பலிக்கல், லீலை- கடிதங்கள்

பலிக்கல்[சிறுகதை]

அன்புள்ள ஜெ

கலை ஒரு விஷயத்தை கண்டு சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதற்கு அரசியலில் சட்டத்தில் நடைமுறை அன்றாட வாழ்க்கையில் பெரிய மதிப்பும் இல்லை. ஆனால் கலை அதைச் சொல்வதையும் விடவில்லை. அதைத்தான் பழிபாவம் என்று சொல்கிறோம். திருவள்ளுவர் சொல்கிறார். எல்லா ஞானிகளும் சொல்கிறார்கள். ஆனால் நமக்கு நம்பிக்கை வரவில்லை. அப்படியென்றால் இது என்ன என்றுதான் திருவள்ளுவரிடமும் கேட்போம்

ஏனென்றால் இதில் நம்முடைய சொந்த லாஜிக் சரியாக பொருந்தவில்லை. கொஞ்சம் சரியாக இருக்கிறது. கொஞ்சம் வெளியே கிடக்கிறது. நமக்கு நம்மிடம் இருக்கும் லாஜிக் மேல் அபாரமான நம்பிக்கை. இந்த லாஜிக் இந்த பிரபஞ்சத்தின் எல்லா விஷயங்களையும் அறிந்துகொள்ள உதவியானது என்ற எண்ணம். ஆகவே முட்டிக்கொண்டே இருக்கிறோம். இந்த அலைக்கழிப்புதான் நம் வாழ்க்கை. நம்மில் பாமரர்கள் எல்லாருமே இந்த இரட்டைநிலைகளுக்கு நடுவே கிடந்து அலைமோதிக்கொண்டே இருப்பவர்கள்தான். இந்த கதையை எந்த ஒரு பாமரரிடம் சொன்னாலும் இந்த ஐயமும் குழப்பமும் தான் கேள்வியாக வெளிப்படும். இதிலிருந்து மீட்பே இல்லை

நான் பணியாற்றிய காலத்தில் விசாரணைக் கைதியாக எந்த ஆவணமும் இல்லாமல் ஏழெட்டு வருசம் ஜெயிலில் கிடந்தவர்களை பார்த்திருக்கிறேன். இப்போதுகூட அப்படி பலர் ஜெயிலில் கிடக்கிறார்கள். வெளியே எவராவது தொடர்ந்து மூவ் செய்யவில்லை என்றால் ஜெயிலுக்கு போனால் அவ்வளவுதான். ஃபைல்கள் இல்லை என்றால் ஒருவர் உள்ளே இருக்க நியாயமே இல்லை. ஆனால் உள்ளே ஒருவர் ஏன் இருக்கிறார் என்றால் சம்பந்தப்பட்ட ஃபைலே காணும்சார் என்பது பதிலாக இருக்கும். நம்பவே முடியாத ஆச்சரியம் இது. இதெல்லாம் பலர் எழுதிவிட்டார்கள். நிறைய பேசியிம் விட்டார்கள். ஒன்றும் நடக்கவில்லை.

அங்கே பழிபாவம் பற்றி பேசிக்கொண்டு வேலைசெய்ய முடியாது. டிபார்ட்மெண்டில் அந்த நம்பிக்கை உண்டா என்றால் ஆச்சரியம் 90 சதவீதம்பேருக்கும் அந்த நம்பிக்கையும் உண்டு. ஒருசிலருக்குத்தான் இல்லை. அதோடு அனியாயம் செய்து அழிந்துபோன போலீஸ்காரன் குடும்பம் பற்றிய பேச்சு எப்போதுமே இருந்துகொண்டும் இருக்கும்

அந்த மன்னிப்புக்குரல் அந்த பெண்மணியுடையதுதான் என நினைக்கிறேன். ஒரு அம்மன் மாதிரி நின்று அந்தம்மாதான் ரெண்டுபேருமே எனக்கு ஒண்ணுதான், சின்னப்பிள்ளைகள்தான் என்கிறாள். கொன்றவனும் செத்தவனும் சமமாக ஆகும் நிலை. அந்தமாதிரி இரண்டுபேரை எனக்கு தெரியும். டீடெயிலுடன் தனியாக அனுப்பியிருக்கிறேன்

கி.குமரேசன்

***

அன்புள்ள ஜெ, வணக்கம்,

நற்றுணை போலவே பலிக்கல் கதையிலும் போற்றி தன்னை மற்றொருவராக மாற்றிக்கொள்கிறார். அம்மிணி அம்மச்சி அவ்வப்போது கேசினியைக் காட்டுகிறார், ஆனால் போற்றியோ தன்னை அழகிய நம்பியா பிள்ளையாகவே முற்றிலும் மாற்றிக் கொண்டார். இதில் நம்பியா பிள்ளைக்கு இரு சாபங்கள், கோவில் சொத்தைக் கொள்ளையடித்தது மற்றும், பழியை அப்பாவி மேல் போட்டது.

என்னுடைய உறவினர் குடும்பத்தில் கூட இது போல் ஒரு சாபம், நான்கு தலைமுறைகளாக தொடர்ந்து (இன்னும் கூட) வந்து கொண்டிருக்கிறது.  தம்பியின் பங்குச் சொத்தையும் அண்ணன் கைப்பற்றிக்கொள்ள, தம்பியின் குடும்பம் தடுமாறியது. அண்ணன் குடும்பத்திற்கு பணம் குறைவில்லை ஆனால் குடும்பத்தில் அகால மரணங்களும், வீட்டிற்கு ஒருவர் மனநிலை பிறழ்வதும் தொடர்கிறது.  இன்று அண்ணனின் வாரிசுகள் பிழைநேர் செய்ய முன்வந்தாலும் தம்பியின் வாரிசுகள் ஒப்பவில்லை.  அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை என்ற குறளுக்குப் பொருத்தமான கதை.

நன்றி ஜெ.

நாரா.சிதம்பரம்.

***

லீலை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

லீலை கதையின் ஒரு அம்சம் எனக்கு ஆச்சரியமாக இருந்ததுஅந்த சைக்கிள்சர்க்கஸ் எங்களூரிலும் நடந்திருக்கிறது. அது இன்றைக்கு இல்லை. அதன் முக்கியமான அம்சமே வெளியே கூடும் கூட்டம்தான். வேலையில்லாமல் வேடிக்கைபார்க்க அலைபவர்கள். அவர்கள்தான் ஆடியன்ஸ். அவர்கள் இன்றைக்கு இல்லை. அதேபோல ரிக்கார்டு டேன்ஸ். அது ஒரு மிமிக்ரி. சினிமாவை நடித்துப்பார்ப்பது. அன்றைக்கு சினிமா ரொம்பதூரத்தில் இருந்தது. செலவும் கூடுதல். ஆகவே அதை நடித்துக்கொண்டார்கள். என்றைக்கு டிவி வந்து சினிமா மலிந்ததோ அன்றைக்கே ரிக்கார்டு டேன்ஸ் இல்லை. இன்றைக்கு அதை குடும்பப்பெண்கள் டிக்டொக் செயலியில் செய்கிறார்கள்.

லீலை அந்தக் காலகட்டத்தை, அந்த கலாச்சாரப்பகுதியை அழகாக சொல்கிறது. அதில் மயங்கிப்போய் பார்க்கும் ஒருவனின் பார்வையில் அது சொல்லப்படுவதனால் இன்னும் ஆழமாக இருக்கிறது. அந்த சர்க்கஸ் உட்பட எல்லாமே ஒரு ஏமாற்றுதான். அவர்களை அவள் ஏமாற்றுகிறாள். அவள் தேன்சிட்டு போல. அப்படி ஏமாற்றி தேன் குடித்து அலைபவள். அவள் ஒரு சாக்சக்காரப் பெண். அந்தப்பெண் உருவாக்கும் மயக்கம் கலையவே கலையாது

ஜி.பழனிவேல்

***

வணக்கம் ஜெ

லீலை சிறுகதையை வாசித்தேன். அப்டி மாறினா அது ஆட்டம் என்று அவள் சொல்வதில்தான் கதையின் முடிச்சு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு தேவை. அதற்குத் தோதாக ஒரு ஆடல். இப்படியாக லீலைகள் புரியும் ஒரு ஆட்டக்காரியின் கதை. தெய்வங்களையுமே அப்படிதான் உருவகம் செய்திருக்கிறோம் என எண்ணத்தோன்றச் செய்யும் கதை.

அரவின்குமார்

***

முந்தைய கட்டுரைபோழ்வு,முதல் ஆறு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநஞ்சு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்