நிழல்காகம்[சிறுகதை]

நித்யா சொன்னார். பல்லாயிரக்கணக்கான குழந்தைக்கதைகளிலும் சிலநூறு நீதிக்கதைகளிலும் அவ்வப்போது நவீன இலக்கியத்திலும் இடம்பெறுவதும், கன்னங்கரியதாகையால் காலவடிவென்று கருதப்படுவதும், காலமேயென்றாகிவிட்ட மூதாதையராக தோற்றம் அளிப்பதும், காலம் கடுமைகொண்ட தெய்வ வடிவமான சனீஸ்வரரின் ஊர்தியென்று வணங்கப்படுவதும், இவையனைத்துக்கும் அப்பால் பிறிதொரு சொல்லற்ற வான்வெளியில் தன்னியல்பாக பறப்பதும், இரைதேடவும் குலம்பெருக்கவும் மட்டும் மண்ணில் வந்தமர்வதும், கரைந்தும் தலைசரித்து நோக்கியும் சலிப்புற்று எழுந்து சென்றும் சிற்றடி எடுத்துவைத்து எல்லைமீறியும் நம்முடன் உறவாடுவதும், சற்றே செவிகூர்ந்தால் ஓயாத குரலோசையாக நம்மைச் சூழ்ந்திருப்பதாகத் தெரிவதுமான காகம் என்னும் பறவையைப்பற்றிய கதைகளில் இன்னும் ஒன்றுதான் இது.

இதை இன்னமும்கூட சிக்கலான சொற்றொடராக ஆக்கலாம், நான் அர்ஜெண்டினாவின் ஜோர்ஜ் லூயி போர்கெஸை அவர் பாட்டுக்கு விட்டுவிட விரும்புகிறேன். பாவம் ஏற்கனவே அவர் பைபிள் அளவுக்கே தவறாக வாசிக்கப்பட்டு, மேலும் தவறாக மேற்கோள் காட்டப்பட்டு, மேலும் தவறாக விளக்கப்பட்டு, மூலத்தையே ஒரு போலி என தோன்றச்செய்யும் அளவுக்கு மிகச்சரியாக நகலெடுக்கப்பட்டு தான் உத்தேசித்ததை அடைந்து நிறைவுபெற்று விட்டார். ஆகவே சொல்லவேண்டியதற்கு வருகிறேன்.

இது 1971. அப்போது இங்கே ஏப்ரல் குருபூஜைக்கு அசிதானந்தர் என்ற துறவி வந்திருந்தார். அசிதர் என்பது பௌத்தப் பெயர். அவர் சுத்தோதன மன்னரின் ஆசிரியரான துறவி, ஞானி. புத்தரின் பிறப்பை முன்னுணர்ந்து கூறியவர்.

கதைகளின்படி அசிதர் ஒரு காட்டில் தன்னந்தனியாகச் சென்றுகொண்டிருந்தபோது பசித்து உயிர்விடும் நிலையில் கிடந்தார். அவரை உபசரிக்கும் பொருட்டு ஒரு காட்டு முயல் தன்னைத்தானே காட்டுத்தீயில் போட்டு சுட்டுக்கொண்டு அவருக்கு உணவளித்தது. அந்த மாபெரும் தியாகம் அசிதருக்கு ஒரு பெருநிகழ்வு வரவிருக்கிறது என்பதை முன்னுணர்த்தியது. உலகைவெல்லும் ஒரு சக்கரவர்த்தி அல்லது முற்றும் துறந்த புத்தர் பிறக்கவிருக்கிறார் என்று அவர் அறிவித்தார். ஆனால் அசிதருக்கு அத்தனை கூர்மை இல்லை என்பது என் கருத்து, பக்கத்திலிருந்த முயலை பிடித்து தீயிலிட்டு அசிதரை உபசரித்திருந்தால் பிறக்கப்போவது சக்கரவர்த்தி என்று சொல்லியிருக்கலாம்.

அசிதர் என்றால் நிலைத்து நிற்காதவர் என்று பொருள். அவருக்கு காலதேவர் என்றும் கன்ஹஸ்ரீ என்றும் பெயர் உண்டு. கன்ஹஸ்ரீ என்றால் கரியஒளி. அவர் கரியநிறத்தவராக இருந்தார் என்று ஒரு பொருள். ஆனால் கன்ஹஸ்ரீ என்பது நேரடியாகவே காகத்தை குறிக்கும் சொல். காகம் காலதேவனின் வடிவம்.

அசிதர் என்ற பெயரை அவருக்கு பூட்டானில் ஒரு தொன்மையான மடாலயத்தில் அவர் தங்கியிருக்கையில் அவருக்கு துறவு அளித்த மூத்த பிக்ஷுக்கள் போட்டார்கள். அவர் புத்த பிட்சுவாக பல மடாலயங்களில் இருந்தார். அதன்பின் தெற்கே வந்தார். நாராயணகுருவை இலங்கையில் சந்தித்தார்.

பௌத்த மெய்யியலை அவர் நாராயணகுருவுக்கு விளக்கியதாகச் சொல்லப்படுகிறது. நாராயண குருநான் ஏற்கனவே பௌத்தன்என்றார். அசிதருக்கு அது புரியவில்லை. “புத்தரின் பெயர்களைச் சொல்லுங்கள்என்று நாராயணகுரு சொன்னார். அசிதர் சொல்லி வந்தபோது அத்வைதன் என்ற பெயர் வந்தது. கைதூக்கி நாராயணகுரு புன்னகைத்தார். அசிதர் நாராயணகுருவின் மாணவராகி பணியாற்றினார். அசிதானந்தராக மாறினார். ஆனால் கடைசிவரை பௌத்தராகவும் இருந்தார்.

அன்று இங்கே ஒரு பரதநாட்டியம் நடைபெற்றது. தொடர்ந்து மோகினியாட்டம். வெவ்வேறு மடங்களிலிருந்து துறவிகள் வந்திருந்தனர். நடனம் அறிவிக்கப்பட்டதும் அவர்களில் ஒரு சாரார் எழுந்து வெளியே சென்றார்கள். தனியாக குறுங்காட்டுக்குள் சென்று அமர்ந்துகொண்டார்கள். நிகழ்ச்சி முடிந்தபின் அவர்கள் குருவைச் சென்று சந்தித்து தங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்கள். துறவிகள் பரதநாட்டியம் மோகினியாட்டம் போன்ற சிற்றின்பக் கலைகளில் ஈடுபடக்கூடாது, அது அவர்களை உலகியலில் வீழ்த்தும் பொறி, அதை ஒரு குருகுலத்திலேயே ஏற்பாடு செய்வது பெரிய பிழை என்றனர்.

அவர்களுக்கு குரு வேதம் மருவிய காலத்தில் பிராமணங்கள் உருவாகிக் கொண்டிருந்தபோது முனிவர் ஸ்வேதகேது சந்தித்த நடைமுறை சார்ந்த தத்துவச்சிக்கலை பற்றிச் சொன்னார். வேதமாணவர்கள் தேன் அருந்தலாமா என்ற கேள்வி அன்று எழுந்துவந்தது. தேன் அன்று காட்டில் கிடைத்த ஒரே இனிப்பு. இனிப்பு புலன் இன்பங்களை தூண்டுவது அல்லவா?

அது ஒரு பெரிய விவாதமாக ஓடியது. ஸ்வேதகேது அதற்கு பதில் சொன்னார். தேன் என்பது மது. எந்த ஒரு புலன்வழி அறிதலும் அதன் உச்சத்தை அடையும்போது மதுவாகிறது. ஓசை இசையாகிறது. வண்ணங்கள் ஓவியமாகின்றன. பொருட்கள் சிற்பமாகின்றன. அசைவுகள் நடனமாகின்றன. மொழி கவிதையாகிறது. அதைப்போன்றே சுவை என்பது தேனாகிறது. அந்த மதுவை காமம் என்று கொள்வது உலகியலோர் இயல்பு. அதை பிரம்மம் என்று கொள்வதே துறவிகளின் வழி. வேதம் கற்கும் மாணவர்கள் தற்காலிகமாக துறவுபூண்டவர்கள். ஆகவே பிரம்மத்தின் சுவை என அவர்கள் தேனை அருந்தலாம்.

ஆனால் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து இங்கே வந்த துறவிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அது துறவிகள் கொண்டுள்ள வைராக்கியத்திற்கு எதிரானது என்று வாதிட்டனர். கலையை அறிவால் எப்படி வேண்டுமென்றாலும் விளக்கிக் கொள்ளலாம், ஆனால் புலன்களும் அதை ஆளும் காமமும் அதை நாம் விரும்பியபடி எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. காமம் தனக்கென உறைவிடம் அற்றது, ஆகவே எல்லா உறைவிடங்களையும் தான் எடுத்துக்கொள்வது. தனக்கென தோற்றம் அற்றது, ஆகவே எல்லா தோற்றங்களையும் தானே எடுப்பது. காமம் குரோதத்துடனும் மோகத்துடனும் இணைந்து அவற்றை ஊர்தியாக்கிக் கொள்வது. அறிவுடனும் ஞானத்துடனும்கூட அது அவ்வாறே இணையும்.

அவர்களில் மூத்தவரான விஸ்வானந்தர் சொன்னார்கலை என்பது குயில் போன்றது. மிகமிக இனிமையான குரல் கொண்டது அந்தச் சிறு பறவை. ஆனால் அதன் கள்ளத்தனத்தை நினைத்துப் பாருங்கள். அது காகத்தின் கூட்டில் முட்டையிடுகிறது. காகம் முட்டை பொரிக்கும் முன்பே குயில் முட்டைபொரித்து வெளிவந்து காகத்தின் முட்டைகளை கீழே தள்ளிவிட்டுவிடுகிறது. கூவிக்கூவி காகத்தை அதுதான் நல்ல ஓசை என்று நம்பவைத்து காகக்குஞ்சுகளையே கொல்லவும் செய்யும்

ஆமாம்என்றார் குருகுலத்தைச் சேர்ந்த ராமசந்திரன். சோகமான அவர் மெலும் சோகமாக ஆனார்.

அது விஸ்வானந்தரை ஊக்கம் கொள்ளச் செய்தது. அவர் சொன்னார். “கலைக்கு முகப்புவாயில் வழியாக நுழையத் தெரியாது. அது திருடனைப்போல இரவில் கொல்லைப்புறம் வழியாகவே உள்ளே நுழையும். அதற்கு எந்த விளக்கம் அளித்தாலும் அதை ஆதரிப்பதாகவே அமையும். ஒரு கைவிடும் இடைவெளியை போட்டால் போதும் உள்ளே நுழைந்து கருவூலத்தை காலியாக்கிவிடும்.”

அவர்கள் எதிர்ப்புடனேயே கிளம்பிச் சென்றார்கள். குரு சொன்னார், இந்தப் பிரிவினை . ஸ்வேதகேதுவின் கிருஹ்யசூத்திரம் எழுதப்பட்டபோதும் உருவானது. அதை தவிர்க்கவே முடியாது. உலகியலை எதிர்கொள்வதன் இரு வழிகள். இரண்டில் எது தேவை என ஒருவர் அவரேதான் முடிவுசெய்ய வேண்டும், அவருக்குத் தானே அவரைப் பற்றி தெரியும்

நான் கேட்டேன், எவருக்கு உலகியலின் மது ஒத்துவரும்? குரு சொன்னார், கலையில் மெய்யாகவே ஈடுபடும் மனம் சிலருக்கு மட்டுமே உள்ளது. கலை அவர்களின் கற்பனையை தூண்டும். அவர்களை மேலும் மேலும் மலரச் செய்யும். கலையில் இருந்து அவர்கள் நெடுந்தொலைவு பயணம் செய்வார்கள். கலையிலிருந்து பரவசத்தையும் மெய்மறந்த நிலையையும் மட்டுமே அடைவார்கள். அவர்களுக்குரியது அந்த மது. சிலருக்கு கலை வெறும் பொருளும் நிகழ்வுமே. அவர்கள் கலையை தங்கள் கற்பனையால் விரித்துக்கொள்ளாதவர்கள். அவர்களுக்கு கலை உலகியல் மட்டும்தான். அது அவர்களுக்கு பெரும் சுமை, தளை.

வேறுபாட்டை உணர்வது மிக எளிது என்றார் குரு. கற்பனையால் கலையை அடைபவர்கள் அதுவரை அடைந்த கலையனுபவங்களை திரட்டிக்கொண்டு அதன்மேல் ஏறி புதிய கலையைச் சென்றடைவார்கள். புதியகலையை அறிவதற்கான நுண்ணுணர்வை முந்தைய கலையனுபவங்கள் அவர்களுக்கு அளிக்கும். மற்றவர்கள் முன்பு அவர்கள் அறிந்த கலையில் இருந்து சில புரிதல்களையும் வரையறைகளையும் உருவாக்கிக்கொண்டு அவற்றை முன்வைத்து புதியகலையை எதிர்கொள்வார்கள். கலையில் ஈடுபட ஈடுபட அவர்கள் நுண்ணுணர்வு குறைந்து, பிடிவாதமான முரடர்களாக ஆவார்கள்.

நித்யா சொன்னார், அன்று சமையலறையில் பேசிக் கொண்டிருந்தோம். இந்த விவாதம் மீண்டும் எழுந்து வந்தது. அப்போது அசிதர் சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டிருந்தார். அவர் இதையெல்லாம் கவனிப்பவர் அல்ல. அவர் மிகமிக நடைமுறைவாதி. தத்துவம், தியானம், சேவைஅவ்வளவுதான். கவிதை கலை எல்லாம் கிடையாது. நான் அவரை உள்ளே இழுக்க ஆசைப்பட்டேன்.

சொல்லுங்கள் அசித சாமி, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பரத நாட்டியம் பார்க்கலாமா கூடாதா?” என்று நான் கேட்டேன்.

ஏன் பார்ப்பதற்கு என்ன? நன்றாகத்தானே ஆடுகிறார்கள்?” என்றார்.

ஆனால் அது முழுக்க முழுக்க காமம். கண்களால் சுண்டி அழைக்கிறார்கள், சொற்களும் உடலசைவுகளும் முழுக்க முழுக்க காமத்திற்குரியவைஎன்றேன்.

ஆமாம், ஆனால் அது காமம் அல்ல, காமத்தைப் போன்ற நடிப்புஎன்றார் அசிதர்நாம் ஒன்றை நடிக்கத் தொடங்கும்போது அதிலிருந்து விடுபடுகிறோம் அல்லவா?”

அப்படியா?” என்றேன்.

மனிதகுலமே அப்படித்தான் விடுபட்டிருக்கிறதுஎன்று அவர் சொன்னார். “அச்சத்தில் இருந்து அறியாமையில் இருந்து.

ஆமாம் போலி செய்வதே மூலத்தை அறிவதற்கும் அதை கடப்பதற்கும் சரியான வழிஎன்று அப்பால் அமர்ந்திருந்த சிதானந்த சாமி சொன்னார்.மகனே, இந்த சிவன் விஷ்ணு எல்லாம் யார்? பிரம்மத்தை நாம் நகல்செய்த வடிவங்கள்தானே?”

அசிதரை எப்போதுமே சீண்டுவது அவருடைய வழக்கம். பொதுவாகவே ஒரு சீண்டலும் நையாண்டியும் அவருடைய எல்லா பேச்சிலும் உண்டு. குருகுலத்திலேயே பீடி பிடிப்பவரும் அவர்தான். அது அவருடைய அடையாளம். பீடியை ஆழமாக இழுத்து புகை விட்டு “யோசித்துப்பார் புத்தர் மகாவீரரை நகல்செய்த வடிவம்என்றார் 

அசிதர் அவரை பொருட்படுத்துவதில்லை. அவர் சம்பந்தமே இல்லாமல் சொல்லத் தொடங்கினார். “எனக்கு மகாசேக்கோ தர்மபிரபவர் ஏன் அசிதர் என்று பெயரிட்டார் தெரியுமா ?”

நாங்கள் அவர் பேசுவதை கேட்க செவி கொடுத்தோம்.

அசிதர் சொன்னார். என் ஊர் ஆலப்புழா அருகே கொந்நமங்கலம். ஊரில் என் வீட்டுக்கே காக்காதோஷத்துவீடு என்றுதான் பெயர். ஊரில் இறங்கி காக்காதோஷத்து வீட்டில் சங்கரன் என்று கேட்டால்தான் என் அப்பாவை அடையாளம் காட்டுவார்கள்.

என் தாத்தா ஐயப்பன் வைத்தியர் ஒரு அடிமுறை ஆசான். வர்ம வைத்தியமும் செய்வார். மந்திரவாதத்திலும் ஈடுபாடு உண்டு. கொஞ்சம் முரட்டுத்தனமான ஆள். ஊரில் பொதுவாக எவரையும் மதிக்காதவர்.

திடீரென்று அப்போது கொப்பரைக்கு ஆலப்புழாவில் நல்ல விலைகிடைக்க தொடங்கியது. தேங்காயை வாங்கி கீறி உலர்த்தி கொப்பரையாக்கி படகில் கொண்டுசென்று ஆலப்புழையில் இறக்கினால் கப்பல்காரர்கள் வந்து வாங்கிக்கொள்வார்கள். இரண்டு மடங்கு விலை. தாத்தா அந்த தொழிலில் இறங்கினார். அவர் படகில் அலைந்து தேங்காய் வாங்கி வருவார். அந்தத் தேங்காயை பாட்டி கீறி உலரவைப்பார்.

முற்றத்தில் பகலெல்லாம் தேங்காய் காயும். அதற்குப் பெரிய சிக்கல் காகங்கள். அவை உலர்ந்த கொப்பரையை எடுத்துக்கொண்டு போகும். கொத்தியப் பின் ஓடையில்போட்டுவிடும். காகங்களை விரட்ட அங்கேயே அமர முடியாது. பாட்டிக்கு தேங்காய் உடைத்துக் கீறும் வேலை. என்ன செய்வது என்று கேட்டபோது கறுப்புத்துணியை கட்டி வைத்தால் காகம் வராது என்று யாரோ சொன்னார்கள். காகம் ஒன்று செத்துக்கிடக்கிறது என்று நினைத்துக்கொள்ளுமாம்

தாத்தா உண்மையான காகத்தையே ஏன் அங்கே வைக்கக்கூடாது என்று நினைத்தார். அப்படி நினைக்கக்கூடியவர், எல்லாரும் செய்வதை அவர் செய்யமுடியாது. அவர் என்ன செய்தார் என்பதை ஊரில் நாலுபேர் பேசவும் வேண்டும்.

ஆனால் செத்த காகம் கண்ணுக்கே படவில்லை. அவை எங்கே சாகின்றன என்றே தெரியவில்லை. ஆகவே காகத்தை பிடிக்க முயன்றார். எப்படி பிடிக்கலாம் என்று யோசித்தபோது மலையன் கொக்குபிடிக்கும் உத்தியை கண்டுகொண்டார்.மீன்பிடிக்கும் தூண்டிலில் கருவாட்டைக் கோத்து செடியில் கட்டி காயலோரமாகப் போட்டார். காகங்கள் வந்து கருவாட்டை விழுங்கியபோது தொண்டையில் தூண்டில் கொக்கி சிக்கி மாட்டிக்கொண்டன.

அவர் காகங்களின் ஓசை கேட்டு அங்கே போய் பார்த்தார். அங்கே காகங்கள் மண்ணில் கிடந்து துள்ளின. மேலே மரங்கள் முழுக்க காகங்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து கூச்சலிட்டுக்கொண்டிருந்தன. காகங்கள் அவ்வாறு கூச்சலிட்டது அவருக்கு ஒரு நிறைவை அளித்தது. அவற்றின் பார்வை நடுவே அவர் நிதானமாக நடந்து சென்று கீழே கிடந்த நான்கு காகங்களை பிடித்து தூக்கினார். மரங்களிலும் தரையிலும் சூழ்ந்து அமர்ந்தும் எழுந்து பறந்தும் கூவிக்கொண்டிருந்த காகங்கள் பார்க்கும்படியாக அவற்றின் கழுத்தை நெரித்து கொன்றார்

அவற்றின் காலைப்பிடித்து தலைகீழாக தூக்கிக்கொண்டு கையில் மூங்கில் கழியுடன் நடந்தார். அவரைச் சூழ்ந்து காகங்கள் கூச்சலிட்டபடி வீடுவரை வந்தன. அவர் கையில் காகங்களைக் கண்ட பாட்டி கூச்சலிட்டு அழுதார். “அய்யோ என்ன செய்தீர்கள்? காகத்தை கொல்லலாமா! அது பெரும்பாவம்என்று சொன்னார்.

என்ன பெரும்பாவம்? கோழியை நாம் கொல்லவில்லையா? மலையன் நாள்தோறும் கொக்கு பிடிக்கிறான்என்றார் தாத்தா

அதை நாம் சாப்பிடுகிறோம். காகத்தை நாம் சாப்பிடுவதில்லைஎன்று பாட்டி சொன்னாள். “காகம் பித்ரு வடிவம்இது தந்தையைக் கொலை செய்த பாவத்தை கொண்டுவருவது

போடி, இந்த கறுப்புக் காக்காவா என் அப்பா மலையத்து கொச்சாமன்? அவர் புலிபறவையில் என்றால் அவர் கழுகுஎன்றார் தாத்தா.

முற்றத்திலேயே அமர்ந்து நான்கு காகங்களின் உடல்களையும் குடலை வெட்டி நீக்கி பழந்துதுணி செருகி பாடம் செய்து குச்சிகளில் பொருத்தி கொப்பரை காயும் களத்தில் நான்கு மூலைகளிலும் வைத்தார். “இனி கொப்பரை தின்ன எந்த காக்கா வருகிறது என்று பார்ப்போம்!”என்றார் தாத்தா

அதன்பின் காகங்கள் கொப்பரை தேடி வரவில்லை. அவர் வீட்டைச் சுற்றியே எந்த காகமும் வரவில்லை.பாட்டி அந்த வேறுபாட்டை ஒருவாரம் கழித்துத்தான் உணர்ந்தாள். ஊரில் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும் பறவைச்சத்தம் அவர்களின் தோட்டத்தில் எழவில்லை. செவிகளை மங்கவைக்கும் ஓர் அமைதி. காகங்கள் மட்டுமல்ல எந்தப் பறவையும் அவர்களின் தோட்டத்திற்கு வரவில்லை.

ஆனால் பறவைகள் வராமலானபோது சீவிடு ஒலி பெருகியது. ரீரீ என்ற இடைவிடாத ஓசை. பகலிலும்,நடு வெயிலிலும்கூட அந்த ஓசைதான். அவர்களின் வீட்டைச்சுற்றி நிறைந்திருந்த அந்த இரவின் ஓசை ஊரில் அத்தனைபேரையும் பயமுறுத்தியது. உண்மையில் தாத்தாவின் மீதான பயத்தை கூட்டியது. அவரிடம் மந்திரவாதம் செய்துகொள்ள மேலும் நிறையபேர் வரத் தொடங்கினர்.

பிறகுதான் பிரச்சினை தொடங்கியது. தாத்தா எங்கு சென்றாலும் காகங்கள் அவரை வந்து கொத்த ஆரம்பித்தன. முதலில் அவர் கைவள்ளத்தில் ஆற்றில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு காகம் செங்குத்தாக இறங்கி அவர் தலையை கொத்தியது. அவர் துடுப்பை தூக்கி அதை அடிக்க முயல்வதற்குள் வேறு இரண்டு காகங்கள் பக்கவாட்டில் பாய்ந்து வந்து கொத்தின.

அவரால் தன்னை காத்துக்கொள்ளவே முடியவில்லை. தலை உடைந்து ரத்தம் கொட்டியது. காது கிழிந்தது. கண்ணைக் காப்பாற்றிக்கொள்ளவே போராடவேண்டியிருந்தது. படகில் குனிந்து அமர்ந்து கையால் துடுப்பிட்டு கரையை வந்தடைந்து ஓடி அருகில் இருந்த சிறுகுடிலுக்குள் புகுந்துகொண்டார். அதுவரை அவை அவருடைய முதுகை கொத்தி கிழித்தன.

அது தற்செயலாக இருக்கும் என்று நினைத்தார். தன் படகிலிருந்த கருவாட்டுக்காக கொத்தவருகின்றன என்று விளங்கிக்கொண்டார். அதன்பின் அவர் கடைக்குச் சென்று கொண்டிருந்தபோது பக்கத்திலிருந்த மரத்தில் இருந்து ஒரு காகம் அவர்மேல் பாய்ந்து கொத்திவிட்டுச் சென்றது.

அவை குறிவைத்து தாக்குகின்றன, தன் முகம் அவற்றுக்கு தெரிகிறது என்று அவர் கண்டுபிடித்தார். முண்டாசு கட்டிக்கொண்டு போனாலும், முகத்தையே துணிபோட்டு மூடினாலும் அவை கண்டுபிடித்தன.

ஒரே காகம் அல்ல. வெவ்வேறு காகங்கள். சில காகங்கள் வயதானவை. சில காகங்கள் இளமையானவை. அவை எந்த தனி ஓசையையும் எழுப்பவில்லை. கொத்திய பிறகே அவை அவரை கவனித்துக் கொண்டிருக்கின்றன என்று உணர முடியும்.

அவர் தனியாக எங்கே சென்றாலும் காகங்கள் அவரை வந்து தாக்கின. கண்ணை பாதுகாப்பதற்காக அவர் குனிந்து தரையில் அமர்ந்துகொள்வார். தலையை கொத்தி உடைத்து புண்ணாக்கிவிட்டு அவை செல்லும்.

கையில் ஓலைக்குடை வைத்துக்கொள்ள ஆரம்பித்தார்.அப்போதுகூட காகம் எங்கிருந்தோ பார்த்துக்கொண்டிருக்கும். குடையை கொஞ்சம் சரித்தால் வந்து கொத்திவிட்டு போய்விடும். அவர் உடலெங்கும் காகம் கொத்திய புண்களும் வடுக்களும் நிறைந்தன.

ஊரெல்லாம் இது பேச்சாகியது. காக்காதோஷம் என்று அவருக்கு பெயர் விழுந்தது. வியாபாரத்தை நிறுத்திக்கொண்டு பெரும்பாலும் வீட்டிலேயே இருந்தார். வீட்டு முற்றத்திற்கே குடை இல்லாமல் இறங்கமுடியாது.

நிறைய பரிகாரங்கள் செய்தார். பூஜை, மந்திரவாதம் என நிறைய பணம் செலவாகியது. என்ன செய்தாலும் காகங்களை சமாதானப்படுத்த முடியவில்லை. அவரோ அவர் மனைவியோ சாப்பாடு போட்டால் அவை சாப்பிடுவதில்லை. அருகே வருவதே இல்லை. பித்ருசாபம் என்றார்கள். அவர் பலிச்சாதம் வைத்தால் அந்த பகுதிக்கே காகங்கள் வருவதில்லை. ஆகவே பித்ருபலி இடும் இடத்திலேயே அவரை உள்ளே விடமாட்டார்கள்

என்ன ஆச்சரியம் என்றால் அவர் வெளியூர் சென்றாலும் காகங்கள் கொத்தின. அங்கே உள்ள காகங்கள். அவர் அம்பலப்புழா போனாலும் வைக்கம் போனாலும் காகங்கள் சட்டென்று பறந்திறங்கி அவரைக் கொத்தின. ஒருமுறை அவர் கொல்லம் போனார் அவர் படகிலிருந்து இறங்கியதுமே அங்கே தென்னைமேல் அமர்ந்திருந்த ஒரு வயதான காகம் அவரை பாய்ந்து கொத்தியது.

அவர் மனம் பேதலித்தவர் போல ஆனார். கருப்பான எதைப்பார்த்தாலும் பதறுவார். கடைசிக் காலத்தில் அவர் வீட்டு முற்றத்திற்கே வருவதில்லை. ஆனால் காகங்கள் கனவில் வந்து அவரை கொத்திக்குதறின. பெரும்பாலான இரவுகளில் அவர் கூச்சலிட்டபடி பாய்ந்தெழுந்து அமர்ந்து நடுங்குவார்.

தாத்தா அறுபத்தெட்டு வயதில் இறந்தார். அவருடைய உடலை ஆற்றின் கரையில் மயானத்தில் சிதையேற்றம் செய்தபோது காகங்கள் சூழ்ந்திருந்த மரங்கள் முழுக்க சூழ்ந்து அமர்ந்து வெறிகொண்டவைபோல கூவிக்கொண்டிருந்தன.

அப்பாவுக்கு அப்போது பத்தொன்பது வயது. அவர் மொட்டைத்தலையுடன் குடமுடைத்து சிதைத்தீ போட்டுவிட்டு திரும்பும்போது சட்டென்று ஒரு காகம் பாய்ந்து அவருடைய மொட்டைத்தலையை கொத்திவிட்டு போயிற்று. அவர் அலறியபடி மயங்கி விழுந்துவிட்டார். கூட வந்தவர்கள் ஓடிவந்து அவரை தூக்கினார்கள் . அவர் முகத்தில் ரத்தம் வழிந்தது.

அதன்பின் காகங்கள் அவரை கொத்தத் தொடங்கின. எங்கே சென்றாலும் காகங்களால் அவர் வேட்டையாடப்பட்டார். அவர் வீட்டையும் தோட்டத்தையும் விற்க முயன்றார், காக்காதோஷம் தோட்டத்தை எவரும் வாங்க முன்வரவில்லை. அந்த தோட்டத்தில் எந்த செடியும் வளராது. தளிர்விட்டதுமே பூச்சிகள் பெருகி அழித்துவிடும்

அப்படியே அனைத்தையும் விட்டுவிட்டு அப்பா ஆலப்புழாவுக்கும் அங்கிருந்து கொல்லத்திற்கும் சென்று குடியேறினார். ஆனால் காகங்கள் அவரை விடவே இல்லை. எல்லா ஊரிலும் அவரை தொடர்ந்து வந்தன அவை. மிகமிக கவனமாக இருந்தாலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது காகம் அவரை கொத்தியது.

இந்த விசித்திர நிகழ்வு பற்றி 1906ல் ஸ்வதேசாபிமானி நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டது. ஆனால் அதன்பிறகுதான் அது ஒன்றும் அவ்வளவு அரிய நிகழ்வு அல்ல, எல்லா ஊரிலும் நடப்பதுதான் என்று தெரியவந்தது

அப்பா நாற்பத்தெட்டு வயதில் இறந்தார். அவர் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்தார். தலையில் பெரிய முண்டாசு கட்டி தடிமனான கண்ணாடி அணிந்து பெரிய குடையுடன் தான் எங்கும் செல்வார். அவர் காகங்களை விரட்ட செய்த முயற்சிகள் ஏராளம். ஆனால் குடை தவிர எதுவுமே பயன்படவில்லை. ஆனாலும் அடிக்கடி கொத்து படுவார். குடையை மடித்துவிட்டு வகுப்புக்குள்ளோ டீக்கடைக்குள்ளோ நுழையும் கணத்தில் எதிர்ப்பக்கமிருந்து வந்து கொத்திவிட்டுச் செல்லும்

அப்பா சனிபிரீதி செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தார். எரமத்தூர் சனிதேவன் கோயிலில் நாற்பத்தொருநாட்கள் தங்கி விரதம் இருந்து வழிபட்டார். பாலக்காட்டில் நூரனியில் உள்ள ஒரு சனிதேவன் கோயிலில் பதினெட்டு நாட்கள். கோட்டையம் அருகே குருப்பம்துறை சனீஸ்வரர் ஆலயத்திற்கு ஏழு ஆண்டுகள் எல்லா சனிக்கிழமையும் சென்றுகொண்டிருந்தார். தமிழகத்தில் திருநள்ளாறு ஆந்திரத்தில் மண்டப்பள்ளி என்று தேடித்தேடிச் சென்று வழிபட்டார். எதுவுமே பயன் அளிக்கவில்லை. மகாராஷ்டிரத்தில் டிட்வாலா என்ற ஊரில் ஒரு சனிதேவன் கோயிலின் முற்றத்திலேயே அவரை காகங்கள் சூழ்ந்துகொண்டு தாக்கி சட்டையை கிழித்தன.

அப்பா இறந்தபோது அவருடைய உடல் கொல்லம் காயல்கரை சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது. சுற்றியிருந்த எல்லா மரங்களிலும் கூட்டம் கூட்டமாக காகங்கள் அடைந்திருந்தன. நான் கொள்ளிவைத்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். நாங்கள் வந்த மாட்டுவண்டி அப்பால் மண்சாலையில் நின்றிருந்தது. என்னை காகங்கள் கொத்த ஆரம்பிக்குமா என்பதுதான் எல்லார் மனதிலும் உள்ள கேள்வியாக இருந்தது. அதற்காகவே என்னை கொஞ்சம் தனியாக விட்டார்கள் என நினைக்கிறேன்.

நான் விலகி நடந்த அக்கூட்டம் நடுவே நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று நேர்மேலே வானிலிருந்து காகம் ஒன்று செங்குத்தாக என் மேல் இறங்கியது. கத்தியால் குத்தப்பட்டதுபோல என் தலையில் வலியை உணர்ந்தேன். அப்படியே விழுந்துவிட்டேன். என்னைச் சுற்றியிருந்த அத்தனை பேரும் தப்பி ஓடினார்கள். நான்கு காகங்கள் என் மேல் பாய்ந்து கொத்தத் தொடங்கின. நான் எழுந்து விழுந்தேன். அவை என் தசையை கிழித்தன. அலறியபடி மாட்டுவண்டியை நோக்கி ஓடி அதன் உள்ளே பாய்ந்து ஏறினேன். அதுவரை கொத்திக்கொண்டே இருந்தன

அன்றே நான் அகம் நடுங்கிவிட்டேன். என் அப்பாவை காகங்கள் வேட்டையாடுவது எனக்கு தெரியும். அவருடைய அப்பா கதையும் தெரியும். ஆனால் என்னை அவை தொடர்ந்து வரும் என நான் நினைக்கவில்லை. உண்மையில் அதை நான் பொருட்படுத்தாமலிருக்க பழகியிருந்தேன். என் அப்பாவுக்கு ஏதோ நோய் என்பதுபோல. எனக்கு அது வந்தபோது என் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக உணர்ந்தேன். என் நண்பர்கள் அனைவரும் விலகிப்போனார்கள். அப்போது கல்லூரியில் பிஏ முதலாண்டு படித்துக்கொண்டிருந்தேன். படிப்பைத் தொடரவில்லை.

நான் குடையுடன் அலைய ஆரம்பித்தேன்.எவ்வளவோ கவனமாக இருந்தும் பலமுறை என்னை காகங்கள் தாக்கின. கடைசியாக காகம் என்னை கொத்தியது என் நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்தில். நல்ல கூட்டம். நான் நடுவே நின்றிருந்தேன். சட்டென்று காகம் என்னை தாக்கியது. நான் அலறியபடி ஓட என் வேட்டி அவிழ்ந்தது. அடியுடையுடன் நான் ஓடி அறைக்குள் புகுந்துகொண்டேன். கல்யாணக்கூட்டமே கலைந்து கூச்சலிட்டது. கல்யாணப்பெண்ணின் அப்பா என்னிடம் கசப்பு நிறைந்த முகத்துடன்நீ ஏன் வருகிறாய்? அம்மா வந்தால் போதாதா?” என்றார். இன்னொருவர்நீயெலாம் வீட்டில் இருக்கவேண்டியதுதானே? ஏன் இங்கெல்லாம் வருகிறாய்?” என்றார்

நான் கதறி அழுதபடி அன்று வீட்டுக்கு வந்தேன். அன்று இரவே வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டேன். கையில் பணமில்லை. திருட்டுரயில் ஏறி பட்டினியாக சென்னை சென்றேன். அங்கே இரண்டுநாட்கள் அலைந்து ஒரு மலையாளியின் டீக்கடையில் வேலை கிடைத்தது. கொஞ்சம் பணம் சேர்ந்ததும் விசாகப்பட்டினம் சென்றேன். அங்கிருந்து புத்த கயா. அங்கே படித்துறையிலும் ஸ்தூபியின் அருகிலும் அலைந்து கொண்டிருந்தேன். ஓட்டல்களில் வேலை செய்யப் பழகியிருந்தேன்

கயாவில் பிக்ஷுக்களுக்கு பழக்கமானேன். திபெத்திய பௌத்த மடாலயத்தில் உதவியாளனாக இருந்தேன். பின்னர் நானும் பிரம்மசாரியாக ஆனேன். ஆனால் அப்போதும் காகங்கள் என்னை துரத்தி கொண்டேதான் இருந்தன. கையில் குடை இல்லாமல் செல்ல முடியாது. குடை இருந்தாலும் கூட கவனமாக இருக்கவேண்டும். பறந்து வந்து தரையில் அமர்ந்து சட்டென்று இடுப்பை நோக்கி பாய்ந்து கொத்திவிட்டு போன காகங்கள் உண்டு

ராஜ்கீரில் ஒரு பிட்சுவுடன் சென்றிருந்தபோது என் குடையை காற்று அடித்துச் சென்றது. அதை பதறி பிடுங்குவதற்குள் என்னை காகங்கள் சூழ்ந்துகொண்டு கொத்தின. உடலெங்கும் புண்ணுடன் அழுதபடி மடாலயத்தின் இருண்ட அறைக்குள் கிடந்தேன்.

மூத்த பிக்ஷு வந்து என்னிடம் எல்லாவற்றையும் கேட்டார். ஏற்கனவே என்னைப் பற்றி பிக்ஷுக்களுக்கு தெரியும். அவர் பொதுவாக மிக அகன்று தனியாக இருப்பவர். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அவர் சொன்னார். “உன் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் இது ஒரு அறப்பிரச்சினை. உனக்கு ஒரு தத்துவப்பிரச்சினை. நீ அதை தீர்த்துக்கொண்டால் போதும்என் தலைமேல் கைவைத்துதத்துவப் பிரச்சினைகளை சந்திப்பவர்கள் அதிருஷ்டசாலிகள், அவர்களுக்கு விடுதலைக்கான உறுதியான ஒரு வழி திறக்கப்பட்டுள்ளது. துணிந்து தொடர்ந்து செல்வது மட்டுமே அவர்களின் வேலைஎன்றார்.

அவர் சொன்னதை அப்போது நான் சரியாக புரிந்துகொள்ளவில்லை. காகங்களிடமிருந்து தப்புவது எப்படி என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். இமாச்சலப் பிரதேசத்திற்கு கோரி வாய்ப்பு பெற்றுச் சென்றேன். சிம்லா மடாலயத்தில் சிலநாட்கள் இருந்தேன். அங்கிருந்து ஸ்பிடி சமவெளிக்குச் சென்றேன். டங்கர், லாலங் மடாலயங்களில் இருந்தேன். அங்கும் காகங்கள் என்னை தேடிவந்து கொத்தின.

ஒவ்வொரு புதிய இடத்திற்குச் சென்றதும் காகங்கள் என்னைக் கொத்துகின்றனவா என்று நானே சோதனை செய்து பார்ப்பேன். முற்றத்தில் இறங்கி நிற்பேன். என் உடலே எதிர்பார்ப்பால் துடித்துக்கொண்டிருக்கும். காகங்களின் சத்தம் கேட்கின்றனவா? இமையமலையில் காகம் சற்று பெரியது. ரேவன் என்றுதான் வெள்ளைக்காரர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். நம்மூர் போல கூச்சலிடாது. பெரும்பாலும் கிளையில் இலைநிழலில் அமைதியாக இருக்கும்.

காத்திருக்கையில் காதுகள் கூர்கொண்டிருக்கும். சட்டென்று சிறகடிப்பு ஓசைகேட்கும். என் உடல் சிலிர்க்கும். காகம் என்மேல் பாய்ந்து கொத்திவிட்டு செல்லும். நான் இறுக்கம் தளர்ந்து பெருமூச்சு விடுவேன். சிலசமயம் ஒருவகை நிறைவுகூட ஏற்படும்

ஆனால் ஒன்று கவனித்தேன், காகங்கள் என்னை முன்புபோல கொத்திக் கிழிக்கவில்லை. வெறிகொண்டு கொத்தவில்லை. ஓரிரு கொத்துகள், கிளம்பிவிடும். ஏனென்றால் நான் அவற்றை அஞ்சுவதில்லை. ஓடி ஒளிவதில்லை. கண்ணைமூடி அவை கொத்துவதற்காக காத்து நின்றிருப்பேன். கொத்தி முடித்து அவை செல்வது வரை மடாலய முற்றத்தில் இருந்து அகல்வதில்லை

ஒருமுறை டாபோ மடாலயத்தின் முற்றத்தில் நான் நின்றிருந்தேன். அங்கே சென்று நான்குநாட்கள்தான் ஆகியிருந்தன. ஒரு பெரிய காகம் வந்து எதிரே ஸ்தூபத்தில் அமர்ந்தது. அதன் கண்களைப் பார்த்தேன். மிக அருகே. மணிக்கண்கள். அதில் எந்த உணர்வும் இல்லை. அச்சமோ ஐயமோ ஆர்வமோ. அவை என்னை அறியவே இல்லை. அவற்றுக்கு நான் ஒரு பொருட்டே அல்ல.

பிறகு ஏன் கொத்துகின்றன? கொத்துவது அவற்றுக்கு ஒரு குலக்கடமையாக மாறிவிட்டிருக்கிறது. ஏதோ உயிரியல் தொடர்பால் அவற்றுக்கு அந்த ஆணை வந்து சேர்ந்துவிட்டது. ஏன் என்று அவை உண்மையாகவே அறிந்திருக்கவில்லை. என்னையும் அறிந்திருக்கவில்லை. எப்படி என்னை அவை அடையாளம் கண்டுகொள்கின்றன என்றுகூட அவற்றுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

வானை நிறைத்து பல்லாயிரம் பல லட்சம் காகங்களாக பரவியிருக்கும் காகம் என்ற அந்த ஒற்றைப் பேரிருப்புக்கு ஒருவேளை தெரிந்திருக்கும். அல்லது அதுவும் அறிந்திருக்காது. அதன் மாபெரும் வெளியில் என்னை கொத்துவதும் தன்னியல்பாகச் சென்று படிந்திருக்கும். சிறகில் காற்றின் நுட்பங்கள் படிந்திருப்பதுபோல. உணவின் ஊர்களின் பல்லாயிரம் கோடி செய்திகள் சென்று அமைந்திருப்பதுபோல.இனி அதுவும் ஓர் உயிரியியல் தடம். ஒரு பிரபஞ்ச விதி.

அந்தக் காகம் எழுந்து வந்து என்னை கொத்தியது. ஒரு தொன்மையான மதச்சடங்குபோல. தவிர்க்கமுடியாதது, பொருளறியாதது. என் சதை கிழிந்து துளி ரத்தம் வந்தது. காகம் ஒருமுறை உடல்தாழ்த்தி கரைந்துவிட்டு எழுந்து வானில் மறைந்தது. நான் அதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். அப்போது தோன்றிய முதல் எண்ணம், நல்லவேளை எனக்கு மகன் பிறக்கப்போவதில்லை என்பதுதான்

அங்கிருந்து மிகமிக தொலைவில் இமைய மலையடுக்குகளுக்குள் இருந்த டான்லே என்னும் சிறிய மடாலயத்திற்குச் சென்றேன். அது அன்று கைவிடப்பட்டு கிடந்தது. பழுதடைந்த மடாலயம். இருண்டு புழுதிபடிந்து பின்பக்கம் சற்று சரிந்து ஏதோ பூச்சியின் கழற்றப்பட்ட குருதிச்செந்நிறமான ஓடு போல.

நான் அங்கே சென்று ஊர்க்காரர்களின் உதவியுடன் அதை பழுதுபார்த்து தூய்மை செய்தேன். அதில் அடிப்படை வசதிகளை அமைத்தேன். குளிர்காலம் வந்துகொண்டிருந்தது. டான்லே வெறும் இருபத்தேழு வீடுகள் கொண்ட சின்னஞ்சிறு ஊர். அவர்கள் அனைவருமே குளிர்காலத்தில் கீழே இறங்கி லகுல் என்ற ஊருக்குச் சென்றுவிடுவார்கள்

நான் ஒரு முடிவு எடுத்தேன், நான் செல்லக்கூடாது என்று. மடாலயங்களை விட்டுவிட்டு பிக்ஷுக்கள் செல்லும் வழக்கம் இல்லை. அங்கே குளிர்காலத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். நிறைய விறகுகளைச் சேர்ந்த்தேன். உலர்ந்த உணவுகள், தானியங்களை நிறைத்து வைத்தேன். நான் மட்டும்தான் அந்த ஊரில் இருக்கப்போகிறேன் என்று தெரிந்தது.

ஒவ்வொருவராக கிளம்பிச் சென்றனர். ஊர் முற்றாக ஒழிந்தது. மடாலயத்தில் நான் மட்டும் எஞ்சியிருந்தேன். சிலநாட்களாக தொடர்ந்து வீசிய கடுங்குளிர்காற்று நின்றுவிட்டது. இன்னும் சிலநாட்களில் பனி பொழியும். சூழ்ந்திருக்கும் மலைகள் ஏற்கனவே வெண்மை மூடிவிட்டன. அங்கிருந்து பனி இறங்கி வந்துகொண்டிருக்கிறது. மிகமென்மையான காலடிகளுடன்.

ஜேம்ஸ் வில்ட்டின் ஒரு கவிதைவரி நினைவுக்கு வந்தது.

The snow has started falling.
It is falling over mountain and plain.
The trees bend under their burden.
Shake free, and are draped again.

இந்த வகையான சூழல்களில் ஒரு வரி தோன்றினால் அப்படியே நினைவில் பதிந்திருக்கும். Shake free, and are draped again என்று மந்திரம்போல சொல்லிக்கொண்டிருந்தேன். உதறுவது போர்த்திக்கொள்வது, வேறென்ன?

நான் பலநாட்களாக வெளியே செல்லவே இல்லை. குளிர் அப்படி அடித்தது. செல்லும்போது கனமான மூங்கில்கூடை போன்ற ஒன்றை தலைக்குமேல் போட்டுக்கொண்டு குனிந்து ஆமைபோலத்தான் நடப்பேன். விறகை முதுகின்மேல் சுமக்கையில் அதை விறகின்மேல் போட்டுக்கொள்வேன். போதிய அளவு எல்லாவற்றையும் முடித்துவிட்டேன் என்று தோன்றியபோது ஒரு டீ போட்டு எடுத்துக்கொண்டு வந்து மடாலயத்தின் முகப்பில் அமர்ந்தேன்.

நேர் எதிரே ஒரு பிர்ச் மரம். அதை சம்ஸ்கிருதத்தில் பூர்ஜமரம் என்பார்கள். மடாலயத்தைச் சுற்றி அந்த மரங்கள்தான். அவற்றின் பட்டை வெண்மையானது. முன்பு அவற்றை ஏடுகளாக பயன்படுத்தியிருக்கிறார்கள். எல்லா மரங்களும் இலையை உதிர்த்துவிட்டு வெறுங்கிளைகளுடன் நின்றிருந்தன. முற்றத்தில் நின்ற மரத்தில் மட்டும் கொஞ்சம் பழுத்த இலைகள் எஞ்சியிருந்தன. அதில் ஒரு காகத்தை பார்த்தேன்

முதலில் அது காகம் என்றே தோன்றவில்லை. கூர்ந்து பார்த்த பின்னர்தான் தெரிந்தது. கழுத்தை உள்ளிழுத்து அலகை மேலே தூக்கி உடல்குறுக்கி அமர்ந்திருந்தது. குளிரில் உறையாமலிருக்க அது உடலை உப்பியிருப்பது தெரிந்தது. அது ஏன் வலசை போகவில்லை?

எனக்கு தோன்றியது, அது எனக்காகத்தான் காத்திருக்கிறது என்று. தன் பணியைச் செய்வதற்காக. சட்டென்று என் மனதின் இறுக்கம் தளர்ந்து சிரிப்பு வந்துவிட்டது. என்ன ஒரு கடமையுணர்ச்சி!

நான் வெளியே இறங்கி அதை நோக்கிச் சென்றேன். அது என்னைக் கண்டதும் சிறகடித்து எழுந்தது. ஆனால் சிறகு பனியில் நனைந்திருந்தமையால் எடை கொண்டு அப்படியே முற்றத்தில் விழுந்துவிட்டது.

நான் அதை தூக்கிக்கொண்டு வந்து மடாலயத்தில் எரிந்த கணப்பின் அருகே வைத்தேன். விரைவிலேயே அது சீரடைந்தது. அதற்கு ஒரு கிண்ணத்தில் கோதுமை கொண்டுவந்து வைத்தேன். மெல்ல தத்தி வந்து அதை தின்றது.அதன் பின் தலைசரித்து என்னை குழப்பத்துடன் பார்த்தது.

நான் என் மேலாடையை கழற்றிவிட்டு முழந்தாளிட்டு என்னை கொத்தும்படி உடலைக் காட்டினேன். அது தலையை சரித்துச் சரித்து பார்த்துக் கொண்டிருந்தது. நான் என் அசைவுகளை ஒரு நடனம் போல ஆக்கிக்கொண்டேன். சட்டென்று காகம் சிறகடித்து எழுந்து என்னை கொத்தியது. ஆனால் கொத்து ஒரு மென்மையான தொடுகையாகவே இருந்தது

மீண்டும் அது என்னை கொத்தியது. இம்முறையும் அது வெறும் முத்தம்தான். அது அந்தச் செயலை நடிக்கிறது என்று நான் புரிந்துகொண்டேன். பயப்படுவது போல அஞ்சுவதுபோல நடித்தேன். இருவரும் அந்த நாடகத்தை கொண்டாடினோம். நெடுநாட்களுக்கு பின் நான் வெடித்துச் சிரித்துக் கும்மாளமிட்ட நாள் அது

அந்தக் காகம் குளிர்காலம் முழுக்க என்னுடன் மடாலயத்தில் இருந்தது. ஒருநாளில் இரண்டுமுறை கோதுமையை உண்ணும். அதுவே மடாலயத்தின் இருட்டுக்குள் சென்று எலிகளை வேட்டையாடும். கணப்பின் அருகே வந்து சிறகை ஒடுக்கி அலகை உள்ளிழுத்து அமர்ந்து தூங்கும். காலடி கேட்டால் கண்விழித்து என்னை கண்டதும் கா என்று ஒரு சொல்லில் முகமன் உரைத்துவிட்டு மீண்டும் தூங்கும்

அவ்வப்போது அது விழித்துக்கொண்டு என்னை கொத்தும். எத்தனை வேகமாக வந்தாலும் அலகு மிகமெல்லத்தான் படும். நாங்கள் அந்த நாடகத்தை குளிர்காலம் முழுக்க நடித்தோம். குளிர்காலம் முடிந்தபின் அது கிளம்பிச் சென்றது

வசந்தகாலத்தில் வெண்பனி மேலேறிக்கொண்டே சென்று மலைமுடிகளில் மட்டும் எஞ்சியது. வானம் கண்கூசும் ஒளியுடன் இருந்தது .மக்கள் திரும்பி வந்தனர். அவர்களுடன் ஆடுகளும் யாக்குகளும் வந்தன. அவற்றைத் தொடர்ந்து பல்லாயிரம் சிறுகுருவிகள் வந்தன. தரையெல்லாம் புல் எழுந்தது. மொட்டை மரங்களின் கிளைகளில் தளிர்கள் கசிந்து வெளிவந்தன. இலைகளின் தளிர்களின் பலநூறு வண்ணங்கள். அவை நாளுக்குநாள் மாறின. பகலிலும் இரவிலும் பூச்சிகளின் ரீங்காரம்.நிலம் உயிர்த்தெழுந்துவிட்டது.

நான் யாக்கின் பால் வாங்கிவருவதற்காக கிராமத்திற்குச் சென்றுகொண்டிருந்தேன். குடை ஏதும் கொண்டு செல்லவில்லை. மெல்லிய ஆடையையே அணிந்திருந்தேன். சட்டென்று ஒரு காகம் என்னை தாக்கியது. ஆனால் எனக்கு வழக்கமாக ஏற்படும் உள்ளதிர்ச்சி உருவாகவில்லை. ஓர் இனிய உணர்வே எழுந்தது. அப்படி பழகிவிட்டிருந்தேன். அந்தக் காகமும் அலகால் என்னை மெல்ல முத்தமிட்டது.

மேலும் இரு காகங்கள் என்னை செல்லமாகக் கொத்தின. நாங்கள் அந்த உற்சாகமான நடனத்தை ஆடினோம். அவை கரைந்தபடி பறந்தன. என்னைச் சூழ்ந்து அமர்ந்து கூவின. அவற்றின் கண்களை பார்த்தேன். என்னை அந்த பெருங்காகம் ஏற்றுக்கொண்டுவிட்டது என்று அறிந்தேன்

அன்றுமுதல் காகங்கள் என்னை கொத்துவதை ஒரு நடிப்பாக, விளையாட்டாகவே செய்தன. நான் விதிஷா சென்றேன். அங்கிருந்து குண்டூர் வந்தேன். எங்கும் அப்படித்தான். மாதத்தில் ஒருமுறை அந்த விளையாட்டு நடக்கும். நான் செல்லும்போது காகங்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டு கூவி அறிவிக்கும். நான் தயார் என்றால் விளையாட எழுந்துவரும்.

நான் துறவுபூண்டபோது எனக்கு மாகாசேக்கோ அசிதர் என்று பெயரிட்டார். அசிதர் அவருடைய மெய்ஞானத்தை ஒரு காகத்திடமிருந்துதான் பெற்றுக்கொண்டார் என்று அவர் சொன்னார்என்றார் அசிதர்.

நாங்கள் அந்த விசித்திரமான கதையால் வெவ்வேறு உணர்வுகளுக்கு ஆளாகியிருந்தோம். அசிதர் சொன்னார்கலை என்பது ஒரு நடிப்புதானே? அதிலுள்ளவை எதுவும் மெய் அல்ல. நிழல்நாய் கடிப்பதில்லை. ஆனால் அதனுடன் விளையாடலாம்.

அப்பால் அமர்ந்திருந்த சிதானந்த சாமிஆம், துறவு என்பதும் வாழ்க்கையை வேறு ஒருவகையில் நடிப்பதுதான்என்றபின் எழுந்து சென்று டீ கொதித்த அடுப்பில் இன்னொரு பீடியை பற்ற வைத்துக்கொண்டார்.

நித்யா சொல்லி முடித்தார்பித்ருகடன்கள் இல்லாத ஒரு துறவியிடம் காகம் என்ன சொல்லும் என்று அன்று நான் அசிதரிடம் கேட்டேன். ’நான் பித்ருவே அல்ல, இவர்கள் நம்புகிறார்கள் ஆகவே சும்மா நடிக்கிறேன்’ என்று சொல்லும் என்று சிரித்தார்

***

முந்தைய கட்டுரைதேவி,நற்றுணை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமூன்று டைனோசர்கள்