‘பிறசண்டு’ [சிறுகதை]

நன்றி K. P. Krishnakumar

 

“அப்பன் பாத்து வரணும்… வளி கொஞ்சம் எறக்கமாக்கும்”என்றான் ரத்தினம். அவர் கையைப்பிடித்து “பதுக்கே, காலை எடுத்து வைங்க” என்று காரிலிருந்து இறக்கினான்

“பாத்துக்கிடுதேம்ல, நீ கையை விடு…”

“விளுந்திருவீக”

“நான் உன்னைய பிடிச்சுகிடுதேன்… ”

அவர் அவன் தோளை பிடித்துக்கொண்டார். வெயில் ஏறியிருந்தது. கண்கள் கூசின. “லே அந்த கிளாஸை எடுலே”

“இருங்க”என்றான். டிரைவரிடம் “முருகேசன் அண்ணா, அந்த டாஷ்போர்டிலே ஒரு கூலர் கெடக்கு எடுங்க” என்றான்

முருகேசன் அதை எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தார். அதை கண்ணாடிக்குமேலே மாட்டிக்கொண்டார். அதுவரை வெண்ணிறமான இருளாகவே தெரிந்தது. கண்களுக்குள் சிவப்பு மஞ்சள் நீலம் என குமிழிகள் அலைந்தன. பிறகு பாதை தெளிந்தது. கூழாங்கற்கள் பரவிய மண்ணாலான பரப்பு. மேலிருந்து மழைநீர் ஓடி உருவான நீளமான தடங்கள்.

“பள்ளம் இருக்கு பாத்து”.

“இதாலே போலீஸ் ஸ்டேசன்?”

“இன்ஸ்பெக்டருக்க ஆப்பீஸ் இங்கயாக்கும்… ஸ்டேஷன் இல்ல” என்று ரத்தினம் சொன்னான் “வாங்க”

சிரோமணி “யம்மா, மண்டைக்காட்டம்மா” என்று மெல்ல நடந்தார். கால்கள் முதலில் தடுமாறினாலும் வழியை உணரத்தொடங்கியதும் உடலுக்கும் தரைக்கும் ஓர் இணக்கம் வந்தது

அவர் கையை எடுத்ததும் “பிடிச்சுகிடுங்க”என்றான்

“இல்ல, வேண்டாம்… ஒண்ணுமில்ல, நடக்கேன்”

அவர் நடந்தபோது இலையான் பூச்சி போல ஆங்காங்கே நின்று நடுநடுங்கினார். கால்களை தூக்கி தூக்கி வைத்து மேலே சென்றார்

அவர்கள் மெதுவாக நடந்து அந்த ஓட்டுக் கட்டிடம் நோக்கிச் சென்றார்கள். அது கார் நிற்கும் முற்றத்தில் இருந்து சற்று பள்ளத்தில் இருந்தது. சரிவான பாதையில் இறங்க இறங்க பெரிதாகி தலைக்குமேல் சென்றது.

பழைய திருவிதாங்கூர் காலகட்டத்து கட்டிடம். ஓடுகளை மட்டும் சமீபமாக மாற்றியிருந்தார்கள். பெரிய சுதைத்தூண்கள் கொண்ட வராந்தாவால் சூழப்பட்ட அறைகள் கொண்டது. சுவர்கள் கல்லடுக்கி கட்டப்பட்டவை.

அருகே சென்றபோதுதான் வராந்தாவில் ஏற எட்டு படிகள் இருப்பதை சிரோமணி கண்டார். ஆனால் நல்ல வசதியான நீளமான படிகள். கருங்கல்லை செதுக்கி உருவாக்கப்பட்டவை

நடுக்கம் ஓயும்வரை நின்றபின் முழங்காலில் கையை ஊன்றியபடி அவர் மேலேறினார். வராந்தாவை அடைந்தபோது வியர்த்திருந்தது. வராந்தா அரையிருளில் இருக்க உள்ளே அறைகள் முழுமையாக இருளில் இருந்தன. மின்விசிறிகள் கறகற என சுழலும் ஓசை.

சிரோமணி கறுப்புக் கண்ணாடியை கழற்றி சட்டைப்பைக்குள் வைத்தார். மற்ற கண்ணாடியையும் கழற்றி கண்களை அழுத்தி துடைத்துக்கொண்டார். மீண்டும் கண்ணாடியை போட்டு சற்றுநேரம் தரையை பார்த்துக்கொண்டிருந்தார்

தரையில் மண்ணாலான தரையோடு. அது மிகவும் தேய்ந்து சொரசொரப்பான பள்ளங்களாக இருந்தது. கருங்கல் சுவரை ஒட்டி நீண்ட பெஞ்சு போடப்பட்டிருந்தது. அதுவும் கனமான பழைய பெஞ்சு. சுவரில் அறிவிப்பு பலகைமேல் ஒட்டப்பட்ட காகிதங்கள் காற்றில் சிறகடித்தன.

“அப்பா இருங்க…இன்ஸ்பெக்டர் வந்தாச்சான்னு பாத்துட்டு வந்திருதேன்”என்றான் ரத்தினம்

“குடிக்க வெள்ளம் தந்திட்டுப் போலே”

ரத்தினம் தண்ணீர் குப்பியை அவர் அருகே வைத்தான். அவர் வீட்டில் சூடுசெய்த நீரைத்தான் குடிப்பது. அதை பெரிய கண்ணாடிக்குப்பியில் கொண்டுபோவார்

அவர் அமர்ந்துகொண்டார். அங்கே ஏற்கனவே ஒரு கிழவியும் அவளுடன் வந்த ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தனர். அப்பால் தரையில் இரண்டு கிராமவாசிகள் குந்தி அமர்ந்திருந்தனர். ஒருவர் கையை கும்பிடுவதுபோல கோத்து நெற்றியில் சாய்த்து வைத்திருந்தார். மற்றவர் தடித்த கண்ணாடியால் காகிதக்கட்டு ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தார்.

கீழே வேப்பமர நிழலில் நிறையபேர் நின்றிருந்தனர். எல்லாருமே மிகமிக மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர். காகங்கள் வேப்பமரம் முழுக்க அமர்ந்து கூவிக்கொண்டிருந்தன. தரை முழுக்க வேப்பஞ் சருகுகள்.

வராந்தா முனையில் ஒருவர் தரையில் நின்று வராந்தாவையே மேஜையாக்கி மனு எழுதிக்கொண்டிருந்தார். கூட நாலைந்துபேர். இரண்டு பேர் பெண்கள்.

ரத்தினம் வந்து “இன்ஸ்பெக்டர் வர கொஞ்சம் நேரமாவும்னு சொல்லுதாக… பெஞ்சிலே உக்காருங்க. டீ வேணுமா?”என்றான்

“வேண்டாம்” என்றார் சிரோமணி

“ஆரு ரெத்தினராஜ்லா, இங்க என்ன?” என்று ஒருவர் ரத்தினத்தின் தோளைத்தட்டினார்.

நெற்றியில் சந்தனப்பொட்டு போட்டிருந்தார். பெரிய மீசை டை போடப்பட்டு முறுக்கிவிடப்பட்டிருந்தது. வெற்றிலைவாய். தொங்கிய கன்னங்கள். பெரிய பானைவயிற்றுக்குமேல் கருப்பு பாண்டை போட்டு பெல்ட் போட்டிருந்தார். வெள்ளைச் சட்டையில் கணுக்கை பித்தான்கள் போடப்பட்டிருந்தன. வக்கீலாக இருக்கலாம்

“வேலு சாரா? எப்டி இருக்கீக? நமக்கு இங்க ஒரு சின்ன வேலை. ஒரு விசாரணைக்கு வரச்சொன்னாங்க…இங்க என்ன?” என்றான் ரத்தினம்

“இங்கதானே நம்ம தொளிலு? ஒரு பார்ட்டியை என்குயரிக்கு வரச்சொன்னாங்க… உங்களுக்கு என்ன கேஸு?” என்றார் வேலு

“நம்ம வீட்டிலே ஒரு தெஃப்டு”

“தெஃப்டா?”

“ஆமா, திருடன் நுழைஞ்சிட்டான்…”

“பூட்டிட்டு வெளியூர் போனியளோ?”

“இல்ல, அதைச் சொன்னா வெக்கக்கேடு. வீட்டிலே மாடியிலே நானும் என் வீட்டுக்காரியும் மகளும் உறங்கீட்டிருந்தோம். கீளே  இவரு ஒரு ரூமிலே. இவரை பாத்துக்கிடுத வேலைக்கார அம்மா பக்கத்திலேயே பாய போட்டு படுத்திருக்கா..”

“ஆருக்கும் தெரியல்லியா? ஜெகஜ்ஜால கில்லாடி திருடன்னு நினைக்கேன்” என்றார் வேலு

“என்னச் சொல்ல?” என்று ரத்தினம் குரலை தாழ்த்தினான். “உள்ளதைச் சொன்னா உள்ள மானமும் போயிரும்… அப்பா ஆளைப் பாத்திருக்காரு”

“உள்ளதா?” என்றார் வேலு “சத்தம் போட்டாரோ?”

“இல்ல, அதில்லா சொல்லுதேன்” என்று ரத்தினம் சொன்னான். “இவருக்கு சுகர் உண்டு. நெர்வ் சிஸ்டமும் பிரச்சினையாக்கும். ஆனா பாத்ரூம் உள்ள ரூமிலே இருக்க மாட்டாரு. மனசுக்கு பிடிக்கல்லேன்னு சொல்லுவாரு. அதனாலே சைடு ரூமிலே இவருக்கு கட்டில். அங்கேருந்து மெயின்ஹாலுக்கு வந்து பின்னாடி திரும்பி பாத்ரூம் போகணும். ராத்திரியிலே நாலுதடவையாவது போயிருவார்… வெளக்கை போட்டுட்டு சுவரைப் பிடிச்சுட்டு மெதுவா நடந்துபோய்ட்டு அப்டியே வந்திருவாரு. அண்ணைக்கு போறப்ப திருடனை பாத்திருக்காரு”

“எங்க?”

“இவரு மெயின்ஹாலுக்கு வந்திருக்காரு. அப்ப மாடிப்படியிலே ஒருத்தன் உக்காந்திட்டிருக்கான். இவரு அவனை பாத்து  ‘ஏம்லே இங்க உக்காந்திட்டிருக்கே?’ன்னு கேட்டிருக்காரு. அவன் சாதாரணமா ‘சும்மா இப்டியே காத்தாட ஒக்காந்திட்டிருக்கேன் மாமா’ன்னு சொல்லியிருக்கான்.  ‘போயி படுலே, மணி பன்னிரண்டு ஆச்சுல்லா’ன்னு சொல்லிட்டு இவரு ஒண்ணுக்கு போயிட்டு வந்து படுத்திட்டாரு”

“அய்யோ, அவன் ஆளு உங்கள மாதிரி இருப்பானோ?”

“சின்னப்பய சார்… இருவது வயசு இருக்கும்னு சொல்லுதாரு… நமக்கு அம்பதாகுது”

“அப்ப?”

“நல்லா கேட்டுட்டேன். ‘நீங்க அவனை கண்டு என்னன்னு நினைச்சீங்க அப்பா?’ன்னு கேட்டா ‘ஆரோ நம்ம பயன்னு நினைச்சிட்டேன்பா’ ன்னு சொல்லுதாரு. ஆருன்னு நினைச்சாருன்னு ஞாபகம் இல்லை. ஆரோ சின்னப் பய உக்காந்திருக்கான், அம்பிடுதான் மனசிலே ஏறியிருக்கு”

“என்னவே இது, அக்குறும்பா இருக்கு!”

“என்னத்தைச் சொல்ல?காலம்பற பாத்தா கொல்லப்பக்கம் திறந்து கிடக்கு. பீரோ திறந்திருக்கு. வார்ட்ரோப் துணியெல்லாம் செதறி கெடக்கு. இவ சமையலறையிலே பருப்புடப்பாவுக்குள்ள அஞ்சுபவுன் செயின் வச்சிருக்கா.. அதையும் விடல்ல”

“எம்பிடு போயிருக்கும்?”

“மொத்தம் நாப்பது பவுன்… அறுபதினாயிரம் ரூபா. வெள்ளிப்பாத்திரம் கொஞ்சம்… பதினாறு பட்டுசாரி”

“நல்ல அறுவடைய பண்ணிட்டானே… ஆளு அவன் கில்லாடியாக்கும்… ” என்றார் வேலு உற்சாகமாக  “வே, அவனை பிடிச்சா சொல்லும்வே, அந்த திருமுகத்தை நான் பாக்கணும்”

“எனக்கு எரியுது, உமக்கு சிரிப்பு என்ன? ” என்றான் ரத்தினம் “சிரிப்பா சிரிச்சாச்சு… இவரு பாத்ததை அப்டியே மறந்திருந்தா கூட இந்தக் கேவலம் இல்ல. காலம்பற போலீஸு வந்து நிக்குது. இவரு எஸ்.ஐ கிட்ட போயி எல்லாத்தையும் சொல்லிட்டார். நான் மேலே கான்ஸ்டபிளுக்கு பீரோவ காட்டிட்டு இருந்தேன். இல்லேன்னா நிப்பாட்டியிருப்பேன்”

“வம்பாச்சே?”

“பின்ன? எஸ்.ஐ பிடிச்சுகிட்டாரு. ஆரோ உங்களுக்கு தெரிஞ்சவன்தான் வந்திருக்கான்னு சொல்லிட்டாரு. குடைஞ்சு குடைஞ்சு கேக்காரு.  ‘அதெப்டிவே வீட்டுக்குள்ள ஒருத்தன் வந்து உக்காந்திருக்கான், நீரு எப்டி அப்டியே விட்டுட்டு போனீரு?’ன்னு கேக்காரு. ‘இல்ல, காத்தாட உக்காந்திருக்கேன்னு சொன்னானே’ன்னு இவரு சொல்லுதாரு. எஸ்.ஐ அப்டியே தீப்பிடிச்சு எரிஞ்சிட்டாரு. ‘வே, வீட்டுக்குள்ள பூட்டை உடைச்சு வந்து உக்காந்தா காத்தாடுவான் ஒருத்தன்? அறிவிருக்கா வே’ன்னு கத்திட்டாரு… நான் வந்து சமாதானம் செய்தேன். அவருக்கு ஆறவே இல்ல. சொல்லிச்சொல்லி மனுசன் நொந்திட்டாரு…”

அவர்கள் இருவரும் சிரோமணியைப் பார்த்தனர். அவர் அவர்களை நிமிர்ந்து பார்த்தார். அவருடைய விழிகள் நரைத்திருந்தன. புருவமும் நரைத்திருந்தது. முகம் ஒருபக்கம் இழுபட்டமையால் வலக்கண் தழைந்து ,வாய் வலதுபக்கம் கோணலாகி ,அவர் முகம் ஒரு நிரந்தரமான பாவனையை காட்டியது. அவர் எதையோ மறந்துபோய் நினைவுகூர முயல்வதுபோல. தலைவேறு ஆடிக்கொண்டிருந்தது

வக்கீல் வேலு சட்டென்று சிரிப்பை அடக்கி பக்கவாட்டில் திரும்பிக்கொண்டார்

“என்னவே?”என்றான் ரத்தினம்

“இல்ல, பாத்தா சிரிப்பை அடக்க முடியல்ல. ஒருத்தன் வீட்டுக்குள்ள வந்திருக்கான்… ”

“செரி விடும்” என்றபோது ரத்தினத்துக்கே சற்று சிரிப்பு வந்தது

“இவருக்கு என்ன பிரச்சினை?” என்று வக்கீல் கேட்டது சிரோமணிக்கு கேட்டது. அவர் நிமிர்ந்து பார்த்துவிட்டு வேப்பமரம் பக்கமாக திரும்பிக்கொண்டார்.

“பல பிரச்சினை. பிரசர் சுகர் உண்டு.. நியூரோ பிராப்ளம் உண்டு. அதிலேதான் தொடக்கம்”

“டிரீட்மெண்டு எடுக்கல்லியோ?”

“எல்லாம் எடுத்தாச்சு. தொடங்கி முப்பது வருசமாச்சு…கூடிட்டே போவுது. செரி இனி என்னன்னு விட்டச்சு”

“ஓ, சின்ன வயசிலே வந்தாச்சா?”

“சிவில் எஞ்சீனியராட்டு இருந்தாரு, தெரியுமில்ல?”

“அப்டியா?”என்று வக்கீல் திரும்பிப்பார்த்தார்

“நாப்பத்திரண்டு வயசிலே வேலையிலே இருந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க… நாலு வருசம் ஜெயிலிலயும் இருந்தாரு”

“ஏன்?”

“சோலையாறு டேம் இவருக்க பொறுப்பாக்கும்.சிவில் எஞ்சீனியரிங்கிலே இருந்த இன்ட்ரெஸ்ட் அக்கவுண்டிங்கிலயும் ஆஃபீஸ் மேனேஜ்மெண்டிலேயும் கிடையாது.ராத்திரி பகலா கன்ஸ்டிரக்‌ஷன் சைட்டிலேயே இருப்பார். மத்த வேலையை எல்லாம் இவரோட சீனியரே கிளார்க்கை வச்சு பாத்துக்கிட்டார். இவரு சிக்னேச்சர் மட்டும் போட்டுட்டு இருந்தார். அவன் அந்தக்கால கணக்கிலே முப்பத்தஞ்சு லட்சம் வரை ஆட்டைய போட்டுட்டான். கூட நாலஞ்சு கிளார்க்குகளும் அக்கவுண்ட் ஆஃபீசருங்களும் உண்டு. இவரை மாட்டிவிட்டுட்டாங்க.. எல்லாமே பக்கா டாக்குமெண்டு… எல்லாருமே சாட்சி, என்ன செய்ய?”

“அப்டியா?” என்று வக்கீல் திரும்பி சிரோமணியைப் பார்த்தார்.

“அவன் மதுரைக்காரன். அப்பாசாமின்னு பேரு. கொஞ்சம் அரசியல் பேக்ரவுண்டு உண்டு. இவருக்கு ஒண்ணும் கெடையாது. அப்புராணி. எங்க தாத்தா கொத்துவேலை பாத்தவரு. இவரு நல்லா படிச்சதனாலே தோட்டத்தை வித்து படிக்க வச்சாரு… இவரு பதினொண்ணாம் கிளாஸிலே ஸ்டேட் லெவல் எட்டாம் ரேங்கு. அந்தக்காலத்து ஆர்.இ.சியிலே நாலாம் ரேங்கு… நேரா பி.டபிள்யூ.டியிலே இஞ்சீனியர்… ஆனா உலகம் தெரியாது.ஒருத்தர்கிட்டயும் ஒரு தொடர்பும் இல்ல. எந்த சப்போர்ட்டும் கெடையாது. என்ன செய்ய? வச்சு மாட்டிவிட்டானுக…நேரா ஜெயிலு…அப்ப இப்டி ஆனதாக்கும்”

வக்கீல் சிரோமணியை மீண்டும் திரும்பிப்பார்த்தார்

“அம்மைக்க அண்ணன் என்னை படிக்க வச்சதினாலே மனுசனா நிமுந்தேன்…அவருக்க மகளை கெட்டி அவருக்க பிஸினஸை பாத்ததனாலே இப்டி இருக்கேன்”

அவர்கள் இருவரும் மீண்டும் சிரோமணியை திரும்பி பார்த்தார்கள்.

வேலு மீண்டும் சிரிப்பை அடக்கி “உள்ளதைச் சொன்னா பாவமாட்டு இருக்கு வே. ஆனாலும் சிரிப்பு வருது” என்றார்

“சிரிப்பேரு…” என்றபோது ரத்தினமும் சிரித்தான்.

ஜீப் வந்து நின்றது.நாலைந்து கான்ஸ்டபிள்கள் அதை நோக்கி ஓடினார்கள். பலர் எழுந்து நின்றார்க்ள்

“இன்ஸ்பெக்டர் வந்திட்டாருன்னு நினைக்குதேன்” என்று வக்கீல் சொன்னார்.

அவர்கள் முன்னால் சென்று படிகளில் நின்றனர்.சிரோமணி எழப்போனார். ரத்தினம் அவர் எழவேண்டியதில்லை என்று கைகாட்டினான்

இன்ஸ்பெக்டர் வேகமாக வந்து படிகளில் ஏறி திரும்பி “ஏய், யார்ப்பா அது. மனுவெல்லாம் இங்க வச்சு எழுதக்கூடாது. அந்தால போ” என்றபின் உள்ளே சென்றார்.ரத்தினமும் வக்கீலும் வணங்கியதை வெறுமே பார்த்து தலையசைத்தார். போலீஸ்காரர்கள் உள்ளே போக ஒரு போலீஸ்காரர் “தள்ளுங்க.. கூட்டம்போடக்கூடாது”என்றார்.

வக்கீல் உள்ளே செல்ல, ரத்தினம் வந்து “அப்பா நான் பாத்துட்டு வந்திருதேன்… இங்க இருங்க” என்று சொல்லி உள்ளே சென்றான்

சிரோமணி மீண்டும் கொஞ்சம் தண்ணீர் குடித்தார். அப்போது அப்பால் தூணின் மறைவிலிருந்து ஒல்லியான உடலுடன் ஒருவன் வந்து அவர் அருகே தரையில் குந்தி அமர்ந்தான். “சார்!” என்றான்

“ஆரு?”என்றார் சிரோமணி. அவர் அவனை சிறுவன் என்று முதலில் நினைத்தார். ஆனால் மீசை இருந்தது.

“சாருக்கு ஆளைத் தெரியல்லியா? நானாக்கும்… வீட்டுக்கு வந்தேன்லா?”

“டிவி ரிப்பேரு பாக்க வந்தியோ?”

“இல்ல சார். நானாக்கும் திருட வந்தது”

அவருக்கு நினைவு வந்தது. அவர் உடல் நடுங்கி துள்ளி துள்ளி போட்டது. கைகள் பதறி அங்குமிங்கும் ஆடின

அவன் அவர் கைகளைப் பிடித்து சேர்த்து அழுத்திக்கொண்டான். “சார் பயப்படாதீக… நான் சும்மா பேசத்தான் வந்தேன்… அண்ணைக்கு வீட்டிலேயும் நான் ஒண்ணும் செய்யல்லேல்லா?”

“ஆமா”என்றார் சிரோமணி. கையை துழாவ அவன் புரிந்துகொண்டு தண்ணீர் புட்டியை நீட்டினான். அவர் அதை வாங்கி கொஞ்சம் குடித்தார். ஆறுதலாக உணர்ந்தார்

“சார் இப்ப திருடனை அடையாளம் காட்டுகதுக்காக்கும் உங்களை விளிச்சிருக்காங்க.சார் என்னையை அடையாளம் காட்டப்பிடாது”

“ஏம்லே?”

அவன் சிரித்து “வேண்டாம், என்னத்துக்கு? நீரு நம்ம பாட்டா மாதிரி இருக்கேரு” என்றான்

“ஆனா நீ திருடினேல்ல?சரோஜாவுக்க நகைய கொண்டுட்டு போனேல்ல?”

“ஆமா, அது செலவுக்கு பைசா இல்லாம செஞ்சதுல்லா”

“அதெப்படிலே நான் சொல்லாம இருக்க முடியும்?”

“சொல்லாம இருங்க… கண்ணு தெரியல்லன்னு சொல்லுங்க. நான் கையிலே பிளாஸ்டிக் கவரு போட்டிருந்தேன். அதனாலே கைரேகை இருக்காது. நீங்க சொல்லேல்லன்னா என்னைய பிடிக்க முடியாது”

“நான் சொன்னா நீ இல்லேன்னு சொல்லுவேல்ல?”

“விடமாட்டாக, அடிச்சு பிரிச்சுப் போடுவாக. தொண்டிமுதலும் ரூபாயும் கிட்டாதவரை அடிச்சுகிட்டே இருப்பாக. நான் செத்திருவேன்”

“நீ திருடினேல்ல?”

“பின்ன செலவுக்கு என்ன பண்ண?”

“என்ன செலவு?”

“பைக்கு இருக்கு…அதுக்கு எண்ணை ஊத்தணும்லா?”

“ஆமா”என்றார் சிரோமணி

“எண்ணைவெலைய காலம்பற காலம்பற கண்டமானிக்கு ஏத்துதானுக…என்ன செய்ய? தெரியாதுன்னு சொல்லி போடுங்க” என்று சொல்லி திரும்பி அப்பால் நின்ற ஒரு பெண்ணிடம் “ஏட்டி சொல்லுடி”என்றான்

அவர் திரும்பிப் பார்த்தார். மிக அழகான பெண். பதினெட்டு வயது இருக்கும். மெலிந்தவள். சீரான பல்வரிசையும் பெரிய கண்களும் கொண்டவள்

“இவ ஆருலே?”

“நான் கெட்டப்போற குட்டியாக்கும்… நல்ல குட்டி. தையலு படிக்குதா… ஏய் சார கும்பிடு”

அவள் வந்து அவர் காலை தொட்டு கும்பிட்டாள்

“நல்லா இரு”என்று சிரோமணி சொன்னார் “நீ எதுக்குடி கள்ளனை கெட்டுதே?”

அவள் புன்னகைத்தாள்.

“நல்ல குட்டி”என்று அவன் சொன்னான். “நல்லா அளகாட்டு படமா தைப்பா”

“நீ மரியாதைக்கு ஜீவிக்கப்பிடாதாலே?”

“இனிமே மரியாதைக்கு சீவிக்குதேன்… பாட்டா, இந்த தடவை சொல்லீருங்க… ஒண்ணுமே தெரியல்லன்னு சொல்லீருங்க”

“லே, நீ எதுக்கு அண்ணைக்கு ராத்திரி படியிலே இருந்தே?”

“யோசிக்கணும்லா? ஒரு எடத்திலே அமைதியா இருந்து யோசிச்சுப் பாத்தேன்”

“என்னன்னு?”

“பைசாவும் நகையும் எங்கே இருக்குன்னு…”

“அப்ப நான் உன்னை பாத்தேன்..” என்றார் சிரோமணி “நீ எப்டிலே அப்டி தைரியமா இருந்தே?”

“பின்ன? எந்திரிச்சு ஓடியிருந்தா நீங்க கூவி  சத்தம் போட்டிருப்பீகள்லா?”

“ஆமா”என்று சிரோமணி சொன்னார். “ஆனாலும் உனக்க பிரெசென்ஸ் ஆஃப் மைண்டு அபாரமாக்கும்”

அவன் பிரெசென்ஸ் என்று மெல்ல சொல்லிக்கொண்டான். திரும்பி அந்தப்பெண்ணை பார்த்துச் சிரித்தான். பிறகு அவர் கைகளைப் பிடித்து அழுத்தி “தெரியாதுன்னு சொல்லீருங்க பாட்டா… இப்ப என்ன?”என்றான்

“லே, உனக்க சாமர்த்தியம் எனக்கு இருந்திருந்தா நான் அந்த அப்பாசாமிப் பயலையும் கேஸிலே இளுத்து விட்டிருப்பேன். கேஸை அவனே பாத்திருப்பான்… நான் மரியாதையா வேலைபாத்து ரிட்டயர் ஆகியிருப்பேன்” என்றார் சிரோமணி “தோணல்ல,தோணியிருந்தாலும் தைரியம் இருந்திருக்காது”

“அதுக்கு பிறசண்டு வேணும்லா?”என்று அவன் சொன்னான்

“ஆமா வேணும்…நாக்கிலயும் மனசிலயும்… லே மக்கா நாம ஆளு ஈஸியா இருந்தா அது வந்திரும். நான் முறுக்கிப்பிடிச்ச மாதிரி இருந்தேன். உடைஞ்சுபோயிட்டேன்”

“பிறசண்டு நல்லதாக்கும்” என்று அவன் சொன்னான். “பாட்டா நீரு நல்லவராக்கும். நீரு சொல்ல மாட்டேரு… இன்ஸ்பெக்டர் நாலஞ்சு பேரை வரச்சொல்லியிருக்காரு… எட்டுபேரு உண்டுண்ணு நினைக்கேன். எட்டுபேரையும் மாறிமாறி பாத்துட்டு தெளிவா தெரியல்லைன்னு சொல்லீரும், கேட்டியளா?”

“ஆனா நீ எப்டிலே அப்டி இருந்துபோட்டே… என்னா ஒரு சிரிப்பு…நினைச்சே பாக்க முடியல்ல”

“பாட்டா, இவ நல்ல பிறசண்டு உள்ள குட்டியாக்கும்… நீங்க ஆசீர்வாதம் செய்தாச்சு… இவளுக்காக நீங்க சொல்லணும்… ஒண்ணுமே தெரியல்லண்ணு”

“செரிடே”

“அப்பம் செரி…நான் மாறி நிக்கேன்… உங்க மகன் இப்ப வந்திருவான்”

“செரிடே, உனக்க பேரு என்ன சொன்னே?”

“சொல்லேல்ல…”என்றான் “ஏ.இன்னாசி முத்து,வயசு இருபத்திமூணு”

“உனக்கு அப்பனம்மை உண்டா?”

“அம்மை இருக்கா. அப்பன் விட்டுட்டு போயிட்டாரு. அம்மை ஒரு மாதிரி பிறசண்டு இல்லாத்த கிளவியாக்கும்”

“இவ பேரு?”

“எஸ்தர்… ஏட்டி கும்பிடுடீ”

அவள் மீண்டும் கும்பிட்டாள்.

“நல்ல பேரு…நல்ல குட்டி” என்றார் சிரோமணி

“வாறாரு’என்று எஸ்தர் சொன்னாள். அப்பால் ரத்தினம் கையிலிருந்த தாளை வாசித்தபடி வந்து கொண்டிருந்தான்.

“நான் மாறி நிக்குதேன்”என்று இன்னாசி எழுந்தான்

“அடிக்கடி வீட்டுக்கு வாடே” என்றார் சிரோமணி

=======

முந்தைய கட்டுரைகரு,நிழல்காகம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபொன்னீலன்