‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–61

பகுதி ஆறு : படைப்புல் – 5

துவாரகையில் இருந்து கிளம்புவதற்கான ஆணையை விடுப்பதற்கு ஃபானு மேலும் ஒருநாள் எடுத்துக்கொண்டார். “நமது கருவூலங்களை கொண்டுசெல்ல உரிய வண்டிகள் தேவை” என்றார். “அவை முறையாக பாதுகாக்கப்படவேண்டும். அதற்கான படைசூழ்கை அமைக்கப்படவேண்டும். கருவூல வண்டிகளைச் சுற்றி நாம் இருக்கவேண்டும். எந்நிலையிலும் அவை நம்மிடமிருந்து விலகிச் சென்றுவிடக்கூடாது.”

பிரஃபானு அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். “இங்கே அரண்மனையிலேயே போதிய காவலர் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு நாம் காவற்படையை அமைத்துக்கொள்ள முடியும்” என்றார். “அவர்களில் வில்லவர் எத்தனை பேர்? வில்லவர்கள் வேண்டும். ஏனென்றால் நாம் செல்லவிருப்பது திறந்த பாலைநிலம்…” என்றார் ஃபானு. “வில்லவர் போதிய அளவுக்கு உள்ளனர். குதிரைகள் குறைவாக உள்ளன. ஆனால் நாம் செல்லும் வழியில் அவற்றை சேர்த்துக்கொள்ள முடியும்” என்று பிரஃபானு சொன்னார்.

“அனைத்தும் விரைந்து முடிக்கப்படவேண்டும். நமக்கு பொழுதில்லை” என்றார் ஃபானு. ஆணைகளை விடுத்துவிட்டோம் என்னும் நிறைவை அவர் அடைவதை பார்த்தேன். “நாம் எங்கு செல்கிறோம்?” என்று சந்திரஃபானு கேட்டார். “சிற்பிகள் சொல்வதை கேட்டாயல்லவா? எங்கே செல்கிறோம் என்பதை எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது அல்ல இது. உடனே கிளம்பியாகவேண்டும். இல்லையேல் துவாரகையின் கருவூலமே நீரில் மூழ்கிவிடும்.” அவைவிட்டு நீங்கும்போது சுருதன் “கருவூலத்தைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார். அதுதான் துவாரகை என்பதுபோல” என்றார். “அது உண்மைதானே? நம்மையும் அவரையும் வேறுபடுத்துவது கருவூலம் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதுதானே?” என்றார் வீரா.

பிரஃபானு உண்மையாகவே விசைகொண்டு செயல்பட்டார். அரண்மனையிலும் சூழ்ந்திருந்த காவல்கோட்டங்களிலும் இருந்து எல்லா படைவீரர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்களை எண்ணி வகுத்து புதிய காவல்படை ஒன்று உருவாக்கப்பட்டது. அனைவருக்கும் படைக்கலங்கள் வழங்கப்பட்டன. பதின்மருக்கு ஒருவரும் நூற்றுவருக்கு ஒருவரும் என தலைமை வகுக்கப்பட்டது. நாலாயிரவரும் நால்வரால் தலைமை கொள்ளப்பட்டனர். தலைமைப்பொறுப்பு படைத்தலைவன் நிகும்பனிடம் அளிக்கப்பட்டது. படை உருவாகி வந்ததுமே மீண்டும் துவாரகையில் ஓர் அரசு உருவாகி வந்தது என்னும் எண்ணம் அமைந்தது.

துவாரகையின் கருவூலங்கள் மைய அரண்மனைக்கு அடியில் பெரும்பாறையை வெட்டிக்குடைந்து உருவாக்கப்பட்ட கல்லால் ஆன நிலவறைகளில் இருந்தன. அவற்றை திறப்பதற்கான தாழ்க்கோல்கள் சாம்பனிடமும் பிரத்யும்னனிடமும் ஃபானுவிடமும் பிரித்து அளிக்கப்பட்டிருந்தன. மூவரும் இணையாமல் கருவூல அறையை திறக்கமுடியாது. ஃபானு “அவர்களை உடனே வரசொல்லுங்கள். அவர்களிடமிருக்கும் தாழ்க்கோல்கள் அளிக்கப்படவேண்டும், நமக்கு பொழுதில்லை” என்றார்.

ஆனால் கணிகர் “அரசே, அது இப்போது நிகழாது. அவர்கள் கருவூலத்தை உங்கள் கையில் ஒப்படைப்பார்கள் என நினைக்கிறீர்களா?” என்றார். ஃபானு சீற்றத்துடன் “வேறு என்ன செய்வார்கள்? போரிடுவார்களா? இந்த இடிந்த நகரில் கிடந்து போரிட்டு சாக முற்படுவார்களா?” என்றார். “ஆம், அதற்குத்தான் முற்படுவார்கள்” என்று கணிகர் சொன்னார். ஃபானு திகைத்துவிட்டார். “நாம் செய்வதற்கு ஒன்றே உள்ளது. மூத்தவர்களான சாத்யகியும் கிருதவர்மனும் சென்று அவர்கள் இருவரையும் கண்டு தாழ்க்கோல்களை பெற்றுவரட்டும். கருவூலத்தை அவர்களின் பொறுப்பில் விட்டுவிடுவோம்.”

ஃபானு “என்ன சொல்கிறீர்கள்? நான் அரசன். கருவூலத்தை எப்படி அவர்களின் பொறுப்பில் விடுவேன்?” என்றார். “அவர்கள்தான் உங்களை அரசராக்குபவர்கள். நீங்கள் நாளை முடிசூடி ஆளவேண்டும் என்றாலும் அவர்களின் வில்லின் துணை தேவை. கருவூலம் அவர்களின் பொறுப்பில் இருக்கட்டும். அதுவே நமக்கு நல்லது” என்று கணிகர் சொன்னார். “அவர்களிடம் கருவூலம் இருப்பது நம்மிடம் இருப்பதற்கு நிகர். அவர்கள் நம்மை ஆதரிப்பவர்கள். அவர்களிடம் இருக்கையில் கருவூலத்தை நாம் கைப்பற்றிக்கொண்டோம் என்னும் பதற்றம் அவர்களுக்கு வராமலும் இருக்கும்” என்றார் கணிகர்.

பிரஃபானு “ஆம், கணிகர் சொல்வது உண்மை” என்றார். ஃபானு “எனில் அவ்வாறே செய்யுங்கள். இளையோனே, நீயே அவர்களிடம் பேசு” என்றார். கணிகர் “அதற்கு முன் வேறொன்றை தெளிவுபடுத்தியாகவேண்டும். கருவூலத்தின்மேல் அவர்களுக்கு இருக்கும் உரிமை என்ன என்று” என்றார். “அவர்கள் அதை கிருதவர்மனிடமும் சாத்யகியிடமும் கேட்பார்கள் என்பதில் ஐயமில்லை.” ஃபானு “இதென்ன? குடிகள் அனைவருக்கும் உரியதா என்ன கருவூலம்? என்ன சொல்கிறீர்கள்?” என்றார். “இப்போது நாம் இப்படிப் பேசுவதில் பொருளில்லை. நாம் மிகச் சிறிய படையுடன் பாதுகாப்பில்லாமல் பாலையில் கருவூலத்துடன் செல்லவிருக்கிறோம். நமக்கு உடன்பிறந்தார் அனைவரின் உதவியும் தேவை” என்றார் கணிகர்.

“என்ன சொல்கிறீர்கள்?” என்று ஃபானு சலிப்புடன் கேட்டார். “அவர்கள் இருவருக்கும் கருவூலத்தில் இணையான உரிமை அளிக்கப்படும் என்று கிருதவர்மனும் சாத்யகியும் சொல்லளிக்கட்டும்” என்றார் கணிகர். “அதெப்படி? இணையுரிமையா?” என்று ஃபானு கூச்சலிட்டார். “அச்சொல் அவர்களால் அளிக்கப்படுகிறது, உங்களால் அல்ல. நாம் முதலில் உரிய இடத்திற்கு சென்றுசேர்வோம். அங்கே கருவூலத்தை பாதுகாப்போம். நமக்கான படையையும் நமக்குரிய நட்பு அரசுகளையும் உருவாக்கிக் கொள்வோம். அதுவரை கருவூலம் கிருதவர்மன் சாத்யகி இருவர் பொறுப்பிலும் இருக்கட்டும். அது மூன்று தரப்பினருக்கும் இணையான உரிமை கொண்டது என அவர்கள் நம்பட்டும்.”

“நாம் முற்றுரிமை அடைந்து முடிசூடியதும் என்ன செய்யவேண்டும் என அறிவிப்போம். அரசே, அப்போது சாத்யகியும் கிருதவர்மனும்கூட உங்கள் குடிகளே. குடிகளில் எவரும் அரசரின் பொருட்டு சொல்லளிக்கும் உரிமை கொண்டவர்கள் அல்ல” என்றார் கணிகர். ஃபானு பெருமூச்சுவிட்டார். “சூழ்ச்சியே அரசனின் முதன்மைப் படைக்கலம்” என்றார் கணிகர். “ஆம், அதை செய்வோம்” என்றார் ஃபானு. பிரஃபானு “அவ்வாறே நான் அவர்கள் இருவரிடமும் பேசுகிறேன்” என்றார்.

அப்போது ஶ்ரீஃபானு அவைக்குள் வந்து நின்றான். “சொல்க!” என்றார் ஃபானு. “மூத்தவரே, இந்நகரை இடித்து அழித்த பிரதிஃபானுவின் மைந்தரையும் துணைவியையும் என்ன செய்வது?” என்றான். “அவர்கள் நம்மிடமா இருக்கிறார்கள்?” என்று ஃபானு கேட்டார். “அவர்கள் அப்போதே பிடிபட்டுவிட்டனர். நகருக்குள் ஒரு மாளிகையில் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை நாம் கொண்டுசெல்லவிருக்கிறோமா?” ஃபானு “பிரதிபானு எங்குள்ளான்? மனைவியையும் மைந்தரையும் தேடி அவன் வரக்கூடுமா?” என்றார்.

கணிகர் “எதன்பொருட்டும் அவர் இந்நகருக்குள் இனி வரப்போவதில்லை” என்றார். பின்னர் உதடை கோணலாக்கிச் சிரித்து “வருவார் என்றால் படைவல்லமையுடன் வருவார்… அவருக்கு எங்கேனும் துணையரசர்கள் இருக்கக்கூடும். அவர்கள் படையொருக்கி நின்றிருக்கவும் வாய்ப்புண்டு” என்றார். ஃபானு “அவனா? அவன் அப்படி செய்வானா என்ன?” என்றார். “அரசே, பிறகெதற்கு அவர் நகரை இடிக்கவேண்டும்? இடிக்கப்பட்டு பாதுகாப்பில்லாமல் சிதைந்து கிடக்கும் நகரை தாக்கி வெல்வது அவர் எண்ணமாக இருக்கவே வாய்ப்பு. துணைக்கு படையுடன் மன்னர்கள் இல்லாமல் அவர் அதைச் செய்ய ஏன் துணியவேண்டும்?” ஃபானு “ஆம், அவனுக்கு அப்படி எண்ணமிருக்கலாம்” என்றார்.

“நகரின் கருவூலமே அவர் இலக்காக இருக்கும்” என்றார் கணிகர். ஃபானு உரக்க கைகளை அறைந்துகொண்டு “அறிவிலி… கீழ்மகன்” என்றார். சீற்றத்துடன் எழுந்து “இது என் ஆணை, அந்த இழிமகனின் மனைவியை எரித்தே கொல்லுங்கள். அவன் மைந்தரை முதுகுத்தோலை உரித்து கழுவிலேற்றுங்கள்…” என்றார். “மூத்தவரே…” என்று நான் கூவினேன். “வஞ்சகர்களுக்கு இது எச்சரிக்கை. என் குருதியினரே ஆயினும் என் இளையோரே ஆயினும் இதுவே என் நெறி… இது என் ஆணை!” என்றார் ஃபானு. நான் பெருமூச்சுடன் அதனை கடந்துசென்றேன்.

கருவூலங்களுக்கான தாழ்க்கோல்கள் வந்து சேர்ந்தன. அவற்றை ஏவலர் தலைச்சுமைகளாக எடுத்துச் சென்று அப்பால் மணல்மூடிக் கிடந்த வழியில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருந்த வண்டிகளில் ஏற்றினர். அவற்றை பாயும் தோலும் போட்டு மூடிக்கட்டினர். “கருவூலம் சென்று ஒருங்கிவிட்டதா?” என்று ஃபானு கேட்டுக்கொண்டே இருந்தார். “ஆம் அரசே, கருவூலத்தை முழுமையாகவே வண்டிகளில் ஏற்றிவிட்டோம்” என்று பிரஃபானு சொன்னார். “நம் படையினர் சூழவே செல்லட்டும்” என்று ஃபானு சொன்னார்.

அரண்மனையை விட்டு ஒவ்வொருவராக கிளம்பிச் சென்றோம். ஆனால் எவரும் பெரிய அளவில் உணர்வெழுச்சி கொள்வதாகத் தெரியவில்லை. தங்களுக்குரிய பொருட்களை எடுத்துக்கொள்ளவும் எதையும் விட்டுவிடாதிருக்கவும் மட்டுமே ஒவ்வொருவரும் முனைப்பு கொண்டனர். எதையாவது மறந்துவிட்டு ஓடிச்சென்று எடுத்துக்கொண்டனர். ஏவலர்களுக்கு ஆணைகளை பிறப்பித்தனர். அவர்கள் விட்டுவிட்டு வந்த பொருட்களுக்காக வசைபாடினர். கூச்சலும் சந்தடியுமாக அரண்மனைமுகப்பு கலைவு கொண்டிருந்தது.

எறும்புகள் மழைக்காலத்தில் துளைகளிலிருந்து வெளியேறுவது போலிருந்தது அக்காட்சி. ஒவ்வொருவரும் ஏதேனும் பொதியை வைத்திருந்தனர். வெறுங்கையுடன் ஒருவர்கூட வெளியே செல்லவில்லை. அரசர் ஃபானுகூட கையில் ஒரு பெரிய பொதியை வைத்திருந்தார். “அது துவாரகையின் மணிமுடி. அதை அவரே தன் கையில் வைத்திருக்கிறார்” என்று சுருதன் சொன்னார். “இந்தப் பையை வைத்துக்கொள். இதற்குள் இருப்பவை சில ஓலைகள். இவை துவாரகை வெவ்வேறு மன்னர்களுக்கு அளித்துள்ள கடனுக்கான சான்றோலைகள். நம்மால் இவற்றைக்கொண்டு பெரும்பொருள் ஈட்ட முடியும்.”

கையில் எதுவுமில்லாமல் அங்கிருந்து வெளியேறியவர் கணிகர் மட்டுமே. அவரை ஒரு தாலத்தில் வைத்து இரு வீரர்கள் கொண்டுசென்றனர். அவர் கைகளை விரித்து புன்னகையுடன் அமர்ந்திருந்தார். சூழ்ந்திருந்த அலைக்கழிதல்களை நோக்கி நோக்கி மகிழ்ந்தார். அரண்மனையின் முகப்பில் நெரிசல் ஏற்பட்டிருந்தது. அரசரே அந்த நெரிசலில் முட்டி ததும்பவேண்டியிருந்தது. அதுவரை அரண்மனையில் யாதவ மைந்தர் எவரும் கிளம்பாமல் ஒருவரோடொருவர் முட்டிக்கொண்டிருந்தார்கள். ஆனால் கருவூலம் கிளம்பியதுமே அத்தனை பேருமே உடன்கிளம்ப முண்டியடித்தனர்.

ஃபானு வெளியே வந்தபோது அரண்மனை முகப்பில் பிரதிஃபானுவின் மைந்தர் கழுவிலேற்றப்பட்டிருப்பதை பார்த்தார். அதற்குள் ஃபானுமான் வந்து “மூத்தவரே, நம் அன்னையர் அனைவரும் உரிய இடங்களுக்குச் சென்று சேர்ந்துவிட்டார்கள்” என்றான். “நம் கருவூலம் எங்கே? கிளம்பிச்செல்கிறதா?” என்றார் ஃபானு. “ஆம், உடன் சாத்யகியும் கிருதவர்மனும் செல்கிறார்கள்” என்று ஃபானுமான் சொன்னான். “நாமும் உடன் செல்லவேண்டும். அவர்கள் அதைச் சூழ்ந்துகொள்ள இடமளிக்கலாகாது” என்றார் ஃபானு.

நீண்ட நிரையாக துவாரகையில் இருந்து கிளம்பியவர்கள் தோரணவாயிலைக் கடந்து பாலைவெளி நோக்கி சென்றனர். ஃபானு தோரணவாயிலைக் கண்டதும் “இதோ நின்றிருக்கிறதே, பெருவாயில் வீழ்ந்தது என்றார்கள்?” என்றார். “அரசே, அது இரண்டு குன்றுகளில் ஒன்றின்மேல் நின்றிருந்த கடல்நோக்கிய பெருவாயில். இது பாலைநோக்கிய தோரணவாயில்.” அவர் “ஆம், இரண்டு உண்டு அல்லவா?” என்றார். “மிகப் பெரியது” என்று விழிதூக்கினார். “ஆம், விண்ணவர் நகர்புகும் வாயில் என்பார்கள்” என்றார் கணிகர். ஃபானு “புகுந்தவர்கள் விண்ணவர்கள் அல்ல, பாதாள தேவர்கள்…”என்று சொல்லி சிரித்தார்.

அந்தச் சிரிப்பின் பொருளின்மையை உணர்ந்து சூழ்ந்திருந்தவர்கள் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் கணிகர் உரக்க நகைத்தார்.

 

பெரும்பாலையில் தோரணவாயிலுக்கு சற்று அப்பால் இருந்த முதல் சோலைக்குச் சுற்றும் துவாரகையினர் தங்கினர். மூங்கில் தட்டிகளாலும் தோலாலுமான கூடாரங்கள் அமைக்கப்பட்டன. நகரைவிட்டு வெளியே வந்ததும் ஃபானு பதற்றம் மிக்கவராக ஆனார். ஏதேதோ சொல்லி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். பின்னர் அதை அவரே உணர்ந்து இளிவரலாக ஏதேனும் சொன்னார். அது மிகமிக இழிந்ததாக, எரிச்சலூட்டுவதாக இருந்தது. அவரை சற்றும் தாங்கமுடியாதவராக அது ஆக்கியது. வாளை உருவி அவரை வெட்டி வீழ்த்திவிடவேண்டும் என எனக்கே உளம் பொங்கியது.

முதல்நாள் உச்சிப்பொழுதிலேயே பாலைநிலத்திற்குள் வந்துவிட்டோம். அது மழைக்காலம் அல்ல என்பதனால் கூரைகள் அமைக்கப்படவில்லை. பெரும்பாலானவர்கள் வெட்டவெளியிலேயே தங்கினார்கள். ஏற்கெனவே பாலைநிலம் முழுக்க பரவிக்கிடந்தவர்கள் அரசரும் பிறரும் அங்கே வந்துவிட்டதை அறிந்து திரும்பிவந்து சேர்ந்துகொண்டமையால் அந்திக்குள் அப்பகுதி மக்கள்திரளால் நிறைந்திருந்தது. மேலும் மேலும் வந்துகொண்டிருந்தனர். மூத்தவர் ஃபானு வெளியே வந்து அந்த மக்கள் பெருக்கை பார்த்தார். “நமது மக்கள்!” என்று பிரஃபானு சொன்னார். அவர் கைவிரித்தபோது அத்திரளில் இருந்து தேனீக்கூடு போன்ற பெருமுழக்கம் எழுந்தது. ஃபானு முகம் மலர்ந்து “என் குடி! என் அரசு!” என்றார். “அவர்களை கண்ணெதிரே பார்க்கிறேன்!”

துவாரகையின் களஞ்சியத்தில் இருந்து பல நாட்களுக்குப் போதுமான உணவுப்பொருட்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. அந்தியில் அடுமனைகள் அமைந்தன. உணவு சமைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. உணவு அங்கே அதுவரை இருந்த சோர்வையும் சலிப்பையும் இல்லாமலாக்கியது. அடுமனைப்புகை விழவுக்கொடி என வானிலேறியது. கூட்டத்தின் ஓசையையே அது மாற்றியது. உணவு உண்டபோது அது விழவுக்களியாட்டாக மாறியது. மக்கள் கூச்சலிட்டு நகைத்தனர். ஒருவரை ஒருவர் கூவி அழைத்தனர். ஆங்காங்கே பாடல்களும் எழுந்தன.

இரவு விண்மீன்கள் செறிந்த வான்கீழ் தங்கினோம். உணவு உண்டு ஓய்வுக்கு படுத்தபோது ஒவ்வொருவரும் இயல்படைந்தனர். பல நாட்கள் நீண்ட பதற்றத்திற்குப் பின் அந்தத் தளர்வே கொண்டாட்டமாக ஆகியது. எங்கிருந்தோ ஒரு பாடல் எழுந்தது. பின்னர் மெல்ல அந்தப் பெருந்திரளே இருளுக்குள் பாடிக்கொண்டிருந்தது. அவர்கள் நம்பிக்கை அடைந்தனர். நம்பிக்கையை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டனர். அன்றிரவு மக்கள் துயில நெடும்பொழுதாகியது. அந்த உள எழுச்சியை உடற்களைப்பு வென்றமையால்தான் அவர்களால் துயிலமுடிந்தது.

மறுநாள் எழுந்தபோது அந்த இடமே நன்கு பழகியதாக இருந்தது. நெடுநாட்கள் அங்கேயே இருப்பதைப்போல. துவாரகை மிகமிக அப்பால் மறைந்துவிட்டிருந்தது. உடைந்து சரிந்த துவாரகையை மக்கள் மறக்க விரும்பினர். பழைய துவாரகையை இனிய நினைவாக பேணிக்கொண்டனர். ஆகவே இருக்கும் இடத்தில் முற்றாக உளம் அமைந்தனர். காலையில் அங்கே ஒவ்வொருவரும் கொண்டிருந்த சுறுசுறுப்பை, அவர்களின் முகங்களில் இருந்த களிப்பை பார்த்தபோது வியப்பாக இருந்தது. சுருதன் என்னிடம் “மக்கள் குழந்தைகளைப்போல. எந்த மாற்றமும் அவர்களுக்கு உகந்ததே. ஆகவேதான் நல்ல ஆட்சியாளர்கள் மக்களுக்கு மாற்றங்களை அளித்துக்கொண்டே இருக்கிறார்கள்” என்றார்.

அங்கேயே தொடர்ந்து தங்கினோம். மேலே எங்கு செல்வது என்று முடிவெடுக்க முடியவில்லை. ஒவ்வொருநாளும் ஃபானு அவைகூடி மேலே செய்யவேண்டுவன குறித்து பேசினார். அப்பேச்சு நூறு முனைகளில் தொட்டு அறுந்து அமைய ஊணுக்கு எழுந்து செல்வார்கள். “எங்கேனும் சென்றாகவேண்டும்… இங்கே எத்தனை நாள் நீடிப்பது?” என்றுதான் பேச்சு தொடங்கும். “எங்கேனும் சென்றே ஆகவேண்டும்” என்று முடியும். “அவர் இங்கே அமைந்துவிட்டார். இந்த வாழ்வே நன்றாகத்தான் இருக்கிறது என்று எண்ணுகிறார் போலும்” என்றார் சுருதன்.

பதினைந்து நாட்களுக்குப் பின்னர் நாளும் பொழுதும் குறிக்கும்பொருட்டு மூத்தவர் ஃபானுவின் ஆணையின்படி நிமித்திகர் எழுவர் அழைத்து வரப்பட்டனர். உண்மையில் சிதைந்த துவாரகையிலிருந்து சிதறி வெளிப்போந்து அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்த குழுவிலிருந்து அவர்களை தேடிக் கண்டடைந்து அழைத்து வந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் நிமித்திகர் என்று அடையாளம் காட்டியமையால்தான் பிறரால் நிமித்திகர் என்று உணர முடிந்தது.

அவர்களைக் கண்டதுமே அவர்கள் எத்தகைய நிமித்திகர் என்பதை அறிந்தேன். கேட்பவருக்கு உகந்ததைக் கூறுவதே நிமித்திகத் தொழிலின் முதன்மை அறம் என்று நினைக்கும் எளியோர். ஆனால் அத்தகையோரே மக்களால் விரும்பப்படுகிறார்கள். தன் நூலில் ஆழ்ந்த நம்பிக்கையும் ஒழியாது அதில் உழன்றுகொண்டிருக்கும் உள்ளமும் கொண்டவனே நல்ல நிமித்திகன். மெல்ல மெல்ல அவன் புறத்தே இயங்கும் உலகின் நெறிகளை முற்றாக மறந்துவிடுகிறான். தன் நூலின் நெறிகளுடன் அதை ஒப்பிடுவதையும் விட்டுவிடுகிறான். வாழ்க்கை என்பது முற்றாகவே தன் நூல்களுக்குள் நிகழ்வது என்று நினைத்துக்கொள்கிறான். அந்நிலையிலேயே அவனால் உய்த்துணர்ந்தும் உசாவி உணர்ந்தும் சிலவற்றை சொல்ல முடிகிறது.

மெய்வாழ்வுடன் நூல் வாழ்வை இடையறாது ஒப்பிட்டுக்கொண்டிருக்கும் நிமித்திகன் ஐயம் கொண்டவனாகிறான். அவனால் எதையும் அறுதியாக கூற இயல்வதில்லை. அறுதியாக உணராதபோது அவன் ஆணித்தரமாக உரைக்க முற்படுகிறான். சொல் பெருக்குகிறான். தன்னை அறிந்தோனாகவும் கடந்தோனாகவும் காட்டிக்கொள்கிறான். ஓசையிடும் நிமித்திகன் உள்ளீடற்றவன். ஓசையடங்குதலே நிமித்திகத் தொழிலின் அடையாளம் என்பார்கள். வந்தவர்கள் வரும்போதே தங்களுக்குள் சொல்லாடிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பேச்சுக்கும் ஒரு சொல்லுக்கு நூறுசொல் எடுத்தனர். தந்தையே, பாரதவர்ஷத்தின் மாபெரும் குடியொன்றின் முதன்மை முடிவு அவ்வாறு அவர்களால் எடுக்கப்பட்டது.

அவர்களைக் கண்டதுமே அவர்களால் ஆகக்கூடியது ஒன்றுமில்லை என்று எனக்கு தோன்றியது. ஆனால் அத்தருணத்தில் நிமித்திகர் ஒருவர் வந்தாலொழிய எந்த முடிவையும் எடுக்க இயலாது. நிமித்திகர் கூறியதனால் மட்டும் எங்கும் எந்த முடிவும் எடுக்கப்படப் போவதில்லை, நிமித்திகரைக் கொண்டு எதையேனும் சொல்லவைத்து அவற்றில் ஒரு முடிவையே மூத்தவர் எடுக்கவிருக்கிறார். நிமித்திகர் இன்றி முடிவெடுக்க முடியாத நெடுங்கால வழக்கத்தின் விளைவு அது. நிமித்திகர் வந்துவிட்டதை அறிந்து யாதவ மைந்தர் அனைவரும் சூழக் கூடிநின்று நோக்கினோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்குகள் கொண்டிருந்தோம். ஆனால் அங்கிருந்து கிளம்பிவிடவேண்டும் என்பதில் அனைவரும் ஓரெண்ணத்துடன் இருந்தோம்.

மணலில் சூழ்ந்து நின்றிருந்த யாதவ மைந்தருக்கு நடுவே நிமித்திகர் அமர்ந்தனர். வெறும் மணலிலேயே சுட்டுவிரலால் களம் கிழித்தனர். சூழ்ந்திருந்த சிறு கற்களை சோழிகளென அமைத்தனர். அவற்றை நகர்த்தி கணக்கிட்டனர். பின்னர் அவர்களில் மூத்தவர் “இங்கிருந்து வடக்கு நோக்கி செல்வதே உகந்தது. வடக்கே பன்னிருநாள் நடையில் பிரபாச க்ஷேத்ரம் எனும் ஒரு இடம் இருக்கிறது. அங்கு சென்று நகர் அமைக்கலாம்” என்றார். மற்றவர்கள் “ஆம்” என்றனர். “அதுவே எங்கள் கணிப்புகளிலும் வெளிப்படுகிறது.”

“அது உகந்ததா?” என்று மூத்தவர் கேட்டார். “மிக உகந்தது. அங்கு பெரும்புல்வெளி ஒன்றிருக்கிறது. யாதவர்கள் புல்வெளிகளில் பெருக இயலும் என்பதை அறிந்திருப்பீர்கள். மிக அருகே கடலும் இருக்கிறது. நாம் கடலோரம் பிறந்து வளர்ந்தவர்கள். அங்கொரு சிறு படகுத்துறை அமையலாம். எதிர்காலத்தில் அது துறைமுகமாக வளரவும் கூடும். அங்கு பிறிதொரு துவாரகை எழும். அது தங்கள் புகழ் சொல்லும். நன்றே வளர்க!” என்றார் நிமித்திகர். மற்ற நிமித்திகர்களும் பிரபாச க்ஷேத்ரம் பற்றி சொல்ல தொடங்கினார்கள். அந்நிலத்தின் வளமும் அதன் இடப்பொருத்தமும் அதற்கும் யாதவர்களுக்கும் நடுவே இருக்கும் ஊழின் பொருத்தமும் அவர்களால் விளக்கப்பட்டன. யாதவ மைந்தர் விழிவிரித்து மறு சொல் இன்றி கேட்டு நின்றனர்.

“அவ்வாறே ஆகட்டும்! நாம் பிரபாச க்ஷேத்ரத்திற்கு கிளம்புவோம்!” என்று மூத்தவர் ஃபானு கூறினார். “பிரபாச க்ஷேத்ரத்தில் நமது குடி வேரூன்றட்டும். நம் கோல் அங்கே எழட்டும். நமது கொடிவழியினர் அங்கே செழிக்கட்டும். இது நம் எழுகை! வெல்க யாதவக்குடி! வெல்க யதுவின் குருதி! ஆம், அவ்வாறே ஆகுக!” கூடி நின்ற யாதவ மைந்தர் உரக்க குரலெழுப்பி வாழ்த்தினர். அவ்வாழ்த்தொலி அங்கிருந்து சூழ்ந்திருந்த துவாரகையினரிடம் பரவ மெல்லமெல்ல அந்தப் பெருந்திரள் பரப்பு அமைதி அடைந்தது.

அவரிடம் இருந்த அந்தத் தெளிவு எனக்கு பதற்றத்தை அளித்தது. அரசர் எவரும் அத்தனை உறுதியாக முடிவெடுத்துவிடக் கூடாது, அம்முடிவை அவ்வண்ணம் அப்போதே சொல்லிவிடவும் கூடாது. அமைச்சர்களிடமும் படைத்தலைவர்களிடமும் பிறிதொரு முறை உசாவவேண்டும். மாற்றுச் சொல் இருந்தால் தெரிந்துகொள்ளவேண்டும். அந்த இடத்தின் அனைத்துச் செய்திகளையும் அங்கு செல்வதற்கான வழிகளையும் ஆராய வேண்டும். ஆனால் மூத்தவர் அரசருக்குரிய தன்னொதுக்கம் உடையவரல்ல. அவர் எளிய யாதவர்களைப்போல உணர்ச்சிகளால் ஆளப்படுபவர். அந்த நேரத்து உளச்சோர்விலிருந்து அவர் அடைந்தது அந்த உளஎழுச்சி. மூடிய கதவை முட்டித்திறப்பது போன்றது அது. அத்தனை விசையுடன் மோதாவிட்டால் அந்த உளச்சோர்வை வெல்லமுடியாது.

நான் “மூத்தவரே!” என்றேன். “இனி ஒன்றும் எண்ணுவதற்கில்லை. இந்தப் பாலைவனத்தில் போதுமான அளவுக்கு தங்கிவிட்டோம். மேலும் மேலும் இங்கு நம்பிக்கை இழந்துகொண்டிருக்கிறோம். தனிமையை கொண்டிருக்கிறோம். இங்கிருந்து கிளம்புவதொன்றே நாம் செய்யவேண்டியது!” என்ற பின்னர் மூத்தவர் எழுந்து கைகூப்பினார். இளையோர் அளித்த பரிசுகளை எடுத்து நிமித்திகர்களுக்கு அளித்த பின்னர் கைகளைத் தட்டி “அனைவரும் கேளுங்கள், அனைவரும் கேளுங்கள்!” என்றார். நான் “மூத்தவரே!” என்று சொல்வதற்குள் “அரச அறிவிப்பு!” என்றார்.

கூடி நின்ற அனைத்து இளையோரும் குடிகளும் எழுந்து நின்று அவரை பார்த்தனர். “ஆம், பிறிதொரு துவாரகையை உருவாக்கவிருக்கிறோம்!” என்றார். சற்றுநேரம் எவரும் எதுவும் சொல்லவில்லை. வெற்றுவிழிகளுடன் வெறித்து நோக்கி அமர்ந்திருந்தார்கள். “நாம் துவாரகையிலிருந்து வெளியேறியது மேலும் சிறந்த நகரை உருவாக்குவதற்காக! உறுதியானதும் வெற்றிகொள்ளமுடியாததுமான பெருநகர் ஒன்றை நாம் உருவாக்குவோம்! இதோ அதன்பொருட்டு எழுகிறோம்” என்று மூத்தவர் ஃபானு கூறினார். ஃபானுமான் “வெல்க யாதவப் பெருங்குடி! வெல்க அரசர் ஃபானு!” என்று கூவினான். அப்போதும் எவரும் வாழ்த்தொலி எழுப்பவில்லை.

ஃபானுமானும் பிரஃபானுவும் பிறரை நோக்கி கைகாட்டிவிட்டு “வெல்க! வெல்க!” என்று கூச்சலிட்டனர். ஒருகணம் கழித்து அனைத்து மக்களும் உரக்க ஒலியெழுப்பி கூச்சலிட்டனர். “நாம் பிரபாச க்ஷேத்ரத்திற்கு செல்லவிருக்கிறோம். அந்த நிலத்தில் ஒரு நகரை உருவாக்குவோம். அருகே கடல் உள்ளது. அங்கொரு கடல் துறைமுகத்தை உருவாக்குவோம். நாம் செல்லுமிடம் துவாரகைபோல் வெறுநிலமல்ல. பாறை முகடுமல்ல. அது யாதவருக்கு உகந்த புல்வெளி. அங்கு கன்று பெருக்குவோம். செல்வம் செழித்ததும் நகர் முனைவோம். நம்மிடம் கருவூலம் உள்ளது. நாம் இன்னும் எதையும் இழந்துவிடவில்லை” என்றார் ஃபானு. “அஸ்தினபுரிக்கு நிகரான கருவூலத்துடன்தான் அங்கு செல்கிறோம். அங்கு சென்று ஒரு பெருநகரை எதிரிகளின் கண்முன் உருவாக்கி எழுப்புவோம். துவாரகை இங்கு சரிந்து அங்கு எழுந்தது என்றே பொருள்! கிளம்புக!” என்றார்.

முந்தைய கட்டுரைதேவி [சிறுகதை]
அடுத்த கட்டுரைபத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்