போழ்வு [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
“போழ்வு”கதையை படித்தேன் .
என் கிராமத்தில் பழைய தலைமுறை வீடுகளில் சில இன்றும் இருக்கிறது. அங்கு சாலை வழியாக கடந்து செல்வோர் கண்களில் படும் நிலையில் சமீப காலம்வரை சில பெரிய படங்கள் சுவரில் கம்பீரமாக வைத்திருப்பார்கள். அதேபோன்று நாயர்கள் வைத்திருக்கும் கடைகளிலும் ஸ்ரீராமன், மன்னத்து பத்மநாபன், வேலுத்தம்பி தளவாய் படங்களை பெரிய கட்டி மர சட்டம் உடைய படங்கள் மாட்டி வைத்திருப்பார்கள்(இப்போது அதிகமாக காண்பதில்லை). இப்பொழுதும் அது இருக்கும் இடங்கள் சில இருக்க வாய்ப்பு உள்ளன.
வேலுத்தம்பி தளவாய் மிகப்பெரும் பிம்பம். கரார் பேர்வழி .மண்ணடியில் கத்தியால் குத்தப்பட்டு சுய மரணமடைந்த வரலாறும்அவர் பெரிய தியாகியாக பார்க்கப்படுகின்றன நிலை உருவாகி சாதி சிலரால் வழிபடுகின்றனர்.
இந்த பின்னணியில் சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளுக்கு பெற்றோர் கதை சொல்லி கொடுப்பது போல என் அப்பாவும் வேலுத்தம்பி தளவாய் வரலாறை கதையாக தூங்க செல்கையில் சொல்லித்தந்தது உண்டு .மாபெரும் வீரனாய், தியாகியாய் உள்ளத்தில் சிலகாலம் வாழ்ந்தவர் வேலுத்தம்பி தளவாய்.
ஆனால் தங்களது “போழ்வு” கதை மிகப்பெரிய பிம்பமாய் உள்ளத்தில் இன்னும் மிச்சம் வைத்திருப்பவர்களின் கனவுகள் உடைபடும் தருணம். இக் கதையின் கடைசி பகுதி உருவாக்கி உள்ளது அதிர்வு.வரலாறை கதைகளாக மாற்றும் பொழுது கற்பனையோடு நிஜங்களும் இழுகி இணைந்து பேரதிர்வு எண்ணைத்தையே உருவாக்கி விடுவதுண்டு .
இங்கும் களக்காடு மக்களை தலைகொய்து கழுவேற்றி படுகொலைச் என்ற உச்சமாய் துவங்கி, தன் பதவிக்கு ஊன்றுகோல் ஆனவரை யானைகளால் கிழித்து வீசும் கொடூரம் இறுதியில் உச்சத்தின் உச்சமாகவும் உள்ளது .
ஏற்கனவே ராஜா கேசவதாஸின் வீழ்ச்சி இடமும் உச்சத்தில் இருந்து கீழ்நோக்கி விழுந்ததைப் போன்று, தன்னை பாதுகாத்துக்கொள்ள தான் நம்பிய படை இல்லை என்றதும் துரைகளிடம் சரணாகதி ஆனது வீரனின் லட்சணம் அல்ல .
தன் தாயை கொடூரமாக தண்டித்தல், தன் குருவின் மருமகனும் தனக்கு எல்லா வகையிலும் துணை சென்றவரையும் படுகொலை செய்வது நீதிமானின் லட்சணம் அல்ல.
இதுபோன்ற வீழ்ச்சிகளை அரசியலிலும் நாம் பார்த்துக்கொள்ள முடிகிறது. அரசர்களின் வீழ்ச்சிகள் அரசியலிலும் தென்படுகிறது.
படிப்பவர்களுக்கு வரலாறு தெரிந்து கொள்ளலாம். வரலாறு வழியாய் ஒரு கதையும் பூத்திருக்கிறது. பிம்பம் உடைபடும் நேரம் எழுத்துவடிவில் திகிலாய் பிறக்கிறது.
பொன்மனை வல்சகுமார்
***
அன்புள்ள வல்சகுமார்
வேலுத்தம்பி தளவாய் கேரளத்தின் வீரபாண்டிய கட்டப்பொம்மன். சுதந்திரப்போராட்ட காலத்தில் எல்லா இடங்களிலும் வெள்ளையருக்கு எதிராகப் போராடி உயிர்விட்ட வீரர்கள் கண்டடையப்பட்டனர். தேசியநாயகர்களாக ஆக்கப்பட்டார்கள்.
வேலுத்தம்பி மாவீரர், நேர்மையான ஆட்சியாளர், களப்பலியானவர். ஆகவே அவரை வீரநாயகர் என்று சொல்வதில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை.
ஆனால் எல்லா வீரநாயகர்களைப் பற்றியும் எனக்கு ஏறத்தாழ ஒரே மதிப்புதான். அவர்கள் வன்முறையின் வெளிப்பாடுகள். அந்த வன்முறை நம் எதிரிமேல் திரும்பியிருக்கும்போது நாம் கொண்டாடுகிறோம். நம் மீதும் அது திரும்பும் என்பதை மறந்துவிடுகிறோம்.
வீரநாயகர்களின் வரலாற்றில் இப்படி ஒரு வழக்கமான வளர்ச்சிக்கோடு இருக்கும்.
அ. ஈவிரக்கமற்ற ஒரு செயல்பாடு வழியாக அவர்கள் கவனம் ஈர்ப்பார்கள். அது வீரம் என வழிபடப்படும். அதை சாமானியர் செய்யமுடியாது. ஆகவே அவர்கள் மாமனிதர்களாக கருதப்படுவார்கள். அவர்களின் வீரம் பாடல்பெறும்
ஆ. மக்கள்நாயகர்களாக அவர்கள் உயர்வார்கள். மக்களுக்காக போராடுவர்கள். அதிகாரத்தை அடைவார்கள்.
இ. அவர்கள் ‘ஒற்றைப்பெருந்தலைவர்’ ஆக மாறவேண்டுமென்றால் போட்டியோ சமானமோ ஆக எவரும் இருக்கக்கூடாது. ஆகவே அவர்களை ஆதரித்து துணைநின்ற அத்தனைபேரையும் அழிப்பார்கள்
ஈ. அவர்கள் வரலாற்றில் இடம்பெற்றபின் அங்கே நின்றிருக்கவேண்டும். ஆகவே சமரசம்செய்துகொள்வார்கள். அதில் இரண்டாக பிரிவார்கள். ஒருபக்கம் நடைமுறைசமரசம் செய்பவர் மறுபக்கம் இலட்சியவாதி.
உ. தங்கள் ஈகோவுக்காக மக்களை பேரழிவில் ஈடுபடுத்தி அழிப்பார்கள்.
ஊ. அத்தனை அழிவை மக்களுக்கு அளித்தபின்னரும் அவர்கள் அதே மக்களால் வீரநாயகர்களாக வணங்கப்படுவர்கள்.
வேலுத்தம்பியின் கதையும் அதுதான். அவர் செய்த மிகப்பெரிய பிழை என்பது மெக்காலேவை நம்பி நாயர்படையை கலைத்தது. திருவிதாங்கூரின் உள்நாட்டு விஷயத்தில் வெள்ளையர் நேரடியாக தலையிட வழிவகுத்தது. நாயர் படையை அயலவரை கொண்டு அழித்தது
அந்த தவறால் அவர் அழிந்தார். மெக்காலே அவரை தூக்கி அப்பால் போட்டபோது அவர் எதிர்த்து கலகம் செய்தார். குண்டறையில் வெளியிட்ட அறிக்கையில் வெள்ளையருக்கு எதிரான கலகத்தை ஆரம்பித்தார். கொல்லம்போரில் மெக்காலேயிடம் தோற்றார். மண்ணடியில் தற்கொலைசெய்துகொண்டார்.
அது எல்லா வீரநாயகர்களும் சென்றடையும் விதி. அப்படிச் சாகாமலிருந்தால் அவர் கொடூரமான ஆட்சியாளராக நினைவில் நின்றிருப்பார். நல்லவேளை.
பிகு. கிருஷ்ணபிள்ளை யானையால் பிளக்கப்பட்ட செய்தி கற்பனை அல்ல. பி.சங்குண்ணிமேனனின் திருவிதாங்கூர் வரலாற்று நூலில் உள்ள செய்திதான்.
ஜெ
***
பலிக்கல்[சிறுகதை]
இனிய ஜெயம்
முதலாறு எனும் ஊரைத் தேடி பின் தொடரும் நிழலின் குரலுக்கு வந்து கடந்த ஐந்து நாட்களாக அந்த நாவலுக்குள்தான் இருக்கிறேன். இந்த பலிபீடம் கதையின் போத்தி சிறைக்குள் என்னவாக இருந்திருப்பார்? அவர் போன்றோர் நிலை அங்கே என்னவாக இருந்திருக்கும் என்பதை நாவலுக்குள் ப்ரோஹரோவ் புகாரின் இருவரின் உரையாடல் வழியே இக் கணம் அணுகி அறிய முடிகிறது.
இத்தனை வருடமாக இரண்டு பயல்களும் போத்தியை ‘புடம்’ போட்டு விட்டார்கள். ரெண்டு பயலுகளுமே சின்னப்ப பயலுக என்று உணரும் நிலைக்கு சென்று விட்டார்.
சரி தவறுக்கு அப்பால் ஒரு வெளி உண்டு . அங்கு உன்னை சந்திப்பேன்.
இப்படி ஒரு வரி உண்டு. ரூமியின் வரிகள் என்று நினைவு. சரி தவறுக்கு அப்பால் உள்ள அந்த வெளியில் நின்று இப்போது ஆசீர்வதிக்கிறார் போத்தி.
கடலூர் சீனு
***
வணக்கம் ஜெ
பலிக்கல் சிறுகதையை வாசித்தேன். சங்கரன் போற்றி, ‘அப்ப கடவுள் இருக்காரு ,அவரு நியாயத்தை நடத்துறார்னுதானே அர்த்தம்?’ என்ற வரியைக் கொண்டே இந்தக் கதையின் திறப்பை அறிய முடிகிறது. பலிக்கல்லில் நின்ற போற்றி தன்னை அழகியநம்பியா பிள்ளையாகக் கற்பனை செய்து கொள்கிறார். உலகம் பலிக்கல், நீதி, தண்டனை என முன்வைப்பதை அவர் மனம் அவ்வாறே ஏற்றுக் கொள்கிறது. அந்த ஆழமான அவநம்பிக்கையிலிருந்து விடுபட தன்னை உலகம் குறிப்பிடும் நல்லோனாகக் கற்பனை செய்து கொள்கிறார். இந்தச் சிறுகதையில் இன்னொரு புறத்தில் அழகியநம்பியாப்பிள்ளை தன்னை போற்றியின் இடத்தில் வைத்து எண்ணி கொள்கிறார். பலிக்கல் ஏறியவுடன் இருவருமே இடம் மாறி நின்றிருக்கின்றனர் என எண்ணத் தோன்றுகிறது.
அரவின் குமார்
மலேசியா
***