நிழல்காகம், ஓநாயின் மூக்கு- கடிதங்கள்

நிழல்காகம்[சிறுகதை]

அன்புள்ள ஜெ

நிழல்காகம் ஒரு ஆன்மிகமான கதையை அறிவார்ந்த விவாதம் வழியாக நவீனக்கதையுலகுடன் இணைக்கும் உங்கள் உத்தியை கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் எழுப்பப்படும் அடிப்படையான கேள்விகள்தான் அந்தக்கதையின் பலமே. கலை என்பது என்ன? அது வாழ்க்கையை நடிக்கிறது. நிழல்நாய் கடிக்காது, ஆனால் அதனுடன் விளையாடலாம். கலையில் உள்ள காமம் பகை எதையும் அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. அது ஒருவகை நடிப்புதான். ஆனால் பொய் அல்ல. அன்பால் நீதியால் அப்படி மாற்றி நடிக்கப்படுகிறது அது. அதைத்தான் கதை சொல்கிறது.

தத்துவ மாணவர்கள் இனிப்பு சாப்பிடலாமா? சாப்பிடலாம், இந்த பூமி முழுக்க நிறைந்திருக்கும் வாழ்க்கையில் இருந்து திரண்ட இனிப்பு அது. அந்த வாழ்க்கையை அவர்கள் பிரம்மத்தின் லீலையாக பார்க்கிறார்கள் என்றால் அந்த இனிப்பு பிரம்மத்தின் இனிப்புதானே? அந்த இனிப்பைத்தான் அசித சாமி அடைகிறார். அவர் முதலில் தன் பாரமரியத்தில் இருந்து கிடைத்த குரோதத்தையே நேருக்குநேர் சந்திக்கிறார் .அதை மீம் செய்து இனிப்பாக ஆக்கிக்கொள்கிறார். விளையாட்டாக ஆக்கிக்கொள்கிறார்

விளையாட்டைப் பற்றிச் சொல்வார்கள், அது போர், வியாபாரம் ஆகியவற்றை விளையாட்டாக ஆக்கிக்கொண்டது என்று சொல்லப்படுவதுண்டு.நார்மன் வின்செண்ட் பீல் அவர்களின் ஒரு விளக்கம் உண்டு. வாழ்க்கையை விளையட்டாக உணருங்கள். ஹென்றிஃபோர்டும்  ஐன்ஸ்டீனும் ஒருநாள் கூட வேலை செய்ததில்லை. அவர்கள் விளையாடினார்கள். பீத்தோவனும் நெப்போலியனும் விளையாடினார்கள். விளையாட்டில்தான் சலிப்பே இல்லை. களைப்பே இல்லை. விளையாட்டாக வாழ்க்கையை ஆக்கிக்கொள்பவர்களே கடந்துசெல்கிறார்கள். அதைத்தான் இந்தக்கதையை பார்த்ததும் நினைத்துக்கொண்டேன்

சாரங்கன்

வணக்கம் ஜெ

 

நிழல்காகம் சிறுகதையை வாசித்தேன். கோவில்களில் இருக்கும் சடங்குகள் முதலாக மனித உணர்வுகள் வரை அனைத்துமே பாவனைகள் என்ற எண்ணம் தோன்றச் செய்யும் கதை. நன்கு பயின்று வெளிப்படுத்தப்படும் கதை உச்சம் தொடுகிறது. மனித உணர்ச்சிகளில் குற்றவுணர்வினைப் போல. அந்தக் குற்றவுணர்வினை நீங்கி காகத்துடனான சிநேக பாவத்தைக் கைகொள்கிறபோது இனிய ஆடலாக ஆகிறது.

 

அரவின் குமார்

பலிக்கல்[சிறுகதை]

ஓநாயின் மூக்கு [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

பலிக்கல், ஓநாயின் மூக்கு போன்ற கதைகளில் பாவபுண்ணியம் பற்றிய ஒரு தேடல் உள்ளது. அடிப்படையான ஒரு கேள்வி அது. உண்மையிலேயே பாவமும் புண்ணியமும் இந்த உலகத்தை ஆட்டிப்படைக்கின்றனவா? இல்லை அது வெறும் கற்பனைதானா? கற்பனை என்று சிலசமயம் தோன்றுகிறது. அப்படி அல்ல, அது ஓர் உண்மை என்று வேறுசிலசமயம் தோன்றுகிறது. இந்தக்கதைகளிலும் அந்த மாயம் உள்ளது

ஓநாயின் மூக்கு கதையில் அது வரலாறு மனித மனங்கள் வழியாக கடந்துவந்துகொண்டே இருப்பதுதான் பழிபாவம் என்று சொல்லப்படுகிறது. பலிக்கல் குற்றவுணர்ச்சியை சொல்கிறது. தப்போ சரியோ, இருக்கோ இல்லையோ, நம் வாழ்க்கையை ஆட்டிப்படைக்கும் ஒன்றும் இந்த பாவபுண்ணியமும் குற்றவுணர்ச்சியும்.

யோசித்துப்பார்த்தால் உலகிலுள்ள மிகப்பெரிய இலக்கியப்படைப்புக்களில் பெரும்பகுதி குற்றவுணர்ச்சி பற்றியே எழுதப்பட்டிருக்கின்றன என்று தெரிகிறது. பலிக்கல் அந்த வகையில் ஒரு கதை

 

செல்வக்குமார்

 

ஜெ

 

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை” என்ற குறளை நெடுநாட்களாக உங்கள் மூலம் பின்தொடர்ந்து வருகிறேன். பின் தொடரும் நிழலின் குறல் நாவலே இக்குறளில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. அதன்பின் பல்வேறு கட்டுரைகள், சிறுகதைகளில் அந்த குறளின் பல்வேறு பரிணாமங்கள் உங்கள் எழுத்துக்களில் வந்தபடியே இருக்கின்றன. அக்குறளின் சாரத்தை பல்வேறு தளத்தில் விரித்து கொண்டே செல்கிறீர்கள்.அதன் மேல் உங்களுக்கு உள்ள தீர மோகத்தையும் காட்டுகிறது.

இந்த புனைவு களியாட்டு சிறுகதைகளிலும் அதன் தாக்கம் உள்ளது. ஓநாயின் மூக்கு முதல் பலிக்கல் வரை. ஔசேப்பச்சனின் கூறுமுறையும், கதையின் பல்வேறு அடுக்குகள் கலந்த வடிவ ஒருங்கும் , ஒநாயின் மூக்கு கதையை ஒரு உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. “இங்குள்ள நாம் அறியக்கூடிய விதிகளால் ஆட்டுவிக்கப்படுவது அல்ல என்றால் நாம் எப்படி வாழமுடியும்? எதை நம்பி முடிவுகள் எடுக்கமுடியும்? சரித்திரம் பிரம்மாண்டமானது. எண்ணி எண்ணி தொடமுடியாதது. அதிலிருந்து பேய்களும் சாபஙகளும் எழுந்துவந்து என்னை கவ்வும் என்றால் எனக்கு என்னதான் பாதுகாப்பு? ” , இந்த கேள்வியில் இருந்து இன்னும் விடுபட முடியவில்லை. அல்லற்பட்டு ஆற்றா கண்ணீர் காலவெளி கடந்து சுழற்றி தாக்கும்போது, யாரால் தாங்கமுடியும்.

அதன் மறுபகுதியான, இந்திய பெருநிலத்தின் மைய அற விழுமியமாக , ‘தர்மமே வெல்லும்’ என்ற சொற்கள் அர்த்தமற்ற ஒலியாகவே என்னனுள் பலகாலம் இருந்துவந்துள்ளது.  ஆனால் , அவ்விழுமியம் எப்படி இந்திய நிலங்களின் அனைத்து பகுதிகளிலும் பல்லாண்டாக வேரூன்றி வந்துள்ளது என்பதை உங்கள் எழுத்தின் வழி உணர்ந்து வருகிறேன்.  கதைகளை இப்படியெல்லாம் சுருக்க கூடாது என்றாலும், புறத்தில் சுறுக்குவதெல்லாம் அகத்தில் விரிப்பதற்கே. குருவிடமிருந்து வரும் ஆப்த வாக்கியமாக , இப்பொழுது அச்சொல்லை அசைபோடுகிறேன்.

 

கார்த்திக் குமார்

 

முந்தைய கட்டுரைகரு, இணைவு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகூடு, தேவி- கடிதங்கள்