சிவம்,தேவி- கடிதங்கள்

தேவி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இந்த பெருந்தொற்று காலத்தில் வெளிவரும் உங்கள் சிறுகதைகளை வாசிக்கையில் அவை என்னைத் தொற்றி படந்தேறி மனஎழுச்சியின் உச்சத்தை எனக்கு தந்தவண்ணம் இருக்கிறது. அமுதா, நஞ்சா, போதை வஸ்தா எதுவென்று தெரியவில்லை. காலையில் அந்த சிறுகதையைப் படிக்கும் போது ஏற்படும் போதை அந்த நாள் முழுக்க எனக்குள் நிறைகிறது.

விருதுநகரை மைய்யமாக கொண்டு நான் எழுதுகிற கதையில் தின்னவேலி வட்டார வழக்கு வருகிறது. அந்த வசனத்தை நான் தட்டச்சு செய்கையில் தவறு என்று புரிந்தாலும் பரவசமாக இருக்கிறது.ஏதோ ஒரு விதத்தில் ஆன்மா கதையில் கலக்கவேண்டும் என்று நினைப்பது தானே கதாசிரியனின் வேலை.ஏதோ ஒரு வண்ணத்தைத் தொட்டு தன் ஓவியத்தை வரையத் துவங்கும் ஓவியனைப் போல உங்கள் வட்டார வழக்கைத் தொட்டு நான் எழுதத் துவங்குவது நல்லதொரு மயக்கத்தைத் தருகிறது.

தேவி சிறுகதையைப் படித்தவுடன் பேசத்தோன்றாமல் எழுத அமர்ந்து விட்டேன். வனவாசம் சிறுகதையும் தேவி சிறுகதையும் நாடக உலகத்தைப் பற்றியது என்பதால் என்னை அத்தனை எளிதாக கட்டிப்போடுகிறது.தலையன் கோட்டை காளியப்பா தான் இங்கே தலைவன் கோட்டை சாமியப்பாவாக நிற்கிறார் என்பது எனக்கு தெரியும். எவனும் கை தட்டவேண்டியதில்லை எனக்கே தெரியும் நான் அந்த இடத்துக்கு போயிட்டேன்னு என்கிற வசனம் தருகிற மயக்கம் போதைவஸ்துகள் தருகிற போதையை விட பல லட்சம் மடங்கு பெரியது.திருநெல்வேலி லாட்ஜில் இரவெல்லாம் நாடகம் பற்றி நீங்கள் பேசிய பேச்சைக் கேட்கையில் பிடித்த கிறுக்கு மேட்டுப்பாளையம் லாட்ஜில் அமர்ந்து அனந்தன் மாதிரி பித்து பிடித்து காவியத்தலைவன் கதையை எழுதித் தீர்த்தேன். அந்த கணம் மீண்டும் நினைவுக்கு வருகிறது.

காவியத்தலைவன் பார்த்துட்டு என்னை கிராக்கு, பொழைக்கத் தெரியாதவன், ஆர்ட் பிலிம் மேக்கர்,வேஸ்ட், மசாலா இல்லாத சரக்கு, எந்த லூசாவது இந்த மாதிரி ஒரு அறுவையைப் பண்ணுவானா என்ற கேலிபேச்சுகள் என்னை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. ஏறக்குறைய வனவாசம் தான். ஆனாலும் இது போன்ற நாடகக்கதைகளை படித்தவுடன் இயல்பான வாழ்க்கையின் அத்தனை துயரமும் மறந்து நான் தான் தலைவன் கோட்டை சாமியப்பா, நான் தான் அனந்தன்,நான் தான் தேவி என்று மனம் அரற்றுகிறது. நாடக நடிகை ஸ்ரீதேவி மூன்று கதாபாத்திரமாக நடிப்பதை நீங்கள் எழுதியுள்ளதை படிக்கையில் மனம் காற்றிலாடும் உதிர்ந்த இறகாக பறக்கத் துவங்கிவிட்டது. மீண்டும் அந்த அபாயக்கனவுக்குள் வாழ்கிறேன்.இப்போது என் உடல் நெருப்பு பிடித்து எரிகிறது.

உடல் தீ பற்றி எரியும் சிறுகதைகள்.

மனம் யா தேவி சர்வஃபூதேஷு சக்திரூபேண சம்ஸ்திதா என்கிறது.

நன்றி

அன்புடன்

வசந்தபாலன்

அன்புள்ள ஜெ

பெண்ணின் முகங்கள் என்று சொல்லத்தக்க கதை. ஆனால் அதில் வில்லியும் உண்டு என்பதில்தான் லாரன்ஸின் ஜூவனைல் மனசு எதிர்கொள்ள முடியாத சிக்கல் உள்ளது. நேராகச் சென்று காலில் விழவேண்டியதுதான். வேறுவழியே இல்லை.

ஒரு கிராமநாடகம் என்பது அந்தக்கிராமமே கூடும் விழா. அதில் எத்தனை ஓட்டங்கள். சாதிமதம் எல்லாம் இருக்கிறது. ஆனால் கலை எல்லாவற்றையும் கடந்த ஒரு வெளியில் இயங்குகிறது. இதை நான் சின்னவயசில் பார்த்திருக்கிறேன் [நமக்கு ஒரே வயசு. எனக்கு அமரவிளை]

ஏன் நாடகம் அத்தனை பாப்புலராக இருந்தது என்றால் அது கோயில்கலை அல்ல. கதகளி மாதிரி அதற்கு ஆசாரமெல்லாம் இல்லை. அதில் எதைவேண்டுமென்றாலும் கலக்கலாம். புதிய சிந்தனைகளை சேர்க்கலாம். எல்லா சாதியினரும் மதத்தினரும் பங்குபெறலாம். எங்கள் பகவதியம்மன் கோயில் நாடகங்களில் முஸ்லீம்கள் வேடமிட்டு ஆடுவார்கள். அல்லா பாட்டு பாடி ஆரம்பிப்போம். அந்த ஜனநாயகவெளிதான் நாடகம் அவ்வளவு பாப்புலர் ஆக காரணம்.

நாடகத்தை கையிலெடுத்த அரசியல் இயக்கங்கள் மக்களியக்கங்களாக மாறின. கேரளத்தில் தோப்பில் பாசியின் கேபிஏஸி நாடகக்குழு தான் கம்யூனிஸ்டுக் கட்சியை ஆட்சிக்கே கொண்டுவந்தது என்று சொல்வார்கள்.

அந்த ஜனநாயகக் கொண்டாட்டம் இந்தக்கதையில் அற்புதமாக பதிவாகியிருக்கிறது. நுட்பமான அம்சம் ஃப்யூடல் மேலாதிக்கமே அதில் இல்லை. அவர்கள் எல்லாருமே ஒதுங்கியிருக்கிறார்கள். அதன் கலைஞர்கள் எல்லாருமே மார்ஜினலைஸ்ட் ஆட்களாக இருக்கிறார்கள்.

ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவுபெரிய ஃபினாமினன் நாடகம். ஆனால் இந்த விஷயம் ஏன் நம் இலக்கியத்தில் இதுவரை பதிவாகவோ பேசப்படவோ இல்லை?

எஸ்.ராஜ்குமார்

சிவம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

சிவம் கதையில் காசியின் எல்லா முகங்களும் பதிவாகியிருக்கின்றன. வழக்கமான கதைகளில் பக்தி – சடங்கு காசி பதிவாகி அவுட்சைடர்களாக அங்கிருக்கும் சாமியார்கள் பதிவாகியிருப்பார்கள். இந்தக்கதையில் பக்தி –சடங்கு ஆட்கள் அவுட்சைடர்களாக நையாண்டியுடன் சொல்லப்பட்டிருக்கிறார்கள். காசி இயல்பாகவே சாமியார்களின் ஊர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வேறுபட்ட கோணமே இக்கதையின் அழகு

எம்.சரவணன்

ஜெ

நாம் நூற்றுக்கணக்கான ஊர்களையும் நகரங்களையும் பார்த்திருப்போம். எங்குமே சுடுகாடு தனியாக மயான வெறுமையில் ஊருக்கு வெளியில் எங்கோ இருக்கும். துடிப்புடன் வாழ்க்கை ஊரின் உள்ளே நிகழும். ஊர் வளர்ந்து மயானம் அருகில் வந்தாலும் கூட நாம் கண்டும் காணாமல் செல்வோம். ஆனால் காசியில் அப்படி இல்லை.

காசியில் வாழ்க்கைக்கு நிகராக மரணமும் துடிப்புடன் ’வாழும்’ ஒர் இடம். காசி வாழ்வையையும் மரணத்தையும் மிக அருகருகே வைத்த  நகரம்.  அப்படி ஒரு வாய்ப்பு இருப்பதே பெரும் ஆச்சரியம்தான் ! காசியின் கங்கையில், மணிகர்ணிகா கட்டத்தில்  வாழ்வுக்கும் சாவுக்கும் கங்கையின் மேல் எழும் குளிர்காலபனிபோல  ஒரு மென் திரைதான் இருக்கிறது. கிண்ணத்தில்  ‘கிளிங்க்’ என விழும் வெள்ளிமெட்டி ஒலியிலோ,  கைகால்கள் கட்டப்பட்டு கைகூப்பி கங்கையில் ஜலசமாதியாகும் இடத்திலோ, சுவரில் சாய்த்துவைக்கப்பட்ட பிணத்தின் தனிமையிலோ, சிதையின் நீல ஜூவாலையின் வெம்மையிலோ அந்த திரை விலக முடிந்தால் வலது காலை வைத்து உள்ளேச்சென்று ‘நீ உண்மையிலே யார்?’ என்று மரணத்தை கேட்க வாய்ப்பளிக்கும் நகரம்.

காசியில் அந்த முதல் சிதையை எரித்தவன்! காசியின் வரவேற்பு வாசகமே ‘காசியம் மரணம் முக்தி’ என்பதுதான். தொடர்ந்து சிதைகள் ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்து எரிந்துகொண்டே இருக்கின்றன. சிதையின் நெருப்பில் ரொட்டியை  வாட்டி உயிர் ஒருபுறம் நிகழ அதே நெருப்பில் பிணம் எரிந்துகொண்டிருக்கிறது. அப்போது நித்யாவுக்கு கைமாற்றப்படுவது ஒரு ரொட்டி துண்டு அல்ல. ஆக்கலும் அழித்தலும் பற்றி தொன்றுதொட்டு இந்த மண்ணில் இருந்த வரும் ஞானம். பிரசாதம் என்பது கோயிலில் தெய்வம் முன் படைத்து  மலரின், தூபத்தின் மணம் எழு இரு கை ஏந்தி பெறுவது மட்டும்தானா ! சிதையின் நெருப்பில் வாட்டி  சாம்பல் நெடியுடன் கைமாற்றப்படுவதும்தான். மண்டையோட்டின் வெண்மையிலும் தழலின் சிவப்பிலும் காலம்காலமாக ‘அருகமர்ந்து’ மரணத்தை அறிந்த குருமரபு அளித்த ஞானம்தான் அது.   அணையாச்சிதையைச் சுற்றி சாமியார்கள் காலம்காலமாக காசியில் அமர்ந்துக்கொண்டிருக்கிறார்கள். சவத்தின் அருகமர்ந்து அறியும் சிவம்.   ’அருகமர்தல்’ இன்னும் விரிவான பொருள் கொள்கிறது.

இப்படி மரணத்தை கடந்த குருவிடம்தான் கதைசொல்லி ’உங்களுக்கு அன்பு என்பதே இல்லையா?’ என்று கேட்கிறான். ’நிழல்காகம்’ கதையில் ஒரு வரி வருகிறது. ‘உன் தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் அது அறப்பிரச்சனை. ஆனால் உனக்கு இது ஒரு தத்துவப்பிரச்சனை.’ இந்த கதைக்கும் ஒருவகையில் பொருந்தும் ஒரு வரியாகவே நான் அந்த வரியைப் பார்க்கிறேன். துறவிக்கு மரணமும் கடந்துசெல்லப்படவேண்டிய ஒன்று.  ’மீண்டும் வருவாய்தானே?’ என்று கேட்கும் போது கதைசொல்லி எதிர்பார்த்த அந்த ‘அன்பு’ இன்னும் பேருரு கொண்ட ஒன்றாக மாறிவிடுகிறது.

***

இன்னொன்றையும் சொல்லவேண்டும். இதை வாசகர்கள் அறிந்தே இருப்பார்கள். இருந்தாலும்..’நித்யா வரிசை கதைகள்’ மற்ற கதைகளைப் போல் அல்ல. ஏனெனில் இதன்பின் உள்ள உக்கிரமான அனுபவங்கள் சாதாரணமானவை அல்ல. துறவிகளுக்கு நிகழும் நேரடி அனுபவங்கள். அந்த உணர்வுகளையெல்லாம் மிக மென்மையாக இந்தக் கதைகள் தொட்டுகாட்டிவிட்டு செல்கின்றன. உதாரணமாக, கிழவியின் பிணத்தைப் பார்த்து பயந்து ஓடுவதும் பின் ரொட்டி துண்டை இயல்பாக வந்து உண்ணும் இடத்திற்கும் இடையே உள்ள நித்யாவின் பயணம்.   எந்த மொழிக்கும் இந்தக் கதைகள் ஒரு கொடைதான். இதையெல்லாம் கற்பனையில் எழுதவே முடியாது. அலைந்துதிரிபவர்களின் அனுபவங்களை எழுத உண்மையிலேயே எழுத்தாளனும் அதேபோல அலைந்துதிரிந்திருந்தால்தான் உயிர்ப்புடன் எழுதமுடியும். அலைந்துதிரிந்துவிட்டு மீண்டும் அந்த அனுபவங்களை இதுபோன்ற கதைகளாக மாற்றுவது  ஒருவகையில் அரிதிலும் அரிதுதான்.  ஒரு துறவியையும் எழுத்தாளனையும் பிரிக்கும் ஒரு மெல்லிய கோடு எங்கோ உள்ளது. அந்த மென்சமநிலையில் அதிரும் கோட்டில் இருந்து எழும் கதைகள் இவை. அல்லது காவியும் எழுதுகோலும் சந்திக்கும் உச்சப்புள்ளியில் இருந்து எழும் கதைகள் இவை.

அன்புடன்,
ராஜா

69 ஆகாயம் [சிறுகதை]

68.ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரையானைப்படுகொலைகள்- கடலூர் சீனு
அடுத்த கட்டுரை‘மாஸ்டர்’