கூடு,பலிக்கல்- கடிதங்கள்

கூடு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நான் சில ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகேஷ் சென்றிருந்தபோது அங்கே மகரிஷி மகேஷ் யோகியின் பழைமையான ஆசிரமம்- கம்யூன் கைவிடப்பட்டு கிடப்பதை கண்டேன். இடிபாடுகள். குட்டிச்சுவர்கள். அவற்றிலிருந்த ஓவியங்கள் திகைப்பூட்டின. அற்புதமனா பல ஓவியங்கள் அழிந்து கிடந்தன

அதைப்பற்றி விசாரித்தேன். மகேஷ் யோகி எழுபதுகளில் ரிஷிகேஷில் அந்த இண்டர்நாஷனல் கம்யூனை உருவாக்கினார். உலகம் முழுக்க இருந்து ஹிப்பிகளும் யோகம் பயில்பவர்களும் அங்கே வந்தார்கள். அது விரிந்துகொண்டே சென்றது. அங்கே இசைக்கலைஞர்கள் ஓவியர்கள் எல்லாம் இருந்தனர். ஆனால் சீக்கிரமே அந்த கம்யூன் கலைந்தது. மகரிஷி மகேஷ் யோகி அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. அது மறைந்து இடிபாடுகளாக நீடித்தது

இப்படி ஏராளமான பெரிய அமைப்புக்கள் கைவிடப்பட்டு கிடப்பதைப் பார்க்கிறேன். அவை ஒரு மனிதரின் கனவால் உருவாக்கப்பட்டவை. அந்த மனிதருடன் அப்படியே மறைபவை. சில அமைப்புக்களும் அப்படித்தான். சில மதங்களேகூட அப்படித்தான். பிரம்மசமாஜம் ராஜா ராம்மோகன் ராய் மறைந்ததும் தானும் மறைந்தது

கூடு என்பது உடல். தன் உடலை பலமடங்கு பெருக்கி அப்படியே சுருக்கி கைவிட்டு மறைகிறார் லாமா. அந்த மகத்தான நாடகம் பிரமிக்க வைக்கிறது

ராம்குமார்

***

ஜெ

அகத்தேடலின் ஆகிருதி காரணமாக பித்தெழுந்து உலகம்பூராவும் சுற்றி ,கண்டதையும் கற்று அனைத்தையும் செரிக்க முற்பட்டு, உள்ளெரியும் காலாக்னி மிதப்படும்போது ஓரிடத்தில் பிரமாண்டமாக நிலை கொண்டு,அகப்பயணமாக த்யாணித்து தியாணித்து புறவயமாகசுருங்கியும் அகவயமாக விஸ்வரூபீயாக மாறும் ஒரு பிரயாணத்தை நிலக்காட்சியாலும் மடாலய விவரிப்பாலும் போகாதவர்களைக்கூட அருகிருந்து பார்க்கும்படியான எழுத்தால் பிரம்மிக்க வைக்கிறீர்கள்.

நமது 2012 பூட்டான் பயணத்தின் போது தாக்க்ஷிங் மடாலயத்தை தரிசித்ததும் அங்கு பிரமாண்ட தரிசனமாக வஜ்ராயண புத்தரையும் தாராதேவியையும் கண்டதும் நினைவலைகளாக வந்து கொந்தளித்தது.

விஜயராகவன்.

***

பலிக்கல்[சிறுகதை]

அன்புள்ள ஜெ

பலிக்கல் ஒரு திகைக்கவைக்கும் கதை. இந்தக்கதை பலமுறை தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. ஒரு கோயில்திருட்டு என்றால் முதலில் அர்ச்சகர் கைதாவார். சென்ற பத்தாண்டுகளுக்கு முன்புவரை அவர்களுக்கு எந்த அமைப்புசார்ந்த உதவியும் இருக்காது. அவரை விசாரிக்கையிலேயே திருட்டு- அர்ச்சகர் கைது என்று செய்தி வரும். அர்ச்சகர்மேல் பிழை இல்லை என்று சொல்லி அவரை விடுவித்தாலும்கூட பழியும் அவமானமும் மிஞ்சும். ஆனால் கோயில்சொத்தை கையாடினார் என்று கைதுசெய்யப்பட்ட அறங்காவலர்கள் அறநிலை அதிகாரிகள் எவருக்கும் அந்த ஏளனமோ வசையோ இருக்காது.

அதற்கும் அப்பால் சென்று நல்லா இரு என்று வாழ்த்தும் ஒன்று அந்தக்கதையில் தோன்றுகிறது. அது என்றைக்கும் இருக்கவேண்டும்

ராமநாதன் தணிகாசலம்

***

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களின் பலிக்கல் கதையை படிக்கும் பொழுது நீங்கள் எழுதிய முற்ற ழிவு என்னும் கட்டுரை ஞாபகத்தில் வந்தது. பலிகல்லின் கதை அந்த கட்டுரையோடு தொடர்புடையதாக படுகிறது. அப்பொழுது அதைப் படித்துவிட்டு நீண்ட ஒரு கடிதம் எழுதினேன். இப்பொழுது இந்த கதையும் படிக்கும் பொழுது அதே உணர்வுகள் தான்.சிந்தனைகள் வெவ்வேறு வழியில் பரவினாலும் கடைசியில் முட்டிக்கொள்வது விதியில் தான்.  ஒட்டுவாரொட்டி நல்ல பிரயோகம். சிறிது நாட்கள் அதை வைத்தே மனசை உருட்டிக்கொண்டு இருக்கலாம் . இருந்தாலும் பாபங்களை அடுத்த சந்ததியினருக்கு கடத்துவது என்பது கொடூரமாக தான் உள்ளது. Freewill என்பது கானல் நீர்தான்.

குழந்தைகளுக்கு கேரி ஓவர் கூட்டல் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். இரண்டு இலக்க எண்களை கூட்டும் பொழுது அடுத்து இலக்கத்திற்கு மீதியை கொண்டு செல்வது என்பது அவர்களால் ஒப்பு கொள்ள முடியவில்லை. எதற்கு அம்மா அனாவசியமாக அடுத்து இலக்க எண்ணின் தலையில் கட்ட வேண்டும் இதை என்று குழம்பி விட்டார்கள். ஒரு இலக்கத்தின் கூட்டுத்தொகை அந்த இலக்கத்திற்கு மட்டுமே சொந்தம் , அடுத்த இலக்கம் அதை உரிமை கொண்டாட முடியாது என்பது அவர்கள் வாதம். கடைசியில் பஷீர் கதையில் வரும் பையனைப் போல, 9-க்கு மேல் போனால் நாங்கள் பெரிய சைஸ் ஒன்பது போட்டுக் கொள்கிறோம் என்று கூறி முடித்து விட்டார்கள்.

குழந்தைகள் கூட்டலை இரண்டு மூன்று வாரத்தில் புரிந்து கொண்டு விடுவார்கள், ஆனால் எங்களுக்குத்தான் போற்றி எதற்கு இவ்வளவு துன்பப்பட்டார் என்பதற்கு விடை தெரியாது. விடை தெரிந்தால் வெண்முரசில் வரும் குரு வம்ச ஜாதகங்களை ஆராய்ச்சி செய்யும் நிமித்திகன் நிலைதான்.

அன்புள்ள

மீனாட்சி

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–63
அடுத்த கட்டுரைதேவி, சிவம்- கடிதங்கள்