[வேலுத்தம்பி தளவாய்- ஆவணப்படம்]
போழ்வு [சிறுகதை]
அன்புள்ள ஜெ
போழ்வு கதை ஒரு பெரிய அதிர்ச்சியை உருவாக்கியது. ஏனென்றால் வீரநாயகர்களை எனக்கும் பிடிக்கும். நானும் சின்னவயசில் கோஷம் போட்டு அலைந்தவன். சம்பந்தமே இல்லாத இன்னொரு சூழலில் இன்னொரு வரலாற்றை படிக்கும்போது நமது பிடரியில் அடிப்பது போல தோன்றுகிறது
விக்கியில் படிக்கும்போதே ஆச்சரியமாக இருக்கிறது. கட்டப்பொம்மன், பழசிராஜா அனைவருமே பிரிட்டிஷாருக்கு கொஞ்சநாள் விசுவாசமாக இருந்தவர்கள்தான். பிரிட்டிஷார் ரொம்ப நெருக்கியபோதுதான் அவர்கள் எதிராக திரும்பியிருக்கிறார்கள். வேலுத்தம்பியும் அப்படித்தான்
எல்லா மாவீரர்களும் சென்றடையும் இடம் இது. அவர்கள் வரலாற்றில் நீடிக்கவேண்டும் என்றால் வரலாற்றை சூறையாடியாக வேண்டும். விளைவாக அவர்கள் இரட்டைமனிதர்களாக ஆகிவிடுகிறார்கள். அதன்பின் அவர்களிடம் எவரும் எதையும் பேசமுடியாது. ஏனென்றால் அவர்கள் சொல்லும் எந்த சொல்லுக்கும் செயலுக்கும் அவர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள மாட்டார்கள்
ஒரு வரலாற்று தரிசனமாகவே ஒலிக்கும் வரிகள்.
வேலுத்தம்பி தளவாயைப் பற்றி சம்பிரதாயமான பார்வையை முன்வைக்கும் ஆவணப்படம். தூர்தர்சன் தயாரிப்பு
ராம்குமார்
***
ஜெ
போழ்வு கதை படித்தவுடன் வேலுத்தம்பியின் முழு வரலாற்றையும் படித்தேன். போழ்வு என்ற சொல்லின் பொருள் தேடி பிளவு என கண்டவுடன் கதையின் பெயரே தரிசனத்தை கண்டு கொள்ள உதவியது.
மாவிங்கல் கிருஷ்ண பிள்ளையை இரண்டாக பிளந்த தருணத்தில் வேலுத்தம்பிக்குள் இருந்த வேலாயுதம் தளவாயிடம் இருந்து பிரிந்து பின்னர் ஆங்கிலேயரை எதிர்க்க ஆரம்பித்து கொல்லம் போருக்கு பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.
அன்புடன்
சதீஸ் குமார்
***
பலிக்கல்[சிறுகதை]
அன்புள்ள ஜெ
பலிக்கல் கதை உறைய வைத்தது. அந்தக்கதையில் உள்ள குரூரம் அப்பட்டமான அநீதி இதெல்லாம் அபூர்வமானவை என்பதனால் அல்ல, அவையெல்லாம் அன்றாட வாழ்க்கையிலேயே நடந்துகொண்டிருக்கின்றன என்பதனால்.
என் வாழ்க்கையிலேயே இதைப்போன்ற பல சம்பவங்களை பார்த்திருக்கிறேன். பலவற்றை கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தனை துரோகங்கள் மன்னிப்புகளுக்கு நடுவிலேதான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோ. இந்தக் கதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இதேபோல ஒரு கதை அவர்கள் அறிந்த சூழலில் இருந்து சொல்வதுற்கு இருக்கும் என்பதே இந்த கதையை அபூர்வமானதாக ஆக்குகிறது
சி.ஜெகதீசன்
***
ப்ரியமுள்ள ஜெயமோகன் சாருக்கு…
பலிக்கல் படித்து இரண்டு நாளாகாகிறது. ஆனால் அது எழுப்பும் ” நீதி, நியாயம் “ குறித்தக் கேள்வி இன்னமும் மனதிற்குள் காற்றில் இலை போல அசைந்து கொண்டிருக்கிறது. போத்தியின் ஆன்மீக விடுதலைதான் கதையின் உச்சம் என உணர்கிறேன். ” அதே சமயம் பலிக்கல் எது என்கிற கேள்வியும் எழுகிறது. பதினேழு வருசமா கழுவிலே ஏத்தி உக்கார வைச்சிருக்குடா..ஆண்டவன் என்னைய கழுவிலே ஏத்திட்டாண்டா”ன்னு அழகிய நம்பியா பிள்ளை கதறுகிறார். பதினேழு வருடங்களாய் அப்படியான ஒரு வாழ்க்கையைத்தான் அவர் வாழ்கிறார் .குரூரமான நோயுடன் இறந்தும் போகிறார். ஆனால் போத்தி தன் மனதில் கற்பனை செய்துகொள்ளும் அழகிய நம்பியா பிள்ளையின் வாழ்க்கை மிகுந்த பிரகாசமாக இருந்திருக்கிறது. அதனால்தான் போத்தியால் அழகிய நம்பியா பிள்ளையை வெற்றி பெற்றவராக நினைக்க முடிந்திருக்கிறது. அதுதான் உண்மையில் போத்தி புகுந்து கொண்ட இருள் சூழ்ந்த சிறை.
சமூக மனிதனாக மட்டும் எண்ணிக் கொள்ளும் எல்லாரும் நீதி, நியாயம் எல்லாவற்றையும் அப்படித்தான் நினைக்க முடிகிறது. போத்தியின் அளவுகோலைதான் எல்லாரும் கையில் வைத்திருக்கின்றனர். அழகிய நம்பியா பிள்ளையின் வாழ்க்கை அவரைத் தவிர யாருக்கும் தெரியாது. பலிக்கல் என்பதை சமூகம் தீர்மானித்து விட முடியாது. நம் ஆன்மா முடிவு செய்ய வேண்டும். ஆன்மாவின் கதவு சாத்தப்படும் போது. இருள் சூழ்கிறது. போத்தி சிக்கிக் கொண்ட சிறையை விட அவரது ஆன்மா சிக்கிக் கொண்ட சிறைதான் முக்கியமாகப் படுகிறது. போத்தியின் உருவ அமைப்பை கதை விவரிக்கும் போது அவர் மனதின் விசித்திரங்களை உணர முடிந்தது. ஒவ்வொரு முறை போத்தி தன் கைகள் இரண்டையும் தன் தொடைகளுக்குள் வைத்திருக்கிறார் . நடுங்கியபடி ஜன்னலைப் பார்த்தவாறே அமர்ந்திருக்கிறார். “ஏண்டா குருவி எல்லாம் உள்ள வருதே ? பூட்டிவைன்னு சொன்னா அவன் கேக்குறதில்லை..” எனத் திரும்பத் திரும்பச் சொல்வது கதை சொல்லும் உச்ச அனுபவத்திற்கு இழுத்துச் செல்கிறது. இறுதியில் சண்முகலிங்கம் போத்தியின் முன் குப்புற விழுந்து அழுகிறார். அழகிய நம்பியா பிள்ளையின் உண்மையான வாழ்க்கை போத்தியின் ஆழ்மனதினை தட்டித் திறக்கிறது.
ஜன்னல் வழியாக பறந்து வந்த குருவியின் குரல் ” சரி விடுடா..ரெண்டுபேருமே சின்னப்பசங்க. நமக்கு எல்லாருமே ஒண்ணுதான்” என போத்தியின் வழியாக வந்து விழும் போது கதை மேலெழுந்து பறக்க ஆரம்பிக்கிறது. கதை கொடுக்கும் நிகர் அனுபவம் திகைப்பில் வைக்கிறது. அப்பாவை ஜான் கட்டிலில் படுக்கவைத்து போர்த்தி விட்டான். அவர் மார்பின்மேல் கையை கோத்து வைத்து வாய் திறந்திருக்க தூங்கிக்கொண்டிருந்தார். என வாசிக்கும் போது அதுவரை தொடைகளுக்கு அடியில் அழுத்திப் பிடித்திருக்கும் கைகள் மார்பின் மேல் வருகிறது. இப்போதுதான் போத்தி விடுதலை அடைகிறார்.
போத்தியின் ஆன்மீக விடுதலை நிறைவினை கொடுக்கிற அதே வேளையில் நீதி, நியாயம் குறித்த கேள்விகள் மறுபடியும் எழுகிறது. கதையின் சொல்லப்படாத பகுதிகளை கற்பனை செய்து பார்க்கிறேன். போத்தி தன்னை அழகிய நம்பியா பிள்ளையாக கற்பனை செய்யத் துவங்குவது சிறைக்குச் செல்வதற்கு முன்பாகவேத் துவங்கியிருக்குமா? கொஞ்சம் கொஞ்சமாக கோயில் நகைகளையும், சிலைகளையும் அழகிய நம்பியா பிள்ளை திருடிக் கொண்டிருக்கிறார் என்பது போத்திக்கு தெரிந்திருக்கும். போத்தி அதை யாரிடமும் சொல்லவில்லையா?. அதில் அவருடையப் பங்கு இல்லை என்றாலும். மனதிற்குள் அனுமதித்திருக்கிறாரா? தன்னால் முடியவில்லை ஆனால் அப்படி திருடுவது தப்பு இல்லை என நினைத்திருக்கிறாரா? எந்த விசை நேரடியான வாழ்க்கையில் அவருக்கு அவ்வளவு பெரிய வீழ்ச்சியைக் கொடுத்தது ? ஏன் கொடுத்தது ? அதில் அவரது பங்கு என்ன ? சிறு உமி அளவு கூட தவறின் எண்ணம் இல்லாத ஒருவரை பலிக்கல்லை நோக்கித்தான் தள்ளூம் என்றால் தர்மம் என்பதில் நீதி, நியாயம் என்பதின் அர்த்தம் என்ன? அதில் இறையின் பங்கு என்ன? என விரித்துக் கொண்டே செல்கிறேன் ?
பா.கின்ஸ்லின்
***