்டேன்.

இட்டூப் கொச்சியில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் பங்குதாரர். அவருக்கு கொச்சியில் இருந்த கர்னல் மெக்காலேவின் அலுவலகத்துடனும் கொச்சி அரசர் ராமவர்மாவுடனும் திருவனந்தபுரத்தில் மகாராஜாவுடனும் நெருக்கமான நேரடித் தொடர்பு இருந்தது. அனைத்தையும் நடைமுறைப்பார்வையுடன் உள்ளே நுழைந்து பார்ப்பவராக இருந்தார்.

“பிரச்சினை ஒருவர் குடுமியை இன்னொருவர் பிடித்துக் கொண்டிருப்பதுதான்” என்றார் தோந்நியில் இட்டூப்பு. மலபாருக்குப் பொறுப்பான கர்னல் மெக்காலே ஒன்றுமே செய்யமுடியாது. திருவிதாங்கூரில் இருந்து அவர் எவ்வளவு ரூபாய் கப்பமும் கட்டணமும் வசூலித்துக் கொடுக்கவேண்டும் என்பதை மெட்ராஸிலும் கல்கத்தாவிலும் இருப்பவர்கள் முடிவுசெய்கிறார்கள். ‘எஸ் சர்’ என்பதற்கு அப்பால் அவரால் எதுவும் சொல்லமுடியாது.திருவிதாங்கூர் ரெஸிடெண்ட் கர்னல் மெக்காலே ஒன்றும் செய்யமுடியாது,

உண்மையில் அந்த கவர்னர்களும் ஒன்றும் செய்யமுடியாது, அவர்கள் எகிப்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் செல்லும் பிரிட்டிஷ் துருப்புக்களுக்கான நிதியை திரட்டி அளித்தாகவேண்டும். அவர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் மேலும் தேவைப்படும். அவர்களும் ஒன்றும் செய்யமுடியாது, பிரிட்டன் உலகை வெல்ல அந்தப் போர்கள் தேவைப்பட்டன

பிரிட்டிஷ் பேரரசு நினைத்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. உலகை அவர்கள் வெல்லாவிட்டல் உலகம் அவர்களை அழிக்கும். சுறாமீன் நீந்தாவிட்டால் மூழ்கிவிடும், பிரிட்டிஷ் பேரரசு போரில் ஈடுபடாவிட்டால் அழிந்துவிடும். ஆகவே ஒன்றுமே செய்யமுடியாது. இது ஒரு பெரும்நெருப்பு. சிக்கியதை எல்லாம் எரித்து உண்டு இது வளர்ந்தபடியே இருக்கும்.

கர்னல் மெக்காலே என்ன செய்வார், ஆணையிடப்படுவதை திரட்டி அளிக்கவேண்டும். அதேசமயம் அவர் திருவிதாங்கூர் அரசரிடமும் திவானிடமும் கெஞ்ச முடியாது, ஆணையிடத்தான் வேண்டும். ஆணையை அவர்கள் கடைப்பிடித்தாகவேண்டும். அவர்கள் தங்களுக்கு கீழே இருப்பவர்களிடம் வசூலிக்கவேண்டும். அவர்கள் அதற்குக் கீழே இருப்பவர்களிடம். கடைசியில் நிலத்தில் உழலும் மக்கள் கொடுக்கவேண்டும். அவர்கள் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.

முடிவில்லாமல் வரி வசூலிக்கமுடியுமா என்ன? திருவிதாங்கூரின் பெரும்பகுதி நிலம் காடும் மலையும். காட்டிலிருந்து எந்த ஊர்களுக்கும் சாலைகள் இல்லை. காட்டையும் ஊர்களையும் இணைக்கும் அகன்ற பெரிய ஆறுகளும் இல்லை. ஆகவே காட்டுக்கும் ஊருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. காட்டுக்குள் ஊர்க்காரர்கள் செல்லமுடியாது. அங்கே வாழும் மலைமக்கள் இங்கே வருவதுமில்லை. காட்டிலிருந்து அரசுக்கு ஒரு பைசா வருமானம் இல்லை.

திருவிதாங்கூரில் வரி வருமானம் வருவது கடலோர ஊர்களில் இருந்து மட்டும்தான். ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டு. திருவிதாங்கூரின் எந்த கடல்துறைமுகத்திற்கும் பொருளை விளைவித்து கொண்டுவந்து சேர்ப்பதற்கு பின்புலத்தில் பெரிய நிலம் இல்லை. விவசாயநிலம் பின்புலமாக இருந்தால்தான் துறைமுகம் வளரும். இங்கே விளைநிலமே குறைவு. தேங்காய் இருப்பதனால்தான் கொஞ்சமேனும் துறைமுகங்கள் சமாளிக்கின்றன.

ஆனால் இது எதுவும் மெட்ராஸ் கவர்னரின் ஆலோசகர்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் நிலவரைபடத்தை வைத்துக்கொண்டு பரப்பளவை கணக்கிட்டு வரியை முடிவுசெய்கிறார்கள். கர்னல் மெக்காலே மேலும் மேலும் திருவிதாங்கூர் அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அரசர் பாலராம வர்மாவுக்கு நாட்டில் என்ன நடக்கிறதென்றே தெரியாது. திவான் வேலுத்தம்பி தளவாய்தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு. அவர்தான் கர்னல் மெக்காலேவுக்கு பதில் சொல்லவேண்டும்.

கர்னல் மெக்காலேவுக்கும் வேலுத்தம்பிக்கும் ஓராண்டுக்காலம் நெருக்கம் நிலவியது. வேலுத்தம்பி தளவாயின் எதிரிகளை அழித்தவர் கர்னல் மெக்காலே. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கிடையே உரசல் தொடங்கியது. கப்பம் கட்ட முடியாமல் செலவைக் குறைக்கும் பொருட்டு கர்னல் மெக்காலே பேச்சைக் கேட்டு திருவிதாங்கூரின் ராணுவத்தைக்கூட கலைத்தார் வேலுத்தம்பி. அது ஒரு கலவரமாக வெடித்தது. கர்னல் மெக்காலே உதவியுடன் அதை அடக்கினார்.

“தெரியும்” என்று நான் சொன்னேன்.

“அதற்குப்பிறகுதான் உண்மையான சிக்கல் தொடங்கியது” என்று தோந்நியில் இட்டூப்பு சொன்னார். “திருவிதாங்கூர் கர்னல் மெக்காலேயின் முழுக்கட்டுப்பாட்டில் வந்தது. அவர் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது என்று மெட்ராஸ் கவர்னருக்கு தெரிந்தும் விட்டது. அவர்கள் பணம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். கர்னல் மெக்காலே கொடுத்துக்கொண்டே இருந்தார்.”

சந்தைகளின் தீர்வை இரண்டு ஆண்டில் எட்டுமுறை கூட்டப்பட்டது. அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் அளிக்க முடியாத நிலை. வேலுத்தம்பி பலமுறை கர்னல் மெக்காலேயை கண்டு முறையிட்டாலும் அவர் அதைச்செவி கொள்ளவில்லை. வணிகர்கள் திருவிதாங்கூர் நாட்டைவிட்டே ஓட ஆரம்பித்தனர். வேலுத்தம்பிக்கு வேறுவழியில்லை. அவர் எதிர்க்க ஆரம்பித்தார்.

தோந்நியில் இட்டூப்பு என்னிடம் “நான் எல்லா செய்திகளையும் சீராக தொகுத்து ஒரு ஜர்னல் ஆக எழுதியிருக்கிறேன். கல்கத்தாவில் என் பங்குதாரர்கள் கேட்பார்கள்” என்றார்.

“அதை எனக்கு வாசிக்க கொடுங்கள்… முடிந்தால் ஒரு நகல் எடுத்துக்கொள்கிறேன்” என்று நான் சொன்னேன்.

“அதிலென்ன, தாராளமாக” என்றார் தோந்நியில் இட்டூப்பு.

அவர் அளித்த ஜேர்னல் நீளமான நாட்குறிப்பு. அதை நான் சுருக்கி என் டைரியில் எழுதிக்கொண்டேன். எனக்கே நிகழ்வுகளைச் சரியாகப் புரிந்துகொள்ள அது உதவியது.

1807 முதல் வேலுத்தம்பிக்கு கர்னல் மெக்காலேவுக்கும் நடுவே பூசல்கள் வெளிப்படையாக தெரிய தொடங்கின. வேலுத்தம்பியை சீண்டி பதவியில் இருந்து அவரே விலகும்படிச் செய்யவேண்டும் என்று கர்னல் மெக்காலே நினைத்தார். வேலுத்தம்பி எவருக்காவது தண்டனை விதித்தால் அவருக்கு பதவி உயர்வு கொடுத்தார். எவருக்காவது பாராட்டும் பதவியும் அளிக்கப்பட்டால் அவரை தண்டித்தார். வேலுத்தம்பியின் தனிப்பட்ட காவலர்களை குறைத்தார். எஞ்சியவர்களுக்கு ஊதியம் கிடைக்காமல் செய்தார்.

1807 மே மாதம் 12 ஆம் தேதி மகாராஜாவுக்கு கர்னல் மெக்காலே எழுதிய கடிதத்தில் வேலுத்தம்பி திவான் பதவியில் இருந்து இறங்கி வடக்கு மலபாரில் கண்ணூர் அருகே சிறைக்கல் என்ற ஊருக்குச் சென்று அரசப்பணிகள் எதிலும் ஈடுபடாமல் வாழவேண்டும் என்றும், பதிலுக்கு அவருக்கு ஆண்டுதோறும் ஐநூறு ரூபாய் பென்ஷன் அளிக்கப்படும் என்றும் அதை மலபார் கலெக்டர் பேபரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் கர்னல் மெக்காலே சொன்னார். அதை வேலுத்தம்பி அவமதிப்பாகவே எடுத்துக்கொண்டார்.

அரண்மனையின் மொத்த நகைகளையும் விற்று அந்தப்பணத்தை நேரடியாகவே மெட்ராஸ் கவர்னருக்கு கப்பமாக அனுப்பினார் வேலுத்தம்பி. கூடவே மகாராஜா கைச்சாத்திட்ட ஓலையும் சென்றது. உடனே கர்னல் மெக்காலேவை திருப்பி அழைத்துக் கொள்ளவேண்டும், அவர் திருவிதாங்கூரின் அரசியலில் தலையிடுவது அரச உறவுகளுக்கு ஊறுவிளைவிப்பது என்றும்  கோரப்பட்டிருந்தது.

ஆனால் மெட்ராஸ் கவர்னர் அலுவலக சீர்குலைந்து கிடந்தது. வில்லியம் காவண்டிஷ் பெண்டிங் பிரபு கவர்னர் பதவியில் இருந்து விலகி இங்கிலாந்து சென்றார். வில்லியம் பீட்ரீ தற்காலிக கவர்னராக இருந்தார். அவருக்கு இந்த பூசல்களில் தலையிட நேரமிருக்கவில்லை. அதைவிட தலைபோகும் பிரச்சினைகள் இருந்தன.எல்லா பிரச்சினைகளையும் அடுத்த கவர்னருக்காக ஒத்திவைப்பதில் அவர் மும்முரமாக இருந்தார்.

திருவிதாங்கூர் பிரிட்டிஷாருக்கான கப்பத்தின் அடுத்த தவணையை கட்ட தாமதமாகியது. கர்னல் மெக்காலே மிகக்கடுமையான மொழியில் மகாராஜாவுக்கு கடிதம் எழுதினார். உடனே கப்பம் வராவிட்டால் திருவிதாங்கூர் அரசை கைப்பற்றி மகாராஜாவை சிறையிடநேரும் என்று எச்சரித்தார்.

கர்னல் மெக்காலேவின் தூதராக ஸ்தானபதி சுப்பையன் செயல்பட்டார். சுப்பையன் மகாராஜாவிடம் வேலுத்தம்பியை நீக்கி கர்னல் மெக்காலேயிடம் இணக்கமாக இருக்கும்படி எச்சரித்தார். ஒருநாள் சுப்பையன் இரவு அரசரிடமும் திவானிடமும் பேச்சுவார்த்தை முடிந்து அரண்மனையில் இருந்து தன் மாளிகைக்குச் செல்ல கிளம்பினார். சென்று சேரவில்லை. அவருடைய உடல் அருகிலிருந்த தென்னந்தோப்பில் கிடந்தது, பாம்பு அவரை கொத்தியிருந்தது.

சுப்பையனின் கொலை கர்னல் மெக்காலேவுக்குச் சில செய்திகளைச் சொன்னது. வேலுத்தம்பி கர்னல் மெக்காலேவை எதிரியாக நினைக்கிறார். கொல்லவும் கூடும். அவர் தன் தலைமையகத்தை கொச்சி கண்டோன்மெண்டுக்கு மாற்றிக்கொண்டார்.

அப்போது கொச்சியை ஆட்சி செய்தவர் பத்தாம் ராமவர்மா. அவருக்கு இலக்கியத்தில் மட்டுமே ஆர்வம். சுந்தரகாண்ட புராணம் என்ற காவியத்தை எழுதிக்கொண்டிருந்தார். கொச்சி அரசர்களின் அமைச்சர் பதவியும் பாரம்பரியமானது. அது பாலியம் குடும்பத்திற்குரியது. அதன் மூத்தவர் பாலியத்து அச்சன் என்று அழைக்கப்படுவார்.

அப்போது பாலியத்து அச்சனாக இருந்தவர் பாலியத்து கோவிந்தன் மேனோன். அவர் அரசர் ராமவர்மாவை ஆலுவாவுக்கு வடக்கே இருந்த வெள்ளாரம்பள்ளி என்ற சிற்றூரில் ஓர் அரண்மனை கட்டி அங்கே கொண்டு சென்று தங்கவைத்துவிட்டு முழு அதிகாரத்தையும் தன் கையில் எடுத்துக்கொண்டார். தன்னை எதிர்த்த கொச்சி நாயர் தலைவர்களை எல்லாம் சிறைப்பிடித்து கூட்டம் கூட்டமாக கைகால்களைக் கட்டி கொச்சி காயலில் மூழ்கடித்துக் கொன்று கிட்டத்தட்ட அரசனாகவே ஆனார்.

அவருக்கும் தொடக்கத்தில் கர்னல் மெக்காலேவின் ஆதரவு இருந்தது. ஆனால் கப்பம் கேட்டு நெருக்கடி கொடுத்த கர்னல் மெக்காலேவுக்கும் பாலியத்து அச்சனுக்கும் பூசல் உருவாகியது. கப்பம் கொடுக்காவிட்டால் இன்னொருவரை திவானாக ஆக்குவேன் என்று கர்னல் மெக்காலே பாலியத்து அச்சனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ராமவர்மா மகாராஜா பாலியத்து அச்சனை பதவிநீக்கம் செய்யவும் குஞ்ஞிகிருஷ்ணன் மேனன் என்ற இளைஞனை அமைச்சராக்கவும் திட்டமிட்டார். அந்தச் செய்தியை அறிந்த பாலியத்து அச்சன் குஞ்ஞிகிருஷ்ணன் மேனனை கொல்ல நாடெங்கும் கொலைகாரர்களை அனுப்பித் தேடினார்.

அவர்கள் ஊரெல்லாம் தேட ஓராண்டுக்காலம் வெள்ளாரம்பள்ளியில் தன் அரண்மனைக்குள்ளேயே குஞ்ஞிகிருஷ்ணன் மேனனை அரசர் ராமவர்மா மறைத்து வைத்திருந்தார். பின்னர் அவனை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் கர்னல் மெக்காலேவிடம் அனுப்பினார். குஞ்ஞிகிருஷ்ணன் மேனன் கொச்சி பிரிட்டிஷ் காரிசனில் கர்னல் மெக்காலேயின் அவையில் அடைக்கலம் தேடினான்.

இதை அறிந்த பாலியத்து அச்சன் வேலுத்தம்பியின் ஆதரவை தேடினார். ஒருவரோடொருவர் எந்த நெருக்கமும் இல்லாதவர்களாக இருந்த பாலியத்து அச்சனும் வேலுத்தம்பியும் கைகோர்த்துக்கொண்டனர். ஒரே சமயம் கொல்லம், கொச்சி, பரவூர் மூன்று இடங்களிலும் வெள்ளையரை தாக்கி கொல்வது என்று இருவரும் சேர்ந்து முடிவெடுத்தனர்.

வேலுத்தம்பி பிரிட்டிஷ் கவர்னர் சர் ஜார்ஜ் பர்லோ முதலாம் பாரோனெட்டுக்கு ஓரு கடிதம் அனுப்பினார். அவர் திவான் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் ,கோழிக்கோட்டில் ஓய்வுபெற்று வாழ விரும்புவதாகவும்,முன்பு சொன்னபடி பென்ஷனும் பாதுகாப்புப் படையும் அளிக்கவேண்டும் என்றும் கேட்டார். அந்தக் கடிதம் மெட்ரஸ் கவர்னர் அலுவலகத்தில் பரிசீலனையில் இருந்தது.

அதேசமயம் பிரெஞ்சுக் காரர்களிடம் பிரிட்டிஷாரிடம் போரிட  தனக்கு உதவவேண்டும் என்று கோரி ஒரு செய்தியை அனுப்பினார் வேலுத்தம்பி. கோழிக்கோடு சாமூதிரி மன்னருக்கும் உதவிகேட்டு செய்தி அனுப்பினார். இருவருமே எதிர்வினை அளிக்கவில்லை.

வேலுத்தம்பி தன் படைவீரர்களை வைக்கம் பத்மநாபபிள்ளை என்ற படைத்தலைவனின் தலைமையில் கொச்சிக்கு அனுப்பினார். பாலியத்து அச்சன் 1808 டிசம்பர் 28 ஆம்தேதி அறுநூறு நாயர்படைவீரர்களுடன் கொச்சி பிரிட்டிஷ் காரிசனை தாக்கினார். கோட்டையை உடைத்து உள்ளே புகுந்தார்.

கர்னல் மெக்காலே பின்பக்கச் சுரங்கம் வழியாக தப்பி ஆற்றுக்குள் சென்று ஒரு சிறுபடகில் குப்புறப் படுத்து தப்பினார்.காயல் வழியாகவே கடலுக்குள் சென்று துறைமுகத்தில் நின்றிருந்த பியட்மோன் என்னும் பிரிட்டிஷ் கப்பலில் தஞ்சம்புகுந்தார்.

கோட்டைக்குள் இருந்த பிரிட்டிஷார் கொல்லப்பட்டனர். கஜானா கொள்ளையடிக்கப்பட்டது. சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். குஞ்ஞிகிருஷ்ணன் மேனன் அங்கே இல்லை, அவன் முந்தைய நாளே அங்கிருந்து சென்றுவிட்டிருந்தான்.

திருவிதாங்கூர் படையும் கொச்சியின் படையும் இணைந்து கொச்சி கண்டோன்மெண்ட் பகுதியை சூறையாடினர். சூழ்ந்திருந்த வியாபாரிகளின் இல்லங்களைக் கொள்ளையிட்டனர். யார் கர்னல் மெக்காலேவின் ஆதரவாளர் யார் பாலியத்து அச்சனின் ஆதரவாளர் என்ற வேறுபாடெல்லாம் நாயர்படையினருக்கு தெரியவில்லை. பலர் கொள்ளைச் செல்வத்துடன் அப்படியே மலபாருக்கு தப்பியோடினர். போருக்குச் சென்றபடையில் பாதியே திரும்பி வந்தது.

வேலுத்தம்பி கொல்லத்திற்குச் சென்று கடலோரக் கோட்டைக்குள் முகாமிட்டார். அதுதான் ஏறத்தாழ எழுபதுநாட்கள் நீடித்த கலவரத்தின் தொடக்கம்.

கர்னல் மெக்காலே அனுப்பிய செய்திகளின் அடிப்படையில் திருவிதாங்கூரின் பிரிட்டிஷ் ரெசிடென்ட் ஆக இருந்த கர்னல் பெல்லாட் மெட்ராஸ் கவர்னருக்கு விண்ணப்பம் விடுத்தார். கவர்னர் ஜார்ஜ் பர்லோவின் ஆணைப்படி மலபாரில் இருந்து கர்னல் குப்பேஜும் பாளையங்கோட்டையில் இருந்து கர்னல் லோகரும் படைகளுடன் திருவிதாங்கூருக்குள் நுழைந்தனர்.

வேலுத்தம்பி கொல்லத்தை அடுத்த குண்டறை என்னும் இடத்தில் 1809 ஜனவரி 15ஆம் தேதி ஊர்த்தலைவர்களை கூட்டி ஓர் அறிவிப்பை விடுத்தார். அதை குண்டறை விளம்பரம் என்று பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆவணங்கள் குறிப்பிட்டன.

எழுந்து வரவிருக்கும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை முதல்முதலாகச் சுட்டிக்காட்டிய அறிக்கை அது. பிரிட்டிஷார் இந்தியாவை விழுங்கிவிடுவார்கள் என்றும், அதை தடுக்கும் ஆற்றல் பிரிந்து போரிட்டுக்கொண்டும், சுயநலத்தையே கருதிக்கொண்டும் வாழும் அரசர்களுக்கு இல்லை என்றும், படைத்தலைவர்களும் வீரர்களும் தங்கள் மண்ணைக் காக்க படையென திரண்டு எழவேண்டும் என்றும் அது அறைகூவியது. பிரிட்டிஷார் காவல்கூலி என்றும் கப்பம் என்றும் திருவிதாங்கூரில் மறைமுகமாகக் கொள்ளையடித்துச் சென்ற மாபெரும் செல்வத்தை அது கணக்கிட்டு கூறியது.

அறம் வாழ, இந்தியாவின் தொல்மரபுகள் பேணப்பட, நாட்டின் தன்மானம் நிலைகொள்ள அணிதிரள்க என்று அறைகூவிய அந்த அறிவிப்பு ஒரு சிறு எழுச்சியை உருவாக்கியது. வேலுத்தம்பிக்குப் பின்னால் நாயர்படை ஒன்று திரண்டது. அன்றே அவர்கள் கொல்லம் கண்டோன்மெண்டை தாக்கினர்.

அவர்களை ஒரு ராணுவம் என்று சொல்வதே ஒரு வேடிக்கை என்று பிறகு மேஜர் ஹாமில்டன் அளித்த அறிக்கை குறிப்பிட்டது.  ஒரு பெரும் மக்கள் திரள். அதில் கிட்டத்தட்ட இருபதாயிரம்பேர் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ராணுவப் பயிற்சி என்பதே இல்லை. பெரும்பாலானவர்கள் அடிமுறைப் பயிற்சியும் கொஞ்சம் உள்ளூர் ஆயுதப்பயிற்சியும் பெற்றவர்கள். அவர்களுக்கு அணிவகுக்க தெரியவில்லை. ஒருவரோடொருவர் முட்டிமோதி கூச்சலிட்டு ரகளைசெய்து கற்களை வீசி கட்டிடங்களை உடைத்துக்கொண்டு அவர்கள் மலைவெள்ளம்போல ஒழுகிச் சென்றார்கள்.

பெரும்பாலானவர்கள் வெறும் கால்களுடன் நடந்தனர். இடையில் சுற்றிக்கட்டிய அரைவேட்டியும் தலையில் துணித்தலைப்பாகையும் மட்டும்தான் ஆடைகள். எந்தவகையான கவசங்களும் கிடையாது. பொதுவான செய்தித் தொடர்பு முறையோ வரையறுக்கப்பட்ட தலைமையோ இல்லை. சிறுசிறு குழுக்களின் பெருந்தொகை. ஆனால் எந்த குழுவுக்கும் தனியான தலைமை என்பது இல்லை.

அவர்கள் ஒரே அலையாக வந்து தாக்கவில்லை, சூழ்ந்துகொள்ளவுமில்லை. வரும்வழியிலேயே பெரும்பாலானவர்கள் பிரிந்துவிலகி வழியில் கொள்ளையிடத் தொடங்கினார்கள். சில இடங்களில் அவர்களுக்குள் பூசல்களும் அடிதடிகளும் நடைபெற்றன. முன்னணிப்படை கோட்டையை தாக்கிய பிறகும்கூட பின்னால் வந்தவர்களுக்கு தாக்குதவதற்கான செய்தி சென்று சேரவில்லை. முன்பக்கம் நாயர்கள் கூட்டம்கூட்டமாக செத்துவிழுகையில் பின்பக்கம் ஈட்டிகளை தரையில் தட்டியபடி வட்டம் வட்டமாக நடனமிட்டு பாடிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களிடம் முறையான ஆயுதங்கள் இல்லை. ஏராளமானவர்கள் கமுகுமரத்தை கீறி முனைகூராக்கி செய்யப்பட்ட வாரிக்குந்தம் என்னும் உள்ளூர் ஈட்டிகளையே ஆயுதங்களாக வைத்திருந்தனர். அவர்களில் நூற்றுக்கும் குறைவானவர்களே மஸ்கட்டுகள் வைத்திருந்தனர். பதினெட்டு சிறியவகை பீரங்கிகளை மாட்டுவண்டிகளில் வைத்து இழுத்துவந்தனர். அவற்றில் ஆறுபீரங்கிகள் மட்டுமே கண்டோன்மெண்ட் வரை வந்தன. நான்கு மட்டுமே வெடித்தன. மொத்தமே பதினாறு குண்டுகள் மட்டுமே சுடப்பட்டன.இரண்டு மட்டுமே பிரிட்டிஷ் கோட்டையைச் சென்றடைந்தன.

அவர்கள் எவருக்கும் பீரங்கிகளை இயக்கத் தெரிந்திருக்கவில்லை. திருவிதாங்கூர் எப்போதுமே பீரங்கிகளை இயக்க ஐரோப்பியரையே நம்பியிருந்தது. பீரங்கிகளின் எடையைப் பற்றி நாயர் படையினருக்கு எந்த புரிதலும் இருக்கவில்லை. அவற்றை ஏற்றிய மாட்டுவண்டிகள் சாலைப் பள்ளங்களில் சக்கரம் இறங்கியதும் அச்சு முறிந்தன. அவற்றை ஆங்காங்கே கைவிட்டுவிட்டு சென்றனர்.

பீரங்கிகளை வலுவான மேடையில் நிலைநிறுத்தவேண்டும் என்று அறியாமல் அவர்கள் வண்டிகளிலேயே அவற்றை வைத்து வெடிமருந்து திணித்து குண்டுபோட்டனர். பீரங்கிக்குழாய்களின் பின் அடியால் அவை இருந்த வண்டிகள் நொறுங்கி பீரங்கிகள் தரையில் விழுந்து மண்ணோடு அழுந்தின. அவற்றின் உடல் சுட்டுப்பழுத்திருக்கும் என்று தெரியாமல் அவர்கள் அவற்றை தூக்க முயன்றனர். கைகள் வெந்து கதறி விலகினர். மேலும் முட்டாள்தனமாக அவற்றைக் குளிர்விக்கும்பொருட்டு நீரை மேலே ஊற்றினர். உள்ளே கொதிக்க மேலே குளிர்ந்தபோது பீரங்கிக்குழாய்கள் விரிசலிட்டன. விரிசலிட்ட பீரங்கிகளில் மருந்திட்டு வெடிக்க செய்தபோது அவை சிதறின.

வெறும் ஆறுமணிநேரமே அந்தப்போர் நடைபெற்றது. கோட்டை கர்னல் சேமர்ஸின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர் மேஜர் ஹாமில்டரின் தலைமையில் ஐரோப்பியப் படைகளை ஒரு பிரிவாக ஆக்கி அவர்களிடம் பீரங்கிகளின் பொறுப்பை ஒப்படைத்தார். மறவர் படையையும் உள்ளூர் படையையும் இரண்டு பிரிவுகளாக்கி அவர்களை முன்னால் நிறுத்தினார்.

முதல் ஒருமணி நேரத்திலேயே எழுநூறு நாயர்கள் கொல்லப்பட்டார்கள். அனைவரும் சிதறி ஓடினர். அவர்களை நகர் முழுக்கத் தேடித்தேடி பிடித்தனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது குற்றம் என்று அறிவிக்கப்பட்டமையால் நகரமே மூடிவிட்டது. நாயர்படைகள் கொல்லத்தில் பரிதவித்து அங்குமிங்கும் ஓடினர். அச்சத்தில் அவர்கள் உதிரிகளின் கும்பல்களாக மாறினர்.

அவர்கள் படகுவழியாகவே எங்கும் செல்லமுடியும். படகுத்துறைகளைச் சூழ்ந்துகொண்டு பிரிட்டிஷ் படை அவர்களைச் சிறைப்பிடித்தது. மறுநாள் அவர்களைச் சிறைபிடித்து அளிப்பவர்களுக்கு பத்துசக்கரம் பரிசு என அறிவித்தபோது ஊர்க்காரர்களும் படகுக்காரர்களும் வேட்டைக்கு இறங்கினர்.

ஊர்க்காவலர்களால் ஆங்காங்கே அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டனர். நகர்முழுக்க சடலங்கள் பரவிக்கிடந்தன. மூவாயிரம்பேருக்கு மேல் நகரில் கொல்லப்பட்டனர். நாலாயிரம் பேர் கைதுசெய்து இழுத்துவரப்பட்டு கோர்ட்மார்ஷியல் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். ஒருநாளுக்கு ஐநூறுபேர் வீதம் பன்னிருநாட்கள் தொடர்ந்து தூக்கு நடைபெற்றது. எஞ்சியவர்களில் நாலாயிரம் பேர் உடனே கப்பலில் ஏற்றப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.

பாலக்காடு வழியாக கர்னல் பிக்டன் தலைமையில் வந்த இரண்டாவது படை எஞ்சியவர்களை வேட்டையாடியது. மலபாரிலிருந்து கர்னல் குப்பேஜ் தலைமையில் வந்த படை கொச்சியை கைப்பற்றி கொல்லம் நோக்கி வந்தது. லெஃப்டினண்ட் கர்னல் மக்லியோட் தலைமையில் ஆலப்புழை கடலோரமும் காயலோரமும் முழுமையாகவே சூழப்பட்டன.

வேலுத்தம்பி தெற்கே தப்பியோடினார். அவருடைய தாய்நிலமான தெற்கு திருவிதாங்கூரில் முன்பு காப்டன் பெனெடிக்ட் டி லென்னாய் கட்டிய வலுவான கோட்டைகள் இருந்தன. ஆரல்வாய்மொழிக் கோட்டை, வட்டக்கோட்டை, உதயகிரிக்கோட்டை, பதம்நாபபுரம் கோட்டை, மருந்துக்கோட்டை போன்றவற்றை தளமாக ஆக்கிக்கொண்டால்  நிலைகொள்ள முடியும் என்று நம்பினார்.

அதோடு தன்னுடைய உறவினர்களான நாயர் குடும்பத்தவர் உதவி செய்வார்கள் என்று எதிர்பார்த்தார். ஆளூர், புளியறை, கேரளபுரம், திருவிதாங்கோடு, மங்கலம், பாறசாலை, நெய்யாற்றின்கரை போன்ற ஊர்களிலிருந்த நாயர் மாடம்பிகளுக்கெல்லாம் ஓலையுடன் அவருடைய தூதர்கள் சென்றார்கள்.

ஆனால் அவர்கள் அனைவருமே வேலுத்தம்பியால் பாதிக்கப்பட்டவர்கள். 1804-ல் நடந்த நாயர் கலவரத்தின்போது கர்னல் மக்காலேயின் துணையுடன் வேலுத்தம்பியால் கொடூரமாக ஒடுக்கப்பட்டவர்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும் வேலுத்தம்பி நடந்தவற்றை மறந்துவிடும்படியும் நாட்டுக்காக தன்னுடன் நிலைகொள்ளும்படியும் மன்றாடினார்.

ஆனால் அவர்கள் அவர் மேல் மேலும் வஞ்சம் கொண்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும்  வேலுத்தம்பியால் யானைகளை கொண்டு இரண்டாகப் பிளக்கப்பட்ட மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை எழுந்து வந்தார். கேரளபுரம் வலிய சாஸ்தா நாயர் வேலுத்தம்பிக்கு ஓர் ஓலையை அனுப்பினார் “மாவிங்கல் கிருஷ்ணபிள்ளைக்கு உன் நெஞ்சிலிருந்து எடுத்த ரத்தத்தை கலந்த பச்சரிசிச்சோறை உருட்டி வைத்து பலிகொடுக்கவேண்டும் வேலாயுதா. அதற்காகத்தான் நான் காத்திருக்கிறேன்.”

அவர்கள் அனைவரும் வேலுத்தம்பியை கைவிட்டனர். பாளையங்கோட்டையில் இருந்து மெட்ராஸ் ரெஜிமெண்டை சேர்ந்த பிரிட்டிஷ் ராணுவம் கர்னல் லேகரின் தலைமையில் கிளம்பி ஆரல்வாய்மொழியை அணுகியபோது எந்த எதிர்ப்பும் இல்லாமல் திருவிதாங்கூரின் கோட்டைகளை அவர்களுக்காக திறந்திட்டனர்.

கர்னல் லேகர் நாகர்கோயில் வந்து ஆளூர் வழியாக பத்மநாபபுரத்தை அடைந்தார். அரண்மனையில் இருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு திருவனந்தபுரத்தை நோக்கிச் சென்றார். ஆரல்வாய்மொழி வீழ்ந்ததுமே புலியூர்க்குறிச்சியில் உதயகிரிக் கோட்டையில் தங்கியிருந்த வேலுத்தம்பி தன் படைவீரர்களுடன் திருவனந்தபுரம் நோக்கிச் சென்றார்.

திருவனந்தபுரத்தில் மகாராஜாவை சென்று சந்தித்து விடைபெற்றார் வேலுத்தம்பி. இருகைகளையும் தலைக்குமேல் கூப்பி, “நான் எல்லாவற்றையும் திருவிதாங்கூரின் நலனுக்காகவே செய்தேன். ஏதாவது பிழை நடந்திருந்தால் நானே பொறுப்பு. ஆங்கிலேயர் வந்து விசாரித்தால் என்னை பொறுப்பாக்கி விடுங்கள். எனக்கு தண்டனை அறிவியுங்கள். உங்கள் மாண்புக்கு பங்கம் வரவேண்டாம்” என்று அரசரிடம் சொன்னார். அரசரின் முன் வாள்தாழ்த்தி வணங்கி விடைபெற்றார்.

அவர் சென்ற மறுநாள் கர்னல் லேகரின் படை திருவனந்தபுரத்தை வந்தடைந்தது. வழியில் எந்த எதிர்ப்பையும் அவர்கள் சந்திக்கவில்லை. “நனைந்த மணல்மேடுகள் போலிருந்தன கோட்டைகள். கன்னம் சிவந்த மணப்பெண் போல வரவேற்றனர் நாயர் படைத்தலைவர்கள்” என்று லேகர் தன் அறிக்கையில் எழுதினார்.

பாலராம வர்மா மகாராஜா சரண் அடைந்தார். வேலுத்தம்பி தளவாய் பதவிநீக்கம் செய்யப்பட்டார். உம்மிணித்தம்பி என்று அழைக்கப்பட்ட மார்த்தாண்டன் இரவி புதிய திவானாக பொறுப்பேற்றார். அவர் வேலுத்தம்பி தளவாய் உரியமுறையில் தண்டிக்கப்படுவார் என்று கர்னல் லோகருக்கு வாக்குறுதி அளித்தார்.

வேலுத்தம்பி தளவாய் திருவனந்தபுரத்தில் இருந்து தப்பி கொல்லம் செல்லும் வழியில் பிரிட்டிஷ் படைகள் இருப்பதைக் கண்டு வழி திரும்பினார். குன்னத்தூர் பகுதியில் வள்ளிக்கோடு என்னும் இடத்திற்கு அருகே இருந்த காட்டுக்குள் சென்று ஒளிந்துகொண்டார். பிரிட்டிஷ் படை அங்கும் வருவதைக் கண்டு அங்கிருந்து மண்ணடி என்னும் ஊருக்குச் சென்றார். அங்குதான் அவருடைய இறுதி நிகழ்ந்தது.பாலியத்து அச்சன் சிறைப்பிடிக்கப்பட்டு மெட்ராஸுக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

நான் தோந்நியில் இட்டூப்பிடம் கேட்டேன். “இந்தக் கலவரத்தை தடுத்திருக்க முடியுமா? வேலுத்தம்பி தளவாய் சொல்வதில் நியாயம் உண்டு அல்லவா?”

”எனக்கு எந்த நியாயமும் தெரியாது. நான் எளிமையான வியாபாரி. எனக்கு அரசியல் எதற்கு?” என்று  தோந்நியில் இட்டூப்புசொன்னார்“

நான் பின்னர் அவரிடம் ஏதும் பேசவில்லை. அவரும் நானும்தான் எச்.எம்.எஸ்.ப்ளூலோட்டஸ் என்ற கப்பலில் கல்கத்தா சென்றோம். கல்கத்தா சென்றபின் விடைபெறும்போது அவர் என்ன தொழில் செய்கிறார் என்று கேட்டேன். அவர் பீரங்கி, துப்பாக்கி ஆகியவற்றுக்கான வெடிமருந்துகளை கல்கத்தாவிலிருந்து வாங்கி கொண்டுசென்று திருவிதாங்கூரிலும் கொச்சியிலும் கொல்லத்திலும் கோழிக்கோட்டிலும் விற்பனைசெய்துவந்தார்.

 

[ 3 ]

 

கர்னல் சேமர்ஸ் நான் நினைத்ததுபோல உயரமாக பருமனாக இருக்கவில்லை. மெலிந்த நீண்ட உடல்கொண்ட மனிதர். பச்சைக்கண்கள், சிவப்பான குட்டைத்தலைமயிர். சிறிய உதடுகளுக்குச் சுற்றிலும் சுருக்கங்கள். சந்தேகமும் விலக்கமும் கொண்ட பார்வை.

நான் கைநீட்டி “நான் டாக்டர் அலெக் பெய்ன்ஸ்” என்றேன்.

“உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று அவர் சொன்னார், மகிழ்ச்சியே அற்ற குரலில். மெலிந்த விரல்களைக் கோத்து முகவாயின்கீழ் வைத்தபடி “கர்னல் மெக்காலே உங்களை எதன்பொருட்டு அனுப்பினார் என்று தெரிந்துகொள்ளலாமா?” என்றார்.

“நான் தலைக்குளத்து பத்மநாபன் தம்பியைச் சந்திக்கவேண்டும்” என்றேன்.

அவர் முகம் மாறியது. “உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.”

“ஆமாம் தெரியும்” என்றேன். “நான் நேற்று காலைதான் கொச்சிக்கு வந்தேன். செய்தி கேட்டதுமே படகில் ஏறிவிட்டேன்.”

“அதை எவரும் மாற்றமுடியாது… அது டிரிப்யூனலின் தீர்ப்பு”

“கர்னல் சேமர்ஸ், நான் கவர்னரிடம் பேசமுடியும். லார்ட் ஜார்ஜ் பர்லோ எனக்குத் தெரிந்தவர்தான். அவர் பெங்காலில் பணியாற்றியபோது அவர் மனைவி லேடி எலிசபெத் பர்ட்டன் ஸ்மித் அவர்களுக்கு சிகிச்சை அளித்திருக்கிறேன்.”

கர்னல் சேமர்ஸ் சலிப்புற்றவர் போல தோன்றினார். “டாக்டர் பெயின்ஸ், இதை நீங்கள் ஏன் செய்யவேண்டும்?”

“நான் இதேபோன்ற ஒன்றை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செய்ய முயன்றேன்… மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை என்பவருக்காக. அன்று அது கைகூடவில்லை. எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை, அவரை எனக்கு தெரியும். இன்றும் அதேதான், பத்மநாபன் தம்பியை எனக்குத் தெரியும்”

“எந்த அளவுக்கு தெரியும்?” என்று கர்னல் சேமர்ஸ் கேட்டார். “அவர் பிரிட்டிஷாருக்கு எதிராக கலகம் செய்த வேலுத்தம்பி தளவாயின் தம்பி… பலநூறு பிரிட்டிஷார் சாவுக்கு காரணமாக அமைந்தவர்.”

“ஆமாம், அதுபோர். அவர் கொலை கொள்ளை எதிலும் நேரடியாக ஈடுபடவில்லை. அவருடைய தமையனுக்குக் கட்டுப்பட்டவர். அவர் கொலைகாரர் அல்ல, கலகக்காரரும் அல்ல.”

“அவர்மீதான குற்றச்சாட்டுக்கள் என்ன என்று தெரியுமா?”

“கலகம் செய்தார்கள் என்று தெரியும்.”

“அது போர்க்குற்றம். அதற்கு அப்பால் ஒரு தனிப்பட்ட குற்றச்சாட்டு உண்டு. சென்ற 1808 டிசம்பர் 20 ஆம் தேதி கொச்சிக்கு சர்ஜன் ஹ்யூம் என்னும் ராணுவ மருத்துவரும் அவர் மனைவியும் வந்து சேர்ந்தனர். கொச்சியிலிருந்து கொல்லத்திற்கு வந்துகொண்டிருந்த பன்னிரண்டாம் ரெஜிமெண்டின் காப்டன் ஜோ மக்கின்ஸியும், சார்ஜண்ட் ஜான் வார்னரும் 12 பிரிட்டிஷ் படையினரும் 34 பிரிட்டிஷ் இந்தியப் படைவீரர்களும் அப்போது கொல்லத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். சர்ஜன் ஹ்யூமும் மனைவியும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் படகுகளில் கொல்லம் நோக்கி வந்தனர்”

“ஆலப்புழை அருகே புறக்காட்டு கடற்கரையை அவர்கள் அடைந்தபோது படகுத்துறையிலேயே வேலுத்தம்பியின் படை அவர்களை வளைத்துக் கொண்டது. அவர்களை இழுத்துச் சென்று சிறைவைத்தனர். அவர்களை என்ன செய்வது என்று வேலுத்தம்பியிடம் கேட்டனர். அவர் அவர்களை கொன்று விடும்படி ஆணையிட்டார்.அதற்கு ஆதாரம் இருக்கிறது”

“புறக்காட்டு கடற்கரையிலேயே சர்ஜன் ஹ்யூமும், ஜோ மக்கின்ஸியும் ,வார்னரும் கொல்லப்பட்டார்கள். மற்ற அனைவரையும் இழுத்துச் சென்று ஆலப்புழையின் அருகே பள்ளாத்துருத்தி ஆற்றில் கைகால்களை கட்டி நீரில் முக்கி கொலைசெய்தனர்” என்று சேமர்ஸ் சொன்னார். “அது போர் என்றால்கூட அவர்கள் போர்க்கைதிகள்”

இடைமறித்து “கர்னல், ஆனால் அவர்கள் திருமதி ஹ்யூமை விடுவித்தனர், திருமதி ஹ்யூமை நான் சந்தித்தேன்… நான் இங்கே வருவதற்கே அவர்தான் காரணம்” என்றேன்.

“ஆமாம், அவர்கள் திருமதி ஹ்யூமை விடுவித்தனர்… ஏனென்றால் இங்கே பெண்களைக் கொல்வது பாவம் என்று கருதப்படுகிறது… மற்ற அனைவரையும் கொல்ல ஆணையிட்டவர் பத்மநாபன் தம்பி” என்றார் கர்னல் சேமர்ஸ்.

“இல்லை, திருமதி ஹ்யூம் என்னிடம் சொன்னார். அவர்களின் படகு கைப்பற்றப்பட்டதுமே அத்தனை பேரையும் கொல்லவேண்டும் என்று நாயர்படை துடித்தது. அவர்கள் பெண்களைக் கொல்ல தயங்குபவர் அல்ல. வேலுத்தம்பி தளவாய் களக்காட்டில் நடத்திய பெண்கொலை அனைவருக்கும் தெரியும். அவர்களை தடுத்தவர் பத்மநாபன் தம்பி. வேலுத்தம்பிக்கு நெருக்கமானவரான வைக்கம் பத்மநாப பிள்ளைதான் கொலை செய்யவேண்டும் என்று துடித்தவர். அந்த செயலை தாமதப்படுத்தவேண்டும் என்றுதான் பத்மநாபன் தம்பி தன் அண்ணனிடம் கேட்டுச் செய்யலாம் என்று சொன்னார். அப்படித்தான் வேலுத்தம்பிக்கு செய்தி சென்றது. அவர் கொல்லலாம் என்று ஆணையிட்டார்”

“அந்தக் குழுவின் தலைவர் பத்மநாபன் தம்பி” என்றார் கர்னல் சேமர்ஸ்.

“ஆமாம், ஆனால் அவர் பொறுப்பல்ல. அவர் மீண்டும் தாமதிக்க முயன்றார். ஒருகட்டத்தில் அவர்களை தப்புவிக்கக்கூட முயன்றார். வைக்கம் பத்மநாபபிள்ளை திருமதி ஹ்யூமையும் கொல்லத்தான் நினைத்தார். அவர் உயிரை மன்றாடி மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தவர் பத்மநாபன் தம்பி. அவர் வாயாலேயே சாட்சி சொல்ல வைக்கமுடியும்”

“ஆனால் இப்போது நேரமில்லை… இன்னும் சற்றுநேரத்தில் தூக்கு நிறைவேறிவிடும்.”

“நான் அவரை பார்க்கவேண்டும்…நான் அவரிடம் பேசவேண்டும்.”

“அதனால் பயனில்லை.”

“நான் பேசவேண்டும்… என்னிடம் கர்னல் மெக்காலேயின் ஆணை இருக்கிறது.”

“ஏற்பாடு செய்கிறேன்” அவர் மணியை அடித்தார். சார்ஜன்ட் கோர்டான் வந்து நின்றான். “சார்ஜண்ட் இவரை பத்மநாபன் தம்பியை பார்க்க அழைத்துச்செல்…”

சார்ஜெண்ட் தன்னை அறிமுகம் செய்துகொள்ளாமல் செல்வோம் என்று தலையசைத்தான்.நான் எழப்போனேன்

கர்னல் சேமர்ஸ் சட்டென்று கசப்புடன் மெல்லிய ஒலியில் சிரித்தார் “டாக்டர் பெயின்ஸ், இந்த மொத்த நிகழ்ச்சியும் அர்த்தமே இல்லாத அபத்தம். அவர்கள் விட்டில்கள் போல செத்தார்கள், சாகிறார்கள். எந்த அர்த்தமும் இல்லை. வெறும் கேலிக்கூத்து. இந்த அபத்தத்தில் நீங்களும் ஏன் திளைக்கவேண்டும்?” என்றார்.

நான் திகைப்புடன் பார்த்தேன்.

“இங்கே நடந்தது போரே அல்ல…. ஆறுமணிநேரம் போர் நடந்தது என்று பதிவுசெய்திருக்கிறோம். அது எங்கள் போர்ச்செலவுக்காக நாங்கள் காட்டும் கணக்கு. போர் நடந்தது வெறும் நாற்பது நிமிடங்கள். பீரங்கிகள் முழங்கியதுமே கூட்டம் கூட்டமாகச் செத்து உதிர்ந்தார்கள். பீரங்கிக் குண்டுகளை தரையிலிருந்து மூன்றடி உயரத்தில் கிடைமட்டமாகச் சுட்டோம். ஒவ்வொரு குண்டும் நூறுபேரை நசுக்கிக்கொண்டு சென்றது. அவர்கள் மண்ணில் படுத்திருந்தால் தப்பியிருக்கலாம். ஆனால் யார் சொல்வது? ஆணையிடவே எவருமில்லை.”

“நம் தரப்பில் காயம்பட்டவர்கள் பதினேழுபேர். உயிரிழப்பு நான்கு பேர் மட்டும்…  நிதியுதவிக்காக எங்கள் தரப்புச் சாவுகளை கொஞ்சம் கூட்டி கணக்கு காட்டியிருக்கிறோம். அவர்களின் சாவு என்பது தோராயமான கணக்குதான், எழுநூறு. எவர் அடக்கம்செய்ய குழி தோண்டுவது? ஆயிரம்பேரையாவது இழுத்துச்சென்று காயலில் வீசியிருப்போம்….”என்றார் கர்னல் சேமர்ஸ் “என்ன இது என்று சலித்துவிட்டேன். போர் ஆறு மணிநேரம் ஏன் நடந்தது தெரியுமா? பின்னால் வந்தவர்களுக்கு முன்னால் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் வந்துகொண்டே இருந்தார்கள். வந்து செத்துக்குவிந்தார்கள், அவர்களுக்கே தெரியாத ஏதோ மர்மமான சக்தியால் ஆட்டுவிக்கப்பட்டவர்கள்போல…”

“ஓ” என்றேன். எனக்கு படபடப்பாக இருந்தது.

“வெறும் படுகொலை… எறும்புகள்மேல் வெந்நீர் விடுவதுபோல” என்றார் கர்னல் சேமர்ஸ். “நினைத்தால் குமட்டல் வருகிறது. ஆனாலும் செய்து கொண்டிருக்கிறேன்… ஏனென்றால் இன்னொரு கலகத்தை நாம் விரும்பவில்லை. இவர்களின் தலைமுறைநினைவுகளில் இதன் விளைவு ஆழமாக பதியவேண்டும்.”

“நல்லது” என்றேன் பெருமூச்சுடன் “நான் வருகிறேன்.”

ஆனால் கர்னல் சேமர்ஸ் நிலைகுலைந்த நிலையில் இருந்தார். உரக்க “டாக்டர் பெயின்ஸ், நீங்கள் வாசிப்பவர் என நினைக்கிறேன். இதெல்லாம் என்ன? ஏன் இதைச் செய்கிறார்கள்?”

“யார்?”

“இந்த வேலுத்தம்பி தளவாய்… இவரைப் போன்றவர்கள்.”

“அவர்களுக்கான நியாயங்கள் இருக்கின்றன” என்றேன்.

“ஆமாம், நான் குண்டறை விளம்பரத்தை வாசித்தேன். கண்டிப்பாக அவர்களுக்கான நியாயங்கள் உள்ளன. அவர்கள் போராடுவது இயல்பானது, அதுதான் தேசபக்தி, அதுவே ஆண்மை. ஆனால் ஏன் இப்படி எந்தத் தயாரிப்பும் இல்லாமல் மக்களை பலிகொடுக்கிறார்கள்? அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு வெறிகொள்ளச் செய்து சாவுக்களத்திற்கு அனுப்புகிறார்கள்? இவர்களுக்கு இந்த மக்களைப்பற்றி கவலையே இல்லையா”

“அந்த மக்களுக்காகத்தான் அவர்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள்.”

“அப்படியென்றால் ஏன் இதைச் செய்கிறார்கள்? உண்மையில் இந்த மக்களை அவர்கள் தங்களைச் சுற்றி கேடயமாக வைத்துக் கொள்கிறார்கள். அவர்களை வைத்து பகடையாடுகிறார்கள். மக்களை இவர்கள் பணயக்கைதிகளாக வைத்துக்கொள்கிறார்கள்… ” கர்னல் சேமர்ஸ் சொன்னார்.

“அவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொண்டவர்கள் அம்மக்கள். அவர்களின் ஆணையை ஏற்றுக்கொள்கிறார்கள்” என்றேன்.

“ஆம், ஏன்? அறிவில்லாத கும்பல் அறிவில்லாதவர்களையே தலைவர்களாக ஏற்கிறதா? உணர்ச்சிவெறி கொண்ட கூட்டம் உணர்ச்சியை தூண்டுபவனைத்தான் தலைவன் என்று ஏற்குமா? இவர்களின் மனதிலுள்ள வன்முறைதான் ஒரு வன்முறையாளனை வீரவழிபாடு செய்ய தூண்டுகிறதா?”

“கர்னல், நாம் இவர்கள்மேல் தீர்ப்பு சொல்லக்கூடாது”என்றேன்.

“ஆமாம், அவர்களுக்கான நியாயங்கள் இருக்கலாம். நாம் அன்னியர்கள்” என்றார் கர்னல் சேமர்ஸ் “குண்டறை விளம்பரத்தில் சொல்லப்பட்ட எல்லாமே உண்மை. அதன்பொருட்டு போராடியே ஆகவேண்டும். போராடாவிட்டால் அது கோழைத்தனம், சுயநலம். ஆனால்…” அவர் தலையை குலுக்கி “ஆனால் இது பைத்தியக்காரத்தனம். விட்டில்கள் போல…” என்றார்.

“அவர்களின் தலைவர்களுக்கு அரசியல் சூழ்நிலை தெரியவில்லை… அவர்கள் நவீன உலகை புரிந்து கொள்ளவில்லை” என்றேன்.

“ஆம், அது ஓரளவு உண்மை. வேலுத்தம்பியை போன்றவர்கள் மிகச்சிறிய உலகில் வாழ்கிறார்கள். உலக அரசியல் அவர்களுக்கு தெரியாது. அவர்கள் எறும்புகளைப் போல, எறும்பளவுக்கே இருப்பவையே அவர்களின் கண்ணுக்குப் படுகின்றன. உலக அரசியல் சற்றேனும் தெரிந்திருந்தால் உருவாகிவரும் பிரிட்டிஷ்ப் பேரரசுக்கு எதிராக இந்தச் சிறிய நிலத்தில் இந்தச் சிறிய படையுடன் ஆயுதங்கள் இல்லாமல், பயிற்சி இல்லாமல் போராடமுடியாது என்று அறிந்திருப்பார்கள்” என்று கர்னல் சேமர்ஸ் சொன்னார்.

“சற்றேனும் வரலாற்றுப் புரிதல் இருந்தால் எங்கள் எதிரிகளுடன் சேர்ந்துகொண்டிருப்பார்கள். அதைவிட தங்கள் நட்புசக்திகளை பகைத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். முடிந்தவரை ஒருங்கு திரண்டிருப்பார்கள்… இப்படி தனிக்குழுவாக, தனிநபர் வீரத்தை நம்பி செயல்பட்டிருக்க மாட்டார்கள். இது கூட்டுத்தற்கொலை அன்றி வேறல்ல.அதை வீரம் என்று நினைத்துக்கொள்கிறார்கள்”

“ஆமாம்” என்றேன். நான் அங்கிருந்து செல்லவிரும்பினேன். என் தலையில் நரம்புகள் வலியுடன் துடித்தன.

“இதில் தாளவே முடியாத ஓர் அபத்தம் உள்ளது. இது ஏன் தாளமுடியாதது என்றால் உலகமெங்கும் இதுதான் நடைபெறுகிறது. உலகமெங்கும்… ஆப்ரிக்காவில் அரேபியாவில் ஆஸ்திரேலியாவில் கிழக்காசியாவில் எங்கும்… இதேபோல கண்மூடித்தனமான கூட்டம். இதேபோல தன்முனைப்பு கொண்ட, உலக அறிவில்லாத தலைமை. வீரவழிபாடு, கூட்டுத்தற்கொலை… இதேதான்… நூற்றுக்கணக்கான முறை…” என்றார் கர்னல் சேமர்ஸ்.

நான் அந்தப்பேச்சையே விரும்பவில்லை. எனக்கு மூச்சுத்திணறியது.

கர்னல் சேமர்ஸ் கையைவீசி தலையை அசைத்தார் “நான் ஜெனரல் ராபர்ட் கன்னிங்ஹாமிடம் இதைப்பற்றி ஒருமுறை கேட்டேன். நதிகளில் நீர் பெருகும்போது கனமான கலங்கல்நீர் கீழே செல்கிறது. அதைப்போலத்தான் இது என்றார். நாம் புதியகாலகட்டத்தவர்கள், அவர்கள் பழைய காலகட்டத்தவர்கள். அவர்கள் ஓர் அலையாக வந்து நம்மிடம் தோற்று கீழே சென்றே ஆகவேண்டும், அது இயற்கையின் விதி என்றார்.”

“அப்படியென்றால் தலைவர்களை ஏன் குறைசொல்லவேண்டும்?” என்றேன்.

“உண்மை… ஆனால் இவர்கள் தலைவர்கள். இத்தனை ஆயிரம் பேரின் உயிருக்கு பொறுப்பேற்றுக் கொண்டவர்கள்… இவர்கள் இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். இன்னும் கொஞ்சம் பார்வையை விரித்துக் கொள்ளலாம்” என்றார் கர்னல் சேமர்ஸ் “மிகச்சிறிய மனிதர்களாக இருக்கிறார்கள். மிகமிகச்சிறிய உள்ளம். எறும்புகள்போல என்றேனே. இன்னொரு எறும்பு மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது. இந்த ஒவ்வொரு உள்ளூர் தலைவனுக்கும் அவனுக்கு சமானமான சிலரே எதிரிகள். அவர்களிடம் போரிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்… “

“இந்த வேலுத்தம்பியையே எடுத்துக்கொள். இவர்மட்டும் இவருடைய நண்பர் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையை கொல்லாமல் இருந்திருந்தால் இவரை தெற்குத் திருவிதாங்கூரில் எளிதில் வென்றிருக்கமுடியாது. மாவிங்கல் கிருஷ்ணபிள்ளைக்கு வேளிமலை உள்ளங்கை போல. அவருடன் இவரும் சேர்ந்து மலைமேல் ஏறி அப்பால் காட்டுக்குள் சென்றிருந்தால் ஐம்பதாண்டுகள் போரிட்டிருக்கலாம்….”

நான் பெருமூச்சுவிட்டேன்.

“நீங்கள் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையை அறிந்தவர் அல்லவா?”

“ஆமாம்” என்றேன்.

“பாவம்… கொடூரமாக கொல்லப்பட்டார்” என்றார் கர்னல் சேமர்ஸ் “ராஜா கேசவதாஸின் பெயரைச் சொல்லிக்கொண்டே இருந்தார் வேலுத்தம்பி தளவாய். ஆனால் ராஜா கேசவதாசனின் சகோதரியின் கணவராகிய பாறசாலை பத்மநாபன் செண்பகராமனை அவர் தன் இடத்தைக் கைப்பற்ற நினைப்பவராக சந்தேகப்பட்டார்.பாறசாலை பத்மநாபன் செண்பகராமன் தற்காலிகமாக திவானாக நியமிக்கப்பட்டபோது அவருக்கு எதிராகச் சதி செய்தார்”.

“இல்லை, பாறசாலை பத்மநாபன் செண்பகராமன்தான் தனக்கு எதிராக வேலுத்தம்பி வந்துவிடுவார் என்று நினைத்தார். அவரை அழிக்க சதிசெய்தார். 1904ல் வேலுத்தம்பிக்கு எதிரான திருவிதாங்கூர் நாயர் கிளர்ச்சியே பாறசாலை பத்மநாபன் செண்பகராமன் ஒருங்கிணைத்ததுதான். அதில்தான் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையும் சேர்ந்துகொண்டார்”

“சரி,  ராஜா கேசவதாசின் மருமகன்கள் இரயிம்மன் தம்பியும் செம்பகராமன் குமாரனும் எப்படி கொல்லப்பட்டார்கள்? அதற்குப்பின் வேலுத்தம்பியின் கை இல்லையா என்ன?”

“உறுதியாக இல்லை. அது சம்பிரதி குஞ்ஞுநீலன் பிள்ளையின் சதி. அவர்களைக் கொன்றவர் வேலுத்தம்பி என்றால் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை வேலுத்தம்பியுடன் நின்றிருக்கமாட்டார்”

“இதை நாம் பேசி முடிக்கவே முடியாது. இவர்கள் எவர் எவரை ஏன் கொல்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. இவர்களின் உலகம் மிகமிகச் சிறியது” என்றார் சேமர்ஸ் .”இதோ வேலுத்தம்பியை வெல்ல எல்லா உதவியையும் செய்தபின் அவருடைய வம்சத்தையே முற்றாக அழிக்க வெறிகொண்டு செயல்பட்டுக் கொண்டிருப்பவர் இப்போதைய திவான் உம்மிணித் தம்பி. அவர் வேலுத்தம்பியுடன் ஒரு காலத்தில் இருந்தவர். இவர்கள் அனைவருமே ஒரே வார்ப்புதான். இவர்கள் சந்தேகப்படுவதும் அஞ்சுவதும் சகோதரர்களைத்தான். இவர்கள் அனைவர் கையிலும் சகோதரக்கொலையின் பாவரத்தம்.”

“உடனிருந்த தோழர்களைக் கொன்று கொன்று காலப்போக்கில் மனப்பிறழ்வு கொண்டவர்களாக ஆகிவிடுகிறார்கள். எவர்வேண்டுமென்றாலும் தன்னை கொல்லக்கூடும் என்று சந்தேகப்படுகிறார்கள். ஆகவே கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் கொல்கிறார்கள். மேலும் மேலும் கொலை” என்றார் கர்னல் சேமர்ஸ் “ஆகவே அவர்களைச் சுற்றி திறமையான எவருமே இல்லாத நிலை உருவாகிறது. வெறும் துதிபாடிகளும் சேவகர்களும் நிறைகிறார்கள். ஒருதலைவனின் அறிவு என்பது கூட்டான அறிவாகவே இருக்கமுடியும். அதை இழப்பவன் எத்தனை மாமனிதன் என்றாலும் போதுமான அறிவுடையவன் அல்ல”.

“மிகச்சிறியவர்கள்… ஆம், தனிப்பட்ட பண்புகளில் அவர்கள் நம்மைவிட மேலானவர்கள். நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் தாங்களே வெட்டிக்கொண்ட குழிகளுக்குள் நிற்கிறார்கள். நாம் குன்றின்மேல் நிற்கிறோம். நம்முடைய கல்வியால், பிரிட்டிஷ் அரசு நமக்கு அளிக்கும் உலகப்பார்வையால். நாம் இவர்களை எறும்புகளைப் பார்ப்பதுபோல குனிந்து பார்க்கிறோம். சிலசமயம் பரிதாபப்படுகிறோம். நம் காலைக் கடிக்கும்போதும் பூட்ஸால் ஒரே நசுக்காக நசுக்கிவிடுகிறோம்.”

அத்தனை சொற்களின் எடையை என்னால் தாளமுடியவில்லை. என் தலை ஈயக்குண்டுபோல ஆகிவிட்டது. “நான் போகலாமா?” என்றேன்.

“போகலாம்….” என்றார் கர்னல் சேமர்ஸ் அவர் தளர்ந்து இயல்பு நிலையை அடைந்து மீண்டும் தன் மேஜைக்குப் பின்னால் சென்று அமர்ந்தார். ஒரு தந்தப்பெட்டியில் இருந்து சுருட்டை எடுத்து நடுங்கும் கைகளால் பற்றவைத்துக்கொண்டார்.

“அத்தனைக்கும் அப்பால் ஒன்று இருக்கிறது டாக்டர் பெயின்ஸ்” என்றார் கர்னல் சேமர்ஸ் “இவர்களின் தன்முனைப்பு. தாங்கள் சரித்திர புருஷர்கள் என்னும் மிதப்பு. அப்படி நினைக்க ஆரம்பிக்கும் எவரும் அதன்பின் மனிதர்களாக இருப்பதில்லை. தெய்வங்களாக தங்களை நினைக்கிறார்கள். மனிதர்கள் கூட்டத்தோடு அழிக்க தெய்வங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை”

நான் “ஆமாம்” என்றேன்.

“அவ்வாறு சரித்திர புருஷர்களாக அவர்களை உணரச்செய்வது அந்தச் சமூகத்தில் இருக்கும் வீரவழிபாடு. வீரவழிபாடு சென்ற யுகத்திற்குரியது. பழங்குடிகளின் மனநிலை அது. பிரிட்டிஷாருக்கு விஸ்கௌண்ட் நெல்சனுக்கு பின் எவர் மீதும் வீரவழிபாடு இல்லை. நம்மில் வீரம் உண்டு, வீரர்கள் உண்டு, ஆனால் நமக்கு இன்று வீரம் என்பது கடமைதான். நம் வீரர்கள் எல்லாருமே கடமைவீரர்களே ஒழிய மானுடதெய்வங்கள் அல்ல. எந்த வீரரும் பிரிட்டிஷ் சட்டத்துக்கும் நெறிக்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல”

அவர் என்னை நோக்கி புன்னகைத்தார். சுருட்டுடன் கை நடுங்க “ஆம், ஆகவே நாம் வெல்கிறோம். ஆகவே இவர்களை கூண்டோடு அழிக்க உரிமை கொண்டிருக்கிறோம். சரிதானே?”

அதிலிருந்த தற்கசப்பு எனக்கு புதிதல்ல, பெரும்பாலான பிரிட்டிஷ் படைத்தலைவர்களின் இயல்பு அது. படித்தவர்கள் படைத்தலைவர்களாக ஆகும்போது ஏற்படும் விளைவு. அவர்கள் மிகச்சிறந்த வியூக வகுப்பாளர்கள், மிகமிகச் சிறந்த பேச்சுவார்த்தை நிபுணர்கள். ஆனால் மூர்க்கமில்லாத படைவீரன் கசந்துவிடுகிறான். சேமர்ஸ் ஆக்ஸ்ஃபோர்ட் மாணவர்.

நான் என் கோட்டை இழுத்து சீரமைத்து பெருமூச்சு விட்டேன். “கர்னல்” என்றேன் “ஆனால் அத்தனைக்குப்பிறகும் மக்கள் கொண்டாடும் சரித்திர புருஷர்கள் அவர்கள்தான்” என்றேன்.

சேமர்ஸ் உணர்ச்சியற்ற நீலக்கண்களால் என்னை பார்த்தார்.

“நாம் மீண்டும் பார்ப்போம்” என்றேன்.

சேமர்ஸ் ஒன்றும் சொல்லாமல் தலையை குனிந்தபடி சுருட்டுப்புகையை ஊதி விட்டுக்கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

நான் தலைவணங்கி வெளியேறினேன்.

 

[ 4 ]

 

நான் விரிந்த கூடம் ஒன்றில் அமரச்செய்யப்பட்டிருந்தேன். உயரமான நாற்காலி கால்களுக்கு வசதியாக இருந்தது. என் முன் ஒரு குறுகிய மேஜை, தொப்பி உடைவாள் ஆகியவற்றை வைப்பதற்குரியது. அதில் என் மருத்துவப்பெட்டியை வைத்திருந்தேன்

கதவு திறந்து பத்மநாபன் தம்பி உள்ளே வந்தார். அவருடன் வந்த சார்ஜெண்ட் அங்கே நின்றுவிட்டான். அவர் வணங்கியபடி புன்னகையுடன் அருகே வந்தார். நான் எழுந்து நின்று வணங்கினேன்.

அவர் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு “எதிர்பார்க்கவே இல்லை” என்றார்.

“நான் நேற்றுத்தான் செய்தியை கேள்விப்பட்டேன்…உடனே கிளம்பிவிட்டேன்” என்றேன்.

“இதேபோலத்தான் முன்பும் வந்தீர்கள்.”

நான் அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை. “நான் வந்தது ஒரு செய்தியுடன்” என்றேன். “நான் கொச்சியில் திருமதி ஹ்யூமைப் பார்த்தேன். அவர் உங்கள் மீதான நன்மதிப்பையும் வணக்கத்தையும் சொல்லும்படிச் சொன்னார்.”

“அவர்களுக்கு எல்லா நலன்களும் அமையட்டும்.”

“நான் அவர்களை அழைத்துக் கொண்டு கர்னல் மெக்காலேவை பார்க்கச் சென்றேன். அவரிடமிருந்து ஒரு கடிதம் பெற்றேன். அந்தக் கடிதத்துடன் இங்கே வந்திருக்கிறேன்” பெட்டியில் இருந்து அந்தக் கடிதத்தை வெளியே எடுத்தேன். “இது கர்னல் மெக்காலே அளித்த கடிதம், மெட்ராஸ் கவர்னர் ஜார்ஜ் பர்லோவுக்கு. இன்னொரு கடிதம் கர்னல் மெக்காலேயே  சொல்லி நான் எழுதியது. உங்களுக்காக”

அதை மேஜைமேல் வைத்தேன். “இதில் உங்கள் கைச்சாத்து வேண்டும்…”

“எதற்காக?”என்றார் பத்மநாபன் தம்பி.

“நீங்கள் மெட்ராஸ் கவர்னர் ஜார்ஜ் பர்லோவுக்கு எழுதும் விண்ணப்பக் கடிதம் இது. முன்பு மெட்ராஸ் கவர்னர் உங்களுக்கு வாக்களித்த பென்ஷனை பெற்றுக்கொண்டு கண்ணூர் அருகே சென்று தங்கியிருப்பீர்கள், மேற்கொண்டு திருவிதாங்கூர் அரசியலில் தலையிட மாட்டீர்கள் என்று…”

“டாக்டர் இன்றைய நாள் என்ன என்று தெரியுமா?”

“தெரியும்… நீங்கள் இந்த மனுவில் கையெழுத்திட்டுவிட்டால் மெட்ராஸ் கவர்னர் இதன்மேல் முடிவெடுப்பதுவரை உங்களை தூக்கில்போட முடியாது. இந்த கடிதத்தை கவர்னருக்கு வழிமொழிந்து முன்தேதியிட்டு கர்னல் மெக்காலே கைச்சாத்திட்டிருக்கிறார். இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது”

பத்மநாபன் தம்பி புன்னகைத்தார்.

“உங்கள் மூத்தவரே முடிவெடுத்துவிட்ட விஷயம்தான் இது… நீங்கள் தயங்க வேண்டியதில்லை” என்றேன் “திருவிதாங்கூருக்குள் நுழைவதில்லை என்பதெல்லாம்கூட ஒரு தற்காலிக ஒப்பந்தம்தான்… நாளையே நிலைமை மாறலாம்.”

பத்மநாபன் தம்பி அந்த காகிதத்தையே சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு தலைதூக்கி என்னைப்பார்த்தார்.

“டாக்டர், அண்ணனின் கடைசிநாளில் நடந்தது என்ன என்று தெரியுமா?”

“அவர் கொல்லப்பட்டார்…அவர் உடலை—”

“நான் முழுமையாகச் சொல்கிறேன்” என்று பத்மநாபன் தம்பி சொன்னார். “திருவனந்தபுரத்தில் இருந்து நாங்கள் குன்னத்தூர் சென்றோம். அங்கே பள்ளிக்கோட்டுக்கு அருகே ஒரு சிறுகாட்டுக்குள் தங்கியிருந்தோம். சமையல்புகையை எவரோ பார்த்து உளவு சொல்லிவிட்டனர். பிரிட்டிஷ் படை வருவதை எங்கள் உளவாளி கொச்சுநீலன் ஓசையெழுப்பி அறிவித்தான். நாங்கள் அங்கிருந்து புதர்கள் வழியாகவே தப்பி ஓடினோம்.”

நாங்கள் இரவுமுழுக்க புதர்கள் வழியாக ஓடி மண்ணடியைச் சென்றடைந்தோம். அங்கே மேலுக்கல் கேசவன் போற்றி என்பவருடைய பழைய வீடு ஒன்று இடிந்து முள்செடிகள் மூடி கிடந்தது. நானும் மாடன் பிள்ளை என்னும் வீரனும் அண்ணனும் மட்டும்தான். அந்த வீட்டைச்சுற்றி தோட்டம் காடாக மண்டியிருந்தது. மாடன்பிள்ளைக்கு தெரிந்தவர் கேசவன் போற்றி. நாங்கள் அந்த இடிந்த வீட்டில் குடியேறியது போற்றிக்கு தெரியாது.

எங்களுக்கு அங்கே சாப்பிட ஒன்றுமில்லை. தோட்டத்தில் நின்ற தேங்காய்களை பறித்து தின்றோம். அண்ணனின் உடலில் நகைகள் இருந்தன. அவற்றை மாடன் பிள்ளையிடம் கொடுத்து கொண்டுசென்று விற்று தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டுவரும்படி சொல்லி அனுப்பினோம்.

எப்படியாவது மாஹிக்குள் நுழைந்தால் பிரெஞ்சுக்காரர்களிடம் சென்று சேர்ந்துவிடலாம் என்று அண்ணன் நினைத்தார். பிரெஞ்சுக்காரர்களின் உதவியுடன் மீண்டும் திருவிதாங்கூரை கைப்பற்றி ஆங்கிலேயரை துரத்தலாம் என்று கனவுகண்டார். நகையை விற்ற பணம் வந்தால் படகுவழியாக மாஹிக்கு கிளம்பமுடியும் என்று நாங்கள் திட்டமிட்டோம்.

மாடன் பிள்ளை அந்த நகைகளை மண்ணடியில் இருந்த பாறமேல் நாராயணக் குறுப்பு. என்பவரிடம் விற்பதற்காகக் கொண்டு சென்றான். அவர் அவனை அங்கேயே பிடித்துவைத்துக்கொண்டு பிரிட்டிஷ் படைக்கு சொல்லியனுப்பினார். அவருக்கு அண்ணன்மேல் கடுமையான கோபம் இருந்தது. ஏனென்றால் அவர் மாவுங்கல் கிருஷ்ணபிள்ளையின் தோழரான பாறமேல் கிருஷ்ணக்குறுப்பின் தம்பி.

பிரிட்டிஷ் படை நெருங்குவதை நான் கண்டுபிடித்தேன். அவர்கள் ஓசையில்லாமல் வந்தார்கள். ஆனால் பறவைகள் ஓசையிட்டு காட்டிக்கொடுத்தன. “அண்ணா, பிரிட்டிஷார்” என்று நான் சொன்னேன். நாங்கள் அங்கிருந்து ஓடினோம். புதர்கள் வழியாக நரிகளைப்போல ஓடிக்கொண்டே இருந்தோம்.

மரங்களில் ஏறிப்பார்த்தால் நாற்புறமும் பிரிட்டிஷ் படை சூழ்ந்துவிட்டது தெரிந்தது. பாறைமேல் நாராயணக்குறுப்பும் தன் படைகளுடன் வந்திருந்தார். நாங்கள் ஓடிப்போய் மண்ணடி பகவதிகோயில் வளைப்புக்குள் புகுந்தோம். அது மிகச்சிறிய கோயில். அதைச்சூழ்ந்து மண்ணாலான உயரமான மதில் இருந்தது. ஆனால் அங்கே ஒளிந்துகொள்ளமுடியாது. பாறைமேல் நாராயணக்குறுப்பு வேட்டைநாய்களுடன் வந்தார்.

தப்பமுடியாது என்று தெரிந்தது. நான் மனமுடைந்துவிட்டேன். அண்ணா என்னிடம் “பப்பு, என்னை அவர்கள் உயிருடன் பிடிக்கக்கூடாது. என்னை அவமானப்படுத்துவார்கள். அது இந்த நாட்டை அவமானப்படுத்துவதுபோல. நான் கௌரவமாகச் சாகவிரும்புகிறேன்… என்னைக் கொல்” என்று சொன்னார்.

என் நெஞ்சு நடுங்கிவிட்டது “அண்ணா” என்று அலறினேன்.

“வேறுவழியில்லை… இதுதான் முடிவு…”

“அண்ணா நான் எப்படி அதைச் செய்வேன்!”என்றேன்.

“இது என் ஆணை” என்று அண்ணா சொன்னார்.

நான் வாளை உருவினேன் என்னால் முடியவில்லை. “இல்லை அண்ணா… என்னால் முடியாது அண்ணா”

“என்னை வெட்டு… இன்னும் சற்றுநேரத்தில் வந்துவிடுவார்கள்… நான் அந்த வெள்ளைநாய்கள் முன் அவமானப்படக்கூடாது… என் கழுத்தை வெட்டு பப்பு”என்று அண்ணா கூச்சலிட்டார்.

அண்ணன் எனக்கு அப்பா. அவர் தோளில் இருந்து வளர்ந்தவன். அவர் கையால் சோறு அள்ளி ஊட்டிய நினைவு எனக்கு இருக்கிறது. என்னால் முடியவில்லை. நான் தலையில் அறைந்துகொண்டு அழுதேன்.

நாய்களின் குரைப்போசை கேட்டது. அவர்கள் அணுகிவந்துகொண்டிருந்தனர்.

அண்ணா தன் இடையில் இருந்து கட்டாரியை உருவி தன் நெஞ்சிலேயே ஓங்கி குத்தினார். கட்டாரி அவர் உடலில் இறங்கியது. அவர் மல்லாந்து விழுந்தார். காயத்தை பொத்திய கைவிரல்களில் ரத்தம் ஊறி வழிந்தது.

ஆனால் அதனால் அவர் சாகமாட்டார் என்று தெரிந்தது. வெட்டுவாய் வழியாக அவருடைய மூச்சு குருதியுடன் குமிழிகளாக வெடித்தது

அண்ணா “பப்பூ, இந்தக் காயத்தால் நான் சாகமாட்டேன்…. அவர்கள் என்னை இந்த காயத்துடன் கட்டி இழுத்துச் செல்வார்கள்… நான் இழிவடைந்து சாகவிடாதே… வெட்டு என்னை. என் தலையை வெட்டு” என்றார்.

நான் வாளை உருவி அண்ணனின் தலையை வெட்டினேன். மீண்டும் வாளை தூக்குவதற்குள் பாறைமேல் நாராயணக்குறுப்பின் வீரன் ஒருவன் ஒரு கல்லை எடுத்து எறிந்து என்னை வீழ்த்தினான். என்னை பிடித்துக் கொண்டார்கள். என்னை குப்புறத்தள்ளி கைகால்களை கட்டினார்கள். இழுத்துச்சென்று பாறைமேல் வீட்டு முற்றத்தில் பகல் முழுக்க போட்டிருந்தனர். பின்னர் கட்டிய கையை அவிழ்க்காமலேயே மாட்டுவண்டியில் கொல்லத்திற்கு கொண்டுவந்தனர்.

“சொல்லுங்கள் டாக்டர், அண்ணனை கொன்ற கையுடன் நான் இனி வாழலாமா?” என்றார் பத்மநாபன் தம்பி.

நான் என்னை தொகுத்துக் கொண்டேன். “உங்கள் உணர்வு புரிகிறது”என்றேன். “ஆனால் நீங்கள் உங்கள் அண்ணனின் கனவை முன்னெடுக்கலாமே… உங்கள் அண்ணனும் அதைத்தான் விரும்புவார்.”

பத்மநாபன் தம்பி புன்னகைத்து “இல்லை, நான் உயிர்வாழ விரும்பவில்லை” என்றார்.

“உங்கள் அண்ணன் செய்து முடிக்காத விஷயங்களைச் செய்யலாம்…” என்றேன். “அவர் நீங்கள் இப்படி உயிர்விடுவதை விரும்ப மாட்டார்….”

“இல்லை டாக்டர் விட்டுவிடுங்கள். எனக்கு ஓர் உதவி மட்டும் செய்யுங்கள். என்னை தூக்கிலிடும்போது நீங்களும் உடனிருங்கள். இல்லாவிட்டால் என்னை சார்ஜெண்டுகள் அவமானப்படுத்துவார்கள். மேலக்காட்டு நீலகண்டபிள்ளையை தூக்கிலிடுவதற்கு முன் அவர் வாய் நிறைய மண்ணை அள்ளி ஊட்டினார்கள்.”

“சேச்சே!” என்றேன் “பிரிட்டிஷாரா அதைச் செய்தார்கள்?”

“படைவீரர்கள் எங்கும் ஒரே மனிதர்கள்தான்” என்றார் பத்மநாபன் தம்பி “அண்ணனின் தலைவெட்டுபட்ட உடலை திருவனந்தபுரத்திற்குக் கொண்டுசென்று அங்கே கண்ணும்மூலை என்ற இடத்தில் ஒரு தூக்குமரத்தில் கட்டி தொங்கவிட்டனர். தலைவேறு உடல்வேறாக”

“உண்மையாகவா?”

“ஆமாம்” என்று பத்மநாபன் தம்பி சொன்னார். “அதில் ஆச்சரியமே இல்லை. ஒரு மாவீரன் கொல்லப்படுவது என்பது ஒரு பதக்கம் போல. அதை உலகுக்குக் காட்டவேண்டும் அல்லவா? அவர்கள் அதை கொண்டாடினார்கள்..”

நான் என் உணர்வுகளைக் கடந்து “பத்மநாபன் தம்பி, இது என் கடைசி கோரிக்கை. எனக்காக நீங்கள் இதைச் செய்யவேண்டும். உங்கள் அண்ணன் இதையே விரும்புவார், சந்தேகமே வேண்டாம்…. கைச்சாத்திடுங்கள். இதை நான் உங்களுக்காகச் செய்தேன் என்று இருக்கட்டும். எனக்காகவும்கூட…”

சிலகணங்கள் பத்மநாபன் தம்பி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் கைச்சாத்திடுவார் என்று தோன்றியது. ஆனால் அவர் நிமிர்ந்து “டாக்டர் நான் முழுமையாகச் சொல்லவில்லை… அண்ணன் கடைசியாக என்ன சொல்லி கூவினார் தெரியுமா?”

நான் வெறுமே பார்த்தேன்.

“மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையை நினைத்து வெட்டுடா என் தலையை என்று”

நான் நடுங்கிவிட்டேன்.

பத்மநாபன் தம்பி எழுந்துகொண்டபோது கண்கள் நீரால் பளபளத்தன. ஆனால் அவர் புன்னகை செய்தார்.

“நான் வெட்டினேன்…” என்று கிசுகிசுக்கும் குரலில் சொன்னார் “டாக்டர் என் கைக்கு அந்த வேகம் வந்தது நானும் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையை நினைத்துக்கொண்டதனால்தான்.”

நான் வெறுமே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

“நன்றி டாக்டர், நீங்கள் செய்த முயற்சிக்கு நான் அடுத்த பிறவியில் ஈடு செய்கிறேன். நான் வாழக்கூடாது. அது தர்மம் அல்ல.”

கைகூப்பிவிட்டு பத்மநாபன் தம்பி நடந்து சென்று மறைந்தார். சார்ஜன்ட் வந்து வணங்கும் வரை நான் அங்கேயே அமர்ந்திருந்தேன்.

***

 

 

முந்தைய கட்டுரைகரு,கூடு- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–66