கடிதங்கள் பதில்கள்

 

அன்புள்ள ஜெ

நான் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒருவர் ஆவேசமாகச் சொன்னார். கோவிட் வைரஸில் மக்கள் சாகிறார்கள். பல்லாயிரம் ஏழைகள் வறுமைக்கு தள்ளப்படுகிறார்கள். பலநூறு கிலோமீட்டர் தூரம் நடந்து சாகிறார்கள். அதைப்பற்றி கவலையே படாமல் இலக்கியவாதிகள் இலக்கியம் படைக்கிறார்கள். இவர்களெல்லாம் மனிதவிரோதிகள்.நீங்கள் நினைப்பது சரிதான், அவர் ஒரு மார்க்சியர்.

ஆனால் உண்மையில் அப்படி ஒரு கேள்வி உங்கள் முன் வந்தால் எப்படி பதில்சொல்வீர்கள்? நான் அந்தக்கேள்விக்கு ஒரு பதிலைச் சொன்னேன் அது வேறு விஷயம்

மகேஷ்

***

அன்புள்ள மகேஷ்

தமிழகம் போல படைப்பியக்கத்திற்கு எதிரான மனநிலைகொண்டவர்களால் சூழப்பட்ட இலக்கியச்சூழல் வேறெங்கும் இல்லை. இது நூறாண்டுகளாக இப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறது. ‘மக்கள் பட்டினி கிடக்கிறார்கள் இப்ப இலக்கியமா முக்கியம்?’ ‘ஃபாசிசத்துக்கு எதிராக போராடிட்டு இருக்கோம், இப்ப இலக்கியமா முக்கியம்?’ இப்படி கேள்விகள் வந்துகொண்டே இருக்கும்.

ஒட்டுமொத்தமாக இலக்கியம் முக்கியமே அல்ல என்பதுதான் இதன் சாரம்.  ‘எழுதாதே நிறுத்து, நாங்கள் செய்வதையே செய்’,  ‘எங்களால் இவ்வளவுதான் முடியும், உன்னாலும் இதற்குமேல் முடியக்கூடாது’—இவ்வளவுதான். இந்தக் குப்பைக்குரல்களை கடந்தே புதுமைப்பித்தன் எழுதினான். ‘நாடு சுதந்திரப்போராட்டத்தில் எரிகிறது, உனக்கென்ன இலக்கியம்?’ என்று அவனிடம் கேட்டார்கள்.

இலக்கியவாதியின் உள்ளம், இலக்கியம் உருவாகும் விதம் நேர்கோடு அல்ல. அங்கே என்ன நிகழ்கிறது என்று எழுத்தாளனால் கூட சொல்லிவிடமுடியாது. போர்க்காலங்களில் காதல்கவிதை எழுதியிருக்கிறார்கள். பஞ்சகாலங்களில் கனவுகளை எழுதியிருக்கிறார்கள். உலகின் பேரிலக்கியங்களில் பல கொள்ளைநோய்க் காலகட்டத்தில் எழுதப்பட்டவை.

சமகால நிகழ்வுகளை இலக்கியவாதி பிற எந்த குடிமகனையும்போல உணர்வுரீதியாக எதிர்கொள்கிறான். உணர்ச்சிகளை அடைகிறான். ஆனால் உடனே அவற்றை அப்படியே பதிவுசெய்வது இலக்கியமல்ல என்று அவனுக்கு தெரியும். அது இலக்கியமாக ஆக ஏதோ ஒன்று நிகழவேண்டியிருக்கிறது. அது எழுத்தாளனுக்குள் வளர்ந்து உருக்கொள்ளவேண்டியிருக்கிறது.

அவ்வப்போது செய்திகளைக் கண்டு எதிர்வினையாற்றுவது இலக்கியப்படைப்பு அல்ல. அத்தகைய எதிர்வினைகளில் வழக்கமாகச் சூழலில் இருந்துகொண்டிருக்கும் உணர்வுகளில், கருத்துத் தரப்புகளில் ஒன்று இருக்கும். அதுதான் ஏற்கனவே இருக்கிறதே, அதை எழுத எழுத்தாளன் எதற்கு?

இந்த மார்க்ஸியர்கள் முகநூலில் பொங்கல் வைப்பதற்கு அப்பால் என்ன செய்தார்கள்? என்ன செய்ய முடியும்? சுனாமி வந்தபோது நான் களத்தில் இறங்கிப் பணியாற்றினேன். என் கைகளால் பிணங்களை அகற்றினேன். அதை அன்றன்று பதிவும் செய்தேன். ஆனால் இன்றுவரை ஒருகதை அதைப்பற்றி எழுதவில்லை—எழுதவரவில்லை.

ஆனால் ஐம்பதாண்டுகளுக்கு முன் ஓர் அனாதை விதவைக்கு முழுநாளும் அமர்ந்து ஒரு குழந்தைப்பொம்மையைச் செய்துகொடுத்துவிட்டுச் சென்ற ஓர் ஆசாரியை எண்ணி இந்த தனியறையில் அமர்ந்து நான் மனமுருகி கண்ணீர் சிந்தினேன். அதுதான் கலையின் பாதை.

எது கலையாகிறது, ஏன் என்பதை அறியாமல் அதைநோக்கித் தவம் செய்வதே கலை. அது கருமாதி வீட்டில் குழந்தைபோல சிரிக்கலாம். கல்யாணவீட்டில் அழவும் செய்யலாம். ஆனால் அது பொருளற்றது அல்ல. சிலசமயம் கலை சமன் செய்கிறது. சிலசமயம் நம்பிக்கை ஊட்டுகிறது. சிலசமயம் எச்சரிக்கிறது, அச்சுறுத்துகிறது. சிலசமயம் நம்பிக்கையிழந்து கண்ணீர் விடுகிறது. அரிதாக சாபமிடுகிறது.

கலையின் வழியை ஒற்றைப்படையாக வகுக்கக்கூடாது. அதிலும் அரசியல் கும்பலிடம் அந்த வாய்ப்பையே அளிக்கக்கூடாது. ’வழியில்நின்று குரைக்காதே, தள்ளிப்போ’ என்று சொல்லிவிட வேண்டும்.

ஜெ

***

அன்புள்ள ஜெ.

உங்களது கதைகளை ஒரே வீச்சில் படிக்கும்போது, கதைகளின் தலைப்புகளின் ஆழமும் கவித்துவமும் பிடிபடுகிறது.

கதையின் ஒரு அம்சமாகவே, பிரதியின் ஓர் அங்கமாக தலைப்பு இருக்கிறது.  எப்படி, கதையின் ஒரு வரியை எடுத்துவிட்டால்,  கதையின் முழுமை சீர்குலையுமோ, எப்படி அநாவசியமான ஒரு வார்த்தைகூட கதையில் இருக்காதோ, அதுபோல அத்தியாவசியமான / நீக்கவோ மாற்றவோ முடியாத ஓர் உறுப்பாக தலைப்புகள் இருக்கின்றன

சிறுகதைகளுக்கு எப்படி தலைப்பிட வேண்டும் ..  அது கூடாது என நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்.ஆனாலும் நீங்கள் எப்படி தலைப்பிடுகிறீர்கள் ,  அதற்கு நீங்கள் எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள் என்பதை அறிய ஆவல்

என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்

***

அன்புள்ள பிச்சைக்காரன்

தலைப்புக்கள் கதையை நினைவுகூர உதவியானவை. தலைப்பு கதை என்னும் வடிவின் ஒரு பகுதி. இந்த உணர்வுடன் தலைப்பிடுவேன்

தலைப்பு கதையை விளக்கக்கூடாது- ஆனால் சம்பந்தம் அற்றதாகவும் இருக்கலாகாது. கதையில் ஒரு சிறு அர்த்தத்தை கூடுதலாகச் சேர்க்கவேண்டும், அவ்வளவுதான்.

சிலசமயம் கதையின் மையமே தலைப்பாக வந்துவிடும்- ’துளி’ போல. அது இயல்பானது

தலைப்பு மிக அரிதாக கதையின் மையத்தை சற்றே மூடிவைப்பதற்கு பயன்படும். அப்படியும் சிலகதைகள் உள்ளன. அதுவும் கதை என்ற ஆடலின் ஒரு பகுதியே.

சிலசமயம் தீவிரமான ஒரு கதையை எளிய தலைப்பால் சற்று சமன்செய்வதும் உண்டு.

சிலசமயம் ஒரு வார்த்தையை சொல்லிச் சொல்லி அதிலிருந்து கதையை உருவாக்குவோம். ’முதல் ஆறு’ அப்படிப்பட்டது.

ஆனால் தலைப்பை ‘யோசித்து’ வைப்பதில்லை. சட்டென்று தலைப்பு தோன்றிவிடவேண்டும். கதை தோன்றுவதைப்போலவே

இந்த வரிசையில் எனக்குப் பிடித்த தலைப்பு ‘பொலிவதும் கலைவதும்’

ஜெ

***

 

முத்தங்கள் [சிறுகதை]

கூடு [சிறுகதை]

சீட்டு [சிறுகதை]

போழ்வு [சிறுகதை]

நஞ்சு [சிறுகதை]

பலிக்கல்[சிறுகதை]

காக்காய்ப்பொன் [சிறுகதை]

லீலை [சிறுகதை]

கரவு [சிறுகதை]

ஐந்து நெருப்பு[ சிறுகதை]

நற்றுணை [சிறுகதை]

இறைவன் [சிறுகதை]

மலைகளின் உரையாடல் [சிறுகதை]

முதல் ஆறு [சிறுகதை]

பிடி [சிறுகதை]

கைமுக்கு [சிறுகதை]

உலகெலாம் [சிறுகதை]

மாயப்பொன் [சிறுகதை]

ஆழி [சிறுகதை]

வனவாசம் [சிறுகதை]

மதுரம் [சிறுகதை]

ஓநாயின் மூக்கு [சிறுகதை]

வான்நெசவு [சிறுகதை]

பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

வான்கீழ் [சிறுகதை]

எழுகதிர் [சிறுகதை]

நகைமுகன் [சிறுகதை]

ஏகம் [சிறுகதை]

ஆட்டக்கதை [சிறுகதை]

குருவி [சிறுகதை]

சூழ்திரு [சிறுகதை]

லூப் [சிறுகதை]

அனலுக்குமேல் [சிறுகதை]

பெயர்நூறான் [சிறுகதை]

இடம் [சிறுகதை]

சுற்றுகள் [சிறுகதை]

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

வேரில் திகழ்வது [சிறுகதை]

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

தங்கத்தின் மணம் [சிறுகதை]

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

ஏதேன் [சிறுகதை]

மொழி [சிறுகதை]

ஆடகம் [சிறுகதை]

கோட்டை [சிறுகதை]

துளி [சிறுகதை]

விலங்கு [சிறுகதை]

வேட்டு [சிறுகதை]

அங்கி [சிறுகதை]

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

பூனை [சிறுகதை]

வருக்கை [சிறுகதை]

“ஆனையில்லா!” [சிறுகதை]

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சக்தி ரூபேண! [சிறுகதை]

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை

முந்தைய கட்டுரைநஞ்சு சீட்டு மற்றும் கதைகள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபோழ்வு, பலிக்கல்- கடிதம்