கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

இந்த ஆவேசமான கதைவேள்வியை கூர்ந்து கவனித்து வருகிறேன். தமிழ்ச்சூழலில் முதலில் ஆச்சரியம் எழுகிறது. இந்த வெறிகொண்ட எழுத்து. இதைப்பற்றி பேசிக்கொண்டபோது என் அமெரிக்க நண்பன் உலக அளவிலேயே பெரிய எழுத்தாளர்கள்- உண்மையிலேயே முக்கியமானவர்கள்- இப்படி எழுதித்தள்ளிவர்கள்தான் என்றார்கள்.

அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தில் எழுதிக்குவித்தார்கள். சிலர் சட்டென்று அமைதியாகிவிட்டார்கள். சிலர் கடைசிவரை அதே வெறியுடன் எழுதினார்கள். குறிப்பாக டால்ஸ்டாய், டாஸ்டாயெவ்ஸ்கி, பால்ஸாக், தாமஸ்மன் என்று பலபேர்.

இத்தனைக்கும் இன்றைக்கு உங்களுக்கு இருக்கும் நவீன வசதிகளெல்லாம் அவர்களுக்கு இல்லை. அவர்கள் கையால் எழுதவேண்டும். திருத்தபோட்டால் திருப்பி எழுதவேண்டும். அவர்களே புரூஃப் பார்க்கவேண்டும். அவர்கள் தகவல்களை சேகரிப்பது மிகக்கடினம். இன்றைக்கு இந்த நவீன உலகில் இதை எழுதுவது கொஞ்சம் எளியதுதான்.

ஏன் இத்தனை எழுதினார்கள் என்று பேசிக்கொண்டிருந்தோம். அமெரிக்க நண்பர் சொன்னார். மூன்றுபேர்தான் அதிகம் எழுதுவார்கள். தியாலஜிஸ்டுகள், பிலாசபர்கள், இவை இரண்டிலும் அடிப்படையான தேடல் கொண்ட இலக்கியவாதிகள். மேலே சொன்ன எழுத்தாளர்கள் இத்தகையவர்கள். மாரல், எதிக்கல், பொலிடிக்கல் பிரச்சினைகளை எழுதுபவர்கள் நிறைய எழுதமுடியாது. கொஞ்சநாளிலேயே தரைதட்டிவிடும். கொஞ்சநாளிலேயே அவர்கள் தரைதட்டுவது தெரிந்தும் விடும்.

ஆனால் இவ்வாறு பெரிய அளவில் எழுதுபவர்கள் அடிப்படையில் ஒன்றோ இரண்டோ கேள்விகளைத்தான் எழுதிக்கொண்டே இருப்பார்கள். அதை வெவ்வேறுவடிவில் வெவ்வேறு சூழலில் எழுதிக்காட்டி அவை வேறுவேறு என்று வாசகனை நினைக்கவைத்துவிடுவார்கள். இந்தக்கதைகளில் அந்த இயல்பைத்தான் பார்க்கிறேன்

-ஸ்ரீனி

***

அன்பு ஜெமோ,

ஒரு நாள் மக்களுக்கு உண்மை தெரியத்தான் போகிறது. ஜெயமோகன் என்பது ஔவையார் என்பதுபோல ஒரு பட்டப்பெயர். ஒருவர் அல்ல, பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த  பல எழுத்தாளர்கள் என்று.

வியாசரின் காலத்தில் ஒருவர் எழுதினார். மகாபாரத மாந்தர்களை நேரில் கண்டவர். பின்னர் சங்க காலத்தில் வாழ்ந்தவர் ஒருவர். (கலம்செய் கோவே என்ற புகழ்பெற்ற சங்கப்பாடல் இவரால் எழுதப்பட்டிருக்கலாம் என்ற வதந்தி இவர் சீடர்களால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது).

செந்தமிழில் எழுதிய காலகட்டத்தில் ஒருவர் சிறப்புடன் எழுதினார். ஒருவர் அறிவியல் புனை கதைகளில் வல்லவர். இன்னொருவர் கட்டுரைகள் எழுதிக் குவித்தார். மற்றொருவர் உலகப்புகழ் பெற்ற சிறுகதைகளை இடது கையாலேயே எழுதினார். மேலொருவர் பகடியில் விற்பன்னர். பல்லி முகம் கொண்ட அரசரின் அவையில் இருந்து காவியம் படைத்ததாக வேறொரு ஜெயமோகன் எழுதியிருக்கிறாராம். வரலாற்றுக்கு முந்திய காலகட்டமாக இருக்கலாம்.

ஆனால் இருபத்தி ஒன்னாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் இலக்கிய விமர்சகர். சிறந்த தொகுப்பாளர். அவரே மற்ற எல்லா ஜெயமோகன்களின் எழுத்தையும் தொகுத்தவர். அமைப்பு மனிதர். மற்ற சிறந்த எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் விருது வழங்கியவர். தகவல் தொழில்நுட்ப வசதி பெருகிய காலத்தில் வாழ்ந்ததால்  இவர் முகம் பரவலாக அறியப்பட்டதால், மற்ற எல்லா ஜெயமோகன்களின் பெருமையும் இவருக்கு அளிக்கப்பட்டது. அவரே எடுத்துக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. தன்னுடைய இல்லுமினாட்டி தொடர்புகளை சரியாக பயன்படுத்தியே இவர் புகழடைந்தார் என்று சொல்பவர்களும் உண்டு.

எழுத்துக்களைப் பாருங்கள். இதெல்லாம் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டவை என்பது மேலோட்டமாக படிப்பவர்களுக்கே தெரியும். இவையெல்லாம் ஒரே ஒருவரால் எழுதப்பட்டவை என்று சொல்வது சங்கப் பாடல்களில் சங்கர் படப்பாடல்களை சேர்ப்பது போல் உள்ளது. நீலம் நாவல், மாடன் மோட்சம்,  பத்து லட்சம் காலடிகள் இம்மூன்றையும் எழுதியவர் ஒருவராக இருப்பதற்கு வாய்ப்ப்பே இல்லை என்பது இக்கதைகளின் முதல் பத்தியை மட்டுமே படிப்பவர்களுக்குக்  கூட தெரிந்துவிடும்.

அதேபோல ஜெயமோகன் என்ற பட்டம்பெற்றவர்களின் மனைவிக்கும் பட்டம் உண்டு. அருண்மொழி நங்கை என்பதே அது. எல்லா காலகட்டத்திலும் இவர் எழுத்துக்களில் மனைவி பெயர் அருண்மொழி நங்கை, அருண்மொழி பிராட்டியார் என்றே குறிக்கப்படுகிறது.

ஆனால், தேநீரை தினமும் ரசித்துக் குடிக்கும் ஜெயமோகனார், ஒருமுறை அருண்மொழி நங்கையார் திருவாரூர் சென்றதால் சுவையான தேநீரில்லாமல் வாடியபோது, அவர் திருவாரூரில் தேநீர் வைத்து கோப்பையில் ஊற்ற ஊற்ற இங்கே நாகர்கோயிலில் இவர் கோப்பை நிரம்பியது என்று சொல்லப்படுவது பின்னாளில் அவர் சீடர்களால் உருவாக்கப்பட்ட கற்பனைக் கதை என்றே தெரிகிறது.  —

நான் இதை எழுதும் இந்த வீடடங்கு நாட்களில் மட்டுமே இன்றுவரை 60 சிறுகதைகள், நாளொன்றுக்கு ஒன்று என எழுதி இருக்கிறீர்கள். வெண்முரசு தொடர் தனி. ஒவ்வொரு கதையும் அதன் தளம், குறியீட்டு வெளி, வாசிப்பனுபவம், தொழில்நுட்பம் எல்லாவற்றிலும் ஒவ்வொரு வகையில் உச்சம். இது எப்படி நிகழக்கூடும் என்பது விளங்கவில்லை. மானுட சாத்தியத்தின் எல்லை. அல்லது அதற்கும் அப்பால்.

அன்புடன்,

ராஜன் சோமசுந்தரம்

வணக்கம் ஜெ

***

ஜெ

முன்பு வ்யாஸ ப்ரசாத் அவர்களின் unitive philosophy வகுப்புகளை கேட்டு ஒரு திறப்பை அடைந்தேன். இப்போது குரு நித்ய சைதன்ய யதியின் கீதை வகுப்புகளை கேட்டு என்னையே அறிந்துக்கொண்டிருக்கிறேன்.

https://www.youtube.com/playlist?list=PLt61T0pa__62JWFzzi837ffdATIE1MlUv

இப்படி இருக்கையில் கதைகளில் தொடர்ந்து துறவு குரு ஆசிரமம் பற்றிய கதைகளே.

சிறுவனாக இருந்த பொழுது காந்தி மற்றும் ரொமேய்ன் ரோலேண்ட் தங்களுக்குள் எழுதிக்கொண்ட கடிதங்களை கண்டு ஜீன் கிரிஸ்டோஃப் வாசிக்க தொடங்கினேன். அப்போது அந்த நூல் வரிசை நல்ல புத்தக வடிவில் நான் தேடிய இடங்களில் கிடைக்கவில்லை. கதைகளை புத்தக வடிவில் தான் வாசிக்கவேண்டும் மின்னூல்களாக அல்ல என நான் எண்ணிக்கொண்டிருந்த காலம். மேலே இருக்கும் முதல் வகுப்பிலேயே குரு நித்யா ஜீன் கிரிஸ்டோஃப்பில் இருந்து ஒரு நிகழ்ச்சியை எடுத்து கீதையுடன் பொருத்தி விளக்கமளித்தார். அதை கேட்டு கொண்டிருந்த போதே இருப்புக்கொள்ளவில்லை. வகுப்பு முடிந்த அடுத்த கணமே இணையத்திலிருந்து ஜீன் கிரிஸ்டோஃப் முழுதும் தரவிறக்கிக்கொண்டு மூன்றாம் பாகத்திலிருந்து கிண்டிலில் மீண்டும் வாசிக்க தொடங்கியிருக்கிறேன்.

ரோலேண்ட் போலவே நான் வாசிக்க வேண்டுமென எண்ணி அச்சு வடிவில் நூல் கிடைக்காததால் வாசிக்காமல் விட்டது யோர்கே லூயிஸ் போர்ஜஸ். இந்த வீடுறைவு தொடங்கிய முதல் அவரின் collected fictions தொகுப்பை தினமொரு கதை என கிண்டிலில் வாசித்து வருகிறேன். இன்று அவரை பற்றி நிழல்காகம் கதையில் ஒரு வரி.

இவற்றை diderot effect என கொள்வதா ஊழின் கைச்சுட்டு என கொள்வதா. குரு நித்யாவின் முன் அமர்ந்து அவர் சொல்வதை ஒருவர் ஓவியமாக்கி கொண்டிருக்கிறார்(அவர் பெயர் andy அல்லது andrew, ஆடியோவில் சரியாக கேட்கவில்லை). அவர் அருகிலேயே குருவின் கீழமர்ந்து நானும் வரைந்துக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டேன்.

ஸ்ரீராம்

***

முந்தைய கட்டுரைகூடு, சிவம், நிழல்காகம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைராஜன் [சிறுகதை]