‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–58

பகுதி ஆறு : படைப்புல் – 2

தந்தையே, பேரரசி கிருஷ்ணையின் ஆணைப்படி மிக விரைவில் ஓர் அணி ஊர்வலம் ஒருங்கமைக்கப்பட்டது. அரண்மனையில் இருந்து அணிச்சேடியர் அனைவரும் அழைத்து வரப்பட்டு விரைந்து அணிகொள்ளச் செய்யப்பட்டனர். யானைகள் முகபடாமும் பட்டமும் அணிவிக்கப்பட்டு ஒருக்கப்பட்டன. குதிரைகள் கவசம் பூண்டன. இசைச்சூதர்களும் அந்தணர்களும் நிரைவகுத்தனர். அனைத்தையும் பூர்ணநமாம்ஷுவும் நானும் சேர்ந்து ஒருங்கிணைத்தோம்.

முதலில் அனைவரும் எங்கள் ஆணைகளால் திகைத்தனர். என்ன செய்வதென்றறியாது குழம்பினர். ஆனால் மிக விரைவில் அவர்கள் அதில் அமைந்தனர். அது அவர்களுக்கு ஒவ்வொன்றும் அதன் பழைய நிலையிலேயே இருக்கிறது என்ற உறுதிப்பாட்டை அளித்தது. அனைத்தும் நிலைமீள்கிறது என்ற செய்தியை கொடுத்தது. ஒவ்வொருவரும் அதை பற்றிக்கொண்டு மீண்டு வந்தனர். அவர்களின் முகங்கள் தெளிந்தன. சிரித்தனர், கூவினர், ஒருவரை ஒருவர் அழைத்துக்கொண்டனர். கண்ணெதிரிலேயே களமுற்றத்தில் அணி ஊர்வலம் ஒருங்கி நின்றது. அனைத்து முகங்களும் மலர்ந்திருந்தன.

அணியெழுகைக்கான முரசுகள் முழங்கின. கொம்பொலிகள் எழுந்தன. அணிநிரை அசைவு கொண்டது. அரண்மனையின் உப்பரிகையில் முழுதணிக்கோலத்தில் பேரரசி கிருஷ்ணை தோன்றியதுமே அனைவரும் மேலே பார்த்து “எழுகதிர் வாழ்க! தலைநூறுகொண்டோன் மகள் வாழ்க! அஸ்தினபுரியின் அரசி வாழ்க! துவாரகையின் பேரரசி வாழ்க!” என்று வெறிகொண்டு கூச்சலிட்டனர். ஒளிர்முடி சூடி, மின்னும் பொற்பட்டாடைகள் அணிந்து, உடலெங்கும் அருமணி நகைகள் சுடர்விட அங்கு நின்றிருந்த கிருஷ்ணையும் இளங்கதிர் என்றே தோன்றினார்.

உப்பரிகையில் இருந்து படிகளில் இறங்கி கைகூப்பியபடி அவர் வந்துநின்றபோது அமைச்சர் சுகிர்தர் சென்று வணங்கி “அரசி, தங்களுக்குரிய பல்லக்கு ஒருங்கியிருக்கிறது” என்றார். “வேண்டியதில்லை, பட்டத்து யானை வரட்டும்” என்றார் கிருஷ்ணை. முன்செலவுக்காக பட்டத்து யானையை ஒருக்கியிருந்தனர். முகபடாமும் பட்டுப் புறச்சீலையும் அருமணி மின்னும் நகைகளும் அணிந்து நின்றிருந்த பெருங்களிறான மகாரதம் அசைந்து வந்து நின்றது. அரசி கிருஷ்ணை அதன்மேல் ஏறி நாற்புறமும் திறந்த அம்பாரியில் கையில் செங்கோலுடனும் மணிமுடியுடனும் அமர்ந்தார்.

அணி ஊர்வலம் அரசமுற்றத்திலிருந்து கிளம்பி நகரத்தெருக்களூடாக சென்றது. நகரத்தெருக்கள் முழுக்க நெரிந்து தோளோடு தோள்முட்டி மோதி சரிந்து விழுந்து எழுந்து தவித்துக்கொண்டிருந்த கூட்டம் வேல் சுழற்றி முரசறைந்து கூச்சலிட்ட படைவீரர்களால் பிளந்து விலக்கப்பட்டது. அந்த இடைவெளியில்தான் அணியூர்வலம் முன்னால் சென்றது. முதலில் அது என்னவென்றே எவருக்கும் புரியவில்லை. அதை கண்டவர்கள் முதலில் திகைத்தனர். பின்னர் சொல்லிழந்து வாய்பிளந்து சுவரோரங்களில் ஒண்டினர்.

வீட்டு முகப்புகளில், அங்காடி முகப்புகளில் நின்று மக்கள் அதை பார்த்தனர். அணியூர்வலத்தின் முரசொலி அருகில் இருந்த காவல்மாடங்களில் இருந்து பெருகி மேலெழுந்தது. அதுவரை ஆணைகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்து பதறிக்கொண்டிருந்த காவல்மாடங்கள் அனைத்திலும் இருந்து மங்கலப் பேரொலி எழத் தொடங்கியது. அது தன்னைத்தானே பெருக்கிக்கொண்டது. முரசறைவோர் உடல் வியர்த்துவழிய வெறிகொண்டவர்களாக மங்கல இசை எழுப்புவதை கண்டேன். அவர்கள் உடலில் தெய்வம் எழுந்ததெனத் தோன்றியது. பலர் கண்ணீர்விட்டுக்கொண்டும் கூச்சலிட்டுக்கொண்டும் வெறியுடன் நகைத்தபடியும் முரசறைந்தனர். மின்னும் வியர்வையை அவர்கள் உடலில் காணமுடிந்தது.

முரசுகளிலிருந்து முரசுகளுக்கென மங்கல இசை பரவியது. சூழ்ந்திருந்த பெரு நிலத்திலிருந்து எதிரொலித்து திரும்பி வந்தது. துவாரகை மேல் அது படிந்தது. மங்கல இசை எத்தனை நினைவுகளை மீட்டுகிறது என்று நான் வியந்து நோக்கினேன். இந்நகர் பொலிந்த நாட்கள். பெருவிழவுகள், களியாட்டுகள். இதன் தலைவன் என்று மணிமுடி சூடி நீங்கள் அமர்ந்திருந்த கோலம். தந்தையே, மொத்த நகரும் மெல்ல அமைவதை கண்டேன். ஆங்காங்கே மக்கள் அசைவிழந்து நின்றனர். முதலில் பெருங்கூட்டம் எழுப்பிய முழக்கத்திற்குள் தனி அதிர்வென ஒலித்துக்கொண்டிருந்த மங்கல இசை மெல்ல மெல்ல வலுத்தது. பின்னர் அது மட்டுமே ஒலித்தது.

நகரின் அனைத்து அரண்மனைகளின் உப்பரிகைகளிலும் ஏவலர்கள் வந்து நின்றனர். பின்னர் அரசமைந்தர் பிரத்யும்னனும் சாம்பனும் ஃபானுவும் இளையோரும் கூட வந்து உப்பரிகையில் நின்று கீழே பார்த்தனர். கிருதவர்மனும் சாத்யகியும் தங்கள் மாளிகையில் இருந்து நோக்கினர். நகரினூடாக அந்தி ஒளியில் மின்னியபடி அரசி செல்வதை நான் என் உப்பரிகையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அரசி செல்லும் வழியெங்கும் மக்கள்திரள் நாவாய்க்குப் பின் நீளலை எழுவதுபோல் விரிந்து கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் துவாரகை முற்றாகவே நிலைமீண்டது. பேரரசி கிருஷ்ணை துர்க்கை ஆலயம் வரை சென்று இறங்கினார். அங்கு வழக்கமான பூசனைகளை முடித்து மீண்டும் பல்லக்கில் ஏறி நகருக்குள் நுழைந்தார். ஒருகணம் எங்கோ ஓர் உடைவென ஒரு வாழ்த்தொலி எழுந்தது. பின்னர் முழு நகரமுமே வாழ்த்தொலியால் மூடியது. “அன்னை! அன்னை!” என்று கூத்தாடினர் மக்கள். “எழுக கிருஷ்ணை! இளங்கதிர்போல் எழுக எங்கள் அரசி!” சிலர் அழுதனர். சிலர் கைவீசி கூவினர். குழந்தைகளை தலைக்குமேல் தூக்கிக் காட்டினர்.

நான் மெய்ப்பு கொண்டேன். தந்தையே, பெண் வடிவில் பீலிசூடி நீங்களே அங்கு எழுந்தருளியதென உணர்ந்தேன். கைகூப்பி கண்ணீர் மல்கி அங்கு நின்றேன். அரசி நகரினூடாக நிறைந்து ஒழுகி வந்தார். அரண்மனையை அவர் நெருங்கும்போது பழைய துவாரகை எழுந்திருந்தது. நான் திரும்பிப்பார்த்தபோது எல்லா உப்பரிகைகளிலும் துவாரகையின் அரசமைந்தர் நின்றிருப்பதை கண்டேன். ஃபானுவும் பிரத்யும்னனும் அங்கே நின்றிருந்தனர். பிரகோஷனும் சுருதனும் விருகனும் வீராவும் சங்க்ரமஜித்தும் என அனைவரும் ஒரே முகமும் உணர்வும் கொண்டிருந்தனர்.

 

கிருஷ்ணையின் அவைக்குச் செல்லும்படி எங்களுக்கு அழைப்பு வந்தது. பூர்ணநமாம்ஷுவும் நானும் அங்கே சென்றபோது அமைச்சர்களையும் படைத்தலைவர்களையும் அரசி அங்கே வரச்சொல்லியிருந்தார். பூர்ணநமாம்ஷு வணங்கியதும் “இப்போதே செய்யவேண்டியவற்றைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். நகரிலிருந்து எட்டு மூத்த அரசியரும் அகன்று சென்றாகவேண்டும்” என்றார். சுமித்ரன் “இது பெரிய முடிவு. நாம் எடுக்க முடியாது” என்றார். “அவர்கள் எடுக்கலாம், அவர்கள் எடுக்கவேண்டிய முடிவு இது என அவர்களிடம் தெரிவிக்கவேண்டும் நாம்” என்று கிருஷ்ணை சொன்னார். “இம்முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்பதை நாம் அரச மைந்தர்களுக்கு பின்னர் விளக்கலாம். நமக்கு பொழுது இல்லை.”

“ஏன்? ஒவ்வொன்றும் நிலைமீண்டு கொண்டிருக்கின்றன” என்று சுமித்ரன் சொன்னார். கிருஷ்ணை சீரான குரலில் “இல்லை, நகரில் ஏதேனும் பெரிய அழிவு தொடரக்கூடும் என்று அறிந்தோர் சொல்கிறார்கள். நிலநடுக்கம் என்பது ஓர் அறிவிப்புதான். தொடர்வது என்ன என்று நாம் பார்க்கவேண்டும். இப்போது நாம் செய்தது மக்களின் அச்சத்தை போக்குவதை மட்டுமே. அவர்கள் அஞ்சி கலைந்திருந்தால் நாம் செய்யக்கூடுவன ஒன்றுமில்லை. ஆனால் மக்களையும் நாம் அச்சுறுத்தாமல் சீராக இந்நகரிலிருந்து அகற்றவேண்டும்” என்றார்.

“நிமித்திகர்கள்…” என சுமித்ரன் ஏதோ சொல்ல கையமர்த்தி “நான் பேசுவது நிமித்திகர் கூற்றைப் பற்றி அல்ல. சிற்பிகள்கூட இப்போது சொல்ல ஏதுமில்லை. இப்போது சீற்றம்கொண்டிருப்பது கடல். கடலை அறிந்தவர்கள் கடலோடிகள். முதிய கடலோடிகள் எழுவரை நான் அழைத்துவரச் சொன்னேன். அவர்கள் எண்ணுவதை கேட்டேன். இந்த நிலஅதிர்வு கடலுக்குள் இருந்து வந்திருக்கிறது என்று அவர்கள் சொன்னார்கள். ஆகவேதான் நிலம் நடுங்கியபோது அலைகள் பெரிதாக எழவில்லை. ஆகவே இது முழுமையாகவே கடல்சார் நிகழ்வு” என்றார்.

“அவர்கள் சில குறிகளை தேர்ந்து சொன்னார்கள். கடல் உள்வாங்கியிருக்கிறது. திறந்த வாய்க்குள் நாக்கு உள்வளைவது போன்றது அது. வாய் விழுங்க வருகிறதென்றே பொருள். நகரிலிருந்து அத்தனை காகங்களும் பறவைகளும் அகன்றுவிட்டன. அதைவிட கடலோரத்தில் கடற்காகங்கள் ஒன்றுகூட இல்லை. கடலில் இருந்து எதுவோ வரவிருக்கிறது. எதுவென்று சொல்ல எவராலும் முடியாது. அது இங்கு வராமல் திசைமாறிப் போகலாம். ஒன்றும் நிகழாமலும் போகலாம். ஆனால் இது எச்சரிக்கை. நாம் அதற்கு ஒருங்கவேண்டும்.”

சுமித்ரன் “நான் அரசியரிடம் என்ன சொல்ல?” என்றார். “விளக்கவேண்டாம். என் சொல் என்று மட்டுமே சொல்க! அவர்கள் எவரும் மீறப்போவதில்லை” என்று கிருஷ்ணை சொன்னார். “அத்தனை அரசியரும் அவர்களின் பிறந்த நிலத்திற்கு செல்லட்டும். நாம் அறிவிக்கும் வரை அவர்கள் அங்கே இருக்கட்டும். ஆனால் அவர்கள் செல்வது எவருக்கும் தெரியலாகாது. இன்று மாலைக்குள் அவர்கள் படகுகள் மூலமாக சென்றுவிடவேண்டும். ஆனால் கடலில் நெடுந்தொலைவு செல்லக்கூடாது. துவாரகையின் எல்லைக்கு அருகே இருக்கும் இறுதி படகுத்துறைவரை படகில் சென்றால் போதும். மிஞ்சிப்போனால் இரண்டு நாழிகைப் பொழுது ஆகும். அங்கே கரையேறி கரைவழியாக சிந்துவை அடைந்து அங்கிருந்து மீண்டும் படகில் சிந்துவின் வழியாக செல்லட்டும்.”

“கடலில் இருப்பது உகந்தது அல்ல. ஆனால் நகர்ச்சாலைகள் அனைத்தும் மக்களால் நிறைந்துள்ளன. நகரின் எல்லைகளில் மக்கள் நெரிபடுகிறார்கள். அவர்கள் அறிய கடந்துசெல்ல முடியாது. அறிவது நன்றும் அல்ல. துறைமேடைகள் ஒழிந்து கிடக்கின்றன. அவர்கள் உடனே கிளம்பவேண்டும்… எந்த மரபுகளும் முறைமைகளும் பேணப்பட வேண்டியதில்லை. எத்தனை விரைவாக கிளம்பமுடியுமோ அத்தனை விரைவாக கிளம்பவேண்டும்” என்று கிருஷ்ணை சொன்னார்.

சகஸ்ரஜித் “ஆனால் அரசியர் கிளம்புவது எளிதல்ல. அவர்கள் கிளம்புவதற்கு முன்னர் செய்யவேண்டியவை என பல உள்ளன. அவர்கள் எந்தெந்தப் பொருட்களை எடுத்துக்கொள்வது என்பதை முடிவெடுக்கவே நெடும்பொழுதாகும். ஒவ்வொரு அரசியுடனும் ஓரிரு மூத்த சேடியர் உள்ளனர். அனைத்து முடிவுகளையும் அவர்களே எடுப்பார்கள். தங்கள் மூப்பை காட்டும்பொருட்டு புதிய இடர்களை உருவாக்குவார்கள்” என்றார்.

கிருஷ்ணை “எனில் என் ஆணையை நான் ஏட்டில் அளிக்கிறேன். இன்னும் ஒரு நாழிகைக்குள் அரசியர் அனைவரும் படகுகளில் ஏறிக்கொள்ளவேண்டும். அதற்கு மாற்றோ தடையோ உரைக்கும் எவரும் அக்கணமே தலைவெட்டி வீழ்த்தப்படவேண்டும்… ஒரு நாழிகைக்கு மேல் எந்த அரசியாவது அரண்மனையில் இருந்தால் அந்த அரசியின் தலைமைச் சேடியர் அனைவரும் அங்கேயே கொல்லப்படவேண்டும்” என்றார்.

நான் நடுங்கிவிட்டேன். அப்போது அவரைப் பார்க்க கொற்றவை போலிருந்தார். அனைவருமே நடுங்கிவிட்டனர். அமைச்சர்களின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. “எட்டு அரசியரிலும் எவரேனும் மறுப்போ தயக்கமோ காட்டினால் அவர்களை சிறைப்பிடித்து கட்டி படகுக்கு கொண்டு செல்க! எழுதுங்கள் ஆணையை” என்றார் கிருஷ்ணை. திருவெழுத்தனின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. அவனால் எழுத முடியவில்லை. கிருஷ்ணை எழுந்து கொண்டு “நான் ஒற்றர்களை சந்திக்கவேண்டும்… ஃபானுவுக்கும் பிறருக்கும் ஓலைகளை கூறியிருக்கிறேன். அவை உடனே செல்லட்டும்” என்றார்.

அவர் சென்றதும் ஒவ்வொருவரும் பரபரத்தனர். ஓலைகள் எழுதப்பட்டன. அங்கே நின்ற மூத்த கடலோடியிடம் “நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?” என்றேன். “ஆழிப்பேரலை ஒன்று…” என்றார். “நான் அதை பார்த்ததில்லை. என் தந்தையோ பாட்டனோ பார்த்ததில்லை. ஆனால் அனைவரும் அதை சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதைப் பற்றிய எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.” பிறர் எவரும் அவர் சொற்களில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் நான் எச்சரிக்கை அடைந்தேன். அவரை கூர்ந்து நோக்கினேன். “அலைகள் என்பவை கடலோரமாக எழுபவை. கடலுக்கு மேலே எழுபவை. ஆழத்தில் இருந்து எழும் பேரலை இது.”

“கடலின் ஆழத்தில் வருணன் பேருருவனாக துயில்கிறான். மாமலைகள் கூழாங்கற்களாகத் தோன்றும் அளவு பேருரு அவனுடையது. அவன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை புரண்டு படுக்கிறான். அது எப்போது என்று நம்மால் கணிக்க முடியாது. ஆனால் அவனுடைய அசைவால் கடலில் ஓர் அலை எழுகிறது. அலைகள் அல்ல, ஒற்றை அலை. அது நீராலான மலைபோல் கரை நோக்கி வரும் என்கிறார்கள். சேடனின் படம்போல் இருக்கும் என்கிறார்கள்.” நான் “அது அணுகிக்கொண்டிருக்கிறது என்கிறீர்களா?” என்றேன். “என்னால் சொல்லக்கூடவில்லை. ஆனால் அறிகுறிகள் உள்ளன” என்றார்.

ஓலைகளுடன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு ஓடினார்கள். எனக்கான பணி கிருதவர்மனை சந்திப்பது. நான் ஓலையுடன் மையஅரண்மனையின் முகப்பிலிருந்து புரவியில் அவருடைய அரண்மனைக்கு சென்றேன். அங்கே சாத்யகியும் இருந்தார். அவர்கள் ஒரே அறையில் நாற்களம் ஆடிக்கொண்டிருந்தனர். ஆனால் அருகணைந்ததும் தெரிந்தது, அவர்கள் விளையாடவில்லை. நாற்களப் பலகைக்கு இருபுறமும் அமர்ந்திருந்தார்கள். கைகள் செயலற்றிருந்தன. என் வருகையை ஏவலன் அறிவித்ததும் சாத்யகி வெறுமனே அணுகச்சொல்லி கைகாட்டினார். நான் அணுகினேன்.

என் ஓலையை பார்த்ததும் சாத்யகி “என்ன நிகழ்கிறது? முழுப் பொறுப்பையும் துரியோதனனின் மகள் எடுத்துக்கொண்டதுபோல் உள்ளதே?” என்றார். “அது நன்று… அவ்வாறே நிகழட்டும். அவர் ஆணைத்திறன் கொண்டவர்” என்ற கிருதவர்மன் ஓலையை படித்த பின் “தீங்கு எதையோ எதிர்பார்க்கிறார் அரசி” என்றார். “அவர் கடலோடிகளிடம் உசாவியிருக்கிறார்” என்று நான் சொன்னேன். சாத்யகி “ஆணையின்படி என் படைகளை சீராக அணிவகுத்து பாலைக்குள் செல்ல வைக்கிறேன் என்று அரசியிடம் கூறுக!” என்றார்.

நான் திரும்பி வந்தபோது விஜயனும் சித்ரகேதுவும் வந்தனர். “எட்டு அரசியரையும் படகில் ஏற்றிவிட்டோம்… படகு இன்னும் சற்றுநேரத்தில் கிளம்பிவிடும்” என்றார் விஜயன். “எவரேனும் ஏதேனும் சொன்னார்களா?” என்றேன். “அதுதான் விந்தை, எவருமே எந்த மாற்றுச்சொல்லுமே உரைக்கவில்லை. ஆனால் எதிர்பார்த்ததுபோல மூத்த சேடிகள் ஒருநாள் பொழுதேனும் அளிக்காமல் முடியாது என்று பேசத்தொடங்கினர். அரசியின் ஓலையைக் காட்டிய மறுகணமே எலிகளைப்போல சிதறி ஓடினர்.”

ஃபானுவிடமிருந்து அழைப்பு என்று சந்திரஃபானு வந்து மூத்தவர் பூர்ணநமாம்ஷுவிடம் சொன்னார். வருகிறேன் என்று சந்திரஃபானுவை அனுப்பிவிட்டு “என்ன நிகழ்கிறது?” என்று அவர் என்னிடம் கேட்டார். “பெரும்பாலும் அரசி கிருஷ்ணையின் ஆணைகளைப் பற்றிய தன் நிறைவின்மையையே அரசர் நம்மிடம் சொல்வார். இன்று நகரம் இயல்பாக அரசியின் கைகளுக்கு சென்றுவிட்டது.” பூர்ணநமாம்ஷு “இவர் முடிவெடுக்காமல் இருந்தால் அவ்வாறுதான் ஆகும்” என்றார். “அதைத்தான் நம்மிடம் சொல்வார், எண்ணிச் சூழ்ந்து அவர் முடிவெடுக்கவிருக்கையில் முந்திக்கொண்டு முடிவுகள் எடுத்து அரசி கிருஷ்ணை என்னென்ன சிக்கல்களை உருவாக்கியிருக்கிறார் என்று” என்றேன்.

நாங்கள் ஃபானுவின் அவைக்கு சென்றோம். அங்கே நிகழ்ந்துகொண்டிருப்பது என்ன என்று எனக்கு புரியவில்லை. எப்போதும் ஃபானுவுடன் இருந்துகொண்டிருக்கும் சுஃபானுவை அங்கே காணவில்லை. பிரத்யும்னனின் இளையவர்கள் அங்கே இருந்தனர். ஃபானு எங்களைக் கண்டதுமே “எந்த உரிமையின்படி அரசி கிருஷ்ணையின் ஆணைகள் நிறைவேற்றப்பட்டன? ஓலைகள் கொண்டுசென்ற ஒவ்வொருவரும் அதற்கு பொறுப்பு” என்று கூவினார். பூர்ணநமாம்ஷு “அரசே, நாங்கள் கொண்டுசென்றது ஆணை ஓலைகளை அல்ல, நாங்கள் அரசியருக்கான வேண்டுகோளையே கொண்டுசென்றோம்” என்றார். “உடன் சென்ற ஓலையில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று எனக்கு தெரியும். இந்த அரசில் எவரை தலைவெட்டுவது என்று அரசரன்றி எவரும் முடிவெடுக்க இயலாது” என்று ஃபானு சொன்னார்.

நான் “அரசே…” என்றேன். ஃபானு என்னை பார்த்தார். “நாங்கள் கொண்டுசென்ற ஓலை தங்கள் ஆணையென்றே இப்போது கொள்ளப்படும். அந்த எண்ணத்தை தாங்களே இல்லாமலாக்க வேண்டியதில்லை” என்றேன். அவர் திடுக்கிட்டு என்னை பார்த்தார். நான் சொன்னதன் பொருள் புரிந்தவராக “ம்ம்ம்” என்று உறுமினார். “நான் ஆணையிடுவதற்குரிய தருணம் வரும். ஆணை என்னவென்று எனக்கும் தெரியும்… இடர்ப்பொழுதை பயன்படுத்திக்கொண்டு எவரும் ஆள எண்ணவேண்டாம்” என்றார். நான் தலைவணங்கினேன். “செல்க!” என்றார். நாங்கள் வெளியேறினோம்.

எங்களுடன் வந்த ஃபானுமான் “இங்கே பூசல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது” என்றான். “அவந்தியின் எல்லையிலிருந்து ருக்மி வந்துகொண்டிருக்கிறார். அவர் வந்த பின்னர்தான் சுஃபானுவுக்கும் சுதேஷ்ணனுக்கும் இடையேயான உறவு என்ன என்பது தெரியவரும்” என்றார். எனக்கு திகைப்பாக இருந்தது. “என்ன உறவு?” என்று கேட்டேன். “அவர்கள் ஏதோ திட்டமிட்டதாக மூத்தவர் எண்ணுகிறார்” என்றான் ஃபானுமான். எங்களுடன் வந்து சேர்ந்துகொண்ட தர்ஷனிடம் மூத்தவர் “எங்கே சென்றாய்?” என்றார். தர்ஷன் “விதர்ப்பராகிய ருக்மி இங்கே வந்துகொண்டிருப்பதாக செய்தி வந்தது. வரவேண்டியதில்லை, இந்நகரை ஒழிந்துகொண்டிருக்கிறோம் என்று செய்தி அனுப்பும்படி அரசியின் ஆணை” என்றார்.

ஃபானுமான் திகைத்துவிட்டான். “அரசர் ருக்மியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்றான். “ஆம், அறிவேன். ஆனால் இந்நகரை பல சிறுபகுதிகளாக பிரித்து மக்களை சீராக வெளியேற்றும்படி அரசி ஆணையிட்டிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் அதற்கான பொறுப்புகளை பகிர்ந்து அளித்துக்கொண்டிருக்கிறார்” என்றார். “அரசியின் செய்தி ருக்மிக்கு சென்றுவிட்டதா?” என்று ஃபானுமான் கேட்டான். “ஆம், அது சென்று சற்றுநேரமாகிறது” என்று தர்ஷன் சொன்னார். ஃபானுமான் “மூத்தவரிடம் சொல்லவேண்டும்” என்று கூறிவிட்டு திரும்பி ஓடினான்.

நாங்கள் அரசியின் அரண்மனை நோக்கி சென்றோம். நான் சூழ்ந்திருக்கும் காற்றுவெளியை பார்த்துக்கொண்டே நடந்தேன். ஒரு கொடிகூட அசையவில்லை. ஒரு இலையில்கூட அசைவில்லை. புழுதியில்கூட அசைவில்லை. வழக்கமாக நகரில் எப்பொழுதும் காற்று சீறிக்கொண்டிருக்கும். ஆகவே அங்கு கொசுக்களோ சிறு பூச்சிகளோ இருப்பதில்லை. அங்கு வீசும் காற்றில் உடைகளும் தலைகளும் பறக்க நின்று பழகியவர்கள் நாங்கள் அனைவரும். அவ்வண்ணம் ஒரு அசைவிலா நிலை நினைவறிந்த ஒரு நாளும் வந்ததில்லை.

நகரில் கட்டுண்டிருக்காத அத்தனை விலங்குகளும் விலகிச்சென்றுவிட்டிருந்தன. யானைகள் கட்டுக்கயிற்றை இழுத்து சுற்றி வந்தன. புரவிகள் நிலையழிந்து காலை உதைத்து வாலை சுழற்றிக்கொண்டிருந்தன. கட்டுகளில்லாத புரவிகள் அனைத்தும் அனைவரையும் உதைத்தும் கடித்தும் விலக்கி வெறிகொண்டவைபோல் பல்லிளித்தபடி நகரிலிருந்து கடலுக்கு மறுபக்கமாக சென்றுகொண்டிருந்தன. உப்பரிகையிலிருந்து பார்த்தபோது நுற்றுக்கணக்கான புரவிகள் வடகிழக்கு வாயிலை நோக்கி திரண்டு செல்வதை கண்டேன். அவை தெருக்களில் நிறைந்திருந்த கூட்டத்தை முட்டி பிளந்து சென்றன. அந்த கலைந்த உணர்வுநிலையில் அவ்வாறு புரவிகள் தங்களை முட்டி விலகி நகரிலிருந்து அகன்று செல்வதை எவரும் அறியவில்லை.

அதைவிட நகருக்கு மேல் ஒரு பறவை கூட இல்லை. பல கோடி பறவைகளால் சூழப்பட்டது துவாரகை. துவாரகையின் அனைத்துப் பாறைகளிலும் அவற்றின் எச்சம் வில்லையாக வழிந்திருக்கும். முதல் மழையில் சுண்ணப்பெருக்கென கரைந்து வழியும். நகரிலுள்ள அனைத்துச் செடிக்கும் நல்லுணவாக ஆவது அந்த வெண்மை. தலைக்குமேல் அலையோசைக்கு நிகராக நிறைந்திருக்கும் வானத்தின் ஓசை என்றும் அதை சூதர் சொல்வதுண்டு. அன்று ஒரு சிறகசைவு கூட தென்படவில்லை என்பது என்னை அச்சமுறச் செய்தது.

அச்சத்துடன் சாளரம் வழியாகச் சென்று கடலை பார்த்தேன். முதற்கணம் எனக்கு அங்கே ஒரு கடல் இருந்ததே எங்கே என்ற திகைப்புதான் ஏற்பட்டது. பின்னர்தான் கடலின் எல்லை மிகத் தொலைவில் துறைமேடைக்கு அருகே சென்றிருப்பதை கண்டேன். அங்கே நின்றிருந்த பீதர் நாட்டுப் பெருங்கலம் அலைவிலாதிருந்தது. அதன் கொடிகள் அனைத்தும் துவண்டு கிடந்தன. நகரின் ஓசைகள் அனைத்தும் உருமாறிக்கொண்டிருந்தன. என் அச்சத்தை மூத்தவர் பகிர்ந்துகொள்ளவில்லை. “அரசி ஆட்சியை கைக்கொள்வதை ஃபானு ஒப்புக்கொள்ள மாட்டார். இப்போது பூசல் அவர்களிடையேதான் எழும் என நினைக்கிறேன்” என்றார்.

நாங்கள் மடப்பள்ளிக்குச் சென்று உணவுண்டு அரசி கிருஷ்ணையின் அவைக்கு சென்றோம். செல்லும் வழியிலேயே ஸ்ரீகரர் எங்களை எதிர்கொண்டு “என்ன நடக்கிறது? நகரிலிருந்து மக்களை எல்லா வழிகள் வழியாகவும் பகுதி பகுதியாக வெளியே கொண்டுசெல்லும் திட்டம் ஒன்றை வகுக்க அரசி சொன்னார். நான் வகுத்த திட்டப்படி ஆணைகள் விடப்பட்டன. ஆனால் ஆணைகளுடன் படைகள் நகரில் இறங்குவதற்குள் அனைத்து ஆணைகளையும் நிறுத்திவைக்க வேண்டும் என்று மூத்தவர் ஃபானு ஆணையிட்டிருக்கிறார். அனைவரும் திரும்பி வந்திருக்கின்றனர்” என்றார்.

மூத்தவர் “நான் அதை எதிர்பார்த்தேன்… அரசி மூத்தவரிடம் சென்று பேசவேண்டும்” என்றார். “என்ன பேசுவது? பேசிப் புரியவைத்து செயல்படவேண்டிய நேரமா இது? நமக்கு பொழுதில்லை. மிஞ்சிப்போனால் நாலைந்து நாழிகை நமக்கு கிடைக்கும் என்கின்றனர் கடலோடிகள்…” என்றார் ஸ்ரீகரர். “அமைச்சரே, நீங்கள் வாருங்கள். என்ன நிகழ்கிறது என்று நாம் மூத்தவர் ஃபானுவுக்கு விளக்குவோம். இனி ஓலைகள் எல்லாம் மூத்தவரின் பெயராலேயே வெளியிடப்படும் என்று அரசியிடமிருந்து ஓர் ஓலையைப் பெற்று அதை ஃபானுவிடம் அளிப்போம். அவர் ஒரு தலையசைப்பை அளித்தால் போதும், பணிகளை தொடங்கிவிடலாம்” என்றார் பூர்ணநமாம்ஷு.

நாங்கள் கிருஷ்ணையின் அவை நோக்கி கிட்டத்தட்ட ஓடினோம். ஸ்ரீகரர் “என்ன நிகழ்கிறது என்றே எனக்கு புரியவில்லை. செய்தி கேட்டு சாம்பன் உடனே தன் படைகளைத் திரட்டி ஃபானுவின் படைகளுடன் மோதவிருப்பதாக கூச்சலிடுகிறார். அவர் ஆணைகளை தனியாக பிறப்பிக்கிறார். அவர் எந்த ஆணையை இட்டாலும் அதை நிறைவேற்றவேண்டியதில்லை என்று சொல்லிவிட்டு வந்தேன்” என்றார். பூர்ணநமாம்ஷு “அது நன்று” என்றார். “ஆனால் அவருக்கு ஓர் அமைச்சர் இருக்கிறார், வக்ரர். தனக்கு மேல்கோன்மை வருவதற்காக சாம்பனை தன் கைப்பாவை என கையாள்பவர். அவர் எதை வேண்டுமென்றாலும் செய்யக்கூடும்.”

நாங்கள் கிருஷ்ணையின் அரசவைக்குச் சென்றபோது வாயிலிலேயே மறிக்கப்பட்டோம். காவலர்தலைவன் நான் அறியாதவன். அவன் “அரசியை சந்திக்க எவருக்கும் ஒப்புதல் இல்லை. அரசர் ஃபானுவின் ஆணையின்படி சாம்பனும் அவர் துணைவி கிருஷ்ணையும் அவர்களின் அரண்மனையிலேயே சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றான். “சிறைவைப்பதா? என்ன சொல்கிறாய்?” என்று ஸ்ரீகரர் கூவினார். “அரசியின் அமைச்சன் நான்.” அவன் “ஆம் அமைச்சரே, தங்களையும் சிறைவைக்கவேண்டும் என்று ஆணை” என்றான். இரு வீரர்கள் ஸ்ரீகரரை அழைத்துச் சென்றனர்.

நானும் பூர்ணநமாம்ஷுவும் அரண்மனையின் இடைநாழியின் வழியாக ஓடினோம். ஃபானுவை சென்று பார்க்கலாம் என்றுதான் எண்ணினோம். பூர்ணநமாம்ஷு வழியிலேயே நின்று “இப்போது சென்று ஃபானுவை பார்த்தால் நாமும் சிறைப்படுவோம்” என்றார். “நாம் கிருதவர்மனையோ சாத்யகியையோ சென்று பார்ப்போம். அவர்கள் இன்றிருக்கும் நிலையினை சற்றேனும் புரிந்துகொண்டால் நன்று” என்றார். “ஆம், சாத்யகியை புரிந்துகொள்ளச் செய்ய முடியும்” என்றபடி நானும் அவருடன் ஓடினேன்.

ஆனால் கிருதவர்மன் சாத்யகி இருவருமே அவர்களின் அரண்மனையில் இல்லை. திரும்பிவரும் வழியில் பூர்ணநமாம்ஷு “நாம் பிரத்யும்னனை பார்ப்போம். இன்னும் சற்று உளத்தெளிவுடன் பேசக்கூடியவர் அவர்” என்றார். நாங்கள் அங்கே சென்றபோது வழியிலேயே படைகளால் தடுக்கப்பட்டோம். சுதேஷ்ணன் கொல்லப்பட்ட பின் அவருடைய ஆதரவுப்படைகளால் பிரத்யும்னன் தாக்கப்படலாம் என்பதனால் கடுமையான பாதுகாப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக காவலன் சொன்னான். அனிருத்தனுக்கும் பிரத்யும்னனுக்கும் பூசல் உருவாகியிருப்பதாக அவன் அருகே நின்ற காவலன் சொன்னான்.

நாங்கள் அதன் பின்னரும் அலைந்தோம். “முழு நகரையும் பாலைநிலத்திற்குள் இடம்பெயர்த்துவிட்டிருக்கலாம். அரிய பொழுது வீணாகிக்கொண்டே இருக்கிறது” என்று பூர்ணநமாம்ஷு சொன்னார். “சாத்யகியும் கிருதவர்மனும் இங்கே இருந்திருக்க வேண்டும்” என்று நான் சொன்னேன். “பொழுது சென்றுகொண்டிருக்கிறது… இந்நேரம் முழு நகரும் வெளியேறியிருக்க முடியும்” என்று பூர்ணநமாம்ஷு புலம்பினார். “நாம் இதை ஊழ் என்றே கருதவேண்டும். நாம் செய்வதற்கொன்றும் இல்லை” என்றேன்.

சோர்ந்து திரும்பும்போது நான் மீண்டும் கடலை பார்த்தேன். அங்கே அந்த பீதர் மரக்கலம் இல்லை. கடல் மிக உள்வாங்கியது. அலைகள் பின்னிழுபட்டு கடல் ஒரு பெரிய அலையாக விலகிச் செல்வதுபோல தோன்றியது. திகைப்புடன் கடலை நான் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அந்தப் பெருங்கலம் தொலைவில் ஒரு வெண்பறவை என தெரிந்தது. அலகு நீட்டி சிறகு குவித்து பாய்ந்து வருவதுபோல் முழு விசையுடன் அது வந்து துவாரகையின் துறைமேடையை முட்டுவதை பார்த்தேன்.

அதன் விசையில் நகரின் அனைத்துக் கட்டடங்களும் அதிர்ந்தன. கற்கள் பெயர்ந்து ஒன்றின்மேல் ஒன்று விழுந்தன. தீபமுகப்பு உடைய தன்னை சிதைத்துக்கொண்டு அது துறைமேடைக்குள் புகுந்து கல்மண்டபங்களை நொறுக்கி கல்மேடைகளை கலைத்து பாதி தரையிலும் மீதி நீரிலுமாக நின்றது. கட்டடங்களின் கற்கள் பெயர்ந்து ஒன்றுடன் ஒன்று விழுந்தன. அந்த அதிர்வில் நகரில் விரிசலிட்டு நின்றிருந்த பலநூறு கட்டடங்கள் விழுந்தன. நகரெங்கும் ஓலம் எழுந்தது.

தந்தையே, அதைத் தொடர்ந்து மொத்தக் கடலும் ஒற்றைப் பேரலையென மாறி திசையை நிறைத்து ஓசையே இல்லாமல் அணுகி வந்தது. கடல் வானை நோக்கி எழுந்து அசைவிலாது நின்றது போலிருந்தது. நீராலான பெருங்கோட்டை என தோன்றியது. என்ன நிகழ்கிறது என்ற எண்ணம் அற்று நான் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே ஆழித்திரை வந்து நகரை அறைந்தது. அனைத்துக் கட்டடங்களையும் அலை அறைந்து அனைத்து வாயில்கள், சாளரங்களினூடாகவும் அறைகளை நிறைத்தது. நகரில் நடுவே பீதர்கலம் உருவாக்கியிருந்த பிளவினூடாக ஆழிப்பேரலையின் நீர் உள்ளே புகுந்து துவாரகையை இரு பிளவுகளாக மாற்றியது.

முந்தைய கட்டுரைகூடு [சிறுகதை]
அடுத்த கட்டுரைபோழ்வு,முதல் ஆறு- கடிதங்கள்