நிகர்நிலை அனுபவம் அளிக்கவல்ல எழுத்தின் உச்சகட்ட சாத்தியங்களை கதைகளில் பார்ப்பது பிரமிப்பாக இருக்கிறது சிவம் கதையில் , சிதையில் வேகும் பிணமாக என்னையே எண்ணற்றமுறை உணர்ந்து விட்டேன் இந்த கதைகளுக்கு வரும் கடிதங்கள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளிக்கின்றன. இதுபோன்ற எண்ணிக்கையிலான பிரமாண்ட , காத்திரமான,கூட்டு வாசிப்பு தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவே முதல்முறை என எண்ணுகிறேன்
இதற்கு வரும் வாசகர் கடிதங்களைப் படிப்பதே ஒரு பெரிய பணியாக இருக்கும் என நினைக்கிறேன் முகநூலில் சில இலக்கியவாதிகள் ( ஓய்வு) முன்வைக்கும் அசட்டுத்தனமான புரிதல்களைவிட, , ஒரு மருத்துவ நிபுணர் , ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவன மேலாளர் , ஒரு தீவிர வாசகர் எழுதி , உங்கள் தளத்தில் வெளியாகும் கடிதங்கள் உண்மைத்தன்மையுடன் , வித்தியாசமான புரிதல்களுடன் இருக்கின்றன
ஆனாலும்கூட , வடிகட்டப்பட்ட கடிதங்களும் கணிசமாக இருக்கும்தான் ஒட்டுமொத்தமாக பார்த்தால் , நீங்கள் சிற்றிதழ் சூழலில் இருந்து வந்தவர் என்ற முறையில் , வாசகர்களின் எதிர்வினை நம்பிக்கை அளிக்கும்வண்ணம் இருக்கிறதா? என்றென்றும் அன்புடன்
பிச்சைக்காரன்
***
அன்புள்ள பிச்சைக்காரன்
ஐம்பதில் ஒரு கடிதமே பிரசுரமாகிறது- அக்கடிதத்தில் ஏதாவது ஒரு வாசிப்புக்கோணம் இருக்கவேண்டும். சற்றேனும் வாசகனுக்கு உதவவேண்டும். வாசகர் கடிதங்களில் பல ஆசிரியனுக்கு தன் மனதை தெரிவிக்கும் பொருட்டு மட்டும் எழுதப்படுபவை. ஆகவே உதிரிச் சொற்றொடர்கள் மட்டுமே கொண்டவை. அவற்றை வெளியிடுவதில்லை.
தமிழில் வாசிப்பவர்களிலேயே மிகப்பெரும்பாலானவர்களுக்கு தமிழில் தட்டச்சிடத் தெரியாது. ஆங்கில உதிரிச்சொல் கடிதங்களே எண்ணிக்கையில் மிகுதி. இந்தியாவில் மொத்த தொழில் -வணிக -தனிவாழ்வு தொடர்புமுறைகளும் உடைந்த ஆங்கில ஒற்றைச்சொற்களால் ஆனவையாக மாறிவிட்டிருக்கின்றன. ஆங்கிலம் அறியாதவர்கள் தங்கிலீஷ்.
பல கடிதங்களில் கதைபற்றிய புரிதல் நுட்பமானதாக இருக்கும், தட்டச்சிடும் பழக்கம் இல்லாததனால் உதிரியான சில சொற்களே கடிதத்தில் இருக்கும்.
தட்டச்சு அல்ல, தொட்டச்சு. என் வாசகர் கடிதங்களில் கணிப்பொறியில் தட்டச்சிடப்படுபவை மிகமிகக் குறைவு. பெரும்பாலானவை செல்பேசியில் எழுதப்படுபவை. தமிழக அளவில் கணிப்பொறியின் இடத்தை செல்பேசியே எடுத்துக்கொண்டுவிட்டிருக்கிறது. விமானநிலையங்களில் நான் மடிக்கணினியுடன் இருப்பேன். மிகப்பழைய ஒரு விசித்திரமான பொருளை கையில் வைத்திருப்பதுபோல அன்னியமாக இருப்பேன்.
இக்கடிதங்களில் பல சொற்களை தானியங்கி தொழில்நுட்பம் மாற்றியமைத்திருக்கும். ஆகவே ஆங்காங்கு புரியாமல் பொருத்தமற்று இருக்கும்.
கடிதங்களின் மொழியை முன்பெல்லாம் மாற்றியமைத்துக்கொண்டிருந்தேன். ஓரிருமுறை அவ்வாறு மாற்றியமைத்ததுமே கற்றுக்கொண்டு நன்றாக எழுதத் தொடங்கிய பலர் உண்டு – சிலர் கதைகள்கூட இன்று எழுதுகிறார்கள். இப்போது அதைச் செய்ய பொறுமையில்லை.
பெரிய பிரச்சினை ஃபார்மேட்தான். சில கடிதங்கள் வேர்ட்பிரஸ் பக்கத்தில் நில்லாமல் நீண்டு அகன்றுவிடும். சில கடிதங்களில் சொற்கள் நடுவே இடைவெளியே இல்லாமல் ஒற்றை கோடாக இருக்கும். அவற்றை வெட்டி பலவகையிலும் சீர் செய்து வெளியிடவேண்டும்.
சீர்செய்வதற்கு நான் செய்யும் ஒருவழி உண்டு .இணையதளத்தின் அட்ரஸ் பக்கத்தில் வெட்டி ஒட்டி திரும்ப வெட்டி ஒட்டுவேன். ஃபார்மாட் ஆகியிருக்கும். சொந்தமான கண்டுபிடிப்பு.
தனிப்பட்ட செய்திகள் கொண்ட கடிதங்கள் பல உண்டு, குறிப்பாக பலிக்கல் கதைக்கு வந்த கடிதங்களில் பல நெஞ்சைக் கலக்குபவை. மொத்த தமிழகத்திலும் இந்த அளவுக்கு பிராமணர்களுக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளது, அது சார்ந்து இத்தனை குற்றவுணர்வு ரகசியமாக உள்ளது என்பது ஆச்சரியம் அளிப்பது.
கொரோனா காலம் என்பதனால் உள்ள வேறுபாடு என்பது வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் வாசகர்கள் நிறைய எழுதுகிறார்கள் என்பது. இரவு கதை பிரசுரமாகி காலையில் கண்விழித்தால் கடிதங்களைப் பார்ப்பது உற்சாகமானது. கொரோனோ இல்லாவிட்டால் இவர்கள் எழுதியிருக்க மாட்டார்கள். இவர்களில் பலர் முறையாக இலக்கியம் பயின்று ஆய்வுப்பணி செய்பவர்கள் என்பதனால் அவர்களின் பார்வை புதிதாக இருக்கிறது
கடிதங்கள் நிறைய வருகின்றன. ஆனால் மொத்தமாகவே ஏறத்தாழ முந்நூறுபேர்தான் எழுதுபவர்கள். இந்த தளத்தின் வாசகர்களில் இருநூறில் ஒருவர் என்ற விகிதம். மிகமிகக்குறைவு என்றே சொல்லவேண்டும்.
இதன் வாசகர்களின் எண்ணிக்கையும் பரப்பும் நீங்கள் எண்ணுவதை விட பலமடங்கு அதிகம். பொதுவாக இலக்கியச்சூழல், சமூகவலைத்தளச் சூழலுக்கு வெளியே இருக்கும் வாசகர்கள் முக்கால்பங்குக்கும் மேல்.
அதற்கு காரணம் சினிமா என்பது என் ஊகம். 2.0 போன்ற ஒரு படம் வந்தால் சிலலட்சம் வாசகர்கள் உள்ளே வருகிறார்கள். ஆயிரம்பேர் அதிகரிக்க எஞ்சியோர் விலகிவிடுவார்கள். இதன் வழியாகவே நவீன இலக்கிய அறிமுகம் அடைந்து வாசிப்பவர்களும் பலர் உண்டு
பத்தாண்டுகளில் மிகமிக நிறைவான ஓர் அறிவுச்சூழல் இதைச்சூழ்ந்து உருவாகியிருக்கிறது – எந்த ஊடக ஆதரவும் இல்லாமல். இன்று தமிழகத்தில் நவீன இலக்கியம் -தீவிர அறிவுத்துறை சார்ந்த மிகப்பெரிய ஊடகம் இந்த தளம்தான்.
ஆகவே வெறுப்பாளர்கள் எப்போதுமே குமுறிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போதுகூட வாசகர்கடிதம் எழுதும் ஒருவரை இன்ஸ்டகிராமில் அல்லது லிங்கடினில் அடையாளம் கண்டுகொண்டால் வசைகள் அனுப்பும் வழக்கம் தமிழ்ச்சூழலில் நீடிக்கிறது. சமீபத்தில் ஒருவருக்கு ‘பார்ப்பன சங்கி நாயே’ என்று தொடர்ந்து வசை. அவர் அழாக்குறையாக மின்னஞ்சல் போட்டார் – ‘சார் நான் ஒரிஜினல் துளுவ வெள்ளாளன் சார்!”
ஜெ
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
தங்கள் சிறுகதைகள் அனைத்தும் தங்கள் ஒட்டு மொத்த செயல்பாட்டின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளன. அனைத்து கதைகளையும் வாசித்தேன் ஒரு வாசகன் அக்கதைகளை வெவ்வேறு சிறு தொகுதிகளாக வரிசைப்படுத்த முடியும் .ஒரு ஆரம் போல , விளக்கின் வரிசை போல.
ஆண் பெண் உறவின் அடிப்படையில் , தங்களை முதன் முதலில் அணுகி வரும் வாசகனுக்கான வரிசையாக முதல் ஆறு, ஆழி , பொலிவதும் கலைவதும் , சீட்டு , கோட்டை , பெயர் நூறான் , பாப்பாவின் யானை, நஞ்சு , வேட்டு மற்றும் லீலை, இவ்வாறு வரிசைப்படுத்துவதன் மூலம் இளமை முதல் நடு வயது வரையிலான காலகட்டத்தை உங்கள் கதைகள் தொட்டு செல்கின்றன.
அடுத்த வரிசை உங்கள் பால்யம் முதல் இளமை வரை நீங்கள் கண்ட ஒரு கிராம வாழ்வின் அழகிய பிரதி – ஆனையில்லா, வருக்கை, மதுரம், பூனை, துளி,இடம் , மொழி , தங்கத்தின் மணம், சூழ்திரு – அனைத்து கதைகளிலும் கேலியும் நகைச்சுவையும் நன்கு கூடி வந்திருக்கின்றன, பழைய பெருமை குறித்த ஒரு சரடு , இறைவனை மதத்தை துணைக்கு அழைத்தபடியே இருக்கும் மக்களின் மாண்பு, திடீர் கூக்குரல் , மட்டற்ற மகிழ்ச்சி , ஒரு பார்வையில் வெள்ளந்தி மாற்றி நோக்குகையில் விவரம் ,விலங்குகளூடான ஒரு ஒத்திசைவு , குழந்தைகள் பெரியவர் ஆகுதல் , பெரியவர் குழந்தைகள் ஆகுதல் – இத்தொகுப்பை அப்படியே மால்குடி டேஸ் போன்ற ஒரு தொகுப்பாக கோட்டு சித்திரங்களுடன் காண்பதற்கு அருமையாக இருக்கும் .
அடுத்த வரிசை தங்கள் பணியிடம் தொடர்பானது – வான் நெசவு , வான் கீழ் , உலகெலாம் , சுற்றுக்கள் , வானில் அலைகின்றன நட்சத்திரங்கள் , மலைகளின் உரையாடல், குருவி , நகைமுகன் மற்றும் லூப் , எனக்கு மிகவும் பிடித்த கதைகளாக லூப் மற்றும் நகைமுகன் இரண்டையும் சொல்வேன் – லூப் ஒரு சில வரிகளிலேயே சூழியல் சார்ந்த கதையாக , மாற்றம் குறித்த ஒரு சிந்தனையை அடிக்கோடிடுகிறது , வளர்ச்சி என்னும் பெயரில் வளங்கள் சூறையாடப்படுகையில் இயற்கையின் லூப்பை உணர்தல் அவசியமாகிறது – நகைமுகன் – சிரித்து சிரித்து கண்களில் கண்ணீர்,
அடுத்த வரிசை மிகவும் பிடித்தமான துப்பறியும் தொடர் – வெறும் மூணு சீட்டு விளையாட்டு போல் இல்லாது கதையின் நிலபரப்பும் கதை மாந்தர் தம் தொழிலும், இடம் பெறும் கதைகள் – பத்து லட்சம் காலடிகள், கைமுக்கு, ஓநாயின் மூக்கு மற்றும் வேரிலே திகழ்வது – என்னை மிகவும் கவர்ந்தது பத்து லட்சம் காலடிகள், மற்றும் கைமுக்கு கதையும் – ஒரு தந்தை மகனை மீறிய அறத்தை நிலை நாட்டுகிறார், இன்னொரு தந்தை அறம் தவிர்த்து மகனை காப்பாற்றுகிறார் – ஏனோ லோகிதாஸ் நினைவுக்கு வருகிறார் , கூடவே கிரீடமும் செங்கோலும், ஒன்றில் அறம் எது என்ற தெளிவு இருக்கிறது இன்னொன்றில் அவ்வறத்தின் பால் நிற்க இயலாதவர்கள் கூறும் காரணங்கள் இருக்கின்றன – ராமாயணமும் மகாபாரதமும் போல , தியரியும் நடைமுறையும் போல , தங்களின் இரு வான் நோக்கிய சாளரங்கள் நினைவுக்கு வந்தது.
புதிய நிலப்பரப்புகள் குறித்த சித்திரமாக அமைந்த வரிசை அடுத்தது – தவளையும் இளவரசனும் , ஐந்து நெருப்பு , ஏதேன் மற்றும் அனலுக்கு மேல் – ஐந்து நெருப்பு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது , ஒரு நிலப்பரப்பின் கடுமையை , இவ்வளவு நெருக்கமாக உணர்கையில் பதை பதைப்பாக இருந்தது , அறியாத நிலப்பரப்பின் கடுமையை தங்கள் வரிகளில் உணர்ந்தேன் , முத்துவின் புறப்பாடு ஒரு தொடர்ச்சி , இந்நிலத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும் கடைகோடி மக்களின் சங்கல்பங்கள்.
கரவு மற்றும் முத்தங்கள் வரிசையில் ஒரு நாட்டார் தன்மையும் தொன்மங்களின் சாயலும் இருந்தன – இரண்டு கதையும் யூகிக்க முடியாத படி பயணித்து பூடகமாகவே முடிந்தன.
வரலாற்று ஆளுமைகள், தருணங்கள் குறித்த வரிசையாக ” எண்ண எண்ண குறைவது, போழ்வு, வனவாசம், நற்றுணை , பிடி , ஏகம் ,ஆயிரம் ஊற்றுகள் மற்றும் ஆட்டக்கதை – என்னை மிகவும் கவர்ந்தது , பிடியும் ஆட்டக்கதையும் , குறிப்பாக ஆட்டக்கதையில் லட்சுமி சரஸ்வதி குறித்தான கதையாடல் புதிய திறப்பை அளித்தன
தங்கள் ஆளுமையின் ஒரு பகுதியாக நீங்கள் வலியுறுத்தி கொண்டே இருக்கும் ஆன்மீக சாரம் கொண்ட கதைகளாக ஒரு வரிசை அமைந்துள்ளது – அதில் ஒரு சரடாக மாயப்பொன் . இறைவன் , பலிக்கல் , அங்கி , விலங்கு, எழுகதிர் மற்றும் ஆடகம் , – இவை செயல் தளத்தில் உள்ள ஆன்மீக சரடு , குறிப்பாக ஆடகம் ஆன்மீக தேடலில் இருக்கும் ஒருவனது செயலின்மை குறித்ததாகவும் எவ்வாறு அதிலிருந்து வெளி வருகிறான் என்பது போல அமைந்துள்ளது – எழுகதிர் ஒரு ஆன்மீக மதத்தின் பயணம் போல இருந்தது – கையில் கிடைத்தற்கரிய செல்வம் இருந்தும் கிழக்கு நோக்கி சென்று கொண்டே இருக்கும் ஒரு ஆன்மாவின் தேடல் போலவும் அமைந்திருந்தது – இன்னொரு சரடு ஆன்மீக விஷயங்களின் ஆதார விஷயங்கள் போல அமைந்தவை – கூடு, காக்கை பொன் மற்றும் சிவம் – மூன்று கதைகளும் கேள்வியில் தொடங்கி பதில் எதிர்பாராத பயணங்களை துவக்கி வைக்கின்றன.
தங்கள் படைப்பூக்கத்திற்கும் எழுத்தாளுமைக்கும் எனது வணக்கங்கள்
அன்புடன்
மணிகண்டன்
***
அன்புள்ள மணிகண்டன்
கதைகளை நூலாக்கும்போது இந்த வகைப்பாடு சார்ந்தே செய்யவேண்டும் என நினைக்கிறேன். பலநூல்களாகவே செய்யமுடியும்.
ஒருகதை எழுதும்போது அந்த தீவிரநிலைதான் இன்னொரு கதைக்கான தூண்டுதலை அளிக்கிறது. இன்னொரு கதையை கொண்டுவந்து அளிக்கிறது. உலக இலக்கியத்தின் பிதாமகர்கள் இதைப்பற்றி நிறைய எழுதிவிட்டார்கள்
ஆச்சரியமான சில உண்டு. என் கதைகள் பெரும்பாலும் குமரிநிலம்விட்டு விலகாதவை. இப்போதுதான் அவை விரிந்து வேறுநிலங்களுக்குச் செல்கின்றன. என் தொழில்களமான செய்திதொடர்புத்துறை பற்றி நான் எழுதியதே இல்லை. என் மனதைக் கவர்ந்த காசர்கோடு பற்றி ஒருவரி கதைகூட எழுதியதில்லை. அவையெல்லாமே இப்போதுதான் எழுத்தில் வருகின்றன
இப்போதுகூட என்னை உலுக்கிய பல தனிநிகழ்வுகள் பற்றி ஏதும் எழுதவில்லை. என் நண்பன்,அப்பா, அம்மாவின் தற்கொலை, என் அலைச்சல் நாட்கள் கொந்தளிப்பானவை. நான் சுனாமியில் கண்ட வாழ்வனுபவங்கள் உக்கிரமானவை. அவற்றை எழுதவில்லை. அவற்றிலிருந்து கதை வரவில்லை, அவ்வளவுதான்
என் குடும்பம் பற்றிக்கூட பெரிதாக எழுதியதில்லை. ஆனால் இத்தனை எழுதிய பின்னரும் அம்மா பற்றி ஒரு கதை வரவில்லை. ஏன் என்றே தெரியவில்லை
ஜெ
***
65 ‘பிறசண்டு’ [சிறுகதை]
64 கரு [குறுநாவல்]- பகுதி 1
64 கரு [குறுநாவல்]- பகுதி 2
63. ‘பிறசண்டு’ [சிறுகதை]
62. நிழல்காகம் [சிறுகதை]
61. லாசர் [சிறுகதை]
60. தேவி [சிறுகதை]
59. சிவம் [சிறுகதை]
58. முத்தங்கள் [சிறுகதை]
57. கூடு [சிறுகதை]
56. சீட்டு [சிறுகதை]
55. போழ்வு [சிறுகதை]
54. நஞ்சு [சிறுகதை]
53. பலிக்கல் [சிறுகதை]
52. காக்காய்ப்பொன் [சிறுகதை]
51. லீலை [சிறுகதை]
50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]
49. கரவு [சிறுகதை]
48. நற்றுணை [சிறுகதை]
47. இறைவன் [சிறுகதை]
46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]
45. முதல் ஆறு [சிறுகதை]
44. பிடி [சிறுகதை]
43.. கைமுக்கு [சிறுகதை]
42. உலகெலாம் [சிறுகதை]
41. மாயப்பொன் [சிறுகதை]
40. ஆழி [சிறுகதை]
39. வனவாசம் [சிறுகதை]
38. மதுரம் [சிறுகதை]
37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]
36. வான்நெசவு [சிறுகதை]
35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]
34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]
33. வான்கீழ் [சிறுகதை]
32. எழுகதிர் [சிறுகதை]
31. நகைமுகன் [சிறுகதை]
30. ஏகம் [சிறுகதை]
29. ஆட்டக்கதை [சிறுகதை]
28. குருவி [சிறுகதை]
27. சூழ்திரு [சிறுகதை]
26. லூப் [சிறுகதை]
25. அனலுக்குமேல் [சிறுகதை]
24. பெயர்நூறான் [சிறுகதை]
23. இடம் [சிறுகதை]
22. சுற்றுகள் [சிறுகதை]
21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]
20. வேரில் திகழ்வது [சிறுகதை]
19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]
18. தங்கத்தின் மணம் [சிறுகதை]
17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]
16. ஏதேன் [சிறுகதை]
15. மொழி [சிறுகதை]
14. ஆடகம் [சிறுகதை]
13. கோட்டை [சிறுகதை]
12. விலங்கு [சிறுகதை]
11. துளி [சிறுகதை]
10. வேட்டு [சிறுகதை]
9. அங்கி [சிறுகதை]
8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]
7. பூனை [சிறுகதை]
6. வருக்கை [சிறுகதை]
5. “ஆனையில்லா!” [சிறுகதை]
4. யா தேவி! [சிறுகதை]
3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]
2. சக்தி ரூபேண! [சிறுகதை]
1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]
***