தேவி,லாசர்- கடிதங்கள்

தேவி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

தேவி மிக உற்சாகமாக வாசித்த கதை. எல்லாருக்குமே ஒரு நாடக அனுபவம் இருக்கும். குறைந்தபட்சம் பள்ளிகளிலாவது நாடகத்தில் நடித்திருப்பார்கள். அது ஒரு கோலாகலமான அனுபவம். அந்த நினைவை அந்தக்கதை மீட்டியது. ஆனால் அதை விட முக்கியமானது இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்து குழந்தைகள் வெளியே வருகிறார்க்ள். ஒவ்வொருவரும் வெவ்வேறுவகையிலே வெளிப்படுகிறார்கள்

தேவி கதையில் மூன்று கதை இருக்கிறது. ஒருகதை அனந்தன் நாடகம்போட படும் அவஸ்தை. இன்னொரு அவன் நாடகத்திற்குள் இருக்கும் நக்ஸலைட்டின்கதை. மூன்று ஸ்ரீதேவி என்ற சரஸ்வதியின் துயரக்கதை. வறுமையில் இருந்து அவள் கலைவழியாக மீண்டு எழுந்து வருகிறாள். ஆயிரம் முகங்களால் நடித்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள். அனந்தன் நாடகத்தை நடிக்கவைப்பது ஒரு வேடிக்கை அல்ல. அந்த காலகட்டத்தின் உண்மையான துக்கமே அந்த நாடகத்திலே இருக்கிறது.வேலையில்லா திண்டாட்டம், குடும்பம் என்ற சுமை எல்லாமே. ஆகவேதான் லாரன்ஸ் அதை அப்படி உணர்ச்சிபூர்வமாக நடிக்கிறான்

அந்த மூன்று கதைகளும் ஒரு கதைக்குள் ஒன்றுக்குமேல் ஒன்றாக அமைந்திருக்கின்றன.  ஆகவேதான் கதையின் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் பல அடுக்குகள் வந்துவிடுகின்றன

ராஜ்

***

வணக்கம் ஜெ

தேவி சிறுகதையை வாசித்தேன். ஒன்றிலிருந்து முடிவில்லா முகங்கள் எழுந்து வருவதைப் போன்றுதான் சரஸ்வதியிலிருந்து மூன்று பேர் எழுந்து வருகின்றனர். அப்படி எழுந்து வரும் ஆயிரம் பல்லாயிரம் முகங்களுக்கு இடையில் சரஸ்வதி யாரென்று பார்த்தால், குடும்பத்தைப் பாலிக்கும் பெண்ணாக இருக்கிறாள். அந்தப் பெண்மையும் தாய்மையும் அளிக்கும் விசையே ஆயிரம் பல்லாயிரம் முகங்களை அவளால் பூணச் செய்கிறது. அந்தப் பல முகங்களில் ஒன்றாகத் தெய்வங்கள் கூட இருக்கலாம். மன்றாடலுடன் இறைஞ்சினால் நினைத்தத் தோற்றத்தில் எழுந்தருளவும் கூடும் தேவி.

அரவின் குமார்

***

லாசர் [சிறுகதை ]

அன்புள்ள ஜெ

லாசர் கதை இந்த வரிசைக் கதைகளில் வேறுமாதிரியக அமைந்திருக்கிறது. சரித்திரபுருஷரான ராபர்ட் கால்டுவெல்லின் வாழ்க்கையில் ஒருநாள். அவருடைய வாட்ச் தொலைந்துபோய்விடுகிறது. பையன்கள் அதை வண்டு என்று நினைத்து புதைத்துவைக்கிறார்கள். அது இறந்துவிடுகிறது. அழுதபடி அதைக்கொண்டுசென்று அவரிடம் அளிக்கிறார்கள். அது அவர் கைபட்டு உயிர்த்தெழுகிறது

அந்தப்பையனின் தங்கை செத்துவிடுகிறாள். அவன் அடையும் பதற்றம் துக்கம் எல்லாம் கதையில் மனதை உலுக்கும்படி வெளிப்பட்டிருக்கிறது. அவன் அழும்போது உண்மையாகவே மனம் நெகிழ்ந்துவிட்டது. அந்த கடிகாரம் உயிர்த்தெழுந்துவிட்டது, அந்த குழந்தையும் உயிர்த்தெழும். அது இங்கே உயிர்த்தெழாது, கிறிஸ்துவின் சபையில் உயிர்த்தெழும். கடிகாரத்தை உயிர்த்தெழவைத்ததுபோல அந்த குழந்தையையும் உயிர்த்தெழவைக்க கால்டுவெல் ஜெபம் செய்கிறார்

இந்தக்கதையின் மையமே லாசர் என்ற பெயர்தான். ஏசுவால் உயிர்த்தெழச்செய்யப்பட்டவன் லாஸர். அவன் செத்துவிட்டிருந்தான். ஏசுவால் அவன் உயிருடன் வந்தான். அப்படிப்பார்த்தால் கால்டுவெல் உயிர்த்தெழவைப்பது அந்தச் சிறுவனைத்தான். தங்கையின் சாவு அவனுடைய சாவுதான். அந்த ஆன்மிக சாவில் இருந்து அவன் மீண்டு எழுகிறான். அவர் அந்த வாட்சை மீட்பதுபோல அவனை மீட்டு எடுக்கிறார்

ஜான் சுந்தர்ராஜ்

***

என் அன்பு ஜெ,

கதை என் பள்ளி காலத்திற்கு அழைத்துச் சென்றது. ஊட்டியும், அதன் விடுதி வாழ்கையின் தனிமையும் ஐந்து வருடங்களாக ஏதோ ஒன்றை பற்றிக் கொள்ள வைத்திருந்தது. கடவுள் மேலான தீவிர நம்பிக்கை கொண்டு என் அன்னையாக, தந்தையாக, தோழனாக கற்பனை செய்து கொண்டதுண்டு. இந்துவான என்னை கிறுத்துவாளாக மாற்றிக் கொண்டேனா? என்றால் இல்லை. கடவுளை நம்ப ஆரம்பித்தேன். அவர்க்கு உருவம் கொடுத்தேன். அவர் போதிப்பதை என் வாழ்வில் நான் கடைபிடிக்கும் நெறியாக மாற்றிக் கொண்டேன். என்னைப் பகிர பெரும்பாலும் நான் அவரையே தேடியிருக்கிறேன். என் ஆசைகள், கனவுகள் யாவையும் அவர் செவி மட்டும் இரகசியமாக அறிவதுண்டு. பெரும்பாலும் தனிமை தான் என் மருந்து. என் முதல் கூட்டை அங்கு உருவாக்கிக் கொண்டேன் எனலாம் (கூடு சிறுகதையில் நீங்கள் சொல்வது போல). ஞானத்தை, இந்த வாழ்வு எனும் காலப் பயணத்தை எதிர் கொள்வதற்கான அனைத்து ஆற்றலையும் தந்தது அந்த ஐந்து வருடங்கள் தாம்.

பைபிளில் வரும் லாசர் கதையை நன்றாகத் தெரியும் எனக்கு. அது நிச்சயமாக நடந்ததா என்று யாராவது இப்போது என்னிடம் கேட்டால், பதிலில்லை. ஆனால் அதிலிந்து நான் கற்றுக் கொண்டது இது தான், “நாம் கைக் கொள்ள வேண்டும் என்று நிர்ணயித்த இலக்கை/ வேண்டுமென்று நினைக்கும் ஒன்றின்மேல் பற்றுருதியாய் இருப்பின் அது கைகூடும். நிச்சயமாகக் கைகூடும். அந்த அதீத நம்பிக்கை வழி என் வாழ்வில் விடாமுயற்சியைக் கற்றுக் கொண்டேன் எனலாம். பைபிளை அந்த ஐந்து வருடத்தில் மூன்று முறையாவது வாசித்திருந்தேன். அதற்கும் மேல் எனலாம். அதை பாதரிமாரிடம், சகோதரிகளிடம் தருக்கப்படுத்தியதுண்டு. முடிந்தவரை அவர்கள் பதில் சொல்வதுண்டு. சொல்ல முடியாத கேள்விக்கு பாதர் சிரிப்பதுண்டு. ஒரு முறை அவ்வாறு பாதரிடம் பைபிளைக் கொண்டுபோய் “பாதர், பாதர், இந்த இடத்தில் சாத்தான் கடினமாக விரதமிருக்கும் இயேசுவை மலை உச்சிக்கு இட்டுச் சென்று, உலக அரசுகளைக் காட்டி, இயேசு தன்னை விழுந்து வணங்கினால் அவற்றை அவருக்குக் கொடுப்பதாகக் கூறி சோதிக்கிறது. அப்படியானால் உலக அரசுகள் சாத்தானுடையதா என்று கேட்டேன்???” அதற்கு அவர் என் தலையை தடவிட்டு, சிறு புன்முறுவலுடன் சென்றுவிட்டார்.

முதிர்ச்சியடந்தபின் மனிதன் அறத்தோடு வாழ்வதற்கான கதைகளாக; உவமைகளாக அவற்றை எடுத்துக் கொண்டபின் அவ்வாராய்ச்சியை விட்டு விட்டேன். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் பைபிள் கதைகள் பற்றியும், அதில் கடத்தப்படும் நீதி போதனைகள் பற்றி Youtue -ல் எடுத்தியம்பியிருந்தார். பைபிள் கதைகள் காலத்திற்கேற்றார்போல், படிக்கும் வாசகர் சார்ந்து மீட்டுருவாக்கம் செய்வது குறித்தும் பேசியிருந்தார். அதுவும் நினைவிற்கு வந்தது ஜெ.

“இறப்பு என்பது ஒரு குளியல். இறப்பு என்பது ஒரு வாசல். இறப்பினூடாகவே நாம் மெய்யான தேவனை அடைகிறோம். அவருடைய ஆணையாலே நாம் உயிர்த்தெழுவோம்; எசிலி கிழவி  சொன்ன “படுத்தா எந்திரிக்கோம். செத்தா உயிர்த்தெழுதோம்… நினைச்சு நினைச்சு அளுதா ஆச்சா? என்ற வரிகள் எனக்கு,

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

இந்தத் திருக்குறளை நினைவு படுத்தியது.

லாசரின் தங்கை பாப்பா உயிர்த்தெழுந்தாளா? என்றால், நிச்சயமாகத் தெரியாதெனக்கு. இந்த லாசரைப் பொறுத்தவரை பாப்பா உயிர்த்தெழுந்திருப்பாள். இறைவனிடம் சேர்ந்திருப்பாள் அல்லது வண்டாக பாப்பா மாறிவிட்டிருந்தாள். வண்டுதான் பாப்பா. அவன் அமைதியடையட்டும். ஆமாம்டா லாசர்!!! அந்த வண்டுதான் பாப்பா என்று சொல்லி அவனைக் கட்டியணைக்க வேண்டும் போலிருந்தது. அருமை ஜெ.

கதையயும் தாண்டி அது என் சிந்தையை, நினைவடுக்கை தட்டிவிட்ட யாவையும் எழுதிவிட்டேன்.

என்றும் அன்புடன்

இரம்யா.

***

முந்தைய கட்டுரைசீட்டு,நஞ்சு- சிறுகதை
அடுத்த கட்டுரைகரு,கூடு- கடிதங்கள்