‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–64

பகுதி ஆறு : படைப்புல் – 8

பிரஃபாச க்ஷேத்ரத்திற்கான பயணம் முதலில் கட்டற்ற ஒற்றைப்பெருக்காக இருந்தது. எவரும் எவரையும் வழி நடத்தவில்லை. எவரும் தலைமை அளிக்கவும் இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளிருந்து எழுந்த ஆணையொன்றுக்கு அடிபணிந்தவர்கள்போல சென்றனர். திரள் நீரென்று ஆவதை முன்பும் பலமுறை பார்த்திருந்தவன் நான் என்றாலும் அப்போதும் திரளுயிர் என்ற ஒன்று உருவாகிவிட்டதுபோல் தோன்றியது. அந்தப் பெருக்கு ஒரு பாம்புபோல் ஒற்றை உடலாக மாறியது. சரிவுகளில் நெளிந்திறங்கியது. மேடுகளில் சுழன்று ஏறியது. தேங்கி இரண்டாகவோ மூன்றாகவோ ஒழுகி வழி கண்டடைந்து நின்று ஒருங்கிணைந்துகொண்டது.

பிரஃபாச க்ஷேத்ரத்துக்கான செல்வழி எவர் உள்ளத்தில் இருக்கிறது என்பதை உணர முடியவில்லை. செல்லும் வழி சரிதானா என்ற ஐயமும் இருந்தது. மூத்தவரான சுருதன் எங்கள் குழு மூத்த காவலர்தலைவனை அழைத்து “இங்கு நிலப்பகுதியை நன்கு அறிந்த ஒற்றர் சிலர் என் அறிதலில் உள்ளனர்… பெயர்களை தருகிறேன். உடனே அவர்களை அழைத்து வருக!” என்று ஆணையிட்டார். ஒற்றர்கள் பலர் அந்நிலத்தில் பரவியிருந்தார்கள் என்றாலும் அவர்களிடையே ஒருங்கிணைப்பு முற்றாக இல்லாமலாகிவிட்டிருந்தது. கிருஷ்ணைக்கு மட்டுமே முறையான தனிப்பட்ட ஒற்றர் அமைப்பு இருந்தது. அதில் பலரை சுருதனுக்கு தெரியும். அவர்களை கொண்டுவந்து ஃபானுவிடம் சேர்த்து ஓர் அமைப்பை உருவாக்க அவர் முயன்றார்.

அவர் அந்தப் பொழுதில் மெல்லமெல்ல தன் கையில் ஆட்சியை எடுத்துக்கொள்ள முயல்வதை நான் கண்டேன். சாம்பன் ஆட்சிசெய்தபோது அவர் சாம்பனின் ஆதரவாளராக, பின் இரண்டாமிடத்தவராக ஆகி ஒரு கட்டத்தில் ஆணைகளை பிறப்பிப்பவராக மாறினார். கிருஷ்ணையால் வெளியே நிறுத்தப்பட்டார். இப்போது கிருஷ்ணையை வெல்ல ஃபானுவை சார்ந்திருக்கிறார். ஃபானுவிடம் உரிய கருத்துக்களை அழுத்தமாகச் சொன்னார். அப்போது ஃபானுவால் வசைபாடப்பட்டார். ஆனால் பின்னர் ஃபானு அங்கே வந்து சேர்ந்தபோது அவருடைய உள்ளத்தில் சுருதன் ஆற்றல்கொண்டவர் என்னும் எண்ணம் ஏற்பட்டது. சுஃபானு அவையில் இருந்து விலகி இரு உடன்பிறந்தாருடன் தனியாகவே வந்தார். அந்த இடத்தை கைப்பற்ற சுருதன் முயன்றார்.

காவலர்தலைவன் இரண்டு ஒற்றர்களை அழைத்துவந்தான். முதிய ஒற்றரான முத்ரன் சுருதனை வணங்கினார். “முத்ரரே, இன்று துவாரகையின் அரசராக விளங்கும் ஃபானுவின் பொருட்டு என் ஆணை இது. இந்தப் பாதையைப் பற்றி உமக்குத் தெரிந்ததை சொல்க!” என்றார் சுருதன். “ஆம், நான் இப்பகுதியில் நெடுங்காலம் பணியாற்றியிருக்கிறேன். இந்நிலத்தை நன்றாகவே எனக்குத் தெரியும்” என்றார் சுருதன். “எனில் கூறுக, இப்போது நாம் செல்லும் வழி சரிதானா? இவர்கள் தங்களை எப்படி வழிநடத்திக்கொள்கிறார்கள்? உளம்போன போக்கில் கால்களை செலுத்துகிறார்களா?” என்றார். “இல்லை இளவரசே, அதைத்தான் நான் விந்தையுடன் நினைத்துக்கொள்கிறேன். வழியை நன்கு தேர்ந்து அறிந்திருக்கும் நான் எப்படி தெரிவு செய்வேனோ அதே போன்று திசையும் நிலமும் தெரிவு செய்து அவர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றார் முத்ரன்.

“எனில் இவர்களை நன்கு அறிந்த எவரோ வழி காட்டுகிறார்களா? ஆணைகளை எவரேனும் பிறப்பிக்கிறார்களா?” என்று சுருதன் கேட்டார். ”இல்லை. இத்திரளின் முகப்புக்குச் சென்று அதை நான் கவனித்தேன். எவரும் வழிகாட்டவில்லை. ஆணைகள் எதுவும் எழவும் இல்லை. ஆனால் வழி அறிந்த சிலர் தன்னியல்பாகவே முன் நிரையை அடைகிறார்கள். அவர்கள் உடல்மொழியிலும் அசைவுகளிலும் இருக்கும் உறுதி பிறர் அவரை தொடர வைக்கிறது. அவர்கள் இந்த நீளுயிரியின் உணர்கொம்புகளாக தங்களை மாற்றிக்கொண்டுவிட்டிருக்கிறார்கள்” என்றார் முத்ரன். “எனில் ஒன்றும் செய்வதற்கில்லை. அத்திசையை தொடர்ந்து செல்வது மட்டும்தான் வழி” என்றார் சுருதன்.

ஆனால் ஃபானுவிடம் அதையே மாற்றிச் சொன்னார். “நாம் சென்றுகொண்டிருக்கும் வழியை நான் கண்காணித்துக்கொண்டிருக்கிறேன், அரசே. உரிய ஆணைகளை திரள்முகப்புக்கு அனுப்பிக்கொண்டும் இருக்கிறேன். இதுவரை சரியான திசையிலேயே சென்றுகொண்டிருக்கிறோம்…” ஃபானு “எவரேனும் மாற்றுச் சொல் உரைத்தார்களா?” என்றார். “இல்லை, அனைவரும் திரளிலேயே மிதப்பவர்களாக வந்துகொண்டிருக்கிறார்கள். கிருஷ்ணைக்கு தெரிந்திருக்கும், பிரஃபாச க்ஷேத்ரம் செல்லும் வழிதான் இது என்று.” ஃபானு “எனில் நன்று… நமக்காக ஊழ் தெரிவுசெய்த இடம்போலும் இது” என்றார். பின்னர் “இனி எவரும் நான் பிழையாக அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லிவிட முடியாதல்லவா? இது மக்களின் தெரிவு” என்றார்.

“இல்லை, அவ்வாறல்ல” என்று சுருதன் சொன்னார். “இது மக்களின் தெரிவு என்பது நமக்கே தெரியும். மக்கள் இது உங்கள் தெரிவென்று நினைக்கிறார்கள். நாம் ஆணையிட்டோம் என பிற மைந்தர் எண்ணுகிறார்கள். அவ்வண்ணமே நீடிக்கட்டும். இந்தப் பெருந்திரள் மேல் முழுமையான கட்டுப்பாடு உங்களுக்கே என்றிருக்கட்டும். அது நமக்கு பலவகையிலும் நன்று… நம்மை பிறர் அஞ்சுவார்கள். நாம் இவர்களை நடத்திக்கொண்டுசெல்கிறோம் என்பது இதற்குள் மற்ற அரசர்களிடம் சென்று சேரும். அவர்கள் நம்மை அரசன் என மதிப்பார்கள்…” ஃபானு “ஆம், அதுவும் உண்மை” என்றார். “ஆகவே முகப்பில் நம் ஆணைமுரசுகள் ஒலிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். நம் ஆணைமுரசுகளால் அவர்கள் செலுத்தப்படுவதாக தோன்றும்… அது செல்லும் வழியையே முரசுகள் சொல்கின்றன என்று எவருக்கும் தெரியப்போவதில்லை” என்றார் சுருதன்.

பாலைநிலத்தினூடாக ஏழு நாட்கள் சென்றோம். பகலில் வெயில் ஏறுகையில் ஆங்காங்கே தங்கி, துணியாலும் மூங்கில் தட்டிகளாலும் கூரைசாய்வுகள் அமைத்துக்கொண்டு அவற்றுக்குள் புகுந்து துயின்றோம். கிளம்பிய ஒரு நாளிலேயே அந்நிலத்தில் செல்வதற்கான வழிமுறைகளை ஒவ்வொருவரும் கற்றுக்கொண்டார்கள். மணலை ஆழமாகத் தோண்டி ஓரிருவர் புகுந்து கொள்ளும் அளவுக்கு துளைபோன்ற பள்ளங்களை உருவாக்கினர். அப்பள்ளங்களுக்கு மேல் தட்டிகளாலோ துணியாலோ கூரையிட்டனர். உள்ளே இறங்கி படுத்துக் கொண்டால் பாலையில் எரியும் கொடுவெயிலை தவிர்க்க முடிந்தது. நெஞ்சளவு ஆழத்து மண்ணை தோண்டிவிட்டால் அடியிலிருக்கும் மண் தண்மை கொண்டது என்பதை அறிந்தனர். மென்மையான மணலை எங்கே கண்டடைவது என்று உணர்ந்தனர்.

பின்னர் ஒரு நாழிகைக்குள் மொத்தத் திரளும் மண்ணுக்குள் புகுந்துவிடும் அளவுக்கு இரண்டு ஆள் ஆழமான குழிகளை அமைத்தனர். அதற்குள் மூச்சுக்காற்று உள்ளே வரும்படி வாசல்களை அமைக்க பழகினர். கூரையாக இட்ட தட்டியின்மீது தடிமனாக மணலை அள்ளிப்போட்டுக்கொண்டால் உள்ளிருப்பவர் இன்னும் குறைவாகவே வெப்பத்தை உணரமுடியும். சிலர் மூங்கில்தட்டியை வளைத்து குழலென அமைத்து அதை பாலைமணல் சரிவில் பதித்து உள்ளிருக்கும் மணலை எடுத்து எடுத்து அதை உள்ளே செலுத்தி பொந்து ஒன்றை உருவாக்கி அதற்குள் இறங்கி உள்ளே படுத்துக்கொண்டனர். மணலுக்கு அடியில் பல்லாயிரம் பேர் படுத்து துயில வெளியே அனலென எரியும் வெயிலும் சுட்டுப்பழுத்த மணல் அலைகளும் பரவியிருந்ததை ஒருநாள் பார்த்தேன். வியப்புடன் அது பாலைவன எலிகளின் வழிமுறை என்று புரிந்துகொண்டேன்.

பாலைவனச்சோலைகள் அரசருக்கும் அரசனின் விலங்குகளுக்கும் மட்டும் உரியதாக இருந்தன. சோலையை ஒட்டிய இடங்களில் மணல் ஆழம் நீரின் தண்மை கொண்டிருந்தது. சோலைக்குள்ளேயே அரசருக்கான குடில்களை மண்ணை அகழ்ந்து ஆழத்திலேயே அமைத்தனர். ஒருநாள் காலையில் அனைவரும் மண்ணுக்குள் அடங்கிய பின்னர் ஓசையின்மையை உணர்ந்து எழுந்து சோலையிலிருந்து வெளிவந்து சுற்றும் நோக்கிய ஃபானு திகைத்து “என்ன நிகழ்கிறது? எங்கு சென்றுவிட்டார்கள் அனைவரும்?” என்றார். விழிதொடும் தொலைவு வரை ஒவ்வொருவரும் கொண்டு வந்த பொருட்கள் மட்டும் சிதறிக்கிடந்தன. விலங்குகள்கூட மண்ணுக்குள் சென்றுவிட்டிருந்தன. “விட்டுச்சென்றுவிட்டார்களா? எப்படி? எங்கே?” என்று ஃபானு பதறிப்போய் கேட்டார். அவருள் என்றுமிருக்கும் அச்சம் அது என்று தெரிந்தது.

“அனைவரும் மணலுக்குள் புகுந்துவிட்டார்கள்” என்று பிரஃபானு சொன்னார். “மணலுக்குள்ளா? எவ்வாறு?” என்று வியப்புடன் ஃபானு கேட்டார். “அது பாலையில் வாழும் எலிகளின் நெறி. இங்குள்ள அனைவருமே அதைத்தான் செய்கின்றனர். மானுடருக்கு எப்போதுமே சிற்றுயிர்கள்தான் வழிகாட்டி” என்று ஃபானுமான் சொன்னான். “துவாரகையில் இவர்கள் பறவைகளாக வாழ்ந்தனர், இப்போது எலிகளாக்கிவிட்டோம்” என்றார் ஃபானு. ஃபானுமான் “அவர்கள் சிறகு கொள்ளும் காலம் வரும், மூத்தவரே” என்றான். சுருதன் “ஒவ்வொன்றிலும் அதற்கான மகிழ்ச்சி உள்ளது” என்றார். “வானில்லாத வாழ்க்கை!” என்று ஃபானு சொன்னார். “நாம் கதிரவனையே பார்க்காதவர்களாக ஆகிவிட்டோம்!”

தொடங்கிய மறுநாளே பயணப்பொழுது இயல்பாக வகுக்கப்பட்டது. பயணம் முழுக்கமுழுக்க இரவில்தான். பகலில் முழுமையான ஓய்வு. அந்த ஒழுங்கை உடலும் ஓரிரு நாட்களில் கற்றுக்கொண்டது. இரவில் பாலைநிலம் குளிர்ந்திருந்தது. குளிர்காற்று வீசியது. விண்ணில் விண்மீன்களின் ஒளிப்படலம். கண் அந்த வானொளிக்கு பழகியபோது கூழாங்கற்கள் கூட தெளிவாகத் தெரிந்தன. விடாய் மிகவில்லை. மூன்று இடங்களில் அமர்ந்து உணவு உண்டு புலரிவரை சென்றோம். அந்தத் தொலைவை பகலில் கடக்கவே முடியாது.

புலரிக்கு முன்னரே பகலணையும் இடத்தை கண்டுகொண்டோம். இரவெல்லாம் இருளை நோக்கி நடந்துவிட்டு வந்தால் புலரிவெளிச்சம் கண்களை கூசவைத்து பணியாற்ற முடியாமல் ஆக்குகிறது என்று அறிந்தோம். ஆகவே விடிவெள்ளி தோன்றியதுமே பயணத்தை நிறுத்திவிட்டு ஒரு சாரார் குழிகளை தோண்டத் தொடங்கினோம். ஒரு சாரார் அடுமனை கூட்டினர். இருள் விலகிக்கொண்டிருக்கையிலேயே உணவுண்டு துயில்கொண்டோம். ஒளியில் விழித்துக்கொண்டால் இரவின் இருளுக்கு விழி பழக பொழுதாகியது. ஆகவே கதிர் நன்கணைந்த பின்னரே விழித்தெழுந்தோம். உணவு உண்டபின் நடை தொடங்கினோம். இருளிலேயே இருந்த விழிகள் கூர்கொண்டபடியே வந்தன. நாங்கள் இருளுக்குள் வாழும் உயிர்களென மாறிக்கொண்டிருந்தோம்.

ஸாமி மரத்தின் இலைகளை வெட்டி சருகுகளையும் கலந்து சற்றே உப்புநீர் கலந்து ஊறவைத்து அளித்தால் சுமைவிலங்குகள் அவற்றை உண்பதை கண்டுகொண்டோம். சற்றே மாவும் சேர்த்து அவற்றுக்கு அளித்தால் அது போதுமான உணவு. அதன்பின் புல்லுக்கோ பிறவற்றுக்கோ தேடல் இருக்கவில்லை. வெயிலை முழுமையாகவே தவிர்த்துவிட்டமையால் நீரின் தேவை மிகமிகக் குறைந்தது. வியர்வை இல்லாமலாகியபோது உணவில் உப்பை குறைத்து நீர் அருந்துவதையும் குறைக்க முடிந்தது. மெல்ல இரவின் உலகை அறியலானோம். விண்மீன்களால், திசைமாறும் காற்றுகளால், சிற்றுயிர்களால் ஆன முற்றிலும் புதிய ஓர் உலகம். “கந்தர்வர்களே, தேவர்களே, உடனிருங்கள். உங்கள் உலகில் வாழ்கிறோம் நாங்கள்!” என்ற பாணனின் பாடல் மக்களிடையே அன்றாடமென ஒலித்தது.

 

நாளடைவில் அப்பயணம் பின்னர் புதிய கண்டடைவுகள் இல்லாமல், புதிய துயரங்கள் இல்லாமல், ஓர் அன்றாடமென நிகழத்தொடங்கியது. அப்போது பூசல்கள் நிகழத்தொடங்கின. சாம்பன் எங்கள் அணிநிரைக்கு மிகப் பிந்தி தனியாக வந்துகொண்டிருந்தார். பிரத்யும்னனின் படைகளே முகப்பில் சென்றன. நடுவில் ஃபானுவின் படைகள் சென்றன. பின்னர் ஃபானு முந்த பிரத்யும்னன் இரண்டாவதாக வந்தார். மூன்று படைகளும் ஒற்றை உடலெனச் செல்லும் அந்தப் பெருக்கின் உள்ளே மூன்று பகுதிகளாகவே நீண்டன. “எறும்புபோல. மூன்று தனி உடல்கள் வேறு வழியின்றி ஒன்றையொன்று கவ்விக்கொண்டது போன்றது எறும்பின் உருவம்” என்று மூத்தவர் சுருதன் கூறினார்.

பின்னர் ஃபானுவின் படைகளுக்கு இடையே பூசல்கள் தொடங்கின. அந்தகர்களும் விருஷ்ணிகளும் போஜர்களும் ஹேகயர்களும் ஒருவரை ஒருவர் கசந்தும் இளிவரல் செய்தும் விலக்கியும் பேசத்தொடங்கினர். ஏன் அந்த உணர்வுகள் ஏற்பட்டன என்பதை நான் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். முதலில் தோன்றியது, தங்கள் இடர்களுக்கான பொறுப்பை இன்னொருவர் மேல் சுமத்துவதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆர்வத்தாலேயே என்று. விருஷ்ணிகள் செய்த பழியால் யாதவர்கள் அனைவரும் உயிர்கொடுக்க வேண்டிவந்தது என்று ஹேகய குடிதலைவர் ஒருவர் சொன்னார். அச்சொல் அவரிடமிருந்து நோய் என அனைவருக்கும் பரவியது. விருஷ்ணிகள் செய்த பிழையல்ல அது, ஷத்ரியக் குருதியினராலேயே அது நிகழ்ந்தது. விதர்ப்பர்களின் பழி அது என்று விருஷ்ணிகள் கூறினார்கள். ஷத்ரியர்களே அனைத்துப் போர்முனைகளிலும் முன்னின்றவர்கள் ஆகவே அவர்களே கொல்லவும் கொல்லப்படவும் தகுதியானவர்கள் என்று விருஷ்ணிகள் மறுமொழி கூறினார்கள்.

அந்தகர்கள் விருஷ்ணிகளுக்கு மேலாக துவாரகையின் அரசப்பொறுப்புக்கு எப்படி வந்தனர் என்று விருஷ்ணி குலத்தலைவர்கள் அலர் தூற்றினர். “மகளிர் வழி முடிகொள்பவனைப் போல் இழிந்தவன் எவன்?” விருஷ்ணிகளின் தலைவன் அமைத்த மாநகரை அந்தகர்கள் அழித்துவிட்டனர் என்று வசைபாடினர். அந்தகக் குடியின் மைந்தராகிய ஃபானு அரசருக்குரிய நிமிர்வு இல்லாமல் முடிவெடுப்பதற்கு பிந்தியமையாலேயே துவாரகையின் குடிகளில் பெரும்பகுதி உயிரிழக்க நேரிட்டது. அவர்களின் களஞ்சியங்களையும் கருவூலச் செல்வங்களையும் கடல் கொண்டுசென்றது. இன்று இறந்துகிடக்கும் எங்கள் மைந்தர்களை அள்ளி நெஞ்சோடு அணைக்கும் தீயூழ் எங்களுக்கு அமைந்ததற்கு வழி வகுத்தவர் அவர். அச்சொல்லுடன் ஹேகயர்களும் போஜர்களும் இணைந்துகொண்டது அந்தகர்களை கொந்தளிக்கச் செய்தது.

“அந்தகர்கள் ஒருபோதும் அரசாளக் கூடாது என்பது எங்கள் குடிக்கூற்று” என்றனர் விருஷ்ணிகள். “இந்நகரை நிறுவியவரின் முதல் மைந்தர் அவர்” என்றார்கள் அந்தகர்கள். “ஆம், ஆனால் தன் அழகாலும் ஆணவத்தாலும் அவர் மேல் செல்வாக்கு கொண்ட அந்தகக் குலத்து பெண்ணின் வழியாக அவர் குருதிமுதன்மை பெற்றார்” என்றனர் விருஷ்ணிகள். “சத்யபாமையை அரசி அல்ல என்கிறீர்களா?” என்றனர் அந்தகர். “அவரை அரசியென குடியவைக்கு வெளியே இளைய யாதவர் காட்டியதே இல்லை. அரசியென அமைந்தவர் ருக்மிணி” என்றனர் ஷத்ரியர். “ஆகவே ருக்மிக்கு முடியை அளித்துவிடுவோமா?” என்று அந்தகர் ஏளனம் செய்தனர்.

அப்பூசல்களுக்குப் பின்னால் இருப்பது வெறும் சலிப்புதானோ என்று நான் ஐயுற்றேன். அந்தப் பயணத்தில் முதலில் வெற்றுடலாக தங்களை ஆக்கிகொண்டு, ஒருவரை ஒருவர் இணைத்துக்கொண்டு, ஒற்றைப் பேருரு என ஆகி ஒழுகிச் செல்வதே ஒவ்வொருவரும் சந்தித்த அறைகூவலாக இருந்தது. அவ்வாறு அவர்கள் இயல்பாக மாறினார்கள். எறும்புகள் உடலால் பாலம் கட்டி நீர்ப்பெருக்கை கடப்பதுபோல, உடலை ஏணியாக்கி படிகளாகி ஏறிச்செல்வதுபோல், உடலையே அரண்மனையும் கோட்டையுமாக ஆக்கிக்கொள்வதுபோல் பாலையில் திகழ்ந்தனர். ஆனால் உடல் முற்றாகப் பழகி தன்னியல்பாக அனைத்தையும் செய்யத் தொடங்கியதுமே உள்ளம் பிரிந்து தனக்கான இடத்தை தனி வழியை நாடியது. அது வெறுப்பினூடாகவே தன் இருப்பை அடையாளம் காட்டியது.

பிறரை வெறுக்கையிலேயே ஒருவர் தனக்கென ஒரு தனியிருப்பு உண்டென்பதை உணர்கிறார். தன்னை திரளென்று உணர்ந்தவர் பின்னர் யாதவர் என்று உணர்கிறார், பின்னர் அந்தகர் என்றோ போஜர் என்றோ உணர்கிறார். அவ்வாறு தன்னை குறுக்கிக்கொண்டு வந்து தன்னிடம் முடிகிறார். தன் குடித்திறனை, மூதாதையர் வரிசையை சொல்லிக்கொண்டிருக்கிறார். விடியலில் பாலையில் அமர்ந்து வளைகள் தோண்டிக்கொண்டிருக்கும் மக்களினூடாக கடந்து செல்கையில் ஒவ்வொருவரும் தங்கள் குலப்பெருமையை, குடித்தொன்மையை, மூதாதையர் மரபையே வெவ்வேறு சொற்களில் கூறிக்கொண்டிருப்பதை பார்த்தேன். சிலர் உரக்க கூவினர். சிலர் பூசலிட்டனர். சிலர் பாடினர். ஒவ்வொருவரும் வெவ்வேறு சொற்களில் அதையே கூறிக்கொண்டிருந்தனர்.

ஒருவர் மரபை பிறிதொருவர் சிறுமை செய்தார். அதற்கு மறுமொழியாக தங்கள் மரபை கூவிச்சொன்னார். அவ்வாறு கூவிச்சொல்லும் பொருட்டு பிறர் தங்களை சிறுமை செய்யவேண்டும் என்று எதிர்பார்த்தனர். நட்புடன் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருந்தவர்கள்கூட தங்கள் பெருமையையே கூறிக்கொண்டிருந்தனர். பூசல்கள் பெருகிக்கொண்டே இருந்தன. நான் சுருதனிடம் “இங்கு ஒவ்வொருவரும் தங்கள் குடிப்பெருமையையே சொல்லி பூசலிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றேன். “அது நிகழட்டும். அதுவே அவர்களை மானுடராக்குகிறது. இல்லையேல் வெறும் எறும்புத்திரளென அவர்கள் ஆகிவிடுவார்கள்” என்று சுருதன் கூறினார். ”இந்தப் பூசல்களெல்லாம் வெறும் நாப்பயிற்சியாகவே இருக்கின்றன. எவரும் எவரையும் தாக்கிக்கொள்ளாதவரை இதனால் இடரொன்றுமில்லை.”

“அல்ல, இவர்கள் சொல்லிச் சொல்லி பகைமையை பெருக்குகிறார்கள். அப்பகைமையையே மேலும் எண்ணி எண்ணி பெருக்கிக்கொள்கிறார்கள். இந்த வெறுமையில் அவர்களுக்கு ஆற்றுவதற்கு தொழிலேதும் இல்லை, ஆக்குவதற்கும் ஏதுமில்லை. எனவே இங்கு எதிர்மறை எண்ணங்களே பெருகுகின்றன. ஒருபோதும் நாம் இதை ஒப்ப இயலாது. இவ்வாறு பெருகும் வெறுப்பு உறுதியாக போராக வெடிக்கும், ஐயம் தேவையில்லை” என்று நான் சொன்னேன். “ஐயம் வேண்டாம், இவர்கள் சொல்லிச் சொல்லி உமிழ்ந்துகொண்டிருக்கிறார்கள். செல்லும் நிலத்தில் இந்த அடையாளங்கள் எவருக்கும் எஞ்சாது. அங்கே இவர்கள் வெறும் கையும்காலும்தான். நாடோடிகளுக்கு ஏது குலம்?” என்றார் சுருதன். “மாறாக பெருக்கில் இறங்கும்போது தெப்பத்தை தழுவிக்கொள்வதுபோல இவர்கள் குலங்களை பற்றிக்கொள்வார்கள். பூசலிடுவார்கள்” என்றேன்.

“என்ன செய்யலாம் அதற்கு?” என்று சுருதன் கேட்டார். “அவர்களை தனித்தனியாக பிரிக்க வேண்டும். அந்தகர்களுக்கும் விருஷ்ணிகளுக்கும் முதன்மையான போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. ஹேகயர்களுக்கும் போஜர்களுக்கும் தொன்மையான பகையொன்று இருக்கிறது. விருஷ்ணிகள் பிற அனைவருடனும் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். விருஷ்ணிகளாகவும் போஜர்களாகவும் அந்தகர்களாகவும் இவர்கள் ஒருங்கு திரள்வதை தடுக்கவேண்டும். இவர்களைக் கலந்து ஒவ்வொருவரும் தனித்தனி யாதவர்களாக உணர்வதற்கு வழி அமைக்கவேண்டும்” என்றேன். “அது இயல்வதென்று எண்ணுகிறாயா?” என்றார் சுருதன். “குலமில்லையேல் இவர்கள் சிதறிவிடுவார்கள். உளமிழந்து பித்தர்களாக மாறிவிடுவார்கள்.”

“இவர்கள் ஒற்றை விசையெனத் திரண்டு பணியாற்றுவதற்கு, ஒருவரோடொருவர் ஊக்கி நம்பிக்கை கொண்டு இந்நெடுவழிப் பயணத்தை மேற்கொள்வதற்கு வழி அமைப்பது அவர்களின் குலம்தான். அவர்களை தனித்தனியாக பிரித்தால் ஒவ்வொருவரும் உடல் சோர்ந்துவிடுவார்கள். அவர்களால் இப்பணியை செய்ய இயலாது. நாம் தங்க முடிவெடுத்த ஒரு நாழிகைக்குள்ளேயே ஒவ்வொருவரும் வெவ்வேறு பணிக்குழுக்களாக பிரிந்துவிடுகிறார்கள். சிலர் மணலை அள்ளுகிறார்கள், சிலர் கூடாரங்களை கட்டுகிறார்கள். சிலர் உணவு சமைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ஓரிரு நாழிகைக்குள்ளேயே உணவுண்டு மகளிருடனும் குழந்தைகளுடனும் பொந்துகளுக்குள் புகுந்து துயிலத்தொடங்கிவிடுகிறார்கள், இதை கலைத்து மீண்டும் ஒரு அமைப்பை இப்போது உருவாக்க இயலாது” என்றார்.

நான் அதை உண்மையென்று உணர்ந்தேன். ஆனால் வேறு வழியில்லை என்று சொன்னேன். “வேறு வழியில்லை என்று நானும் சொல்லவருகிறேன். அவர்களை கலைத்தால் இப்பணி நிகழாது என்பது இருக்கட்டும். கலைப்பதை அவர்கள் எதிர்த்தால் என்ன செய்வது? அவர்களை எவரைக்கொண்டு கலைப்பது? அவர்களைக் கொண்டே அவர்களை அடக்க முடியுமா என்ன? இந்தப் பெருந்திரளில் இன்று ஏவலரும் காவலரும் குடிகளும் கலந்து ஒன்றாக இருக்கிறார்கள். இங்கு அரசப்படை ஒன்று இல்லை என்பதை மறக்கவேண்டியதில்லை” என்றார் சுருதன். நான் ஒன்றும் சொல்லாமல் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் நெடுமூச்சுடன் “உண்மை” என்றேன்.

தீயவை நிகழுமென்ற அச்சம் என்னை ஆட்டிப்படைத்துக்கொண்டே இருந்தது. எக்கணமும் யாதவர்களுக்குள்ளே ஒரு பூசல் வெடிக்கக்கூடும். ஒவ்வொருமுறை பேச்சுகள் உச்சத்தை அடையும்போதும் இதோ படைக்கலங்களுடன் எழுந்து தாக்கப்போகிறார்கள் என்று எண்ணி நான் நடுங்கினேன். ஆனால் பொங்கி எழுந்து ஓர் உச்சத்தை அடைந்து ஏதோ இறையாணைக்கு கட்டுப்பட்டவர்கள்போல் ஒவ்வொருவரும் அடங்கி பின்னகர்வதை கண்டேன்.

பின்னர் நான் அதை புரிந்துகொண்டேன். ஒவ்வொரு தரப்பினரிடமும் பூசலை எழுப்புவதற்கான சிலர் இருந்தனர். எந்நேரமும் கொதிநிலையில் இருப்பவர்கள், ஒரு சிறு பூசலையே கடுமையான சொற்களால் உடல் கொந்தளிக்கும்படி மாற்றுபவர்கள், ஒவ்வொரு சொல்லுக்கும் இழிபொருள் கண்டடைபவர்கள். எப்போதும் பூசலை அவர்கள் முன்னெடுத்தனர். அதற்கென்றே அவர்கள் துணிந்து நின்றனர். அந்தத் திரளின் ஒருவகையான உணர்கொம்புகளும் நச்சுக்கொடுக்குகளுமாக அவர்கள் இருந்தனர். பூசல்களை அவர்களே தொடங்கினர், வளர்த்தனர். பிறகு ஒவ்வொருவராக அதில் ஈடுபட அது நுரைத்து மேலெழுந்தபோது அதுவரை அப்பூசல்களுக்கு அப்பால் இருந்த சிலர் எழுந்து வந்து பூசல்களை தணித்தனர்.

எப்போதும் அவர்களால்தான் பூசல் தீர்த்து வைக்கப்பட்டது. அவர்கள் பெரும்பாலும் முதியோர்கள். அனைத்திலும் ஆர்வமிழந்து தங்களுக்குள் சொற்களோடு தனித்திருப்பவர்கள். அவ்விலக்கத்தாலேயே அத்திரள் மேல் ஆணை கொண்டவர்களாக ஆனவர்கள். ஓங்கிய குரலில் “நிறுத்துங்கள்! என்ன இது? அறிவிலிகளே, போரிட்டு சாகவா போகிறீர்கள்? உங்கள் மைந்தர்களையும் பெண்டிரையும் இந்தப் பாலையில் சாகவிடப்போகிறீர்களா என்ன?” என்று அவர்கள் கூறியதுமே ஒவ்வொருவரும் தங்கள் நிலை உணர்ந்து மீண்டனர். முணுமுணுப்புகளுடன், கசப்புச் சொற்களுடன், காறித் துப்பியபடியும் முகங்களை இளித்து ஒருவருக்கொருவர் பழிப்புக் காட்டியபடியும் விலகிச்சென்றனர்.

அப்பூசல் ஓர் எல்லை கடந்த பிறகே அதை அணைப்பவர் எழுந்தனர். அந்த எல்லையை அது கடந்த பின்னர்தான் அது அணைக்கப்பட இயலும். பூசலில் ஒவ்வொருவரும் தங்கள் உள ஆற்றலை வீணடித்த பின்னர் மேலும் எழ முடியாது திகைத்து நிற்கும்போதுதான் அதை நிறுத்துபவர்களின் சொல் ஏற்கப்பட்டது. அதை அத்தீயை அணைக்கும் அம்முதியவர்களும் அறிந்திருந்தனர். எண்ணி அறிந்திருக்கவில்லை, இயல்பாகவே அப்போதுதான் அவர்கள் உள்ளம் அங்கே சென்றது. இந்த அமைப்பு இப்படித்தான் செயல்படும் என்ற உணர்வை நான் அடைந்தேன். இந்தக் காடு தன்னைத்தானே பற்றவைத்துக்கொள்ளவும் அணைத்துக்கொள்ளவும் பயின்றிருக்கிறது. அது என்னை சற்று ஆறுதல்படுத்தியது.

முந்தைய கட்டுரைகரு [குறுநாவல்]- பகுதி 2
அடுத்த கட்டுரைமூன்று டைனோசர்கள்-கடிதங்கள்