மழை நிலைக்காமல் வீசியறைந்து யூகலிப்டஸ் மரங்களை சுழற்றியடித்துக் கொண்டிருந்த இரவில், கண்ணாடிச் சன்னல்களுக்கு உள்ளே, குளிருக்கு கம்பிளிகளை போர்த்தியபடி அமர்ந்திருந்தபோது சுவாமி முக்தானந்தா சொன்னார். “நேற்று நான் டாக்டர் ரிதுபர்ணனிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார், நம் உடலில் அத்தனை நோய்களுக்கும் முதல்விதைகள் உள்ளன என்று. அவை உறங்கிக் கொண்டிருக்கின்றன. அல்லது இன்னொன்றால் சமன்செய்யப்பட்டுள்ளன. அல்லது நம் உடலால் கட்டி வைக்கப்படுகின்றன. நோய் என்பது அதிலொன்று முளைப்பதே.”
“நான் அவரிடம் கேட்டேன். ‘அப்படியென்றால் சாவும் அப்படி மனித உடலில் ஒரு கருத்துத் துளியாக உறங்கும் அல்லவா?’ அவர் ‘இருக்கலாம்’ என்றார். நான் கேட்டேன் ‘டாக்டர் சொல்லுங்கள், அப்படியென்றால் மறுபிறப்பும் மீட்பும் கூட அவ்வாறு உள்ளே இருக்கும் அல்லவா? மனிதன் அடையவிருக்கும் எல்லா மெய்மையும் ஏற்கனவே கருவடிவில் அவனுக்குள் இருக்கும் அல்லவா?’ டாக்டர் சிரித்துவிட்டார். ‘அதெல்லாம் தத்துவம், நான் எளிய டாக்டர்’ என்றார்.”
“டாக்டர்கள் பாவம்தான்” என்றார் சிதம்பரானந்தா.
“நாம் இழந்தவை எல்லாம் இங்கே எங்கோ துளியாக உள்ளன. அதைப்போல நாம் சென்றடைய வேண்டியவையும் எங்கோ துளியாக உள்ளன. மனிதன் தனக்குள் தேடவேண்டிய அனைத்தையும் இந்த பூமியெங்கும் அலைந்தும் தேடலாம். வெளியே தேடுவதே எளிது. ஏனென்றால் அங்கே இடம் வரையறைக்கு உட்பட்டது. வழிகாட்டிக் குறிப்புகள் பொதுவானவை. வழிகள் புறவயமானவை” என்றார் முக்தா.
“மனிதன் தன்னுள் தேடுவன எல்லாம் ஆழுள்ளத்தில், கனவில், துரியத்தில் தேடுபவை. அவை வரலாறு என்று, சமூகம் என்று, மதம் என்று ,தத்துவம் என்று ,அறிவு என்று, இன்னும் என்னென்னவோ வடிவில் தொகுக்கப்பட்டவைதான்” என்றார் முக்தா. “அவன் தேடுவனவற்றை அவன் ஒரு சாத்தியக்கூறாகவே கண்டுகொள்கிறான். அதை அவனே வளர்த்தெடுக்கிறான்.”
“நான் அவ்வெண்ணத்தை அடைந்தது 1950-ல் முதல்முறையாக திபெத்துக்குச் சென்றபோது” என்று முக்தா சொன்னார். “திபெத் ஒரு விதைத் தொகுதி. இங்கே விதைகளை கலசங்களில் அடைத்து கோபுரங்களின் உச்சிகளில் சேமிக்கிறார்கள். அதைப்போல மானுட இனத்தின் உச்சிக்குமேல் சேமிக்கப்பட்ட விதைக் களஞ்சியம் அது.”
முக்தா சொன்னார். முப்பரிமாணப் படம் எப்படி உருவாகும் என்று தெரியுமே? ஒரே பொருளின் இரண்டு வெவ்வேறு கோணங்களிலான படங்கள் நம் பார்வையால் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. உண்மையில் நம் கற்பனையில் நிகழ்கிறது அந்த இணைப்பு. அவற்றுக்கு இடையிலான இடைவெளியே முப்பரிமாணத்தை அளிக்கிறது. நேரில் நாம் பார்க்கும் முப்பரிமாணம்கூட இரண்டு கண்கள் காணும் காட்சிகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டின் விளைவுதான்.
திபெத் அப்படிப்பட்டது. ஒரு திபெத் நாம் நேரில் காண்பது. இன்னொரு திபெத் உலகம் சென்ற பல நூற்றாண்டுகளாக கற்பனையில் உருவாக்கிக் கொண்டது. இரண்டையும் இணைத்துக் கொள்பவர்களால் தான் திபெத் என்னும் அனுபவத்தை பெறமுடியும். இரண்டில் ஒன்றைப் பெறுபவர் அறிந்திருப்பது திபெத்தையே அல்ல.
உலகம் முழுக்க பல்லாயிரம் பேர் திபெத்தை அதைப் பற்றிய கற்பனைகள் வழியாக அறிந்திருக்கிறார்கள். முந்நூறாண்டுகளுக்கும் மேலாக திபெத் ஐரோப்பியர்களின் கற்பனையை கட்டில்லாமல் பறக்கவிடும் ஓர் இடமாகவே இருந்திருக்கிறது. கடலுக்குள் மறைந்திருக்கும் அட்லாண்டிஸுக்கு அடுத்தபடியாக ஐரோப்பியர் கனவு கண்டது திபெத்தைப் பற்றித்தான். எகிப்தும், ஜெருசலேமும் அதற்குப்பிறகுதான்.
அந்த மயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு எழுதித் தள்ளிய எழுத்தாளர்கள் சிதல் புற்று கட்டுவதுபோல திபெத் என்னும் கனவை பெருக்கினார்கள். மிகச்சிறந்த உதாரணம் லாப்சங் ராம்பா. திபெத்தியப் பின்னணியில் அவர் எழுதிய நூல்கள் மிகப் பிரபலமானவை.
லாப்சங் ராம்பாவை பற்றிய அறிதல் திபெத் பற்றிய ஒரு புரிதலை உருவாக்கும். நாம் அவரில் இருந்து தொடங்கி அவரை கொஞ்சம் கொஞ்சமாக ரத்துசெய்துகொண்டே சென்று திபெத்தைச் சென்றடையலாம். பெரும்பாலான ஐரோப்பியரின் வழி அது, ஆகவே காலடிபட்டுத் தேய்ந்தது.
லாப்சங் ராம்பாவின் The Third Eye என்ற நூல் 1956-ல் வெளிவந்தது. அவர் ஒரு பௌத்த மடாலயத்தில் இளமையிலேயே எப்படி பிட்சுவாக பழக்கப்பட்டார், தன் நெற்றியில் ஓர் ஊசித்துளை இட்டு எப்படி நெற்றிக்கண்ணை உருவாக்கினார்கள் என்று அந்நூலில் சொல்லியிருந்தார். அந்த அறுவை சிகிச்சையை மிக நுட்பமாக விவரித்திருந்தார்.
அதற்குப்பின் அவர் ‘வேறு’ உலகங்களை பார்க்க ஆரம்பித்தார், அவ்வுலகங்கள் பற்றிய விவரணைகள் அந்நூலில் விரிவாக இருந்தன. அவை மறைஞானத் தன்மைகொண்டவை, உருவக வடிவில் சொல்லப்பட்ட திபெத்திய பௌத்த தத்துவ தரிசனங்கள் என்று வாசிக்கப்பட்டன.
அந்நூல் ஒரு பெரிய அலையை உருவாக்கியது. ஐரோப்பா முழுக்க அந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டது. ஆனால் ஜெர்மனிய திபெத்தியல் நிபுணர் ஹென்ரிச் ஹேரர் புலனாய்வாளர்களின் உதவியுடன் அந்த நூலின் பொய்மையை வெளிக்கொண்டு வந்தார். அதை எழுதியவருக்கும் திபெத்துக்கும் சம்பந்தமில்லை. அவர் பெயர் சிறில் ஹென்றி ஹாஸ்கின். அயர்லாந்துக்காரர். திபெத்துக்கே போனதில்லை.
ஆனால் ஹாஸ்கின் அசரவில்லை. அவர் நுண்வடிவில் திபெத்துக்குச் சென்றதாகவும் அங்கே அதெல்லாம் நிகழ்ந்ததாகவும் அவர் உடலில் அப்போதும் லாப்சங் ராம்பா என்ற லாமா ஆவியாகக் குடியிருப்பதாகவும் சொன்னார்.
மர்மம் வெளியான பிறகும் லாப்சங் ராம்பா மீதான மயக்கம் குறையவில்லை. அவர் மேலும் பதினேழு நூல்களை எழுதினார். அவையெல்லாம் பெரிய வெற்றி பெற்றன. கடைசியாக எழுதிய Living with the Lama என்ற நூல் லாப்சங் ராம்பா என்ற லாமா ஹாஸ்கினின் உடலில் தோன்றி அவருடைய சயாமிய பூனைக்கு சொன்னது.
நல்லவேளையாக 1949-ல் நான் திபெத் செல்லும்போது லாப்சங் ராம்பா நூல் எழுதப்படவில்லை. 1972-ல் கனடா சென்றபோது கால்கரியில் அவரை சென்று சந்தித்தேன். நம்மூர் பூசாரிகளைப்போல ஒரு வகையான பித்துநிலையும் கூடவே பாவனைகளும் அற்பமான திருட்டுத்தனமும் கலந்தவராக இருந்தார். இருபது நிமிடத்தில் சலித்துவிட்டார்.
லாப்சங் ராம்பா ஒரு தனிநிகழ்வு அல்ல. 1875ல் தியாசஃபிகல் சொசைட்டி தோன்றியது முதல் தொடர்ச்சியாக திபெத் பற்றி கற்பனைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. அவற்றைத்தான் லாப்சங் ராம்பா பயன்படுத்திக் கொண்டார். அக்கற்பனைகளில் திளைப்பதென்பது ஒருவகை பகற்கனவு. அது சீக்கிரத்திலேயே சலிக்கவும் வாய்ப்புண்டு.
ஆனால் அந்த கற்பனைகளை நாம் முழுமையாக புறந்தள்ள வேண்டியதில்லை. அந்த கற்பனைகள் ஏன் எழுந்தன என்றுதான் பார்க்க வேண்டும். அது தொழிற்புரட்சி, செய்தித்தொடர்பு, போக்குவரத்து போன்றவை வளர்ந்து வந்த காலம். ஒவ்வொரு இடமும் எளிதாக அவற்றின் மர்மங்களை இழந்துகொண்டே வந்தது. ஆகவே மக்களுக்குக் கனவுகாண சில இடங்கள் தேவைப்பட்டன. எல்லாமே மர்மமாக இருக்கும் இடங்கள்.
ஏன் அவை மர்மமாக இருக்கவேண்டும் என்றால் மர்மமானவைதான் குறியீடாக ஆகமுடியும் என்பதனால்தான். ஆச்சரியம் அச்சம் ஆகியவற்றை உருவாக்கும் பொருட்களே கவித்துவமாகின்றன, உருவகங்கள் ஆகின்றன. அத்தகைய நிலம் மக்களுக்கு தேவைப்பட்டது.
அதை தாந்தே போலவோ மில்டனைப் போலவோ வானத்தில் வெறும் கற்பனையால் நிறுவ முடியாது. ஏனென்றால் நவீனக்கல்வியும் நவீன அறிவியலும் உருவாகிவிட்டிருந்தன. எல்லாவற்றுக்கும் தர்க்கம் தேவைப்பட்டது. ஒவ்வொன்றும் இங்கே புலன்களால் அறியப்படுவனவாக இருக்கவேண்டும். சொர்க்கம் என்றாலும் நரகம் என்றாலும் மண்ணில் இருந்தாகவேண்டும். பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பி சென்றால் கண்டுபிடித்துவிடக் கூடியதாக இருக்கவேண்டும்.
எத்தனை சொர்க்கங்கள், எத்தனை நரகங்கள் அன்று கற்பனையால் உருவாக்கப்பட்டன என்று பார்த்தால் திகைப்போம். புனைவிலக்கியத்தையே கவனிப்போம். பிராம் ஸ்டாக்கர் எழுதிய நாவல்கள் மூன்று பின்புலங்களில் அமைந்தவை. ஒன்று ரொமேனியா. இன்னொன்று மெசபடோமியா. மூன்றாவதாக எகிப்து. இவை மூன்றும் பிரிட்டிஷார் கற்பனை செய்துகொண்ட நரகங்கள். அச்சுறுத்தும் பேய்கள் ஒளிந்திருக்கும் மர்மநிலங்கள். ஒரு காலத்தில் பிரிட்டிஷார் இப்புனைவுகள் மேல் பித்து கொண்டிருக்கிறார்கள். நான்காவதாக அமெரிக்காவின் வன்மேற்கு. அங்கிருந்த ‘சட்டமில்லாத’ கொலைநிலம்.
அதேபோல சொர்க்கங்களும் கற்பனை செய்யப்பட்டன. அட்லாண்டிஸ் போல. திபெத் அதில் ஒன்று. இந்தியாவும் அதில் வரும். ஆனால் அந்த மர்மங்களை எல்லா இடங்களிலும் நாம் கண்டபடி கூட்டம்போட்டு, சமூசா சுட்டு கூவிக்கூவி விற்று, அழித்துவிட்டோம். இமையமலை மட்டுமே எஞ்சியது. பரமஹம்ச யோகானந்தரின் Autobiography of a Yogi அத்தகைய ஒரு நூல். அது லாப்சங் ராம்பாவின் நூலுக்கு சமானமானது.
நம் கற்பனையை வளர்க்கும் விஷயங்களால் ஆனதுதான் திபெத். உலகின் உச்சிநிலம். சூழ்ந்திருக்கும் பனிமலைகளின் எல்லையற்ற அமைதி. ஒன்றுமே நிகழாத வெளி. மடாலயங்களின் நூற்றாண்டுப் பழமை கொண்ட சடங்குகள். வெண்பனியும் சிமிண்ட்நிற மலைகளும் அன்றி நிறங்களே இல்லாத மலையடுக்குகளின் நடுவே கருஞ்செந்நிறம் கொண்ட மடாலயங்கள். அவற்றில் பொன்னொளிரும் புத்தர்கள், பளிச்சிடும் வண்ணங்களில் டாங்காக்கள், மாபெரும் மணிகள், உறுமும் முழவுகள், ஓசையிடும் சல்லரிகள், ஜலதரங்கச் சட்டிகள், சுழன்றுகொண்டே இருக்கும் தர்மசக்கரங்கள்.
அந்தக் கற்பனையே இல்லாமல் திபெத்துக்குச் சென்றால் காண்பது வெறும் வெளிறிய வண்ணங்களை. பழைமையான மடாலயங்களின் அரையிருளையும் தூசியையும். வளர்ச்சியின்றி உறைந்திருக்கும் ஒரு தொன்மையான வாழ்க்கையை. பல சுற்றுலாப் பயணிகளுக்கு திபெத் எந்த ஆர்வத்தையும் உருவாக்காத ஒரு மொட்டைநிலமாகத் தோன்றியிருக்கிறது. இன்று திபெத் செல்பவர்களில் பலர் பனிச்சறுக்கு விளையாட்டுக்களுக்காக போகிறார்கள்.
ஆகவேதான் சொன்னேன். ஒருகண்ணில் கற்பனை, ஒருகண்ணில் யதார்த்தம். பொருத்தி ஃபோகஸ் செய்துகொண்டே இருக்கவேண்டும். ஓர் இடத்தில் அவை மிகச் சரியாக பொருந்தி திபெத் உருவாகி வந்துவிடும்.
திபெத் என்றால் இன்று சீனாவிடமுள்ள நிலம் மட்டும் அல்ல. திபெத், ஸ்பிடி சமவெளி, லடாக் மூன்றும் இணைந்ததே தொன்மையான தவநிலமாகிய திபெத். மூன்று நிலத்தையும் பார்ப்பவனே பத்மசம்பவரை அணுகியறியும் பயணம் செய்தவனாகிறான். அவ்வாறு பார்க்கும் திபெத் ஒரு மெய்ஞான மார்க்கத்தை நிலப்பரப்பாக நேரில் பார்ப்பதேதான்.
நான் சொல்வது சற்று நுட்பமானது. நம்பிக்கைகள், தத்துவங்கள், மெய்தரிசனங்கள் பொருட்களாக மாறி கைக்குச் சிக்கும்படி ஆவதுண்டு தெரியுமல்லவா? கோயில்சிலைகள் நாம் அப்படி உருவாக்கிக் கொள்ளும் பொருட்கள். சாளக்கிராமம் அப்படி இயற்கையில் கண்டெடுக்கும் ஒரு பொருள். சில இடங்கள் அப்படி ஆகிவிடுகின்றன. அகோர சைவ மரபு ஒரு நகரமாக ஆனதே காசி. ஆனால் திபெத் ஒரு நாடே, ஒரு நிலவெளியே தத்துவமாக, தரிசனமாக ஆனது.
உண்மை, இன்று அப்படி அல்ல. இன்றைய திபெத் சீனாவால் கொடூரமாக அழிக்கப்பட்டு பின்னர் உருவாக்கப்பட்ட ஒரு சுற்றுலா மையம். அதன் தொன்மை நவீனத்தன்மையால் அழிக்கப்பட்டது. அதன் குறியீட்டுத்தன்மை சிதைக்கப்பட்டது. இன்றைய திபெத்தில் புத்தமதமே மறைந்து கொண்டிருக்கிறது. கம்யூனிஸ சைனாவில் பௌத்தம் ரகசியமாகப் பின்பற்றவேண்டிய ஓர் ஆசாரம். திபெத்திய பௌத்தத்தை பின்பற்றுவது அரசுக்கு எதிரான குற்றம்.
ஆனால் கிறிஸ்தவ மதம் என்பது எப்போதுமே கம்யூனிசத்தால் ஏற்கப்படுகிறது, அல்லது குறைந்தபட்சம் மறுக்கப்படுவதில்லை. அதிலும் புரட்டஸ்டண்ட் கிறிஸ்தவம் என்பது வரலாற்றுரீதியாக கம்யூனிசத்தின் ஒரு முன்வடிவம் மட்டுமே. எங்கும் கம்யூனிசம் பகுத்தறிவு என்ற பேரில் அங்குள்ள தொன்மையான மதமரபுகளை அழிக்கும், ஆசாரங்களையும் தத்துவங்களையும் ஒடுக்கும். அந்த வெற்றிடத்தில் புரட்டஸ்டண்ட் கிறிஸ்தவம் வந்து அமையும். வியட்நாம்கூட இன்று நடைமுறையில் ஒரு கிறிஸ்தவ நாடுதான்.
திபெத்தின் மேல் கிறிஸ்தவம் மோத ஆரம்பித்தது நூறாண்டுகளுக்கு முன்பு. இங்கிலாந்தைச் சேர்ந்த மிஷனரிகள் வெவ்வேறு பாதைகளினூடாக திபெத்திற்குள் ஊடுருவினர். அவர்கள் ஆங்கிலேயரின் ஒற்றர்களாகவும் இருந்தனர். மிஷனரிகளாகச் சென்றவர்கள் திரட்டிய செய்திகள் ஆங்கிலேயப் படையெடுப்புக்கு உதவின.
1904-ல் திபெத்தின்மேல் பிரிட்டிஷார் நடத்திய படையெடுப்பு Younghusband Expedition எனப்படுகிறது. கர்னல் ப்ஃரான்ஸிஸ் யங்ஹஸ்பெண்ட் தலைமையில் நடந்த இந்த தாக்குதல் முழுக்க முழுக்க மிஷனரிகளின் உதவியுடன் செய்யப்பட்டது. திபெத்தின் ‘மர்மத்தை’ அழிப்பது, அதன் ‘புனித எல்லைகளை மீறுவது’ அந்த நிலத்தின் மேல் பிரிட்டிஷ் ஆட்சியை நிறுவுவது ஆகியவை அதன் குறிக்கோளாகக் கொள்ளப்பட்டன.
உண்மையில் திபெத் என்னும் உருவகநிலம் மெல்லமெல்ல அழிக்கப்பட்ட நிகழ்வின் தொடக்கம் அதுதான். இன்று சீனா திபெத்தை ஆக்ரமித்திருக்கிறது. பிரிட்டிஷார் செய்ய முடியாததை சீனா செய்கிறது. கடைசியாக திபெத்தை அது கிறிஸ்தவத்திற்குள் கொண்டுவந்து சேர்க்கும், அதை ஐரோப்பா அறியும்.
எத்தனையோ தேசிய விடுதலைப் போர்களை ஐரோப்பா ஆதரித்து வெற்றி பெறச் செய்துள்ளது, திபெத்தியர் முக்கால் நூற்றாண்டாகப் போரிடுகிறார்கள். அவர்களை ஐரோப்பிய முற்போக்கு- ஜனநாயக அறிவுஜீவிகள் கூட பொருட்படுத்தியதில்லை. ஏனென்றால் சீனாவின் ஆதிக்கம் கிறிஸ்தவத்தின் வெற்றியாகவே முடியும் என அவர்கள் அறிவார்கள்.
விளைவாக திபெத்தின் தொன்மையான ஆன்மிகப் பண்பாடு வெறும் ஆய்வுப்பொருளாக மாறி அருங்காட்சியகங்களுக்குச் செல்லும். அதை அவர்கள் விரும்புகிறார்கள். ஐரோப்பா ஆதரிக்கும் தேசிய விடுதலைப் போர்கள் எல்லாமே அவர்களுக்கு சாதகமான மதஅரசியலை உள்ளடக்கமாகக் கொண்டவையாகவே இருக்கும்.
இன்று திபெத் என்னும் ஞானபூமி நம் விழிமுன் இருந்து மறைந்துவிட்டது. ஆனால் அது அங்கே வேறொரு வடிவில் இருந்துகொண்டிருக்கும் என்றே நான் நம்ப விரும்புகிறேன்.
முக்தா சொன்னார். நான் லடாக்கில் இருந்து காப்டன் ஆடம் பேக்கர் என்னும் பயணியின் குழுவுடன்
சேர்ந்துகொண்டேன். அவர்கள் மலைப்பாதை வழியாக திபெத்துக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். அது ஒரு சட்டவிரோத பயணம்.
ஆனால் அப்பகுதியில் அன்று சட்டத்தை நிலைநிறுத்த எவருமே இல்லை. இந்தியாவில் 1947-ல் சுதந்திரம் கிடைத்தபின் நேருவின் தலைமையில் காபந்து அரசு இருந்தது. புகழ்மிக்க பிரிட்டி இந்திய ராணுவம் கிட்டத்தட்ட கலைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்திய பாகிஸ்தானிய ராணுவங்களாக பிளந்து, வெள்ளைய அதிகாரிகளால் கைவிடப்பட்டு, ஒருங்கிணைப்பும் செய்தித்தொடர்பும் இல்லாம ஆங்காங்கே அப்படியே விடப்பட்டிருந்தது. அந்தந்த பகுதியின் காப்டன்கள், கர்னல்களின் தனிப்பட்ட அர்ப்பணிப்பும் பொறுப்புணர்வுவுமே இந்தியாவை காப்பாற்றிக் கொண்டிருந்தன.
நல்லவேளையாக மறுபக்கம் சீனா பலவாகச் சிதறி உள்நாட்டு போரில் அலைக்கழிந்து கொண்டிருந்தது. சியாங் கை ஷெக்குக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் நேரடிப்போர் தொடங்கி சில நாட்களே ஆகியிருந்தன. சியாங் கை ஷெக்கின் நிலத்திற்குள் கம்யூனிஸ்டுப் படைகள் ஊடுருவிய செய்தியை நான் லடாக்கில் இருக்கும்போது ரேடியோவில் கேட்டேன்.
வடக்கே இந்திய எல்லை எது என்பதே அப்போது தீர்மானமாகவில்லை. அன்றைய ஆட்சியாளர்களில் வடக்குப் பகுதியைப் பற்றி தெரிந்தவர்கள் எவருமில்லை. லடாக்கும் திபெத்தும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்தன. திபெத்தில் என்ன நடக்கிறது என்றே எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. எல்லைகளில் எந்த காவலும் இல்லை. பனிநிலத்தில் பயணம் செய்வது அன்று மிகமிகக் கடினம் என்பது ஒன்றே காவலாகவும் இருந்தது.
ஆகவே சட்டபூர்வமாக திபெத்திற்குள் நுழைய வழியே இல்லை. எல்லா நுழைவுகளும் சட்டவிரோதமானவைதான். நான் லடாக்கில் இருந்து திபெத்துக்குள் செல்ல எண்ணிக் கொண்டிருக்கையில் ஒரு ஷெர்பா வழிகாட்டிதான் ஆடம் பேக்கர் பற்றிச் சொன்னான். ஆடம் பேக்கர் லடாக் எல்லையில் இருந்த டெம்ஜோக் [Demchok] என்னும் ஊரில் தங்கியிருந்தான். நான் லாஸாவிலிருந்து அந்த வழிகாட்டியுடன் டெம்ஜோக்குக்கு கிளம்பிச் சென்றேன்.
டெம்ஜோக் ஒரு சிறிய ராணுவநிலை. முந்நூறு இந்திய ராணுவவீரர்கள் காப்டன் செபாஸ்டின் ஃப்ளேசர் என்பவரின் தலைமையில் அங்கே இருந்தனர். ஃப்ளேசர் இந்திய ராணுவத்திலிருந்து பிரிந்து இங்கிலாந்து செல்ல அனுமதிக்காக காத்துக்கொண்டிருந்தான். ஆடம் ஃப்ளேசருக்கு முன்னரே அறிமுகமானவன். அவன் ஸ்பிடி சமவெளியில் அவருடன் இணைந்து பணியாற்றியிருந்தான். ஆடம் பிரிட்டிஷ் ராணுவத்தில் காப்டனாக இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு இரண்டு ஆண்டு ஆகியிருந்தது.
அவன் நான் அவனைச் சென்று சந்தித்தேன். அவன் வழக்கம்போல என்னை ஓர் இந்திய உளவாளி என சந்தேகப்பட்டான். அவனை நான் ஓர் ஆங்கில உளவாளி என்று சந்தேகப்பட்டேன். ஆனாலும் பேசிக்கொண்டிருந்தோம். இருவருக்கும் டெல்லியில் பொதுவாக தெரிந்திருந்த வெள்ளையர் பற்றியே பெரும்பாலும் பேச்சு அமைந்திருந்தது. அது இருவர் நடுவே நம்பிக்கையை உருவாக்கியது. நான் தியோசஃபிக்கல் சொசைட்டியுடன் தொடர்பில் இருந்த எல்லா வெள்ளையர்களையும் தெரிந்து வைத்திருந்தேன். அவர்களில் பலர் முன்னால் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள்.
எங்கள் பேச்சு லடாக்கின் மடாலயங்கள் நோக்கிச் சென்றது. எனக்கு லடாக்கிய மொழி ஓரளவு தெரியும், திபெத்திய மொழியையும் உதிரிச் சொற்களாகப் பேசமுடியும் என்பது ஆடமுக்கு என்னை தவிர்க்க முடியாதவனாக ஆக்கியது. அவனுடன் இருந்த வழிகாட்டிகளை எந்த அளவுக்கு நம்பமுடியும் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவர்களில் இருவர் முஸ்லீம்கள். ஒருவன் திபெத்தியன். ஃப்ளேசர் அவனிடம் ஓர் இந்திய துறவியை அழைத்துக் கொண்டு திபெத் செல்வது கூடுதல் பாதுகாப்பு என்று சொன்னபின் அவன் என்னை ஏற்றுக்கொண்டான்.
ஆடமின் குழுவில் நான் ஓர் உறுப்பினராக ஆனேன். ஆடம் சுருக்கங்கள் மண்டிய செக்கச்சிவந்த சதுரமுகம் கொண்ட உயரமான ஆங்கிலேயன். மெல்லிய செம்புக்கம்பிச் சுருள்கள் போல சிவந்த முடி மண்டிய மிகக்கனமான கைகள். இருபுறமும் அழுத்தப்பட்டதுபோல நீண்ட மூக்கு. நிலநரம்போடிய பெரிய தாடைகள். இளநெல்லிக்காய்கள் போன்ற கண்கள். கூழாங்கல் நிறமான பற்கள். சரியான ஆங்கிலோ சாக்ஸன் தோற்றம். இந்தியாவில் இருபதாண்டுக்காலம் இருந்தவன் என்பதனால் இந்திய உச்சரிப்பில் ஆங்கிலம் பேசத் தெரிந்து வைத்திருந்தான்.
நாங்கள் 1950, மார்ச் மாதம் லடாக்கில் இருந்து திபெத்தில் காரி [Ngari] என்ற ஊர் நோக்கி கிளம்பினோம். திபெத்திற்குள் நுழைய அன்று மிக உகந்த வழி அருணாச்சலப் பிரதேசம்தான். ஆனால் அது சாத்தியமே அல்ல. அங்கே தான் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லைப்பூசல் உருவாகத் தொடங்கியிருந்தது. நாங்கள் சென்றவழி வெவ்வேறு மலைச்சிற்றூர்களை இணைத்து இணைத்து நாங்களே உருவாக்கிக் கொண்டது. எங்கள் வழிகாட்டிகள் அவ்வப்போது பேசி முடிவுசெய்து அந்த வழியை வகுத்தனர். எப்பகுதியில் பிரச்சினை இல்லை, எந்த இடம் திறந்திருக்கிறது என்றெல்லாம் முடிவுசெய்து அழைத்துச் சென்றனர்.
எங்கள் குழுவில் ஆடம் மட்டும்தான் நான் விரும்பிய விஷயங்களில் ஆர்வம் உடையவன். மற்றவர்கள் வெறும் மலையேறிகள். ஆகவே நாங்கள் இரவில் ஒரே கூடாரத்தில் தங்கினோம். போர்வைக்குள் உடலை புதைத்து சூடுநிறைத்துக் கொண்டபின் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருப்போம். இமையமலைகளில் நடக்கும்போதும் சரி, அமர்ந்திருக்கும்போதும் சரி பேசமுடியாது. மூச்சு ஆற்றல் வீணாகும்.
ஆடம் திபெத் மீது அவனுக்கு ஆர்வம் வந்ததைப் பற்றிப் சொன்னான். அவருடைய குடும்பம் ஆங்கிலிகன் சர்ச் பின்னணி கொண்டது. இருநூறு ஆண்டுகளாக அவனுடைய குடும்பத்திலிருந்து மிஷனரிகளாக உலகமெங்கும் சென்று கொண்டிருந்தார்கள். அவனுடைய தந்தை சார்ல்ஸ் பேக்கர் தென்தமிழகத்தில் நெல்லை அருகே டோனாவூர் என்னும் இடத்தில் மிஷனரியாக பணியாற்றியவர். புகழ்பெற்ற மிஷனரியான ஏமி கார்மிக்கேலுடன் இணைந்து செயல்பட்டார். அவர் ஒரு மருத்துவப் பணியாளர்.
ஆடமின் அப்பா அவனுக்கு தொடர்ச்சியாக கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். ஆடம் அக்கடிதங்கள் வழியாகவே வளர்ந்தான். ஏமி கார்மிக்கேலின் நூல்களை அவர் அவனுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். பிறகு ஒரு நாள் அவர் டோனாவூரிலிருந்து கிளம்பி சென்றுவிட்டார். அவரிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லை.
ஏமி கார்மிக்கேல் 1901-ல் Raisins என்ற நூலை எழுதினர். அது புதிய கீழைநாட்டு நிலங்களைப்பற்றி அவர் கொண்ட கனவுகளைப் பேசியது. அந்த நூல் ஆடமின் மனதில் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியது. ஏனென்றால் அவர் பிறந்தது அந்த ஆண்டுதான். ஆடம் ஏமி கார்மிக்கேல் எழுதிய Lotus buds என்றநூலை நூறுதடவைக்குமேல் வாசித்திருக்கிறான். ஏமி கார்மிக்கேல் வர்ணிக்கும் இந்தியா, அதன் மக்கள் செறிந்த, வெயில் பொழியும் நிலம் அவனை கனவில் ஆழ்த்தியது. இயல்பாக செலவிடப்படும் வாழ்க்கை வீணாக்கப்பட்ட ஒன்று என்ற எண்ணத்தை அவன் அடைந்தான். அவன் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் சேர்ந்ததே அதற்காகத்தான்.
ஆடமின் வாழ்க்கையில் அடுத்த ஆழமான செல்வாக்கு அவன் லண்டனில் இருந்தபோது சந்தித்த ஒருவர் வழியாக உருவானது. ஆடம் அதுவரை தென்னிந்தியா வரவேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தான். அந்த சந்திப்பு அவனை திபெத் மேல் பித்துகொண்டவனாக ஆக்கியது.
அவன் திபெத் பயணியான ஆன்னி டெய்லர் [Hennah Royle Taylor] பற்றிய ஒரு செய்திக்குறிப்பை ஆங்கிலிகன் மிஷனரி இதழ் ஒன்றில் வாசிக்க நேர்ந்தது. அது அவன் வாழ்க்கையில் ஒரு பெரிய தொடக்கம்.
ஆன்னி டெய்லர் திபெத்துக்குள் நுழைந்த முதல் ஐரோப்பியப் பெண்மணி. தன் பதிமூன்று வயதில் ஏசுவை கனவில் கண்ட ஆன்னி கிறிஸ்தவ மிஷனரியாக மாற முடிவெடுத்தார். லண்டனில் மருத்துவம் படித்தார். லண்டனின் சேரிகளிலேயே பெரும்பாலும் தங்கி பணியாற்றினார். China Inland Mission என்னும் அமைப்புடன் தொடர்பு கொண்டு சீனாவுக்குள் கிறிஸ்தவ மிஷனரியாக நுழைந்தார்.
1884-ல் ஷாங்காய் நகருக்கு கப்பலில் சென்று சேர்ந்தார் ஆன்னி. 1886-ல் திபெத் எல்லையில் உள்ள லான்ஷௌ நகருக்கு மதப்பணிக்காகச் சென்றார். அப்போதுதான் திபெத் என்னும் மறைக்கப்பட்ட நிலம் பற்றி தெரிந்துகொண்டார். அவருடைய மிஷனரி மனம் அந்த மக்கள் கிறிஸ்துவிடமிருந்து நெடுந்தொலைவில் இருப்பவர்கள் என்ற எண்ணத்தை அடைந்தது. அந்த ‘சபிக்கப்பட்ட’ மக்களுக்கு கிறித்தவத்தை அளிக்கவேண்டும் என்று அவர் உறுதிகொண்டார்.
மிஷனரிப் பணிக்காக ஆஸ்திரேலியா சென்ற ஆன்னி அங்கிருந்து 1889-ல் டார்ஜிலிங் வந்தார். அங்கிருந்து சிக்கிம் சென்று ஒரு திபெத்திய பௌத்த மடாலயத்தில் திபெத்திய மொழி கற்றுக்கொண்டார். அங்கே போண்ட்ஸோ என்ற திபெத்திய சிறுவனை கிறித்தவனாக மாற்றி அவனை உடனழைத்துக்கொண்டு மார்ச் 1891-ல் சீனாவுக்குக் கிளம்பினார். தியான்ஷுய் என்ற ஊருக்கு சென்று அங்கிருந்து திபெத் நோக்கி சென்றார்.
பதினாறு குதிரைகளுடன் இரண்டு மாதத்திற்கு தேவையான உணவு மற்றும் பொருட்களுடன் தடைசெய்யப்பட்ட நகரம் என அன்று அழைக்கப்பட்ட லாஸா நோக்கி ஆன்னி பயணமானார். அன்று அன்னியர் எவரும் அந்நகருக்குள் நுழைவதற்கு தடை இருந்தது, ஆன்னி தலையை மழித்து கடுஞ்செந்நிற ஆடை அணிந்து திபெத்திய ஆண் போலவே தோற்றத்தை மாற்றிக்கொண்டார். வழியில் கொள்ளைக்காரர்களுடன் போரிட்டனர். பனிப்புயலில் சிக்கி திசைமாறி சுற்றி அலைந்தனர்.
சீன முஸ்லீம் வழிகாட்டியான நோகா என்பவன் அவருடன் சென்றான். அவன் இன்னொருவரிடமிருந்து ஆணை பெறுவதற்கு சம்மதிக்கவில்லை. ஆகவே தொடர்ச்சியாக அவனுக்கும் ஆன்னிக்கும் பூசல் ஏற்பட்டது. அவன் பனிவெளி நடுவே அவர்களை விட்டுச்சென்றுவிட்டான்.
1893 ஜனவரி 3 ஆம் தேதி ஆன்னியும் குழுவினரும் லாசாவிற்கு நூறு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் ஒரு சிற்றூரை அடைந்தனர். கொலோக் என்னும் மலையிடையர்களின் ஊர் அது. அது போ-சு என்னும் ஆற்றங்கரையில் இருந்தது. அந்த ஆற்றை அவர்கள் தெப்பங்களில் கடந்தனர். அவர்கள் தெப்பங்களில் ஆற்றைக் கடக்கும் செய்தியை அறிந்து திபெத்திய அதிகாரிகளால் சூழப்பட்டனர். சிறைப்பிடிக்கப்பட்டு நாக்சு என்ற ஊருக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அப்போது ஆன்னியிடம் இரண்டு குதிரைகள் மட்டுமே இருந்தன. துணைவர்களில் திபெத்தியனான போண்ட்சோ, சீனனான பெண்டிங் என இருவர் மட்டும்தான் எஞ்சினார்கள். லாசாவுக்குச் செல்லும் பாதையில் நுழையவே அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆன்னி நாக்சுவிலிருந்த படைத்தலைவனிடம் பலமுறை கெஞ்சினாலும் அவர்கள் நெறிகளில் உறுதியாக இருந்தனர்.
குறைந்தபட்ச பயண உதவியுடன் திபெத்திய படையினரால் திருப்பி அனுப்பப்பட்ட ஆன்னி சீனா சென்று அங்கே பிரெஞ்சுப் படைகளிடம் சிக்கி அங்கிருந்து லண்டன் மீண்டார். அவருடைய மதப்பரப்பு எண்ணம் ஈடேறவில்லை. ஆனால் திபெத்திற்கு கிறிஸ்தவ மதத்தை கொண்டு செல்லும் துடிப்புடன் ஆன்னி இறுதிவரை இருந்தார். அதற்காக திபெத்திய மிஷன் ஒன்றை சிக்கிமில் உருவாக்கினார். ஆனால் அது வெற்றி பெறவில்லை.
“ஆனால் எனக்கு மதம் பரப்பும் எண்ணம் ஏதும் இல்லை” என்று ஆடம் கண் சிமிட்டியபடிச் சொன்னான் “ஏனென்றால் பரப்பப்படக்கூடிய ஒன்று மதம் அல்ல என்று எனக்கு இன்று தெரியும். என்னை தூண்டியது வேறொன்று..” நான் இரவின் குளிரில், கூடாரத்தை பனிக்காற்று உலுக்கிக் கொண்டிருக்க எனக்குள் ஒலிப்பதுபோல ஆடமின் குரலை கேட்டுக்கொண்டிருந்தேன்.
ஆடம் சொன்னான்.1922-ல் ஆன்னி டெய்லர் மறைந்தார். அதற்கு ஓராண்டுக்கு முன் 1921 ஜூலையில் நான் அவரைச் சென்று பார்த்தேன். அப்போது எனக்கு இருபது வயது. எங்காவது சென்று எதையாவது செய்து உலகுக்கு என்னைக் காட்டிவிடவேண்டும் என்ற வெறியுடன் இருந்தேன். அப்போதுதான் ஆன்னி டெய்லரின் பயணம் பற்றிய கட்டுரையை வாசித்தேன். ஒருநாள் அவரை சந்திக்க கிளம்பிச் சென்றேன்.
லண்டனில் கென்ஸிங்க்டனில் குரோம்வெல் என்னும் இடத்தில் ஆன்னி அன்று வாழ்ந்தார். அப்போதும் ஒரு திபெத்திய மிஷனரி அமைப்பை உருவாக்குவதைப் பற்றி கனவு கண்டு கொண்டிருந்தார். ஆகவே இளைஞர்களை ஆர்வத்துடன் வரவேற்றார். அவருடைய இல்லத்தில் சன்னலோரம் அமர்ந்து நான்கு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தார்.
அந்த நாளை நான் மறக்க மாட்டேன். நான் சன்னலின் பின்னணியில் ஆன்னியின் முதிய முகம் உணர்வெழுச்சி கொள்வதை, பதைப்பதை, அழுவதை, சிரிப்பதை, மெய்மறப்பதை, தன்னில் ஆழ்ந்து பிரமை கொள்வதை, திடுக்கிட்டு மீள்வதை பார்த்துக் கொண்டிருந்தேன். வெளியே நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. கண்ணாடிமேல் நீர் வழிந்து கொண்டே இருந்தது. பைன் மரங்களின் பச்சைக்கொந்தளிப்பு. ஆன்னியின் சொற்களுடன் இணைந்து அந்த கொந்தளிப்பை நினைவில் கொண்டிருக்கிறேன்
ஆன்னி அவருடைய திபெத் பயணம் பற்றிச் சொன்னார். அவர் சென்றபாதை மிகமிகச் சுற்றுவழி. உண்மையில் வழிதெரியாமல் அலைந்து எப்படியோ சென்று சேர்ந்தார். அது ஒரு முட்டாள்தனமான சாகசமுயற்சி. ஆனால் மிஷனரிகளுக்கு அப்பணியில் உயிர்விடுவதே உச்சகட்ட சாதனை என்னும்போது அதில் ஆபத்து எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.
ஆன்னி என்னிடம் பேசும்போது சொன்ன ஒன்றை நான் உண்மையில் அப்போது கவனிக்கவில்லை. அந்த வயதில் அப்படிப்பட்ட கவனம் இருக்க வாய்ப்பும் இல்லை. 1926-ல் நான் இந்தியா வந்து பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் சேர்ந்தேன்.
1937-ல் லடாக்கில் பணியாற்ற வந்தேன். லே நகருக்கு அருகே எங்கள் ராணுவ முகாம் அமைந்திருந்தது. ஒருநாள் பனிபொழியும் இரவில் அவ்வழியே ஒரு புத்தபிக்ஷுக்களின் குழு சென்றது. அவர்கள் எங்களிடம் அடைக்கலம் கோரினார்கள். அவர்களை எங்களுடன் தங்கவைத்தோம். அவர்கள் திபெத்தின் நாகு என்ற ஊரில் இருந்த மடாலயத்தில் இருந்து லே நகருக்குச் சென்று கொண்டிருந்தனர். அந்த ஊரின் ஆங்கில உச்சரிப்பு நாக்சு.
எனக்கு எங்கோ ஒரு அசௌகரியம் தோன்றியது. அது ஏன் என்றும் புரியவில்லை. நாக்சு என்ற ஊருக்கு என்ன மேலதிக அர்த்தம் என் ஆழத்தில் உள்ளது? அன்று நான் என் அறைக்குச் சென்று என் குறிப்பேட்டை எடுத்து என் பழைய நாட்குறிப்புகளை வாசித்தேன். அன்றன்றைய சிந்தனைகளை போகிற போக்கில் குறித்துப் போடுவது என் வழக்கம்.
நாக்சு லாசாவுக்கு அடுத்தபடியாக திபெத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த நகரம். முன்பு லாஸாவின் காவல்படை ஒன்று அங்குதான் இருந்தது. ஆன்னியை வழிமறித்த திபெத்தியக் காவல்படை அவரை நாக்சுவுக்குத்தான் அழைத்து சென்றது. அங்கிருந்துதான் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். ஆனால் அந்த செய்தி அல்ல, வேறொன்று. அது என்னை அலைக்கழியச் செய்தது.
சற்று பிராந்தி அருந்திவிட்டு படுத்துக் கொண்டேன். இதமாக குருதி வெம்மைகொண்டது. என் அறைக்குள் கணப்பின் வெப்பம் நிறைந்திருந்தது. நான் தூங்கி பின்னிரவில் போர்வையின் உள்ளே என் உடல்வெம்மை நிறைந்திருக்க விழித்துக் கொண்டபோது என் அறைக்குள் ஆன்னி அமர்ந்திருந்தார். அவருக்கு பின்னால் சன்னல் திறந்திருந்தது. யார் சன்னலைத் திறந்தது என்று நான் திகைத்தேன். என் ஆடர்லியை அழைத்து அதை மூடச்சொல்லவேண்டும். ஆன்னி வயதானவர், இந்த குளிரில் அவர் நோயுற்றுவிடக்கூடும். ஆனால் நான் வெறுமே பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஆன்னி கூர்ந்த பார்வை என்னை நோக்கி நிலைத்திருக்க என்னிடம் சொன்னார். நாக்சுவை நான் மறக்கவே முடியாது. வெண்பனி மூடிய அந்த சிற்றூர் செத்தமீன் போலிருந்தது. மீன்செதில்கள் போல பொருக்குப் பனி. அதன்மேல் கிழிந்த சப்பாத்துக்களுடன், கிழிந்து நீரில் ஊறிய தோலாடையுடன் உடலைக் குறுக்கி நடந்தேன். அந்த ஊரின் தெருக்களெல்லாம் வழுக்கின. எங்கும் ஒரு மட்கும் நாற்றம்.
அதன் கூரைகள் மரத்தாலானவை. அவை பனியின் ஈரத்தில் கருமை கொண்டிருந்தன. எந்த கட்டிடத்திற்கும் சன்னல்கள் இல்லை. ஏனென்றால் திபெத்தில் அன்று கண்ணாடிகள் அனேகமாக புழக்கத்தில் இல்லை. ஆகவே அவை மூடப்பட்ட பெட்டகங்கள் போலிருந்தன. வெளிச்சமே இல்லை. இரவிலும் பகலிலும் இருட்டு. தெருக்களில் வீட்டு முகப்புகளில் எங்கும் எவரும் இல்லை
இம்முறை ஆன்னி உணர்வேதும் இல்லாமல் ஒப்பித்துக் கொண்டே சென்றார். கோவேறு கழுதைகளில் சென்ற இரண்டு ராணுவ வீரர்களை பார்த்தேன். இங்கே பிக்ஷுக்களையும் ராணுவ வீரர்களையும் பிரித்தறிவதே கடினம். அவர்கள் எறும்புகள் போல ஒருவருக்கொருவர் சைகையால் பேசிக்கொண்டார்கள். திடீரென்று ஊரின் நடுவே இருந்த மடாலயத்தில் இருந்து உலோக மணியோசை கேட்டது. அந்த விந்தையான நரகநிலத்தில் எழும் ஒரே உயிரோசை அது.
ஆன்னி ஏதோ நூலில் இருந்து வாசித்துக் கொண்டே செல்கிறாரா என்று சந்தேகம் வந்தது. நாக்சுவைப் பற்றி என்னிடம் பிறிதொருமுறை ஒருவர் பேசினார். நீண்ட நாட்களுக்குப்பிறகு. 1903-ல் கர்னல் ஃப்ரான்ஸில் யங்ஹஸ்பெண்ட் தலைமையில் பிரிட்டிஷ் படை சிக்கிமில் இருந்து திபெத் நோக்கிச் சென்றது. திபெத்தை ரஷ்யா கைப்பற்றிவிடும் என்று கர்சன் பிரபுவை நம்பவைத்து அந்த படையெடுப்பை உருவாக்கினர். அதனூடாக புரட்டஸ்டாண்ட் மதம் திபெத்தில் காலூன்றும் என்று மிஷனரிகள் நம்பினர்.
நான் பிரிட்டிஷ் படைகளுக்கு வழிகாட்டி, மொழிபெயர்ப்பாளர், நர்ஸ் ஆக பணியாற்றினேன். லாஸாவில் நாங்கள் தங்கியிருந்தோம். பிரிகேடியர் ஜெனரல் ஜேம்ஸ் ரொனால்ட் லெஸ்லி மெக்டொனால்ட் படைகளை நடத்திச் சென்றார்.
மிகக்கொடூரமான படையெடுப்பு அது. பழமையான ஆயுதங்களும் வழிமுறைகளும் கொண்ட முந்தைய யுகத்தைச் சேர்ந்த திபெத்திய ராணுவத்திற்கும் தொழிற்புரட்சிக்கு பிந்தைய நவீன உலகைச் சேர்ந்த பிரிட்டிஷ் ராணுவத்திற்கான போர்.
சுமிக் ஷெங்கோ [Chumik Shenko] என்ற ஊரில் திபெத்தியப் படைகளுக்கும் பிரிட்டிஷ் படைகளுக்கும் மோதல் நடந்தது. பழமையான முறையில் மண்தடுப்புகள் கட்டி ஒளிந்துகொண்டு போரிட்ட முப்பதாயிரம் திபெத்தியப் படைவீரர்களை பிரிட்டிஷ் ராணுவம் சுட்டுத்தள்ளியது. சுமித் ஷெங்கோ படுகொலை என்று இதை வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.
அந்தப் படை லாஸாவை நெருங்கியபோது தலாய் லாமா சீனாவுக்கு தப்பி ஓடினார். தடைசெய்யப்பட்ட நகரை பாதுகாத்த திபெத்தியப் படைவீரர்கள் வாள்களும் ஈட்டிகளுமாக பிரிட்டிஷ் பீரங்கிகளுக்கு முன் பாய்ந்தனர். அங்கே பத்தாயிரம் பேர் கொன்று வீழ்த்தப்பட்டனர். லாஸா வீழ்ந்தது. ஆங்கிலோ திபெத்திய ஒப்பந்தம் கையெழுத்தாகியது. திபெத்திடமிருந்து மிகப்பெரிய கப்பம் பெறப்பட்டது. திபெத் கிட்டத்தட்ட பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது.
அந்தப் போரில் நான் பங்கெடுத்ததே கிறிஸ்துவின் பொருட்டு திபெத்தை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையால்தான். ஆனால் அது நிகழவில்லை. திபெத் உச்சகட்ட விசையுடன் எங்கள் சொற்களை எதிர்த்து நின்றது. ஏமாற்றம்தான் எங்களுக்கு மிஞ்சியது.
நான் லாஸாவில் பிரிட்டிஷ் முகாமில் தங்கியிருந்தேன். பகலில் என் உதவியாளர்களுடன் நகருக்குள் சென்று காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் பார்த்தேன். நோயுற்றவர்களுக்கு மருந்து அளித்தேன். ஒருநாள் லாஸாவின் புறப்பகுதியில் இருந்த பழைய வீடு ஒன்றுக்குள் இருந்து ஒரு கிழவி என்னை கைநீட்டி அழைத்தாள். அங்கே ஒரு நோயாளி இருக்கிறார் என்று தெரிந்தது.
உள்ளே இருந்த நோயாளி ஒரு வயோதிக பிக்ஷு. அவர் கடுமையான காய்ச்சலில் இருந்தார். அவருடைய காலில் குண்டுக்காயம் ஆழமாக பட்டிருந்தது. அது அழுகத் தொடங்கியிருந்தது. அவர் வாழமாட்டார் என்று நன்றாகவே தெரிந்தது. நான் அவருக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. வலிகுறைக்க அபினை கொடுப்பது ஒன்றைத்தவிர.
அபின் அவர்களுக்கு பழக்கம்தான். அவர் அபினை உண்டதும் சற்று தெளிந்தவர் போல் ஆனார். அவர் என்னிடம் “நீண்டகாலம் முன்பு நீங்கள் நாகு நகருக்குச் சென்றீர்களா?” என்று கேட்டார்.
நான் “ஆமாம்” என்றேன்.
“உங்கள் மகன் அங்கே இருக்கிறான்” என்றார்.
“என்ன சொல்கிறீர்கள்?” என்று நான் கேட்டேன்.
“அங்கிருக்கிறான், உங்கள் மகன், நான் அவனைப் பார்த்தேன்” என்றார் “அங்கே போ-சு ஆற்றின் கரையில்”
அதன்பின் அவர் பேசவில்லை. நான் அவர் ஏதோ குழம்பியிருக்கிறார் என்று நினைத்தேன். அவரை விட்டுவிட்டு வந்துவிட்டேன். அவர் அன்று மாலையே உயிரிழந்தார்.
அவர் வேறெவரையோ நினைத்திருக்கலாம். ஆனால் அந்த வரி என்னை ஏதோ செய்கிறது. எனக்கு மகன் இல்லை. என் வாழ்க்கையை மதப்பணிக்காக அளித்துக்கொண்டேன். ஆனால் எனக்கு ஒரு மகன் இருப்பதாக எவரோ நினைக்கிறார்கள். அது விசித்திரமாக இருந்தது.
ஆடம் சொன்னான். ஆன்னி பேசிக் கொண்டிருந்தபோதே நான் எழுந்துவிட்டேன். மெய்யாகவே என் சன்னல் திரை திறந்து கிடந்தது. வெளியே வெண்பனி பொழிந்து பரவிய வெளிச்சம் உள்ளே நிறைந்திருந்தது.
ஆன்னியின் ஒவ்வொரு சொல்லாக நினைத்துக் கொண்டிருந்தேன். நாக்சு நகர் பற்றி ஆன்னி லண்டனில் பேசும்போது சொன்னதை நான் கருத்தில் கொள்ள எந்தக் காரணமும் இல்லை, அது அப்போது எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு வரி. வாழ்நாள் முழுக்க ஒரு நம்பிக்கைக்காக நாட்களைச் செலவிட்ட ஒரு பெண்மணியின் ஒரு அந்தரங்க எண்ணம் அது. ஆனால் மீண்டும் என் உருவெளித்தோற்றமாக அப்பேச்சை கேட்டபோது ஏதேதோ தொடர்ச்சிகள் உருவாகி வந்தன.
ஆனால் நாக்சுவைப் பற்றி அதற்குப் பின்னரும் கேள்விப்பட்டேன். இதுவல்ல, வேறொன்று. அந்த நினைவுதான் இந்த நினைவுக்குமேல் சென்று பொருந்திக்கொண்டது. என்ன அது?
சட்டென்று என் மேல் ஓர் அறைவிழுந்ததுபோல அதை அடைந்தேன், அது ஆன்னி அல்ல. அந்த பிக்ஷு ஆள்மாறிச் சொல்லிவிட்டார். அது சூசன்னா கார்ஸன் ரிஞ்ச்ஹார்ட் [Susanna Carson Rijnhart] திபெத்திற்குள் நுழைந்த இரண்டாவது பெண்மணி. அவருடைய மகன் சார்ல்ஸ் கார்ஸன் ரிஞ்ச்ஹார்ட்தான் திபெத்தை நோக்கிய பயணத்தில் நாக்சு நகருக்கு அப்பால் மலைப்பாதையில் உயிர் துறந்தவன். அப்போது அவனுக்கு ஒருவயதுதான்.
முக்தா சொன்னார். ஆடம் அதைச் சொன்னபோது நான் கூடாரத்திற்குள் எழுந்து அமர்ந்துவிட்டேன். “மெய்யாகவா?” என்றேன்.
“ஆம்” என்று ஆடம் சொன்னான். “நான் இப்போது திபெத் செல்வதே அதற்காகத்தான்.”
நான் வியப்புடன் அவனைப் பார்த்தேன்.
“அன்று நான் நாக்சுவிலிருந்து வந்த பிக்ஷுக்களிடம் அவர்கள் சார்ல்ஸ் என்ற வெள்ளைக்கார இளைஞனை அங்கே எங்காவது பார்த்ததுண்டா என்று கேட்டேன். அவர்களுக்கு திகைப்பாக இருந்தது. அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை.”
நான் “ஆனால் வெள்ளையர் என்றால் திபெத்தில் அவரை எவரும் தவறவிடுவதற்கு வாய்ப்பில்லை… இப்போதுகூட திபெத் எல்லைக்குள் ஓரிரு வெள்ளையர்கூட இருக்கமாட்டார்கள்” என்றேன்.
“ஆம், ஆகவேதான் கண்டுபிடித்துவிடமுடியும் என்று நம்புகிறேன்” என்றான் ஆடம்.
நான் முதலில் அவனிடமிருந்தே சூசன்னா கார்ஸன் பற்றி அறிந்துகொண்டேன். பின்னர் அவருடைய நினைவுக்குறிப்புகளை வாசித்தேன். சூசன்னா கார்ஸன் தன்னுடைய நினைவுகளை சொல்லி எழுதவைத்த நூல் ஒன்று 1901ல் சிகாகோவிலிருந்து வெளிவந்துள்ளது. With the Tibetans in tent and temple -Narrative of four years’ residence on the Tibetan border, and of a journey into the far interior. ஆனால் அது அவரை ஒரு தேசிய வீராங்கனை, கிறிஸ்தவப் போராளியாக காட்டும் நோக்குடன் பலவகையான சமரசங்கள் மழுப்பல்களுடன் உருவாக்கப்பட்டது.
நான் 1962-ல் கனடாவில் எழுபத்தாறு வயதான எலெனா ஜெஸி கார்சன் என்னும் இதழாளரைச் சந்தித்தேன். அவர் திபெத்தியவியல், இந்தியவியல், பௌத்தம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். அவர் சூசன்னாவுடன் நெருக்கமாக பழகியவர். உறவுமுறையில் சூசன்னாவின் மருமகளும்கூட. அவர் சூசன்னா தன்னிடம் கூறிய நினைவுகளை என்னிடம் சொன்னார். நான் அவற்றையே நம்புகிறேன்.
ஏனென்றால் அவை இயந்திரத்தனமாக இல்லை. அத்துடன் அவை நூல் தொகுப்பாளர்களால் மறுகட்டமைப்பும், சுருக்கமும் செய்யப்படவில்லை. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நினைவுநூல்கள் வாழ்க்கைக் குறிப்புகள் அனைத்துக்கும் இந்தப் பிரச்சினை உண்டு. அவை நூல் தொகுப்பாளர்களால் முற்றாக மாற்றியமைக்கப்படுகின்றன. சராசரி அமெரிக்கனின் உலகப்பார்வை, தர்க்கபுத்தி ஆகியவற்றுக்கு உகந்த முறையில் அவை வடிவம் கொள்கின்றன. ஆகவே அவற்றிலிருந்து அசாதாரணமான நம்பிக்கைகளும் உணர்ச்சிகளும் வடிகட்டப்படுகின்றன. அபூர்வங்கள் எல்லாமே அகற்றப்படுகின்றன.
மக்கள் அசாதாரணமான மனிதர்களைப் பற்றி வாசிக்க விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் தங்களைப் போன்ற சாதாரணர்களின் நம்பிக்கைகளும் உணர்ச்சிகளும் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். விளைவாக இத்தகைய தன்வரலாறுகளிலும் நினைவுகளிலும் நம்மைப்போன்ற ஒருவர் எதன்பொருட்டு அவற்றை வாசிக்கிறோமோ அது கவனமாக வெட்டிநீக்கம் செய்யப்பட்டிருக்கும். சூசன்னாவை எனக்கு அறிமுகம் செய்த எலெனா ஜெஸி கார்சன் என் நன்றிக்குரியவர். என் அறிதல்களை இப்படிச் சுருக்கிச் சொல்கிறேன்.
1868-ல் கனடாவில் ஒண்டோரியோ மாகாணத்தில் சாந்தொம் என்ற ஊரில் பிறந்த சூசன்னா டொரொன்றோ டிரினிடி பல்கலையில் மருத்துவப் படிப்பில் பட்டம்பெற்றார். ஆறாண்டுக்காலம் மருத்துவராக அங்கே பணியாற்றினார். அங்கிருந்து அவர் ஒரு மாபெரும் பயணத்தை தொடங்கியது ஏன் என்று புரிந்துகொள்வது கடினம்.
அதை இப்படி வகுத்துக் கொள்கிறேன். 1800களில் ஐரோப்பாவில் பெண்களின் வாழ்க்கையில் மிகமிக முக்கியமான காலகட்டம். அவர்களுக்கு கல்வியுரிமையும் போக்குவரத்து உரிமையும் கிடைத்தது. அவர்கள் பாரம்பரியமான குடும்ப அமைப்புகளில் இருந்தும் மதக்கட்டுப்பாடுகளில் இருந்தும் விடுதலை பெற்றனர். உருவாகி வந்த முதலாளித்துவம் அவர்களை கருப்பைகளாக பார்க்கவில்லை, உழைப்பாளிகளாகப் பார்த்தது.
அது காலனியாதிக்க காலம். அன்றைய ஐரோப்பியர் தங்கள் நாடு என்ற மன உருவகத்தை தங்களால் ஆக்ரமிக்கப்பட்ட காலனியாதிக்க நாடுகளையும் இணைத்தே உருவாக்கிக் கொண்டார்கள். ஒரு பிரிட்டிஷ் குடிமகன் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்றே தன் நாட்டை உணர்வான். அது உலக உருண்டையில் பெரும்பகுதியை உள்ளடக்கியது.
அது உருவாக்கிய பேருணர்வை இந்த தலைமுறை புரிந்துகொள்வது கடினம். இரண்டாம் உலகப்போருக்கு முன்பிருந்த தலைமுறையினரின் உணர்வு அது. அவர்களில் பலர் அதை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். சிறிய தீவுகளில் பிறந்து வளர்ந்தவர்களின் வழித்தோன்றல்கள். சட்டென்று உலகமே அவர்களுக்கு உரியதாகிவிட்டது.
ஆகவே அவர்கள் உலகளாவ விரியத் துடித்தனர். பஞ்சுவிதை போல காற்றில் வெடித்துப் பரவி தொலைதூர நிலங்களுக்கெல்லாம் சென்றனர். அறியா மானுடர் நடுவே பணியாற்றினர். போரிட்டனர், சேவை செய்தனர், கொன்றனர், இறந்தனர். நிறுவனங்களை உருவாக்கினர். பல்லாயிரம் பேருக்கு வாழ்க்கையை உருவாக்கி அளித்தனர். அந்த தலைமுறையின் அகவிசை அப்படிப்பட்டது.
இந்தியாவில் பௌத்தம் தோன்றிய முதல் முந்நூறு ஆண்டுகளில் அந்த மகத்தான விரிவு நிகழ்ந்திருக்கிறது. அதற்குப்பின் நாமறிந்ததெல்லாம் குறுகல்தான். நம்மை நாம் சிறிதாக்கிக் கொள்வது. நம்மை நாமே மேலும் மேலும் பிரித்துக் கொண்டே செல்வது. ஒருகாலடி வைக்க மட்டுமே இடமிருக்கும் வெளியில் நின்று கொண்டு நாற்புறமும் உலகை மூடிவிடுவது. இந்துமதம் என்பது முற்றாக மூடப்பட்ட பல்லாயிரம் சிறிய அறைகள் கொண்ட ஒரு மாபெரும் அமைப்பு.
எழுநூறுகளில் ஆண்கள் அடைந்த அந்த உலகை வெல்லும் எழுச்சியை, சாகச உணர்வை எண்ணூறுகளில் பெண்கள் அடைந்தனர். சாகசக்கார ஆணின் மேல் பெண்கள் பித்துகொண்டனர். மாலுமிகளை, மலையேற்றக்காரர்களை, படைவீரர்களை அவர்கள் கனவுகண்டனர்.
சூசன்னாவின் கணவரான பெட்ரூஸ் ரிஞ்ச்ஹார்ட் அப்படிப்பட்டவர். ஹாலந்தில் பிறந்தவர். சீனாவின் புரட்டஸ்டன்ட் மிஷனரியான China Inland Mission இல் பணியாற்றியவர். மிகச்சிறப்பான உரைகளை ஆற்றும் திறன்கொண்டவரும் நகைச்சுவை உணர்ச்சி மிக்கவரும் அழகருமான பெட்ரூஸ் சூசன்னாவை கவர்ந்ததில் வியப்பில்லை.
பெட்ரூஸ் நெதர்லாந்தில் சால்வேஷன் ஆர்மியில் பணியாற்றுகையில் Rijnhart’s hornet’s nest என்ற அமைப்பை உருவாக்கினார். இது ஒரு வகையான கம்யூன். இதில் இருந்த எல்லா பெண்களிடமும் அவர் உடலுறவு கொண்டார். இது பிரச்சினையாக ஆனபோது அவரை அவர்கள் வெளியேற்றினர். அவர் கனடாவுக்கு சென்றார்.
பெட்ரூஸ் ஒரு மதநம்பிக்கையாளரா என்றால் ஆம், ஆனால் மதம்தான் அவரை இயக்கியதா என்றால் இல்லை. அவர் சாகசக்காரர், மிஷனரி வாழ்க்கை அதற்கு உதவிகரமானது, அவ்வளவுதான். தன் வாழ்நாளின் ஒவ்வொரு கணமும் தன் எல்லைகளை தானே மீற முயன்றுகொண்டிருந்த ஒரு மனிதர் அவர்.
பெட்ரூஸ் சூசன்னாவை கனடாவில் சந்தித்தார். இனம்புரியாத அக எழுச்சியால் பறக்கத் துடித்துக் கொண்டிருந்த சூசன்னாவை பெட்ரூஸ் கையில் எடுத்துக்கொண்டார். இத்தகைய சந்திப்புகளில் இருக்கும் மாயமும் கொண்டாட்டமும் மிக அரிதானவை. அவை கடைசியில் பெரும்பாலும் கடும் நெருக்கடிகளை, அழிவுகளையே சென்றடைகின்றன. ஆனால் எண்ணையை தீ சந்திப்பது போலத்தான் அத்தருணம் அமைந்திருக்கும். அதை மானுடர் தவிர்க்கமுடியாது, அது தெய்வத்தருணம்.
சூசன்னா முற்றாகவே மாறினார். உலகை நோக்கி சிறகடித்து எழ விரும்பினார். எதை வேண்டுமென்றாலும் செய்ய துணிந்தவரானார். அவருக்குள் பெட்ரூஸ் தன் கனவுகளை, தன் அராஜகத்தை, தன் தவிப்பை செலுத்திக்கொண்டே இருந்தார்.
1894-ல் அவர்கள் மணம் புரிந்துகொண்டனர். சீனாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்பும் மிஷனரி அமைப்பு ஒன்றை பெட்ரூஸ் சுயமாக உருவாக்கினார். அதன்பொருட்டு கனடாவில் மதச்சொற்பொழிவுகள் நடத்தி நிதிவசூல் செய்தார். எஞ்சிய வாழ்நாள் முழுக்க வாழ்வதற்கு தேவையான நிதி அவருக்கு வந்து சேர்ந்தது.
1895-ல் பெட்ரூஸ் தன் மனைவியுடனும் சில தோழர்களுடனும் சீனாவில் கும்பும் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். அங்குதான் திபெத்திய பௌத்தத்தின் மாபெரும் மடாலயம் இருந்தது. அங்கே அவரும் சூசன்னாவும் திபெத்திய மொழியை பயின்றனர்.
அவர்கள் அங்கே சென்ற மறு ஆண்டு கும்பும் பகுதியில் இருக்கும் இஸ்லாமியர் மடாலயத்தை தாக்கினார்கள். பல பிக்ஷுக்கள் காயமடைந்தனர். ஆகவே சூசன்னா மடாலயத்திற்கு அழைக்கப்பட்டார். அங்கிருந்த தலைமைப் பிக்ஷுவுக்கு அணுக்கமானவர் ஆனார். மடாலயத்திலேயே தங்கி சிகிச்சை அளிக்கத் தொடங்கினார் சூசன்னா. திபெத்திய மொழியையும் ஓரளவு கற்றுக்கொண்டார்.
அவ்வாறுதான் லாசாவுக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தை சூசன்னா அடைந்தார். பெட்ரூஸ் அதை ஒரு சாகசப் பயணமாகவே கண்டார். சூசன்னா அதில் மதமாற்ற நோக்கத்தையும் கொண்டிருந்தார்.
அன்றைய கிறிஸ்தவ மிஷனரிகளின் வழி என்பது தலைமையை கவர்ந்தோ வென்றோ மதமாற்றம் செய்வதுதான். அது பல ஊர்களில் வெற்றிகரமாகவே நடந்தது. இந்தியாவில் அவர்களால் அரசியல் தலைமையை, மதத்தலைமையை மதமாற்றம் செய்யவே முடியவில்லை. ஆகவே பின்னர் இரண்டாம் முயற்சியில்தான் அடித்தளத்தில் இருந்து மதமாற்றத்தை செய்யத் தொடங்கினர்.
1896-ல் சூசன்னா பெட்ரூஸுடன் கும்பும் மடாலயத்திலிருந்து இருபத்துநான்கு கிலோமீட்டர் தொலைவில் இருந்த டங்கர் என்னும் ஊருக்குச் சென்று குடியேறினார். அங்கே ஒரு சிறு மருத்துமனையை நிறுவினார். திபெத்திய உடை அணிந்து, திபெத்திய உணவை உண்டு அங்குள்ள வாழ்க்கைக்கு பழகினார்.
பெட்ரூஸ் அப்போது அவ்வழியாக திபெத்தின் உட்பகுதிக்குச் சென்ற பிரிட்டிஷ் மலையேற்றக்காரர்களுக்கும் உளவாளிகளுக்கும் வழிகாட்டியாக செயல்பட்டார். பெரும்பாலான நாட்களில் சூசன்னா தனியாகவே அங்கே தங்கியிருந்தார். மிகமிக வசதிக்குறைவான இல்லத்தில் கடும்போராட்டத்துடன் அவர்கள் வாழ்ந்ததாக அவ்வழிச் சென்ற சில பிரிட்டிஷ் பயணிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.
1897ல் அவர்களுக்கு மகன் பிறந்தான். ஜூன் மாதம். அவனுக்கு சார்ல்ஸ் கார்சன் என்று பெயரிட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின் அவர்கள் லாஸாவுக்கு கிளம்புவதாக திட்டமிட்டிருந்தனர். அதற்கான ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தனர். உலருணவுகள் சேர்ப்பது, உடைகள் உருவாக்கிக் கொள்வது, சரியான வழிவரைபடங்களை தேடிக்கொள்வது என்று ஏராளமான பணிகள் இருந்தன. டங்கரில் பெட்ரூஸுக்கு தொடர்புகள் குறைவு, ஆகவே எதையுமே முழுமையாக ஒருங்கிணைக்க முடியவில்லை.
குழந்தை சார்ல்ஸ் தன்னுடைய முதல் திபெத்தியக் குளிர்காலத்தை எதிர்கொண்டபடி இருந்தான். ஜூன் முதல் திபெத் நிலத்தில் கடும்குளிர்காற்று உச்சகட்ட விசையுடன் அடிக்கும். அது கீழே இந்தியப்பெருநிலத்தில் பருவமழை பொழியும் காலம். குழந்தை அந்த கடுங்குளிர் காற்றில் கருப்பை என்று சூசன்னா குறிப்பிட்ட ஒரு மென்மயிர் பைக்குள்ளேயே பெரும்பாலும் இருந்தது. செப்டெம்பர் முதல் பனி விழ தொடங்கியது. அக்டோபரில் மொத்தநிலமும் பனியால் மூடியது. நவம்பர் டிசம்பர் ஜனவர் பிப்ரவரி என தொடர்ச்சியாக ஐந்து மாதம் திபெத் வெண்பனிக்குள்ளேயே இருந்தது.
திடீரென்று பெட்ரூஸ் அந்த கோடையிலேயே கிளம்பலாம் என்றார். அவர் மலையேற்றப் பயிற்சி கொண்ட ஒரு குழுவைச் சந்தித்தார். அவர்கள் உண்மையில் ஒரு மலைக்கொள்ளைக் கூட்டம். இரண்டு திபெத்தியர்கள், ஒரு முஸ்லீம், எட்டு ஷெர்பாக்கள். அவர்கள் திபெத்திய மலைநிலங்களில் அலைந்து சிற்றூர்களையும் மடாலயங்களையும் கொள்ளையடித்து வந்தனர். அவர்களை திபெத்திய ராணுவம் வேட்டையாடிக் கொண்டிருந்தது. அவர்களிடமிருந்து தப்பி டங்கர் வரும் வழியில் அவர்கள் பெட்ரூஸைச் சந்தித்தனர்.
பெட்ரூஸ் அவர்களுக்கு கொள்ளையை விடப் பெரிய ஒரு வாய்ப்பை அளித்தார். தங்களை லாஸாவுக்கு கொண்டுசென்று சேர்த்தால் அவர்கள் திரும்பி வந்து பணமாக ஆக்கிக்கொள்ளக்கூடிய முத்திரையிடப்பட்ட கடிதங்களை அளிப்பதாகச் சொன்னார். அவர்கள் பலவாறாக எண்ணிக் குழம்பினார்கள். அந்த ஏற்பாட்டை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பெட்ரூஸ் இன்னொரு வாக்குறுதியை அளித்தார். அவர் டங்கரில் ஓர் இடத்தில் இரண்டாயிரம் பிரிட்டிஷ் ரூபாயை புதைத்து வைப்பார். அதை எடுப்பதற்கான வரைபடத்தை லாஸாவுக்குச் சென்று சேர்ந்தபின் அளிப்பார். அவர்கள் திரும்பி வந்து எடுத்துக்கொள்ளலாம். வழியில் அவர்கள் கைவிடப்பட்டலோ, இறந்தாலோ அந்த பணம் கிடைக்காது.
பெரிய ஒரு தொகை முன்பணமாகக் கொடுக்கப்பட்டதும் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். அக்குழுவின் தலைவன் பாட்ஸே என்னும் முதிர்ந்த திருடன். அவன் திபெத்திய மலைப்பாதைகளை நன்கறிந்தவன். நாற்பதாண்டுகளாக மலைகளில் அலைவதையே வாழ்க்கையாகக் கொண்டவன். அவனைப்போன்ற ஒரு துணை கிடைப்பது மிக அரிது என்று பெட்ரூஸ் நினைத்தார்.
பணம் அளிக்கப்பட்டதும் மிக எளிதில் அவர்கள் பயணத்திற்குரிய எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தனர். பதினெட்டு குதிரைகளும் தேவையான தோல்பைகளும். நீர் புகாத பயணப்பைகள், குளிருக்கான மென்மயிர் ஆடைகள், உலர்ந்த இறைச்சியும் பழங்களும் தானியப்பொடியும் கொண்ட உலருணவுப் பொதிகள். மலையேறுவதற்குரிய சப்பாத்துக்கள்,குளிர் தாங்குவதற்குரிய மது.
அது ஒரு மாபெரும் பயணம். லாஸா அங்கிருந்து எண்ணூறு மைல் தொலைவில் இருந்தது, ஆனால் மலையேறி இறங்கும் வழிகளை கருத்தில் கொண்டால் மூவாயிரம் மைல்களுக்கு அப்பால். ஆறாயிரம் அடி உயரமான மலைகளை கடந்து செல்லவேண்டும்.
சூசன்னா திகைப்புடன் “சார்ல்ஸை என்ன செய்வது?” என்று கேட்டார்.
“அவனையும் கொண்டுசெல்ல வேண்டியதுதான்” என்றார் பெட்ரூஸ்
சூசன்னா “என்ன சொல்கிறீர்கள்? அவனுக்கு ஒருவயதுகூட ஆகவில்லை. அத்தனை தொலைவு அவனை எப்படி கொண்டுசெல்ல முடியும்?” என்றார்
“நாமா கொண்டு செல்கிறோம்? அவனை குதிரைகள்தானே சுமக்கப் போகின்றன?”
“இந்தக் குளிரையே அவனால் தாங்கமுடியவில்லை. மேலும் உச்சிக்குச் செல்வது அவனுக்கு மிக ஆபத்தானது….” என்று சூசன்னா சொன்னார். “இந்தப் பயணம் பெரியவர்களுக்கே தாங்க முடியாதது. கைக்குழந்தையுடன் செல்வது என்றால் அது முழுக் கிறுக்குத்தனம்.”
”இந்த வாய்ப்பு இனி வராது. இவர்களைப்போல வேறு வழிகாட்டிகள் நமக்கு கிடைக்க மாட்டார்கள்.”
“இவர்கள் குற்றவாளிகள்” என்று சூசன்னா கூவினார்.
“நாம் செய்யப்போவதும் இங்கே பெரிய குற்றம். குற்றவாளிகள்தான் நமக்கு உதவுவார்கள். இதுவரை நாம் செய்த பிழை என்பது சட்டபூர்வமாக நமக்கு உதவுபவர்களை திரட்ட முயன்றதுதான்.”
“நான் வரமாட்டேன். இந்த திருடர்களை நம்பி குழந்தையுடன் தனியாகக் கிளம்புவது என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாதது.”
“நீ வராமல் நான் மட்டும் எப்படி போகமுடியும்? நீதான் டாக்டர். நீதான் அந்த மக்களிடையே பணிபுரியமுடியும்.”
“நான் வரமாட்டேன்… சார்ல்ஸுக்கு மூன்றுவயதாவது ஆவது வரை மலையேற்றத்திற்கு கிளம்பப் போவதில்லை.”
ஆனால் மறுநாள் காலை சூசன்னா கிளம்புவதற்குச் சம்மதித்தார். ஆண் பெண்ணில் செய்யும் மாயம் அது. வரலாறு முழுக்க அது அப்படித்தான். பெண் எல்லா ஆணிலும் ஒரு பொதுவான மாயத்தைச் செலுத்துகிறாள். குறுகியகாலம் மட்டுமே நீடிப்பது அது. ஆண் அவனுக்குரிய ஒருசில பெண்களில் மிகமிக ஆழமானதும், அவளை முற்றாகவே மாற்றியமைத்து அவனுடைய உள்ளத்தின் உடலின் ஒரு பகுதியாகவே ஆக்கிக் கொள்வதுமான மாயத்தை செலுத்துகிறான். அவள் எந்நிலையிலும் மீளமுடியாது. அவளுக்கென சிந்தனையோ ஆளுமையோ இருக்கமுடியாது.
ஆனால் விந்தை என்னவென்றால் அத்தகைய ஆண்கள் மிகமிக ஆற்றல் கொண்டவர்கள். அவர்களிடமிருந்து ஆற்றல்பெறும் அந்தப் பெண் தன்னுள் இருக்கும் பெண்ணியல்பையும் சேர்த்துக் கொள்ளும்போது தனக்குரிய தனி வழி ஒன்றில் அவனளவுக்கே எழுகிறாள். சிலசமயம் அவனைவிட மிகமிக மேலே செல்கிறாள். அந்த உச்சத்தை அவ்வாறு ஆணிடமிருந்து ஆற்றல் பெறாத பெண்கள் அடையமுடியாது. அடையலாம், ஆனால் அப்படி ஒன்று இதுவரை பூமியில் நிகழ்ந்ததில்லை.
அவர்கள் எல்லா ஏற்பாடுகளையும் பழுதறச் செய்தனர். அவர்களுடைய வழிகாட்டிகளுக்கு அதில் நீண்ட அனுபவம் இருந்தது. இம்முறை இருமடங்கு எச்சரிக்கையும் கொண்டிருந்தனர். பணத்துக்கும் குறைவில்லை. வழிதவறி எங்காவது மாட்டிக்கொண்டால்கூட தாக்குப் பிடிக்கவேண்டும் என்ற முன்னேற்பாடுடன் இரண்டு ஆண்டுகளுக்குத் தேவையான உணவை அவர்கள் எடுத்துக்கொண்டனர். திபெத்திய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூறு பைபிள் பிரதிகள் அவர்களிடம் இருந்தன. 1898 மே 20 ஆம் தேதி அவர்கள் லாஸாவுக்கு கிளம்பினர்.
அந்தப் பயணம் தொடக்கம் முதலே ஒரு தற்கொலைத்தனமான முயற்சி. அவர்கள் கொள்ளையர்களுக்கு மட்டுமே பழக்கமான மிகக்கடினமான பனிப்பாதை வழியாகச் சென்றார்கள். கொள்ளையர்கள் அரசப்படையினர் வராத அரியபாதையையே பழகியிருப்பார்கள். பல இடங்களில் அவர்கள் நல்ல பாதைகளை தவிர்த்துச் சென்றனர். அவர்கள் சென்ற வழி பெரும்பாலும் பாறைப்பிளவுகளின் வழியாக அமைந்திருந்தது. சற்று அப்பால் செல்பவர்கள் கூட அறியமுடியாது என்பதே அதன் சிறப்பு. ஆனால் மிகச்சிக்கலான வழி அது.
இரண்டு மாதங்களில் அவர்களின் பயணத்துணைவர்கள் அவர்களை கவனித்துக்கொண்டே இருந்தார்கள். பாட்ஸே அமைதியானவன். அபின் உண்ணும் வழக்கம் அவனுக்கு உண்டு. அவன் கோபமோ ஆத்திரமோ கொள்வதில்லை. மிகமிகக் குறைவாகவே பேசினான். எப்போதும் பிறரை பார்த்துக் கொண்டும் அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டும் இருந்தான். பெரும்பாலான நேரங்களில் அசையாமல் அமர்ந்திருந்தான். அந்தப் பண்புகளால்தான் அவன் உயிருடன் இருந்தான்
இன்னொருவன் இளைஞன், அவன் பெயர் நோர்டே. அவனுக்கு எப்போதுமே கொந்தளிப்பான மனநிலை இருந்தது. சிட்டுக்குருவி போல அவன் எப்போதும் எல்லா திசைகளையும் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிய விஷயங்களுக்கே எச்சரிக்கை அடைந்தான். இரவில்கூட அவன் நிறைவாக உறங்குவதில்லை. சட்டென்று எழுந்து கையில் கூரிய எறிகத்தியுடன் சூழ்ந்திருக்கும் பனிவெளியில் பனிவெளிச்சத்தில் துலங்கும் நிழலுருவங்களைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
மூன்றாமவனைத்தான் அவர்களால் வகுத்துக்கொள்ளவே முடியவில்லை. நடுவயதினனான செபோ நீண்ட வாள் ஒன்றை வைத்திருந்தான். திபெத்திய வாள்கள் அலங்காரமான உறைகள் கொண்டவை. குத்துவாளாக பயன்படுத்த ஏற்றவை. தேவை என்றால் அவற்றை ஈட்டி போல எறியவும் முடியும். அவன் ஒருமுறைகூட வாளை உறையிலிருந்து உருவவில்லை. தன் உடலில் இருந்து அவற்றை விலக்கவும் இல்லை. எப்போதுமே மடியிலோ நெஞ்சிலோ தோளிலோ வைத்திருந்தான். அதன்மேல் உடலை வைத்துத்தான் படுத்து தூங்கினான்.
எஞ்சியவர்கள் சுமைதூக்குபவர்கள், மலைப்பொறுக்கிகள். அவர்கள் அனைவருமே அபினுக்கு அடிமைகள். கரியபற்களும் பீளைநிற்கும் சிறிய கண்களும் சுருக்கம் மண்டிய முகங்களும் கொண்டவர்கள். அவர்களுக்கு நீராடும் வழக்கம் இல்லை. முகம்கழுவுவதும் பல்தேய்ப்பதும்கூட அவர்கள் அறியாததே. அவர்கள் அணிந்த உடைகள் பல ஆண்டுகள் கழற்றவே படாதவை. ஆகவே அவர்களிடமிருந்து ஒரு மட்கிய முடியின் வாடை எழுந்துகொண்டே இருந்தது.
சூசன்னா அவர்களை நேருக்குநேர் பார்க்கக்கூட முடியாதபடி வெறுத்தார். ஆனால் அவர்களுடன் சேர்ந்தே பயணம் செய்ய வேண்டியிருந்தது. அதைவிட இரவில் அனைவரும் சேர்ந்து ஒரு கூடாரத்திற்குள் ஒற்றை உடற்குவியலாக மாறி ஒருவர் வெப்பத்தை இன்னொருவருக்கு அளித்து துயிலவேண்டியிருந்தது.
அந்தப்பயணத்தில் சூசன்னா ஒவ்வொருநாளும் பலமுறை பிரார்த்தனை செய்தார். ஒவ்வொரு முறை கால்பட்டு ஒரு கல் உருண்டு கீழே அடியிலாதது எனத்தெரிந்த பாதாளத்திற்கு செல்லும்போதெல்லாம் அவர் “விண்ணிலிருக்கும் ஏசுவே!” என்று குரலெழுப்பி சிலுவை போட்டுக் கொண்டார். ஒவ்வொரு வாய் நீருக்கு முன்னும் பிரார்த்தனையைச் சொல்லிக் கொண்டார். உணவுண்பதற்கு முன் கையில் ரொட்டியுடன் தலைகுனிந்து அமர்ந்து ஆழமாக ஜெபம் செய்தார். இரவில் தூங்குவதற்கு முன் அவர் தன் உடலுடன் சார்லஸை சேர்த்துக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்து நெடும்பொழுது பிரார்த்தனை செய்தார்.
ஆனால் அந்த பனிவெளியில் அவர் கிறிஸ்துவின் அருகாமையை உணரவில்லை. தன் சொற்கள் காற்றில் வீணாகின்றன என்றே தோன்றியது. “என் தேவனே, உன்பொருட்டு செல்கிறேன். உனக்காக உயிர்விடச் சித்தமாகிறேன். நீர் என்னுடன் இருக்கிறீரா? என் சொற்களைச் செவி கொள்கிறீரா? எனக்கு துணை வருகிறீரா?” என்று அவர் கேட்டார் “என் வாழ்க்கையை உமக்கு அளிக்கிறேன். தேவனே, அவ்வாறு முழுதாக என்னை உமக்கு அளிக்கும் துணிவை மட்டும் எனக்கு நீர் அருளவேண்டும்.”
சூசன்னா அப்பயணத்தில் ஒருமுறைகூட ஏசுவை அறியவில்லை. அது ஏன் என்பது அவருக்குள் உழற்றிக்கொண்டே இருந்தது. ஒருவேளை அந்த பயங்கரநிலம் அவரை அச்சுறுத்தியிருக்கலாம். அவருடைய ஆழத்தை அது குலைத்துவிட்டிருக்கலாம். திபெத்தியப் பனிவெளியில் அவர் எப்போதும் உணரும் ஒரு அச்சமூட்டும்தன்மை உண்டு. அங்கே கனவுகளிலும் அந்நிலமே வரும். வெண்மை வெறித்துக்கிடக்கும் நிலம். அமைதியாக சூழ்ந்திருக்கும் மலைமுடிகள். காற்றின் சொல்லற்ற ஓலம்.
அங்கே விலங்குகளே இல்லை. இருந்தால் அவை மானுடர் இருக்குமிடங்களுக்கு வருவதே இல்லை. ஆனால் அங்கே ஒரு பார்வையை உணரமுடியும். அது மலைகளின் பார்வை. அவை சூழ்ந்து நின்று குனிந்து நோக்கிக்கொண்டிருக்கும். அமைதியாக.
அங்கே மனிதர்கள் செத்துக் கொண்டே இருந்தனர். பெரும்பாலானவர்கள் தன்னந்தனியாகவே செத்தனர். அவர்கள் உயிர்பிழைக்கமாட்டார்கள் என்று உணர்ந்தால் உடன் சென்றவர்கள் கைவிட்டுவிட்டுச் சென்றனர். அவர்கள் அந்த வெறுமையை பார்த்தபடி தனிமையில் கிடந்து மெல்ல மெல்ல உயிர்நீத்தனர்.
சூசன்னாவும் கூட்டமும் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒரு மெல்லிய முனகலை ஒருமுறை கேட்டனர். ஒரு பாடல்போல. அது ஏதோ பேயின் குரல் என்று சூசன்னா எண்ணினார்.
“நம்முள் இருந்து எழுவது அது, ஒரு பிரமை, செவிகொடுக்காதே” என்றார் பெட்ரூஸ்.
ஆனால் நோர்டே ஐயத்துடன், உருவிய கத்தியுடன் குனிந்து பதுங்கி ஓசையில்லாமல் சென்றான். அவன் அங்கே சென்றடைந்தபின் கைகாட்டினான். அவர்கள் அங்கே சென்றனர். அங்கு ஒருவன் நோயுற்று சாகக் கிடந்தான். ஒரு மலைவிரிசலில் தனியாக படுத்திருந்தான். அவன் செத்துவிடுவான் என்பதனால் அவனுடைய மென்மயிர் ஆடைகளையும் உடன்சென்றவர்கள் எடுத்துக்கொண்டு விட்டனர். ஆகவே அவன் மெல்லிய ஆடையுடன் பனியில் உறைந்தவனாக கிடந்தான்.
அவன் ஏன் சாகவில்லை என்பதே திகைப்பூட்டுவதாக இருந்தது. அவன் உடலின் விளிம்புகள் பனிப்பொருக்கால் மண்ணுடன் இணைந்திருந்தன. அவன் விரல்கள் வெண்பனியில் இறுகி ஒட்டியிருந்தன. ஆனால் அவன் நெஞ்சில் துடிப்பு இருந்தது, அவன் விழிகள் வெறித்திருந்தாலும் உயிர் கொண்டிருந்தன. அவன் முனகியபடி பாடிக் கொண்டிருந்தான்.
“அவன் என்ன பாடுகிறான்?”என்று பெட்ரூஸ் கேட்டார்.
நோர்டே “அவனா?” என்றபின் செவிகூர்ந்து “வானிலே வானிலே வானிலே …. அந்த ஒரு சொல்மட்டும்தான்.”
“இல்லையே அவன் நிறையச்சொற்களை பாடுகிறானே?”
“திபெத்திய மொழியில் ஒரே சொல்லை வெவ்வேறு வகையில் எழுதவும் உச்சரிக்கவும் முடியும்.”
அவனை அவர்கள் கடந்துசெல்ல முற்பட பெட்ரூஸ் “நாம் அவனுடன் நிற்போம்…” என்றார்.
சூசன்னா அவனருகே அமர்ந்து அவனுக்காக ஜெபித்தார். அவன் கையைப் பிடித்து அவன் நெற்றியில் வைத்து சிலுவை போடச் செய்தார். அவன் செவியில் “நீ மீட்கப்பட்டாய். நீ கர்த்தரை வந்தடைந்தாய்” என்று திரும்பத் திரும்பச் சொன்னார்.
அவனுடைய பாடல் நின்று உதடுகள் உறைந்தன. கண்கள் முன்பெனவே நிலைகுத்தியிருந்தாலும் உயிர் அகன்றுவிட்டிருந்தது.
அங்கிருந்து விலகிச் செல்லும்போது பெட்ரூஸ் “விசித்திரமாகவே இருக்கிறது. வானம் என்ற ஒரு சொல் அத்தனை சொற்களாக மாறுவது” என்றார். பின்னர் சிரித்து “ராணித்தேனீ முட்டையிடுவது போல” என்றார். அவரே தலையசைத்து புன்னகைத்து “அந்த ஒருசொல்லே ஒரு மொழியாக ஆகிவிடும் தகுதி கொண்டது” என்றார்.
சூசன்னா பிரார்த்தனை செய்துகொண்டே சென்றார். அவ்வப்போது நீண்ட பெருமூச்சு விட்டார். அவர் திபெத்துக்கு வந்தபின் மதம் மாற்றிய முதல் ஆத்மா அவன். அவன் ஆத்மா அதை மெய்யாகவே அறிந்திருந்ததா?
சார்ல்ஸ் ஒரு பொம்மை போல அவர் உடலுடன் ஒட்டிக் கொண்டிருந்தான். பெரும்பாலான பொழுதுகளில் அவன் தூங்கிக் கொண்டே இருந்தான். அந்தக்குளிர் அவன் உடலுக்கு “துயில்க” என்ற செய்தியை அளித்தது.
“அவன் பனிவெளியில் சிறுபூச்சிகளைப்போல ஆகிவிட்டான். அப்படியே பனித்துயிலுக்குள் சென்றுவிடுவான்” என்று பெட்ரூஸ் சொன்னார். “கூடு ஒன்றை கட்டிக்கொண்டு உள்ளே சென்றுவிடுவான். கோடையில் உடைத்துக்கொண்டு வெளிவரும்போது ஏழுவண்ணச் சிறகுகள் கொண்டிருப்பான்”.
சூசன்னா “போதும், இது என்ன பேச்சு?”என்று அவரை நோக்கி சீறினார்.
பெட்ரூஸ் எப்போதுமே வேடிக்கையாகப் பேசுபவர். எதையும் சற்று நையாண்டியுடன் சொல்லும் பாவனை அவருக்கு உண்டு. கண்களைச் சிமிட்டியபடி அவர் பேசும் அந்த நகைச்சுவையே அவரிடம் அவரை ஈர்த்தது.
அதனுடன் கலந்த இயல்பான பொறுக்கித்தனம். அவர்களுடன் திபெத்துக்கு வந்து சேர்ந்த வில்லியம் நீல் ஃபெர்கூசன் ஒருசில நாட்களிலேயே அந்தப் பொறுக்கித்தன்மையை தாளமுடியாமல் விலகிச் சென்றார். அவரைப்பற்றி பேசும்போது பெட்ரூஸ் “அவர் நல்ல பாதிரியார். அவர்கள் எளிதில் வீடுபேறு அடைகிறார்கள்” என்று சொல்லி கண்களச் சிமிட்டி சிரித்தார்.
எதிலும் ஒரு இழிசுவையை அவரால் சேர்த்துக் கொள்ள முடியும். முதல்முறை பேசும்போது பிரார்த்தனை செய்யும் கிழவிகள் குசுவிடுவதை எப்படி பெருமூச்சாக மாற்றிக் கொள்கிறார்கள் என்று நடித்துக் காட்டினார். அன்று சூசன்னா சிரித்துக் குழைந்து கையூன்றி சரிந்துவிட்டார். அந்த கீழ்ச்சுவையில் இருந்து விந்தையான ஒரு பறந்தெழலாக அழகிய கவித்துவத்தை, கூரிய தரிசனத்தை நோக்கிச் செல்லவும் அவரால் முடிந்தது.
வழக்கமாக கிறிஸ்தவ போதகர்களிடம் உள்ள நேர்மை, அந்த நேர்மையை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் தன்மை, நேர்மையற்றவர் என்று எவரேனும் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம் எதுவுமே அவரிடம் இல்லை. அவர் பொதுப்பணத்தை எடுத்து தனக்காகச் செலவழிக்கத் தயங்காதவர். ஒருவரிடம் பொய்யாக நடித்து பணம்பெறுவதிலும் கூச்சமற்றவர்.
பணக்காரக் கிழவிகளிடம் அவர் மிகையுணர்ச்சி பொங்க சொற்பொழிவாற்றினார் அதைவிட அவரிடம் இருந்த பலகுரல்திறன் அவருக்கு பெரிதும் உதவியது. வாயோ தொண்டையோ அசையாமல் அவரால் பேசமுடியும். வெவ்வேறு குரல்களில். அவர் ஜெபம் செய்யும்போது அதன் உச்சத்தில் எங்கிருந்தோ ஆசிச்சொல் எழுந்து ஒலித்து கிழவிகளை திகைப்புறச் செய்தது. அவர்கள் அழுதபடி மண்டியிட்டனர். அவருக்கு நிதியை அள்ளி வழங்கினர். அதற்கும் அப்பால் கிளம்பி வருகையில் ஒரு கிழவியின் மெலிந்த கைவிரல்களில் கிடந்த வைரமோதிரத்தை அவளறியாமல் கழற்றிக் கொண்டுவரவும் அவருக்கு தயக்கமிருக்கவில்லை.
அவர் நெதர்லாந்திலும் அதற்குமுன் சீனாவிலும் நிகழ்த்திய பாலியல் சாகசங்களை சூசன்னா அறிந்திருந்தார். உண்மையில் அதுதான் அவரை மேலும் அவரிடம் ஈர்த்தது. அவர் திபெத்திலும் பெண்களை துரத்திக் கொண்டிருந்தார்.
“அவர்களிடம் விசித்திரமான விலங்குவாடை வீசுகிறது. கெட்டுப்போன நெய்யும் சற்றே மட்கும் மாமிசமும் கலந்த வாடை. அது குமட்டுகிறது. ஆனால் ஒன்று உண்டு, காமத்தில் கெட்டவாடை மெல்ல மெல்ல பெரும் ஈர்ப்பு கொண்டதாக ஆகிவிடும். நாற்றத்தை நறுமணமாக்குபவன் சாத்தான். அவன் நம்மை அலைக்கழிக்கிறான்”
முதல்முறையாக சூசன்னா பெட்ரூஸை வெறுத்தார். அவர் சாத்தானுக்கு அணுக்கமானவரோ என்ற எண்ணத்தை அடைந்தார். சாத்தானும் கிறிஸ்துவும் மிகமிக நெருக்கமானவர்கள். சாத்தானை நோக்கி ஓடி கிறிஸ்துவை வந்தடைந்தவர்கள் உண்டு. கிறிஸ்துவை நோக்கி செல்லும் பயணத்தால் சாத்தானை சென்றடைந்தவர்களும் உண்டு.
பெட்ரோஸ் என்பது பீட்டரின் ஹீப்ரு மொழிப் பெயர். பாறை என்பது நேர்ப்பொருள். கிறிஸ்துவின் அரசை உருவாக்கும் பொருட்டு போடப்பட்ட முதல் கடைக்கல் பீட்டர். சூசன்னா எண்ணி எண்ணி வியந்துகொண்டிருந்தார். ‘பிழைசெய்துவிட்டேனா? இந்த மனிதனை ஏன் இப்படி வெறுக்கிறேன்? இந்த மனிதனிடம் ஏன் இப்படி பித்தாக இருக்கிறேன்?
ஆனால் இந்த பனிபடிந்த வெற்றுநிலத்தையும் நான் அஞ்சுகிறேன், வெறுக்கிறேன். ஆனால் இங்கேயே என் வாழ்க்க்கையை நிகழ்த்தி முடிக்கவேண்டும் என்றும் நினைக்கிறேன். என்னை கர்த்தரிடம் கொண்டுசெல்லும் ஊர்தி இந்த நிலம் என்று நம்புகிறேன். “இருநிலைகளில் இருந்து என்னை விடுவித்தருள்க என் மீட்பரே” அவர் எப்போதும் சொல்லும் பிரார்த்தனை வாசகம் அது. ஆனால் எந்த மானுடராவது முற்றாக அதிலிருந்து விலகமுடியுமா? அவர்களுக்கு அதன்பின் பிரார்த்தனை தேவையாக இருக்குமா?
சூசன்னாவின் உளநிலைகளை நான் என் பார்வையில் கூர்ந்து தொகுத்துக்கொண்டேன். இதை என் புனைவாகவே கருதலாம். எங்கோ ஓரிடத்தில் நாம் நம்மை இழந்து நாம் நோக்குபவரின் இடத்தில் இருந்து நம்மை நிகழ்த்திக்கொள்ள தொடங்குகிறோம். ஒருவரை அறிய மிகச்சிறந்த வழி முறை அதுவே.
சூசன்னா பெட்ரோஸின் அந்த பொறுக்கித்தனத்திற்குப் பழகியபின் அதை அஞ்ச தொடங்கினாள். அதிலிருந்தது ஆற்றல், கூர்மை. உறைக்குள் இருக்கும் திபெத்திய வாள் போல. ஆற்றலும் கூர்மையும் இரக்கமற்றவை.
அவள் பெட்ரூஸை விரும்பினாள், ஆனால் அவர் தன்னுடன் இல்லாதிருக்கவேண்டும் என்றும் எண்ணினாள். அவர் எங்கோ இருக்க அவரை எண்ணிக் கொண்டிருப்பதையே மகிழ்ச்சியாக உணர்ந்தாள்.
அவருடன் அத்தனை அணுக்கமாக அத்தனை நாட்கள் அவள் கூடவே இருந்ததில்லை. அது அவளை பதறச்செய்தது. அவர் அவள் அறிந்த மனிதரே அல்ல. முற்றிலும் இன்னொருவர். அந்த உடலை கிழித்து திறந்து தான் பார்த்தே இராத ஒருவர் எழுந்துவிடுவாரோ என அவள் எண்ணினாள். ஆகவே அவருடன் உடல்சார்ந்து நெருக்கமாகச் செல்லும்போதே உள்ளத்தால் விலகிக்கொண்டாள்.
வேறெங்கோ தன் மனதை நிலைகொள்ளச் செய்ய முயன்றாள். ஒண்டேரியோவின் மாபெரும் நன்னீர் ஏரிகளை, ஊசியிலைக் காடுகளை, மேஃப்ளவர் பூக்கும் டொரொண்டோவின் சாலைகளை, தீப்பற்றி எரிவதுபோல இலைகள் பழுத்துச் சிவந்து பரவியிருக்கும் மேப்பிள் காடுகளை வலிந்து வலிந்து கற்பனையில் உருவாக்கிக் கொண்டாள்.
அது முதலில் மிகமிகக் கடினமாக இருந்தது. அவள் உள்ளம் அந்த வெண்ணிற வெறுமையிலேயே சிக்கிக் கிடந்தது. ஆனால் மெல்ல மெல்ல அதைப் பிடுங்கிக் கொள்ள முடிந்தது. ஏதேனும் ஒரு கடந்தகாலக காட்சியில் அவள் உள்ளத்தை பதியவைத்தாள். அதன்பின் அதை திட்டமிட்டு அணுவணுவாக விரித்துக் கொண்டாள். அதிகபட்சம் நாலைந்து நிமிடங்களில் அந்த உளச்சித்திரம் கலைந்து சூழ்ந்திருக்கும் பனிவெளி வந்து ஊடுருவும்.
ஆனால் அந்த கனவுவின் காலம் நீடித்துக் கொண்டே இருந்தது. பின்னர் ஒருமணிநேரம் வரை அவள் அந்த அகநிலத்தில் வாழமுடிந்தது. அவள் உடல் நலிந்து ஆற்றலை இழக்குந்தோறும் கனவுகளில் ஈடுபடுவது எளிதாயிற்று. நாளடைவில் கனவுகள் நெடுநேரம் நீடித்தன. பகலில் விழித்திருக்கையிலும் தன்னியல்பாக எழுந்து வந்து முற்றாக மூடிக்கொண்டன. கண்கள் நோக்கிழந்து வெறிக்க, முகம் மெழுகென்று அசைவிழக்க, அவள் எங்கோ இருந்தாள்.
மெல்ல கனவும் நனவும் இணையாக அவள் பொழுதை எடுத்துக் கொண்டன. பின்னர் வெறும் கனவிலேயே சென்று கொண்டிருந்தாள். அது கட்டற்று பெருகிச் சென்று கொண்டிருந்தது அவள் எண்ணியிராத இடங்களுக்கெல்லாம் தூக்கிச் சென்றது. மிக முயன்று உடலில் எடையை கட்டிக்கொண்டு நீரில் மூழ்குவதுபோல மெய்யுலகுக்கு மீண்டு வரவேண்டியிருந்தது.
அவள் உடல்நிலை சீர்கெட்டபடியே வந்தது. முகம் பனியால் வெடித்தது. உதடுகள் இரு புண்பொருக்குகளாக ஆயின. தோலுறைச் சப்பாத்துக்குள் மென்மயிர்ப்பொதிக்குள் இருந்த கால்கள் புண்ணாகி இரு அழுகிய கிழங்குகள் போல மாறின. அவள் உடல் எடை குறைந்தபடியே சென்றது.
அவள் சார்ல்ஸுக்கு முலையூட்டிக் கொண்டும் இருந்தாள். அவன் அவள் உடலின் கொழுப்பையும் புரோட்டீனையும் உறிஞ்சி உண்டான். ஆகவே அவளுடைய தோல் வெளிறி, செதில்கள் படர்ந்து, கன்ன எலும்புகள் மேலெழுந்து, கண்கள் குழிக்குள் சென்று வெளுத்த பேயுரு போல ஆனாள். அவள் தன் முகத்தை பார்த்துக் கொண்டதே இல்லை. பின்னர் பார்த்தபோது அவளுக்கு அறிமுகமே இல்லாத ஒருத்தி கண்ணாடியில் தெரிந்தாள். கோதிக் காலகட்டக் கதைகளில் வரும் கொடூரமான சூனியக்காரக்கிழவி.
அவள் சார்லஸை மார்போடு அணைத்திருந்தாள். முடிந்தவரை அவனுக்கு முலைப்பாலையே ஊட்டினாள். தொடக்கத்தில் அவ்வப்போது மக்காச்சோள மாவு சூப்பையும் அளித்தாள். மக்காச்சோள சூப் அவனுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவன் அதை கக்கினான், அல்லது கழிந்தான். ஆகவே முதல் சிலநாட்களுக்குப்பின் வெறும் முலைப்பால்.
ஆனால் அவனுக்கு அது போதவில்லை. அவன் எந்நேரமும் பசியுடன் உறிஞ்சிக் கொண்டிருந்தான். முலைக்கண்களில் பால் வராதபோது கூச்சலிட்டு அழுதான். முலைக்கண்களை கடித்தான். அவனை அடித்து அவள் கூச்சலிட்டாள். பலமுறை தன் உடலில் இருந்து ஓர் ஒட்டுண்ணியை பிடுங்கி எடுப்பதுபோல அவனை அவள் விலக்கினாள். வெறியுடன் வசைபாடினாள். ஓரிருமுறை கடும் சினத்தால் மூளை அமிலம் பட்டதுபோல எரிய தூக்கி மலைச்சரிவில் வீசிவிடலாமா என்று வெறிகொண்டாள். பின்னர் அதற்காக தன்னை சபித்து கண்ணீர்விட்டு அழுதாள்.
பெட்ரூஸ் அவனை ஒருமுறைகூட கையால் தொடவில்லை. “அவன் உன்னுடன் இருக்கவேண்டியவன். இங்கே உடலில் இருந்து உடலுக்கு நோய்கள் சில மாறக்கூடும். இன்னொரு உடல் அவனுக்கு நோயை அளிக்கும்” என்று சொல்லிவிட்டார்.
அவள் சிலசமயம் போர்வைக்குள் பரவும் உடல் வெப்பத்தால் தாகம் எடுத்து விடியற்காலையில் விழித்தெழுகையில் உளம்தெளிந்து இனிமையை உணர்வாள். சூழவும் வெண்பனியின் வெளிச்சம். மண்ணிலிருந்து எழும் நிலவொளி அது. நிழலற்றது. நோக்க நோக்க அது மெல்ல அதிர்வதுபோல் இருக்கும். மலைவிளிம்புக் கோடுகள் நீர்ப்பிம்பம் போல் நெளியும். அவள் அவற்றைப் பார்த்துக்கொண்டே இருப்பாள். நெதர்லாண்டின் பெரும் பசுக்களை போல மலைமுடிகள் தோன்றும். கருமையில் வெள்ளை வழிந்திருக்கும் வடிவம்.
எத்தனை இனியது. எத்தனை அழகானது. ஆனால் கொல்லும் நஞ்சு போன்றது. இரக்கமே அற்றது. இத்தனை அழகாக மரணத்தை ஏன் இறைவன் படைக்கவேண்டும்?. இத்தனை மகத்தானதாக, பேருருக்கொண்டதாக, அமைதியானதாக, சூழ்ந்துகொள்வதாக, சிறிதாக்கி பொருளற்றதாக்கி ஒவ்வொன்றையும் தன்னுள் இழுத்துக்கொள்வதாக?
இழுத்து என்ன செய்கிறது? எங்கோ கொண்டு சென்று வைத்துக்கொள்கிறது. ஐயமே இல்லை, எங்கோ கொண்டு சென்று சேர்க்கிறது. எவருமறியாத ஓர் இடத்தில். அவள் அழுதுகொண்டே இருந்தாள். பிரார்த்தனை புரியத் தோன்றவில்லை. முழுமையாகவே தோற்று கண்ணீர்விட மட்டுமே முடிந்தது.
அன்று சென்றுகொண்டிருக்கையில் அவள் பெட்ரூஸிடம் தன் புலரிப்பொழுதைப் பற்றிச் சொன்னாள். அந்த இனிய தரிசனத்தை.
பெட்ரூஸ் திகைப்புடன் நின்றுவிட்டார். “இதை எவரேனும் உன்னிடம் முன்னர் சொன்னார்களா?” என்றார்.
“இல்லையே” என்றாள்.
“நீ எங்காவது கேட்டிருக்கலாம்”
அவளுக்கு அவர் சொல்வது புரியவில்லை. “என்ன சொல்கிறாய்?” என்றாள்.
“இது இங்கே முன்னரே உள்ள ஒரு கதை” என்றார் பெட்ரூஸ். “இங்கே அப்படி ஓர் இடம் உண்டு என்பார்கள். இந்த திபெத்திய பனிவெளியை ஒரு மாபெரும் லென்ஸ் என்று கொண்டால் அதன் குவிமையம் அது. அதை ஷம்பாலா என்கிறார்கள்”
அவள் அதைக் கேள்விப்பட்டிருக்கவில்லை. “ஷம்பாலாவா? அப்படி ஓர் இடமிருக்கிறதா?” என்றாள்.
“அது இங்குள்ள நம்பிக்கை. பழைய போன் மதத்தில் இருந்து அந்த நம்பிக்கை பௌத்தர்களிடமும் பின்னர் ஐரோப்பியரிடம் பரவியது. ஷம்பாலா என்பது ஒரு மாயநகரம். அங்கே பிறக்காதவர்களும் இறந்தவர்களும் வாழ்கிறார்கள். அங்கிருந்து வந்து இங்கே திகழ்ந்து அங்கே மீள்கிறார்கள். அங்கே அவர்களுக்கு ஒளிவடிவம்தான். அங்கே காலம் இல்லை. அங்குள்ளவர்கள் வெறும் எண்ணத்தால் இங்கே எங்கும் திகழமுடியும்”
அவள் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். “இந்த திபெத்தியப் பனிவெளி ஒரு ஆடி என்றேனே, இதில் திகழும் நானும் நீயும் உட்பட எல்லாமே பொய்க்காட்சிகள். ஆடியின் குவிமையத்தில் இருக்கும் ஷம்பாலாதான் மெய்யானது. அங்கிருக்கும் உண்மையை இது திபெத் என்ற மாபெரும் மாயத்தோற்றமாக விரித்திருக்கிறது” என்று பெட்ரூஸ் சொன்னார்.
“போதும், எனக்கு தலைசுழல்கிறது” என்று சூசன்னா சொன்னாள்.
ஆனால் அதைப்பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள். மூன்றாம்நாள் அவள் அவரிடம் கேட்டாள் “பேட், உண்மையிலேயே அப்படி ஓர் இடம் உண்டா?”
“நீ என்ன பைத்தியமா? பைபிள் சொல்வதற்கு அப்பால் ஒன்று இருக்கக்கூடுமா?”
“பிறகு ஏன் அப்படி தோன்றுகிறது?”
“இந்த நிலம் உருவாக்கும் மனப்பிரமை அது. இந்த வெண்மை இதை ஒரு மாபெரும் ஆடி என்று நினைக்க வைக்கிறது. இங்கே பனிக்கோளங்களை நீ கூர்ந்து பார்க்கவேண்டும். அவை அவற்றுக்குப் பின்னால் உள்ள மிகச்சிறிய பொருட்களை பெரிய காட்சிகளாக விரித்து காட்டுகின்றன. அதை மக்கள் நெடுங்காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் நாம் இங்கே காண்பவை எல்லாம் இந்த பனிவெளி என்னும் ஆடிக்கு அப்பால் நுண்வடிவில் உள்ளன என்று கற்பனை செய்துகொண்டார்கள்.”
“இந்தப் பனிவெளியில் நான் இறந்தால் உண்மையில் ஷம்பாலாவுக்குச் செல்லவே விரும்புவேன்.”
“ஏசுவிடம் செல்ல விரும்ப மாட்டாயா?”
“பேட், ஏசு அங்கேதான் இருப்பார்.”
“உன் மனம் பேதலித்துவிட்டது… பேசாமல் வா.”
அந்த பயணம் முடிவே அற்றது போல் இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒன்று போலவே நிகழ்ந்தது. பனிவெளியில் நடக்க நடக்க நிலவேறுபாடுகள் அழிந்தன. நாள்வேறுபாடுகள் மறைந்தன. பொழுதுவேறுபாடும் தெரியாமலாயிற்று. தெரிந்ததெல்லாம் கால்வைப்பு மேலும் கால்வைப்பு மேலும் மேலும் கால்வைப்பு. வெண்மலைக்குமேல் இன்னொரு வெண்மலை. ஒவ்வொரு மலைகளுக்கு பின்னாலும் மலைகள்.
அவர்கள் கிளம்பி ஒரு மாதத்திற்குப்பின் அவர்களுடன் வந்த சீனர்களில் இருவர் காலையில் மறைந்துவிட்டிருந்தனர். அவர்கள் குதிரைகளையும் எடுத்துச் சென்று விட்டிருந்தமையால் தான் அவர்கள் விட்டுச் சென்றுவிட்டார்கள் என்று தெரிந்தது. திரும்பிச் செல்வதற்கு தேவையான பொருட்களையும் கொண்டு சென்றுவிட்டிருந்தனர்.
“அவர்கள் மனம் சோர்ந்திருப்பார்கள். இந்தப் பனிவெளியில் அத்தகைய சோர்வு வழக்கமானதுதான்” என்று பாட்ஸே சொன்னான்.
பதற்றத்துடன் தேடிக்கொண்டிருந்த பெட்ரூஸ் அவனுடைய பீளைபடிந்த சிறிய கண்களை சற்றுநேரம் நோக்கிக்கொண்டிருந்தார்.
அவர்களை பற்றி நினைக்க பொழுதில்லை. ஒரு பனிப்புயல் அடிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்தது. அதற்குள் மலைவிரிசல் ஒன்றை சென்றடைந்து உள்ளே நுழைந்து கொண்டாகவேண்டும்
நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் இருவர் விட்டுவிட்டுச் சென்றார்கள். மேலும் இரண்டு நாட்களுக்கு பின் மூவர். மீண்டும் இருவர். “இதுதான் நம் பயணத்தின் கடினமான பகுதி. மனம் சோர்வு கொள்கிறது. ஒருவர் விட்டுவிட்டுச் சென்றால் பிறரும் சென்றுவிடலாமென்னும் நம்பிக்கையை அடைகிறார்கள். ஆனால் அவர்கள் சென்று சேரப்போவதில்லை. அவர்களால் இந்தப் பனிவெளியை கடக்கமுடியாது” என்றார் பாட்ஸே.
நான்கு நாட்களுக்கு பின்னர் ஒருநாள் அவர்கள் மலைப்பிளவுக் குகை ஒன்றில் காலையில் போர்வைக் குவியலுக்குள் கண்விழித்தபோது அவர்களை நோக்கி நீட்டப்பட்ட வாளுடன் செபோ நின்றிருந்தான். அவனுக்குப் பின்னால் பாட்ஸேயும் நோர்டேயும் நின்றிருந்தனர்.
செபோ “எழுந்து அமருங்கள்… நாங்கள் உங்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறோம்” என்றான்.
“என்ன?” என்று பெட்ரூஸ் கேட்டார்.
“அந்த தங்கம் புதைக்கப்பட்டுள்ள இடத்தை நீங்கள் எங்களுக்குச் சொல்லவேண்டும்…” என்றான் செபோ.
“இல்லை, நான் சொல்லமுடியாது. நான் சொல்லமாட்டேன் என்று உங்களுக்கு தெரியும்.”
“இங்கேயே உங்களை கொன்று போட்டுவிட்டுச் செல்வோம்” என்றான் செபோ.
“அதை எதிர்பார்த்தே வந்தோம். நாங்கள் செத்தாலும் சரி, தங்கம் இருக்கும் இடத்தைச் சொல்ல மாட்டோம்” என்று பெட்ரோஸ் சொன்னார்.
பாட்ஸே “வெள்ளையனே, நாங்கள் உங்களைக் கொல்ல வேண்டியதே இல்லை. இங்கேயே இப்படியே விட்டுவிட்டுச் சென்றாலே போதும், நீங்கள் பிழைக்கப் போவதில்லை” என்றான் “உங்களுக்கு உணவு நீர் எதையுமே நாங்கள் விட்டுவைக்கவில்லை.”
“ஆம், நான் அந்த புதையல் இருக்கும் இடத்தைச் சொன்னாலும் நீங்கள் என்னை உயிருடன் விடப்போவதில்லை” என்று பெட்ரூஸ் சொன்னார்.
“இல்லை, உங்களை கொல்லமாட்டோம் என்று வாக்குறுதி அளிக்கிறோம்”
“நான் உங்களை எப்படி நம்புவது? பாட்ஸே நீ அங்கிருந்து கிளம்பும் முன் மண்ணைத் தொட்டு எனக்கு சத்தியம் செய்து தந்தாய்.”
அவன் சிரித்து “நான் எல்லா சத்தியங்களையும் மண்ணைத் தொட்டே செய்கிறேன்… ஆனால் நான் விவசாயி இல்லை” என்றான்.
“நீதான் அந்த பணியாளர்களை மிரட்டி திருப்பி அனுப்பினாயா?” என்றார் பெட்ரூஸ்.
“மிரட்டவில்லை. அவர்களிடம் தங்கம் புதையுண்டிருக்கும் இடத்தை ரகசியமாகச் சொன்னேன். கிளம்பிவிட்டார்கள்”
பெட்ரூஸ் சிரித்தார் “நானும் அப்படி ஒரு பொய்யைச் சொல்லவா?”
“நீ உண்மையைச் சொல்லவில்லை என்றால் உன்னை இப்போதே கொல்வோம்.”
“சரி கொல், நான் அதற்கு தயார்தான்.”
“உன் மனைவியையும் மகனையும் கொல்வோம்.”
“கொல்லுங்கள்.”
அந்த பேச்சு நடந்துகொண்டிருக்கையிலேயே சூசன்னா தன் ஆடைக்குள் இருந்து சிறிய கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்தாள். அதை நீட்டி அவள் சொன்னாள் “விலகிச் செல்லுங்கள் சரணடையுங்கள்… இல்லாவிட்டால் மூவரையும் சுடுவேன்.”
அப்படி ஒரு துப்பாக்கி அவளிடம் இருப்பதை பெட்ரூஸ் கூட அறிந்திருக்கவில்லை. அவரும் திகைத்தார். ஒருமுறை மட்டுமே சுடக்கூடிய சிறிய பிஸ்டல் அது. Aston’42. டங்கர் வழியாகச் சென்ற பிரிட்டிஷ் மலைப்பயணியான மாண்டேகு சிங்க்ளேயர் வெல்பி அதை அவளுக்குப் பரிசாக அளித்தார். அவள் அதை மறந்தே விட்டாள். கிளம்பும்போது நினைவு வந்து அதை எடுத்து தன் ஆடைக்குள் வைத்துக்கொண்டாள். ஒருமுறை கூட வெளியே எடுக்கவில்லை.
துப்பாக்கி அவர்களை அச்சுறுத்தியது. அவர்கள் முன்னரே துப்பாக்கி என்றால் என்ன என்று அறிந்திருந்தார்கள். அவர்கள் “சுடாதீர்கள்! சுடாதீர்கள்!” என்று கூவியபடி கைகளை தூக்கினார்கள்.
“வாளை கீழே போடு” என்று பெட்ரூஸ் செபோவிடம் சொன்னார். அந்த வாளையும் பாட்ஸேயின் குத்துவாளையும் நோர்டேயின் எறிகத்தியையும் வாங்கிக் கொண்டனர். அவற்றை குதிரைகளில் வைத்து கட்டினர்.ஆனால் அவர்களிடம் வேறு கத்திகள் இருக்க வாய்ப்பிருந்தது. ஆகவே பெட்ரூஸ் அந்த துப்பாக்கியை தன் கையிலேயே வைத்திருந்தார்.
அவர்கள் மீண்டும் கிளம்பினர். அவர்களை தங்களுக்கு முன் துப்பாக்கி முனையிலேயே செல்லவைத்தார். தென்படும் முதல் கிராமம் வரை அவர்களை கொண்டு செல்வது என்று பெட்ரூஸ் திட்டமிட்டார்.
ஆனால் மலைச்சரிவில் அவர்களை முன்னால் விட்டுக்கொண்டு செல்லும் அந்தப் பயணம் மிக ஆபத்தானது என்றும் தெரிந்திருந்தது. அதுவே நிகழ்ந்தது. ஓர் ஓடைக்கரையை அணுகியதும் செபோ சட்டென்று திரும்பி மலைப்பிளவு ஒன்றுக்குள் பாய்ந்தான்.
பெட்ரூஸ் “நில்… நில்! என்று கூவிக்கொண்டிருக்கையிலேயே அவர்கள் இருவரும் அவனை தொடர்ந்து சென்றனர். அவர்கள் ஏற்கனவே பிற குதிரைகளை தங்கள் குதிரைகளுடன் சேர்த்து கட்டியிருந்தனர். ஆகவே சரக்குப்பொதிகளுடன் அந்தக்குதிரைகளும் அவர்களை தொடர்ந்து ஓடின. பொதிகளும் வாள்களும் எல்லாம் போய்விட்டன.
அவர் ஒருமுறை சுட்டார். அந்த பதற்றத்தில் குண்டு குறி தவறியது. துப்பாக்கியின் ஓசை நெடுநேரம் இடியோசை போல கேட்டுக்கொண்டே இருந்தது. அது ஓய்ந்த போது அவர்களின் குதிரைகளின் குளம்படியோசை நெடுந்தொலைவில் கேட்டது.
அவர்கள் இருவரும், அவர்கள் அமர்ந்து பயணம் செய்த இரண்டு குதிரைகளுடன் குறைவான உணவுடன் வழிதெரியாத திபெத்திய பனிப் பாலையில் தனியாக விடப்பட்டனர். பெட்ரூஸ் முதல்முறையாக அவருடைய தன்னம்பிக்கையை இழந்து சலிப்புடன் தலையசைத்தார். ஆனால் சூசன்னா தைரியமாக இருந்தாள். “பார்ப்போம், இது கர்த்தரின் சோதனையாக இருக்கலாம்” என்றாள்.
அந்தப் பாதையிலேயே தொடர்ந்து செல்வது என்று அவர்கள் முடிவெடுத்தனர். அவர்கள் அந்த மலைப்பாதையில் இரண்டு பகல்பொழுது பயணம் செய்தனர். இரவில் தங்குவதற்குரிய பாறை இடுக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே ஒரு பாறையின் ஓரமாக தங்கினர். பெரிய போர்வைச்சுருளை பாட்ஸேயின் கும்பல் எடுத்துச் சென்றுவிட்டிருந்தது. ஆகவே முடிந்தவரை எல்லா மென்மயிர்ப் போர்வைகளையும் ஆடைகளையும் தங்கள்மேல் போட்டுக்கொண்டு சுருண்டுகொண்டார்கள்.
காலையில் எழுந்தபோது சார்ல்ஸின் உடல் வலிப்பு கொண்டிருப்பதை சூசன்னா கண்டாள். அவன் கைகால்கள் இழுத்துக் கொண்டிருந்தன. அவள் பெட்ரூஸை உலுக்கி “பேட், சார்ல்ஸ்… சார்ல்ஸைப் பாருங்கள்” என்றாள்.
பெட்ரூஸ் சார்ல்ஸை தொட்டுப்பார்த்தார். அவர் முகம் மங்கலடைந்தது. “பார்ப்போம்” என்றார்.
“அவன் நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.. குளிர் அவனை பாதித்திருக்கிறது” என்று சூசன்னா சொன்னாள். “நம்மிடம் இருக்கும் மருந்து என்பது விஸ்கியும் அபினும்தான்.”
“அபினை குழந்தைக்கு கொடுக்கமுடியுமா?”
“தெரியவில்லை…. ஆனால் வெந்நீரில் சற்று விஸ்கி கொடுப்பது கொஞ்சம் பயன் அளிக்கலாம்.”
ஆனால் அடுப்பை பற்றவைக்க முடியவில்லை. காற்று சுழன்று சுழன்று வீசிக்கொண்டிருந்தது. அவள் விஸ்கி குப்பியின் மூடியிலேயே ஊற்றி சார்ல்ஸுக்கு அளித்தாள். குழந்தையின் உதடுகள் நீலம் பாரித்திருந்தன. அதன் முகம் வெண்களிமண் பொம்மை போல இறுகியிருந்தது. அதனால் விஸ்கியை உறிஞ்சவோ உண்ணவோ முடியவில்லை. அதன் வாயிலிருந்து அது கன்னங்களில் வழிந்தது.
அதன் விழிகள் இரு கண்ணாடிக் குண்டுகள் போல அசைவில்லாமலிருந்தன. சூசன்னா அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு பெரிய உலுக்கல். உள்ளே ஏதோ சரடு அறுந்தது போல. அதன் இடதுகால் நீட்டிக்கொண்டது. வாய் கோணலாகி அசைவிழந்தது.
சூசன்னா அதன் நெஞ்சை தொட்டுப்பார்த்தாள்.
பெட்ரூஸ் “என்ன?” என்றார்.
“அவன் இப்போது இல்லை” என்று சூசன்னா சொன்னாள் “அவன் தன் வீட்டை சென்றடைந்துவிட்டான்.”
பெட்ரூஸ் சிலுவை போட்டுக்கொண்டார்.
அவள் அதை பார்த்துக் கொண்டே இருந்தாள். சின்னஞ்சிறிய உடல், சிறிய கைகள், சிறிய மூக்கு, சிறிய வாய். ஒரு ஆண்டுகூட அவன் மண்ணில் வாழவில்லை. அவன் விழித்திருந்த பொழுதே குறைவு. வெளியுலகை அவன் அறியவேயில்லை. கருப்பைக்குள் இருந்து தோல்பைக்குள் வந்தான். அங்கிருந்து தன் உலகுக்கே மீண்டான்
அவள் நெஞ்சு மிகமிகமிகக் குளிராக இருந்தது. ஒரு பெரிய பனிக்கட்டி உள்ளே இருப்பதுபோல. சிந்தனைகளுக்கு தொடர்ச்சி இல்லை. வெறும் சொற்கள். புழுக்கள் போல தழுவிக்கொண்டு தனித்தனியே நெளியும் சொற்கள்.
“நாம் இவனை அடக்கம் செய்துவிட்டு மேலே செல்லவேண்டியதுதான். நம்மிடம் இப்போது உணவு நீர் எல்லாமே குறைவு. வழியும் தெரியாது. இந்த வழி ஏதேனும் ஒரு ஊருக்கோ இடையர் முகாமுக்கோ செல்லக்கூடும். அதை நம்பி விரைந்து செல்வது மட்டும்தான் ஒரே வழி.” என்றார் பெட்ரூஸ்.
சூசன்னா அந்தச் சொற்களை ஆறுதல் அளிப்பதாகவே உணர்ந்தாள். அந்த உணர்வைப் பற்றி பின்னர் வாழ்நாளெல்லாம் வியந்திருக்கிறாள். அந்தச் சமயம் அந்த உடலை எப்படியாவது கைவிட்டுவிட்டுச் செல்லவேண்டும் என்றுதான் தோன்றியது. அதற்கு வலுவான ஒரு சாக்கு தேவைப்பட்டது. எதையாவது செய்வதென்பதே பெரும் விடுதலையாக பட்டது.
பனியில் மண் பாறைபோல உறைந்திருந்தது. தோண்டுவதற்குரிய கருவிகளும் அவர்களிடம் இல்லை. ஆகவே சாலையோரப் புழுதிக்குவியல் ஏதேனும் இருக்குமா என்று தேடிச் சென்றார்கள். ஒரு மண்கூம்பை காட்டி பெட்ரூஸ் சொன்னார். “இங்கே அவனை அடக்கம் செய்வோம்… கர்த்தருடன் அவன் மகிழ்ந்திருக்கட்டும்”
அந்த மண்ணில் கையிலிருந்த சிறிய பாத்திரங்களைக் கொண்டு குழி எடுத்து அதில் சார்லஸின் சிறிய உடலை கிடத்தி புதைத்தனர். அவன் முகம் எதையோ எண்ணி வருந்துவதுபோல் இருந்தது. மண்ணால் முகத்தை மூடும்போது சூசன்னா பார்வையை விலக்கிக் கொண்டாள்
பெட்ரூஸ் பைபிளில் இருந்து சில வரிகளை வாசித்தார். ஒரு கழியை உடைத்து சிலுவையாக ஆக்கி அதன்மேல் வைத்துவிட்டு அவர்கள் முன்னால் சென்றனர்.
முக்தா சொன்னார். திபெத்தின் மலைமடிப்புகளினூடாக சிறு பூச்சிகளாக ஊர்ந்து கொண்டிருக்கையில் நான் கேட்டேன் “ஆடம், நீ இதற்காகவா திபெத் செல்கிறாய்? இத்தனை செலவில், இத்தனை கஷ்டப்பட்டு?”
“ஆமாம், அதற்காக மட்டும்தான். ஆனால் சொன்னால் இதை எவரும் நம்பமாட்டார்கள்… ஆகவே சொல்வதில்லை. இந்திய ராணுவத்திலிருந்து நான் விடுவித்துக் கொண்டேன். இந்தியாவில் நினைத்தபடி சுற்றும் வாய்ப்பு குறைந்துவிட்டது. எனக்கும் நாற்பத்தொன்பது வயது. இன்னும் சில ஆண்டுகள் கடந்தால்கூட என்னால் முடியாமல் போகலாம். ஆகவே கிளம்பிவிட்டேன்.
“ஏன்” என்று நான் கேட்டேன் “அவனை தேடிப்போக என்ன காரணம்?”
“தெரியவில்லை. திபெத் செல்வதற்கு ஒரு காரணம் தேவை என்பதனாலாக இருக்கலாம்” என்ற ஆடம் “சரி நீ எதற்காகச் செல்கிறாய்?” என்றான்.
“உன்னளவுக்கு காரணம்கூட எனக்கு இல்லை, நான் சும்மா செல்கிறேன். திபெத்துக்கு என்று அல்ல எங்கு வேண்டுமென்றாலும் நான் செல்வேன். இலக்கே இல்லை” என்றேன்.
“இலக்கு இருப்பது நல்லது அல்லவா?” என்றான் ஆடம் “குறைந்தது திட்டம் வகுப்பதற்காகவாவது உதவும்”
“ஆம், அதுதான் மேற்குக்கும் கிழக்குக்குமான வேறுபாடு” என்று நான் சொன்னேன்.
டெம்ஜோக்கில் இருந்து கிளம்பிய எங்கள் குழு குறுகலான மலையிடைவெளிகள் வழியாக சிறிய ஒரு எறும்புக்கூட்டம் போலச் சென்றது.
இந்தமலைப் பாதைப் பயணத்தில் நம் குதிரைகளின் காலடியோசை நம்முடன் நாமறியாத எவரோ வந்துகொண்டிருப்பதுபோல பிரமையூட்டுகிறது. அது பாறைகளால் எதிரொலியாக திருப்பி அளிக்கப்படும்போது மலைகள் நம்மிடம் பேசுவதுபோல தோன்றுகிறது. நாம் அமைதியாகச் செல்ல வேறு ஏதோ இரு பேரிருப்புக்கள் தங்களுக்குள் உரையாடிக்கொண்டிருப்பதாக உள்ளம் மயங்குகிறது.
இமையமலையின் வழி என்று சொல்வது பனி உருகி வழிந்த ஆறுகள் உருவாக்கும் ஆழமான பள்ளங்கள்தான். அந்த ஓடைகளை ஒட்டி ஒற்றையடிப்பாதை செல்லும். சில இடங்களில் அந்த ஓடை அருவியென ஆகும். அங்கே மேலேறிச் செல்லவேண்டும்.
கழுதைப்பாதை Z வடிவில் மேலேறிச்செல்வது. அதன்மேல் அமர்ந்திருக்கையில் ஒருபக்கம் பாதாளம் நோக்கிய சரிவு வரும். மறுபக்கம் மேலேறிச் செல்லும் பாறைக்குவியல். ஆனால் நம் கண்கள் கீழே பாறைச்சரிவின் ஆழத்தில் ஒழுகிக் கொண்டிருக்கும் ஆற்றை நோக்கி இறங்கிச் செல்லும் பள்ளத்தையே நோக்கிக் கொண்டிருக்கும்.
விளிம்புகளில் பனி உறைந்திருக்க நடுவே ஓடும் நீர் மேலிருந்து பார்க்கையில் மின்னும் வெள்ளி வாள் போல தெரியும். அது விரிசலிட்டு உடையும்போது ஏற்படும் கண்ணாடியோசைக்கே ஒரு கூர்மை உண்டு. அடிவயிற்றில் அந்த பிளேடு வந்து கிழிப்பதுபோல தோன்றும்.
திபெத்தின் அப்பகுதியில் சிறிய ஏரிகள் உண்டு. அவை தற்காலிகமானவை. மலைச்சரிவில் மண் இடிந்து விழுந்து நீரின் வழிமூடுவதனால் உருவாகி வருபவை. அந்த தடை ஊறி உடைந்தால் சட்டென்று அந்த ஓடைகளில் நீர்ப்பெருக்கு எழும். அதிலிருந்து தப்ப முடியாது.
ஆனால் மலைவணிகர்கள் எங்கே எந்த ஏரி நிறைந்திருக்கிறது, எந்த அளவுக்கு அதன் கரை வலுவானது என்பதை கணித்து வைத்திருப்பார்கள். உடையும் தன்மை கொண்ட கரையை சற்றே உடைத்து நீர் வெளியேற வழிசெய்து பாதுகாப்பாக ஆக்கிக்கொள்வதும் உண்டு.
நிறைந்து ததும்பி விம்மிக்கொண்டிருந்த ஏரிகளின் விளிம்புகள் வழியாகச் சென்று கொண்டிருந்தோம். மலையிடுக்குகளில் இரவுகளில் தங்கினோம். நான்கு அடுக்குகொண்ட போர்வையை போர்த்திக் கொண்டு தூங்கி காலையில் விழித்துப் பார்த்தால் அதன்மேல் பனிப்படலம் பொருக்காகவும் கட்டிகளாகவும் படிந்திருக்கும். எடுத்து தூசியை உதறுவதுபோலவே உதறி சற்றுநேரம் வைத்திருந்தால் காற்றிலேயே நன்றாக உலர்ந்துவிடும்.
சூழலில் இருக்கும் நீராவி முழுக்க பனியாக உதிர்ந்து விடுவதனால் இங்கே காற்று மிகமிக வரண்டது. சூழ்ந்திருக்கும் பனியின் நடுவே மூச்சுவிடுவதனால் மூக்குத்துளைகள் வரண்டு வெடிக்கும். காற்றுவெளி நீராவியோ தூசியோ இல்லாமல் மிகமிகத் தெளிந்தது என்பதனால் வெயிலொளி கண்களைக் கூசவைக்கும். பனிபடிந்த மலைச்சரிவுப் பரப்புகள் கண்ணாடிவெளிபோல சுடர்கொண்டிருக்கும். நேர்விழியால் பார்க்கவே முடியாது. கண்கள் கலங்கி வழியும்.
அன்று கருப்புக் கண்ணாடியெல்லாம் இல்லை. ஆடம் ஒரு கண்ணாடி அணிந்திருந்தான், அது ராணுவத்திற்குரியது. நானும் மற்றவர்களும் மெல்லிய கருப்புத்துணியை முகத்தின்மேல் தொங்கவிட்டு அதன் வழியாகவே அனைத்தையும் பார்த்தோம். உண்மையில் அது மிக நல்லது. நம் மூச்சிலிருக்கும் நீராவி நம் முகத்தருகே குளிர்வதனால் நம் மூக்கும் உதடுகளும் வரண்டு போகாமலிருக்கும்.
இரவில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஆடம் வெள்ளையர்களுக்குரிய, குறிப்பாக பிரிட்டிஷாருக்குரிய, தன்னிறுக்கம் நிறைந்தவன். நான் வேறுநிறம் கொண்டவன்கூட. ஆகவே பெரும்பாலும் அவன் என்னிடம் எதையும் பகிராமலேயே பலநாட்கள் இருந்தான். மிகமிக மெல்லத்தான் தன்னை விரித்துக் கொண்டான். ஆனால் கீழைநாட்டவர்போல தற்பெருமையையோ குலப்பெருமையையோ சொல்லிக் கொள்ளவில்லை. தன்னைப்பற்றிய பிரமைகளை முன்வைக்கவில்லை. குறிப்பாக தன்னிரக்கத்திற்குள் செல்லவே இல்லை.
ஆடம் அவனுடைய பல்வேறு நம்பிக்கைகள், பயணங்கள் பற்றிச் சொன்னான். தீவிரமான கிறிஸ்தவப் பின்னணியில் இருந்து வந்த அவன் மெல்லமெல்ல தியோசொஃபிக்கல் சொசைட்டியின் ஆதரவாளனாக ஆகிவிட்டிருந்தான். அவர்களின் பொதுநிகழ்ச்சிகளில் பங்கெடுக்கத் தொடங்கி அவர்களின் ரகசியச் சடங்குகளில் ஈடுபடுபவனாக மாறியிருந்தான்.
1934-ல் அவன் லண்டன் சென்றபோது பிரான்ஸுக்குச் சென்று பியூசொல்யூ நகரில் வாழ்ந்த இந்திய தாந்த்ரீகவியல் நிபுணரான சர்.ஜான் வுட்ரோஃபை அவருடைய இல்லத்தில் சந்தித்திருந்தான். ஆர்தர் ஆவ்லோன் என்ற பேரில் அவர் எழுதிய கட்டுரைகள் இந்திய தாந்த்ரீகவியலை ஆவணப்படுத்தியவை.
அவர் அவனிடம் ஆறுமணிநேரம் இந்தியாவைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அவருடைய பயணங்கள் பற்றி, அவர் சந்தித்த திகைப்பூட்டும் ரகசிய ஆற்றல்கள் கொண்ட மனிதர்களைப் பற்றி. அந்தப்பேச்சு திபெத்தின் வஜ்ராயன பௌத்தம் பற்றி திரும்பியது. சிந்துநாட்டில் பிறந்த பத்மசம்பவர் திபெத்துக்குச் சென்று வஜ்ராயன பௌத்தத்தை திபெத்திய பௌத்தமாக ஆக்கினார்.
அவரை அங்கே செல்ல வைத்தது அவர் அடைந்த ஒரு தரிசனம். அது ஷம்பாலா என்னும் நகரம் என்றார் ஜான் வுட்ரோஃப்.
ஆடம் என்னிடம் “ஷம்பாலா பற்றி நீ என்ன எண்ணுகிறாய்?” என்று கேட்டான். எதிர்பாராமல் அவன் அப்படிக் கேட்டதனால் நான் திகைத்தேன்.
“என்ன?” என்றேன்.
“ஷம்பாலா என்னும் அறியப்படாத நிலம் பற்றி?”
நான் அப்போது அதைப்பற்றி ஓரளவுதான் தெரிந்து வைத்திருந்தேன். “அது திபெத்தில் உள்ள ஓர் கற்பனை நகரம், ஒரு மாயநிலம்” என்றேன்.
“கற்பனை அல்ல” என்று அவன் சொன்னான்.
அந்த குரலில் இருந்த அசாதாரணமான உறுதி என்னை திகைக்கச் செய்தது. நான் அவன் மேலும் சொல்வதற்காகக் காத்திருந்தேன்.
“இந்து புராணங்களில் ஒவ்வொன்றும் முன்னரே சொல்லப்பட்டுள்ளது. சத்யபாலபுரம் என்பதுதான் ஷம்பாலா என மருவியிருக்கிறது” என்று ஆடம் சொன்னான் “இந்து மரபின்படி கிருதயுகத்திற்கு முன்பிருந்தது சத்யயுகம். ஒவ்வொரு யுகத்திலும் அதற்கு முந்தைய யுகங்களில் நீடிக்கும் சிலபகுதிகள் உண்டு. இது கலியுகம், ஆனால் இங்கேயே துவாபர யுகத்தில் நீடிப்பது காசி. திரேதாயுகத்தில் நீடிப்பவை கேதார்நாத் அமர்நாத் போன்றவை. கிருதயுகத்தில் நீடிப்பது திபெத். அதற்கும் முந்தைய சத்யயுகத்தைச் சேர்ந்தது ஷம்பாலா.”
நான் அதை ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டேன். அவன் நெடுங்காலமாக அதில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது. ஆர்தர் ஆவலோனுக்குப் பின்னர் வெள்ளையர் இந்திய தொன்மவியலில் குறிப்பாக தாந்த்ரீகத்தில் ஈடுபாடு காட்டுவது பெருகியிருந்தது.
திபெத்திய மொழியிலும் சீனமொழியிலும் ஷம்பாலா என்று சொல்லப்படும் இடம் பற்றிய நிறைய குறிப்புகள் உள்ளன. திக்ஸே உள்ளிட்ட மடாலயங்களில் தொன்மையான போன் மதத்தின் சுவடிகளில் ஏராளமான விவரிப்புகள் உள்ளன. டக்ஸக் ஒல்மோ லங் ரிங் என அவை அந்த இடத்தை குறிப்பிடுகின்றன. நூற்றுக்கணக்கான டாங்காக்களில் ஷம்பாலா அழகான ஓவியங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. நானே நிறையப் பார்த்திருக்கிறேன்
திபெத்திய தாந்திரீக நூலான காலசக்ர தந்தரா ஷம்பாலா பற்றி விரிவாகச் சொல்கிறது. அனுத்தரயோக தந்த்ர நூல்கள் என நூற்றெட்டு மறைஞான நூல்கள் திபெத்திய பௌத்தத்தில் பிறர் அறியாமல் பேணப்படுகின்றன. அதிலொன்று காலசக்ர தந்த்ரம் என்னும் நூல். அதன் அடிப்படையில்தான் திபெத்தின் காலசக்ரம் என்னும் காலக்கணிப்பு முறை உருவாக்கப்பட்டுள்ளது. அதை திபெத்திய மடாலயங்களின் வாயிலில் வலப்பக்கச் சுவரில் நீ ஓவியங்களாக பார்த்திருக்கலாம்.
டோல்போவின் புத்தர் என்று அழைக்கப்படும் ஷெராப் கியால்ஸ்டன் காலசக்ரதந்த்ராவுக்கு எழுதிய உரையில் ஷம்பாலாவின் இடம், அங்கே செல்லும் வழி, அங்கே சென்று மீண்டவர்கள் பற்றி பேசப்பட்டுள்ளது. ஷம்பாலா மைத்ரேய புத்தர் நுண்வடிவில் உறையும் இடம். அங்கே அவர் ஒரு ஊசிமுனையளவுள்ள ஒளிப்புள்ளியாக திகழ்கிறார். அந்த ஒளியால் அந்த நிலமே ஒளியாலானதாக மாறிவிட்டிருக்கிறது.
இந்த உலகில் பௌத்த அறம் அழிந்து அறச்சக்கரத்தின் சுழற்சி நின்றுவிடும் நிலை ஒன்றுவரும். அப்போது ஷம்பாலாவில் ஒளி மிகுந்தபடியே வரும். அது இன்று எங்கிருக்கிறதென்று சாதாரணமாக நம்மால் பார்க்க முடியாது. சிலதருணங்களில் பிப்ரவரி மாதத்தின் உறைபனியில் ஷம்பாலாவில் இருந்து குளுமையான வெண்ணிற ஒளி ஊடுருவி நம் ஊர்களுக்குள் நிலவின் வெளிச்சம் போல நிறைவதுண்டு. பத்து பௌர்ணமிகளின் வெளிச்சம் அதில் இருக்கும். ஆனால் சிலரே அதைப் பார்த்திருப்பார்கள்.
ஷம்பாலா ஒளிகொள்ளுந்தோறும் எப்போதும் அந்த வெளிச்சம் இருக்கும். இரவுகளும் பகல்களும் வேறுபாடில்லாமலாகும். ஷம்பாலாவிலிருந்து ஒளி உலகை முழுமையாக மூடும்போது மைத்ரேய புத்தர் அங்கே இருந்து வானில் எழுவார். இமையப் பனிமலைகளுக்கு மேல் அவர் வானை நிறைக்கும் பேருருவராக தோன்றுவார். ஒருகோடி விண்மீன்களை அவர் வைரங்கள் போல தன் மணிமுடியில் அணிந்திருப்பார்.
வங்காளத்தின் வைணவ தாந்த்ரீக நூல்களில் ஷம்பாலா பற்றி சொல்லப்பட்டுள்ளது. அங்கே விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி வடிவம் கருவடிவில் குடிகொள்கிறது. அங்கிருந்து பேருருக்கொண்டு எழுந்து அது உலகை மூடும். இந்த பூமி பெரும்பிரளயத்தால் அழிந்தபின் கல்கி அவதாரத்திலிருந்து புதிய யுகம் உருவாகும். அது சத்யயுகம். அந்த எழவிருக்கும் சத்யயுகத்திற்கான விதைச் சேகரிப்புதான் அங்கே ஷம்பாலாவாக அமைந்திருக்கிறது.
பனாரஸ் பல்கலையில் நான் ஓர் அமெரிக்க இளைஞனைப் பார்த்தேன். லியோபால்ட் ஃபிஷர் என்று பெயர். துறவுபூண்டு அகேகானந்த பாரதி என்று பெயர் சூட்டிக்கொண்டிருக்கிறான். அவன் ஷம்பாலா என்னும் மறைநகர் பற்றிய செய்திகளை தென்னகத்து தாந்த்ரீக நூல்களில் இருந்தும் திரட்டி வைத்திருக்கிறான். என்றாவது அவனை நீ சந்திக்கலாம்.
ஷம்பாலா வெறும் கற்பனை அல்ல. பதினேழாம் நூற்றாண்டு போர்ச்சுக்கீசிய மிஷனரியான எஸ்டேவோ காசெல்லா அதைப்பற்றி எழுதியிருக்கிறார். ஹங்கேரிய ஆய்வாளர் சாண்டோர் கொரோஸி ஸோமா அதை பற்றி எழுதி அங்கே செல்லும் வழியைக்கூட விவரித்திருக்கிறார். தியோஸொபிக்கல் சொசைட்டியின் மேடம் பிளவாட்ஸ்கி அதன் தன் நுண்விழியால் கண்டதாகவே எழுதியிருக்கிறார்.
பலர் ஷம்பாலாவை தேடி நீண்ட பயணங்கள் செய்திருக்கிறார்கள். ரஷ்ய ஓவியரான நிகோலஸ் ரோரிச்சும் அவர் மனைவி ஹெலெனா ரோரிச்சும் இணைந்து ஷம்பாலாவை தேடி 1924 முதல் நான்காண்டுகாலம் ஒரு பெரிய ஆய்வுப்பயணத்தைச் செய்திருக்கிறார்கள். நான் 1931ல் ஹெலெனா ரோரிச்சை குல்லுவில் அவருடைய இல்லத்தில் சந்தித்திருக்கிறேன்.
அதற்குப் பின்னர் தெரிந்தும் தெரியாமலும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஷம்பாலாவை தேடிச் சென்றிருக்கிறார்கள். ரஷ்யாவின் கம்யூனிஸ்டு ஆட்சி தன் உளவுத்துறையை பயன்படுத்தி விரிவான ஆய்வுகளைச் செய்திருக்கிறது. எவருமே சென்றடையவில்லை. ஆனால் அனைவருமே ஒரு சிறு புதிய செய்தியையாவது கண்டடைந்திருக்கிறார்கள்.
ஆடம் உத்வேகத்துடன் சொன்னான் அது கருநிலம். இங்கே இன்று திகழ்பவை ஒவ்வொன்றும் அங்கே கருவடிவில் உள்ளன. இங்கிருந்து அரியவை சில அங்கே சென்று சேர்வதும் உண்டு. ஷம்பாலா என்று ஒரு இடம் உண்டு, ஐயமே இல்லை. மகத்தான உள்ளங்கள் பல அந்த மெய்யைச் சென்று தொட்டிருக்கின்றன.
நான் ஒன்றும் சொல்லவில்லை. கண்மூடி படுத்திருந்தேன்.
“நீ நம்பவில்லையா?” என்றான்.
“நாம் நம்பிக்கைகளை பகிர்ந்துகொள்ளப் போகிறோமா என்ன? ஒருவர் நம்பிக்கையை இன்னொருவர் ஏற்றாகவேண்டுமா?”
“வேண்டாம். நான் உன்மேல் எதையும் சுமத்தவில்லை. ஆனால் சில விந்தையான நிகழ்வுகளை நான் சொல்லியாகவேண்டும்” என்று ஆடம் சொன்னான்.
“ஆடம், நீ விந்தையான செய்திகள் அல்லாத எதையாவது சொல்லியிருக்கிறாயா?”
ஆடம் வெடித்துச் சிரித்துவிட்டான். அந்தச் சிரிப்புதான் ஆங்கிலேயரை உலகின் அனைத்து மக்களிடமிருந்தும் வேறுபடுத்துகிறது.