‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–57

பகுதி ஆறு : படைப்புல் – 1

தந்தையே, காளிந்தி அன்னையின் மைந்தனாகிய சோமகன் நான். நானே அவ்வாறு கூறிக்கொண்டாலொழிய எங்கும் எவரும் என்னை யாதவ மைந்தர் எண்பதின்மரில் ஒருவர் என்று அடையாளம் கண்டதே இல்லை. எந்தத் தருணத்திலும் எந்த அவையிலும் நான் எழுந்து ஒரு சொல் உரைத்ததில்லை. தங்கள் மைந்தன் என்று அன்னையால், அவையால் கூறப்பட்டிருக்கிறேன். அவை அதை ஏற்றிருக்கிறது. அரசமைந்தனுக்குரிய அடையாளங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒருபோதும் அவ்வண்ணம் உணர்ந்ததில்லை.

தங்களை நான் கண்டதுண்டு. அன்னையைப் பார்க்க தாங்கள் வரும்போது என்னை அருகணைத்து இடைவளைத்து உடல் சேர்த்து ஓரிரு சொல் சொல்வீர்கள். அன்று என்னை கூச வைக்கும் ஒரு தொடுகையாகவும் உளம் விலக வைக்கும் சில சொற்களாகவுமே தாங்கள் இருந்தீர்கள். உங்களை சிறுசாளரப் பழுதுகளினூடாக ஒளிந்துநின்றே பெரும்பாலும் பார்த்திருக்கிறேன். அரசப்பேரவையில் தாங்கள் அரியணை அமர்ந்திருக்கையிலும், பெருவீதியில் யானைமேல் அமர்ந்து அணிவலம் செல்கையிலும்கூட ஒளிந்திருந்து பார்ப்பவனாகவே என்னை உணர்ந்திருக்கிறேன்.

தங்களை அறிந்துகொள்வதற்கான எந்தப் பாதையையும் தாங்கள் திறந்து தரவில்லை. தங்களிடமிருந்து அகல்வதற்கான அனைத்துப் பாதைகளும் திறந்திருந்தன. எத்தனை தடைகள், எத்தனை திரைகள் தங்களை என்னிடமிருந்து மறைத்தன! முதன்மையான திரை தாங்கள் கொண்ட பேருருதான். நான் சொல்லறிந்தபோதே தொல்கதைகளிலிருந்து எழுந்துவந்த பெருந்தெய்வமென நீங்கள் மாறிவிட்டிருந்தீர்கள். இளமையில் கோகுலத்தில் நீங்கள் ஆற்றிய விந்தைகள், வீரச்செயல்களை அன்னையரும் விறலியரும் பாடிக் கேட்டேன். கம்சனை வென்றதும் மதுராபுரியை கொண்டதும் சூதர்களின் சொற்களினூடாக எனக்கு உரைக்கப்பட்டது.

துவாரகை உங்களைப் பாடும் ஓர் இசைக்கலம் அன்றி வேறல்ல. இந்திரமாயக்காரன் கோலை அசைத்து உருவாக்கியதுபோல நீங்கள் மாயதுவாரகையை மின்னற்பொழுதென அமைத்ததைப்பற்றி பாடினர் பாணர். உங்கள் திசைவெற்றிகளை நடித்தனர் ஆட்டர். நீங்கள் தெய்வப்பேருரு என பாரதவர்ஷத்தால் வணங்கப்படுவதை சொல்லினர் அயல்நிலத்து கவிஞர். துவாரகையில் உங்கள் புகழ்பாடலைச் செவிகொள்ளாமல் நூறு காலடி எடுத்து முன்வைக்க இயலாது, எங்கும் எந்தப் பொழுதிலும்.

விண்ணில் ஆழிவெண்சங்கம் அணிந்து அமுதக்கடலில் பள்ளிகொண்டிருக்கும் அந்தத் தொல்தெய்வமே என் முன் மஞ்சளாடையும் பீலி முடியும் என்று எழுந்தருள்கிறது என நினைத்துக்கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவிருந்ததில்லை. அவ்வாறு எண்ணிக்கொள்ள மைந்தர் எண்பதின்மராலும் இயன்றதில்லை. ஏன் என்று எண்ணிப்பார்க்கிறேன். அவ்வாறு உங்களை தெய்வம் என்று தலைக்கொண்டால் தெய்வத்தின் மைந்தர் நாங்கள். நாங்களோ அவ்வண்ணம் எங்களை உணர்ந்ததே இல்லை. அச்சமும் தனிமையும் ஐயமும் விழைவுகளும் ஆட்டிவைக்கும் எளிய மைந்தராகவே எங்களை அறிந்தோம். எங்கள் தந்தை என்பதனால் நீங்களும் எங்களைப் போன்றவரே என்று துணிந்தோம்.

பெருமானுடரின் மைந்தர்கள் அவர்களை பொருட்டென நினைக்காமல் போகிறார்கள். ஏனென்றால் மைந்தரிடம் அப்பெருமானுடர் தங்கள் மணிமுடிகளை கழற்றிவிடுகிறார்கள். தங்கள் அணிகளை அகற்றிக்கொள்கிறார்கள். புகழையும் கல்வியையும் மறைத்து எளிய மானுடர்போல களிக்கிறார்கள். கையருகே சிக்கும் ஒன்று விண்வாழ்வது என்று எவ்வண்ணம் நம்ப முடியும்? பெருமானுடர் மைந்தர்களால் கொண்டாடப்படுவது அவர்கள் விண்புகுந்த பின்னரே. அதன்பின் அவர்கள் தெய்வங்களென்று ஆகிவிடுகிறார்கள். தெய்வங்களை நாம் கையாளலாம். மானுடருடன் புழங்கலாம். மானுடதெய்வங்கள் எங்கும் நிலைகொள்ளாதவர்.

ஆகவே நான் உங்களை விலக்கிக்கொண்டேன். உங்களைப்பற்றி எண்ணாதிருக்க என்னால் இயலாது. எனவே உங்களை பிறிதொருவர் என்று எண்ணிக்கொண்டேன். உங்களுடனான எனது தொடர்புகள் அனைத்தையும் நானே இல்லாமலாக்கிக் கொண்டேன். உங்கள் பெயரை நான் சொல்வதே இல்லை. காலையில் ஒவ்வொருநாளும் துவாரகையில் நிகழும் குடிவணக்கப் பாடலில் இறுதியில் உங்கள் பெயர் வரும். அதை நான் என் நாவால் சொல்லமாட்டேன். உங்கள் படங்களை ஏறிட்டுப் பார்க்கமாட்டேன். தந்தையே, நான் மயிலை கண்களால் பார்ப்பதில்லை. குழலோசையை செவிகொள்வதில்லை.

ஆனால் அவையிலும் பிற இடங்களிலும் துணையின்றி இருக்கமுடியாதவன், தனக்கென தனி வீரமோ கல்வியோ குடிச்சிறப்போ அற்றவன் நான். எனவே என்னை என் மூத்தவர் பத்ரனுடன் ஒட்டிக்கொண்டேன். அவருடைய அணுக்க விலங்காக, ஏவலனாக மாறினேன். அதனூடாக எனக்கான சிறு இடத்தை உருவாக்கி அதில் வாழ்ந்துகொண்டேன். தந்தையே, முள் முனைகளில் சொட்டி நிற்கும் நீரை மட்டுமே அருந்தி பாலையில் உயிர்வாழும் சிற்றுயிர்கள் உண்டு. அதைப்போன்றவன் நான்.

எப்பொழுதேனும் என் அன்னையின் சிற்றூருக்கு செல்வேன். அங்கு யமுனையில் படகோட்டி வாழும் மீனவர் குடிகளுடன் இணைந்துகொள்கையில் என் இடத்தை உணர்வேன். அங்கு பிறிதொருவனாக இருப்பேன். யமுனையில் நீந்தி திளைக்கையில் என் கைகளும் கால்களும் அந்நீர்ப்பெருக்கை முன்னரே உணர்ந்திருப்பதை அறிந்து நான் நான் என்று எழுவேன். நதியிலேயே பிறந்து வளர்ந்தவர்களைவிட விரைவாக என்னால் நீந்த முடியும். அவர்களை பின்னுக்குத் தள்ளி முன்னும் பின்னும் அதை ஊடுருவிக் கடக்க முடிந்தது. அது நான் யாரென எனக்குக் காட்டியது. அங்கு அவர்களில் ஒருவனாக உணர்கிறேன். அவர்களில் மேலானவனாகவும். அவ்வண்ணம் அவர்களால் தலைவன் என உணரப்படுவதில் மகிழ்ந்தேன்.

மீண்டும் துவாரகைக்கு வரும்போது என் சிறகுகளை நீவி மடித்து என் அலகுகளைக் குவித்து முட்டைக்குள் மீண்டும் நுழையும் பறவைபோல மாறினேன். எத்திசையிலும் உள்நுழைய வாயில்கள் இல்லாத ஓர் உருளைபோல என்னை ஆக்கிக்கொண்டேன். எங்குமிருந்தேன், நாளுமிருந்தேன், எங்கும் திகழவில்லை, கணமும் வெளிப்பட்டதில்லை. இன்று இப்பேச்சை இவ்வண்ணம் விரித்துரைக்கையிலேயே நான் தோன்றுகிறேன். என்னை நானே வியந்து வியந்து இச்சொற்களினூடாக காண்கிறேன். என்னை நானே வரைந்துகொள்கிறேன்.

நான் உங்களை வெறுத்ததில்லை தந்தையே, ஒருகணமும் விரும்பியதும் இல்லை. அவ்வண்ணம் நான் சொல்லிக்கொள்வதுண்டு. ஆனால் தந்தையை வெறுப்பவர் மட்டும் தந்தைக்கு எதிரியல்ல, தந்தையை விரும்பாதவரும் தந்தைக்கு எதிரிதான் என்று மிக மிக பிந்திதான் புரிந்துகொண்டேன். இன்று தங்கள் முன் நின்றிருக்கையில் என்னை சிறுமை கொள்ளச் செய்வது இதுவே. தங்களை விலக்கி விலக்கி சிறுமை கொண்டு அச்சிறுமையுடன் இங்கு வந்து நின்றிருக்கிறேன். அச்சிறுமையையே தகுதியென்றாக்கி உங்களிடம் இரக்க வந்துள்ளேன்.

தங்களை அணுகினால் சிறுமை கொள்வேன் என்று அஞ்சியவன் நான். அணுகியிருந்தால் சிறுமையை உணர்ந்திருப்பேன் என்பதில் ஐயமில்லை. ஆனால் அச்சிறுமையிலிருந்து என் ஆழத்தை நான் கண்டிருக்க முடியும். எனக்கென ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்க முடியும். இப்பயணம் எதிர்த்திசையில் அமைந்திருந்தால் இன்று இவ்வண்ணம் வந்து நின்றிருக்கமாட்டேன். தந்தையே, இத்தருணம் என் சாவுக்கு நிகர்.

 

காளிந்தியின் மைந்தனான சோமகன் சொன்னான். தந்தையே, நான் துவாரகையின் பேரழிவை கண்களால் பார்த்தேன். பிறந்து வளர்ந்து தன் நிலமென்றும் தன் அகமென்றும் ஆன ஒரு நகர் கண்ணெதிரே உடைந்து கல்மேல் கல்லென விழுந்துகிடப்பதைக் காணும் தீயுழ் கொண்டவ்ன் நான். அதைவிட அவ்வாறு இடிந்து சரிவதைக் கண்டு அகம் மகிழ்வதை தானே உணர்ந்து தருக்கி பின் தற்சிறுமை கொண்டு கூசி விழிநீர் சிந்தி அமர்ந்து, தன்னைத் தானே வெறுத்து, பலமுறை இறந்தவன் என ஆகும் பெருந்தீயூழ் கொண்டவன்.

துவாரகை எனக்கு என்னவாகப் பொருள்பட்டிருக்கிறது என அதன் சரிவிலேயே நான் உணர்ந்தேன். அதை நான் வெறுத்தேன். அது என் நகரல்ல என்று எண்ணினேன். அதிலிருந்து கிளம்பிவிடவேண்டும் என்று விழைந்தேன். அவ்வாறு கிளம்புவதைப் பற்றி கனவு கண்டேன். தந்தையே, கிளம்பிச்சென்று குகர்களின் பேரரசு ஒன்றை அமைத்து பெரும் படையுடன் திரும்பிவந்து துவாரகையை வென்று கைப்பற்றுவதை, பின் அதை கற்குவியல் என்று இடித்துத் தள்ளிவிட்டு மீள்வதை நான் பகற்கனவில் கண்டிருக்கிறேன். கீழ்மை நிறைந்த காமக்கனவுகூட அத்தகைய தற்கூச்சத்தின் உவகையை எனக்கு அளித்ததில்லை.

ஆனால் அந்நகர் எனக்கு அரியது. ஏனென்றால் என் இனிய நினைவுகள் பல அதனுடன் இணைந்தவை. நான் அதை கனவுகளில் கண்டிருக்கிறேன். நான் உருவாக்க எண்ணிய நகர் ஒன்றுண்டு. களிந்தபுரி துவாரகையின் அதே வடிவிலேயே என் உள்ளத்தில் இருந்தது. அது நான் விரும்பும்படி சற்றே உருமாற்றப்பட்ட, சிறிதே வண்ணம் மாற்றப்பட்ட துவாரகை அன்றி வேறல்ல. நான் துவாரகையை அங்கிருந்து கொண்டுசென்று யமுனைக்கரையில் வைத்து எனக்குரியதாக்கிக் கொண்டிருக்கிறேன். நான் கண்டது துவாரகையின் அழிவு மட்டும் அல்ல, களிந்தபுரியின் அழிவும்தான்.

அரண்மனையின் உப்பரிகையில் நான் நின்றிருந்தேன். துவாரகையில் அன்று காலைதான் சிறிய நிலநடுக்கம் ஒன்று வந்திருந்தது. பல மாளிகைகள் விரிசலிட்டிருந்தன. நிலநடுக்கத்தை நான் உணர்ந்தபோது மூத்தவர் சுருதனின் அவையில் உடன்பிறந்தாருடன் பேசிக்கொண்டிருந்தேன். அனைவருமே மது அருந்தியிருந்தோம். எனக்கு நோக்கு அலைபாய தலைசுழன்றது. குமட்டல் எழ எழுந்து விரிகலம் நோக்கி சென்றேன். அதற்குள் மூத்தவர் சுருதனும் கவியும் குமட்டி வாயுமிழ்ந்தனர். விருஷன் “என்ன மது இது… குமட்டுகிறது” என்றார். சுருதன் “அடுமனையாளன் எவன்? அழை அவனை” என்றார்.

அப்போதுதான் ஏவலன் ஒடி வந்து அறிவிப்பின்றி “அரசே, நகரில் நிலநடுக்கம் தோன்றியிருக்கிறது” என்றான். “என்ன?” என்று அவர் கேட்டார். “மண் அதிர்ந்திருக்கிறது… கட்டடங்கள் விரிசல்கொண்டிருக்கின்றன” என்றான் ஏவலன். வெளியே மக்களின் கூச்சலும் கொந்தளிப்பும் அவர்களை அடக்கமுயலும் முரசுகளின் முழக்கமும் கேட்டது. சுருதன் எழுந்துகொண்டு “மூத்தவர் ஃபானுவை பார்க்கவேண்டும்… உடனே” என்றார். “நகர் நிலையழிந்துள்ளது. நாம் அவருடன் இருக்கவேண்டும்” என்று மேலாடையை எடுத்துப் போட்டுக்கொண்டு கிளம்பினார்.

நான் மாளிகை முகப்பில் நின்று விரிசல்விட்டு நின்ற கட்டடங்களை பார்த்தேன். அவை விரிசலிடுவதற்கான அடிப்படைகள் எதுவும் இல்லை. துவாரகையில் நிலம் நடுங்கினாலும் கட்டடங்கள் நிற்கும் பொருட்டு பாறைகளின் மீதாகவே அடித்தளங்கள் அமைக்கப்பட்டு அனைத்தும் கட்டப்பட்டிருந்தன. நடுங்கியது நிலம் அல்ல, நகர் அமைந்திருந்த பெரும்பாறைதான் என்று சிலர் கூவினர். நிலம் நடுங்கியமைக்கு அடிப்படை நிலமல்ல, நிலமென்றாகி அந்நகரைக் காத்திருந்த பிறிதொன்று அகன்றதே என்று அமைச்சர்கள் பேசிக்கொண்டனர்.

நகரம் கலைந்து குழம்பி சுழன்று கொண்டிருந்தது. அதை அமையவைக்கும் ஆணையென எதுவுமில்லை. அவ்வாறு ஆணையளிக்கும் தகுதிகொண்ட எவரும் மேலெழுந்து வரவுமில்லை. தன் இளையோனை தானே கொன்றதனால் பிரத்யும்னன் உளம் சிதறி மாறி மாறி உடன்பிறந்தாருடன் பேசிக்கொண்டிருந்தார். ஃபானு எழுந்து ஆணையிட வேண்டுமென்ற ஆணையை தனக்குத்தானே விடுத்துக்கொண்டு, அதற்கு ஏன் தன் உள்ளம் ஒருங்கவில்லை என்று தானே வியந்துகொண்டு, தன்னறையில் தன் உடன்பிறந்தாருடன் இருந்தார். தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருந்தார். எந்த முடிவையும் எடுக்க முடியாதவர்கள் கண்டடையும் வழி அது, பேசுவது. பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்றும், செயல்படக்கூடும் என்றும் ஒருவர் தனக்கும் தன்னவர்க்கும் காட்டிக்கொள்வதற்கான வழி. ஆனால் பொய்யான வழி, உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதை எவரும் மறைத்துவிட முடியாது.

சாம்பன் அத்தகைய அருந்தருணங்களுக்கு ஏற்ற வண்ணம் எழும் ஆற்றல் எப்போதும் உடையவரல்ல. அவர் குழம்பி நடுங்கி தன் அறைக்குள் ஒடுங்கியிருந்தார். அவர் உடன்பிறந்தார் ஒவ்வொருவரும் அவரைச் சென்று பார்த்தபோது பதறி எழுந்து வந்து “என்ன நிகழ்கிறது? என்ன நிகழ்கிறது?” என்று கேட்டார். “நகரம் அலைகொண்டிருக்கிறது”
என்றபோது “முற்றாக இடிந்துவிட்டது என்றார்களே?” என்றார். “இல்லை, சில நூறு கட்டடங்களில் விரிசல்கள் விழுந்திருக்கின்றன. அவை நிலைகொள்ளவும்கூடும். பெரிதாக ஒன்றுமில்லை, இங்குள்ள கட்டடங்களை எளிதாக சீரமைத்துவிட முடியும் என்கிறார்கள் சிற்பிகள்” என்றார் சுமித்ரன்.

சாம்பன் உடனே எழுந்து கைநீட்டி “எங்கே? சிற்பிகள் எங்கே? சிற்பிகளை கூட்டிவாருங்கள்” என்றார். “சிற்பிகளை தேடித்தான் படைவீரர்கள் சென்றிருக்கிறார்கள். விரைவில் வந்துவிடுவார்கள்” என்று அவர்கள் கூறினர். “சிற்பிகள்! சிற்பிகள் உடனே செயல்படட்டும். இது அரசாணை! இன்றே கட்டடங்கள் சீரமைக்கும் பணி தொடங்கட்டும். அவர்கள் கட்டடங்களை சீரமைத்த பின்னர் நான் அவற்றை பார்க்க விரும்புகிறேன்” என்றார் சாம்பன். அவருடைய உடன்பிறந்தோர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். “மூத்தவரே, முதலில் இங்கு நிகழவேண்டியது ஒழுங்கு. இத்தருணத்தில் குடிகள் அனைவரும் தெருவில் இறங்கி என்ன செய்வது என்று அறியாமல் நகரின் எல்லைகளில் ததும்பிக்கொண்டிருக்கையில் இங்கு வேறெதைப்பற்றியும் நாம் எண்ண முடியாது” என்றனர்.

“ஆம், ஒழுங்கமைய வேண்டும். ஒழுங்கமைய ஆணைகளை பிறப்பியுங்கள்” என்றபின் “ஆனால், நான் அரசன் அல்ல. எனக்கு மணிமுடி இல்லை. எந்தை எனக்களித்த பொறுப்பை அந்த யாதவ மூத்தவனுக்கு அளித்துவிட்டேன். இன்று நான் எழுந்து கூறினால் எவரும் கேட்கப்போவதில்லை” என்றார். “ஆணைகளை கடைபிடிக்கும்படி அவர்களுக்கு நாம் அறிவுறுத்தவேண்டும்” என்று சுமித்ரன் சொன்னார். சாம்பன் “ஆம், அறிவுறுத்தவேண்டும். நான் ஆணையிடுகிறேன். நமது படைகள் நகரில் இறங்கட்டும். ஆணைகளை கடைபிடிக்காத அனைவரின் தலைவெட்டி வீழ்த்தும்படி ஆணையிடுகிறேன்” என்றார்.

“எனில் மொத்த நகரையும் தலைவெட்டி வீழ்த்தவேண்டியிருக்கும். அதற்குரிய தருணம் இது அல்ல” என்று விஜயன் பொறுமையிழந்து சொன்னார். சித்ரகேது “தாங்கள் இங்கு இருங்கள் மூத்தவரே, வெளியே வரவேண்டியதில்லை. நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்கிறோம்” என்றார். “அவன் என்ன செய்கிறான் என்று கேட்டு வா… அவன் செய்யாவிட்டால் நான் செய்கிறேன். இந்நகரை நானே ஆள்கிறேன். என் தகுதியால்தான் என்னை எந்தை இந்நகரின் அரசராக ஆக்கினார்” என்று சாம்பன் சொன்னார். “அந்தக் கோழை அரசமரக்கூடும் என்பதனால்தான் தெய்வங்கள் நிலமசைத்து எச்சரிக்கின்றன.” கைவிரித்து “இந்நகரின் விரிசல்களை இணைக்க முடிந்தவன் நான் மட்டுமே” என்றார்.

வெளியே வந்து உடன்பிறந்தார் ஒருவரை ஒருவர் நோக்கினர். “இவரால் இத்தருணத்தை எதிர்கொள்ள இயலாது. இவருடைய தகுதி என்பது போர்க்களங்களில் எழும் கட்டற்ற வெறி மட்டுமே. அப்போது ஆயிரம் கைகள் கொண்டவர் போலாவார், நூறு விழிகொண்டவர் என மாறுவார். சூழ்ந்திருந்தவர்களை அழித்து காட்டெரி என உருகி முன் செல்வார். அதை பெருவீரம் என்று எண்ணிக்கொள்கிறோம். எதிர்விசையை தாங்குவதொன்றே அரசனின் வீரம் என்பார்கள். அதில் இவர் பாலாடைபோல மென்மையானவர்” என்றார் சுமித்ரன்.

வசுமான் “நாம் ஒன்று செய்யலாம்…” என்றார். “சொல்” என்று சுமித்ரன் திரும்பினார். “நாம் அரசியிடம் கூறுவோம். முழுப் பொறுப்பையும் அரசியிடம் ஒப்படைப்போம்” என்றார். “ஆம், அவரால் இயலும். அதுவே வழி” என்று புருஜித் கூறினார். “அரசி இப்போது அவைச்செயல்பாடுகளில் இல்லை. செய்திகளை மட்டும் தெரிந்துகொள்கிறார். இப்போது ஃபானுவை அரசர் என இளையவர்கள் கூடி முடிவெடுத்திருப்பதனால் அரசப்பொறுப்பில் இருந்து அவர் எதையும் செய்யவும் முடியாது” என்றார் சுமித்ரன். “ஆம், ஆனால் இடர்க்காலங்களில் எதைச் செய்யவும் ஒப்புதல் உண்டு. இன்று மக்கள் நம்பும் ஒரு அரசவடிவம் அரசி கிருஷ்ணை மட்டுமே” என்றார் வசுமான்.

சாம்பனின் உடன்பிறந்தவர்கள் சென்று அரசி கிருஷ்ணையை பார்த்தனர். அரசி தன் தனியறையில் தனக்குரிய ஒற்றர்களிடம் கூடிப்பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் அங்கு சென்று வணங்கினர். ஒற்றர்களை அனுப்பிவிட்டு அவர்களை உள்ளே அழைத்த அரசி அவர்கள் சொல்வதை கண்களை தாழ்த்தியபடி கேட்டுக்கொண்டார். “அரசி, தாங்கள் இந்நகரின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். நகரிலுள்ள அனைத்துச் சரடுகளையும் தாங்கள் பற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் இது தன்னைத் தானே சிதறடித்துக்கொள்ளும்” என்றார் வசுமான்.

“ஆம், ஒற்றர்களை இங்கு வரவழைத்து உசாவினேன். என்ன நிகழ்கிறது என்று நன்று அறிந்துள்ளேன்” என்று அவர் சொன்னார். “மக்களுக்கு எதுவுமே தெரியாது. உண்மையில் இங்கிருந்து மொத்த நகரையும் பார்ப்பதற்கு எவராலும் இயலாது. கண்ணெதிரே ஒரு கட்டடம் அல்லது இரு கட்டடம் சிதறுண்டு விழுவதைத்தான் பார்த்திருக்கிறார்கள். ஆகவே மொத்த நகரும் இடிந்து சரிந்திருக்கிறது என்ற கற்பனையை அடைகிறார்கள். அக்கற்பனையை தானே நம்பும்பொருட்டு பிறரிடம் சொல்கிறார்கள். சொல்லிச் சொல்லி பெருக்கி நகரமே இடிந்து அனைவர் தலைமேலும் விழுந்துகொண்டிருக்கிறது என்ற உளமயக்கை அனைவரும் அடைந்திருக்கிறார்கள்” என்றார்.

அவருடைய குரலின் உறுதி அவர்களை ஆறுதல்கொள்ளச் செய்தது. “ஒருசில சிறு விரிசல்கள்தான் நிகழ்ந்திருக்கின்றன என்பதுதான் நாம் அவர்களிடம் தெரிவிக்க வேண்டியது” என்று அரசி சொன்னார். “ஆம், ஆனால் அதற்கு இயற்றவேண்டியது என்ன என்று தெரியவில்லை” என்றார் சுமித்ரன். கிருஷ்ணை “நகரின் எல்லையில் துர்க்கை அன்னையின் ஆலயம் ஒன்றுள்ளது. இன்று எட்டாம் எழுநிலவு. அன்னைக்கு மாதந்தோறும் செய்யப்படவேண்டிய தனிப்பூசனைகளுக்கான நாள்” என்று அவர் சொன்னார். “நான் வழக்கம்போல அணியூர்வலமாக அப்பூசனைக்கு செல்கிறேன்.”

அவர் அதை சொன்னபோது ஒவ்வொருவரும் தங்களுக்குள் பூசனைக்குரிய தருணமா இது என்றனர். ஒருவரை ஒருவர் விழிநோக்கினர். “உண்மையில் இப்போது நான் மக்கள் முன் எழுந்தாகவேண்டும். இந்நகரைக் கைவிடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் நாம் அஞ்சிக்கொண்டிருக்கவில்லை என்றும் எல்லாமே நம் ஆட்சியில்தான் உள்ளன என்றும் மக்களுக்கு தெரிவித்தாக வேண்டும். இந்நகரத்தில் ஒவ்வொன்றும் தனக்குரிய நிலையிலேயே நீடிக்க வேண்டுமென்று நாம் ஆணையிடுவதை அவர்களுக்கு அறிவிக்கவேண்டும். அதற்கு ஒரே வழி அவர்கள் முன் தோன்றுவது. நேரில் ஆட்சியாளர்களை பார்க்காமல் இத்தருணத்தில் எவரும் எதையும் நம்ப மாட்டார்கள்.”

“அரசு என்பது பெரும்பாலான பொழுதுகளில் ஒரு நம்பிக்கை, ஓர் உருவகம், அருகிருக்கும் சில தொடர்பு அமைப்புக்கள். ஆனால் இடர்க்காலங்களில் அரசு என்பது கண்முன் எழும் அரசனே. அவனுடைய மணிமுடியும் செங்கோலுமே. மனிதர்கள் மனிதர்களை மட்டுமே தலைவர்கள் என ஏற்கமுடியும்” என்று கிருஷ்ணை சொன்னார். “ஆனால் அறிவிப்புகள் அளிக்கவோ, அறிவுறுத்தவோ, ஆணையிடவோ அவர்களிடையே தோன்றினால் அதுவே மேலும் அச்சத்தை அளிக்கும், நான் வழக்கமான இறைபூசனைக்குச் சென்றால் மட்டும் போதும், இங்கு நிகழ்ந்த விரிசல்களைப் பற்றி நாம் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை என்று குடிகள் அதிலிருந்தே அறிவார்கள்.”

“ஆனால்” என்று ஐயத்துடன் சுமித்ரன் சொன்னார். “அதுவே நிகழட்டும்” என்று கிருஷ்ணை ஆணையிட்டார் “முழு அணிவகுப்பு எனக்குத் தேவை. படைக்கலங்கள் கொண்ட வீரர்கள் என்னைச் சூழ்ந்து வரவேண்டும். மங்கலச்சேடியரின் அணிநிரை, இசைச்சூதர்களின் சூழ்கை, பட்டங்கள், பரிவட்டங்கள் என அனைத்தும் தேவை. துவாரகை பொலிந்த நாட்களில் என்ன நடந்ததோ அது நடக்கவேண்டும்” என்று கிருஷ்ணை சொன்னார்.

முந்தைய கட்டுரைசீட்டு [சிறுகதை]
அடுத்த கட்டுரைபோழ்வு, பலிக்கல்- கடிதங்கள்