கூடு [சிறுகதை]
அன்புள்ள ஜெ
கூடு கதை வாழ்க்கையின் ஒரு வடிவம். அதை நான் ஆன்மிகமான விஷயமாக மட்டும் எடுத்துக்கொள்ளவில்லை. பல வாழ்க்கைகளே அப்படித்தான். என் தாத்தா தஞ்சையில் கட்டிய வீட்டை இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடித்தார்கள். மொத்தம் இருபத்திரண்டு அறைகள். கல்யாணமண்டபமாக இருபது ஆண்டுகள் இருந்தது. பாழடைந்து பத்தாண்டுகள் கிடந்தது. அவர் வக்கீலாக இருந்தார். அன்றைக்கு அத்தனை அறைகளிலும் ஆளிருந்தார்கள். எதிர்த்த வீட்டை வாங்கி கெஸ்ட் ஹவுஸ் மாதிரி வைத்திருந்தார். அவருடைய சைஸ் அந்த வீடு. அவர் வயதாகி அப்பாவுடன் டெல்லியில் ஒரு அப்பார்ட்மெண்ட் அறையில் இருபதாண்டுகள் வாழ்ந்து மறைந்தார் அப்படியே கூடு கதைதான்.
எஸ்.ஆர்.ஸ்ரீனிவாஸன்
***
அன்புநிறை ஜெ,
தன்னிடம் விட்டு அகல்தலும் மீள வந்து அமைதலுக்குமான இடைவெளியில் கூடு இருக்கிறது. முக்தானந்தரின், இந்நாடெங்கும் அலைந்து அமையும் துறவிகளின், நோர்பு திரக்பாவின், ராப்டனின் பயணங்கள்.
ஓரிடத்தின் இயற்கையாக விளையும் காய்கறிகளை உட்கொள்வது குறித்தும், அது வெட்டப்படும் முறை, சமைக்கப் பயன்படும் கலம் என அனைத்தின் மீதான கவனத்தோடு உணவு தயாரித்தல் என்று மாக்ரோபயாடிக்ஸ் குறித்து ஊட்டி குருகுலத்தில் ஒரு உரையாடலின் போது குறிப்பிட்டிருந்தீர்கள். தான் சென்று படிய வேண்டிய நிலத்தைத் தேரும் விதையின் பயணம் முதலாகவே மாக்ரோபயாடிக்ஸ் தொடங்குகிறது போலும்.
பயணத்தின் கடுமையை ஒரு சுயசரிதையில் வேண்டுமென்றால் மேலும் கடுமையாக்கிக் கொள்ளலாம் என்ற வரி எழுதும் போது விவரிப்பின் விசையில் நாம் கொள்ளும் ஆணவத்தின் ஒரு சிறு அடிக்கோடு, பயணங்களை அதன் இடர்களை உருவைவிடப் பெரிதாக ஊதிப் பெருக்கி விடும் செயல்பாடு குறித்து கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.
இதை சிறுகதையாக எழுத எப்படித் தோன்றியது. இந்தக் கதைக்கருக்களும் விதைகளென பறந்தலைகிறதா? படியும் தருணத்தைப் பொறுத்து சிறுகதை என்றோ, நாவல் என்றோ கட்டுரை என்றோ முளைக்கிறதா? இமயத்தைப் பற்றி எத்தனையோ விரிவான பயணக் கட்டுரைகள், பனி மனிதன் போன்ற கதைகள் மூலம் எழுதிய காட்சிப்புலங்கள் மீண்டும் ஒரு சிறுகதையில் அதற்கே உரிய உள்ளொளியோடு வருகின்றன.
இமயம் என்னும் கவர்ந்திழுக்கும் பெரும் காந்தத்தின் அதிர்வு கதையின் பெரும் பகுதியில் வருகிறது. சேற்று வண்ணம் மட்டுமேயான மலை வெளிகள், குளிர்காலத்தின் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் கிராமங்கள், அலையெழுந்தது போன்ற வெண்பனிமலைகள், மீண்டும் மீண்டும் என் அகக்கனவுகளில் அலைந்து திரியும் பெருவெளி. என்று மீண்டும் அந்நிலக்களுக்கு செல்ல முடியும் என்ற ஏக்கத்துக்கு பதிலளிப்பது போல ஒவ்வொரு குளிர்காலத்திற்கு பிறகும் பாதை புதிதாக உருவாக்கப்படும் என்ற வரி நம்பிக்கை தருகிறது. இந்த உறை காலமும் கடந்து பாதைகள் உருவாகும்.
இக்கதையில் வரும் பயணங்கள் இன்றைய பயணக் குழுக்கள் வழியாக செல்வது போல எளிதாக சென்றடைந்துவிடக் கூடியவை அல்ல. ஓங்கிய இமயமும் அமைதியான மடாலயங்களில் சுடரென நின்றிருக்கும் புத்தரும் அன்று போல இன்றும் நிற்பதனாலேயே எளிதாக நம் அகம் இன்றைய சுற்றுலாவின் கரங்கள் சென்று தொட்டுவிட்ட மடாலயத்துக்கான பயணங்களை நினைவுறுத்தும். காலத்தில் பின் சென்று அந்த நாளின் பயணத்தை அதன் இடர்களை கற்பனை செய்து பார்க்க வேண்டிய ஒன்று.
ஆலமரங்கள் தங்களைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு இறகுப்பிசிர்கள் என அலைகின்றன என்பது ஒரு சிலிர்ப்பான படிமம். விதை முளை விட்டு கிளைத்து ஆலமரமாக பரந்து மீண்டும் தன்னிலெழும் பல விதைகளின் மூலம் விதைநிலைக்குத் திரும்புவது ஒரு பயணம். விதை மரமாகி மீண்டும் விதையாக தன்னை சுருக்கிக் கொள்வது என்பது கருவிலிருந்து எழுந்து காலூன்றி நடந்துவிட்டு மீண்டும் கருநிலைக்குத் திரும்புவதன் பயணம்.
“இந்த நிலைபெற்று நிறைந்துவிட்ட வாழ்க்கைக்குள் இருந்து வெளியே செல்லவேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவாகிறது? இங்கே இல்லாத எதை அவர்கள் உணர்கிறார்கள்? அப்படி ஒன்று உண்டு என்று அவர்களுக்கு மட்டும் எப்படி தெரிகிறது? ” என்ற கேள்விகளின் விடையை கருவிலிருந்து தன் காலமறிந்து வெளிவரும் கருவே அறிந்திருக்கிறது. ஆழத்திலிருந்து வரும் அழைப்பை பெரும்பாலும் புற இரைச்சல்களில் மறந்து விடுகிறது மானுடம்.
கதை முழுவதும் பல படிமங்கள், விதையிலிருந்து விரிந்தெழும் வீரியத்தோடு ஆனால் விதை வடிவில் நிறைந்திருக்கின்றன.
அந்த புழுதியாலான பாதையில் கழுதை மீதமர்ந்து செல்லும் பயணத்தின் வர்ணனை சிலிர்ப்பாக இருந்தது. அந்த சிறிய எலும்புகளால் ஆன மூட்டுகள் மலைமேல் கொண்டு செல்கின்றன என்ற உணர்வு இந்த சிறிய மானுட உடல் சுமந்து திரியும் மகத்தான தேடலின் விசையை குறித்த பிரமிப்பு போன்றது.
தனக்கென நாவில்லாத மணி, தன் ஓசையின்மைக்கே திரும்பி விட்டிருந்தது என்ற வரியிலிருந்து இந்த மொத்தக் கதையையும் விரித்துக் கொள்ளலாம். அது உலோகத்திலிருந்து திரண்டு மணியென உருவாகி வந்த நாட்களும், அந்த மலைசூழ்ந்த மடாலயத்துக்கு வந்தடைந்த மாபெரும் பயணமும், ஓங்காரம் எழுப்பி மலைச்சிகரங்களோடு உரையாடிய நாட்களும் கடந்து ஓசையடங்கி அமைந்து பாறையென மாறிவிட்ட பயணம்.
ஒரு சிறிய குகையில் தன்னைச் சுருக்கியமர்ந்து, பின்னர் கிளம்பிச் சென்று பெரும் பயணங்கள் செய்து, பாதகங்கள் அரிதாக சென்று தொடும் மலைச்சரிவில் அவ்வளவு பெரிய உம்லா மடாலயத்தை நிர்ணயித்து அதன் உயிர் விசையாகத் திகழ்ந்து மீண்டும் அந்த மலைச்சரிவின் குகைத்துளைக்குள் வந்தடங்கும் நோர்பு திரக்பாவின் பயணம். உம்லா மடாலயம் இன்றிருக்கிறதா?
ஒளிவிடும் வைரம் என்ற பெயரும் அதேபோல ஒரு விதை. தேவையானபோது அவர்கள் அனைவருமே தங்களுக்குரிய வைரச்சுரங்கங்களைக் கண்டடைகிறார்கள் என்பதும் இக்கதைதான். மலைச்சுரங்கத்திலிருந்து கிளம்பி பல பட்டைகள் தீட்டி ஒளி வீசிச் சுடர்ந்து மண்ணுக்கே திரும்பிய பயணம்.
வீடுகளில் குளவி கூடு கட்டுவது போல எனக்கென ஒரு அறையை அமைத்துக் கொண்டேன் என்ற ராப்டனின் பதிலும் விரிந்து விரிந்து நிறைகிறது. ககன வெளியில் மானுடத்தின் சிறுகூடென உலகம். பரந்த உலகின் மகத்தான இயற்கைக்கு முன் தாங்கள் அடைந்து வாழ சிறு வீடு. மாபெரும் அரண்மனைகளை விட செல்வம் நிறைந்த மடாலயம், அதில் தனக்கென கூடு போல ஒரு அறை அமைத்து அதிலிருந்தும் விடுபட்டு கூடுடைத்து அறைகளின் அளவு சிறுத்துக் கொண்டே வந்து சிறு கூடை அளவுக்குள் தன்னைக் குறுக்கிக் கொள்ளும் திரக்பா. மூன்றுமுறை உங்கள் உடலை திறந்து வெளியேறுங்கள் என்ற தனது பாடத்தை வாழ்ந்து காட்டுகிறார். சில பதங்கங்கள் தங்கள் உடலேயே கூடாக ஆக்கி பிரிந்து உள்ளே வளர்கின்றன என்பதும் பதங்கமாதலை (sublimination) சொல்லச் சிறந்த வழி.
காற்றால் சுழற்றப்படும் அறச்சக்கரங்கள் என்ற படிமமும் அறம் மனிதர்களால் கைவிடப்பட்டாலும் நிகழும் என்ற வார்த்தைகளும் அந்த கைவிடப்பட்ட மடாலயங்களில் இமயத்தின் மடியில் இருந்து கேட்கும் அசரீரி போல் ஒலிக்கிறது.
ஓர் இடத்தை நாம் கண்ணால் பார்த்தபிறகு அங்கே சென்றடைய பலமணிநேரம் ஆகும் என்ற இமயப் பாதை குறித்த வர்ணணையே இறுதியாக ராப்டனிடம் முக்தானந்தர் கேட்டதற்கான விடையாகவும் கொள்ளலாம்.
பறந்தெழும் வல்லமை கொண்ட ஒன்று சிறுகதை என்ற வடிவில் தன்னை ஒடுக்கிக் கொண்டிருக்கும் கூடு இக்கதை.
வணக்கங்களுடன்,
சுபா
***
நற்றுணை [சிறுகதை]
அன்புள்ள ஜெ
நற்றுணை கதையை வாசிக்கையில் நான் ஆஷாபூர்ணாதேவி எழுதிய நாவலைப் பற்றி நினைத்துக்கொண்டேன். முதல்எதிர்க்குரல் என்றபேரில் வெளியான நாவல் அது. ஒரு பெண் பழமையான ஒரு சூழலில் இருந்து எதிர்த்து வெளிவருவதைப்பற்றிய வங்காள நாவல். பெண்ணில் எழும் அந்த யட்சியை அழகாகச் சித்தரித்துக்காட்டிய நாவல்.
சி.சுசிலா
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். தனிமையின் புனைவுக் களியாட்டுக் கதைகள் ஒவ்வொன்றும், ஏதாவது ஒரு வகையில் கட்டிப்போட்டு விடுகின்றன. மகிழ்வாக, குதூகலமாக, சோகமாக, சிந்திக்க வைப்பவையாக, வாழ்வின் அனுபவமாக கட்டிப்போடுகின்றன, புரட்டிப்போடுகின்றன.
நற்றுணை என்னை மிகவும் ஆட்டிப்படைக்கும் கேள்வியான, பெண்களின் போராட்டம். அவள் ஒவ்வொன்றுக்கும் அதிகப் படிகள் ஏறவேண்டிய நிலைமை. அவளை எப்பொழுதும் ஒரு பண்டமாக பார்க்கும் உலகம். அதை மீறி அவள் . இந்த உலகில் ஒரு சாதரண மனுஷியாக அவளுக்கு பிடித்தமாதிரியாக வாழ்வதில் எப்பொழுதும் இருக்கும் சவால். நற்றுணை என் நினைவில் எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும் அந்தத் தணலை நெய் ஊற்றி சுடரை வானளவு வளர வைத்துவிட்டது.
இன்றும் அம்மிணி தங்கச்சிகள் கஷ்டப்படத்தானே செய்கிறார்கள். ஒரு நற்றுணை வேண்டியதாகத்தானே இருக்கிறது. நற்றுணை, என்ன ஒரு விதமான தலைப்பு. கொற்றவை போல், நான் அடிக்கடி வாய்விட்டுச் சொல்லிப் பார்க்க இன்னொரு தலைப்பு.
அது நான் முதல் முதலாக மேனேஜர் ஆன வருடம். நான் லீடாக இருந்து மேனஜராக பதிவு உயர்வு பெற்றதால், நான் இருந்த லீட் பதவி காலியாக, அதற்கு ஆளைத் தேர்வு செய்யவேண்டிய கட்டாயம். ஒரு மாதம் ஆகியும் நான் நினைத்த மாதிரி ஆள் கிடைக்கவில்லை. மாதங்கள் தள்ளிப்போனால், ஒரு ஆள் குறைவாக என்னால் வேலைகளை முடித்து தர முடிகிறது என்று அந்த காலியிடத்தை பட்ஜெட் என்ற பெயரில் மூடிவிடுவார்கள். எங்களது இந்திய நிறுவனத்தில் வேலை பார்த்த பெண் , அமெரிக்க மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்து வேலையை விட்டு சென்றது நினைவு வந்தது., linkedin- சென்று, அந்த பெண் இப்பொழுது அமெரிக்காவில் எங்கு இருக்கிறாள், என்ன வேலை பார்க்கிறார் என்று பார்த்தேன். அவரை அழைத்து, அந்த வேலைக்கு விண்ணப்பிக்க சொன்னேன்.
நான்தான் மேனேஜர் ஆயிற்றே, என் முடிவாகத்தான் இருக்கும் என்பது கார்பரேட் உலக வாழ்க்கையல்ல. அவரை நேர்முகம் செய்த எனது குழுவினர் அவரை லீடாக எல்லாம் எடுக்க முடியாது, வேண்டுமானால், சீனியர் இஞ்சினியராக எடுக்கலாம் என்று சொல்லிவிட்டனர். ஒரு வேளை, அவர் ஆணாக இருந்திருந்தால் அப்படி சொல்லியிருக்கமாட்டார்களோ என்று என்னுள் ஒரு கேள்வி இருந்தது. அப்பொழுது ,நான் அனுபவம் இல்லாத வாதம் செய்து வெல்லத் தெரியாத ஒரு மேலாளர். அவருக்கு வேலை கொடுத்தால் போதும் என்று எடுத்துக்கொண்டேன்.
இரண்டாவது நிகழ்வு. என்னுடன் நடந்த முதல் நேர்முகத்திலேயே, புரிந்துகொண்டேன், அவர் தன் வேலையை கடமை உணர்ந்து செய்வார் என்று. அவரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கலாம் என்று என் மனம் உறுதியாக சொன்னது. ஆனால், அடுத்த துறையின் மேலாளரும், அதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். அவர் , எப்படியோ இந்த பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள் என்றும், அவர்கள் ஆரம்ப பள்ளிக்குச் செல்பவர்கள் என்றும் அறிந்துகொண்டார். என்னிடம் அவரது திறமையை எள்ளளுவும் நினைத்து பார்க்காமல், ஒரு அம்மாவாக அவர் வேலையை சரியாகச் செய்ய மாட்டார் என்றும் அவரை வேலைக்கு எடுக்க கூடாது என்றும் ஒற்றைக் காலில் நின்றார்.
எங்கள் இருவருக்கும் மேல் உள்ள மேலாளரிடம் சென்று, அவருக்குத் திறமையில்லை என்று சொல்லி வைத்தார். இந்தமுறை, நான் பேசத்தெரிந்த புள்ளி விபரங்களை கோர்த்து வாதத்தில் வெல்லத் தெரிந்த மேலாளராக மாறியிருந்தேன். அவரை தேர்வு செய்வதில் வெற்றி பெற்றேன். அவர் அதற்கு அப்புறம் சிறப்பாக பணி செய்தற்காக அலுவலக கூட்டங்களில் அழைக்கப்பட்டு பரிசுகள் பல கொடுக்கப்பட்டு சிறப்பிக்க பட்டார்.
நான் நற்றுணையில் வரும் யட்சியை, ஒரு படிமமாக பார்க்கிறேன். பெண் முன்னேற அவளை அறிந்த ஒரு துணை – தந்தை, சகோதரன், தோழன், தோழி தேவையாக இருக்கிறது. யட்சியின் துணையில்லாமல், அவள் அவளாக முன்னேறும் காலம் எப்பொழுது வரும் ? நற்றுணை போன்ற கதைகள், காலம் காலம் காலமாக சொல்லப்பட்டு, பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு எறும்பு ஊறக் கல்லும் தேயும் என நம்புகிறேன்.
அன்புடன்,
வ. சௌந்தரராஜன்
***