கரு [குறுநாவல்]- பகுதி 2

ஷம்பாலா நிகோலஸ் ரோரிச்

கரு [குறுநாவல்]- பகுதி 1 – 

தொடர்ச்சி….

முக்தா சொன்னார். ஆடம் என்னிடம் அன்று திபெத்திற்குள் பயணம் செய்த முதல் இரு பெண்களின் கதையையும் அவன் நோக்கில் மேலும் சொன்னான். விந்தையான முறையில் அவன் அந்த இருகதைகளையும் கோத்திருந்தான்.

சூசன்னா கார்சன் ரிஞ்ச்ஹார்ட்டின் மகன் சார்ல்ஸ் கார்சன் ஆகஸ்ட் 21 ஆம் தேதி இறந்தான். அது நிகழ்ந்தது நாக்சு நகரில் இருந்து வடக்கே எழுபது மைல் தொலைவில் இருந்த ஒரு மலைப்பாதையில். 14850 அடி உயரத்தில், பனிமலைகளின் உச்சியில்.

அவர்கள் தன்னந்தனியாக அந்த மலைப்பாதையில் நடந்து கொண்டிருந்தனர். ஓரிரு நாட்களுக்கே அவர்களிடம் உணவும் நீரும் இருந்தது. சுற்றிலும் மானுட வாழ்க்கைக்கான எந்த தடையத்தையும் அவர்கள் காணவில்லை. அவர்கள் தனித்து, களைத்து, உயிரின் துளி மட்டுமே உடலில் எஞ்ச நடந்து கொண்டிருந்தனர்.

ஓர் இடத்தில் சூசன்னா கீழே விழுந்துவிட்டாள். மேலே செல்வதற்கான உடலாற்றலை இழந்திருந்தாள். அதைவிட உள்ளம் நம்பிக்கை இழந்திருந்தது. பெட்ரூஸ் அவளை ஆறுதல்படுத்தி கூட்டிக்கொண்டு செல்ல முயன்றார்.

“இங்கே இப்படி விழுந்து கிடந்தால் நாம் செத்துவிடுவோம்” என்று பெட்ரூஸ் சொன்னார்.

“இங்கிருந்து நடந்தாலும் நாம் உயிர்பிழைக்கப் போவதில்லை. நம்மிடம் ஒருநாளுக்குரிய உணவே உள்ளது… கண்ணுக்கெட்டிய தூரம்வரை எவரும் இல்லை.”

“அருகே எவரேனும் இருப்பார்கள், பார்போம்” என்றார் பெட்ரூஸ்.

“மனிதர்கள் இருந்தால் வானத்தில் ஒரு பறவையாவது தென்படும்.. இல்லை, இது சூனியமான பனிவெளி… இங்கே எவருமே இல்லை” என்று சூசன்னா சொன்னாள்.

“நாம் கடைசிவரை முயலவேண்டும் சூசி… அதை நாம் பலமுறை பேசியிருக்கிறோம்.”

“ஆமாம், இதுதான் என் கடைசி எல்லை… இனி நான் அமைதியாக என் தேவனிடம் என்னை அளிக்க நினைக்கிறேன்.”

பெட்ரூஸ் என்ன செய்வது என்று அறியாமல் அவர் அருகே அமர்ந்திருந்தார். அவருக்குள் துயரமும் எரிச்சலும் நிறைந்திருந்தது.

சூசன்னா ”நீங்கள் என்னை விட்டுவிட்டுச் செல்லலாம் எனக்கு அதில் வருத்தமில்லை என்று புன்னகையுடன் சொன்னாள்.

“அதெப்படி போகமுடியும்?” என்றார் பெட்ரூஸ்.

“இந்த வெறுமையின் வெளியில் பொய்யும் உண்மையும் ஒன்றுதான்” என்று சூசன்னா சொன்னாள். “நான் அறிவேன், உங்களுக்கு நான் ஒரு பொருட்டே அல்ல.”

பெட்ரூஸ் அதை மறுக்கவில்லை.

“உங்களுக்கு எந்த மனிதரும் ஒரு பொருட்டல்ல. மெய்யான தேவனே கூட பொருட்டல்ல” என்று மீண்டும் சூசன்னா சொன்னாள். அப்படிச் சொல்லும்போது வலுவான ஒரு மறுப்பை எதிர்பார்ப்பது மனித வழக்கம், ஆனால் அவள் அப்படி எதிர்பார்க்கவில்லை.

“சூசி , நீ சொல்வதை நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் எனக்கு நானே கூட ஒரு பொருட்டு அல்ல… அதனால் நீ சொல்வதெல்லாம் சமன்படுத்தப்பட்டு விடுகிறது” என்றார் பெட்ரூஸ்.

அவரைப் பார்த்து சூசன்னா புன்னகைத்தாள். அப்போது போல அவருக்கு மிக அருகே, மிகமிக இணக்கமாக அவள் தன்னை உணர்ந்ததே இல்லை. அவர் கையை பற்றியபடி “நான் உன்னை காதலிக்கிறேன் பேட்” என்று அவள் சொன்னாள்.

பெட்ரூஸ் புன்னகைத்தார்.

“ஏனென்றால் நீ சாத்தான்”

பெட்ரூஸ் கண்களில் நீர் படர சிரித்தார்

“எனக்கு சற்று நீர் வேண்டும்… பிராந்தி இருக்குமென்றால் அது” என்றாள்.

பெட்ரூஸ் திரும்பி பார்த்தபோது அவருடைய குதிரை மெல்ல நடந்து மிக விலகிச் சென்றுவிட்டிருந்ததைக் கண்டார். அதன்மேல் பொதிகள் இருந்தன.

“நான் அதை கட்டாமல் வந்துவிட்டேன்… இரு” என்று அவர் அதன்பின் சென்றார். அவர் வருவதைக் கண்டதும் அது விரைந்து நடக்கத் தொடங்கியது.

சூசன்னா கண்களை மூடிக்கொண்டு மூச்சிரைத்தபடி பாறையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். பனியின் குளிர் உடலில் காய்ச்சலாக வெளிப்பட்டது. அந்த வெப்பத்தில் நெற்றியும் கண்களும் கொதித்தன.

அவள் கண்களை திறந்தபோது நீர்ப்பிம்பம்போல அலைபாய்ந்த காட்சியில் ஒருவன் மலைச்சரிவில் இறங்கி வருவதைப் பார்த்தாள்.

“யார்? அது யார்?”என்றாள்.

அவள் அருகே எவரும் இல்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தாள். அவன் மிகமெல்ல மலைச்சரிவில் இறங்கி வளைந்து அவளை நோக்கி வந்தான்.

ஆச்சரியமாக அவன் ஒரு வெள்ளையன். இருபது வயதான இளைஞன். நீண்ட சிறிய முகம். கோடு போன்ற உதடுகள். பச்சைக்கண்கள். சிவப்புத் தலைமயிர்.

அவன் அருகே வந்து புன்னகைத்தான்.

சூசன்னா பதற்றத்துடன் “உதவி… உதவி நாங்கள் இங்கே சிக்கிக் கொண்டிருக்கிறோம். வழிதவறிவிட்டிருக்கிறது.. நீ ஆங்கிலம் பேசுவாயா? பிரெஞ்சு?” என்றாள்.

அவன் புன்னகைத்து சொல்லுங்கள் என்பதுபோல தலையசைத்தான்.

“அருகே எங்கே கிராமம் இருக்கிறது? எங்கே நாங்கள் செல்லவேண்டும்?”

அவன் தெற்கே செல்லும் ஒரு சிறிய மலையிடுக்கைச் சுட்டிக்காட்டினான்.

“நீ என்ன செய்கிறாய் இங்கே? நீ யார்? இங்கே ஏதாவது மலையேற்ற முகாமில் இருக்கிறாயா?”

அவன் ஏதும் சொல்லாமல் தலைவணங்கி முன்னால் சென்று மறைந்தான்.

அவள் அவனை பதைப்புடன் பார்த்திருக்கையில் பெட்ரூஸ் கையில் குதிரையின் கடிவாளத்தை பிடித்தபடி வந்தார். “இது சலிப்புற்றிருக்கிறது. நம்மை விட்டுவிட்டுச் செல்ல விரும்புகிறது” என்றார்.

“பேட், நாம் செல்லவேண்டிய வழி அது. அந்த மலைப்பிளவு…”

“அதற்கப்பால் வழி இல்லை… அது செங்குத்தான மலைவிளிம்பு” என்றார் பெட்ரூஸ் “இந்தவழியாகச் செல்வோம்… நமக்கு வேறுவழியில்லை.”

“இல்லை, அதுதான் வழி. இங்கே இப்போது ஒர் இளைஞன் வந்தான். அவன் அந்த வழியை எனக்குச் சுட்டிக்காட்டினான்.அவன் இங்கேயே இருப்பவன், அவனுக்கு தெரிந்திருக்கும்.”

“உளறாதே… இங்கே எவர் வரமுடியும்? வந்தால் அவன் எங்கே?”

“அவன் அந்த வழியாகச் சென்றான்… அவன் இங்கே எங்கோ அருகில் இருப்பவன்” அப்போதுதான் அவள் அவனுடைய தோற்றத்தை நினைவுகூர்ந்தாள். “அவன் முறையான குளிராடைகள் கூட அணிந்திருக்கவில்லை.”

பெட்ரூஸ் அவளை கூர்ந்து நோக்கி “சொல், அவன் எப்படி இருந்தான்?” என்றார்.

“அவன் வெள்ளையன்… “ என்ற சூசன்னா  “அவன் எனக்கு அறிமுகமான முகம் கொண்டிருந்தான்” என்றாள்.

பெட்ரூஸ் புன்னகைத்து “சரி… நாம் கிளம்புவோம். நீ பிராந்தியை குடி… இந்த ஒரு மிடறு மட்டும்தான் மிஞ்சியிருக்கிறது” என்றார்.

அவள் அந்த பிராந்தியை வாயில் நெடுநேரம் வைத்திருந்து மெல்ல மெல்ல உள்ளே இறக்கியபின் கையூன்றி எழுந்துகொண்டாள். “பேட், எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது… அதுதான் வழி. அந்த இளைஞன் வழிகாட்டியிருக்கிறான்… செல்வோம்.”

பெட்ரூஸ் ஒன்றும் சொல்லவில்லை. அவளை தூக்கி குதிரையில் ஏற்றினார். அவரும் ஏறிக்கொண்டார்.

ஆனால் அந்த மலைப்பிளவை அடைந்ததும் அவர் நேராகச் சென்றார். சூசன்னா கூச்சலிட்டாள். “பேட் என்ன செய்கிறீர்கள்? இதுதான் வழி… இதுதான்…”

அவர் “நீ மனம் குழம்பிவிட்டாய்… பிரமைகள் வரத்தொடங்கிவிட்டன… அது மலையுச்சியின் விளிம்பு. அந்தப்பக்கம் நீயே பார், மேகம் நின்றிருக்கிறது.”

“பேட் அதுதான் வழி… அதுதான். எனக்கு தெரியும். அந்தப் பையன் காட்டிய வழி அதுதான்.”

“பேசாமல் வா” என்று பெட்ரூஸ் அதட்டினார்.

சூசன்னா சட்டென்று குதிரையை தட்டிச் செலுத்தி விசைகூட்டி அந்த மலைப்பிளவு நோக்கிச் சென்றாள். குளம்படி ஓசை எழுந்தது. மணலும் கூழாங்கற்களும் தெறித்தன.

“நில், சூசி, நில்!” என்று கூவியபடி பெட்ரூஸ் அவளுக்குப் பின்னால் குதிரையில் வந்தார்.

குதிரை அந்த மலைப்பிளவை அடைந்து அப்பால் சென்று மேலும் ஏறி ஒரு பாறையை அடைந்து நின்றுவிட்டது. மெய்யாகவே அதற்கப்பால் ஆழமான மலைப்பள்ளம். அவள் அதன்மேல் அமர்ந்தபடி மூச்சிரைத்தாள். ஏதோ கெட்ட கனவு முடிந்ததுபோல் தோன்றியது.

ஆனால் மிக ஆழத்தில் மலையின் மடிப்பில் ஒரு சிறு கூட்டத்தை அவள் பார்த்தாள். திபெத்திய படைவீரர்கள். அவர்கள் அவளை பார்த்துவிட்டனர்.

அவர்கள் வானை நோக்கிச் சுட்டனர். மலையில் டப் டப் டப் டப் என அந்த ஓசை எதிரொலித்துக் கொண்டே இருந்தது. ஒரு சிறிய வெண்ணிற லில்லி போல அங்கே அந்த வேட்டின் புகை தெரிந்தது.

அவளுக்கு பின்னால் வந்து நின்ற பெட்ரூஸ் தன் சிவப்பு ஆடையை எடுத்து வீசினார். அவர்கள் அதை கண்டுகொண்டார்கள்.

பெட்ரூஸ் “நல்லவேளை” என்றார்.

“நான் சொன்னேனே, அவன் வழிகாட்டியிருக்கிறான்” என்றாள்.

“அவனுக்கு அவர்கள் அங்கே இந்நேரம் செல்வார்கள் என்று எப்படித் தெரியும்?” என்றார் பெட்ரூஸ்.

“அவன் அறிந்திருக்கிறான்… மிகச்சரியாக அறிந்திருக்கிறான்.”

பெட்ரூஸ் ஒன்றும் சொல்லவில்லை.

ஒருமணிநேரத்தில் அவர்களை திபெத்தியப் படை சூழ்ந்துகொண்டது. அவர்கள் வந்துகொண்டிருப்பதை கீழிருந்து வேட்டு வழியாக மேலே அறிவித்தனர். வேட்டுக்கள் வழியாக பேசும் ஒரு மொழி அவர்களுக்கு இருந்தது. மேலிருந்த படை இறங்கிவந்தது.

அவர்களுக்கு உணவும் நீரும் அளித்த திபெத்தியப் படை நாக்சு நகருக்கு அழைத்துச் சென்றது. நாக்சு நகருக்குள் நுழையும்போது சூசன்னா அந்த இளைஞனை மீண்டும் கண்டாள். அவன் நகரின் தெருவிலிருந்து நேராக அவளை நோக்கி வந்தான்.

ஆனால் அப்போது அவள் மிகவும் களைத்திருந்தாள். அரைத்தூக்கத்தில் இருந்தாள். அவளால் அவனை வெறுமே வெறித்துப் பார்க்கத்தான் முடிந்தது. அவன் புன்னகைத்துக் கொண்டே கடந்துசென்றான்.

நாக்சு நகரின் ஆட்சியாளர் அவர்கள் லாசா செல்லக்கூடாது என்று ஆணையிட்டார். அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். ஆட்சியாளரின் மாளிகையிலேயே ஒரு சிறிய அறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.

மென்மயிர் கம்பிளித்தரையும், யாக்கின் தோலால் ஆன சுவர்களும் கொண்ட அந்த வெம்மையான அறை விண்ணுலகில் இருப்பதுபோல அவர்களுக்கு தோன்றியது. உலர்ந்த இறைச்சி போடப்பட்ட மக்காச்சோளக் கஞ்சியை குடித்து, தொடர்ச்சியாக இரண்டுநாட்கள் தூங்கி விழித்த பின்னர் அவர்கள் முழுமையாக மீண்டுவந்தனர்.

ஆட்சியாளர் மிகத்தெளிவாகவே சொல்லிவிட்டார். அவர்கள் எந்நிலையிலும் எதற்காகவும் தடைசெய்யப்பட்ட நகருக்குள் நுழைய முடியாது. அந்தப் பாதையில் செல்வதற்கே அனுமதி இல்லை. நாக்சுவிலிருந்து அப்படியே திரும்பிவிடவேண்டியதுதான்.

அவர்கள் ஒருவாரகாலம் அங்கே ஓய்வெடுத்துக் கொள்ளலாம். உரிய உணவும் பிற பயணப்பொருட்களும் வழங்கப்படும். நாக்சுவிலிருந்து ஒரு வணிகர்குழு கீழே காங்க்டிங் என்னும் ஊருக்குச் சென்று கொண்டிருந்தது. அக்குழுவுடன் அவர்களிருவரையும் அனுப்பிவைக்க அவர் முடிவெடுத்தார். அவர்களுக்கு உதவியாக நாக்சுவிலிருந்து இரண்டு திபெத்திய வழிகாட்டி வீரர்களையும் அனுப்பி வைத்தார். செல்லும் வழியில் அவர்களுக்கு உதவட்டும் என்று திபெத்திய வெள்ளிக் காசுகளையும் அளித்தார்.

செப்டெம்பர் ஆறாம் தேதி அவர்கள் கிளம்பியபோது கடுமையான பனிப்புயல் வீசியது. அது ஓய்வதற்காக காத்து நின்றிருந்தனர். அதன்பின் கிளம்பி நகரிலிருந்து வெளியே சென்றபோது அத்தனை கட்டிடங்களிலும் சுவரோரமாக மலைமலையாக பொருக்குப்பனி குவிந்து கிடந்தது. செத்த மீன் போலிருந்தது நாக்சு நகரம். வெள்ளி மின்னிய அதன் தெருக்களில் இருந்து அழுகல்வாடை எழுந்தது.

அவர்கள் நகரிலிருந்து வெளியேறும்போது பனித்துகள்கள் பறந்துகொண்டிருந்த சாலையோரத்தில் சூசன்னா மீண்டும் அந்த வெள்ளை இளைஞனைக் கண்டாள்.

அவள் பரபரப்புடன் “அதோ, அதோ அவன்” என்று சுட்டிக்காட்டினாள்.

ஆனால் பெட்ரூஸ் பார்ப்பதற்குள் பனிப்படலத்தை தூக்கி அனைத்தின் மேலும் திரையென இறக்கியது காற்று.

“அவன்தான்… அவன் இங்கே இருக்கிறான்… பேட், அவன் என் சிறிய தந்தை மைக் போல தோன்றுகிறான். அவனுக்கு எங்கள் இனக்குழுவுடன் ஏதோ தொடர்பு இருக்கிறது.”

பெட்ரூஸ் புன்னகையுடன் “ஓய்வெடு” என்றார்.

கிழக்கு நோக்கிச் செல்லும் அந்தப் பாதை தேனீர்ச்சாலை என அழைக்கப்பட்டது. கீழே சிக்கிமில் இருந்து டீத்தூள் பெட்டிகள் வரும் பாதை அது. மிகச்சிறிய குதிரைப்பாதை. பெரும்பாலும் மலையிடுக்குகள் வழியாக இறங்கிச் செல்வது. அது பனிமூடிக் கிடந்தது. வழிகாட்டிகளின் நினைவாலேயே அதற்கான தடத்தை கண்டடைய முடிந்தது. செப்டெம்பரிலேயே கடுமையான பனிப்பொழிவு தொடங்கிவிட்டது.

செல்லும்போது அவர்களை ஊக்கிய அனைத்தும் வடிந்துவிட்டிருந்தன. உள்ளம் சோர்வை பெருக்கிக்கொண்டது. சோர்வு தளர்வை, தளர்வு துயிலை உருவாக்கியது. அவர்களுக்குமேல் பனிப்பொழிவு வெண்ணிற துகள்களாக விழுந்துகொண்டிருந்தது. குதிரைக்குளம்படிகளை கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்கள்.

செப்டெம்பர் 17 ஆம் தேதி அவர்களின் பயணக்குழுவை பனிவெளிக் கொள்ளையர் தாக்கினார்கள். அரைத்தூக்கத்தில் குதிரைமேல் அமர்ந்திருந்த சூசன்னா சுற்றிலும் எழுந்த கலைந்த ஓசைகளை கேட்டு கண்விழித்தாள். என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அவளுடன் வந்துகொண்டிருந்த காவலர்களில் ஒருவன் வானை நோக்கி வேட்டு போட்டான். அந்த ஓசையை மலைகள் முழக்கமிட்டன. புகை காற்றில் வெண்ணிறத் துணிச்சுருள் போல அசைவில்லாமல் நின்றது

அதன்பின்னரே அவள் மலையின் சரிவான விளிம்பில் நின்றிருந்த கரிய உடை அணிந்த மனிதனைப் பார்த்தாள். அவன் கையில் நீண்ட ஈட்டியை வைத்திருந்தான். யாக்கின் தோலால் ஆன மயிராடையை அணிந்திருந்தான். அவன் முகம் தெரியவில்லை. ஒரு யாக் எழுந்து நின்றதுபோல தோன்றினான்.

“கொள்ளையர்! கொள்ளையர்!” என்று காவலர்கள் கூவினர். வாள்களையும் ஈட்டிகளையும் உருவிக்கொண்டனர். அவர்களிடம் இருந்தது ஒரே துப்பாக்கி. அதில் அவர்கள் குண்டு நிறைத்தனர். பெட்ரூஸ் தன் துப்பாக்கியில் குண்டு நிறைத்தார்.

அந்த முதல் மனிதன் கையை தூக்கினான். அவனருகே மேலும் கொள்ளையர் தோன்றினார்கள். பதினைந்து பேருக்குமேல் இருக்கும். அவர்கள் பெருகி நிறைந்து கொண்டிருப்பதாக தோன்றியது. அவர்களை நோக்கி மிகமெல்ல வணிகக்குழு முன்னேறியது.

சட்டென்று பக்கவாட்டில் மலைச்சரிவில் பாறைகள் உருண்டு வரத்தொடங்கின. எருமைகள் குளம்போசையுடன் மலையிறங்கி வருவதாகத் தோன்றியது. அவர்கள் கூச்சலிட்டுச் சிதறினர். அலறியபடி முட்டிமோதினர்.

அவர்கள் மேல் மலைப்பாறைகள் பொழிந்தன. வணிகர்களில் பலர் நசுங்கி இறந்தனர். பனிப்பரப்பெங்கும் ரத்தம் தெறித்தது. ரத்தமணம் சூசன்ன்னாவை அலறச் செய்தது.

மேலிருந்து கூச்சலிட்டபடி ஈட்டிகளும் வாள்களுமாக கொள்ளையர் இறங்கி வந்தனர். அவர்கள் வந்த வேகம் நம்பமுடியாததாக இருந்தது. அவர்களின் கால்கள் பட்டு உருண்ட பாறைகள் பாதையில் மழையாக விழுந்தன. அவற்றுடன் அவர்களும் குதித்தனர்.

பெட்ரூஸ் “சூசி, வேறுவழியில்லை. நம் குதிரைகளுடன் நாம் தப்புவோம்…” என்று கூவினார். அவர்களில் ஒருவனைச் சுட்டார். அவன் உருண்டு விழ அவன்மேல் பாறைகள் உருண்டன.

அவர்கள் அலறியபடி விலக அந்த இடைவெளி வழியாக சூசன்னாவும் பெட்ரூஸும் குதிரைகளை செலுத்தி ஊடுருவிக்கடந்து முன்னால் சென்றனர். பின்பக்கம் அவர்கள் அந்த வணிகக்குழுவினரை கொன்று பொருட்களைச் சூறையாடும் ஒலிகள் கேட்டுக்கொண்டிருந்தன

நெடுந்தொலைவு சென்றபின்னரே அவர்கள் மீளமுடிந்தது. சூசன்னா அழுதுகொண்டிருந்தாள். பெட்ரூஸ் “நல்லவேளை நாம் தப்பினோம்” என்றார்.

அவர்களுக்கு மேலே செல்ல வழி தெரியவில்லை. அந்தப்பாதையில் முன்னேறிச் செல்வது தவிர வேறு வழியே இல்லை. அவர்களிடம் இருந்த உணவு பத்து நாட்களுக்கு போதுமானது. வேண்டுமென்றால் மேலும் இரண்டுநாட்கள் கூட்டமுடியும். அதற்குள் அவர்கள் எவரையாவது சந்தித்தாக வேண்டும். ஆனால் வழிகாட்டிகள் இல்லை, வழியின் வரைபடங்கள் இல்லை, அந்த நிலம் பற்றிய எந்த செய்தியும் இல்லை.

அவர்கள் சென்றுகொண்டே இருந்தனர். அது வணிகப்பாதை என்பதனால் ஆங்காங்கே இரவு தங்குவதற்கான இடங்கள் இருந்தன. அவை பளிச்சிடும் செம்மஞ்சள் கொடிகளால் அடையாளப் படுத்தப்பட்டிருந்தன.

செப்டெம்பர் 26 ஆம் தேதி அவர்கள் ஒரு வழிமுனையைச் சென்றடைந்தனர். இரண்டு பாதைகள் அங்கே பிரிவதுபோல தோன்றியது. இரண்டில் எதை தெரிவுசெய்வது என்று தெரியவில்லை. அவர்கள் அங்கே திகைத்து நின்றனர். பெட்ரூஸ் அப்போது தொலைவில் ஒரு புகையை கண்டார். அது ஓர் ஆற்றுக்கு அப்பால் எழுந்தது. அது போ-சு என்னும் ஆறு.

“அது புகைதானா?”என்றார் “அல்லது மேகமா?”

“புகையேதான்… நாம் அங்கே செல்வோம்”

“வேண்டாம் நீ இங்கே நில், நான் இந்த ஆற்றை கடந்து அப்பால் சென்று அங்கே என்ன என்று பார்த்து வருகிறேன்…” என்றார் பெட்ரூஸ் “இங்கே நின்றிரு…”

அவர் பாறைகள் வழியாகத் தாவி அப்பால் சென்றார். அவள் அவர் செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். நெடுநேரமாகியது. இருட்டத் தொடங்கியது. அவர் அங்கிருந்து வரப்போவதில்லை என்று தோன்றியது.

ஆற்றைக் கடந்து சென்று என்ன நடந்தது என்று பார்க்கவேண்டும் என்று அவள் முடிவெடுத்தபோது அவளுக்குப் பின்னால் காலடியோசை கேட்டது. அவள் திரும்பிப் பார்த்தாள். அந்த இளைஞன். அவன் நாக்சேயில் இருந்து அத்தனை தொலைவு வந்திருக்கிறானா?

“உதவி உதவி!” என்று அவள் கூவினாள். “உதவி! என் கணவர் மறுபக்கம் சென்றிருக்கிறார்…”

அவன் அவளை அணுகி அவள் கண்களுக்குள் கூர்ந்து நோக்கி “செல், அவர் இறந்துவிட்டார்” என்றான்.

“என்ன சொல்கிறாய்?”

“சென்றுவிடு… அவர் இறந்துவிட்டார். பனிப்புயல் அணுகிக்கொண்டிருக்கிறது.”

“நான் எப்படிச் செல்வது?”

“என்னுடன் வா.”

அவள் அவனை கூர்ந்து பார்த்தாள். “நீ யார்? ஏன் இங்கே இருக்கிறாய்?”

அவன் ஒன்றும் சொல்லாமல் நடந்தான். அவள் குதிரையில் ஏறி அவனை தொடர்ந்து சென்றாள்.

“சொல், யார் நீ? ஏன் இங்கே இருக்கிறாய்?”

அவன் ஒன்றும் சொல்லவில்லை அவள் குரலை கேட்டதாகவே தெரியவில்லை.

“நீ என் குடும்பத்தின் முகம் கொண்டிருக்கிறாய்.”

அவன் திரும்பியே பார்க்கவில்லை. அவன் பேசப்போவதில்லை என்று தெரிந்தது. அவளுடன் பெட்ரூஸின் குதிரையும் வந்தது.

“இந்தக்குதிரையில் ஏறிக்கொள்”

அவன் அதற்கும் பதில் சொல்லவில்லை. அவள் தங்கவேண்டிய பாறையிடுக்கை அடைந்ததும் திரும்பிச் சுட்டிக்காட்டினான்.

“நன்றி, நீயும் இங்கே தங்கலாம்”

ஆனால் அவன் ஒன்றும் சொல்லாமல் மேலே நடந்தான். பனிப்படலத்திற்குள் மறைந்தான்.

அவள் அங்கே மென்மயிர்ப் போர்வைகளால் நன்றாகப் போர்த்திக் கொண்டு அமர்ந்தாள். உடல்நடுங்கிக் கொண்டிருந்தது. என்னென்னவோ உணர்வுகளால் அவள் உள்ளம் பித்துப்பிடித்தது போல பாய்ந்து கொண்டிருந்தது. அவள் பெட்ரூஸின் சாவுக்காக அழவேண்டும். ஆனால் அச்சமும் பதற்றமும் அவற்றையும் மீறிய திகைப்பும் அவளை ஆட்கொண்டிருந்தன.

அந்த இளைஞன் யார்? அங்கே எப்படித் தோன்றினான்? கூடவே வந்துகொண்டிருக்கிறானா? அவள் எண்ணங்களின் விசையாலேயே களைப்படைந்தாள். அப்படியே தூங்கிவிட்டாள்.

கனவில் அவள் அவனைக் கண்டாள். அவன் அவளருகே அமர்ந்திருந்தான். அவனுடைய மென்மையான புன்னகையை பார்த்துக் கொண்டிருந்தாள். அறிந்த முகம், யார் அவன்? அவனிடம் அவள் எதையோ சொல்ல விரும்பினாள். அவன் திரும்பி அவள் கையைப் பிடித்தான்.

அவள் விம்மியழுதபடி “உன் அப்பா இறந்துவிட்டார், தெரியுமா?” என்றாள்.

அவள் அச்சொற்களுடன் விழித்துக் கொண்டாள். திடுக்கிட்டதனாலேயே பாய்ந்து எழுந்து நின்றாள். சுற்றிலும் பார்த்தாள். அவளுடைய இரு குதிரைகளும் போர்வைகளை போர்த்திக்கொண்டு தலைகுனிந்து தூங்கியபடி நின்றன. அவளுடைய அசைவொலிக்கு செவி திருப்பின. ஒரு குதிரை மெல்ல முனகியது

குகைக்கு வெளியே பனிவெளியின் ஒளி. பனிப்படலங்கள் மெல்ல நொறுங்கும் ரகசியமான உறுமலோசை. அவள் நெஞ்சில் கைவைத்து நின்று ஏங்கி அழுதாள்.

அவள் தன்னந்தனியாக அந்தப்பாதையில் சென்றாள். அடுத்த சிற்றூரில் சில பனிவெளிக் கொள்ளையர்களைச் சந்தித்தாள். அவர்களுக்கு வெள்ளியை ஊதியமாகக் கொடுத்து வழிகாட்டியாக அமைத்துக் கொண்டாள். அவர்களை துப்பாக்கி முனையில் தன்னுடன் வைத்துக் கொண்டாள். அவர்கள் அவளை கொன்றுவிட்டு திருடிச்செல்ல, கற்பழிக்க எல்லா வாய்ப்பும் இருந்தது.

இறுகியாக கெய்கு [Gyegu]வைச் சென்றடைந்தாள். அங்கிருந்த திபெத்திய பௌத்த மடாலயத்தில் அவள் அடைக்கலம் புகுந்தாள். அங்கே சிலநாட்கள் தங்கியிருந்து அவர்களிடம் உதவிபெற்று மீண்டும் மலையிறங்கினாள். பெரும்பாலான இடங்களில் தனியாக நடந்தாள். அவ்வபோது இடையர் கிராமங்களில் இருந்து உதவிபெற்றாள்.

1898 நவம்பர் 26 ஆம் தேதி அவள் காங்டிங் நகரைச் சென்றடைந்தாள். காங்டிங்கில் இருந்த சைனா இன்லாண்ட் மிஷன் அலுவலகத்திற்கு அவள் சென்று சேர்ந்தபோது கிழிந்த ஆடை அணிந்த பிச்சைக்காரியாக இருந்தாள். அவள் மனநிலை பிறழ்வுற்றிருந்தது. அவள் தன்னுடன் வேறு ஒருவரும் இருப்பதாகவே நம்பி அவனிடம் பேசிக்கொண்டே இருந்தாள். அவள் தன்னந்தனியாக அத்தனை தூரம் எப்படி வந்தாள் என்று அவர்களால் நம்பமுடியவில்லை. அவர்கள் கேட்ட எல்லா கேள்விக்கும் தன்னை தன்னுடன் வந்த ஓர் இளைஞன் கூட்டி வந்ததாகவே சொன்னாள்.

சைனா இன்லாண்ட் மிஷன் பொறுப்பாளராக அப்போது இருந்தவர் ஜேம்ஸ் மோயெஸ்[James Moyes]. சூசன்னா பிறகு அவரைத்தான் திருமணம் செய்துகொண்டாள். அவர் சூசன்னாவுக்கு மருத்துவம் அளித்து உடலும் உள்ளமும் தேற ஏற்பாடு செய்தார்.

பெட்ரூஸ் என்ன ஆனார் என்று கண்டுபிடிக்க பிரிட்டிஷ் அரசு ஓர் ஆய்வுக்குழுவை அனுப்பியது, எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக எட்டு ஆண்டுக்காலம் அந்த தேடல் நிகழ்ந்தது

1900த்தில் சூசன்னா கனடாவுக்கு திரும்பினாள். தன் அனுபவங்களை கனடாவில் அவள் பல சர்ச்சுகளில் சொற்பொழிவாக ஆற்றினாள். அவையெல்லாம் வழக்கமான மிஷனரி சொற்பொழிவுகளகவே இருந்தன. அவளுக்கு பணம் தேவைப்பட்டிருக்கலாம்.

1902ல் மீண்டும் சூசன்னா சீனாவுக்கு திரும்பினாள். 1905ல்தான் மோயெஸை திருமணம் செய்துகொண்டாள். பெட்ரூஸ் சைனா இன்லாண்ட் மிஷனில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர், அவருடைய பாலியல் சாகசங்களும் நிதி முறைகேடுகளும் அதற்குக் காரணம். ஆகவே மோயெஸ் சூசன்னாவை திருமணம் செய்துகொள்ள சைனா இன்லாண்ட் மிஷன் ஒத்துக்கொள்ளவில்லை. மோயெஸ் சைனா இன்லாண்ட் மிஷனில் இருந்து ராஜினாமா செய்து விட்டு சூசன்னாவை மணந்துகொண்டார்.

சூசன்னாவின் உடல்நிலை மோசமாகியது. அவள் உளநிலையிலும் மாற்றங்கள் இருந்தன. அவள் விந்தையான கனவுகளில் மூழ்கியிருக்கத் தொடங்கினாள். அவ்வப்போது தன்னை ஓர் இளைஞன் வந்து பார்த்துச் செல்வதாகச் சொன்னாள். புரட்டஸ்டன்ட் சபையில் பேயோட்டும் சடங்குகளுக்கு அனுமதி இல்லை என்றாலும் மோயெஸ் ரகசியமாக அவ்வாறு சில சடங்குகளைச் செய்து பார்த்தார். எந்தப்பயனும் இல்லை.

சூசன்னாவின் உடல்நிலை மேலும் மோசமாகியது. அவளுடைய நுரையீரல் திபெத்தியப் பயணத்தால் முழுமையாகவே பழுதடைந்துவிட்டது, அதில் நிறைய துளைகள் இருந்தன என்றனர் மருத்துவர். நுரையீரலில் நீர்நிறைவது நியூமோனியாவுக்கு நிகரான நிலை. நியுமோனியா நோயாளியின் உள்ளத்தில் மயக்கத்தையும் கனவுகளையும் நிறைக்கும், விசித்திரமான உருவெளித்தோற்றங்களை அளிக்கும். சூசன்னாவின் உளமயக்கமும் கனவுகளும் அவள் நுரையீரல் கெட்டுவிட்டதனால்தான் என்றனர் டாக்டர்கள்.

1907ல் சூசன்னா மோயெஸ் இருவருமே கனடாவுக்கு திரும்பினர். 1908ல் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்தது. அந்த ஆண்டே சூசன்னா இறந்தாள். 1911ல் மோயெஸ் அமெரிக்கன் பைபிள் சொசைட்டி ஊழியராக மீண்டும் சீனாவுக்கு கிளம்பினார்.

சூசன்னா இறக்கும்போது நல்ல உளநிலையில் இல்லை என்று அவள் மருமகள் எலெனா ஜெஸி கார்சன் சொன்னார். சூசன்னா இறந்தபோது எலெனா உடனிருந்தார். மூன்றுமாதங்களுக்கும் மேலாக சூசன்னா இடவுணர்வும் காலவுணர்வும் அற்று எங்கோ ஒரு கனவிலென இருந்தார். உடனிருப்பவர்களை அவர் சிலபோது அடையாளம் கண்டாள், சிலபோது அடையாளம் காணவில்லை. ஆச்சரியமென்னவென்றால் அவள் மோயெஸை அறியவேயில்லை.

சூசன்னா மானசீகமாக திபெத்தின் பனிவெளியில் இருந்தாள் என்று எலெனா சொன்னார். அவள் குளிர்கிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். மூச்சிரைத்தது. அவள் வாழ்வது திபெத்தில் என்று தொடர்ந்து அவள் அருகே இருந்தமையால்தான் அவருக்கு புரிந்தது. ஏனென்றால் சூசன்னா மிகுதியாகப் பேசவில்லை. ஓரிரு சொற்கள் மட்டும்தான். ஏராளமான திபெத்திய மொழிச் சொற்கள் அவள் நாவிலிருந்து வந்துகொண்டிருந்தன.

முதலில் எலெனா கவனித்தது சூசன்னா அவ்வப்போது எவரையோ சந்திக்கிறார் என்பது. மெய்யான சந்திப்பு போலவே அனைத்து உணர்ச்சிகளும் கொண்டது அது. முகம் மலரும், கண்கள் நோக்கு கொள்ளும், உடலில் அசைவுகள் எழும். உடனிருப்பவர்களுக்கே அறைக்குள் எவரோ வந்துவிட்டிருப்பதாகத் தோன்றும்.

சூசன்னா அவ்வாறு வந்தவரிடம் பேசுவதில்லை. வந்தவரும் பேசுவதில்லை. அவர் சூசன்னாவின் கைகளை பற்றிக்கொண்டு அருகே அமர்வதுபோல, அவர்கள் ஒருவரை ஒருவர் வெறுமே நோக்கிக் கொண்டிருப்பதுபோல தோன்றும்.

சூசன்னா இறந்த அன்றும் அவ்வாறே நிகழ்ந்தது. சூசன்னா வந்தவரின் முகத்தை மலர்ச்சியுடன் நோக்கிக் கொண்டிருந்தாள். சற்றுநேரத்தில் ஏதோ தோன்ற எலெனா எழுந்து சென்று பார்த்தார். சூசன்னா இறந்திருந்தாள்.

முக்தா சொன்னார். அன்று அந்த குளிர்நிறைந்த சிறுகூடாரத்தில் ஒரு முட்டைக்குள் இரு குஞ்சுகள் போல மென்மயிர்ப் போர்வைக்குள் ஒண்டிக்கொண்டு ஆடம் சொன்ன கதைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். அந்தக்கதைகள் அவனில் மிகவும் வளர்ந்து உருமாறியிருந்தன. அவன் வெவ்வேறு கதைகளை கோத்துக்கொண்டிருந்தான்.

ஆனால் அறிந்த அனைத்தையும் அறியமுடியாத ஒன்றைக் கொண்டு பொருத்திக் கோத்துக்கொள்வது நாம் அனைவருமே செய்வது. அதற்கேற்ப ஒவ்வொன்றின் முனையிலும் அறியமுடியாமை ஒன்று உள்ளது. அது ஒரு கொக்கி போல இன்னொன்றுடன் கவ்விக்கொள்கிறது

இப்படிச் சொல்கிறேன், ஒரு வாழ்க்கை நிகழ்வில், ஒரு நினைவில் நாம் அறியமுடியாத ஒரு சிறுபகுதி உள்ளது, அதுவே இன்னொரு வாழ்க்கை நிகழ்வுடன் அல்லது நினைவுடன் அதைப் பொருத்திக்கொள்ள வாய்ப்பளிக்கிறது.

அதை மேலும் விரித்துக் கொள்கிறேன், இப்புவியின் வாழ்க்கை என நாம் அறிவது அறியமுடியாமைகளால் கோத்து நாம் உருவாக்கிக்கொள்வது. இது வினாக்களின் பெருந்தொகை. ஆனால் அறிவால் தொகுத்துக்கொள்வது என்று நாம் நம்புகிறோம். இவற்றை நேரில் உணர்ந்த பின்னரே வேதாந்தத்தில் இவை ஃபாஸம் என்றும் ஃபானம் என்றும் விளக்கப்படுகின்றன என்று படித்துணர்ந்தேன்.

பிறிதொருநாள் நான் ஆடமிடம் கேட்டேன், சூசன்னாவின் மகனை அந்த பிட்சு எப்படிப் பார்த்தார்? ஆன்னி அதைப்பற்றி மேற்கொண்டு ஆர்வம் காட்டவில்லையா என்ன?

ஆடம் சொன்னான், அந்த பிட்சு எப்படிப் பார்த்தார் என்று எனக்குத் தெரியாது. அவர் பார்த்ததற்கு காரணம் அவர் அதை ஆன்னியிடம் சொல்லவேண்டும் என்பதுதான். ஆன்னியிடம் அது ஏன் சொல்லப்படவேண்டும் என்றால் அது அவ்வண்ணம் பிணைக்கப்படவேண்டும் என்பதுதான்.

ஆன்னியின் உள்ளம் நான் சந்திக்கும்போது ஒரு சிக்கலான நிலையில் இருந்தது. அவர் கிறித்தவ மிஷனரிகளுக்குரிய ஆழமான மதநம்பிக்கைகளால் ஆனவர். புரட்டஸ்டண்ட் கிறிஸ்தவம் என்பது ஓர் அடிப்படையான மதநம்பிக்கையும் அதைச்சூழ்ந்து சமகால உலகியல் சார்ந்த பகுத்தறிவும் கொண்டது. அந்த மதநம்பிக்கை இந்த பகுத்தறிவால் பாதுகாக்கப்படுகிறது. பகுத்தறிவின் ஐயங்களையும் பதற்றங்களையும் மதநம்பிக்கை போக்குகிறது. அந்த பகுத்தறிவு ஒரு கோட்டை, ஒரு வாள்.

அதோடு பெண்களுக்கு நாற்பது வயதைக் கடக்கும்போது உருவாகும் பதற்றங்களும் ஐயங்களும் அவரை அலைக்கழித்தன. தன் வாழ்க்கை பொருளில்லாமல் முடிந்துவிட்டதோ என்று அவர் சந்தேகப்பட்டார், ஆகவே எதையாவது பெரிதாகச் செய்யவேண்டும் என்று முயன்றார்.

ஆன்னி அந்த பிக்ஷு சொன்னதை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. திபெத்தை மதமாற்றம் செய்தவர் என்ற பெருமைக்காக விழைந்தார். அதற்கான அமைப்பு ஒன்றை உருவாக்கி அதை தூக்கிக்கொண்டு அலைந்தார். அதைப்பற்றியே பேசிப்பேசி சலிப்பூட்டும் கிழவி என அடையாளப் படுத்தப்பட்டிருந்தார். அந்த வயதுக்கான தூக்கமின்மையும், அவ்வப்போது எழும் உளச்சோர்வும் அவரை வாட்டியது. அத்துடன் லண்டன்வாசிகளுக்கே உரிய மூட்டுவலிகள்.

ஏதோ வெள்ளையனைக் கண்டு தன் மகன் என அந்த பிக்ஷு நினைத்துவிட்டார் என்று அவள் நினைத்தார். வேறேதாவது வெள்ளைக்காரப் பெண்மணி தன் குழந்தையை அங்கே தொலைத்திருக்கலாம். அதைத் தொடர்ந்து செல்ல அவருக்கு மனமும் பொழுதும் இல்லை.

ஆனால் நான் இந்தியா வந்தபின் லடாக்கில் பணியாற்றியபோதெல்லாம் அனைத்து பிக்ஷுக்களிடமும் பிடிபடும் சிறு கொள்ளையர்களிடமும் சார்ல்ஸ் பற்றி விசாரித்துக் கொண்டே இருந்தேன். வெள்ளைக்காரக் குழந்தை அல்லது இளைஞனை திபெத்தில் காண வாய்த்ததுண்டா என்று விசாரிப்பேன்.

எனக்கு நேரடியாக தகவல் கிடைக்கவில்லை. ஆனால் மேஜர் ஜெனரல் டக்ளஸ் விலியம்ஸ் வைட்பரோஸ் அவருடைய மாலைநேர மதுவிருந்து ஒன்றில் தன்னுடைய லடாக் அனுபவங்களைச் சொல்லி வருகையில் இந்த திபெத்திய பனிவெளிக் கொள்ளையர்களைப் பற்றி சொன்னார். அவர்கள் வாழ்நாள் முழுக்க தன்னந்தனிமையில் வாழ்பவர்கள். பனி ஓநாய்களைப்போல சிறு குழுவாக பனிவெளியில் எப்போதும் அலைந்து கொண்டே இருப்பவர்கள்.

அவர்களுக்கு ஊர்களுடன் தொடர்பே இல்லை. அரிதாக ஊர்களுக்குள் நுழைந்து பெண்களை தூக்கிக் கொண்டு சென்றுவிடுவார்கள். பாலுறவு வைத்துவிட்டு பனிவெளியில் விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள். காதல் பாசம் அன்பு போன்ற மெல்லுணர்வுகள் இல்லை. ஒருவன் புண்பட்டு விழுந்தால் உடனே அவன் பனியாடைகளையும் சப்பாத்துக்களையும் கழற்ற தொடங்கிவிடுவார்கள். அவனை அங்கேயே சாகவிட்டு கடந்து செல்வார்கள். நன்றி, சொல்நம்பிக்கை என்பவை அவர்கள் அறியாதவை. தன் உயிரைக் காப்பாற்றியவனைக் கூட சற்று அசந்திருந்தால் கொன்றுவிட்டு கொள்ளையடித்து தப்பிச் செல்பவர்கள்.

ஏனென்றால் அவர்கள் அறிவாலோ நினைவுகளாலோ இயக்கப்படுபவர்கள் அல்ல. முழுக்க முழுக்க உள்ளுணர்வுகளால் செலுத்தப்படுபவர்கள். அவர்களுக்கு வழிகாட்டுபவை பிரமைகளும் உருவெளிக் காட்சிகளும்தான். பனிவெளியில் அவர்கள் இல்லாத உயிரினங்களை பார்ப்பார்கள். மனிதர்களையும் தெய்வங்களையும் பார்ப்பார்கள். அவர்களின் ஆணைகளின்படிச் செயல்படுவார்கள்

யதி எனப்படும் பனிமனிதனைப்பற்றி அவர்கள் அனைவருமே பேசிக்கொண்டிருந்தனர். யதியை அவர்கள் அஞ்சினர், வழிபட்டனர். பனிவெளிகளில் அவர்கள் சிக்கிக்கொண்டபோது அது தோன்றி அவர்களை பலமுறை காப்பாற்றியிருக்கிறது. ’பெரியபாதம்’ என்று அவர்கள் அதைச் சொன்னார்கள். பனிவெளியில் மனிதன் காலடியைவிட எட்டு மடங்கு பெரிய காலடித்தடங்களாக அது சென்ற வழி தெரியும்.

அதேபோல ஒளிவடிவமான மனிதர்களைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் திபெத்தின் பனிவெளியின் ஆழத்தில் ஏழு பனிமலைகளால் சூழப்பட்டு அமைந்திருக்கும் ஒளிவடிவமான ஷம்பாலா என்னும் நிலத்தைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து அவர்கள் தங்கள் நினைப்பால் எங்கும் செல்லமுடியும்.

அங்கே இறந்தவர்கள் செல்லமுடியாது. வாழ்பவர்களும் செல்லமுடியாது. தெய்வநிலையை அடைந்தவர்களின் நிலம் அது என்று பனிக்கொள்ளையர் சொன்னார்கள். இறந்தவர்களைச் சூழ்ந்து அவர்களின் வினைமிச்சங்கள் இருக்கும். அவர்கள் இப்பிறவியில் செய்த செயல்களின் விளைவுகள் அவர்களைச் சூழ்ந்த வெட்டவெளியில் காத்திருக்கும். அவை பஞ்சை நீர் ஈரமாக்குவதுபோல அந்த ஆத்மாக்களை பற்றி இறுக்கிவிடும். அந்த வினைமிச்சங்கள் நிகழும்பொருட்டு அவர்கள் மீண்டும் பிறந்தாகவேண்டும். பிறவிச்சுழலில் சிக்கிக்கொள்ளவேண்டும்

வாழ்பவர்கள் அங்கே செல்லமுடியாது. ஏனென்றால் ஒவ்வொரு கணத்திலும் அவர்கள் முந்தைய கணம்வரை செய்த செயல்களின் தொடர்ச்சியில் இருக்கிறார்கள். அடுத்த கணத்தில் செய்யவேண்டிய செயல்களின் தொடக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த இரு காலங்களில் இருந்தும் விடுதலை இல்லை

அங்கே செல்பவர்கள் யோகிகள், லாமாக்கள். அவர்கள் இப்பிறப்பில் முற்றாக நேற்றை அறுத்துவிடுகிறார்கள். முழுமையாகவே நாளை இல்லையென்ற நிலைக்கு செல்கிறார்கள். இன்றுமட்டுமே கொண்டவர்களாகிறார்கள். அப்போது அவர்களின் உடலில் ஒர் ஒளி எழும். அவர்களின் கைநகங்கள் விளக்குகள் போல சுடர்விடும். அவர்களின் உடலில் இருந்து எழும் ஒளியால் உடைகளே நிழலுருக்களாக தெரியும். அவர்களை மஞ்சுஸ்ரீ என்று திபெத்திய மெய்நூல்கள் சொல்கின்றன.

அவர்களில் அந்த ஒளி எழுந்துவிட்டதென்றால் அவர்களின் ஆடைகளை நீக்கம் செய்வார்கள். அவர்களை கொண்டுசென்று பனிவெளியின் ஒளிரும் பரப்பில் வைத்துவிடுவார்கள். திரும்பிவந்து இரவும் பகலும் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பார்கள். அவர்களின் உடல் அங்கே இருக்கும். அவர்களுக்குரிய நாளும்பொழுதும் அமைகையில் அவர்கள் எழுந்து சென்று மறைந்துவிடுவார்கள்.

பனிவெளியில் அவர்களின் உடல் இருக்காது. அதை பிற உயிர்கள் உண்டதன் தடங்கள் இருக்காது. காலடிச்சுவடுகளும் இருக்காது. அவர்கள் எப்படி மறைந்தார்கள் என்றே தெரியாது, அவர்கள் ஷம்பாலாவைச் சென்றடைந்துவிட்டிருப்பார்கள்.

மேஜர் ஜெனரல் டக்ளஸ் விலியம்ஸ் வைட்பரோஸ் சரியான பிரிட்டிஷ் உள்ளம் கொண்டவர். நான் சொன்னேனே ‘பகுத்தறிவுப் புரட்டஸ்டண்ட்’ உள்ளம் அது. ஆகவே அவர் உலகம் ஏழுநாட்களில் படைக்கப்பட்டது என்பதையும், மனிதனின் முதல்மூதாதையர் ஆதமும் ஏவாளும்தான் என்பதையும், ஏசு உயிர்த்தெழுந்தார் என்பதையும் அறிவார்ந்த செய்திகள் என்று நினைத்தார். பிற அனைத்தும் வெறும் நம்பிக்கைகள் என்று சொல்லி அறிவியல் நிரூபணம் கோரினார்.

கேலியும் கிண்டலுமாக அவர் பேசிவந்தபோது ஒரு விஷயத்தை கொஞ்சம் வியப்புடன் சொன்னார். அவர் சந்தித்த முதிய பனிக்கொள்ளையர்களில் ஒருவன் மெய்யாகவே அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை கண்டிருக்கிறான். அவனுடன் இருந்த அவன் தோழர்கள் இருவரும்கூட அதைக் கண்டிருந்தனர். அவர்களும் அதை ஆமோதித்தனர்.

அவன் பெயர் ஜிக்மே. அறுபது வயதானவன். பனிவெளியிலேயே பெரும்பாலும் வாழ்ந்து குறுகிச் சுருண்டு இறுகிய உடல்கொண்டவன். தெள்ளுப்பூச்சி போல அவனால் தாவமுடியும். மிகக்குறைவான உணவில் நெடுநாட்கள் வாழமுடியும். முகம் சுருக்கங்கள் படர்ந்தது. கண்கள் அச்சுருக்கங்களில் ஒன்றுக்குள் மின்னும் இரு துண்டு கண்ணாடிகள். வாய் இன்னொரு சுருக்கம்.

அவர்கள் ஐவர் இளைஞர்களாகப் பனிவெளியில் கொள்ளையடித்து வாழ்ந்த காலம் அது. அவர்களுக்கு ஒரு பாறைமுகடு இருந்தது. அதன்கீழே இருந்த குகையில் அவர்கள் ஒடுங்கிக் கொள்வார்கள். ஒருவன் மேலிருந்து வேவுபார்ப்பான். அவன் கீழே தனிப்பாதையில் இருவர் தள்ளாடி நடந்த குதிரையில் செல்வதை கண்டான்

அவர்கள் ஓசையில்லாமல் இறங்கி வந்து அந்த இருவரையும் பின்தொடர்ந்தனர். அவர்கள் அணிந்திருந்த தரமான மென்மயிர் ஆடைகள் அவர்கள் கீழிருந்து வந்தவர்கள் என்று காட்டியது. அவர்கள் கையில் மென்மயிர் சுருளில் எதையோ வைத்திருந்தனர். துயர்கொண்டவர்கள் போலிருந்தனர்.

மேலிருந்து பொழிந்த புழுதியும் மண்ணும் கூம்புபோல ஆகி பாதையோரமாக நின்றிருந்த இடத்தில் அவர்கள் நின்றனர், அவர்கள் இருவரும் வெள்ளையர், ஒருவர் பெண் என்பது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவர்களிடம் துப்பாக்கி இருக்கக்கூடும் என ஜிக்மே கையால் சைகை காட்டினான். பிறர் தயங்கினர்.

அவர்கள் அந்த மென்மயிர்ச் சுருளுக்குள் இருந்து ஒரு குழந்தையை வெளியே எடுத்தனர். அது அசைவற்றிருந்தது. ஆனால் உயிருடன் இருந்தது. பனிநிலத்தில் கடுங்குளிருக்கு ஆளாகும் குழந்தைகள் அப்படி நரம்புகள் உறைந்து இறந்தது போல ஆகக்கூடும். அதை திபெத்தியர் அறிவார்கள்.

அந்த வெள்ளைத் தம்பதியினருக்கு அது புரியவில்லை என்றும் அவர்கள் அதை புதைக்கப் போகிறார்கள் என்றும் தெரிந்தது. ஆனால் ஜிக்மேவும் கூட்டமும் அவர்களை எந்தவகையிலும் தடுக்க முயலவில்லை. அவர்களுக்கு அந்தவகையான உணர்வுகளேதுமில்லை. அவர்கள் அந்த வெள்ளையரிடம் துப்பாக்கி இருக்கிறதா என்றுமட்டும்தான் பார்த்தனர்.

அந்த வெள்ளைத் தம்பதியினர் மண்ணை சிறுகத்தியாலும் சாப்பிடுவதற்கான தட்டாலும் தோண்டினர். அதில் அக்குழந்தையை புதைத்தனர். மண்ணை அள்ளி மேலே போட்டு அதன்மேல் குச்சிகளை சேர்த்து சிலுவை போல ஆக்கி வைத்தனர். அவர்களில் ஆண் ஏதோ பிரார்த்தனை போலச் சொன்னான். அந்தப்பெண் அழுதாள்.

அதன்பின் அவர்கள் மீண்டும் சென்று குதிரைகளில் ஏறிக்கொண்டனர். அந்த ஆணின் கையில் துப்பாக்கி இருந்ததை ஜிக்மே பார்த்துவிட்டான். அவன் சைகையால் தன் கூட்டத்தினருக்கு துப்பாக்கி என்று காட்ட மற்றவர்கள் தலையசைத்தனர்.

அவர்களை ஓசையின்றி பின்தொடர்ந்த ஜிக்மேயும் குழுவும் அந்த மண்மேட்டை கடந்துசென்றபோது அங்கே ஓர் அசைவை கண்டனர். புதைக்கப்பட்ட குழந்தை அசைந்தது. அதன்மேல் போடப்பட்ட மண் விரிசலிட்டது. அந்த மண்குவையிலிருந்து புகை எழுந்தது

அவர்கள் அருகே சென்று அந்த மண்கூம்பை குனிந்து பார்த்தனர். என்ன நடந்தது என்று ஜிக்மே புரிந்துகொண்டான். அந்த மண்குவைக்கு அடியில் சிறுவிரிசல் வழியாக கந்தக வெண்புகை வெளிவருகிறது. அது அங்கே நல்ல வெப்பத்தை உருவாக்கும். அங்கே செல்லும் நீர் சூடாக இருக்கும். சில இடங்களில் உணவை வேகவைக்கும் அளவுக்குக் கொதிக்கும். அந்த விரிசல்மேல் மண்பொழிந்து உருவான கூம்பு அது. அதை குழந்தையை புதைக்கும்போது அவர்கள் கலைத்துவிட்டனர்

அவர்கள் மண்ணை விலக்கினர். உள்ளே கைபொறுக்கும் அளவுக்கு வெம்மை உருவாகியிருந்தது. கந்தகமணம் கொண்ட நீராவி எழுந்தது. குழந்தை உடலின் உறைவு அகன்று கண்களை திறந்து கைகால்களை அசைத்தது.

ஜிக்மே அந்தக்குழந்தையை கைகளில் எடுத்தான். அது ஒருவயதுகூட ஆகியிருக்காத வெள்ளைக்காரக் குழந்தை. அத்தகைய சூழல்களில் குழந்தைகள் அழவேண்டும், ஆனால் அது அவனைப் பார்த்துச் சிரித்தது. மேல் ஈற்றில் இரண்டு பால்பற்கள் கொண்ட சிவந்த வாயும், நீலக்கல் போன்ற கண்களும் குருவிவால் போன்ற சிவப்புத் தலைமுடியும் கொண்ட அழகான குழந்தை. அதன் கன்னங்கள் பனியில் வெந்து சிவந்திருந்தன.

ஜிக்மே அதன் விரல்களில் தன் விரலை வைத்தான். அது சிறுவிரல்களால் பிடித்துக்கொண்டு துள்ளித்துள்ளி எழமுயன்று கால்களை உதைத்துக் கொண்டது. ஜிக்மேவின் நண்பன் “நாம் இதை என்ன செய்வது?” என்று கேட்டான்.

ஜிக்மேவுக்கும் ஒன்றும் புரியவில்லை, அவன் அந்தக்குழந்தையை வசியம் செய்யப்பட்டதுபோல பார்த்துக்கொண்டிருந்தான். அது சூரிய ஒளியில் பனிக்கட்டி போல ஒளிவிடுவதாகத் தோன்றியது.

“நாம் இதை கொண்டுசெல்ல முடியாது. நம்மிடம் இதற்கான உணவும் இல்லை” என்று நண்பன் சொன்னான்.

“இதை இங்கேயே விட்டுவிட்டுச் செல்வோம்…” என்றான் இன்னொருவன்.

வேறுவழியே இல்லை. ஜிக்மே அந்தக் குழந்தையை அந்த மண்மேட்டிற்கு அருகே சாலையோரமாக வைத்துவிட்டான். அவர்கள் அந்த வெள்ளையரை பின்தொடர்ந்து சென்றார்கள்.

ஆனால் சற்று தொலைவு சென்றபின்னர் மனம்கேட்காமல் ஜிக்மே திரும்பி வந்தான். அந்தக்குழந்தையை கொண்டுசென்று ஏதாவது மலைக்கிராமத்தின் முகப்பில் இருக்கும் ஸ்தூபத்தின் அறைக்குள் வைத்துவிடலாம், அது உயிர்பிழைக்க ஒரு வாய்ப்பு என்று அவன் நினைத்தான். அவன் தோழர்கள் அவனுக்காக காத்து நிற்க அவன் விரைந்து நடந்தான்

ஆனால் அவன் வைத்த இடத்தில் அக்குழந்தை இல்லை. அதன் பனியாடை மட்டும் அங்கே கிடந்தது. உள்ளிருந்து குழந்தையை எவரோ எடுத்துச் சென்றிருந்தார்கள்.

அவன் அந்தப்பகுதியை முழுக்க குனிந்து கூர்ந்து நோக்கினான். அவர்கள் பனிநிலத்தில் தடம்தேடி கண்டடைவதில் நிபுணர்கள். அங்கே மனிதர்களோ விலங்குகளோ வந்ததற்கான எந்த தடையமும் இல்லை

ஜிக்மே அஞ்சி திரும்பி ஓடினான். அவன் சென்று சொன்னதும் அவன் தோழர்களும் அஞ்சிவிட்டனர். அவர்கள் ஓடி பனிச்சரிவில் ஏறி இன்னொரு குகைக்குச் சென்று ஒடுங்கிக் கொண்டனர். அவர்களிடம் எதுவுமே இருக்கவில்லை. பசியும் குளிருமாக ஏழுநாட்கள் அங்கிருந்தனர். ஆனாலும் வெளியே வரமுடியாதபடி அவர்களை அச்சம் ஆட்டிப்படைத்தது.

மேஜர் ஜெனரல் டக்ளஸ் விலியம்ஸ் வைட்பரோஸ் சொன்னார். “அந்த குழந்தை பசியால் மென்மயிர் ஆடைக்கு உள்ளிருந்து எழுந்து தவழ்ந்திருக்கும். அதன்மேல் மலைசரிவில் ஒழுகி வந்த மண் பொழிந்து மூடியிருக்கும். அருகே மண்கூம்பு புதிதாக இருந்ததா என்று அந்த முட்டாள்கள் தேடியிருந்தால் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் இவர்கள் ஒவ்வொன்றிலும் முதலில் பிரமைகளைத்தான் அடைவார்கள், அவற்றையே நம்புவார்கள்.”

ஆடம் சொன்னான். “நான் மேஜர் ஜெனரல் டக்ளஸ் விலியம்ஸ் வைட்பரோஸ் அவர்களிடம் எதையுமே விவாதிக்கவில்லை. என் உடல் அதிர்ந்துகொண்டிருந்தது. அன்று எழுந்து என் அறைக்கு திரும்பும்போது நான் உடல் உடைந்து வெளிப்பட்டுவிடுவேன் என்ற அளவுக்கு விம்மிக்கொண்டிருந்தேன்.”

முக்தா சொன்னார். ஆடம் என்னிடம் சொன்ன கதைகள் எல்லாமே ஒரே கதையின் வெவ்வேறு பகுதிகள். நான் அவற்றை என் வாசிப்பைக்கொண்டு இணைத்துக்கொண்டேன். அவன் ஆன்னி பற்றி என்னிடம் இன்னொரு நிகழ்வை சொன்னான்.

ஆடம் சொன்னான். நான் ஓராண்டுக்குப்பின் ஆன்னி டெய்லரின் தனிப்பட்ட குறிப்புகளை நகலை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. 1894ல் ஆன்னி டெய்லரின் My Experiences in Tibet என்ற நூல் வெளிவந்தது. ஆனால் அது ஒரு தெளிவான evangelical odyssey. அதில் அதன் வாசகர்கள் எண்ணுவதன்றி வேறேதும் இல்லை. கிறிஸ்துவின் மீதான நம்பிக்கை, அது அளித்த அற்புதங்கள். கூடவே பிரிட்டிஷ் நிமிர்வையும் துணிவையும் வெளிப்படுத்தும் இடங்கள். மிஷனரிகள் விசுவாசத்தை வேளாண்மை செய்து அறுவடை புரிபவர்கள்.

அத்துடன் இன்னொன்றும் உண்டு. 1904 ல் நிகழ்ந்த திபெத் மீதான கர்னல் யங்ஹஸ்பெண்ட் படையெடுப்பில் தானும் பங்குபெற்று திபெத்தின் அழிவுக்கு காரணமாக அமைந்தது ஆன்னியில் ஆழமான குற்றவுணர்வை உருவாக்கியிருந்தது. அந்தப் படையெடுப்பை நியாயப்படுத்தும் வகையில் திபெத்தின் பின்தங்கிய நிலை, வறுமை, அந்த மக்களின் ஆன்மிகமான இருள் ஆகியவற்றை அவர் சொல்லியாக வேண்டியிருந்தது.

ஆனால் அவ்வப்போது அவர் திபெத்தின் மக்களின் உபசரிப்பையும் உதவிகளையும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. அந்த இடங்களில் அவர் உணர்ச்சிவசப்பட்டார். உடனே நிலைமீண்டு தன்னுடையது தெய்வ ஆணைப்படி நிகழ்ந்த ஒரு பயணம் என்று சொல்ல தொடங்கினார். கடைசிவரை திபெத்துக்குள் அவர் ஊடுருவியது பிழையா சரியா என்றே ஆன்னி ஊசலாடினார். அது ஏசுவின் ஆணைப்படி நடந்தது என்பதே அந்த குழப்பத்திலிருந்து அவர் வெளிவருவதற்கான வழியாக இருந்தது.

அந்நூலுக்காக ஆன்னி எழுதிய குறிப்புக்களின் நகல் அவருடைய குடும்பத்தினரிடம் இருந்தது. எந்த ஒழுங்குமில்லாத நினைவுகளின் பெருந்தொகுப்பு அது. அதை நான் 1944ல் லண்டன் சென்றபோது அவர்களின் வீட்டுக்குத் தேடிச்சென்று வாசித்தேன். அதில் நான் தேடிய ஒரு நிகழ்வு இருந்தது.

ஆன்னி டெய்லரின் குழு போ-சு ஆற்றின் கரையை அடைந்தபோது சுருங்கி எழுவர் மட்டுமே கொண்டதாக ஆகிவிட்டிருந்தது. நோகா என்ற சீனமுஸ்லீம் வழிகாட்டியும் அவனுக்கு கட்டுப்பட்ட நால்வரும் ஆன்னியின் மொத்தக் குழுவையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். அது தொடர்ந்து பூசல்களை உருவாக்கிக்கொண்டிருந்தது.

பயணத்திற்கு தேவையான பணத்தை வெள்ளிக்கட்டிகளாக மாற்றி ஆன்னி தன் பையில் வைத்திருந்தார். திபெத்தில் அன்று வெள்ளிதான் பொதுவான நாணயமாக இருந்தது. அது சீனர், ஆங்கிலேயர், திபெத்தியர், மேற்கிலிருது வரும் முஸ்லீம்கள் ஆகிய அனைவருக்குமே பொதுவானது. நோகா அதை அவள் தன்னிடம் அளிக்கவேண்டும் என்று கோரினான். அதை அளித்தால் பயணமே நின்றுவிடும் என்று ஆன்னி அறிந்திருந்தார்.

இரண்டுமுறை நோகா ஆன்னியை அதட்டி அவரிடமிருந்து வெள்ளிக்கட்டிகளை பறித்துக்கொள்ள முயன்றான். ஆன்னி தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அவனை மிரட்டினார். அது பழையபாணி பிஸ்டல். ஒருமுறை குண்டுபோட்டால் மீண்டும் திறந்து குண்டு போடவேண்டும். அவரிடமிருந்ததே இரண்டு குண்டுகள்தான். ஆனால் நோகா துப்பாக்கியை அஞ்சினான்.

நோகா கடைசியில் ஒரு வழியை கண்டுபிடித்தான். அவர்கள் ஒரு கோலோக் கிராமத்தை கடந்துசெல்லும்போது அவன் அவர்களிடமிருந்து பிரிந்து சென்றான். அவர்கள் அதை அறியவில்லை. கொலோக் மக்கள் மலையிடையர்கள். அன்னியரை மிக அஞ்சுபவர்கள். அவர்களின் கிராமங்களை பதினாறாம் நூற்றாண்டு முதலே ஆப்கானிய கொள்ளையர் தாக்கியதுண்டு. அவர்களுக்கு அன்னியர் அனைவருமே ஆப்கானியர்தான்

நோகா அவர்களிடம் ஒரு கொள்ளைக் கூட்டம் கிராமம் நோக்கி வருவதாகச் சொன்னான். அவர்கள் சீற்றத்துடன் ஈட்டிகள், கவண்கள், வாள்களுடன் கிளம்பினர். ஆன்னியின் கூட்டத்தை அவர்கள் தாக்கினர் ஆன்னியின் சீன உதவியாளன் ஈட்டியால் குத்தப்பட்டு இறந்தான். ஆன்னி சரண் அடைந்தார்.

அவர்கள் அவளை இழுத்துச்சென்று அடித்தனர். கட்டிவைத்து விசாரித்தபின் வெள்ளிக்கட்டிகளை எடுத்துக் கொண்டனர். நோகா துப்பாக்கியையும் வெள்ளிக்கட்டிகளில் ஒரு பகுதியையும் எடுத்துக் கொண்டு அவர்களை விட்டுச் சென்றான். ஆன்னியும் போன்ட்ஸோவும் பெண்டிங்கும் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிறிதளவு உணவு மட்டுமே அளிக்கப்பட்டது.

அவர்கள் கால்நடையாக போ-சு ஆற்றின் கரையோரமாக நடந்தனர். உணவு தீர்ந்துவிட்டது. வழி எத்தனை தொலைவு என்று தெரியவில்லை. அவர்கள் முற்றாகவே நம்பிக்கை இழந்தனர். ஓர் இடத்தில் வழி இரண்டாக பிரிந்தது. இரண்டுமே மலைகளின் விலாக்களில் வளைந்து கண்ணுக்குத் தெரியாத திசைவெளியில் சென்று புதைந்தன. எங்கும் உயிர்ச்சாயலே இல்லை.

போன்ட்ஸோவும் பெண்டிங்கும் ஆன்னியிடம் அங்கே ஒரு பாறைமேல் அமரும்படிச் சொன்னார்கள். இருவழிகளிலும் சற்றுதொலைவு வரைச் சென்று மலைவிளிம்பை அடைந்து அங்கே நின்று அருகே எங்கேனும் வானில் புகையோ பறவையோ தெரிகிறதா என்று பார்த்துவருவதாகச் சொல்லிச் சென்றார்கள்..

ஆன்னி களைத்திருந்தார். நம்பிக்கை இழந்திருந்தார். அவர் பிரார்த்தனை செய்ய விரும்பினார். ஆனால் நாவிலிருந்து பிரார்த்தனைச் சொற்கள் வெறுமே உதிர்ந்தன, உள்ளம் பிரார்த்தனையைச் செய்ய ஒப்பவேயில்லை. அவர் மெல்ல தூங்கிவிட்டார். தன் குரட்டையை தானே கேட்டு விழித்துக்கொண்டார். அவருக்கு முன்னால் ஓர் இளைஞன் நின்று குனிந்து பார்த்துக் கொண்டிருந்தான்

நீலக்கண்களும் சிவப்புத்தலைமுடியும் கொண்ட வெள்ளைக்கார இளைஞன். அவள் அவனைக் கண்டதும் திடுக்கிட்டு எழுந்து நின்று “யார்?” என்றார்.

அவன் புன்னகைத்தான்.

“இங்கே அருகே கிராமம் இருக்கிறதா? உன் கிராமம் அருகேதானா?”

அவன் அந்த மலைச்சரிவைச் சுட்டிக்காட்டி “ஆற்றைக் கடந்து செல்லலாம்” என்றான்.

“ஆங்கிலம் தெரியுமா உனக்கு?”

அவன் புன்னகைத்துவிட்டு நடந்து சென்றான்.

“உன் பெயர் என்ன?” என்று ஆன்னி கேட்டார்.

அவன் திரும்பி புன்னகைத்துவிட்டு சென்று திரும்பி மறைந்துவிட்டான்.

அது கனவா பிரமையா என்று அவர் திகைத்து அமர்ந்திருந்தார். பெண்டிங்கும் போண்ட்ஸோவும் திரும்பிவந்தனர். இரு எல்லைகளிலும் ஊர் என எதுவும் தென்படவில்லை என்றார்கள். போண்ட்ஸோ ஒரு பனிப்புயல் அணுகிக்கொண்டிருக்கிறது என்றான். கீழே ஒரு கரிய மேகம்போல அது தெரிகிறது. கரடிபோல மலைச்சரிவில் தொற்றி ஏறி வந்துகொண்டிருக்கிறது. உடனே கிளம்பியாகவேண்டும்

“ஆற்றைக் கடந்துசெல்வோம்… ஆற்றை கடந்தால்போதும்” என்று ஆன்னி சொன்னார்.

நடந்ததைச் சொன்னதும் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். “செல்வோம்… நாம் ஆற்றைக் கடக்கமுடியும்”

அவர்கள் அவளை மறுத்தனர். போண்ட்ஸோ “ஆற்றை நம்மால் கடக்கவே முடியாது… ஆறுவிசைகொண்டது. நீர் மிகக்குளிரானது” என்றான்.

“நம்மால் முடியும்… அவன் சொன்னான்” என்றார் ஆன்னி. திரும்பத்திரும்ப “ஆறுதான் வழி… அவன் சொன்னான்” என்றார்.

அவர்கள் வேறுவழி இல்லாமல் அவருடன் வந்தனர். ஆற்றைக் கண்டதும் அவர் பின்வாங்கிவிடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் மலைச்சரிவில் இறங்கிச் சென்றபோது தொலைவில் ஒரு சிறுகூட்டம் ஆற்றை தெப்பத்தில் கடந்துகொண்டிருப்பதை கண்டனர். உரக்கக் கூவி கையசைத்தபடி போண்ட்ஸோ அவர்களை நோக்கி ஓடினான்.

அது போ-சு என்னும் ஆறு. அவர்கள் அதை அந்த வணிகர்குழுவின் தெப்பங்களில் கடந்தனர். அவர்கள் தெப்பங்களில் ஆற்றைக் கடக்கும் செய்தியை அறிந்து திபெத்திய அதிகாரிகளால் சூழப்பட்டனர். சிறைப்பிடிக்கப்படு நாக்சு என்ற ஊருக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

முக்தா சொன்னார். நான் ஆடமிடம் கேட்டேன். அவன் சொன்ன கதையில் பல சிக்கல்கள் இருந்தன. அந்த இளைஞன் யார்? சூசன்னாவின் குழந்தையா? அக்குழந்தை அது உயிர்விட்ட சில நாட்களுக்குள்ளாகவே எப்படி இளைஞனாக வந்து தன் அன்னைக்கு வழி காட்டியது? அதைவிட ஆன்னி டெய்லர் அந்த இளைஞனைப் பார்த்தபோது அக்குழந்தை பிறக்கவே இல்லை.

ஆடம் கைவீசி “நீ காலம் முன்னோக்கி மட்டுமே ஒழுகும் ஒரு பரிமாணத்தில் இருக்கிறாய். அங்கே, ஷம்பாலாவில் இருப்பவர்கள் காலம் எல்லா திசைகளுக்கும் செல்லும் ஒரு ஐம்பரிமாணத்தில் இருப்பவர்கள்”

“அதெப்படி?”என்று நான் கேட்டேன்

“நதி ஒரே திசைக்கே செல்கிறது. அதிலிருக்கும் மீன்கள் நான்கு திசைக்கும் செல்வன. மீன்களை பிடிக்கும் பறவைகள் ஐந்தாவது திசையையும் அறிந்தவை. அருகே மரத்தடியில் அமர்ந்து தவம் செய்யும் யோகியின் உள்ளம் ஆறாவது திசையையும் அறிந்தது” என்று ஆடம் சொன்னான்

நான் பிறகு அவனிடம் பேசவில்லை. அவனுடைய நம்பிக்கைகளுடன் நான் உரையாட முடியாது. அதோடு என் நம்பிக்கைகளை பேணிக்கொள்ளும் வழியும் அதுதான்.

நாங்கள் முப்பத்தாறுநாட்கள் பயணம் செய்து காரியை சென்றடைந்தோம். அங்கிருந்து மேலும் கிளம்பி நாக்சு நோக்கிச் சென்றோம். நான் லாஸாவுக்குச் செல்லும் எண்ணம் கொண்டிருந்தேன். ஆடம் நாக்சுவுக்குச் செல்லும் வழியில் ஓர் இடத்தில் பிரிந்து நான் லாசா செல்லமுடியும் என்று தோன்றியது.

ஆடம் திபெத்தில் நுழைந்தது முதலே அமைதி இழந்திருந்தான். அவனிடம் ஏராளமான வரைபடங்களும் குறிப்புகளும் இருந்தன. இரவெல்லாம் கூடாரத்தில் அமர்ந்து சிறிய பாரஃபின் விளக்கின் ஒளியில் அவற்றை ஆராய்ந்தான். என்னிடம் பேசுவதே குறைந்துவிட்டது.

“நாம் எங்கே செல்கிறோம்?” என்று நான் அவனிடம் கேட்டேன்.

“இந்தப் பயணக்குறிப்புகளில் பிழைகள் மிகுதி” என்று அவன் சொன்னான். “இவை இந்தப்பயணிகள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பியபின் நினைவுகளைக் கொண்டு எழுதியவை. அவற்றை மீண்டும் நூல்தொகுப்பாளர்கள் திருத்தி எழுதியிருக்கிறார்கள். ஆகவே இவற்றை நம்பி பயணம் செய்யவே முடியாது”

“உதாரணமாக போ-சு என்ற ஆற்றைப்பற்றி ஆன்னி, சூசன்னா இருவருமே சொல்கிறார்கள். நாக்சு நகரின் அருகே அந்த ஆற்றைக் கடப்பதைப் பற்றிய குறிப்பு வருகிறது. ஆனால் அப்படி ஓர் ஆறு திபெத்தில் இல்லை. சு என்றாலே திபெத்திய மொழியில் ஆறுதான். யார்லங் ஸாங்போ [Yarlung Tsangpo] என்ற ஆற்றை குறிப்பிடுகிறார்கள் என்றால் அந்த ஆறு இந்த இடத்தில் இல்லை”

ஆடம் சொன்னான் “அப்படியென்றால் இந்த ஆறு எது? நாக்சு இன்று நாகு என்று அழைக்கப்படுகிறது. இதனருகே ஓடும் ஆறு இன்று நாகு ஆறு என பெயர்பெற்றுள்ளது. ஆன்னியும் சூசன்னாவும் குறிப்பிடும் போ-சு ஆறு இந்த நாகு ஆறாகவே இருக்கவேண்டும். கானோங் ஏரியிலிருந்து கிளம்பி நாக்சு நகர் அருகே ஒழுகி கைகு ஆற்றில் இணைந்து நாகு ஏரியில் கலக்கிறது இது”

ஆடம் வரைபடத்தை சுட்டிக்காட்டினான் “இந்த ஆற்றை தெப்பம் வழியாக கடப்பது என்றால் அது இந்த இடமாகவே இருக்கவேண்டும். இதுதான் இங்கே மிகக்குறுகலான இடம். இதற்குமேல் பாறைகள் இருப்பதனால் நீரின் வேகம் குறைவு. மேலே சென்றால் பாறைகள் வழியாகக்கூட ஆற்றை கடந்துவிடமுடியும். கோடையில் மரத்தடிகளை பாறைகள் நடுவே போட்டு வழி உண்டுபண்ணப்பட்டிருக்கலாம். பெட்ரோஸ் அந்தவழியாகச் சென்றிருக்கலாம்”

நான் அவனுடைய முகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு வெறி மின்னிக்கொண்டிருந்தது. அதை எங்கெல்லாம் எப்படியெல்லாம் பார்த்திருக்கிறேன்! அதை நம்மால் ஏற்கமுடியாது, அது நம்மை அதலபாதாளங்களுக்கு இழுத்துச் செல்லக்கூடும். ஆனால் அதை நம்மால் தவிர்க்கவும் முடியாது. ஏனென்றால் புதியபாதைகளை கண்டடைந்தது புதிய கண்டுபிடிப்புகளை அடைந்தது புதிய சிந்தனைகளை உருவாக்கியது அந்த வெறிதான்.

“நீ அங்கே சென்று என்ன செய்யப்போகிறாய்?” என்று நான் கேட்டேன்.

“மிகச்சரியாக ஒரே இடத்தில்தான் ஆன்னியும் சூசன்னாவும் அவனைச் சந்தித்திருக்கிறார்கள். அவன் அங்கே தோன்றியிருக்கிறான் என்றால் அது ஒரு மையம். இதை சக்திமையங்கள் அல்லது வெளிப்பாட்டு புள்ளிகள் என்று நாங்கள் சொல்கிறோம். நான் அங்கே சென்று பார்ப்பேன். அங்கிருந்து எனக்கு ஒரு தொடக்கம் கிடைக்கும். ஒரு வழிகாட்டல் வரும்”

நான் ஒன்றும் சொல்லவில்லை.

மேலும் நாற்பது நாட்கள் நாங்கள் பனிபடிந்த திபெத்திய நிலம் வழியாகச் சென்றோம். அந்த இடத்தை கண்டடைந்தோம். கோலோக் மக்களின் ஒரு கிராமம் சற்று அப்பால் இருந்தது. அங்கிருந்து புகை எழுந்துகொண்டிருந்தது. குதிரைத்தடங்கள் இரண்டாகப் பிரியும் இடத்தை அடைந்ததும் ஆடம் “இந்த இடம்தான்” என்றான்

அங்கே நாங்கள் முகாமிட்டோம். “இங்கே நீ என்ன செய்யவிருக்கிறாய்?”என்று நான் கேட்டேன். “

“இங்கே காத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.இந்த இடத்தை நன்றாக பார்க்கிறேன். கூர்மையாக தியானம் செய்கிறேன். எனக்கு அழைப்பு வரும்”

“உன் நோக்கம்தான் என்ன ஆடம்?” என்றேன்

“நான் சொன்னேனே, ஷம்பாலாவுக்குச் செல்வது”

“இதோபார், அங்கே சாமானியர் செல்லமுடியாது என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறது?”

“ஆமாம், ஆனால் அங்குள்ளோர் விரும்பினால் நம்மை அழைத்துச் செல்லமுடியும்” என்று ஆடம் சொன்னான்.

நாங்கள் அங்கே கூடாரம் அமைத்து தங்கினோம். ஆடம் அந்த இடத்தை சுற்றிவந்து விரிவாக ஆராய்ந்தான். முதல் இருநாட்களுக்கு பின்னர் அந்த சாலைச் சந்திப்பில் ஒரு பாறையை கண்டடைந்தான். “இதுதான் ஆன்னி டெய்லரும் சூசன்னாவும் அமர்ந்திருந்த இடம்” என்றான். அங்கே கண்மூடி கைகளை மடியில் வைத்து அமர்ந்திருந்தான்.

நான்கு நாட்களுக்குப்பின் நான் பொறுமையிழந்தேன். “நாம் இங்கே எத்தனை நாட்கள் தங்கப்போகிறோம்?” என்றேன்.

“இங்கே அழைப்பு வரும்.. இது ஒரு வாசல்” என்று அவன் சொன்னான்.

“இதோ பார், இங்கே அவர்கள் அழைப்பை பெற்றார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அவர்கள் இங்கே சிக்கிக் கொண்டார்கள். அவர்களுக்கு சார்ல்ஸ் உதவி செய்தான். நீ வெறுமே காத்திருக்கிறாய்.”

“இது ஆற்றல்மையம். இங்கே என்னால் அதை மிகமிகத் தெளிவாக உணரமுடிகிறது” என்றான் ஆடம்.

“சரி, ஆனால் எத்தனை நாள்?”

“நான் செல்லுமிடமெல்லாம் வருவதற்கும் காத்திருப்பதற்கும் பணம்கொடுத்துத்தான் இவர்களை கூட்டிவந்தேன். விருப்பம் இல்லை என்றால் இவர்கள் செல்லலாம். நான் இங்கேயே காத்திருப்பேன்.”

“நான் செல்வதைப்பற்றி பேசவில்லை. இதிலுள்ள அபத்தத்தை உன்னிடம் புரியவைக்க முயல்கிறேன். சார்ல்ஸ் வந்தது அவன் அன்னைக்காக.”

“இதில் தர்க்கபூர்வமாக ஏதுமில்லை” என்றான் ஆடம். “நான் என் உள்ளுணர்வை நம்பியே சென்றுகொண்டிருக்கிறேன்.”

அவனிடம் பேசிப்பயனில்லை என்று தெரிந்தது. நான் கிளம்பிச் சென்றிருக்கலாம். ஆனால் சென்று ஆற்றுவதற்கு ஒன்றும் இல்லை. சரி இந்த மலைப்பாதையில் தங்குவதென்றால் தங்கலாம் என்று முடிவுசெய்தேன். பனிவெளியில் கொஞ்சம் உலவுவேன். கொஞ்சம் தியானம் செய்வேன். என் குறிப்பேட்டில் கொஞ்சம் கவிதைகள் எழுதுவேன். ஆங்கிலத்தில் கவிதை எழுதுவது என் குழப்பமான, மங்கலான உணர்வுகளை கூராக்கிக்கொள்ள உதவுவது.

மேலும் இரண்டு நாட்களுக்குப்பின் ஆடம் காலையில் என்னை எழுப்பினான். நான் மென்மயிர்ப் போர்வையை தழைத்தபோது அவன் முழுப் பயண உடையில் நின்றிருப்பதைக் கண்டேன்.

“என்ன? கிளம்புகிறோமா?” என்றேன்.

“நான் கிளம்புகிறேன்… எனக்கு அழைப்பு வந்துவிட்டது.”

“யாரிடமிருந்து? எப்படி?”

“இன்று புலர்காலை” என்று ஆடம் சொன்னான் “நான் கிளம்பிச் செல்கிறேன். தனியாக. பிறரிடம் சொல்லிக் கொள்ளவில்லை. நீ இவர்களை அழைத்துக்கொண்டு நாக்சு போ. அங்கிருந்து லாசாவுக்கு செல்லமுடியும். இனிய பயணம் அமையட்டும்… நீ தேடுவதெல்லாம் கைவசப்படட்டும்”

“ஆடம்” என்றபோது என் குரல் தழுதழுத்தது. “நீ யாரை கண்டாய்? எப்படிச் செல்வாய்?”

“எனக்கான வழி தெளிவாகிவிட்டது… என்னை வழிகாட்டி அழைத்துச் செல்வதாகச் சொன்னான்.”

“யார்?”

“இன்றுகாலை என்னை வந்து சந்தித்த இளைஞன்.”

“சார்ல்ஸா?” என்றேன்

“இல்லை, என் அப்பா” என்று ஆடம் சொன்னான்.

அவன் தலைவணங்கி விடைபெற்றுச் சென்றான். அவன் நடந்து செல்வதை பார்த்தபடி போர்வைக்குள் நடுங்கும் உடலுடன் அமர்ந்திருந்தேன். அவன் மறைந்ததும் திடீரென்று உணர்வு கொண்டு போர்வையை தள்ளி வீசிவிட்டு எழுந்து “ஆடம்” என்று அழைத்தபடி வெளியே ஓடினேன்.

ஆடம் வெளியே சென்றுவிட்டான். மிகவேகமான காலடிகளுடன் அவன் பனிவெளியில் நடந்து மறைந்தான். என் உடலில் மெல்லிய ஆடைகள்தான் இருந்தன. ஆகவே குளிர் நடுக்கியது. நான் உள்ளே ஓடி மென்மயிர் மேல்சட்டையை அணிந்துகொண்டு வெளியே வந்து பார்த்தேன். அவன் மறைந்துவிட்டிருந்தான்.

முக்தா சொன்னார். நான் நாக்சு சென்று அங்கிருந்து லாசாவுக்குச் சென்றேன். அங்கிருந்து சீனா. சிக்கிம் வழியாக பூட்டான். அது ஒரு பயணம். அது வேறுகதை. வேறுவேறு கதைகள் என்று கொள்

அதன்பின் நான் ஆடமை பற்றி எதுவுமே கேள்விப்படவில்லை. ஆனால் இப்போதுகூட அவனைப்பற்றி ஒரு செய்தி வராது என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் நான் எண்ணியவையும் எண்ணாதவையுமாக ஏதேதோ செய்திகள் என்னை வந்து முட்டுகின்றன, நான் சென்று முட்டிக்கொள்கிறேன். தேடினால் சிக்காதவை தேடிவந்து முன்னால் நின்றிருக்கின்றன.

ஏனென்றால் இந்த மறைஞானப் பயணங்கள் எல்லாமே ஒருவகையில் தனியாரால் ரகசியமாகச் செய்யப்படுபவை. அவர்களில் பெரும்பாலானவர்கள் ஏதேதோ குறிப்புகளை பதிவுசெய்து விட்டுச் செல்கிறார்கள். நூற்றில் ஒருபகுதியே பிரசுரமாகின்றன. பிரசுரமாகும் குறிப்புகளில் நூற்றில் ஒருபகுதியே படிக்கப்படுகின்றன. உலகம் முழுக்க மறைஞானப் பயணங்கள் பற்றி பல லட்சம் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த பூமி எந்த அளவுக்கு பெரும்பகுதி அறியப்படாததாக உள்ளதோ அந்த அளவுக்கே அந்த அறிவியக்கமும் அறியப்படாததாக உள்ளது.

ஆடமைப் பற்றி ஏதேனும் ஒரு பயணக்குறிப்பில், ஒரு நினைவுப்பதிவில் ஒரு செய்தி எழுந்துவரலாம். பெட்ரோஸ் பற்றிய செய்திகூட வரலாம், ஆனால் நான் எதையும் தேடிக்கொண்டிருக்கவில்லை. நான் எதையும் தேடாதவனாக ஆகி இருபதாண்டுகள் கடந்துவிட்டன.

நான் இவையனைத்தையும் சொல்லத் தொடங்கியது ஏன்? நெடுந்தொலைவு சுற்றிவிட்டேன். இன்னொரு செய்தியில் கொண்டுசென்று முடிக்கிறேன். நீ ஓவியர் ஸ்வெஸ்திலோவ் ரோரிச்சை கேள்விப்பட்டிருக்கிறாயா?”

“ஆம், பெங்களூரில் இருந்தார். குரு நித்யாவுக்கு தெரிந்தவர். முன்னாள் நடிகை தேவிகாராணியின் கணவர்… நான் அவரைப்பற்றி ஒரு கதைகூட எழுதியிருக்கிறேன்” என்றேன்.

“அவரேதான் அவரை நான் 1961ல் குலு- மணாலியில் சந்தித்தேன். அவர்களின் கலை-அறிவியல் ஆய்வுமையம் அங்கிருக்கிறது. 1962ல் அங்கே ரோரிச் அவருடைய தந்தை நிகோலஸ் ரோரிச்சின் ஓவியங்களை வைத்து ஒரு அருங்காட்சியகத்தை திறந்தார்.”

முக்தா சொன்னார். நான் ஏற்கனவே சொன்னேனே. ஹெலெனா ரோரிச் ஷம்பாலாவை தேடி சென்று விரிவான ஆய்வை நிகழ்த்திய மலையேற்றக்காரர்களில் ஒருவர். ஹெலெனா ரோரிச்சை விட்டுவிட்டு இந்தியாவின் நவீன ஆன்மிக வரலாற்றை எவரும் எழுதிவிடமுடியாது. அவர் தியோசஃபிக்கல் சொசைட்டியுடன் நெருக்கமானவர். 1879ல் ரஷ்யாவில் பிறந்தவர். மேடம் பிளவாட்ஸ்கியின் நண்பர், மாணவி.

அக்னி யோகம் என்ற பெயரில் ஒரு தத்துவ- யோக முறையை உருவாக்கியவர் ஹெலெனா ரோரிச். அவரும் அவர் கணவர் நிகோலச் ரோரிச்சும் இந்திய மெய்யியலை உலகமெங்கும் கொண்டுசெல்வதற்கு பெரும்பணி ஆற்றினார்கள். திபெத்திய பௌத்தம் உலகளாவ அறியப்பட்டதே அவர்களால்தான். Urusvati என்ற பேரில் Institute of Himalayan Studies என்னும் அமைபை உருவாக்கி தலைமை ஏற்று நடத்தியவர். ஆசிய கலைச்செல்வங்களை காக்கும்பொருட்டு International Treaty for Protection of Artistic and Scientific Institutions and Historical Monuments என்னும் ஒப்பந்தத்தை உருவாக்கியவர். இது ரோரிச் ஒப்பந்தம் என்றே அழைக்கப்படுகிறது.

நிகோலஸ் ரோரிச் ஷம்பாலா பற்றி ஏராளமன நவீன ஓவியங்களை வரைந்திருக்கிறார். அவை உலக ஓவியச்செல்வங்களில் முதல்வரிசையைச் சேர்ந்தவை என்று கருதப்படுகின்றன. மறைஞானப் பயணிகளுக்கும் அவை முக்கியமானவை, பலவகையான குறியீடுகளும் உட்பொருட்களும் கொண்டவை அவை.

ஹெலெனா ரோரிச்சும் அவர் கணவர் நிகோலஸ் ரோரிச்சும் 1924 முதல் 1928 வரை ஷம்பாலாவை தேடி திபெத்தின் வட எல்லைவரை மிகவிரிவான ஆய்வுப்பயணத்தை மேற்கொண்டனர். அப்பயணத்தைப் பற்றி ஹெலெனா விரிவாகவே எழுதியிருக்கிறார். அவற்றில் பிரசுரிக்கப்படாத கையெழுத்துப்பிரதிகளும் உள்ளன.

நான் குலுவில் ஸ்வெஸ்திலோவ் ரோரிச்சைச் சந்தித்தபோது அவர் தன் அன்னையின் திபெத்தியப் பயணங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கையில் மீண்டும் போ-சி ஆற்றங்கரை பற்றிய பேச்சுவந்தது.

நாக்சு நகரின் அருகே போ-சி என்னும் ஆற்றின் கரையோரத்தில் ஹெலெனா ரோரிச்சின் ஆய்வுக்குழு வழி அறியாது திகைத்து நின்றபோது நீலக்கண்களும் சிவப்புத் தலைமுடியும் கொண்ட ஒரு வெள்ளைக்கார இளைஞன் வந்து அவர்களுக்கு வழிகாட்டி உதவி செய்திருக்கிறான். அவன் அப்பகுதியில் எங்கும் இருப்பவன் என்று தோன்றவில்லை. களைத்து சோர்ந்து மலைப்பாறை ஒன்றின்கீழ் அமர்ந்திருந்த ஹெலெனா மட்டுமே அவனைப் பார்த்தார். அது ஓர் உருவெளித்தோற்றமாக இருக்கும் என்று நிகோலஸ் ரோரிச் சொன்னார். ஆனால் அது மயக்கநிலை அல்ல, மிகமிகக்கூரிய விழிப்புநிலை என்று ஹெலெனா எழுதியிருந்தார்.

அதுவரை ஆடம் சொன்னதுகூட சற்றே கற்பனைதானோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஏனென்றால் இத்தகையவர்கள் அனைத்தையும் மறைஞானக் குறியீடுகளாக எடுத்துக்கொள்பவர்கள். குறியீடுகள்மேல் கற்பனைகளை செலுத்தி வளர்த்துக் கொள்பவர்கள். ஆனால் ஹெலெனா ரோரிச்சின் குறிப்புகளில் உள்ள செய்தி எனக்கு ஓர் உறுதிப்பாட்டை அளித்தது. நாம் அறியாத ஏதோ ஒரு திறப்பு அந்த இடத்தில் இருக்கிறது.

ஆனால் நெடுங்காலம் கழித்து ஒன்று தோன்றியது, சார்ல்ஸ் ஷம்பாலாவில் இருக்க வாய்ப்பில்லை என்று. நான் அதை ஒரு நீண்ட கவிதையாக எழுதி நித்ய சைதன்ய யதிக்கு அனுப்பினேன்.

சார்ல்ஸ் தோற்றமளித்தவர்கள் அனைவருமே பெண்கள், அன்னையர். வாழ்வில் ஏதும் மிச்சமில்லாமல் மறைந்ததனால், ஷம்பாலாவுக்கான நுண்ணிய வழியொன்றின் வாசலில் நின்றமையால் அவன் ஷம்பாலாவுக்குச் சென்றிருக்கலாம். ஆனால் அங்கே அவன் முழுமையாக இருந்தானா? கைவிடப்பட்ட குழந்தைக்குள் அன்னைக்கான ஏக்கம் ஒரு துளியினும் துளியினும் துளியாக எஞ்சியிருந்ததா?

இருக்காமலிருக்க வழியில்லை. அந்த ஏக்கமே அவனை இளைஞனாக அன்னையர் முன் தோன்றச் செய்தது. அவன் மறுபிறப்பு அடைந்திருப்பான். அன்னையொருத்தியின் முலைப்பாலை விடாய் தீர அருந்தி வளர்ந்து மீண்டும் இந்தச் சக்கரத்தை முழுக்கச் சுற்றி ஷம்பாலாவுக்குச் சென்று சேர்வான்.

அது அவ்வாறுதான் நிகழும். நிகழவேண்டும் என்று நான் வேண்டிக்கொண்டேன் என்று முக்தா சொன்னார். பிரபஞ்சத்தின் முடிவின்மை நமக்குச் சொல்வது ஒன்றே. அது முடிவிலாப்பேருருக் கொண்டது என்பதனாலேயே அதற்கும் ஒரு அணுவுக்கும் அடிப்படை வேறுபாடு என்பது இல்லை. கேட்க வேடிக்கையாக இருக்கலாம், இது ஓர் உண்மை. எல்லா உண்மைகளையும்போல.

முக்தா கைகளை கட்டிக்கொண்டு மழையை பார்த்தபடி அமர்ந்திருந்தார். நான் யூகலிப்டஸ் மரங்களின் நடனத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த ஒவ்வொரு அசைவுக்கும் பொருள் உண்டு என்றால், இந்த ஒவ்வொரு மழைத்துளிக்கும் இலக்கு உண்டு என்றால் நான் என்னுள் ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த தர்க்கத்திற்கு என்னதான் பொருள் என்னும் எண்ணம் என்னுள் எழுந்து சாவை கண்முன் கண்டதுபோல மெய்சிலிர்ப்பு கொள்ள செய்தது. உடனே ஒரு சூடான டீ தேவை என்று தோன்ற எழுந்து குடையை எடுத்தபடி சமையலறைக்குக் கிளம்பினேன்.

***

[நிறைவு]

முந்தைய கட்டுரைகரு [குறுநாவல்]- பகுதி 1
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–64