கூடு,சிவம்- கடிதங்கள்

சிவம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

சிவம் ஒரு தத்துவார்த்தமான விளையாட்டை ஆடுகிறது. அன்பே சிவம் என்ற வார்த்தையின்மேல் அத்வைதியின் பகடியுடன் ஆரம்பிக்கிறது. அன்பை தூக்கி எவர் மண்டையிலும் போடலாம். தலைமுறைதலைமுறையாக பூசை அபிசேகம் செய்யப்பட்டு மழமழவென்று ஆனது. தேவை என்றால் மனிதன் அதன்மேல் ஏறிநின்று வேறு தெய்வத்தை தொழவும் தயங்கமாட்டான்.

அந்த  ‘சிவம்’ பற்றிய கதை இது. ஜலசமாதி ஆகும் அந்த சாமியாரும் அன்பை கங்கையில் இருந்து எடுத்து வைத்து பூசை செய்பவர். சிவோகம், அன்பே நான் என்று சொல்பவர். எழுந்ததும் காலால் தட்டி அப்பால் வீசிவிட்டுச் செல்பவர். அன்பு என்பது உண்டா என்றால் உண்டு. ஆனால் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. அன்பை ஒரு நிபந்தனையாகக் கொண்டவர்கள் அல்ல

கதையின் ஒவ்வொரு நிகழ்வும் வெவ்வேறு இடங்களைத் தொட்டுத் தொட்டு மீட்டுகிறது.சுடலை, அதில் உணவைச் சுட்டுத்தின்பது, உருகிவழியும் காலில் இருந்து உதிரும் வெள்ளிநகை… ஆன்மிகமான மறைபொருள் நிறைந்த கதை

எம்.குமார் மூர்த்தி

***

அன்புநிறை ஜெ,

பாதைகள் எதுவானாலும் அது கங்கையை நோக்கியே. எனில் பித்தினால் பாய்பவரை மீட்டு வெளியேற்றுவதும் முழுமைக்கு மீள்பவரை அதில் கரைக்கவும் அறிந்த துறவியரின் அன்பு. காசியில் சென்று தனலில் எரியவோ புனலில் கரையவோ நீண்ட தவம் தேவைப்படுகிறது.  தானாகக் கழன்று விழும் வரை அணையாச் சிதையருகே காலபைரவன் காத்திருப்பான் ஒரு வெட்டியானின் அன்போடு.

என்றென்றும் மனதில் நிற்கப்போகும் ஒரு வரி – “நில்லாக்காலம் நிகழும் உடல்”

உடலுக்கும் மனதுக்குமான உறவைச் சொல்லும் ஒரு படிமம் – “ஒழுகும்படகில் எழுந்து எழுந்து அமரும் பறவை”

இக்கதையின் முகப்புப் படத்தை எவ்வண்ணம் தெரிவு செய்தீர்கள். இக்கதையை நினைத்ததும் அக்கொடியே மனதில் காட்சியாய் எழுகிறது. நெருப்பென, அதன் தழலென, நின்று திகழும் அகலெனமூன்று முறை இக்கதையில் அச்சித்திரம் வருகிறது.

காவிநிறம் புலரியில் தீயென்றே தெரியும்.

புலரிவெளிச்சத்தில் காவிக்கொடி தழலென்றே துலங்குவது.

காவிக்கொடி அகல்சுடர் என படகின் முனையில் படபடத்தது

மிக்க அன்புடன்,

சுபா

***

கூடு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கூடு ஒரு சவாலான கதை. அது திட்டவட்டமான தகவல்கள், அதைச்சார்ந்த தத்துவார்த்தமான ஆய்வுகள், ஊடே ஓடும் பகடிகள் வழியாகச் செல்கிறது. மூளையை ஒருவகையில் மந்திரித்து மலைக்கவைத்துவிடுகின்றன இந்த செய்திகள். அந்த நிலத்திலுள்ள வாழ்க்கை, அங்கே பயணம் செய்யும் விதம், அந்த நிலப்பகுதி, அந்த மடாலயங்கள் எல்லாமே நேரில் விரிகின்றன. அதன்பின் அப்படியே உருவகமாக கற்பனையாக மேலே செல்கிறது

இரண்டுவகையான ஃபேன்டஸி கதைகள் உள்ளன. முதலிலேயே இது ஃபேண்டஸி உருவகம் என்று சொல்லிவிட்டு பேசுபவை. மேஜிக்கல் ரியலிச கதைகள் அவ்வகைப்பட்டவை. இன்றைக்கு உலக இலக்கியத்தில் வெளிவரும் பலகதைகள்  ‘மிதமிஞ்சிய’ செய்திகளை அள்ளிஅள்ளி வைத்து வாசகனை மலைக்கச் செய்தபின் மேலே அவனை ஊடுருவுகின்றன. நாம் defencelessஆகிவிடுகிறோம். என்ன பிரச்சினை என்றால் அச்செய்திகளை எதிர்ப்புடன் பார்த்தாலும் defenceless ஆகிவிடுவோம். கதையின் மையம் நம்மை அறியாமல் ஊடுருவிவிடும்

மூன்றுமுறை உடல்திறந்து வெளியே வருவதன் தவம் பற்றிய கதை. ஜெ, நான் மீண்டும் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. தனிப்பட்ட முறையில் எழுதியிருக்கிறேன். 1999ல் நான்காண்டுகளில் நான் இறந்து கூட்டுப்புழுவாகி உடல்திறந்து வெளியே வந்தேன். மூன்றுமுறை உடல்திறப்பேனா என்று தெரியாது. ஆனால் ஒருமுறை வந்ததே மிகப்பெரிய ஒரு ஆன்மிக மறுபிறப்பு

எம்.

***

இனிய ஜெயம்,

கூடு வாசித்தேன். கதைக்கு வெளியே அது தொடர்பான வேறு சில எண்ணங்கள் எழுந்து வந்து அலைக்கழித்தது. உதாரணமாக காந்தி. என்னைத் துண்டாடுங்கள் இந்த தேசத்தை துண்டாடாதீர்கள் என்ற அவரது இறைஞ்சல்.  கூடு கதையின் குரு. அவரது அகமே அதன் ஆழமும் விரிவுமே அந்த மடம். போக புத்தர் துவங்கி அமிதாப புத்தர் தொடர்ந்து அங்கிருக்கும் ஒவ்வொரு ஓவியமும் பொருளும் பெரும்மணியும் எல்லாமும் அவரது அகத்தில் உறையும் வெவ்வேறு விஷயங்களே. விண்ணும் மண்ணும் இணைக்க வியனுரு கொண்டு எழும் அவரரது அகமே அந்த மொனாஸ்ட்ரி. அப்படித்தான் காந்திக்கு அவரது தேசமும்.  காந்தியின் தலை கொய்யப்பட்டது. பின்னர் சுடப்பட்டது துண்டாடப்பட்ட உடல் மட்டுமே.

ஒரு மொனாஸ்ட்ரி என்பது எந்த நிலையிலும் அதை உருவாக்கிய ஆத்மீக ஆளுமையின் அகத்துடன் இணைந்த ஒன்றே. அது வள்ளலார் சபையோ. அன்னையின் மந்திரோ. எதுவாகிலும். சென்ற வருடம் கோவில் பாதுகாப்புக்கு என்றும், நகரை அழகுபடுத்த என்றும் நீதிமன்ற உத்தரவின்படி பூரி ஜெகந்நாதர் கோவில் எல்லை சுவர் தொட்டு 75 மீட்டர் ரேடியஸ் சுற்றளவில் இருந்த அனைத்து கட்டிடங்களும் அகற்றப்பட்டன. இதில் ஆக்கிரமிப்பு அகற்றம் எனும் சீரிய பணிக்குள் சிக்கி சிதைந்த மடங்கள் பல. ஒவ்வொன்றும் நூற்றாண்டிகள் பழமை கொண்டது. பூரி கோவிலின் சடங்கு ஆசாரங்களுடன் பின்னிப் பிணைந்தது. நஷ்ட ஈட்டைக் கொண்டு இடம் பெயர்ந்து செல்ல அவைகள் எல்லாம் பாணி பூரி கடைகளா என்ன?  இக் கதை வாசித்த  பிறகு அங்கே சிதைந்த ரகுநந்தன் நூலகம் ஏமாற் மடம் எல்லாம் வேறு அர்த்தம் கொள்கிறது.

கடலூர் சீனு

***

முந்தைய கட்டுரைபத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஐந்து நெருப்பு, நஞ்சு- கடிதங்கள்