காந்தமுள்

”ஐயா வணக்கம்”

”தமிழ்வணக்கம் தம்பி ”

”இல்லீங்க…நான் வேற”

”என்ன சொல்றீங்க தம்பி?”

”தமிழ் வேற நிகழ்ச்சிக்கு வாறவருங்க.எம்பேரு பிரபு…நான்தான் இவரைச் சந்தியுங்க நிகழ்ச்சிக்கு வாறவன்”

”நல்லா இருங்க…வாழ்க தமிழ்”

”அப்டிச்சொல்றீங்களா?”.

”ஆமா தம்பி தமிழ் எனக்கு மூச்சு… ”.

”சரிங்க விட்டுகிட்டே இருங்க…அப்ப கேள்விகளை ஆரம்பிக்கலாமுங்களா?”

”தாராளமா…வெல்க தமிழ்!”

”ஐயா இப்ப நீங்க இருக்கீங்க …நீங்க உங்கள தமிழியர்னுட்டு சொல்லிக்கிடறீங்க. அதனால மத்தவங்களும் ஒங்களை தமிழியர்னு சொல்றாங்க…அதனால நாம பொதுவா உங்கள தமிழியர்னு சொல்லலாம் இல்லீங்களா?”

”ஆமாந்தம்பி…நான் ஒரு தமிழியன்”

”சரிங்க..இப்ப பாத்தீங்கன்னா இந்த தமிழியர்னாக்க என்னங்க அர்த்தம்?”

”தமிழே மூச்சு என்று வாழ்கிறவர்கள் தமிழியர் என்க”

”மூச்சுன்னாக்க இப்ப நீங்க விடுறமாதிரி இல்லீங்களா?”

”வெல்க தமிழ்!”

”சரிங்க…அய்ய இப்ப பாத்தீங்கன்னா தமிழர்னு சொல்றாங்க அதுக்கும் தமிழியர்ங்கிறதுக்கும் என்னங்க வித்தியாசம்?”

”தமிழரே தமிழியராக முடியும். ஆயின் தமிழரெல்லாம் தமிழியரல்ல.. தமிழணங்கின் சீரிளமைத்திறம் வியந்து தினந்தோறும் வாழ்த்தும் உள்ளங்களைச்சுட்ட சான்றோர் இட்ட பெயர் அது…”

”தமிழ்த்தாய் வாழ்த்து பாடணும்கிறீங்க?”

”உங்களுக்கு மேலே எதுனா சந்தேகம் இருந்தாக்க கேளுங்க தம்பி சும்மா அதுலயே போட்டு நோண்டாம..”

”அய்யா மன்னிக்கணும்..இப்ப பாத்தீங்கன்னா தமிழர்னாலே என்னான்னு பலருக்கு தெரியறதில்லை”

”உங்களுக்குத் தெரியுதா?”

”இல்லீங்க..அந்த பலரிலே நானும் ஒருத்தன்”

”சரியாப்போச்சு…தம்பி தமிழன் என்பவன் தமிழ்த்தந்தைக்கும் தமிழ்த்தாய்க்கும் பொறந்தவன்…”

”தமிழர்தந்தைன்னா பெரியார் அய்யா இல்லீங்களா?”

”இல்ல தம்பி இது வேற…. கவனியுங்க எவனொருவன் தமிழிலே பேசி தமிழிலே கற்று தமிழால் வாழ்கிறானோ அவனே தமிழன். தமிழ்ப்பகைவரைக் கருவறுக்க களம்புகக் காத்திருப்பவன் எவனோ அவனே தமிழன்”

”அப்டீங்களா? ஐயா இப்ப பாத்தீங்கன்னா நம்ம நாட்டிலே பலபேருக்கு தமிழ்ப்பகைவர்னாக்க என்னான்னே தெரியறதில்லீங்க…”

”உங்களுக்குத் தெரியுமா தம்பி?”

”இல்லீங்க…நானும் அதிலே ஒருத்தன்”

”தம்பி தமிழனுக்கு பகைவர்கள் பலர். வெளியூர்ப் பகைவர்கள் உள்ளூர்ப் பகைவர்கள் என அவர் இருவகை. வெளியூர்ப் பகைவரை இனங்கண்டுகொள்ளுதல் எளிது. அவர்கள் தமிழருக்குத் தண்ணீர் தரமாட்டார்கள்”

”அப்டீங்களா கர்நாடகக்காரங்களையும் மலையாளிங்களையும் தெலுங்குக்காரங்களையும் சொல்லலாமுங்களா?”

”சரியாகச் சொன்னீர்கள்.  தமிழரல்லாதாரெல்லாம் தமிழ்ப்பகைவரே என்பதே நம் ஆய்ந்தவிந்த கொள்கை”

”அய்யா இப்ப பாத்தீங்கன்னாக்க உள்ளூர்ப் பகைவர்களைப் பற்றிச் சொன்னீங்க…”’

”ஆமாம் தம்பி உள்ளூர்ப் பகைவரை இனம்கண்டுகொள்ளல் மிக்க எளிது…அவர்கள் பூணூல் போட்டிருப்பார்கள்”

”போடல்லேன்னாக்க?”

”அவர்கள் தந்தையர் போட்டிருப்பார்கள்…அல்லது அவர்கள் பாட்டனார் போட்டிருப்பார்கள்…தம்பீ, இப்ப பாலாறுன்னு சொல்றோம். அங்க என்ன ஆறா ஓடுது….? எப்பவோ ஆறு ஓடின தடம்தானே அது?என்ன சொல்றீங்க?”

”சரியாச் சொன்னீங்கய்யா… இந்தத் தமிழ்ப்பகைவர்கள் என்ன செய்றாங்க?” ‘

‘பகைவர் என்ன செய்வாங்க? நாள்தோறும் தமிழரையும் தமிழ்ப்பண்பாட்டையும் அழிக்கும் திட்டங்களைத் தீட்டிவருகிறார்கள்… ”

”அப்டீங்களா? கேக்கவே ஆச்சரியமா இருக்குங்க”

”பின்ன? என்னதம்பி நீங்க? மீடியாவிலே இருக்கீங்க இதுகூட தெரியல்லீங்களா? தமிழ் அழிஞ்சுகிட்டு இருக்கு தம்பி ..இந்த தொலைக்காட்சிகள் வந்து நந்தமிழை அன்றாடம் கொன்றுகொண்டிருக்கின்றன…”

”அய்யா இப்ப பாத்தீங்கன்னா, இதுக்கு எதிரா நீங்க என்ன பண்றீங்க?”

”தம்பீ, பாவேந்தர் பாரதிதாசன் சொன்னார் பொங்குதமிழர்க்கின்னல் வந்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு… பிரச்சினை என்னனாக்க சங்க எடுத்துரணும்ல…நாங்க அதான் முழங்கிட்டிருக்கோம்…”

”எங்கய்யா?”

”டிவியிலேதான்…வேற எங்க? நீங்க நான் பேசுற நிகழ்ச்சியைப்பாக்கிறதில்லியா? சங்கே முழங்குன்னு ஓபனிங் சாங் கூட இருக்கே”

”இல்லீங்க…நான்லாம் டிவி பாக்கிறதில்லை.. நம்ம வேலைக்கே நேரம் சரியா போகுதுங்க”

”பாக்கணும்ல தம்பி?”

”அய்யா இன்னொரு கேள்வி…இப்ப தமிழர்கள் நடுவே தமிழுணர்வு அழிஞ்சுகிட்டிருக்கு இல்லீங்களா?”

”தமிழுணர்வே கெடையாது…புள்ளைங்களை கழுத்துப்பட்டி கட்டி சீருடை அணிவித்து ஆங்கிலப்பள்ளிக்கு அனுப்புகிறார்கள்… தமிழ்பேசத்தெரிந்த தமிழனே குறைந்துவருகிறான்”

”அதுக்குக் காரணம் என்னன்னு நெனைக்கறீங்க?”

”தமிழ்ப்பகைவர்களான ார்ப்பனர்தான்..என்னதம்பி..இதையெல்லாம் கேக்கணுமா? அவனுங்க கான்வெண்டு ஸ்கூலுக்கு புள்ளைங்களை அனுப்பறதைப் பாத்துத்தானே நம்மாளுங்க அனுப்பறாங்க…”

”அப்டிச்சொன்னா எப்டீங்க? இப்ப எல்லாரும்தான் ஐடி துறைக்குப் போகணும்னு ஆசைப்படறாங்க”

‘அந்த ஆசை எப்படி வந்தது? தமிழ்ப்பகைவர் ஐடிதுறைக்குப்போய் சம்பாதிப்பதைக்கண்டுதானே நந்தமிழனும் நலம்கெட்டு அவ்வாறு எண்ணப்புகுந்தான்? எண்ணிப்பார்க்கவேண்டாமா நாம்?”

”அய்யா நீங்க சொல்றது ரொம்ப ஓவரா இருக்கிறமாதிரி இருக்குங்க….”

”இப்ப பாருங்க தம்பி நாம தமிழுடையான வேட்டியை ஏன் அணிவதில்லை?”

”ஏன்?”

”பார்ப்பனர்கள் வேட்டியைக் குறுக்காக எடுத்துக் கால்சட்டைபோல ஆக்கி அணிந்து கொண்டு அதை பஞ்சக்கச்சம் என்றார்கள். அதைக்கண்டுதானே தமிழரும் அறிவுகெட்டு அதேபோல அணிய விரும்பி இன்று கால்சட்டை அணிந்து கத்தரிக்கோல் போல நடக்கிறார்கள்? என்ன கொடுமை இது?”

”அய்யா…அப்டி சொல்லிட்டே போனா எப்டீங்க? இப்ப பாத்தீங்கன்னா உ.வே.சாமிநாதய்யர்தானே சங்க இலக்கியங்களை மீட்டுக்கொடுத்தார்? புஸ்தகத்திலே அப்டித்தானே போட்டிருக்கு?”

”தம்பி நீங்க சின்ன வயசு…பார்ப்பனச்சதியைப் புரிந்துகொள்ள உங்களுக்கு இன்னும் பக்குவம் வரல்விலை…. இல்ல கேக்கிறேன்யா, உ.வே.சாமிநாதய்யர் ஏன் கஷ்டப்பட்டு புறநாநூறு அகநாநூறுன்னு நாநூறுகளா மீட்டுக்கொண்டாந்தார்? தமிழ்ப்பாடம் கஷ்டமா ஆகணும், தமிழ்ப் புள்ளைங்க தமிழ்படிக்காம ·பிரெஞ்சு லத்தீன்னு இரண்டாம்  மொழி எடுத்துப்படித்து வீணாப்போகணும்னுதானே? சோழியன் குடுமி சும்மா ஆடாது தம்பி, சொல்லி வச்சிருக்காங்க. சாமிநாதனுக்குத் தஞ்சாவூர்பக்கம்தான் நெனைப்பிலே வச்சுக்கிடுங்க”

”சரிங்க…இப்ப பாத்தீங்கன்னாக்க…பலபேர் இருந்திருக்காங்களே..பாரதியார்..”

”அவரு வெள்ளைக்காரன்கிட்ட சரண்டர் ஆனவர் தம்பி… அவர் என்ன எழுதினார்? நீங்க ஏன் அவரைப்படிக்கிறீங்க?பேசாம பாரதிதாசனைப்படிங்க”

‘அவரு வெள்ளைக்காரனை எதுத்தாருங்களா? ”

அவரு ஏன் எதுக்கணும்? அவரு பாப்பானை எதுத்து எழுதினார்…”

”இல்லீங்க பாரதியார் நம்ம தேசிய கவிஞர்…. ”

”அவரு ஆரியனைப் புகழ்ந்து தமிழை இழிவுபடுத்தி எழுதினாரு… செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலேங்கிறாரு… தமிழைக் கேட்டா ராத்திரியிலே காதிலே எறும்பா கடிக்குதுன்னு எவ்ளவு வெஷத்தோட சொல்றான் பாத்தீங்களா? அவரு பாட்டையே பாருங்க…ஸ்வதேச கீதங்கள்னு சொல்றான்..தமிழை மொழிக்கலப்பால அழிக்கிறதுதானே அவனோட நோக்கம்? என்ன சொல்றீங்க?”

”அய்யா அப்டி பாத்தாக்க இப்ப பாரதிதாசன் கவிதை சொன்னீங்க..அதிலேகூட சங்காரம், நிஜம்னு வடமொழிச்சொல்லைத்தானே போட்டிருக்கார்?”

”பாத்தீங்களா நீங்களே சொல்லிட்டீங்க….பாரதிதாசன் யாரு? சுத்த தமிழ்க்கவிஞன் .. அவரோட மொழியையும் கலப்பு மொழியா ஆக்கி அவரையும் கெடுத்தது யாரு? நல்லா சிந்திச்சுப்பாக்கணும் நீங்க”

”அய்யா எனக்கு ஒண்ணுமே புரியல்லீங்க…”

”பாத்தீங்களா தம்பி இன்னைக்கு இப்டி ஒரு ஊடகத்துறையிலே இருக்கிற உங்களுக்கே ஒண்ணும்புரியாம அடிச்சிருக்காங்கன்னா அவங்களோட வலிமை என்னன்னு நாம பாக்கணும். உங்களையே முட்டாளா ஆக்கிட்டான் பாத்தீங்களா? ஒண்ணும்புரியாத கேணையனா ஆக்கிட்டு போய்ட்டான் பாத்தீங்களா?”

”அய்யா நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேன்…”

”பாத்தீங்களா ஒருபேச்சுக்குச் சொல்ற ஆளா உங்கள ஆக்கிட்டானுக..”

”அய்யா…”.

”சரி சரி…”

”அய்யா..அத விடுங்க. இப்ப பாத்தீங்கன்னாக்க நெறையபேர் இருக்காங்களே…கல்கி ,சாண்டில்யன்,நா.பார்த்தசாரதி…இப்ப தமிழ் மன்னர்களோட கதையை எல்லாம் கல்கிதானே எழுதினார்? ராஜராஜசோழன், மாமல்லன் எல்லாரைப்பத்தியும்?”

”ஆமா எழுதினார்.எதுக்கு? எதுக்கு எழுதினார்?நல்லா யோசிச்சுப்பாக்கணும்…”

”எதுக்குங்க?”

”தமிழனை முட்டாளா ஆக்கறதுக்கு! தலைகாணி தலைகாணியா அவனுக எழுதற சரித்திரத்தையெல்லாம் தமிழன் படிச்சுட்டு ஒக்காந்திட்டிருப்பான். அவன் ஆங்கிலம் படிச்சு அமெரிக்காவிலே வேலைக்குப் போவான்…என்ன தந்திரம் பாத்தீங்களா?”

”அய்யா பார்ப்பனர்கள் ஏன் அப்டிச்செய்யணும்? அவங்களுக்கு இதனாலே என்ன லாபம்?”

”ஏன்னா தமிழரை ஒழிக்கணும்னு அவங்க திட்டம் போடுறாங்க…ஏன்னா தமிழருக்கு அவங்கதான் பகைவருங்க. கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவேன்னு பாரதிதாசன் சும்மா பாடிடலை…சாதிவெறி…சாதிவெறியாலே அப்டிச்செய்றாங்க”

”ஆனா அவங்களைத்தவிர மத்த சாதிங்க தானே சங்கம்லாம் வச்சு தீவிரமா இருக்காங்க?”

”தமிழன் இன உணர்வுகொள்ளும்போது அப்படித்தான் சங்கம் வைப்பான்.. அந்தக்காலத்திலேயே மதுரையிலே சங்கம் வச்சவங்க தமிழருங்க….”

”இன உணர்வுன்னாக்க சாதி உணர்வுங்களா?”

”இன உணர்வுன்னா திராவிடஇன உணர்வு..நாமெல்லாம் திராவிட இனம்…கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்….பாட்டிலே கேட்டிருப்பீங்க…”

”அவங்கள்லாம் நமக்குத் தண்ணி தராதவங்கள்ல?”

”ஆமா..தமிழ்ப் பகைவர்கள் தமிழரோட ஒண்ணாச்சேந்தா திராவிடஇனம்னு சுருக்கமா புரிஞ்சுக்கலாம்” ‘

‘வேண்டாங்க…நான் புரிஞ்சுக்கறதையே விட்டாச்சு…எதுக்குங்க வம்பு..நீங்க சொல்லுங்கய்யா…இப்ப தமிழர் இப்டி சாதிகளா பிரிஞ்சு கிடக்கிறதனாலேதானே சாதிக்கலவரம் வருது?”

”தம்பி இப்பதான் நீங்க விஷயத்துக்கே வறீங்க. ஆதித்தமிழனை சாதித்தமிழனா ஆக்கினது யார்? யார் சொல்லுங்க தம்பி?”

”சரி, அவங்கன்னு வச்சுக்குவோம்…அப்ப இந்த நாடார் தேவர் வன்னியர் எல்லா அடையாளத்தையும் நாம விட்டுடலாமே…”

”தம்பி என்ன சொல்றீங்க? அதெல்லாம் தமிழரோட பண்பாட்டு அடையாளங்கள்…நந்தமிழரோட இனச்சின்னங்களே அதெல்லாம்தானே? அதை விட்டுட்டா அப்றம் தமிழருக்கு என்ன மிச்சமிருக்கு சொல்லுங்க…”

”ஆனா இப்டி சாதி அடையாளத்தோட இருந்தா சண்டை வந்திருதே”

”வருமே…வரணும்ணுதானே நால்வருணமா நம்மையெல்லாம் பிரிச்சான் பார்ப்பனன்?”

”அய்யா கடைசியா ஒரு கேள்வி”

”கேளுங்க தம்பி, நீங்க இன்னைக்கு முழுக்க கேட்டுகிட்டே இருந்தாலும் நம்ம கிட்ட வரலாற்றுபூர்வமான பதில்கள் இருக்கு”

”இல்லீங்கய்யா..தமிழர்களோட கெட்ட விஷயங்கள்லாம் பார்பப்னர்களாலேதான் வந்திருக்கு?”

”ஆமாம் ..அதிலென்ன ஐயம்?”

”இல்லீங்கய்யா இப்ப பாத்தீங்கன்னா தமிழர்களோட கெட்ட விஷயங்கள்ளிலே ஏதாவது ஒண்ணாவது தமிழராலேயே வந்தது இருக்குங்களா?”

”அதென்ன தம்பி அப்டி கேட்டுட்டீங்க? இல்லாம இருக்குமா? ஒண்ணு இருக்கு…அந்தக் கெட்ட விஷயம் தமிழராலேயே வந்ததுதான்”

”அது என்னங்கய்யா?

”பார்ப்பனர்களை நம்புற கெட்ட பழக்கம்தான்…”

”அய்யா இப்டி எதுக்கெடுத்தாலும் ஒரு சிறுகூட்டத்தைக் குறைசொல்ற பழக்கம் சரியா ? தெரியாம கேக்கிறேன்…தப்பா நெனைக்காதீங்க”

”தம்பீ, இப்டி எதுக்கெடுத்தாலும் அவங்களையே குறைசொல்ற ஆளுங்களா நம்மள ஆக்கிவச்சிருக்காங்க பாருங்க…எவ்ளவு கொடுமை…நம்ம எனத்துமேலேயே செலுத்தப்பட்ட வன்முறை இல்லீங்களா இது? சொல்லுங்க”

”வணக்கம்ங்கய்யா … நேயர்களே நீங்கள் இதுவரை கேட்டது தமிழியர் அறி.இல.அருளப்பன் அவர்களுடன் ஒரு நேர்காணல். நடத்தியவர் பிரபு வெங்கடேஷ். வணக்கம்.”

தமிழியம் ஓர் ஆய்வு தமிழியம் ஓர் ஆய்வு:கடிதங்கள்

முந்தைய கட்டுரைஉவேசாவும் ஃபெட்னா அவதூறும்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் நாவலுக்கு ஒரு தளம்